29 பிப்ரவரி 2016

மகாபாரதப்போரில் கர்ணனை குறித்த என் புரிதல் சரியா?தவறா?

என் உணர்வும்,உயிர்ப்பும் தமக்கு வந்தால் மட்டுமே வலிக்குமா? எனும் பதிவில் பிரச்சனை நேரம் நம்மை விட்டு செல்லும் நட்பூக்கள்,உறவுகள் குறித்த என் புரிதலை எழுதி இருந்தேன்! 

அதில் கர்ணனை உதாரணமாக்கி கீழே இருக்கும் வாக்கியத்தை இட்டிருந்தேன்! 
மகாபாரதப்போரில் துரியோதனன் செய்தது தவறென தெரிந்தும், தன் உயிரே போகும் என அறிந்தும் தன் தாயின் வேண்டுதலை மீறியும், நட்புக்கு ஆபத்து எனும் போது தன் சகோதர்களை எதிர்த்து உயிர் துறந்தானாம்!

இக்காலத்தில்  கர்ணனைப்போல் செஞ்சோற்றுக்கடனுக்காக உயிர் துறக்க கூட வேண்டாம்,நான்கு வார்த்தை ஆறுதலாய் பேசலாமே?

மகாபாரதத்தில் அப்படி எந்த சம்பவமும்  நடந்ததாய்  இல்லையே என்பது போல் ஒரு மெயில் தரும் தகவல்!

மகாபாரதப்போரில் கர்ணனை குறித்த என் புரிதல்  சரியா? தவறா?

மகாபாரதம் நூலை  நீண்ட காலம் முன்னால் நான் படித்திருக்கின்றேன். பாண்டவர்களுக்கும் , கௌரவர்களுக்கும் போர் தொடங்கிட முன்னர் கண்ணன் மூலம் கர்ணன் யார் என அறிந்த குந்தி தேவியார் கர்ணனை பாண்டவர் பக்கம் சேரும் படி கேட்பதும்  கூட படித்த நினைவே!

துரியோதனனின் பல காரியங்களை கர்ணன் விரும்பாதிருந்தும் தவறென சுட்டிக்கட்டியும் இருப்பதாய் தான் படித்தேன். 

துகளக்  வாரமலரில் தொடராக கூட படித்த நினைவு.

விக்கிமீடியாவில் என் கருத்தை சரியா என ஆராய்ந்தேன் !  

மேலே இட்ட என் கருத்துக்கான விளக்கம் வீக்கிமீடியாவில்  இருந்தே>>>>>>>

துரியோதனன் செய்வது தவறென  தெரிந்தும்  விளக்கம் 

கர்ணன் துரியோதனனுக்கு விசுவாசமுள்ள மற்றும் உண்மையான நண்பனாகப் பேசப்படுகின்றார். பிரபலமற்ற சூதாட்ட விளையாட்டிற்கு துரியோதனன் மனமகிழ்கையில், அவர் அதைத் தொடங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். கர்ணன் ஷகுனியை விரும்பவில்லை, மேலும் தொடர்ந்து துரியோதனனுக்கு அவரது எதிரிகளை வீழ்த்த வஞ்சகம் மற்றும் சூழ்ச்சியைப் பயன்படுத்துவதற்குப் பதில் போர்வீரம் மற்றும் திறனைப் பயன்படுத்துமாறு அறிவுரைத்தார். அரக்கு மாளிகையில் பாண்டவர்களைக் கொல்லும் முயற்சியில் தோல்வி ஏற்பட்ட போது, கர்ணன் துரியோதனை அவரது மனத்தளர்விற்காகக் கடிந்துகொள்கின்றார். கோழைத்தனத்தின் வழிகள் தோல்வியில்தான் முடியும் என்று கூறி, வீரத்தின் மூலம் வேண்டியதைப் பெறலாம் எனவே போராளியாக மாற அவரை வற்புறுத்துகின்றார்.

குந்தியை தன் தாயென அறிந்தும் அவர் வேண்டுதலை மீறினார் என  நான் சொன்னதன் காரணம் 

குந்தி கர்ணனை பாண்டவர்களுடன் சேர்ந்து அரசனாகும் படி கூறினார். கர்ணன் அதை மறுத்து குந்தியிடம், அவர் தன்னை பல வருடங்களுக்கு முன்னர் கௌந்தேயன் என்று அழைக்கத் தயாராக இருந்தாரா என்று கேட்டார். மேலும் அவர் களத்தில் தோன்றியவுடன் காட்சியும் கோலமும் மாறியிருக்கின்றன என்றும் கூறினார். ஆனால் இப்போது அவரிடம் மாற்றத்தை ஏற்படுத்துவது காலதாமதமானது ஆகும். மேலும் அவர் துரியோதனின் நண்பனாகவே இருக்க விரும்புவதாகவும், அவர் அவரது நட்புக்கு துரோகம் இழைக்க முடியாது என்பதையும் கூறினார்.

மகாபாரதப்போரில் பாண்டவர்களுக்கு எதிராய் தானே போரிட்டான், துரியோதனன் அதாவது கௌரவர் பக்கம் நின்று துரியோதனன் பக்கம் போரிட்டார் எனும் போது தன் சகோதரர்களுக்கு எதிராய்  அவர்கள் தன் சகோதரர்கள் என தெரிந்தும் நட்புக்கும் செஞ்சோற்றுக்கடனுக்குமாய் அவன் தன்னை அர்ப்பணித்தான் தானே?

கர்ணன் அந்த சிறந்த வாய்ப்பை மறுக்கின்றார், ஏனெனில் அவர் கடந்தகாலத்தில் துரியோதனன் மீதான வைத்திருந்த விசுவாசம் மேலும், அதே போன்று மரபு வழியில் பாண்டவர்களுடன் பிணைப்பு இருந்தாலும் அவர் துரியோதனின் பக்கம் இருக்க நிர்பந்திக்கப்பட்டிருந்தார். 

துரியோதனனுக்கு தனது நன்றிக்கடனை செலுத்த, கர்ணன் இந்திரப்பிரஸ்தாவின் மகுடத்தை துரியோதனனுக்கு அளிக்கலாம். இந்த கர்ணனின் எண்ணம் தர்மத்துக்கு எதிராக இருந்தது. அவர் மேலும் கிருஷ்ணரிடம், நீண்ட காலமாக பாண்டவர்களுடன் உண்மையின் பக்கம் இருக்கிறீர்கள், தோல்வி என்பது அவருக்கு நிச்சயம் என்பதை நினைவூட்டினார். கிருஷ்ணர் வருத்தமடைந்தார், ஆனால் கர்ணனின் விசுவாசத்தைப் பாராட்டினார், அவரது முடிவை ஏற்றுக்கொண்டார்!

