26 செப்டம்பர் 2018

பெண் என்றால் பேய் இரங்கட்டும் நீங்கள் இரக்கம் காட்டாதீர்கள்.

 பெண் என்றால் பேய் இரங்கட்டும் 
நீங்கள் இரக்கம் காட்டாதீர்கள்.
பெண் என்பவள் ஆண்களை விடவும் பலம் வாய்ந்தவள் என்பதை அவள் உணராமல் இருக்கின்றாள் என்பதை நீங்கள் எப்படி புரிந்து கொண்டிருக்கின்றீர்கள்?
சமூகம், கட்டுப்பாடு, அன்பு, பாசம், கடமை கண்ணியம், குழந்தை எனும் கட்டுக்கள் எல்லாம் அவளாக தன்னை அடக்கும் வரை தான்.
அவள் தனனைத்தானே அடக்கி விட்டுக்கொடுப்பது அவளின் இயலாமை இல்லை. அது தான் அவளின் பெலன்.
இதை அவள் உணர்வதில்லை. அவளைச்சார்ந்தோரும் உனர்வதில்லை. இந்த உணர்தல் அவளுக்குள் இருந்தால் பிரச்சனைகளை கண்டு பயந்து ஓடி ஒளிய மாட்டாள்.
இன்றைய நிலையில் பெண்கள் தங்கள் கட்டுக்களை மீறியும் சம படிப்பு, சம தொழில் வாய்ப்பு பொருளாதார நிலை என ஆண்களை கடந்து சென்று கொண்டிருக்கின்றார்கள்.
குடும்பத்தில் மட்டுமலல் நாட்டின் முன்னேற்றத்திலும் பெண் கல்வியும், அறிவும் ஆணுக்கு நிகராக முக்கிய அச்சாணியாக இருக்கின்றது என்பதை ஒவ்வொரு தனி மனுசியும் உணர வேண்டும், உணர்த்தப்படவும் வேண்டும். உணர்த்தப்படும் போது போலிப்பசப்புக்களுக்கு அவள் மயங்கி தன்னை அழிக்கும் நிலைக்கு வர மாட்டாள்.
போலிப்பசப்புக்குக்களும் சமூகத்தின் கட்டுப்பாடும், ,பரிதாபப்பார்வையும் அவளை தன்னிரக்கத்தில் தள்ள வைக்கின்றது. அவள் தன் தவறுகளை உணரும் வாய்ப்பை இந்த சமூகம் வழங்குவதே இல்லை.
எந்த பிரச்சனை வந்தாலும் அதுபெண் எனில் ஐயோ பாவம், அப்பாவி, ஒன்றும் தெரியாதவள் என அனுதாபம் கொள்வதை விட்டு அவள் செய்யும் தவறுகளையும் உணர்த்த வேண்டும். .
பெண்களுக்கு பிரச்சனை எனில் அது ஆணாதிக்கம் என பொங்குவதை விட அப்பிரச்சனை ஏன் ஏற்பட்டது என்பதைக்குறித்தும் ஆராய வேண்டும்.
பெண்களுக்கு இயல்பாகவே ஆறாம் அறிவோடு இன்னொரு உள்ளுணர்வாக ஏழாம் அறிவும் இருக்கின்றது என்பார்கள். கிட்ட வரும் துஷ்டனை இனம் கண்டு எட்ட வைக்கும் படி உள்ளுணர்வு உணர்த்தும் உணர்வும் உண் டென்பர். நம முன்னோர்களும் பெண்கள் பின் நடப்பதை முன் உணர்வதனால் தான் பெண் புத்தி பின் புத்தி என்றார்கள்.
ஆனால் இன்றைய பெண்கள் பிரச்சனைகளை தாங்களே தேடிக்கொள்கின்றார்கள்.
பெரும்பாலான பெண் ஏய்ப்புக்குற்றப் பின்னனியில் போலியான பாராட்டுதல்களுக்கு மயங்கி கண்மூடித்தனமாக நம்பும் பெண்களே பலியாகின்றார்கள்.
ஆலோசனைகளை அசட்டை செய்து,அக்கறை
யோடு நல்வார்த்தை சொல்வோரை எட்ட வைத்து துரோகிகளை அருகில் வைத்து தங்கள் மனம் சொல்வதை மட்டும் ஏற்று அறிவுக்கு இடம் கொடுக்காமல் தங்கள் மேல் தாமே மண் வாரி அள்ளி போட்டுக்கொள்கின்றார்கள்.

அன்புக்கும் அரவணைப்புக்கும் ஏங்கும் பெண்களின் இளகிய மன நிலையில் இலக்கியமெனும் பெயரில் எழுதப்படும் போலியான வார்த்தைகளை காதல், அன்பு, பாசம் என நம்பி கன்வுலகில் மிதக்கின்றார்கள்.
உலகமே இணைந்து துரோகம் செய்த ஒருவனுக்கு தாங்கள் நியாயம் செய்வதாக நினைத்து தங்களை தாங்களே அழிக்கும் நிலைக்கும் செல்கின்றார்கள். அல்லது அழிக்கப்படுகின்றார்கள்.
கானல் நீரை காதல் என நம்பி தம வாழ்க்கையை அழிக்கும் பெண்கள் பொய்யான வாக்குறுதிகளை நம்பி, இனக்கவர்ச்சியையும், இலக்கிய வார்த்தைகளாலும் கவரப்பட்டு அன்பு, ஆறுதலெனும் பெயரில் அடிமைப்படுத்தபப்டும் நிலையை உணர வேண்டும்.
பெண் என்றால் பேயும் இரங்குமாம். நீங்கள் பேய்க்கு இரங்குங்கள். பாதிக்கப்பட்டவள் பெண் என்பதனால் மட்டும் இரங்காமல் அவள் தப்பையும் அவளுக்கு உணர்த்த வேண்டும். .
பிரச்சனைகள் நடந்த பின் குற்றவாளி யார் என துப்பு துலக்கி தண்டனை வழங்குவது அவசியமெனில் ,பிரச்சனைகுரிய காரணங்களை தேடி ஆராய்ந்து அவைகளை களை எடுப்பதும் முக்கியமானது.
பிரச்சனைகளுக்குரிய காரணங்கள் அலசி ஆராயப்படாவிட்டால் அதற்கான தீர்வுகளும் சாத்தியமில்லை.
செத்துப் போனாள் என்பதுக்காக அவள் விட்ட பிழைகளை பேசக்கூடாது என்பதில்லை.
பேசப்படனும். அப்போதுதான் அதை பார்த்த ஏனைய பெண்கள் திருந்துவார்கள். இனிவரும் காலத்தில் தாங்கள் இப்படி தவறு செய்தால் தமக்கும் இந்த நிலையே என உணர்வார்கள்.

ஐயோ ஒன்றுமறியா பெண்ணாச்சே என நீங்கள் கொடுக்கும் ஆதரவும், பரிதாபமும் அவள் செய்வதும் தவறென அவளுக்குள் உணர்த்தப்படுவதில்லை.
அவளால் மட்டுமே எல்லாம் எனும் குற்றச்சாட்டுக்களை அவள் மேல் போட்டு தங்களை நீதிமானகளாக காட்டும் இச்சமுகத்தின் முக்மூடியை அவள் புரிந்து கொள்ளாத வரை அவளுக்கான தீர்வுகளும் சாத்தியப்படப்
போவதில்லை.

தவறுகளுக்கு தீர்வை தேடும் முன்
பிரச்சனைகளுக்கான் காரணங்களை கண்டறிந்து களைய வேண்டும் என்பதே இப்போதைய நிலையில் முக்கியமானதாக இருக்கின்றது.

24 செப்டம்பர் 2018

பிரச்சனைகளுக்கு கொலைகளும் தற்கொலைகளும் தான் தீர்வா?

இலங்கையின் வடகிழக்குப்பகுதிகளில் நாள் தோறும் அரங்கேறும் குற்றச்செயல்கள், கொலைகள், தற்கொலைகளுக்கு பின்னனியில் இருக்கும் காரணங்கள் என்ன?
பிரச்சனைகளுக்கு கொலைகளும் தற்கொலைகளும் தான் தீர்வா?
மரணம் என்பது இலகுவாக செய்யக்கூடியதெனும் உணர்வுகள் உருவாக்கப்படுவது ஆரோக்கியமான சூழலை விதைக்கப்போவதில்லை.
பிரச்சினை உருவாகுவதற்கான காரணங்களை கண்டறியாமல் தீர்வுகளை தேட முடியாது.
நீண்டகால யுத்தம்,அதைத்தொடர்ந்த பொருளாராத்தடை,வறுமை என பல காரணங்கள் தங்கள் சுய பிரச்சனைகளுக்கு தீர்வு காணபதிலும், தமக்கான தேவைகளை உணர்வதிலும் ஆண், பெண் இருசாராருக்கும் உளவியல் ரிதியிலாக பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதை நடக்கும் சம்பவங்கள் உணர வைக்கின்றன.
பிரச்சனைகளுக்கான தீர்வாக உயிரிழப்புக்கள் தான் என முடிவெடுத்து விடும் படியான மன அழுத்தமானது எமது சமூகத்தில் எதிர்கால வளர்ச்சிக்கு பாரிய பின்னடைவை தரும் ஒன்றாகவே இருக்க போகின்றது.
மனித உயிரானது மதிப்பற்றுப்போயிருக்கின்றது. 
உயிரிழப்புக்களையே அதிகமாக கண்டு வந்த சமூகம் உயிரின் மதிப்பை உணராதிருக்கும் நிலை ஏன்?

