அனுபவங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16 டிசம்பர் 2023

கானாந்தி,முல்லை,முசுட்டைக்கீரையும் புளிமாங்கா சொதியும்

நாங்கள் குடியிருந்த வீட்டில் வேலியில் கானாந்தி செடி மரமாகி,அதில் மேல் முல்லை கொடியும் படர்ந்து வளர்ந்து நின்றது. கானாந்தி,முல்லை,முசுட்டை கீரையின் துளிர்களை ஆய்ந்து அலசி புளி மாங்காயும் கீரி மீனும் சேர்த்து தேங்காய்ப்பால் சொதி வைச்சால் கீரைகளின் வாசமும் தேங்காய்ப்பாலின் வாசமும் சேர்ந்து ஊரையே விருந்துக்கு அழைக்கும். சோத்துக்குள் சொதியை விட்டு தின்று விட்டு சொதிக்குள் சோற்றை தேடி அப்படியே தட்டோடு குடிப்போம்.
கானாந்தி செடி கீரைகளை ஆய்ந்து கழுவி வைச்சிட்டு... மீன் அல்லது இறாலை சுத்தப்படுத்தி அதுக்குள் மஞ்சள் உப்பு,பச்சமிளகாய்,புளிமாங்காய் சேர்த்து தண்ணீர் விட்டு அவிய விடணும்,அவிந்ததும் இரண்டாம் மூணாம் தேங்காய்ப்பால் விட்டு கொதிக்க விட்டு பின் இலைகளை போட்டு மூடி ஒரு நிமிடம் விட்டு திற்ந்து தலைப்பாலை விட்டு அதுவும் கொதி வர இறக்கிரனும். கீரைகளை அதிகம் அவிய விட கூடாது.
பொன்னாங்கன்னி,வல்லாரை, திராய் கீரைகள் வயலில் சேற்று நிலத்தில் 2/12 அடி சுற்றளவுக்கும் அதிகமாகப் படரும்.மத்ததெல்லாம் வீட்டு வேலிகளிலும் குப்பை மேட்டிலும் தோட்டத்தில் வளர்ந்து வீட்டில் முற்றத்தில் முருங்கை மரங்களும் அதில் கீரையும் பூவும் காயும் எப்பவும் கிடைக்கும், அதிலும் மாரிகாலம் வந்தால் அடிச்சி ஊத்தும் மழையில் மரங்களெல்லாம் குளிச்சி சுத்தமா நிக்கும், பூச்சிபுழுக்கள் எல்லாம் மழைத்தண்ணீரில் அலசிப்பட்டு போயிரும், நாலு நாள் மழை பெய்ந்தாலே மரங்கள் எல்லாம் துளிர் விட்டு இளம் தளிருடன் பார்க்கவே பரவசமாக நிற்கும். வெள்ளத்தில் எல்லாம் அள்ளுப்பட்டு போவதனால் வேலியில் மரத்தில் படரும் கீரைகளும் காய்களும் தான் சமையலுக்கு.
முல்லை
தூதுவளை, முருங்கை, கறிவேப்ப்பிலை கீரைகளின் துளிர்களை பிடுங்கி அலசி சோத்துபானையில் கஞ்சி வடிச்சதும், அதுக்கு மேல் வாழை இலை போட்டு மூடி நெருப்பை அணைச்சி விட்டால் கொஞ்ச நேரத்தில் கீரை துளிர்கள் அவிந்து இருக்கும். அதோட பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், உப்பு, தேசிப்புளியும் சேர்த்து அம்மியில் அரைச்ச சம்பலுக்கு சுடு சோறு இருந்தால் வேற கறி வேண்டாம் தான்.
பீர்க்கை கொடியும் நாடங்காயும், புடலங்காயும் முருங்கை மரத்தில் படந்து கிடப்பார். பீர்க்கை வீட்டு தேவைபோக அல்லயவருக்கு கொடுத்தும் காய் அப்படியே காய விட்டு காய்ந்து பாத்திரம் தேய்க்கவும்,. முதுகு தேய்க்கவும் பாவிப்பம். பீர்க்கங்காய், நாடங்காய், வத்தவக்காய்க்கெல்லாம் மணப்பு கருவாடு போட்டு சொதி, புடலங்காய் பால் கறி, கத்தரிக்காய் பால் கறி மணப்பு கருவாடு போடாமல் சமைக்க மாட்டோம். லாவுட் பழம் மரம் கிணற்றடியில் பெரிதாக வளர்ந்து நின்றது. லாவுட் காயும் புளிமாங்காயும், உப்பும் போட்டு உரலில் இடிச்செடுத்தால் அது தான் பின்னேரம் டிபன். லாவுட் பழமும் மாரி காலம் தான் பழுக்க தொடங்கும். தானே பழுத்து பழங்கள் நாலா வெடிச்சி விழும், மாவு போல் செம்ம ருசியான பழம், சின்ன வயதில் நான் அதிகம் லாவுட்காயும் பழமும் சாப்பிட்டிருக்கேன்.
பாத்திரம் தேய்க்கவும், முதுகு தேய்க்கவும் காய்ந்த பீர்க்கங்காய்
திராய் நல்ல கசப்புச் சுவை கொண்டது. நீரழிவு நோயாளர்களுக்கு நல்லது. திராய்,குறிஞ்சா இரண்டும் சமைக்கும் போது கீரையில் நீர் இருக்க கூடாது. நீரில் வேக விட்டால் கசப்பு அதிகரிக்கும், கழுவி காய வைத்த பின் அரிந்து சுண்டல் செய்யணும், மீன் அவித்து பிசைந்து தேங்காய்ப்பூவும் சின்ன வெங்காயம் நிரம்ப போட்டு உப்பும் தேசிப்புளியும் சேர்த்தால் கசப்பு குறைந்து விடும், நான் கீரைகளுக்கு தேசிப்புளி சேர்க்காமல் சும்மா சமைப்பேன்.மீன் போடாமலும் சுண்டல் செய்யலாம். திராய் சுண்டலை போல் மீனும் புளிமாங்காயும் சேர்த்து செய்யும் அவியலுக்கு கடைசியா திராயை தூவி விட்டு கிளறி விட்டால் செம்மயா இருக்கும்.
எங்கட வடகோவை ஐயா கீரை பத்தி போட்ட பதிவில் நான் கானாந்தி கீரையை விட்டு விட்டீங்களே என கேட்டனா... அவரும் கானாந்தி கீரையோட படம் போட சொல்லி கேட்டாரா.அவர் கேட்டதும் கீரையோட படம் மட்டும் போட்டால் திண்ட சோறு செமிக்காது அல்லோ? அதனால் கானாந்தி கீரையோட சேர்த்து கதையும் சொல்லிட்டேன். 😻😻😻 ப்டங்கள் இணையத்தில் இருந்து எடுத்தேன்.