விக்கிமீடியாவில் இருக்கும் கர்ணன் (மகாபாரதம்)  தகவல்கள் சரியா? தவறா?

16 பிப்ரவரி 2016

உணர்வும், உயிர்ப்பும் தமக்கு வந்தால் மட்டுமே வலிக்குமா?


நான், என் சமுகம்,என் குடும்பம், நம்சமுகம் என எதையும்  நமக்குள் மட்டும்வைத்து எடை போடும் மனிதர்களாய் நாம் இருப்பதேன்?
ஒருவர் தனக்கு ஒரு பிரச்சனை என வரும் போது அவருக்கு தானே அது பிரச்சனை என ஏனோ தானோ என யாரோவாய் வேடிக்கை பார்க்கும் நாம் நாளை நமக்கும் அப்பிரச்சனை வரும் என ஏன் உணர்வதில்லை?
உங்கள் மேல் பாசம் காட்டுவோர், நல்ல நட்பென உங்களை மதிப்போர் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் எனக்கது தேவையில்லை என சொல்லி நொந்திருக்கும் மனதை நோகடிக்காமல் ஆறுதலாய் நான்கு வார்த்தை "என்ன" என்றாவது கேட்க முடியாமல் போகும் நிலை ஏன்? 
உங்களுக்கு தேவையின்றி தோன்றுவது அவர்களுக்கு உயிர் பிரச்சனையாகவும் இருக்கலாம், கௌரவப்பிரச்சனையாகவும் இருக்கலாம்.
இந்த சூழலில் தேவை, தேவையில்ல என்பதல்ல,நட்பின் உண்மை தான் இங்கே கேள்விக்குறியாகின்றது என்பதை புரிந்திடாமல் இருப்பதேன்!
மகாபாரதப்போரில் துரியோதனன் செய்தது தவறென தெரிந்தும், தன் உயிரே போகும் என அறிந்தும் தன் தாயின் வேண்டுதலை மீறியும், நட்புக்கு ஆபத்து எனும் போது தன் சகோதர்களை எதிர்த்து உயிர் துறந்தானாம்!
இக்காலத்தில் கர்ணனைப்போல் செஞ்சோற்றுக்கடனுக்காக உயிர் துறக்க கூட வேண்டாம், நான்கு வார்த்தை ஆறுதலாய் பேசலாமே?
யாருக்கு என்ன பிரச்சினை எப்போது என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.இன்று உங்கள் நண்பர் காணும் பிரச்சனைக்குரிய சூழல் உங்களுக்கும் வரலாம் என்பதை மறந்து விடாதீர்கள்?
பிரச்சனை நேரம் உதவி செய்யா விட்டாலும், புரிந்து கொள்ளாமல் செல்வது மரண வலிக்கு நிகரானது.
உலகத்திலிருந்து எனக்கு என வட்டம் இட்டு நான் என் குடும்பம் என ஒதுங்கி இருந்த காலத்தில் உலகமே அழகாய், அனைவரும் நல்லவராய் தோன்றியதுண்டு, ஒதுங்கியது போதும் என உலகை புரிந்திட புறப்பட்ட பின் இது வரை கண்டதெல்லாம் கனவென தோன்றுகின்றது! 
உலகமும் அதில் காணும் பாசங்களும் வேசமாய்,விசமாய் தோன்றுகின்றது!
அனைத்துமே நல்லதென என்னை நாமே ஏமாற்றுகின்றேனோ? இதில் ஏமாளி நானா இல்லை என்ன ஏமாற்றுவதாக நினைக்கும் என்னை சார்த்தோரா?
நிச்சயமாய் நான் ஏமாளியாய் இருக்க மாட்டேன் என மட்டும் உறுதி பட சொல்வேன்,நன்மையையும், நல்லதையுமன்றி எவருக்கும் சிறு தீங்கு கூட நினைத்திடா என் உள்ளத்து அன்பில் ஆழத்தினை புரிந்திடாமல் என் இரக்கங்களை இறுக்கமாக்கி செல்வோர் தான் ஏமாளிகள்!
மனிதர்கள் தமக்கு ஏற்ப அனைத்தையும் வளைப்பது ஏன்?
நித்தம் போனால் முற்றம் சலிக்கும் என சொல்வார்கள், அன்பு அத்தனை சீக்கிரம் சலித்து போய் விடுமா என்பது எனக்கு புரியவே இல்லை!
பழகப்பழக பாலும் புளிக்கும் என்பது போல் சக மனிதர் மேல் நாம் காட்டும் நேசமும் புளித்து போகுமா!?
அப்படியெனில் இன்று வரை எனக்குள் பல கசப்புக்களை காலம் விதைத்தும் கூட எனக்குள்ளான நேசிப்புக்கள் இன்னும் உயிர்ப்போடிருப்பதெப்படி?
அன்னை,தந்தை முதல் நான் கண்ட அனைவருமே என் நேசிப்பை தூசீயாய் துச்சமாக்கியும் கூட என்னால் எவரையும் வெறுத்திட முடியாததேன்? இன்னும் இன்னும் எப்படி நேசிக்க முடிகின்றது?
மனசுக்கு பிடிக்கும் போது இலகுவாய் கிடைக்கும் நேரமும், காலமும் மனசுக்கு பிடிக்காமல் போகும் போது கடினமாகி போகும் மர்மங்கள் என்ன?
சின்னக்குழந்தை கையில் கிடைத்திடும் பொம்மை போல் அன்பும், நட்பும் கூட இவ்வுலகில் நிகரே இல்லை என இறுமாப்பாய் பொக்கிஷமாய் உணர்ந்த போதினில் வராத சூழல்கள்,காணாமல் போகும் காரண காரியங்கள் சாக்குப்போக்குகள் அசட்டை செய்ய வேண்டும் என தோன்றியபின் இலகுவாய் வருவதேன்?
காலம் அனைத்துக்கும் மருந்தே! ஆனாலும் காலம் விட்டு செல்லும் வடுக்கள் மட்டும் எக்காலத்திலும் மறையாததாய்....................!
சூழ்நிலை சரியில்லை என எதன் மீதோ சாக்குப்போக்குகள் சொல்லி தப்பிப்பதை விட பிடிக்காவிட்டால் பிடிக்க வில்லை என சொல்லி செல்வதற்கென்ன?
தேவை எனில் நேரத்தையும் தம் வசப்படுத்த தெரிந்தோர் சொல்லும் சூழ்நிலை சரியில்லை எனும் காரணம் எனக்கு பிடிப்பதே இல்லை.
அதன் பின் அன்பும் கேள்விக்குறியாகி வெறுமை மட்டுமே எஞ்சி நிற்கின்றது!
வேலியில் போகும் ஓணானை தூக்கி காதினுள் விடுவது என்பது இதைத்தானோ?
உடல் நிலை சரியில்லாமல் ஆபத்தான சூழலில் அனுமதிக்கப்ட்டிருப்பதாயும் வைத்தியத்துக்கு பல இலட்சங்களில் தேவை எனவும் அறிந்த நொடியில் நேரில் சந்திக்கா விட்டாலும் எழுத்தில் பேசிய சகோதரனை குறித்து பதறி ஏதேனும் எவர் மூலமேனும் உதவிட வேண்டுமென நினைத்ததற்கு கிடைத்த பரிசு மைண்ட் டியர் வோர்ட்ஸ்@  
உயிரைவிட கௌரவம் முக்கியமாம்!
நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் எழுத ஆரம்பித்து சமூதாயத்தில் சில தவறுகளை நான் சுட்டிய பொழுதினில் என் தனிப்பட்ட திறமைகள் விமர்சிக்கப்பட்ட போது நான் எனக்காக ஒரு வார்த்தையேனும் சொல்வார்கள் என மிக நம்பியோரின் அமைதி தந்தது இன்னொரு வாழ்க்கைக்குரிய பாடத்தினை என்பேன்! 
யாரென அறியாதோர் எனக்காக என் எழுத்தை வைத்து பேச,என்னை அறிந்ததாய் நான் நம்பியோர் .............? 
தேவையில்லாத பிரச்சனை என எப்படி மனதை உடைக்க முடிகின்றது?
ஈற்றில் ஒன்று மட்டும் எனக்குள் தெளிவாய்........!
இத்தனை வருடங்களானாலும் நான் உலகையும் அதில் வாழும் மனிதர்களையும் புரிந்து கொள்ளவே இல்லை!
இதை படித்து விட்டு இது யாருக்கு? எனக்கா? உனக்கா? அவருக்கா? அவளுக்கா? என கேட்காதீர்கள்!ஆராய்ந்திடாதீர்கள்!
மொத்தமாய் நான்கண்ட உலக அனுபவம் என்னுள் இப்பதிவை எழுதிட தூண்டியதே அன்றி எவர் மீதான தனிப்பட்ட விருப்பு வெறுப்பினாலும் இல்லை!
சில பல நேரங்களில் இப்படி நானா நீயா என அராயும் போது என்ன எழுதுவது எனவே குழப்பம் விளைகின்றது. எழுத்துகள் அனைத்தும் சொந்த அனுபவமாய் தான் இருக்க வேண்டும் என்பதும் இல்லையே! 
எவரையும் குற்றவாளியாய் சுட்டிட நான் தயாராய் இல்லை, நான் தான் எங்கோ எதிலோ எப்படியோ குற்றவாளியாய் ?
எனக்கு தான் எதை, எப்படி, என தெரிந்தெடுத்து நேசிக்க தெரியவில்லை போலும்!இந்த வலைப்பூவை நான் ஆரம்பிக்கும் போதே என்னுள் தோன்றும் அனைத்தையும் எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் பதிவாக்கி வேண்டும் எனும் முடிவெடுத்தே ஆரம்பித்தேன்!
என் வாழ்க்கை இன்னொருவருக்கேனும் பாடமாகட்டும்.!
இன்னும் எழுதுவேன்!