கடந்து வந்த கசப்புக்கள் மனதின் ஆழமாய் மறைந்திருக்கும் வெறுப்பின் குரூர மனப்பான்மையை வெளிப்படுகின்றதா?
90% ஆன தற்கொலைகள் பாலியல் பிரச்சினைகளாலயே நடந்துள்ளது. முக்கியமாக பெண்கள் மீதான் பாலியல் வன்முறைச்சம்பவங்கள், கொலைகள், தற்கொலைக்கு தூண்டும் படியாய் அழுத்தத்தை பிரயோகித்தல், சிறுவர் துஷ்பிரயோகம் முதல் சிறுவர் மீதான வன்முறை நாள் தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.
தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் என்பது போல் எல்லோரும் தீர்ப்பெழுத புறப்பட்டிருப்பதும்
அவ்வாறான செயற்பாடுகளுக்கு காரணமானவர்கள் மீது அரசின் சட்டங்கள் கண்டு கொள்ளாதிருப்பதும். 
குற்றச்செயல்களுக்கு துணைபோகும் அதிகாரிகளின் அசட்டைப்போக்கும் எமது சமூகத்தின் பாதுகாப்பு தொடர்பான அச்சத்தையே ஏற்படுத்துகின்றது.

குற்றவாளிகளை இனம் கண்டும் அவர்கள் குற்றங்கள் நிருபிக்கப்படாமல் செல்வாக்குள்ளவர்கள் முன் ஏழைமக்களின் சொல்வாக்குகள் தரமிழந்து போகின்றன.
குற்றமிழைத்தோர் சமூகத்தில் பயமின்றி கட்டாக்காவாலிகளாக உலாவ விடும் செயலானது இன்னும் பலரை குற்றத்துஷ்பிரயோக செயல்களை செய்யும் படி தூண்டுவிப்பதை தினமும் நடந்து கொண்டிருக்கும் குற்றச்செயல்கள் உணர்த்துகின்றன.
குற்றச்செயல்களை தடுத்து நிறுத்தும் படியான ஏக போக அதிகாரங்களை தன் வசம் வைத்திருக்கும் அரசு நிர்வாகம் குற்றவாளிகளை கண்டு பிடித்து தண்டனை வழங்காமலும் நீதி விசாரணை செய்யாமலும் அசமந்த போக்கை கடைப்பிடிப்பதும்
சட்டங்கள் மீதும், நீதி விசாரணைகள் மீதுமான நம்பிக்கைகளை அகன்று போக வைக்கின்றது.

தமிழ மக்கள் தங்கள் இருப்பை தக்க வைத்து கொள்ள முன் உயிரை பாதுகாக்க மீண்டும் பின்னோக்கும் நிலை உருவாகுமோ?
பாதிக்கப்பட்ட மக்களை உளவியல் ரிதியாக அணுகி உயிரின் மதிப்பை உணர வைத்தலுக்கு குற்றவாளிகளை இனம் கண்டு களை எடுத்தல் அவசியமாகின்றது.
எங்கள் மக்களின் தேவைகள் புரிந்துணர்வுடன் அணுகப்பட்டு, பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், எதிர்காலத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும், நிம்மதியாக அச்சமின்றி வாழும் சூழ்நிலையை உருவாக்கவும் அரசு எவ்வகை நடவடிக்கைகளை மேற்கொள்ள போகின்றது?
அரசுக்கு மட்டுமல்ல நமக்கும் கடமை உண்டு. ஒவ்வொரு தனி மனிதருக்கும் கடமை உண்டு.
என்ன செய்யப்போகின்றோம்?
ஒவ்வொரு கொலை,தற்கொலைக்கு பின்னரும் நீதி,நியாயம் கேட்டு புலம்பிக்கவிதை எழுதி, ஆவேசமாக கருத்திட்டு கடந்து செல்லும் படி தொடரும் நிகழ்வுகள் சாதாரணமானதல்ல.
எமது ஸ்திரத்தன்மையையே ஆட்டம் காண வைத்து, மனிதர்கள் மீதான நம்பிக்கையை தகர்த்து போடும் விஷக்கிருமியாய் இப்பிரச்சனை எம் சமுகத்தை ஆட்டிப்படைக்க போகின்றதா?
இதுவும் இன அழிப்பென்றால் அதை தடுக்க நாம் என்ன செய்யப்போகின்றோம்?
எம்மை அழிக்க இனி ஹிடலர்கள் வேண்டாம்.
நம் கை விரல் கொண்டே நம் கண் குருடாக்கப்படும் அவலத்தை எப்படி உணர்த்தப்போகின்றோம்?
ஆல்ப்ஸ் தென்றல் 
நிஷா

21 செப்டம்பர் 2018

இன்றைக்கு யூதர்கள்? நாளைக்கு தமிழர்கள்?

என்னப்பா ? இந்த நிஷாவுக்கு என்னாச்சு? 
யூதர்கள் பின்னாடியே போயிட்டிருக்க்கே பொண்ணு என குழப்பிக்காதிங்க. பேஸ்புக் பக்கம் ஈழத்தமிழ்  நட்புக்களினுடனா சில விவாதங்களுக்காக அங்கே பகிரப்பட்ட பதிவுகள் இங்கே என் வலைப்பூவிலும் ஆவணமாகின்றது. நாங்களும் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம் அல்லவா?
இன்றைக்கு யூதர்கள்? நாளைக்கு தமிழர்கள்?
ஐரோப்பாவில் ஏனைய புலம் பெயர் மக்களை விடவும், தொழில் மற்றும் பல காரணங்களால் சொந்த நாட்டை விட்டு புலம் பெயர்ந்து பல தலைமுறைகளாக வாழும் இத்தாலியர்,ஜேர்மனியர்,செக்கோஸ்லாவியர், கோசோவா ,இன்னும் பிற ஐரோப்பிய ஆசிய,ஆப்பிரிக்க நாட்டாரை விடவும் தாம் புலம் பெயர் நாடுகளின் நன்மதிப்பையும், செல்வாக்கையும், தம் எதிர்காலத்துக்கான ஸ்திரத்தன்மையைவும் தம் அறிவாலும்,நன்றி காட்டும் குணத்தாலும் எங்கள் புலம் பெயர் தமிழ்ச்சமுகம் தம்மை உயர்த்தி கொண்டு வருகின்றது.
அரசியல்,அதிகாரம் உள்ளிட்ட பல பொறுப்புக்களில் எம்மவர் அமர்த்தப்படுகின்றார்கள், அதை விடவும் புலம்பெயர்ந்தவர்கள் தமக்கென அசையா சொத்துக்களான காணி நிலங்களை வாங்கி சேர்க்கின்றார்கள். விவசாயம் முதல் அனைத்திலும் தம் இருப்பை உணர்த்தி கொண்டிருக்கின்றார்கள். மொத்தத்தில் மண்ணில் மைந்தர்களான நாட்டின் குடிமக்களிடமும் அதிகாரிகள், அரசியல் வாதிகளிடமும் இலங்கைத்தமிழர்கள் நற் நம்பிக்கையை பெற்றிருக்கின்றார்கள்.
புலம்பெயர்ந்து இரண்டாம் தலைமுறையால் இத்தனை சீக்கிரம் தம் இருப்பை உணர்த்த முடியுமானால்.இனிவரும் காலங்களில் தமிழர்கள் இல்லாது எதுவுமே இல்லை எனும் சூழலுக்கு நாட்டின் நிர்வாகத்தின் அதிகார பதவிகளில் எம் சந்ததிகள் ஆக்ரமித்து கொள்வார்கள். .
யூதர்களை போல் எம்மக்களிடன் இயல்பில் ஊறிப்போயிருக்கும் கல்வித்தாகம், அறியும் வேகம், கணக்கில் திறமை , பலகலைக் கழகம் செல்லும் படி பிள்ளைகளுக்கு கொடுக்கப்படும் ஊக்கம் எல்லாம் சேர்ந்து தரமான அறிவாளிகள் கொண்ட கட்டமைப்பு புலம் பெயர் நாடுகளில் எதிர்காலத்தில் உருவாகும் அல்லது உருவாக்கப்படும்.
நாட்டின் மக்களை விடவும் செல்வாக்கு பெற்றவர்கலாக எம் சமூகம் மாறும் காலத்தில் ஒரு நூறாண்டு கடந்திருக்கும். அப்போது எம் மக்களுக்கு எதிரான புரட்சி தோன்றாது என்பது என்ன நிச்சயம்?
ஹிடலரை போல் ஒரு நாசி மீண்டும் உருவாகி இலங்கை தமிழர்களுக்கெதிராக செயல் பட மாட்டான் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
இது நம் சொந்த மண் இல்லை. என்றைக்கிருந்தாலும் இந்த மண் நமக்கு அன்னியம் தான்.
இலங்கையில் 1980 களுக்கு முன் வரை தமிழர்கள் தான் நிர்வாகத்திறன் மிக்கவர்களாக அனைத்து பதவிகளையும் பெற்றிருந்தார்கள். அதுவே சிங்கள அரசுக்கும் அரசியல் வாதிகளுக்கும் கண்ணை குத்தியது..சொந்த நாட்டிலேயே எம் வளர்ச்சி கண்டு முடமாக்கப்பட்ட நாம் அன்னிய மண்ணில் எப்படி சுதந்திரமாக செழித்து வளர்வோம் என எதிர்பார்க்கின்றோம்?
இன்றைக்கு யூதர்கள்???/
நாளைக்கு தமிழர்கள்?