19 ஜூலை 2022

நூல் கோல் கிழங்கு கறியும், கீரை சுண்டலும்

நூல் கோல் கிழங்கு கறியும், கீரை சுண்டலும் புகைப்படத்தில் இருப்பது இன்றைய மதியம் எனக்கான உணவு : என் தோட்டத்தில் விளைந்த நூல் கோல் , சமைக்க தேவையான ஒற்றை பச்ச மிளகாயும். செர்ரி தக்காளியும் வீட்டுத்தோட்டத்தில் நூல் கோல் கிடைக்கும் நாட்களில் இந்த கிழங்கை பிரதான உணவாகவும், அதன் கீரையும் உப உணவாகவும், அரிசியும் எடுத்து கொள்ளலாம்.
நூல் கோல் கிழங்கு தேங்காய்ப்பால் கறி கிழங்கை தோல் சீவி அளவான சதுர துண்டங்களாக வெட்டி கழுவி கொள்ளுங்கள். வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி, பச்ச மிளகாயும் நறுக்கி போட்டு மஞ்சளும், உப்பும் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு அடுப்பில் வையுங்கள். முக்கால் பதம் வேகி வரும் பருவத்தில் நல்ல கட்டி தேங்காய்ப்பாலை விட்டு கொதிக்க விட்டு எடுத்தால் அருமையான நூல் கோல் பால் கறி தயார். விரும்பினால் கருவாட்டு துண்டு, மாசி சேர்க்கலாம். நான் இப்பொதெல்லாம் அசைவ உணவுகள் தவிர்ப்பதால் மரக்கறியாக்வே சமைத்து எடுப்பேன். மரக்கறிகளை கரையும் படி வேக விடாமல் முக்கால் பதத்தில் கடித்து உண்பது போல் வேக விட்டு சமைத்து எடுப்பது ஆரோக்கியமானது.
நூல் கோல் கீரை சுண்டல் சின்ன வெங்காயம் தேங்காய்ப்பூ பச்ச மிளகாய் மீன் விரும்பினால் சேர்க்கலாம். இலையின் நடுவில் இருக்கும் தண்டுகளை வெட்டி எறிந்து விட்டு கீரையை நன்றாக கழுவி இலையின் மேல் இருக்கும் நீரை உதறி எடுத்த பின் மிக மெல்லியதாக அரிந்து கொள்ளவும். மீன் சேர்த்து சுண்டுவது என்றால் மீனை சுத்தம் செய்து பச்சை மிளகாய், மஞ்சள் உப்பு சேர்த்து அவிய விட்டு பின்னர் மீனை தனியே எடுத்து முள் நீக்கி கொள்ளவும், முள் நீக்கிய மீனை மீண்டும் சட்டியில் போட்டு ஒரு கடையல் கடையவும். மீன் சேர்க்காமல் சுண்டல் செய்ய பச்சை மிளகாயை கட்செய்து மஞ்சள் உப்பு சேர்த்து அவை அவியும் அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும், மிளகாய் அவிந்த பின் அகபையால் கடைந்து விட்டு கீரையை அதனுள் சேர்த்த்து ஒரு நிமிடம் மூடி விடவும், தேங்காய்பூ ( தேங்காய் மலிவாக கிடைத்தால் ருசிக்கேற்ப தாராளமாக சேர்க்கலாம். ) சேர்த்து கீரையுடன் ஒரு நிமிடம் கிளறி விடவும், தேங்காய்ப்பூ சேர்த்த பின் மூடி போட்டு மூட வேண்டாம். இறுதியில் நறுக்கிய வெங்காயமும் சேர்த்து வெங்காயம் அவிய விடாமல் கடிபடும் பருவத்தில் இருக்கும் போதே அடுப்பில் இருந்து இறக்கி விடவும். இந்த மாதிரி கீரை சுண்டலுக்கு நான் புளி சேர்ப்பது இல்லை. அதிகரித்து வரும் விலை ஏற்றத்தை சமாளிகவும் அரிசி யின் தேவையை குறைக்கவும், ஒரு வேளை உணவில், இரண்டு பங்கு கிழங்கு கறி, அதே அளவு கீரை சுண்டல். ஒரு பங்குக்கும் குறைவாக அரிசி சோறு சேர்த்து கொள்ளலாம்.(மீன்,இறைச்சி உணவு கிடைத்தால் இந்த அளவுகளில் மாற்றம் செய்யலாம் )
அரிசியின் தேவை : ஒரு நபருக்கு தேவையான அரிசியின் சரியான அளவைக் கொடுப்பது கடினம், ஏனென்றால் எல்லா அரிசியும் ஒரே மாதிரி இருக்காது! புழுங்கல் அரிசி அதிக எடை கொண்டது.100 கிராம் சமைக்கப்படாத அரிசி 200-300 கிராம் சோறாக மாறும். எனவே சமைக்கப்பட்ட அரிசியின் எடை இரட்டிப்பாகவோ அல்லது மூன்று மடங்காகவோ இருக்கலாம்.
உணவில் அரிசி முக்கிய உணவாக இருந்தால், ஒரு நபருக்கு 100 கிராம் முதல் 120 கிராம் வரை பச்சை அரிசி தேவைப்படும். அரிசி உடன் பக்க உணவுகளுக்கு, ஒரு நபருக்கு 20-60 கிராம் உலர் அரிசி போதுமானது. உணவில் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்த்து கொண்டால் வளர்ந்த ஒரு நபருக்கு 50 கிராம் போதுமானது. பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு உணவு வழங்கும் திட்டங்களில் மரக்கறிகளை கீரைகளை அதிகமாகவும் அரிசியை உப உணவாகவும் எடுத்து கொண்டால் ஒரு கிலோ அரிசியில் 2500 - 3000 கிராம் சோறு கிடைகுமானால் 20 சிறுவர்களுக்கு 120 - 140 கிராம் சமைத்த அரிசி சோறும் 120 - 150 கிராம் மரக்கறிகளையும் சேர்த்து கொள்ளலாம். இதனுடன் பழங்களும் சேர்க்கும் போது அதுவே நிறையுணவாகி விடும். அதிருக்க மலையக மரக்கறிகளில் நோக்கல் என ஒரு நாற்றுக்கு பெயர் இருந்தது. அது என்ன மரக்கறி என எனக்கு புரியவே இல்லை. நோக்கல் என தட்டச்சிட்ட போது நாங்கள் இங்கே kohlrabi என அழைக்கும், நூல்கோல் கிழங்கு படம் கிடைத்திருந்தது. இதை ஊரில் நோகூட் என அழைத்ததாக நினைவு. நூல் கோல் மருவி நோக்கல் ஆகி நோ கூட் எனவும் அழைக்கப்படுகின்றதா?