13 பிப்ரவரி 2016

காதலை காதலோடு காதலியுங்கள்!


சூரியன் மறையலாம்; 
ஆனால் நிலையான காதல் மறைவதில்லை

விசாலமான மனதில்  நிர்பந்தங்களின்றி உதயமானதே காதல், இரண்டான இதயங்கள்  ஒன்றாகிடும் போது  அன்பானது  அங்கே முழுமை அடைகின்றது! 
உண்மைக் காதல் இதமானது, நம் மனக்காயங்கள் தீர்க்கும் மருந்து, தாலாட்டும் தென்றல், உற்சாகத்தின் ஊற்று, இதமான போர்வை  என நம்மையே நம்மில் உயிர்ப்பிக்கும்  வித்தையை  உணர்த்தும்!
இப்படி காதலிப்போருக்கு எல்லா நாளும் காதலர் தினம் தான்

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உயிப்பது
வேதம் நான்கிலும் மெய் பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே !
காதலும் இப்படித்தான் இருக்க வேண்டும்,  இப்படிப்பட்ட காதலுடன் தான் நாம் கடவுளை வேண்டுகின்றோமா?உள்ளம் உருகி வேண்டிடும் கடவுளில் மீதான  காதலுக்கு ஈடிணை உண்டா? எத்துணை  அற்புதமான காதல் இது,  

இறைவனிடம் பக்தி கொண்டு தன் கண்ணையே கொடுத்த பக்தனின் பக்தியே காதலின் முழுமையை உணர செய்யும்போது இவ்வுலகின் போலித்தனமான அன்புக்கு காதலென எப்படி சொல்வேன்.

நிர்மலமான மனதுடன் எதிர்பார்ப்பில்லாமல் சுய நயலமற்றதான நேசிப்பை  இவ்வுலக  காதலுடன் ஒப்பிட்டு அனர்த்தமாய் சிந்திக்கும் மனநிலையை என்னவென்பேன்?

காதலில் கரைய மடி கொடுத்து
என் கற்பனைகள் உயிர்க்க
திடம் கொடுத்து 
மண்ணான என்னை 
பொன்னாக மாற்றும் 
மெய் ஞானம் தேடி
கல்லான மனதை 
கற்பூரமாக்கி
நான் பெற்ற ஞானம்
கண் தூங்கும் முன்னே
என் முன்னே வந்து 
காணாத இன்பம்
நான் காண செய்த
காதலே உமக்கு நன்றி!

