08 நவம்பர் 2020

இயற்கையோடு இணைந்து வாழ்ந்தோம்- ரசமும் , புளியும்

 “திண்ட சோறு செமிக்க ஒரு கப் ரசம் குடி..! 

வயிறு மந்தமா திம்முனு இருக்கு, இரவைக்கு சாப்பாடு வேணாம். ரசம் வை. காச்சல் வாய்க்கு சுள்ளுன்னு ரசம் குடிச்சால் நல்லா இருக்கும் ..!“ இப்போதும் எங்கள் வீடுகளில் கேட்கும் குரல் இது. 

ரசத்தை உணவின் இறுதியில் சேர்த்து கொள்கின்றோம்..! 

ஏன்..? 

உணவில் இறுதியில்  செரிமானத்தை இதமாக்குவதற்கு ரசம் சேர்த்து கொள்வார்கள். ரசத்தில் சேர்க்கப்படும் மசாலா பொருட்கள் உணவுப்பாதையில் இருக்கும் அடைசல்களை கரைத்து இரைப்பையை இலகுவாக்கி செரிமானத்தை வேகப்படுத்தும் . 

இலங்கையில் எங்கள் உணவில் தினமும் ரசம் சமைப்பதும் இல்லை. எங்கள் சமையலில் பாரம்பரிய ரசத்துக்கு தக்காளி சேர்ப்பது இல்லை..! 

தேங்காய் பால் சொதி தினமும் சமைப்பார்கள், ரசம் வைக்கும் நாளில்  பால் சொதி தவிர்த்து விடுவார்கள்.  

வாயுத்தொல்லை தரும் உணவுகள் :

நிலத்துக்கு கீழ் விளையும் கிழங்குகள்(

உருளைக்கிழங்கு,சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகள், ) சிலவகை தானியங்கள் புரதம் மிகுந்த உளுந்து, பருப்பு, பூசணிக்காய் கறி சமைக்கும் போது  பூண்டும் மிளகும் இறுதியில் தட்டி போட்டு  சேர்த்து சமைப்போம். 

மரவள்ளிக்கிழங்கு சமைக்கும் நாளில் இஞ்சி சேர்க்க மாட்டோம். அதுக்கு பதில் பூண்டும்,சீரகமும், மிளகும் நிரம்ப சேர்த்து கொள்வோம். 

பருப்பு சமைத்தால் கட்டாயம் ரசமும் எங்கள் வீட்டில் அம்மா சமைப்பார். ரசத்தில் சோறும் பருப்பு  கறியம் சேர்த்து பிசைந்து சாப்பிட்டிருக்கின்றீர்களா? ..? 

மரக்கறி சாப்பாடு சமைக்கும் நாட்களில்   தக்காளி சேர்க்காமல் ரசம் வைப்பார்கள். வெங்காயம் சேர்ப்பதும் இல்லை,எண்ணெய், தாளிப்பு எதுவும் இல்லை. மல்லி அவியும் வரை கொதிக்க விடாமல் ஒரு கொதி வர இறக்கி விடுவார்கள்.( நான் முந்திய பதிவில் சொன்னது போல் )

முட்டை,பால்,இறைச்சி  மற்றும் இனிப்பு பயறு, பருப்பு வகைகள் சேர்த்து சமைக்கும் விருந்து உணவுகளின் போதும் ரசம் கட்டாயம் இருக்கும். 

ஆடு இறைச்சி சமைக்கும் போது அதன் எலும்புகளை  மிளகு, பூண்டு அரைத்து சேர்த்து தேங்காய்ப்பால் விட்டு சொதி போல் ரசம் செய்வதும் உண்டு. இதுவும் உணவு செரிமாணத்துக்கானது என்றாலும் இறைச்சி சமையலில் சேர்க்கும் இஞ்சி, பூண்டு, கறுவா போன்ற மசாலா மூலிகைகளும் உடன் சமைக்கும் கறிகளும் இறைச்சியில் இருக்கும் கொழுப்பை கரைத்து விடும். இறைச்சிக்கு கறி இறக்கும் போது பெருஞ்சீரகம் வறுத்து குத்தி தூவி விடுவோம். ஆட்டிறைச்சி சமைக்கும் போது  கத்தரிக்காய் கட்டாயம் சமைப்பார்கள். இறைச்சியில் இருக்கும் கொழுப்பை கரைத்து சமப்படுத்தும்  என்பதால் கத்தரிக்காய் பால்கறி அல்லது எண்ணெய் விடாமல் அடுப்பில் சுட்டு சம்பல் போல் செய்து கொள்வார்கள். 