13 டிசம்பர் 2020

அவித்த பீட்ரூட்..

பீட்ருட் 

பிரபாவிடம் பீட்ரூட் வாங்கி வாங்கோ என்றேன். பிரெஷ் இல்லையாம் என்று அவித்து பதப்படுத்திய BIO பீட்ரூட் அரை கிலோ பாக்கெட் இரண்டு வாங்கி வந்திருந்தார். 

இது அவித்த பீட்ரூட்.. 








மண் இல்லாமல் சுத்தமாக கழுவி, உலர வீட்டு  காற்று  புகாமல்  பாக்கெட் செய்து  100 °C  யில் ஆவியில் அவித்து குளிர் படுத்தி பிரிட்ஜ் ல் வைத்து மூன்று மாதம் வரை பயன்படுத்தலாம். 

தோல் சீவி சின்னதாக நறுக்கி, வெங்காயம் சில்லி தூள், உப்பு சேர்த்து எண்ணெய் விடாமல்   நான்ஸ்டிக் சட்டியில் மூடி ஐந்து - பத்து நிமிடங்கள் மிதமான தீயில் வேக வீட்டு எடுத்தால் சூப்பர் கறி ரெடி. 

பொதுவாக கிழங்கு வகைகளை உடனே வாங்கி சமைப்போம். அல்லது சில நாட்கள் வைத்து பயன் படுத்துவோம். வாரம், மாதம் என்று வைத்திருக்க முடியாது. 

அப்படின்னு நான் பலர் நினைக்கின்றோம். 

ஆனால் அவைகளை சுவையும், ஊட்ட சத்துக்களும் மாற்றம் அடையாமல் பதப்படுத்தி பாதுகாக்கும் போது மாதங்கள், வருடங்களுக்கு பயன்படுத்த முடியும்.

இதை குறித்து முன்னரே தற்சார்பு  குழுவில் எழுதி இருந்தேன். விவசாய  உற்பத்தி அதிகமாகி சந்தைப்படுத்தல் வாய்ப்புகள் குறையும் போது ( திடீர் lockdown , ஊரடங்கு) அல்லது   விலை மலிவான காலங்களில் வாங்கி வீட்டு தேவைகளுக்கு சேமித்தும் வைக்கலாம். 

சுவிஸ் ல் ஒன்பது மாதம் குளிர், மூன்று மாதம் மட்டுமே வெயில் .. அதிலும் மழைக்காலம், காலா நிலை மாற்றம் என்று பெரும்பாலும்  குளிர் காலமே அதிகம் என்றாலும் கிராமத்து மக்கள் கிடைக்கும் வெயிலில்  அடுத்து வரும் குளிர்காலத்துக்கு தேவையான காய், பழங்கள், கிழங்குகள் என்று விளைவித்து  பதப்படுத்தி சேமித்து நிலவறைகளில் அடுக்கி விடுவார்கள். 



இங்கே நகர்ப்புற மக்களும், வெளி நாட்டவரும் தான் அதிகளவில் சூப்பர் மார்க்கட் நுகர்வோராக  இருக்கின்றார்கள். கிராம மக்களுக்கு அங்கங்கே சிறிய மளிகைக்கடைகள் ( பால், இறைச்சி, பிரெஷ் பழங்கள், காய்கள், சாலட்  ) இயற்கையான உற்பத்திகள் அவசர தேவைகளுக்கு வாங்கி கொள்ள முடியும்.

https://www.facebook.com/100000786292216/posts/3483198908382951/?d=n

29 ஆகஸ்ட் 2019

ஆப்பிள்: பழம் வேண்டுமா? அள்ளிக்கொண்டு போங்கோ 🤷‍♀️🤷‍♀️

ஆப்பிள்: பழம் வேண்டுமா?
அள்ளிக்கொண்டு போங்கோ 
🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

 🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏

கனவுத்தோட்டம் 
காய்த்ததும் கனிந்ததும்
கற்பனையென்றெண்ணி
நிச்சலனமாயிருந்தேன்🙋‍♀️🙆‍♀️

நச்சென சத்தம் 🙆‍♀️🙆‍♀️
நடு உச்சி வீக்கம் 
அண்ணாந்து பார்த்தேன்
ஆங்காங்கே ஆப்பிள்

ஆ.. வென அதிர்ந்து 
சட்டென சறுக்கி 🙇‍♀️🙇‍♀️
பரதம் ஆடி - தாழ்
பணிந்து எழுந்தேன் 
குவியலாய் ஆப்பிள்.