காதல் ஆணின் வாழ்க்கையில் ஓர் அதிகாரம் மட்டுமே; 
ஆனால் பெண்ணின் வாழ்க்கையில் முழு வரலாறு-

எதிர்பார்ப்பில்லாத அன்பு முழுமையடைதலே காதலில் வெற்றி!

நான் உனக்கு இதை செய்தேனே ஏனக்கு நீ அதை கொடு எனும் எதிர்பார்ப்பின்றி  எங்கெல்லாம்  அன்பு செலுத்துகிறோமோ அங்கெல்லாம் நம் அன்பு காதலாகிறது. 

நான் உன்னை நேசிக்கிறேன், நீ என்னை நேசிக்கிறாயா என கேட்டு செலுத்தும் எதிர்பாப்புடனான அன்பை காதலென்று எப்படி சொல்வேன்.?

தடைகள் தான், காதலுக்கு அதிக மதிப்பைத் தருகிறது

காதலோடு.....!

நான் சென்ற இடமெல்லாம் காதல்

நான் காண்பவை எல்லாம் காதல் 
காணாத உங்களில் காதல் 
கண்ட உங்கள் பதிவிலே காதல் 
அன்பு செலுத்துவோர் மீது காதல்
அன்பு செலுத்தாதோர் மீதும் காதல்
இருப்போர் மேலே காதல் 
இல்லாதோரிடம் அதிக காதல் 
ஏழையை கண்டால் காதல்
எதிரியின் மீதும் காதல்
கற்றோரை கண்டால் காதல்
கல்லாதோர் மீது 
இரக்கம் கொள்ளும் காதல் 
உலக ஞானத்தின் மேலே காதல்
மெய்ஞானத்தின் மீதும் காதல் 
நான் சென்ற இடமெல்லாம் காதல் 
இன்று முதல் 
காதலின் மேலும் காதல்!

எதிர்பார்த்து விதைப்பதைக் காதல் அறுவடை செய்யாது
மண்ணில் இந்தக்காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ?

எனக்கு வானத்தின் மேலே காதல்

வான் மேகத்தின் மேலே காத்ல்
மலைகளின் மேலே காதல்
பூக்கும் மலர்களின் மேலும் காதல் 
உயிர்களின் மேலே காதல் 
இந்த உலகத்தின் மேலே காதல்
இன்னும் கொஞ்சம் உலகத்தில் வாழக்காதல்
என் குடும்பத்தின் மேலே காதல்
முத்தமிழ்மன்றக்குடும்பத்தின் மேலும் காதல்
பணத்தின் மேலே காதல் 
அது தரும் பகட்டின் மேலும் காதல் 
படிப்பின் மேலே காதல்
அதனால் வரும் மகிமையின் மேலும் காதல் 
என் கடமையின் மேலே காதல் 
படைத்த கடவுளின் மேலும் காதல்
என் எழுத்துக்கள் மீதும் காதல் 
இதைபடிக்கும் உங்கள் மேலும் காதல்
காதலின்றி நான் இந்த உலகத்திலேது?

இதயத்தைத் தவிர காதலுக்கு குடியிருக்க  வேறிடம்  இல்லை

காதலையும்  காதலித்து  உங்களையும்  நீங்களே காதலித்து பாருங்கள்!

மனதில் பட்டாம் பூச்சி பறப்பதையும், கவலைகள் பறந்தோடுவதையும் 
தினம்  தினம் புதிதாய் பிறந்த உணர்வையும்  அடைவீர்கள்!12 பிப்ரவரி 2016

நான் சிரித்தால் தீபாவளி!

1)குமார்:ஏக்கா நீ சொல்ற ஜோக் எல்லாம் நல்லா இருக்கும் போல இருக்குதே.எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்கிறாங்க.
நிஷா: அட நீ வேறப்பா இப்ப அவங்க சிரிக்கல்லன்னா திரும்பத்திரும்ப ஜோக் சொல்லுவேன் என்று சொன்னேனா...அதுதான் சிரிக்கின்றார்கள்!  
குமார்:அப்படியா ஹாஹாஹா ஹோஹோ ஹிஹிஹி

2)நிஷா:ஏன்பா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி?
முஸம்மில்: அத ஏன் கா கேக்குற, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே ஓடி போய்ட்டாங்கக்கா!!

3)நிஷா:திருமணப்பந்தலில் இருக்கும் பணததை ஈ மொய்க்கும்.
ஏன் தெரியுமா..
குமார்:தெரியாதே ஏன்...?
நிஷா:அதுதான் மொய் பணமாச்சே

4)நிஷா:உங்களுக்கு நீச்சல் அடிக்கத்தெரியுமா?,
வருண்:தெரியுமே,ஆனால் சில இடங்களில் மட்டும் தான் நீந்துவேன்.
நிஷா:அப்படியா எங்கே?
வருண்:அதுவந்து...........முழங்கால் அ்ளவு தண்ணீர் இருக்கும் இடங்களில் மாத்திரம்

5)நிஷா : மகாகவி பாரதி தெரியுமா?
கில்லர்ஜி :தெரியுமே !
நிஷா : யார்னு சொல்லுங்க பார்க்கலாம்...?
கில்லர்ஜி :மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்!

6)நிஷா: மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல!
அது என்ன?
குமார்: ...............?????
நிஷா: தெரியலையா? அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?

7)நிஷா:இவர் தான் மார்கெட் தச்சர்.
கில்லர்ஜி : தலைவரா..
நிஷா : மார்க்கெட்டிலே வேலை செய்யும் தச்சர் அவ்வளவுதான்

8)நிஷா:தும்பியாரே ஆந்திராவிலிரு்ந்து தமிழ் நாட்டுக்கு குதிரைகள் வரும் போது வரிக்குதிரையா மாறி விடுகின்றதே. தெரியுமா?
முஸம்மில்:எப்படிக்கா??
நிஷா:தமிழ் நாட்டு பார்டரில் வரி போட்டிருப்பாங்களே அதனால் இருக்கும்.

9)மூன்று ரோடு சந்திக்கும் இடத்தில் ஒரு ரோடு வழியாக காரும்,
அடுத்த ரோடு வழியாக பஸ்ஸூம், மூன்றாவது ரோடு வழியாக நம்ம மதுரைத்தமிழன் சாரும் வேகமாக வந்தால் அங்கே என்ன நடக்கும்?