இந்த மண் எங்கள் சொந்த மண் இல்லை. என்றைக்கும் சொந்தமண் ஆக விடவும் மாட்டார்கள். நாங்கள் அகதிகளாக அடங்கி கிடக்கும் வரை தான் எமக்காக சுதந்திரமும், செல்வாக்கும் இங்கே கிடைக்கும்.
எதிர்காலத்தில் எம் சந்ததி பல்கலைக்கழகங்கள் செல்லும் தகுதிக்குரிய அறிவினை அதிகளவு பெற்று தம் மேற்படிப்புக்கான் நுழைவுகளுக்கு தகுதி வாய்ந்தோராக நிருபிக்கும் போது எம் மக்களுக்கெதிராக பெரும் புரட்சியே வெடிக்கும்.
எம் மக்கள் அரசியல் முதல் கல்வி வரை மண்ணின் மைந்தர்களை விடவும் அதிக ஆர்வம் காட்டி தம் திறமையை வெளிப்படுத்துவதை இப்போதே உணர முடியும்.அதனால் தான் அப்பப்போ வெளி நாட்டவர்களுக்கெதிரான சட்டங்களை துசி தட்டி புதுப்பித்து கொண்டிருக்கின்றார்கள். நீ அகதி தான் என தட்டி வைக்கின்றார்கள்.
புலம் பெயர் நாடுகளின் காவல் துறைப்பணி மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான முக்கிய பதவிகளின் பங்கேற்றும் அனுமதி எமக்கில்லை. சொந்த மண் இது இல்லாததனால் குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனை வரும் போது நாட்டுக்கு உண்மையாக இருக்கும் வாய்ப்பு சந்தேகத்துக்குள்ளாவதனால் புலம்பெயர்ந்தவர்களின் மூன்றாம் தலைமுறைக்கு தான் அவ்வாறான் பணிகளை பெற முடியும்.
யூதர்களும் இப்படித்தான்.புலம்பெயர் நாடுகளில் அவர்கள் அறிவும், திறமையும் அந்த நாடுகளின் முன்னேற்றத்துக்கு அவசியமாக இருந்தது. அவர்களை பயன் படுத்தி தங்கள் தேவைகளை , தேடல்களை பூர்த்தி செய்து கொண்டார்கள்.ஆனாலும் அவர்களுக்கு இந்த மண் சொந்தமானதில்லை என்பதை விட உலகில் எங்குமே தம் இனத்துக்கென சொந்த மண் இல்லை என உணர்ந்து கொண்டார்கள்.
உடம்பு முழுக்க மூளை  என யூதர்களை குறித்து சொல்வடை உண்டு.
தன்னம்பிக்கைக்கு சிறந்த முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டுக்கின்றார்கள் யூதர்கள்.

பத்து மில்லியன் மக்கள் வாழ தமக்கென ஒரு தனி நாடு எனும் எதிர்ப்பாப்போடு தங்கள் மூதாதையர் தேசம் நோக்கி உரிமைப்போரை ஆரம்பித்தார்கள்.
அதற்கு அவர்களுக்கு பல நூறாண்டுகள்
தேவைப்பட்டிருக்கின்றது. புலம் பெயர்ந்து பல நூறாண்டுகள் ஆகியும் அவர்கள் தங்கள் தனித்தன்மையை இழக்கவில்லை என்றாலும் தம் சொந்த மொழியான் ஹிப்ரூ மொழியை மறந்திருந்தார்கள். ஆம், இஸ்ரேல் மீண்டும் உருவான போது புலம் பெயர்யூதர்கள் தம் சொந்த மொழியை மறந்திருந்தார்கள்.

யூதர்களின் கடந்த காலமும், நமது நிகழ் காலமும், 
யூதர்களின் நிகழ் காலமும் நமது எதிர்காலமும் நம்மை எச்சரிக்கைப்படுத்தவில்லையா?

அப்படி எதை இந்த யூதர்கள் சாதித்து விட்டார்கள்?


அப்படி எதை இந்த யூதர்கள் சாதித்து விட்டார்கள் என இந்த உலகம் அவர்களை தலையில் வைத்துக்கொண்டாடுகின்றது?
பலஸ்தீன மக்களின் சொந்த நிலைத்தை தம் நிலமென போராடி அம்மக்களை அழித்து அட்டூழியம் புரியும் யூத இனமும் இஸ்ரேலிய நாடும் எதை சாதித்து விட்டது.
அவர்கள் சாதனைகள் என்ன?
1.தனி மனித உரிமை / இது தான் முக்கியமானது. தனிமனித உரிமையை மதிக்கும் மக்களை கொண்ட நாடு சிறக்கும்.
2.பிரெஸ்லி முறை ரூபாய் நோட்டுக்கள்
3.பெண்களுக்கான் சுதந்திரம்
4.பெண்களுக்கான கல்வி / பட்டப்படிப்பு 25 சத வீதம் , முதுகலை பட்டம் பெற்றவர்கள் 12 சதவீதம். உலகின் மூன்றாமிடத்தில் இஸ்ரேல் இருக்கின்றது.. முதலிரு இடங்கள். நெதர்லாந்தும், அமெரிக்காவும்.
எந்த நாடு பெண்களை மதிக்கின்றதோ எந்த நாடு முன்னேற்றம் கண்ட நாடாகவே இருக்கும்.

5. நாட்டின் மொத்த தொகையில் 44 சதவீதம் பெண்கள் வக்கில்களாக பணி புரிகின்றார்கள்.
6..தொழில் முனைவோராய் 55 சதவீதமான் பெண்கள் சாதித்து கொண்டிருக்கின்றார்கள்.
7.விவசாயமும் சொட்டு நீர்ப்பாசனமும்
8.வீட்டுக்கொரு மரம் என இயற்கையை பேணுதல்

9.தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி / நாடே சிலிக்கான் வேலி தான்.கணிதப்புலிகள்.
10. Windows NT operating system developing / Pentium MMX Chip- கண்டு பிடிப்பில் இஸ்ரேலின் Inrel நிறுவனத்தின் பங்களிப்பு.
11.3000 க்கும் மேற்பட்ட தொழில் நுட்ப நிறுவனங்களை கொண்ட மிகச்சிறிய நாடு
12. Motorola Mobility யின் முதல் செல்போன் கண்டு பிடிப்பு
13.Voice mail
14.Computer Anti vieus / 1979
15. சிறிய நாடு ஆனால் உலகத்தின் நான்காவது விமானப்படை இவர்களிடம். 
M-16 ரக போர் விமானம் மட்டும் 250 க்கும் மேல் உண்டாம்.

16. செஸ் விளையாட்டு வீரர்கள்/ தலை சிறந்த கிராண்ட் மாஸ்டர்கள். / கணக்கு புலிகள் அல்லவா?
17.ஸ்டெம் செல் ஆய்வு, இதய நோய்களுக்கான கண்டுபிடிப்புக்களும் தீர்வுகளும்/ இதர மருத்துவத்துறைகளில் பல கண்டு பிடிப்புக்களும், ஆராய்ச்சிகளும்,
18.Mossad / 1949 ல் ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட3000 புலானாய்வு பணியாளர்கள் வெளிப்படையாகவும், இரகசியமாக பல ஆயிரம் புலனாய்வாளர்களையும் கொண்ட இஸ்ரேலிய புலனாய்வுத்துறை. உலகின் திறமையான, கொடூரத்தன்மை கொண்ட புலனாய்வுத்துறை.
வெளிநாட்டுப் புலனாய்வில் மட்டுமல்லாது உள்நாட்டு பாதுகாப்பு, இஸ்ரேல் இராணுவ புலனாய்வு இஸ்ரேலிய அணுசக்தி திட்டட்திற்கு ஆதரவாக விஞ்ஞான, தொழில் நுட்பம் சார்ந்த நான்காவது நுண்ணறிவு (Lakam) பாதுகாப்பு, தேடல்,
யூதர்களை பாலஸ்தீனத்திற்கு இரகசியமாக குடியேற்றுதல் என உலகின் முன்னனி புலனாய்வுத்துறையை கைவசம் வைத்திருக்கின்றது இஸ்ரேல்.
நம் அருகில் கூட ஒரு மெசாட் புலனாய்வாளார் இருக்கலாம் என சந்தேகிக்கும் படி எங்கெங்கும் மொசாட்டின் உளவாளிகள் பரந்திருக்கின்றார்கள். மொசாட் இன்றி அணுவும் அசையாது எனலாம். இதுவே மிகப்பெரிய சாதனை தான்.
அமெரிக்காவின் CIA / US-amerikanischen Central Intelligence Agency (CIA) ஐ இரண்டாம் நிலைக்கு தள்ளி முதன்மை நிலையில் புலனாய்வுப்புலிகளாக அமெரிக்காவுக்கே தண்ணீர் காட்டுவது தான் இவர்கள் சிறப்பு.
19.அதிகளவிலான போர்களில் பங்கு பற்றி இருப்பது.
20.ஆண் பெண் இருவருக்குமான் இராணுவப்பயிற்சி
21.மத்திய தரைக்கடலில் மீதான ஆளுமை
22.உலக நூல்களை அதிகளவில் மொழி பெயர்த்தல்.