பூத்துக்காய்த்து 
பறிப்பாரின்றி 
பழுத்து,விழுந்து 
குன்று மணி போல் 
செஞ்சிவப்பில் 
பளபளவெனவே
சிதறிக்கிடக்குது

ஈரிரண்டு வயதில் 
ஏ பார் அப்பிள் 
அழகாய் சிவப்பில் 
அரண்மனை பழமாய்
பறித்திட முடியா
பணக்கார பழமது

நாலிரண்டு வயதில் 
நாலிரொரு துண்டு 
நா ருசித்த அப்பிள்
நா உணர்ந்த வாசம் 
நானின்றுணர்ந்தேன்

ஈரேழு வயதில் 
திருடிச்சுவைத்து
திக்குத்திக்கென 
விக்கித்திரிந்த 
நினைவுச் சுழலில் 
நானின்று சுழன்றேன்

அன்றொரு பொழுதில் 
அரண்மனை பழமாய் 
அதிசயமானது
இன்றிங்கென் காலடியில் 
கொட்டிக்கிடக்குது.

நச்சில்லா அருங்கனி 
நான் கற்ற முதல் கனி
எட்டாக்கனி யன்று
கிட்டிக்கிடக்கு 
தின்றிங்கே
இயற்கையின் அதிசயம்
இதுவொரு அற்புதம்
ஏற்றமும் இறக்கமும் 
இறைவனின் கொடையல்லோ?

🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏







06 நவம்பர் 2018

மனித அம்மாக்களுக்கு கரடி அம்மா கற்றுத்தரும் பாடம் என்ன?

வீடியோ சொல்லும் அருமையான வாழ்க்கைப்பாடம். 

குட்டிக்கரடியின் அக்டிவிட்டி, விடா முயற்சி,  இலக்கை அடையும் வரை  சோர்ந்து விடாமல், விழுந்தாலும்  நின்று நிதானிக்காமல் அம்மாவை தேடி அழாமல்  தன் இலக்கை  மட்டுமே நோக்கிய பயணம்,  அழகான   வாழ்க்கைப்போதனையை தருகின்றது. 

வீடியோவை பார்த்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியும் திக் திக, கண் கொட்டாமல் பார்த்து கொண்டே இருந்தேன். எத்தனை முயற்சி. கடைசியில் சட்டென கிட்டத்தட்ட 3000 அடி சறுக்கி கீழே வந்தும் மீண்டும் மீண்டும் முயற்சித்து தாயுடன் இணைந்ததும் தாய்க்கரடி தூக்கி கொஞ்சவும் இல்லை, நின்று நிதானிக்கவும் இல்லை. மாலை மரியாதையும் இல்லை.  ஆஹா ஓஓ ஓஹோ    நான் மேலேறி வந்திட்டேன் என  ஆர்ப்பரிப்பும் இல்லை.  அம்மாக்கரடி வீர நடை போட்டு முன்  நடக்கின்றது. குட்டிக்கரடி அம்மாவை பின் தொடர்கின்றது.

மனித அம்மாக்களுக்கு கரடி அம்மா கற்றுத்தரும் பாடம் என்ன?

அம்மாக்கரடி குட்டிக்கரடிக்கு உதவி செய்ய எப்போது வேண்டுமானலும் சர்ர்ர்ர்ர்னு சறுக்கி வரும் என நப்பாசை ... பிள்ளைக்கரடி விழுந்து விழுந்து மேலே போய் திரும்ப விழுந்து .... என்ன அம்மா இந்த அம்மாக்கரடி என என் மனதுக்குள் திட்டி தீர்த்தேன்.

மனது கேட்காமல் ஒரே ஒரு முறை கிட்ட வரும் குட்டியை எக்கிப்பிடிக்க முயற்சிக்க அதுவே பிள்ளைக்கரடிக்கு பதற்றம் தந்து முன்னரை விட நீண்ட தூரம் கீழே சறுக்க... அதன் பின் அம்மாக்கரடியின் பதற்றம் அதன் நடையில் தெரிகின்றது. ஆனாலும் மனித அம்மாக்கள் போல் என் பிள்ளையை பிடிக்க போகின்றேன் என தானும் சர்ர்ர்ர்னு சறுக்கவில்லை.

நீயாக மேலேறி வா.. நான் உனக்காக காத்திருக்கின்றேன் என அங்குமிங்கும், நடந்த படி காத்திருக்கின்றது. உன்னை விட்டு எங்கேயும் போகவில்லை, உன்னுடன் இருக்கின்றேன் என அப்பப்போ தன்னை வெளிப்படுத்துகின்றது.

இந்த கரடி அம்மா உலகின் அற்புதமான அம்மா.

எல்லா அம்மாக்களுக்கும் தன் பிள்ளை சாதிக்க வேண்டும் எனும் ஆசை தான். ஆனால் அதை எப்படி நாம் பிள்ளைக்குள் ஊன்றுகின்றோம் எனும் வாழ்க்கை பாடத்தினை கற்று தரும் கரடி
ஷோ ஸ்வீட். ஐ லவ் அம்மா அண்ட் குட்டிக்கரடி.
முயலும் வெல்லும். 
ஆமையும் வெல்லும்
முயலாமை வெல்லாது.