10)பஸ் ரூட்ல பஸ் போகும், ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும்! 
பீட் ரூட்ல என்ன போகும்?தெரிஞ்சா எனக்கு SMS பண்ணுங்க!

அட! இதை நீங்க வேறு எங்காவது படித்திருந்தால் என்னிடம் கேட்காதீர்கள். 
நானே என் பதிவு பலதை என்னுடையதுன்னு என தெரியாமலே வேறெங்கோ படித்து இருக்கின்றேன்!
இதுவும் 2010 ன் மீள் பதிவே!

பெயர்கள் ச்ச்ச்ச்சும்மா மாற்றினேன் யாரும் கோபித்துகொள்ளாதிங்கப்பா!

11 பிப்ரவரி 2016

உழைப்பாளி எங்கள் விவசாயி!


உலகம் போற போக்கைப்பாத்து
ஒளிஞ்சி கொண்ட எங்க ஆண்டவரே!
கொஞ்ச மனமிரங்கி எங்கள பாருங்க!

வியர்வை சிந்த மண்ணக்கொத்தி
பசள போட்டு பதப்படுத்தி
வித விதமா விதை விதைச்சி
ஊருக்கெல்லாம்
சோறும் போட்டேங்க!
இப்ப நானு வாழ சோறு கேட்டு
நாயி மாதி அலையிறேனுங்க
நானு செய்த பாவம் என்னங்க?

உயிரக்குடுத்து காடு கழனி
வெட்டிக்கிட்டோமுங்க,
வாயைகட்டி வயித்தக்கட்டி
வீடு ஒண்ணும் கட்டிக்கிட்டோமுங்க!
நாங்க தாங்க படிக்கல்ல
நம்ம புள்ளயாச்சும் படிக்கணுமிண்ணு
ஊரெல்லாம் ஒண்ணு சேர்ந்து
பள்ளிக்கூடமும் கட்டிக்கிட்டோமுங்க!

கோவில் குளம் எல்லாம் கட்டி
கோபுரமும் பெரிசாக்கட்டி
நோய் நொடின்னு வந்திட்டா
வைத்தியரு ஆசுப்பத்திரி
எல்லாமே  இருந்திச்சிங்க.
நாடுதாங்க நமக்கில்ல
வீடாச்சும் இருக்குதேண்ணு
நிம்மதியா தூங்கினேனுங்க!

வயசான காலத்தில ஓய்ஞ்சிருக்க
நினைச்சி நானும் கோட்டை
எல்லாம் கட்டிகிட்டேனுங்க.
இப்ப நம்ம வாழ்வே சிதைஞ்சி போச்சிங்க
வீடும் இல்ல வாசலும் இல்ல
பெண்டு பிள்ளைக படும்பாட
பாத்து நமக்குக்கண்ணீர் வரல்லங்க!
கண்ணீரெல்லாம் வத்திப்போச்சுங்க!

எண்ட ரத்தத்தால நிறஞ்சி போச்சிங்க.
ராசா மாதி இருந்தேனுங்க.
எல்லாமே இருந்திச்சிங்க
இப்ப எல்லாமிருந்தும் ஒண்ணுமில்லாம
நாதியத்துப்போயித்தேனுங்க
நா வறண்டு தவிச்சிப்போய்
நா தினமும் சாகுறேனுங்க. .
நானு செய்த பாவம் என்னங்க?

கல்லுப்போல கிடக்குற ஐயாசாமி
பெரிய சாமி,சின்னச்சாமி 
எல்லாச்சாமியும் ஒண்ணு சேருங்க!
எங்க மேல இரக்கம் காட்டுங்க
சீக்கிரமா வழியக்காட்டுங்க.
நானு நிம்மதியா சாகணுமுங்க.


படங்கள் இணையத்தில் எடுத்தவை!

10 பிப்ரவரி 2016

உங்களோடு ஒரு நிமிடம்.....!

கடந்து போன சில நாட்களாக எதையுமே எழுத முடியவில்லை,சிந்தனைகள் தெளிவின்றி குழப்பங்கள்  நிறைந்து  எங்கள்  ஹோட்டலிலும் அடுத்தடுத்த வாரங்களில் தொடர இருக்கும் ஆர்டருக்கான ஆயத்தங்கள் என உடல் மன சோர்வுகள் எதையும் எழுதும் சூழலை தரவில்லை.

அண்மையில் நான் கண்ட கேட்ட சில பல காரியங்கள் என் உள்ளத்தை தைப்பதனால்.... உலகத்தை திருத்த என்னால் இயலாது எனினும்  என் நட்புக்களை எனை  சார்ந்திருப்போரை அவர் செய்யும் தவறுகளை சட்டென சொல்லி  திருத்திடும் என் இயல்பால் நான் இழந்தவைகள் அனேகமாயினும் குற்றம் கண்டு குமுறாமல் இருக்க முடியவில்லை!

இன்றைய உலகில் நான் அடிக்கடி கேட்கும் ஒரு செய்தியாய் ஆகிப்போன பாலியல் கொடுமைகள் குறித்த படங்கள்  பகிர்வுகள் ஆகிப்போனது,

ஆறுமாதக்குழந்தை தொடக்கம் எண்பது வயதுப்பாட்டிவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுவதாக அறிந்திடும் போது நம் வீட்டு பெண் குழந்தைகள் வெளியில் சென்றால் வீட்டுக்குள் திரும்பி வரும் வரை மனம் திக் திக்கென திக்குகின்றது!

ஆனாலும் யாருக்கோ நடந்தது என அறியும் போது அதன் வலி உணராது, சம்பந்தப்பட்டோர் மனம் மட்டுமல்ல அவர் உறவுகள் மனம் எத்தனை துயருறும் என உணரக்கூட செய்யாமல் பத்தோடு பதினொன்றாய் நினைத்து உச் கொட்டி விட்டு சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணை புகைப்படங்கள் எடுத்து விதவிதமாய் ஏதோ மாடல்   காட்டுவது போல் இதனால் இப்படி அப்படி என பகிர்கின்றோம்.

தவறுகளை தட்டிக்கேட்பதாக சொல்லி தவறுகளுக்கு துணை போகின்றோம் எனபதோடு  தவறுகள் செய்ய நாம் தூண்டுதலும் தருகின்றோம் என்பதை அறியாதோராய் இருக்கின்றோமா?