🍅 தக்காளியை  ரசத்தில் சேர்த்தால் உணவை இலகுவில் செரிக்க செய்யுமா? 

இல்லை. 

தக்காளியில் சிட்ரிக் ஆசிட் இருக்கிறது. சிட்ரிக் ஆசிட் பலருக்கும் ஒவ்வாமையை தரும்.வயிற்றில் எரிச்சல், அதிகளவு கேஸ்ட்ரிக் கேஸ்  உருவாகும். இது ஜீரண சக்தியை குறைத்து கேஸ் டிரபுள்’ (Gas trouble) உருவாக்கும். மனித உடலில் வாயுத்தொல்லை  கேஸ் டிரபுள்’ (Gas trouble) உருவாக இரண்டு காரணம் இருக்கும். சுவாசப்பை, உணவுப்பாதை. அதில் உணவுப்பாதையில் கேஸ் டிரபுள் உருவாக பல காரணங்கள் இருக்கும்.  

( இக்காலங்களில் வாயுத்தொல்லைக்கு  கோலா,சோடா என்று கேஸ் குடிபானங்கள் குடிக்கின்றார்கள்.அது தவறானது. ) 

இயற்கையில் வாயுதொல்லை மற்றும் ஒவ்வாமை தரும் உணவுகளை  உண்டபின் செரிக்காமல் வயிறு ஊதி சரியான படி மலைக்கழிவு வெளியேறாது புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல், அடிக்கடி வாய்வு வெளியேறுதல், வயிற்று உப்புசம், வயிற்று இரைச்சல் என்று சிரமப்பட்டால

கைவைத்தியமாக ரசம் வைத்து குடிக்க கொடுப்பார்கள். ரெண்டு தரம் மிளகு ரசம் குடித்தால் போதும் வயிறு சுத்தமாகி விடும். 

எங்களுக்குள் வழக்கமாக காய்ச்சல், தடிமன், இருமல், சளி என்று கஷ்டப்படுவோருக்கு  ரசம் சேர்த்த சோறு பத்திய உணவாக இன்றைக்கும் இருக்கின்றது. 

அது மட்டும் இல்லை தக்காளி அலர்ஜி ( தும்மல், இருமல், சளி, தோல். தடிப்பு ) சிலருக்கு வரும். அதெல்லாம் ஆளாளுக்கு ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது. அந்த காலத்தில் அம்புட்டு வசதி இல்லை.

அதனால் எப்போதும் ரசம் வைத்தால்  தக்காளி சேர்க்காமல்  கொஞ்சூண்டு  புளிக்கரைசல் சேர்த்துப்போம்.  அத்தை உணர்ந்து தின்னணும். அடுத்தவன் தின்னுவதால் நாமும் தின்ன கூடாது என்று அம்மம்மா சாப்பாட்டில் ரெம்ப நுணுக்கம் பார்ப்பார். 

நாம் உண்ணும் உணவுகளில் வாயுத்தொல்லை, ஒவ்வாமை  தரும் காரணிகள் இருந்தால் ரசத்தில் சேர்க்கும் மிளகு, பூண்டு, புளி, மல்லி போன்ற மூலிகை இனத்தை சேர்த்த மசாலாக்கள் குறிப்பிட்ட சில உணவுகளை சமைக்கும்  நாட்களில் உணவுக்கு பின் ரசம் செய்து உண்பது செரிமானக்கோளாறுகளால்  உணவுப்பாதையில்  Gas trouble உருவாகாமல் செரிமான நொதியங்களை இலகுவாக்கும்.  

தக்காளியிலும் நிரம்ப  சத்துக்கள், விட்டமின்ஸ் உண்டு. தக்காளி சேர்க்கும் போது ரசம் அதன் அடிப்படை காரணத்திலிருந்து விலகி நாவுக்கு சுவை எனும் திருப்தியில் நிறைவடைகின்றது. 