முடியாது என்று சொல்பவன் முட்டாள்..!
முடியுமா என்று கேட்பவன் மூடன்!! 
முடியும் என்று முயற்சிப்பவனே மனிதன் ...!!!

 விடா முயற்சி எனும் வாழ்க்கை பாடத்தினை கற்றுத்தரும் கரடிகுட்டி.
அதன் முயற்சிகாக காத்திருக்கும் அம்மா.   

Life is hart.but so am I.!!! 

 நாம் யாராக வேண்டும் என நாம் தான் தீர்மானிக்க வேண்டும், 
சாதாரண வீடியோ தான் ஆனால் அது தரும்  உந்து சக்தி அசாத்தியமானது. 
கரடிக்குட்டியின் விடா முயற்சி நாம் யாராக வேண்டும் என கற்றுத்தருகின்றது.
“Never, never, never give up.”

30 அக்டோபர் 2018

ரௌத்திரம் பழகுவோம்.

ரௌத்திரம் பழகுவோம். 
********************************

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,

மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.

இது நாம் சிறுவயதில் கற்பது தான். இந்த தார்மீக கோபம் நமக்குள் எப்போதும் உறங்கி கொண்டே இருக்க வேண்டும். கோபப்பட வேண்டிய இடத்தில் குணமாக சொல்வதெல்லாம் செல்லுபடியாகுமா என நாம் தான் சூழலை வைத்து புரிந்து முடிவெடுக்க வேண்டும்.
தர்மமும், நீதியும் தோற்று அதர்மமும், அநீதியும் தலையெடுக்கும் காலத்திலும் குணமாக தான் சொல்லி திருத்த வேண்டும் என நினைத்து செயல் பட்டோமானால் எந்த பயனும் இருக்க போவதில்லை.
ரௌத்திரம் பேணுதல் எங்கே முக்கியம் என முடிவெடுக்க முடியாமல் கோபத்தை அடக்குவதற்கு கற்பிப்பதும் தவறே.
ஐந்தறிவு மிருகங்களுக்கு கூட தன்னை சீண்டினால் எதிர்த்து தாக்க வேண்டும், தன்னை காத்து கொள்ள வேண்டும் எனும் உணர்வு இருக்கும் போது மனிதருக்குள் அவ்வாறான எதிர்ப்புணர்வும், சுய சிந்தனையும், தார்மீக கோபமும் இருக்க கூடாது என எதிர்பார்ப்பதும் தவறே.
கோபத்தை அடக்க ஆயிரம் வழி சொல்லும் நமது சமூகம் நியாயத்துக்காக குரல் கொடுக்கும் சினமும் அவசியம் என உணர்த்தாமல் போனதனால் நாம் இழந்தவைகள் அனேகம்.
இனியும் இழக்க ஏதுமுண்டா என நம்மை நாமே ஆராய்ந்தால் நமது இயலாமையே நம்முள் கோபமாக வெளிப்பட்டு ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டெனும் இன்னொரு புறத்தினை மட்டுமே உணர்த்தி நிற்பதையும் நாமே உணர்வோம்.

➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤ 

செல்ஃபி மோகம்
*********************
பிரபல்யமானவர்கள் உடன் நின்று எடுக்கப்படும் புகைப்படங்களுக்கான மவுசும், மரியாதையும் பெரிதென இவ்வுலகம் உணர்த்தி நிற்கும் வரை நாம் என்ன சொன்னாலும் எவரும் திருந்தபோவதில்லை. இன்னாருடன் இணைந்து புகைப்படம் எடுத்தேன் என்பது தற்புகழ்ச்சிகுரியதாக மட்டுமல்ல அவருக்கான பெரும் சாதனையாக கொண்டு ஆஹா, ஓஹோ அபபடியா, நீ பெரிய ஆளுப்பா என பாராட்டுதல்களோடு அதுவே மிகப்பெரிய இமேஜ் சான்றெனப்படும் வரை செல்ஃபிக்களுக்கு ஓய்வும் இல்லை
மரணமே வந்தாலும் பிணத்துடனும் செல்ஃபி எடுத்தே தீருவோம் சங்கத்தின் சார்பில் உங்கள் நிஷா.

🤣🤣🤣🤣🤣🤣🤣

எங்க சங்கத்தில் நீங்கள் எப்போது இணைய போகின்றீர்கள் நட்புக்களே ?👁️👁️👁️ 👁️👁️

22 அக்டோபர் 2018

இணையத்தில் என் எழுத்துக்களுக்கான அங்கீகாரம் என்பது ?