குற்றங்கள் என்பது நேரடியாக குற்றம் செய்வதல்ல,,, இப்படியெல்லாம் குற்றம் செய்யலாம் என  படம் போட்டு காட்டி  ஒன்றுமறியாதவனையும் இப்படி செய்து பார்க்கலாமா என  தூண்டுதல் தருவதும்  தான் பெரிய குற்றம்,

அம்மா செய்த தப்புக்கு அவரை தண்டிக்க படிக்கும் பெண்ணை பழிவாங்குவதும், பெண் என்றாலே அவள் ஆடைகளை களைந்து  பார்க்கும் வக்கிர மனமும் உருவாக  நீங்களிடும் புகைப்படங்களும், கூட வழி காட்டியாய் இருக்கின்றது என புரிந்திடாமலா இருக்கின்றீர்கள்?

பாலியல் வக்கிரம் பிடித்த கயவர்கள் கூடி கொலை செய்ததை படமெடுத்து பரிதாபம் தேடும் வக்கிர மனம் எங்கிருந்து உருவாகியது?

ஆபத்தில் இருப்பவரை காப்பாற்றாமல் கையில் செல்போன் இருக்கும் மமதையில்  அணுவணுவாய் சாவதை வீடியோப்பதிவாய் எடுத்து வெளியிடுபவர்களுக்கு என்ன தண்டனை தரலாம்?

முதல் தண்டனை குற்றவாளிகளாய் இவர்களை   தண்டிக்க வேண்டும் எனும் சட்டம்வராதோ?

உலகத்தை திருத்த என்னால் இயலாது, ஆனால் நான் சார்ந்திருக்கும் சமுகத்தின் தவறுகளை திருத்த என்னால் இயலும் தானே?

அவ்வாறு இடும் புகைப்படங்களை யார் எடுத்தார்? எவர் எடுத்தார் என்பது எனக்குரிய ஆராய்ச்சியாய் இல்லை?  நான் என்ன செய்கின்றேன், எப்படி நடக்கின்றேன், இந்த சமூகத்துக்கு என்னால் செய்யக்கூடியது என்ன என்பது மட்டுமே நம் கேள்வியாய் இருக்க வேண்டும்! அடுத்தவன் முகத்தில் இருக்கும் அசிங்கத்தை துடைக்க முன் நம் முதுகில் இருக்கும்  தூசியைத் துடைப்போம்!

பேஸுபுக்கில் இதை குறித்த பகிர்வொன்றில் என் கருத்தினை இட்டேன், அக்கருத்தினை இங்கே இடுவது இதை படித்திடும் ஒரிருவரேனும்  தம் தவறுகளை உணர்ந்து அவ்வாறு செய்வோரையும் தட்டி திருத்திட மாட்டார்களோ எனும் நப்பாசையில்  என் கண் பார்வையில்  ஏன் எப்படி எதனால் என அக்குவேறு ஆணிவேறாய் விபரித்து இடும் படங்கள், பதிவுகள்கண்டால் கண்டிக்கின்றேன்,படங்களை நீக்கும் வரை கடுமையாக என் எதிர்ப்பை பதிவாக்குகின்றேன்!

பாலியல் வன்முறைகள் எங்கேயோ எப்போதோ ஏன் இப்போது தான் நடந்தாலும் பாதிக்கப்பட்டவர் புகைப்படம் இட்டு பதிவிடல் சரியானதல்ல என்பது என் கருத்து.

நம் மன ஆதங்கம் வெளிப்பட இன்னொருவர் அந்தரங்கம் வெளியரங்கமாகுவது மட்டுமல்ல இதைபோல் செய்யலாம் எனும் விதையையும் இம்மாதிரி புகைப்படங்கள் விதைத்து செல்கின்றன!

இதே நிலை நம் வீட்டு பெண்களுக்கு நடந்தால் முகம் தெரியாவிட்டாலும் புகைப்படங்கள் எடுக்க, வெளியிட அனுமதிப்போமா? வக்கிரத்திலும் மிகக்கொடூர வக்கிரம் பரிதாபப்படுகின்றோம், மனம் வருந்துகின்றோம் என சொல்லி அவர்கள் புகைப்படம் வெளியிடுவது!

இயலுமானவரை உங்கள் எதிர்ப்புக்களை பதிவுகளில் மட்டும் வெளியிடுங்கள் புகைப்படங்களை தவிருங்கள். இவ்விடயத்தில் மேல் நாட்டாரிடம் நம்மவர்கள் கற்ற வேண்டியதும், புரிய வேண்டியதும் அனேகம் தான்.

ஒரு கொலை நடந்தால்,பாலியல் கொடூரம் நடந்தால் அதை ஆதி முதல் அந்தம் வரை ஆராய்ந்து ஏன்,ஏப்படி, எதற்கு என வரி வரியாய் எழுதி இப்படி கூட செய்யலாமே என ஆர்வத்தினை உருவாக்கி மென் மேலும் பல குற்றங்கள் செய்ய ஊக்குவிக்கின்றோம் என அறியாமலா இருக்கின்றோம்.

வளர்ந்த நாடுகளில் அடுத்த வீட்டில் கொலை நடந்தாலும் ஏன் எப்படி எதுக்கு என ஆராய்ந்து தண்டனை கொடுப்பார்களே தவிர மக்களை குழப்புவதில்லை.அதனால் வரும் பாராட்டுகள்,புகழ்ச்சிகளுக்கு மயங்குவதில்லை!மீடியாக்கள் தம் பொறுப்புணர்ந்தே நடந்து கொள்கின்றார்கள். 

ஆனால் நம் நாட்டிலோ? நாட்டை  விடுங்கள்! நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள்? உங்கள் செயற்பாடுகள் எப்படி இருக்கின்றன என உங்களை நீங்களே நிதானித்து அறியுங்கள்!

கற்பழிப்புக்கள் நிருபிக்கப்பட்டால் விசாரணைகள் என இழுத்தடிக்காமல் உடனடி தண்டனைகள் கிடைக்க வேண்டும் என உங்கள் எதிர்ப்புக்களை பதிவாக்குங்கள்”. எதிர்க்கின்றோம் எனும் பெயரில் சம்பந்தப்பட்ட பெண்ணின் புகைப்படங்களை விதவிதமாய் இட்டு உயிரோடிருப்போரை வதைக்காதீர்கள்!