24. நோபல் விருது / உலகின் அதி உயர் விருதுகள் உலக ஜனத்தொகையில் யூதர்கள் மிகவும் குறைவான போதிலும் 20_ம் நூற்றாண்டில் வேதியல், பொருளாதாரம், இலக்கியம், சமாதானம், பௌதீகம், மருந்து போன்ற துறைகளுக்காக வழங்கப்பட்ட நோபல் பரிசுகளில் நான்கில் ஒரு பகுதியை யூதர்களே பெற்றிருக்கிறார்கள்!
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உடபட பல யூதர்களின் கண்டு பிடிப்புக்கள் தான் உலகை நவீனப்படுத்திக்கொண்டி
ருக்கின்றது.

25. நல்லதை போல் தீமைகளையும் அவர்கள் விதைத்ததில் வல்லவர்கள், வியாபார மூளைக்காரர்கள். மார்ல்பரோ முதல் பல புகைத்தல், அழித்தல் கண்டுபிடிப்புக்களை அமெரிக்க எனும் நாட்டாமையின் பின் பக்கமாக மறைந்து கொண்டு மக்களை நாசமாக்குபவர்கள்.
சுய நல வாதிகள். தாம் மட்டுமே கடவுளின் நேரடி வாரிசென அக்கிரமங்கள் புரிபவர்கள். இவர்களுக்கு கடவுள் நம்பிக்கையே துச்சம் தான்.
யுதர்களுக்கும் தமிழர்களுக்குமான் ஒற்றுமை ஏதேனும் உண்டா என நீங்களே ஆராய்ந்து கொள்ளுங்கள்.



யூதர்களும் ஈழத் தமிழர்களும்,  ஈழமும் கற்றலோனியாவும் எனும்  நம்பிக்கைக்கனவொன்று எம் மக்கள் மத்தியில்  நகர்ந்து கொண்டிருக்கின்றது.  கனவு காண்பது தவறே இல்லை.  எல்லோரும் கனவு காணலாம். 

எதையும் மேம்போக்காக  அறிந்து கொண்டு கனவு காணாமல் அவரவர் கடந்து வந்த பாதைகள் அவர்கள் தம்மை ஸ்திரப்படுத்திருந்த விதம் குறித்தறிந்த பின்  கனவு காண்போம்/ 

என் பதிவுகளினூடாக நான் எவர் செயற்பாடுகளையும் ஆதரிக்கவும், எதிர்க்கவும் இல்லை. 

படிப்பவர் இலகுவாக புரியும் படி ஆவணப்படுத்தும் முயற்சியே  இப்பதிவுகள்.

கடந்து வந்த பதிவுகள். . 



19 செப்டம்பர் 2018

Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் பகுதி 5

சிதறுண்டு கிடந்த யூத இனம் ரஷ்யாவிலிருந்து 1882 ஆண்டிலிருந்து 1903 வரை இடம் பெயர்ந்தது!
1892 ஆம் ஆண்டு சுவிஸ்ஸர் லாந்தில் யூதர்களின் ஆன்மீகத்தந்தையான தியோடர் ஹெர்சல் என்பவர் முதல் மா நாடு கூட்டப்பட்டு யூதர்களுக்கு என தனி நாட்டை மீட்டெடுக்கும் பிரகடனம் ஒன்றைச்செய்தார்.
இந்த பிரகடனத்தை தொடர்ந்து 1904 முதல் 1914 ஆண்டுவரை போலந்திலிருந்தும் ரஷ்யாவிலிருந்தும் யூதர்கள் இஸ்ரேல் நோக்கி குடிபெயர்ந்தனர்.
இக்குடிபெயர்தலுக்கு அலியா என பெயரிடப்ட்டு முதல் அலியா, இரண்டாவது அலியா என ஆவணப்படுத்தப்ப
டுத்தினார்கள்.

இஸ்ரேலில் இருக்கும் சியோன் மலையின் பெயரில் 
சீயோனிசம் எனும் யூத விடுதலை இயக்கம் மீண்டும் தாய் நாட்டை அடைய வேண்டும் எனும் சிந்தனைக்கு உத்வேகம் கொடுத்தது.

ஒட்டோமான் அரசர்களின் ஆட்சிகாலத்தின் இறுதியில் துருக்கியர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதால் அராபியர்கள் அதிருப்தி அடைந்திருந்தார்கள்.
ஓட்டொமான் அரசிடமிருந்து விடுதலையாக்கி சுதந்திர நாடாக்குவோம் எனும் வாக்குறுதியை அளித்து உலகபோரில் நேச நாடுகளானஅமெரிக்காவும் பிரட்டனும், யூதர்களையும்,அராபியர்களையும் பயன் படுத்தியது!
அவர்களும் தமக்கு சுதந்திரம் கிடைக்கு மென நம்பி நேச நாடுகளுக்கு உதவினார்கள்.
இந்த சூழலில் தான் பாலஸ்தினத்திலிருந்த ஆராபியர்களுக்கும் யூதர்களுக்குமிடையில் பகைமை வளர்ந்தது.
சீயோனிசம் போல் அரபி தேசியமும் வேண்டும் எனும் எழுச்சி ஏற்பட்டது.
பிரிட்டீஷ் அமைச்சர்களால் அங்கீகாரம் பெற்ற ஆர்தர் ஜேம்ஸ் பல்ஃபோர் என்பவர் தலைமையில் நவம்பர் 2, 1917ல் பல்ஃபோர் பிரகடனம் வெளியிடப்பட்டது.
இது யூதர்களின் தனி நாடு கோரிக்கைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக புரிந்து கொள்ளப்பட்டது.
1922ல் பிரிட்டனால் Mandate for Palestine என்றழைக்கப்படும் தனி இஸ்ரேல் நாடு அதிகாரம் வழங்கப்பட்டது!
1948 வரை இஸ்ரேல் பிரிட்டன் வசம் தான் இருந்தது. அக்காலத்தில் தான் இவ்வனைத்து பிரகடனமும் ஏற்படுத்தப்பட்டது.
யூதர்களின் மீள்குடியேற்ற காலங்கள்
**************************************************

முதல் அலியா 1882 முதல் 1903 வரை ரஷ்யாவிலிருந்து
இரண்டாவது அலியா 1904 முதல் 1914 வரிஅ ரஷ்யா, போலந்திலிருந்து
மூன்றாவது அலியா 1919 முதல் 1923 ரஷ்யாவிலிருந்து
நான்காவது அலியா 1924 முதல் 1932 போலந்திலிருந்தும்
ஐந்தாவது அலியா 1933 முதல் 1939 ஜேர்மனிலிருந்தும் குடிபெயர்ந்தார்கள்.
தொடரும்.

Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் பகுதி 6

பலஸ்தீனப் பிரச்சினையை நம் காலத்தின் மாபெரும் தார்மீகப் பிரச்சினை என்றாராம் நெல்சன் மண்டேலா

யூதர்கள், இஸ்ரவேலர்கள், எப்ரேயர்கள் என அழைக்கப்பட்டு யூத மதத்தினை பின் பற்றும் கானானிய தேச மக்கள் பல நூறாண்டுகளுக்கு முன் உலகத்தின் பல பாகங்களுக்கும் சிதறிக்கப்பட்டது மட்டுமல்லாமல் இன ரிதியான அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டவர்கள்.
யூத மதம் ஒரே கடவுள் கொள்கை கொண்ட உலகின் பழமையான் மதமாகும்.
இன்றைய கிறிஸ்தவத்தின் மூல மதம் யூத மதம் எனில் அது மிகைப்படுத்தல் இல்லை.

யூதர்களின் மதனூல்களை தொடர்ந்தே கிறிஸ்தவ, இஸ்லாமிய, பகாய், ஆபிரகாமிய மதங்கள் உருவானது.
யூதர்கள் வம்ச வரலாற்றை அறிய எனது Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் பகுதி இரண்டினை படிக்கவும்..
1933 ஆம் ஆண்டு ஹிட்லரின் காலம் தொடங்கியது. ஹிட்லரின் நாசிக்கொள்கைகளால் யூதர்கள் பாதிக்கப்பட்டார்கள்.
1941ல் ஐரோப்பாவின் சகல நாடுக்ளையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த ஹிட்லர் யூத மக்களை தேடி அழித்தான்.யூதர்கள் மீதான ஹிட்லரின் அழிப்பு உலகத்தின் பெரும் இன அழிப்பாகியது.
மூன்று மில்லியன் மகக்ளை விஷ வாய் செலுத்தி கொன்றான்.1939ல் ஆரம்பித்து 1941 வரையான உலகப்போர் காலத்தில் கிட்டத்தட ஆறு மில்லியன் யூத மக்களை தேடி தேடி கொன்று குவித்தான் ஹிட்லர்.
ஹிடலரிடமிருந்து தப்பி அகதிகளான யூதர்கள் ஸியோனிஸ்டுகள் எனும் விடுதலை இயக்கத்தினரால் ஐரோப்பாவிற்குள் இடம் பெயராமல், பலஸ்தீனத்திற்குச் செல்ல வற்புறுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர்.
அக்டோபர், 1918ல் ஜெருசலேம் நகரை பிரிட்டிஸ் படைகள் கைப்பற்றியதிலிருந்து 1948 வரை ஜெருசலேம் பிரிட்டிஷ் வசம இருந்தது.
முதலில் இக் குடியேற்றத்தை ஆரம்பத்தில் பலஸ்தீனியர்கள் கண்டு கொள்ளவில்லை. தமக்கென ஒரு நாடு அமைக்கும் நோக்கத்துடன் மேலும் மேலும் யூதக் குடியிருப்புகள் உருவானபோது தான் இரு பகுதியினருக்கு
மிடையில் முரண்பாடுகளும் மோதல்களும், வன்முறைகளும் வெடித்தன.