இனி எதையும் வெளியில் சொல்ல வேண்டாம். கண்ணை மூடி, காதை பொத்தி கொண்டு நம்மை மட்டும் நாம் பாதுகாத்து கொள்வோம். கண்டதும், கேட்பதும் எதுவானாலும் கடந்து செல்வோம். இப்படித்தான் இந்த உலகம் நமக்கு அனுபவங்களை தந்து கொண்டிருக்கின்றதா?
வேலியில் போகும் ஓணானை தூக்கி காதில் விடுவது எப்படி எனபதையும் அப்படி விட்டால் என்ன ஆகும் என்பதை ஆண்களை விட சக பெண்களே எனக்கு நிருபித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த இணைய உலகில் ஆண் நட்புக்கள் தரும் ஆதரவை பெண்கள் தருவதில்லை என்பதே உண்மை. பெண்களே பெண்களுக்கு எதிரிகள் என்பதை மீண்டும் மீண்டும் நாம் நிருபித்து கொண்டே இருக்கின்றோம். எத்தனை லைக்ஸ், எத்தனை நட்பு என்பதை வைத்து யார் இங்கே பிரபல்யம் என போட்டி போடுகின்றோம்.
உண்மையில் பெண்கள் முன்னேறவும், சாதிக்கவும் ஆண்களை விட அதிகமான பெண்களே பெண்களுக்கு தடையாக இருப்பதாக அறிந்திருந்தாலும் நான் எனக்குள் எவ்வித பொறாமை உணர்வையும் உள் வாங்கியதில்லை.
எழுத்தாகட்டும், செயலாகட்டும், பெண்கள் தாமாக இணைந்து , உணர்ந்து தம்மை முன்னேற்ற செயல் படும் போது என் மனப்பூர்வமான ஆதரவை கொடுப்பேன். அதே போல் அவர்கள் பாதிக்கப்படும் போதும் என்னால் இயன்ற ஆறுதலை, புரிதலை கொடுக்கவே நினைப்பேன்.
ஆனால் பல பெண் நட்புக்கள் இதை சரியாக புரிந்து கொள்வதிலலை. என் நட்பில் இருக்கும் பெண்கள் கூட இணையத்தில் ஆண் பெண் நட்புக்களாக் குடும்ப ரிதியில் அனைத்தினையும் பகிர்ந்து காலப்போக்கில் வாக்குவாதங்கள், புரிதலின்மை வரும் போது இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கி குற்றம் சுமத்தி பதிவிட்டிருக்கின்றார்கள்.
எனக்கு இருவரும் முகம் தெரியாத அகம் தெரிந்த நட்பாக இருந்தாலும் நான் பெரும்பாலும் ஆணை விட பெண்களை எச்சரிக்கவே நினைத்து செயல் படுவேன். இயன்ற வரை இந்த மாதிரி பிரச்சனைகளை பொதுவெளியில் திட்டி த்தீர்க்காமல், பதிலுக்கு பதில் இட்டு வாதாடாமல் அமைதியாக சென்று விடுங்கள்: என்பேன்.
இணைய பாதிப்புக்கள் எனும் போது அறியாத ஒருவரை நட்பென நம்பியது நம் தப்பாக இருக்கும் போது அதை பொதுவெளியில் இன்னார் இப்படி என வெளிப்படுத்தி பெண்கள் இடும் பதிவுகள் பெண்களை தவறாக புரிந்து கொள்ளவும், பெண் மீதான கேலி கிண்டல்களுக்கும் இடம் கொடுக்கின்றதே தவிர சம்பந்தப்பட்ட ஆண்களுக்கு எந்த இமேஜ் பாதிபும் வருவதில்லை. பாதிகப்பட்ட தாக சொல்லும் பெண் இன்னும் அதிகமாக ஒதுக்கப்பட்டு, ஓரங்கட்ட படுகின்றாள்
குற்றம் சுமத்தப்படும் ஆண் மீது எந்த களங்கமும் சேர்வதில்லை. அவன் துசி தட்டி செல்வது போல் என் மீது போலியாக புகார் செய்தார்கள்: என சொல்ல அதை நம்பி நம் சக பெண்களே அவனை பாதுகாப்பதும், அவனுக்காக வாதாடுவதும் நடந்து கொண்டு தான் இருகின்றது. இப்படியான ஆண்கள் தங்கள் வீட்டு பெண்களை இணையத்தில் உலாவ விடுவதில்லை என்பதும் கருத்தில் கொள்ளப்படுவதில்லை.
பெண்களுக்கு எச்சரிக்கை எனும் பெயரில் நாம் சொல்லும் முன் ஆலோசனைகள் இன்னார் இப்படி, இப்படி எல்லாம் இங்கே நடக்கின்றது. நீ அதை புரிந்து கொள் என நமக்கு தெரிந்ததை சொல்லும் போது அவர்கள் மீதான அக்கறையால் சொல்லும் நமது நட்பும், அன்பும் கூட பல நேரம் சந்தேகத்துக்குள்ளாகின்றது. களங்கப்படுத்தப்படுகின்றது. நீயும் அவனுள் ஒருத்தியோ என குற்றச்சாட்டு நம்மீதே பூமராங்காக திரும்பி வீசப்படுகின்றது.
சில வருடங்கள் முன்னால் நல்ல நட்பாக பழகிய பெண். இணையத்தில் அவர் குறித்து பல பதிவுகள் அவர் நம்பி பழகிய ஆண் நட்பினால் அவதூறாக பரப்பப்பட்ட போது பதிலுக்கு பதிலடி என பெண் நட்பும் கிளம்ப.. நான் அப்படி செயல் பட வேண்டாம். அமைதியாக இருங்கள் என சொல்ல.. அவர் அதை அவர் நம்பி அவர் மீதே குற்றம் சாட்டிய ஆணை சார்ந்தவராக என்னை நினைத்து நட்பையே விட்டு விலகி சென்றார். இணையத்திலிருந்தே காணாமல் போனார்.
நானும் அவர்களுள் ஒருத்தி எனும் உணர்வில் எச்சரிக்கை செய்கின்றேன் என புரிந்து கொள்ள முடியாதவாராக இருந்தார்.
இப்போதும் பலர் அப்படித்தான் இருக்கின்றார்கள்?
தமக்கென்ன இலக்கும் இலட்சியமும் பிரபல்யமாவதும் லைக் எண்ணிக்கைகளை கூட்டுவதும் தான் என வும் தாங்கள் இடும் பதிவுகளுக்கு கிடைக்கும் லைக் எண்ணிக்கைகளை வைத்து தம் கருத்துக்களும் சமூகத்தில் பேசப்படுவதாக நினைப்பதும் எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது.
பெண்கள் பாதிக்கப்படுவதற்கு பின் ஒரு பெண் இருப்பதனால் ஆண்கள் இதை பயன் படுத்தி கொள்கின்றார்கள் என்பதை மறுக்கவும் முடியாது.
சமீபத்தில் நட்பாகிய ஒரு பெண், ஆளுமையுடன் பல பதிவுகள். தாம் உணர்ந்ததை அபப்டியே எழுதும் அரிவை அவர். அவர் எழுத்தாழுமையை சகிக்க இயலா சிலர் அவர் மீதான அவதூறுகளை, பாலியல் ரிதியான குற்றச்சாட்டுகளை என் ரைம் லைன் வரை கொண்டுவர.. நான் அதை அவருக்கு அனுப்பி எச்சரிக்க.. அவர் என் மீதே சந்தேகம் கொண்டு, என்னை தடை செய்ததை எவ்வகையில் புரிந்து கொள்ள வேண்டும்?
நல்லதுக்கு காலம் இல்லை என இப்படித்தான் பலர் நிருபித்து கொண்டிருக்கின்றார்கள்.
ஒரு கருத்தை இன்னார் சொன்னார் என சொன்னவருக்கு பின்னாலிருக்கும் பிரபல்யத்தை வைத்து ஆஹா ஓஹோ என கடந்து செல்வதும் , சொல்லப்படும் கருத்தை உள் வாங்கி உணர்வதுடனான புரிதல்களை குறித்து எவருக்கும் அக்கறை இல்லையா?
நான் என்ன செய்ய வேண்டும்? என் எழுத்துக்கள் இனி எப்படி இருக்க வேண்டும்? 
எவர் எக்கேடு கெட்டால் எமக்கென்ன என செல்ல வேண்டுமா?