செய்தவதை நோக்கி உங்கள் விரலகளை நீட்டமுன் உங்களை நோக்கி சாட்டும் விரல்கள் சொல்வதை மனச்சாட்சியுடன் அணுகுங்கள்.

நாளை இதே நிலை உங்களுக்கும் உங்கள் குடும்பத்திலிருப்போருக்கும் வரலாம்!

நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? 

09 பிப்ரவரி 2016

அப்பப்போ தோன்றியவை!என்னவுண்டு சொல்லிவிடு
நின்மனதில் என்னவுண்டு
நித்தம் நித்தமென் மனதில்
நீயிருக்க......
உன் மனதில் நானிருக்க
நின மனதை தந்து விடும் `
எணணமுண்டோ சொல்லி விடு

**********************

மகிழ்ச்சியான மனதுடனே
நெகிழ்ச்சியாக நீ பேசி
என் கவலை போக்கிய நாட்கள்
இன்றும் பசுமையாக என் மனதில்
உன் நினைவுகளை தானாய்
தாலாட்டி செல்வதை 
நீ அறிவாயா
***************

உந்தன் உறவானதனால் 
எந்தன் சித்தம் கலங்கியதே 
சிந்தனைகள் நீயானதால்
 வேதனைகள் அண்டியதே
நித்தம் உனை நினைப்பதினால் 
நெஞ்சம் கலங்கி பித்தானதே
இத்தனைக்கும் என் அன்புனக்கு 
இற்றைவரை புரியல்லையே
 *****************************

மாறியதும் நீதான் 
எனை மாற்றியதும் 
உன் அன்புதான்
தேற்றியதும் 
தினம் தேடியதும்
உன் அன்பைத்தான் 

இன்றும் தேடுகின்றேன் 
காணாமல் போன
மாயம் தானென்ன வென்று சொல்லிவிடு
தேடாமல் நான் இருப்பேன் என் உயிரே
****************************

 
 புகைப்படங்களை இணையத்தில் 
 பகிர்ந்தவர்களுக்கும் நன்றி!

வலைப்பூவுக்காக மீள் பதிவு 
எழுதப்பட்ட காலம்

08-12-2010 அதற்கு முன்னரும்!04 பிப்ரவரி 2016

பெண்ணே உன்னால் ஆகும் காவியம் !ஆக்குவதும் அழிப்பதுவும் அவளேயன்றி யாருமில்லை 
பெண்ணில்லா வீடு என்றும் பாழபட்டதென்றோ செப்பி
பெண் இன்றி பெருமை இல்லை, கண் இன்றி காட்சியில்லை
உன் கண்ணீரை போல ஒரு ஆயுதமும் வேறில்லை 
அடக்கிடவும் அடங்கிடவும் அங்குசமாய்  இருப்பவளே!
*
கருவில் உயிர்த்த  நொடி முதலாய் மண்ணோடு மண்ணாய் 
மக்கிப்போகும் நாள் வரைக்கும்  தான் வாழ போராடும்  
சுமை தாங்கியானவளின்  மனக்காயங்கள் ஒன்றிரண்டா?
தன்னலமின்றி  உருகி வெளிச்சம் தரும்  மெழுகினைப்போல
தன்னை உருக்கிடுமவள் வலிகள் எண்ணுள்ளடங்கிடுமா?
*
தலைசுற்று, வாந்தி  முதல்  தனை வெறுக்கும் உணர்வுணர்ந்து  
யாருமுணரா வலி தாங்கி  தன் உதிரப்பாலை புகட்டி பத்திரமாய் 
பாதுகாத்து  பவித்திரமாய் பேணி டுமவள் வாழ்க்கையின் 
சோதனை  தான்  வேதனையா? வேதனைதான் சாதனையோ?
தையலவள் காயம் தனை தைத்து விட்டால்  அடங்கிடுமா?
*
ஆணென்றால்  உயரும் தட்டும் பெண்ணென்றால்  தாழ்வதுடன் 
கண்ணாய் நீ யிருந்தாலும் பெண்ணே  உன் பணி யிவைகள் 
சொல்லி விளையாடிடத்தான் விளையாடு பொருள் சட்டி பானை!
ஓர் வயதில் ஆரம்பிக்கும்  ஓர்மை தனை என்ன வென்பேன்?
ஆரம்பிக்கும் சேட்டைத்தனம் அடக்கியாளல் சரியோ?
*
மூவிரண்டு வயதானால் ஆரம்பிக்கும் ஆக்கினைகள்,
ஐயிரண்டு மாதம் சுமந்திடாமலே  சேயிரண்டுக்கவள்  
தாயாகும்  பாக்கியங்கள்,அன்னையாய் அரவணைத்து 
தந்தையாய் வழிகாட்டி அனைத்திலும் தலைமகளாய் 
தன்னையே சீர்ப்படுத்த ஏவிடுவர் நாள் தோறும்! 
*
நாலிரண்டு வயதினிலே அடுப்படியில் அடங்கிடுவாள்
அந்தி சந்தி  வேளையிலே அன்னமூட்டும் தாயாவாள்
அத்தனைக்கும் அவள் வேண்டும் சிந்தனைக்கு நேரமில்லை
வீடு கூட்டி பெருக்கி விளக்கேற்றி வைக்க வேண்டும் 
பெண்ணே உன் பணியிவைகள்  என்றும் சொல்வர்!
*
ஐயிரண்டு வயதினிலே கன்றாய் துள்ளி ஓடி விட்டால் 
காலிரண்டில் சலங்கையிட்டு  துள்ளல் அடக்கிடுவர்
அன்னையவள்  பூமியுந்தன் துள்ளல் தாங்கமாட்டாள் 
அடக்கமாயிரு பெண்ணே  என்றே சொல்லி குட்டிடுவர் 
தட்டுவதும் குட்டுவதும் கொடுக்குகளாய் அவள் மேலே! 
*
ஆறிரண்டு வயதானால்  நாலு சுவர் உந்தன் சொந்தம் 
வாயிற்படி வந்து விட்டால் அமிலமாய்  ஏச்சுப்பேச்சு
பூமிப்படி அதிராது அனன் நடை அவள் பயில அச்சம், மடம் 
நாணமெல்லாம்  இலவசமாய் இணைந்து விடும் 
இயைந்தால் என்று அறிந்தாலே அர்ச்சனைகள் தொடங்கி விடும
*
குனிந்த நடை தானே குமரி உனக்கழகெனச்சொல்லி 
முழுமை யடையாத அவள் உள்ளம் மூடி முடங்கும் 
தன்னைத்தொலைத்து தன் பெயர் மறந்து அமிழ்ந்தாலும் 
மாதந்தோறும் வலிகள் உயிர் வதை உணர வைத்தே 
நீயும் பெண்ணெனெவே சத்தமாய் கூச்சலிடும்! 
*
மங்கையவள் சிந்தனைகள் சிறகடித்து பறந்து  சென்றால் 
சிறகொடித்து  விறகாக்கி  சீர் கொட்டி சிறையாக்கி 
சித்திரம் போல் சிலையாக்கி சிந்தைதனை கொய்து 
சிலுவையிலும் அறைவர்! இதுவே நியதியுமென்பர்
சிக்கிச்சீரழித்திடுவார் சின்னவளே நீ என்பர்!
*
பத்திரண்டு  வயதானால் கற்பனைக்கோர்  கடிவாளம் 
கட்டி விட்டே ஓய்ந்திடுவர், தாய்மை அவள் சொத்தாகி 
மீண்டும் அவள் உயிர்ப்பாள்,மீளவும் பிறப்பாள், 
தாலி கட்டும் மணாளன் மனம் கவரும் மங்கையவள் 
அன்னையாகும் அவளன்பிலெ ன்றும் பேதமில்லை!
*
இத்தனைக்கும் அவள் வாழ்வில் பத்திரமாய் தான் இருப்பாள் 
வேடன் போல வந்திறங்கி  வேட்டை யாடும் மிருகங்களின் 
பாலியல் வக்கிரங்கள் பாவையவள் வாழ்வினிலே 
பாதாளம் செல்ல வைக்கும் பாடுகளை  தந்திடுமே!
பாலூட்டும்  நெஞ்சமதை பாழாக்கும் மாமனிதா!
*
காமுகனாய் ஆனதேனோ  குத்திக்குதறியதேனோ?
தாலாட்டும் தாயுந்தன் தாய்மை உணராதவனே! 
பெண்ணின்றி ஏதுமில்லை, அவளின்றி நீயுமில்லை 
அமிலத்தால் அவளுடலை உருக்குலைக்க நீ யார் சொல்?
அகமுணரா கொடூரம்  உன் தாகம் தீர்த்ததோ  மனிதா?
*
பட்டுபோல பட்டாம் பூச்சியை பிடித்து  நூல் கட்டி 
பறக்கச்சொன்னால் எது வரை தான் பறக்கும்? 
எப்படித்தான் துடிக்கும் பார்த்து மனம் ரசிப்பவனை 
தட்டிக்கேளா தாயவளே தண்டனைக்குரியவளென்று 
தனயனவன்  தவறுகளும்  தாயவளின் தலை மேலே! 
*
நாடாள பிறந்தானென போற்றி வளர்த்திடு தல் தப்பென்று 
நான் சொல்லேன்! ஆணுக்கொரு நீதி சொல்லிடுமுன் கேளீர்!
ஆணுமில்லை பெண்ணுமில்லை, ஒருவரின்றி எவருமில்லை 
ஆணும் பெண்ணும் விண்ணூக்கும் மண்ணுக்கும் செல்லுதல் 
சாத்தியமே சொல்லி வளர்ப்பீர்! வாதைகளை தவிர்ப்பீர்!
*
                                        படங்கள்  இணையத்தேடலில் கிடைத்தது 