யூதர்களின் செல்வாக்கு அதிகமாகி அவர்களின் பண்ணைகளில் வேலைசெய்யும் நிலைக்கு அராபியர்கள் தள்ளப்பட அன்றைய உலகின் பொருளாதார மந்தம் காரணமாகியது!
பாலஸ்தினத்திலிருந்த ஆராபியர்களுக்கும் யூதர்களுக்குமிடையில் பகைமை வளர்ந்தது.
யூதர்களிடம் ஆராபியர்கள் வேலை செய்வதும் யூதர்களின் செல்வாக்கும் ஆராபியரிடையே பகை உணர்வை தோற்றுவித்து யூதர்களை தாக்க ஆரம்பித்தோடு ஆராபியர்கள் யூதர்களுக்கு எதிராக கிளர்ச்சிகளும் செய்ய ஆரம்பித்தார்கள்.
சீயோனிசம் போல் அரபி தேசியமும் வேண்டும் எனும் எழுச்சி ஏற்பட்டது.
1936 முதல் 1939 வரை இம்முறுகல் நிலை நீடித்தாலும் அராபியர்களின் அழுத்தத்தால் பிரிட்டன் மீள குடியேறும் யூதர்களின் எண்ணிக்கையை மட்டுபடுத்த ஆரம்பித்ததும் யூதர்கள் சட்டவிரோதமாக குடியேற ஆரம்பித்தார்கள்!
1947ல் ஐ.நா இதில் தலையிட முடிவு செய்த போது அங்கு குடியிருப்பை அமைத்திருந்த யூதர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 30 வீதமாக உயர்ந்திருந்தது. 7 வீதமான் நிலத்தை தங்கள் வசப்படுத்தி இருந்தார்கள்.
அக்டோபர், 1918ல் ஜெருசலேம் நகரை பிரிட்டிஸ் படைகள் கைப்பற்றியதிலிருந்து.1948 வரை 
இஸ்ரேல் பிரிட்டன் வசம் இருந்த காலத்தில் தான் இவ்வனைத்து பிரகடனமும் ஏற்படுத்தப்பட்டது.

ஏறக்குறைய 1940 களில் ஆரம்பித்த பலஸ்தீன அராபிய, இஸ்ரவேல் யூதர்களுக்கான பிரச்சனையை சமாளிக்க திணறி பிரிட்டன் ஐ, நாவிடம் தீர்வுக்கான ஆலோசனை வேண்டியதும் 1947,மே 15 ல் ஐ.நா. UUNSCOP கமிட்டியை உருவாக்கியது.
இக்கமிட்டியில் வல்லரசு நாடுகள் சேர்க்க்ப்படவில்லை!
ஐந்து வாரங்கள் ஆராய்ந்து. பாலஸ்தீனம் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒரு பகுதி யூதருக்கும் இன்னொரு பகுதி அராபியருக்கும் எனும் தீர்மானித்தது. இந்த தீர்மானம் நவம்பர் 1947 ஆம் ஆண்டில் ஐ,நாவால் ஏற்கப்பட்டது!
இதற்கு 35 நாடுகள் ஆதரவும், 13 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்தண! அரபு லீக்கை சேர்ந்த அரபு நாடுகள் எதிர்ப்பாகவே வாக்களித்தது! பத்து நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை!
ஐ, நாவால் இத்தீர்மானம் அறிவிக்கப்பட்டாலும் அன்றிலிருந்து இன்று வரை ஆராபியர்களுக்கும் யூதர்களுக்கும் பாலஸ்தினிய பகுதிகளை பிடிப்பதில் மோதல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது..
1948 ஆம் ஆண்டு மே மாதம் 14 ம் திகதி இஸ்ரேல் சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தப்பட்ட மறு தினமே அரபு நாடுகள் இஸ்ரேலை நோக்கி படை யெடுத்தன!
இன்று வரை இந்த மோதல்கள் முடிவுக்கு வரவில்லை.
இஸ்ரேல் நாடு மே மாதம் 14 ம் திகதி 1948 ல் சுந்ததிர நாடாக பிரகடனப்படுத்தப்பட்டபின் 3 ஆண்டுகளில்
லேயே அதன் தொகை இரட்டிப்பாகியது!

சாலமோன் காலத்தின் பின் கானானிய தேசமானது பிளவு பட்டு இஸ்ரவேல் , யூதேயா என பிரிக்கப்பட்டு கி.முன் 722 ல் ஆசீரியர்களால் இஸ்ரவேல் நாடு அழிக்கப்பட்டது. அதன் மக்கள் அகதிகளாக சிதறிக்கப்பட்டவர்கள் மீண்டும் தங்கள் நாட்டுக்கு முதல் அலியா காலமான 1882 முதல் 1903 வரை ரஷ்யாவிலிருந்து மீளவும் குடி யேறினார்கள். 
கிட்டத்தட்ட 100 நாடுகளுக்கு மேல் சிதறிடிக்கப்பட்டிருந்த யூதர்கள் 
ஒன்று சேர்க்கப்பட்டார்கள்.

உலக ஜனத்தொகையில் யூதர்கள் மிகச் சொற்பமானவர்களான போதிலும் 20_ம் நூற்றாண்டில் வேதியல், பொருளாதாரம், இலக்கியம், சமாதானம், பௌதீகம், மருந்து போன்ற துறைகளுக்காக வழங்கப்பட்ட நோபல் பரிசுகளில் கால்பகுதியை யூதர்களே பெற்றிருக்கிறார்கள்! ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உடபட பல யூதர்களின் கண்டு பிடிப்புக்கள் உலகை நவீனப்படுத்திக்கொண்டிருக்கின்றது.
ஆனாலுல் யூதர்கள் மிகவும் தாழ்வாக சக மனிதர்களோடு ஒன்றி வார இயலாதவர்களாக, பிரச்சனைக்குரியவர்களாகவே பார்க்கப்படுகின்றார்கள்.


 

இக்கட்டுரை இஸ்ரேலிய வரலாறென தொகுக்கப்பட்ட நீண்ட கட்டுரை ஒன்றிலிருந்து சுருக்கமாய் தொகுத்து அமைக்கப்பட்டது.
கி.முன்னரான அரசர்களின் ஆட்சிகாலங்கள் அண்ணளவான ஊகத்தின் அடிப்படையில் ஆண்டுகள் எழுதப்பட்டிருக்கின்றது. !
தகவல் நன்றி
Dr E.K. Victor Pearce, Evidence for Truth: Arhaeology,

18 செப்டம்பர் 2018

Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் பகுதி 4

* Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள்* 
பகுதி 4

கி,மு 1400 இலிருந்தே கானான் தேசம் இஸ்ரேல் என்று அழைப்படலாயிற்று.
அன்று யோசுவா தலைமையில் தோற்கடிக்கப்பட்ட கானானியர் இன்றைய பாலஸ்தீனியர் அல்ல!
அன்றைய கானானிய ஆட்சி..
நியாதிபதிகள் ஆண்டார்கள்
கி.மு 1020 ஆண்டு வரை இராஜாக்களால் ஆளப்பட்டது.
முதல் அரசனாக சவுலைத்தொடர்ந்து தாவீதும் தாவீதை தொடர்ந்து தாவீதின் மகனும் ஞானவானும் ஜெருசலேம் தேவாலயம் கட்டியவனுமான் சாலமோனும் அரசாண்டார்கள். .
சாலோமோன் ஆட்சிக்கு பின் கானானியதேசம் இரண்டாக பிளவு பட்டது.
கானானிய தேசம் பிரிக்கப்பட்டு இஸ்ரேல் எனவும், யூதேயா எனவும் இரு நாடுகளாக்கப்பட்டது.
சமாரியா இஸ்ரவேலின் தலை நகராகவும்,
ஜெருசலேம் யூதேயாவின் தலை நகராகவும் நிர்மாணிக்கப்பட்டது.
கி.மு 722 ஆம் ஆண்டில் பிரிக்கப்பட்ட சமாரியாவை தலை நகராக கொண்ட இஸ்ரேல் நாடு.
ஆசீரியர்களால் அழிக்கப்பட்டு.இஸ்ரேலில் வாழ்ந்த அதன் குடிமக்கள் பல் தேசங்களுக்கும் அகதிகளாக துரத்தப்பட்டார்கள்.