என் சிந்தனை என்பது உலகத்தின் டிரெண்டுகளுக்குள் அகப்படாமல் மெதுவாக நகர்ந்திடவே நினைக்கின்றது. ஒரு பிரச்சனை டிரெண்ட் ஆகும் போது அதன் பின்னால் இருக்கக்கூடிய சாதக, பாதகங்களை குறித்தே சிந்திக்க சொல்கின்றது. அதனால் தான் என் பதிவுகள் கும்பலோடு கோவிந்தா போடுவதாக ஊரோடு ஒத்து இருப்பதில்லை
நான் எனக்கும் வட்டம் போட்டு கொள்ள வேண்டுமா? கட்டம் கட்டி கொள்ள வேண்டுமா? 
பூசி மெழுகாமல் இப்படித்தான் என நான் எழுத்தில் சுட்டிக் காட்டுவது தவறா? 
அல்லது என் பார்வைக்கோணம் தவறா?
நான் உலகத்தை புரிந்திருக்கும் விதம் தவறா? 
நான் என்னை மாற்றிக்கொள்ள வேண்டுமா?

இன்பாக்சில் வந்து நான் உங்கள் விசிறியானேன் என்பதும், நேரில் காணும் போது உங்கள் எழுத்துக்கள் பிரமாதம் என்பதும், என் மன உணர்வுகளை, நான் எழுத நினைப்பதை நீங்கள் எழுதி இருக்கின்றீர்கள் என்பதும் போதுமா? எழுத்து ஆளுமை மிக்கவர் எனும் வாழ்த்தோடு கடந்திட லாமா?
இந்த சமூகம் எனக்கு தரும் அங்கீகாரம் என்ன?
லைக்ஸ் எண்ணிக்கைகளை வைத்து தான் நமது அங்கீகாரம் கணிப்புக்குள்ளாகின்றதா?
கண்ணை மூடி எவரென அறியாதோரை நட்பில் இணைத்து மேலேறி அதே வேகத்தில் நானும் மறைந்தே போக வேண்டுமா?
வழக்கம் போல் என் அண்ணா, தம்பிமார்கள் , நண்பர்கள் வழிகாட்டுவீர்கள் என நம்புகின்றேன்.
உங்களை குற்றம் சொல்வதாக நினைத்து கடந்து செல்லாமல் சுய ஆய்வுப்பதிவாக நம்மை நாம் புரிந்திட அக்காக்கள் தோழிகள் தங்கைகள் கூட வழி காட்டலாம்

26 செப்டம்பர் 2018

பெண் என்றால் பேய் இரங்கட்டும் நீங்கள் இரக்கம் காட்டாதீர்கள்.