சரி .. புளியில் பாதிப்பு இல்லையா?

புளியை உணவில் அளவோட  எடுக்கணும். ஒரு கொட்டைப்பாக்களவு புளியில்  கிடைக்கும் சத்து  தக்காளியில்   கிடைக்காது ஆரோக்கியத்துக்கு நல்லது. இதில் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்துகள்  மற்றும் வைட்டமின் சி ,  வைட்டமின் டி ,tartaric அமிலம் மற்றும் cinnamic அமிலம் ஆகியவை  உள்ளன.  

புளியில் இருக்கும் ஆன்டிசெப்டிக் மற்றும் ஆன்டிபாக்டீரிய பண்புகள் வைரஸ் தொற்றுகளால் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதுடன் நோயரெதிர்ப்பு சக்தியையும்  வலுப்படுத்துகிறது.  

மூட்டுவலி, ஜீரணக் கோளாறுகள், தொண்டை புண், இருமல் மற்றும் வீக்கம், கார்போஹைட்ரேட்டுகள் சர்க்கரையாக மாறுவதை தடுத்து இரத்தத்தில்ச ர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. புளி உடலில்  உறையும்  கொழுப்புகளைக் கரைக்கும். உடலின் ரத்த ஓட்டம்  சீராக்கி இரத்த நாளங்கள் மற்றும் தமனிகளில் உள்ள அழுத்தத்தை குறைத்து இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.புளியம் பழத்தின் விதை  அல்சரை தடுக்கக்கூடியது.

இந்த  பதிவை படிக்கும் இலங்கை நண்பர்களுக்கு  எங்கள் உணவில் தக்காளியை விட புளிக்கு முக்கியத்துவம் கொடுத்த எங்கள் அம்மாக்கள்,அம்மம்மா சமையல்கள் நினைவுக்கு  வரும் என்று நினைக்கின்றேன். புளிக்கு மாற்றாக கொரக்கா எனும் புளி மீன் குழம்பு, நண்டு குழம்புக்கு பயன் படுத்தினாலும் மரக்கறி குழம்புகள், ரசத்துக்கு புளி பயன் படுத்தியதும் நினைவு வரும்.

 தக்காளியின் தாயகம் அமெரிக்கா..! 

அதை கண்டு பிடித்த அவனே தினமும் உணவில் தக்காளி சேர்ப்பது இல்லை. ஆனால் நாங்கள் மூணு வேளை உணவிலும் தக்காளி சேர்த்து அதன் சுவைக்கு அடிமையாகி போயிருக்கோம். உந்த வெள்ளைக்காரன்  நம்மட மஞ்சள், வேப்பம் பூ. பழஞ்சோறு  கூடாது என்று சொல்லி அவன் விளைவிக்க தக்காளி, கோதுமையை தலையில் கட்டினான் என்ற உண்மை புரிந்தாலும் அதிலிருந்து மீண்டு வர விரும்ப மாட்டோம். 

ரசம் கொரோனா வைரஸ் வராமல் தடுக்குமா என்பது அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்படாத கருத்து என்றாலும் ஃப்ளு காய்ச்சல் நேரம் தொடர் இருமலின் போது  தொண்டையை இதமாக்கும் வீட்டு மருந்தாக (முதலுதவி, கைவைத்தியம் ) பயன் தருவதை அனுபவத்தில் உணர்ந்து கொண்டுள்ளோம். 

ஆக..! கொரோனா வைரஸ் உங்களுக்கு பல உண்மைகளை உணர்த்தி, ஆராய்ந்து அறிந்து மீண்டும் எங்கள் பழமைக்கு திரும்பும்படி எச்சரிக்கை செய்கின்றது என்று புரிந்து கொண்டீர்கள் என்றால் ....🦋

💝💖💖

பெரிய்ய்ய பதிவு படிக்கிங்களா என்று ஒரு ஸ்மால் டெஸ்ட்:: 

இந்த மாதிரி பதிவெல்லாம் சுருக்கி எழுத ஏலாது கண்டியளோ...🦋🦋

இயற்கையோடு இணைந்து வாழ்ந்தோம்- ரசமும் , புளியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!