02 பிப்ரவரி 2016

சீச்ச்ச்ச்சீ "தனம்"

                         
மண்ணென்பர், பொன்னென்பர்,தரணியாளும் பெண்ணென்பர் 
தாய்க்கு நிகர் நீயென்பர், தரத்திலென்றும் தங்கமென்பர் 
பொன்னுடனே பெண் வந்தால் தேவதையே நீ என்பர்!
தாரமாய் அவளானால் தரித்திரமே யெனவும் வதைப்பர்!

தட்டிப்பார்த்து  தரமறியும் மந்தைக்கும் நிகராக்குவர்
சந்தையிலே விலை பேசும் சங்கதியும் இவளென்பர் 
சகலத்திலும் நிகராகினும் சங்கடமும் அதுவென்பர். 
விலையேறா பண்டமென வீட்டினுள்ளே பதுக்கி வைப்பர்!

சன்னிதியில் நிற்க வைத்து சந்தனமும்  பூசிடுவர்,
சர்வமும் நீயெனவே தாழ் பணிந்தே  சரணடைவர் 
தங்கத்தின் நிறைக்கேற்ப   தகுதியுயர்ந்தாலும் 
தலை குனிவதேயுந்தன்  தலைச்சிகரம் தானென்பர்!

வானுயர பறந்தாலும் தானுயரா  பெண்ணிவளாய் 
நாலு சுவருக்குள்ளே அடங்கித் துவண்டு போனாலும் 
நாணம், மடம், அச்சமெல்லாம்  நாய்க்கு நிகராக்கிடுவர்
இலட்சங்களின் முன்னே இலட்சியங்கள் தூசியென்பர், 

காதல் எனும் வேஷமிட்டு கன்னி மனம் கவர்ந்திட்டாலும் 
காளையவன்  கடிவாளம் காலம் காலமாய் தொடர
பொன்னும் பொருளுமிலாரெல்லாம் விழி வழியே 
வழிந்தோடும் கண்ணீருடன் வழியோரம் ஒதுங்கி நிற்பர் 

சாஸ்திரங்கள் கற்றென்ன, சாதனைகள் செய்தென்ன 
வானுயப்பறந்தென்ன,வாக்குரிமை பெற்றென்ன
சீதனக்கொடுமை யெனும் மூடக்கட்டுக்கள் கொண்டே
அடிமையாக்கிட முயல்பவர் பலரிங்குண்டாமே!

சீர் கொண்டு வா என்றால்  சிரம் தாழ்த்தி கரம் குவிக்காமல் 
நேர் கொண்ட பார்வையும், நிமிர்ந்த நன்னடையும் அஞ்சா 
நெஞ்சுரம் அடங்கிடும் ஆணவமே யுந்தன் சீரென்றுரைக்கும் 
நாளென்றோ யன்றே  நன்னாளென்று ணர்வதெப்போ பெண்ணே!

இலங்கையின் நிஜ நிலவரம் பட்டியலில் !


படங்கள்  இணையத்தேடலில் கிடைத்தது 
நன்றி