 பெண் என்றால் பேய் இரங்கட்டும் 
நீங்கள் இரக்கம் காட்டாதீர்கள்.
பெண் என்பவள் ஆண்களை விடவும் பலம் வாய்ந்தவள் என்பதை அவள் உணராமல் இருக்கின்றாள் என்பதை நீங்கள் எப்படி புரிந்து கொண்டிருக்கின்றீர்கள்?
சமூகம், கட்டுப்பாடு, அன்பு, பாசம், கடமை கண்ணியம், குழந்தை எனும் கட்டுக்கள் எல்லாம் அவளாக தன்னை அடக்கும் வரை தான்.
அவள் தனனைத்தானே அடக்கி விட்டுக்கொடுப்பது அவளின் இயலாமை இல்லை. அது தான் அவளின் பெலன்.
இதை அவள் உணர்வதில்லை. அவளைச்சார்ந்தோரும் உனர்வதில்லை. இந்த உணர்தல் அவளுக்குள் இருந்தால் பிரச்சனைகளை கண்டு பயந்து ஓடி ஒளிய மாட்டாள்.
இன்றைய நிலையில் பெண்கள் தங்கள் கட்டுக்களை மீறியும் சம படிப்பு, சம தொழில் வாய்ப்பு பொருளாதார நிலை என ஆண்களை கடந்து சென்று கொண்டிருக்கின்றார்கள்.
குடும்பத்தில் மட்டுமலல் நாட்டின் முன்னேற்றத்திலும் பெண் கல்வியும், அறிவும் ஆணுக்கு நிகராக முக்கிய அச்சாணியாக இருக்கின்றது என்பதை ஒவ்வொரு தனி மனுசியும் உணர வேண்டும், உணர்த்தப்படவும் வேண்டும். உணர்த்தப்படும் போது போலிப்பசப்புக்களுக்கு அவள் மயங்கி தன்னை அழிக்கும் நிலைக்கு வர மாட்டாள்.
போலிப்பசப்புக்குக்களும் சமூகத்தின் கட்டுப்பாடும், ,பரிதாபப்பார்வையும் அவளை தன்னிரக்கத்தில் தள்ள வைக்கின்றது. அவள் தன் தவறுகளை உணரும் வாய்ப்பை இந்த சமூகம் வழங்குவதே இல்லை.
எந்த பிரச்சனை வந்தாலும் அதுபெண் எனில் ஐயோ பாவம், அப்பாவி, ஒன்றும் தெரியாதவள் என அனுதாபம் கொள்வதை விட்டு அவள் செய்யும் தவறுகளையும் உணர்த்த வேண்டும். .
பெண்களுக்கு பிரச்சனை எனில் அது ஆணாதிக்கம் என பொங்குவதை விட அப்பிரச்சனை ஏன் ஏற்பட்டது என்பதைக்குறித்தும் ஆராய வேண்டும்.
பெண்களுக்கு இயல்பாகவே ஆறாம் அறிவோடு இன்னொரு உள்ளுணர்வாக ஏழாம் அறிவும் இருக்கின்றது என்பார்கள். கிட்ட வரும் துஷ்டனை இனம் கண்டு எட்ட வைக்கும் படி உள்ளுணர்வு உணர்த்தும் உணர்வும் உண் டென்பர். நம முன்னோர்களும் பெண்கள் பின் நடப்பதை முன் உணர்வதனால் தான் பெண் புத்தி பின் புத்தி என்றார்கள்.
ஆனால் இன்றைய பெண்கள் பிரச்சனைகளை தாங்களே தேடிக்கொள்கின்றார்கள்.
பெரும்பாலான பெண் ஏய்ப்புக்குற்றப் பின்னனியில் போலியான பாராட்டுதல்களுக்கு மயங்கி கண்மூடித்தனமாக நம்பும் பெண்களே பலியாகின்றார்கள்.
ஆலோசனைகளை அசட்டை செய்து,அக்கறை
யோடு நல்வார்த்தை சொல்வோரை எட்ட வைத்து துரோகிகளை அருகில் வைத்து தங்கள் மனம் சொல்வதை மட்டும் ஏற்று அறிவுக்கு இடம் கொடுக்காமல் தங்கள் மேல் தாமே மண் வாரி அள்ளி போட்டுக்கொள்கின்றார்கள்.

அன்புக்கும் அரவணைப்புக்கும் ஏங்கும் பெண்களின் இளகிய மன நிலையில் இலக்கியமெனும் பெயரில் எழுதப்படும் போலியான வார்த்தைகளை காதல், அன்பு, பாசம் என நம்பி கன்வுலகில் மிதக்கின்றார்கள்.
உலகமே இணைந்து துரோகம் செய்த ஒருவனுக்கு தாங்கள் நியாயம் செய்வதாக நினைத்து தங்களை தாங்களே அழிக்கும் நிலைக்கும் செல்கின்றார்கள். அல்லது அழிக்கப்படுகின்றார்கள்.
கானல் நீரை காதல் என நம்பி தம வாழ்க்கையை அழிக்கும் பெண்கள் பொய்யான வாக்குறுதிகளை நம்பி, இனக்கவர்ச்சியையும், இலக்கிய வார்த்தைகளாலும் கவரப்பட்டு அன்பு, ஆறுதலெனும் பெயரில் அடிமைப்படுத்தபப்டும் நிலையை உணர வேண்டும்.
பெண் என்றால் பேயும் இரங்குமாம். நீங்கள் பேய்க்கு இரங்குங்கள். பாதிக்கப்பட்டவள் பெண் என்பதனால் மட்டும் இரங்காமல் அவள் தப்பையும் அவளுக்கு உணர்த்த வேண்டும். .
பிரச்சனைகள் நடந்த பின் குற்றவாளி யார் என துப்பு துலக்கி தண்டனை வழங்குவது அவசியமெனில் ,பிரச்சனைகுரிய காரணங்களை தேடி ஆராய்ந்து அவைகளை களை எடுப்பதும் முக்கியமானது.
பிரச்சனைகளுக்குரிய காரணங்கள் அலசி ஆராயப்படாவிட்டால் அதற்கான தீர்வுகளும் சாத்தியமில்லை.
செத்துப் போனாள் என்பதுக்காக அவள் விட்ட பிழைகளை பேசக்கூடாது என்பதில்லை.
பேசப்படனும். அப்போதுதான் அதை பார்த்த ஏனைய பெண்கள் திருந்துவார்கள். இனிவரும் காலத்தில் தாங்கள் இப்படி தவறு செய்தால் தமக்கும் இந்த நிலையே என உணர்வார்கள்.

ஐயோ ஒன்றுமறியா பெண்ணாச்சே என நீங்கள் கொடுக்கும் ஆதரவும், பரிதாபமும் அவள் செய்வதும் தவறென அவளுக்குள் உணர்த்தப்படுவதில்லை.
அவளால் மட்டுமே எல்லாம் எனும் குற்றச்சாட்டுக்களை அவள் மேல் போட்டு தங்களை நீதிமானகளாக காட்டும் இச்சமுகத்தின் முக்மூடியை அவள் புரிந்து கொள்ளாத வரை அவளுக்கான தீர்வுகளும் சாத்தியப்படப்
போவதில்லை.

தவறுகளுக்கு தீர்வை தேடும் முன்
பிரச்சனைகளுக்கான் காரணங்களை கண்டறிந்து களைய வேண்டும் என்பதே இப்போதைய நிலையில் முக்கியமானதாக இருக்கின்றது.