100 வருடங்களுக்கு பின் யூதேயா தேசமும் பாபிலோனால் பிடிக்கப்பட்டு. அதன் மக்களும் சிதறடிக்கப்பட்டு.கி,மு 586 ல் சாலோமோனால் கட்டப்பட்ட ஜெருசலேம் தேவாலயம் இடிக்கப்பட்டது.
யூதேயாவை பிடித்த பாபிலோனியர் யூத மக்களை பாபிலோனுக்கு நாடு கடத்தினாலும். அதன் பின் 50 வருடங்கள் பின் பெர்சிய மன்னன் சைரஸ் பாபிலோனை கைபற்றி யூதர்களை விடு்வித்து எருசலேமை மீள கட்டும் அனுமதி கொடுத்தார்!
கி.பி சுமார் 50 ஆயிர்ம யூதர்கள் செருபாபேல் என்பவர் தலைமையில் இஸ்ரேலுக்கு திரும்பினர்.
எஸ்ரா என்பவர் தலைமையிலும் இன்னும் சில யூதர்கள் நாடு திரும்பினார்கள்.
கி. மு 520- 512 ஆம் ஆண்டில் மீண்டும் இரண்டாவது தடவை ஜெருசலேம் தேவாலயம் கட்டப்பட்டது.
இஸ்ரேல் கி.மு.333ல் அலெக்ஸாண்டரின் படைகளால் கைப்பற்றப்பட்டது!
கி.மு.63 வரை கிரேக்கர்களின் ஆட்சியின் கீழ் இஸ்ரேல் இருந்தது.
கி.மு.63ல் ரோமப்படையினர் டைட்டஸ் என்பவர் தலைமையில் ஜெருசலேம் நகரைப் பிடித்ததோடு கி.பி.70ல் ஜெருசலேம் தேவாலயத்தையும் இடித்தார்கள்!
ஜெருசலேமுக்கும் ஏலியா கெபிடலேனியா என பெயர் மாற்றம் செய்தனர்!
கி.பி.313 வரை.... அதாவது கி.மு 63 இலிருந்து கி.பி 313 வரை இஸ்ரேலில் ரோமர்களில் ஆட்சி இருந்தது.
ரோமர்களிடமிருந்த இஸ்ரேல் கி.பி.313 முதல் 636 வரை பைசாண்டியர்களால்ஆளப்பட்டு பைசாண்டிய அரசர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்களா
யிருந்தன்ர்.

கி.பி.636ல் அரபியர்கள் வசம் வந்தது. இவர்கள் ஆபிரகாம் மகன் இஸ்மவேல் வம்சத்தார் என்பதை நினைவில் கொள்க..
கி.பி 70 இல் இடிக்கப்பட்ட தேவாலயம் இருந்த இடத்தில் தான் காலிஃப் அப்டெல் மாலிக் என் என்பவர் முஸ்லிம் வழிபாட்டுத்தலமான டோம் ஆஃப் தி ராக்-ஐ கட்டினார்.
கி.பி.1099 முதல் 1291 வரை சிலுவைப்போர் வீரர்கள்
கி.பி. 1291 முதல் 1516 வரை மம்லுக் அரசின் வசமும் இஸ்ரேல் நாடு இருந்தது

1516 முதல் 1918 வரை ஓட்டோமான அரசர்கள் இஸ்ரேலை ஆண்டனர்.
அவ்வழியில் கி.பி 1520-1566 ஆண்டு வரையான சுல்தான் சுலைமான் என்பவர் ஆட்சியில் ஜெருசலேம் சுவர்கள் கட்டபட்டது.
ஃப்ரான்ஸின் நெப்போலியன் போனபார்ட் என்பவர் காசா நகரை கி. பி 1799ல் கைப்பற்றி தொடர்ந்து ஜெருசலேமையும் கைப்பற்ற திட்டமிட்டார்! ஆனால் அந்த திட்டம் நிறைவேறவில்லை!அவர் பின் வாங்கி சென்றார்.
கி. பி 1909ல் இஸ்ரேலில் தலை நகராகிய டெல் அவிவ் நகரம் (Hill of Spring) அமைக்கப்பட்டது.
கி. பி 1917ல் முதலாம் உலகப்போர் தொடங்கியது.
அக்டோபர், 1918ல் ஜெருசலேம் நகரை பிரிட்டிஸ் படைகள் கைப்பற்றியது! ஆல்ன்பை என்பவரது தலைமையில் சென்ற படைகள் எகிப்திலிருந்து சீனாய் பாலைவனம் ஊடாக வந்து கைப்பற்றினாலும் நகருக்குள் கால் நடையாக சென்றதாக வரலாறு சொல்கின்றது!
1948 வரை இஸ்ரேல் பிரிட்டன் வசம் இருந்தது!
இது வரலாறு. 
இந்த வரலாறின் படி

கி.மு.63ல் ரோமப்படையினர் டைட்டஸ் என்பவர் தலைமையில் ஜெருசலேம் நகரைப் பிடித்ததோடு கி.பி.70ல் ஜெருசலேம் தேவாலயத்தையும் இடித்தார்கள்!
ஜெருசலேமுக்கும் ஏலியா கெபிடலேனியா என பெயர் மாற்றம் செய்தனர்!
கி.பி.636ல் அரபியர்கள் வசம் வந்தது. இவர்கள் ஆபிரகாம் மகன் இஸ்மவேல் வம்சத்தார் என்பதை நினைவில் கொள்க..
கி.பி 70 இல் இடிக்கப்பட்ட தேவாலயம் இருந்த இடத்தில் தான் காலிஃப் அப்டெல் மாலிக் என் என்பவர் முஸ்லிம் வழிபாட்டுத்தலமான டோம் ஆஃப் தி ராக்-ஐ கட்டினார்.
தொடரும்...

Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் பகுதி 3



இந்த வரைபடத்தில் இன்று இஸ்ரேல், பாலஸ்தினம் என பிரிக்கப்பட்டு காட்டபபட்டிருக்கும் நாட்டுக்கான வரலாறு இன்று நேற்றையதோ சில நூறு வருடங்கள் கொண்டதோ அல்ல!
கிட்டத்தட்ட 4000 வருடங்கள் சரித்திர முக்கியத்துவம் கொண்ட பூமி அது. அதாவது ஆபிரகாமுடைய வரலாறுட்ன சம்பந்தப்படுத்தபடும் இடம் இஸ்ரேல்.
ஆபிரகாமில் மகன் ஈசாக் ஈசாக் தன் மகன்கள் ஏசா, யாக்கோபுடன் ஊர் எனும் பட்டணத்தினை விட்டு கி.மு 2161 ல் தற்போதைய இஸ்ரேல் எனப்படும் கானான் தேசம் வந்ததிலிருந்து ஆரம்பமாகும் வரலாறு அது.
தம் வம்ச உரிமையை அசட்டை செய்த ஏசாவுக்கு கொடுக்காமல் யாக்கோபின் மேல் பிரியமாயிருந்தபடியால் யாக்கோபுவிற்கு இடப்பட்ட பெயரே இஸ்ரேல் ..

அதாவது ஆபிரகாம் சந்ததியில் வந்த ஈசாக்கின் மகன் யாக்கோபின் பெயர் இஸ்ரேல்.

யாக்கோபின் வழி வந்தோரே இஸ்ரவேலர் எனப்பட்டனர்.இந்த யாக்கோபின் மகனான யூதாவின் வழி வந்தோர் யூதர்கள்.
கானான் எனப்பட்ட இன்றைய இஸ்ரேலில் கி.மு.1871ம் ஆண்டில் ஏற்பட்ட பஞ்சம் தாங்க இயலாது இஸ்ரேவேல் சந்ததியினர் எகிப்துக்கு நடந்து போனார்கள்.
எகிப்தில் 400 வருடங்கள் எகிப்தியருக்கு அடிமைகளாயிருந்து மோசேசால் மீண்டும் கி.மு.1441ம் ஆண்டில் இஸ்ரேல் தேசம் நோக்கி வந்தார்கள். நைல் நதியை நடந்தே கடந்தார்கள் எனும் வரலாறும் உண்டு.
கிட்டத்தட்ட 40 வருடங்கள் காடுகள், மலைகள், நதிகள் என அலைக்கழிக்கப்ட்டு எகிப்திலிருந்து புறப்பட்ட தலைமுறை அல்லாது புதிய ஒரு தலைமுறையாக மீண்டும் கி.மு.1400ம் ஆண்டில் அப்போதைய கானானியர் வசமிருந்த இஸ்ரேலை யோசுவா தலைமையில் போராடி வென்று இஸ்ரேலில் குடியேறினர்.
அதாவது கி,மு 1400 இலிருந்தே கானான் தேசம் இஸ்ரேல் என்று அழைப்படலாயிற்று. அன்று யோசுவா தலைமையில் தோற்கடிக்கப்பட்ட கானானியர் இன்றைய பாலஸ்தீனியர் அல்ல!
கிட்டத்தட்ட 4000 வருடங்களுக்கு முன்னரே யுதர்களுக்கு சொந்த மான இடமாக இருந்தது இஸ்ரேல். குர் ஆனையும், பைபிளையும் இணைப்பது சம வரலாறுகள் தான். இவ்வரலாறு குரானிலும் இருக்கும்.
சரி இங்கே பாலஸ்தினியர்கள் எப்படி வந்தார்கள் என்பதை இன்னொரு பதிவில் பார்க்கலாம்.
 யூதர்களும் இன்றைய கிற்ஸ்தவர்கள் என பைபிளை பின்பற்றுவோரும் ஒரே மார்க்கத்தவர் அல்ல.. யூதர்கள் தம்மை தவிர எவரையுமே இறைவனின் பிள்ளைகள் என ஏற்பதில்லை.
கிறிஸ்தவர்களை அவர்கள் புற ஜாதிகள் என்றே சொல்வர்.

Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் பகுதி 2

இப்பகுதியில் பைபிள் மற்றும் குரான் வேதங்கள் சொல்லும் வரலாறுகளும் சேர்ந்து வருவதனால் மத நம்பிக்கையை மட்டும் நுழைத்து இதை வாசிக்காமல் வரலாற்றை மட்டும் கருத்தில் கொள்ளவும்.
வேதம் போதிக்கின்றேன் என்பவர்கள் கடந்து செல்லுங்கள். 
புரிதலுக்கு நன்றி 
நிஷா

இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனை எதனால் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது?
எருசலேம் எனும் இடத்தை தமக்கான புனித இடம என பலஸ்தீன அராபியரும், இஸ்ரேலிய யூதரும் சொந்தம் கொண்டாடி அவ்வுரிமையை விட்டுக்கொடுக்காமல் போராடுகின்றார்கள்.

பலஸ்தீனிய அராபியர்களும் இஸ்ரேலிய யூதர்களும் யார்? காலம் காலமாக இவர்களுக்குள் போராட்டம் தொடர்வது ஏன்?
இயேசுவின் வருகைக்கு ஏறத்தாழ 2000 - 2500 வருடங்களுக்கு முன் அப்ரஹாம் (இப்ராஹீம்) என்ற தீர்க்கதரிசி (இன்றைய இராக்கில்) தோன்றினார். அவருக்கு சாராள் (சபுரா) ஆகார் (ஹாஜரா) என்று இரு மனைவிகள்.
தமிழ் மொழி பெயர்ப்பு பைபிள் ஆகாரை வேலைக்காரி என சொல்கின்றது. ஆனாலும் மூல மொழியில் என்ன எழுதப்ப்ட்டதென நாம் ஆராய்ந்து தான் முடிவெடுக்க முடியும்.
ஆபிரகாமின் முதல் மனைவிக்கு இரண்டாவது மகனாக பிறந்த ஈஷாக் வம்சத்தவரே யூதர்கள் என்பவர்கள்.
திருமணமாகி பல வருடங்களாகியும் தமக்கு பிள்ளை இல்லை என நினைத்தும் இத்தனை வருடத்துக்கு பின் பிள்ளை கிடைக்காது என நம்பி ஆகாரை திருமணம் செய்ய வைத்து ஆகாருக்கு பிறந்தவர் இஸ்மவேல் வம்சத்தில் தொடரும் அராபியர்களான பலஸ்தீனியர்கள்.
இருவருக்கும் தகப்பன் ஒருவர். தாய் தான் இருவர்.
எதிர்காலத்தில் சொத்துப்பிரச்சனைகள் வரக்கூடாது,உரிமைப்போராட்டம் இருகக்கூடாது என தம் மகனுக்கே அனைத்து உரிமையும் வர வேண்டும் என ஆபிரகாமின் முதல் மனைவி சாராயால் ஆகார் குழந்தை இஸ்மவேலோடு விரட்டப்பட்டாள். விரட்டப்பட்ட அவள் குழந்தையுடன் ,வானந்தரத்தில் அலைந்து திரிந்து தாகத்துக்கு தவித்தபோது பாதுகாப்புக்காக கையில் வைத்திருந்த தடியால் தான் நின்ற இடத்தில் அடிக்கும் போது தோன்றியது தான் இன்றைக்கு அராபிய முஸ்லிம்களால் புனித நீரென கொள்ளப்படும் ஷம் ஷம் நீர் என பைபிள் சொல்கின்றது. அதே இடத்தில் ஆபிரகாமும் இஸ்மவேலும் இணைந்து அந்த நீரினை தோன்ற வைத்ததாக இஸ்லாமியர்கள் நம்புகின்றார்கள்.
எப்படியோ ஷம் ஷம் நீர் புனிதமான நீர் என இரு சாராரும் நம்புகின்றார்கள்.
கஃபா எனும் பெயரில் ஆபிரகாமும் இஸ்மவேலும் இணைந்து கட்டியதாக இவ்விடத்தை புனித இடமென இன்னமும் மதிக்கின்றார்கள்.
இஸ்மவேலை குறித்து 
உன் சந்ததியினரைக் கடவுள் ஏராளமாகப் பெருகச் செய்வார். நீ ஒரு மிகப் பெரிய குலத்தை அறிமுகம் செய்து வைத்த பெருமையைப் பெறுவாய்.. 'நான் அவனை ஆசிர்வதித்து அவனை மிகவும் அதிதமாக பலுகவும் பெருகவும் பண்ணுவேன். அவன் பணிரென்டு பிரபுகளைப் பெறுவான். அவனைப் பெரிய ஜாதியாக்குவேன். (ஆதியாகாமம் 17:20)

அவன் துஷ்டனுமாயிருப்பான். அவனுடைய கை எல்லோருக்கும் விரோதமாகவும் எல்லோருடைய கையும் அவனுக்கு விராதமாகவும் இருக்கும் தன் சகோதரர்கள் எல்லோருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார். (ஆதியாகமம் 16:11,12)
ஆசிர்வாதமும், சாபமுமாய வாக்குக்கொடுக்கப்ப்ட்ட இனம் அராபியர் இனம்.
அதனால் தான் அவர்கள் உலகை ஆண்டுகொள்ளும் வளம் கொழிக்கும் ஆசிர்வாதத்தை தம் வசம் கொண்டிருந்தும் உலகளவில் எல்லோராலும் பகைக்கப்படுகின்றார்களோ எனும் ஆழமான் சிந்தனைக்குள் நான் செல்ல விரும்ப வில்லை.
ஆனாலும் துரத்தி அடிக்கப்பட்டதாக சொல்லப்ப்ட்ட இஸ்மவேல் ஆபிரகாம் மரித்து அடக்கம் செய்யப்பட்டபோது உடனிருந்ததாக அதே பைபிள் சொல்கின்றது.
ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசு நாட்கள் நூற்று எழுபத்தைந்து வருஷம். பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும்,முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான். அவன் குமாரராகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள். (ஆதியாகமம் 25:7,8,9)
இரு குமாரர்களும் சேர்ந்து தான் ஆபிரகாமை அடக்கம் செய்தார்கள் எனும் போது ஆபிரகாமின் 100 வயதில் ஈஷாக் பிறந்த பின்னும் 75 வருட காலம் உயிரோடிந்த காலங்களில் நடந்தவை குறித்து வரலாறு சொல்வது என்ன?
ஆபிரகாமும், இஸ்மவேலும் ஈஷாக்கும் தொடர்பில் இருந்திருக்கின்றார்கள் என்பதை நாம் பைபிள் வசனங்களை வைத்தே அறிந்திட முடிகின்றது.
அது எப்படி இருந்தாலும்........ ?
இஸ்ரேலுக்கு சொந்தமானவர்களென சொல்லப்படும் யூதர்களுக்கு அவ்விடம் வழி வழியாய் தொடரும் சந்ததிகளுக்கு வாக்களிக்கப் பட்டதெனும் கூற்றை மெய்ப்பிக்கும் ப்டி இஸ்ரேலை சாலோமேன் காலம் வரை யுதர்கள் ஆண்டதாகத்தான் வரலாறு சொல்கின்றது. சாலொமோன் காலத்தின் பின் தான் சொந்த நாட்டை விட்டு நாற்புறமும் விரட்டி அடிக்கப்பட்டவர்கள் அவர்கள் என்கின்றது வரலாறு.
பாலஸ்தீனம் அப்படி அல்ல!
பாலஸ்தீனம் என்பது ஆக்கிரமிப்புக்குள்ளான பலஸ்தீன மக்களுக்காக உருவாக்கப்பட்டது.
இது ஒரு சுதந்திரமான நாடு அல்ல.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் உயர் பீடமான பாலஸ்தீன தேசிய கவுன்சில் நவம்பர் 15, 1988 இல் அல்ஜீரியாவில் கூடி ஒருதலைப்பட்ச விடுதலைப் பிரகடனத்தை வெளியிட்டது. பாலஸ்தீன நாடு மேற்குக் கரை மற்றும் காசா ஆகியவற்றை உள்ளடக்கியதாகவும் ஜெருசலேம் அதன் தலைநகராகவும் இப்பிரகடனம் அறிவித்தது!
பலஸ்தீன நாடு" அரபு லீக் நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டாலும் ஐக்கிய நாடுகள் இதனை இதுவரையில் அங்கீகரிக்கவில்லை.
2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் நாள் ஐ.நா. 
பாலத்தீனத்தை "பார்வையாளர் நாடு" (observer state) என்னும் நிலைக்கு உயர்த்தியது.

ஐரோப்பிய ஒன்றியம் பாலத்தீனத்தை முழு இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரிக்காவிடினும், அது பலஸ்தீனத்துடன் தூதரக உறவைப் பேணி வருகிறது. இதுதான் பாலஸ்தீனத்தில் நிலை.
இஸ்ரேலியர் ஜெருசலேம் கானான் இறைவனால் தங்களுக்கு வாக்களிக்கப்ட்ட பூமி என நம்புகின்றனர். அந்த இடத்தினை தம் சொந்த் பூமியென பாலஸ்தீனர் சொல்கின்றனர். என்ன தான் நடக்கின்றது?
தொடர்வோம்.

Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் பகுதி 1


Jewish in Palestine, பாலஸ்தீனத்தில் யூதர்கள் எனும் தலைப்பிலான இக்கட்டுரை இஸ்ரேலிய வரலாறென தொகுக்கப்பட்ட நீண்ட தொடர் ஒன்றிலிருந்து 2014 ம் ஆண்டில் என்னால் சுருக்கமாய் தொகுத்து அமைக்கப்பட்டது.

ஐந்து பகுதிகளாக இங்கே பகிர்கின்றேன். அனைத்தையும் படியுங்கள்.

கி.முன்னரான அரசர்களின் ஆட்சிகாலங்களின் ஆண்டுகள் தோராயமாய் எழுதப்பட்டது!

ஆல்ப்ஸ் தென்றல் நிஷா
நிஷாந்தி பிரபாகரன்

எந்த ஒரு பிரச்சனைக்கும் ஆரம்ப வரலாறு ஒன்றிருக்கும் அந்த வரலாறை திரித்து புரிந்து கொள்வதனால் தான் உலகில் இனக்கலவரங்கள் 
வெடித்து இரத்த ஆறுகள் ஓடுகின்றன. இதற்கு இஸ்ரேல். பலஸ்தீனமும் வேறு பட்டதாக இல்லை.

அன்றைய இஸ்ரேலியர் சூழலில் தான் இன்று இலங்கை தமிழர்களென சொல்லபட்டவர்களும் இருக்கின்றோம். இனக்லவரத்தால் நாட்டைவிட்டு வெறியேறி அன்னிய நாடுகளில் குடியேறி அங்கேயே நம் சந்ததிகளை பெருக்கி கொண்டிருக்கின்றோம். சொந்த தேசத்தைவிட்டு துரத்தப்ப்ட்டவர்களாய் அகதிகளாக அலைகின்றோம். எதிர்காலத்தில் நம் சொந்த தேசமென ஈழத்தில் உரிமை கோருவது தவறெனில் இஸ்ரேலியர்களின் உரிமைப்போராட்டமும் தவறுதான்.
சிந்திக்க சில கேள்விகள்
1.புலம் பெயர்ந்து நம் நாட்டை விட்டு வந்ததனால் நம் தேசத்தின் மீதான உரிமையை விட்டுக்கொண்டுக்க வேண்டுமென சொல்ல முடியுமா?
2.எதிர்காலத்தில் நாம் புலம்பெயர்ந்த நாடுகள் தான் நம் நாடு என நாம் சொல்லி உரிமை கொண்டாட முடியுமா?
3.உலகத்தில் பல பகுதிகளிலும் சிதறிக்கப்பட்டிருக்கும் நாங்கள் எங்களுக்கான அதாவது தமிழர்களுக்கான் தேசம் என எதை உரிமை கோர முடியும்?
4.நாங்கள் சொல்வது இருக்கட்டும். நம்மை அரவணைத்திருக்கும் நாடுகள் முழுமையாக நம்மை நாட்டு பிரஜைகள் தாம் நாங்கள் என ஏற்குமோ?
இஸ்ரேலியர்களின் தேச மீட்ப்பு போராட்டம் குறித்த அகிம்சை வாதிகள் கருத்தை பாருங்கள்.
பலஸ்தீன, இஸ்ரேல் பிரச்சனை குறித்து 
1938 ல் ‘ஹரிஜன்’ பத்திரிகையில் காந்தி எழுதிய கட்டுரையில் சில வரிகள் தான் இந்த கட்டுரைக்கான தேடலை எனக்குள் கொடுத்தது.

உலகில் ஏனையவர்கள் சொல்வதைப் போல, எங்கே அவர்கள் பிறந்து வளர்ந்தார்களோ அதனையே ஏன் தங்கள் சொந்த நாடாக ஏற்றுக் கொள்ள முடியாது என அப்போதே காந்தி கேட்டிருக்கின்றார் .
இதற்கான பதிலை கடந்து வந்த வரலாற்றை படித்த பின் சிந்திப்ப்போம்.

1938 ல் ‘ஹரிஜன்’ பத்திரிகையில் காந்தி எழுதிய கட்டுரையை படியுங்கள். 
பலஸ்தீனத்தில் அரபு-யூத பிரச்சனைப் பற்றிய எனது கருத்தைக் கேட்டு ஒரு சில கடிதங்கள் எனக்குக் கிடைத்தன. ஜெர்மனியில் நிகழ்த்தப்பட்ட யூத இனப் படுகொலைகள் பற்றியும் கேட்கிறார்கள்.
நான் தென்னாபிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் அவர்களை நெருக்கமாக அறிவேன். சில யூத நண்பர்கள் கூட எனக்கு இருக்கின்றார்கள். அவர்கள் மூலம் யூதர்களுக்கெதிராக நிகழ்த்தப்பட்ட அடக்குமுறைகள் பற்றி அறிந்திருக்கின்றேன்.
நீதி என்ற தேவை ஏற்படும்போது இந்த அனுதாபங்கள் எல்லாம் என் கண்களை மறைக்கப் போவதில்லை. என்னைப் பொறுத்தவரையும் யூதர்கள் தங்களுக்கென ஒரு தனி நாடு கேட்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அவர்களுடைய வேதத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் ஆர்வத்தின் காரணமாகவே யூதர்கள் பலஸ்தீனத்தை நோக்கி திரும்புகிறார்கள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
உலகில் ஏனையவர்கள் சொல்வதைப் போல, எங்கே அவர்கள் பிறந்து வளர்ந்தார்களோ அதனையே ஏன் தங்கள் சொந்த நாடாக ஏற்றுக் கொள்ள முடியாது?.
இங்கிலாந்து எப்படி ஆங்கிலேயர்களுக்கு சொந்தமோ, பிரான்ஸ் எப்படி பிரெஞ்சுக்கார்களுக்கு சொந்தமோ அது போல பாலஸ்தீன் அரபுகளுக்கு சொந்தமானது. பிற நாடுகளில் வசிக்கும் யூதர்களைக் கொண்டு வந்து அங்கே குடியேற்றுவது மனிதாபிமானமற்ற செயலாகும்.
நான் ஒரு யூதனாக இருந்து, ஜெர்மனியில் பிறந்திருந்தால், ஜெர்மனிதான் என் தாய் நாடு என்று நினைப்பேன். அங்கே என்ன கொடுமை நடந்தாலும் எனது சொந்த நாட்டில் அது நடப்பதாக எடுத்துக்கொள்வேனே தவிர, பிற நாட்டை என் தாய்நாடாக நினைத்து ஓடிவிடமாட்டேன்.
சந்தேகமில்லாமல் சொல்கிறேன் யூதர்கள் தவறான பாதையிலேயே போய்க்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் வேதத்தில் குறிப்பிடப்படும் பாலஸ்தீன் என்பது இன்றைய புவியியல் எல்லைகளுக்குள் தேடப்படவேண்டிய நிலப்பரப்பு அல்ல, மாறாக அவர்கள் இதயங்களுக்குள்ளே இருக்கவேண்டியது.
அப்படியே அது அவர்களின் தாயகப்பிரதேசம் என்றாலும், இங்கிலாந்து ராணுவத்தின் துப்பாக்கி நிழலின் கீழ் திருட்டுத்தனமாக ஒரு தேசத்தை அடைய விரும்புவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
Mahatma Gandhi on ! Palestine written in 1938
The Jews In Palestine
By Mahatma Gandhi
Published in the Harijan
26-11-1938.

தேடல் உதவிகளும் ஆதாரமும் 
Dr E.K. Victor Pearce, Evidence for Truth: Arhaeology
மற்றும் விக்கிமீட்டியாவின் ஆங்கில தளங்கள்.
தொடரும்.

15 செப்டம்பர் 2018

தருமங்கள் தவறுதே?

பட்டென்று போனதென 
பொட்டில் அடித்தால் 
போலொரு நொடி 
துடிக்குதே எம் நாடி.

நல்லவர்களெல்லாம் 
சட்டென்று விண்செல்லல் 
வீணர்களிற்கே 
இடமென்றுணர்த்திடுதே.

எவருக்கும் இடமிங்கே 
நிரந்தரமில்லை என்றுணர்ந்தாலும்
இவரிங்கே இனியில்லை 
உணர்வுகள் துடிக்குதே

சட்டென,சடுதியில் சலசலப்பில்லாமல் 
சென்றிடல் வரமாய் தானிருந்தாலும் 
யாம் என நினைப்போர் செய்
தருமங்கள் தவறுதே?


ஒத்தை மகளை பொத்தி வைத்து 
பத்திரமா பாதுகாத்த வித்தை கண்டு 
காலனுக்கிங்கே பொறுக்க வில்லையோ?


இளவயது மலரது உதிர்வது கொடியது.
இருப்போரை இறக்க வைக்கும் வலி தருவது.
இரு சின்னஞ் சிறு அரும்புகளையும் நான்கு வயதே ஆன மொட்டையும் விட்டு மலரது உதிர்ந்து போனது. 34 வயதில்  இரட்டை பெண் குழந்தைகள் பிறந்து ஒரே வாரத்தில்  தான் உதிர்ந்து போகும் கொடுமையை என்ன வென்பது? 


06 செப்டம்பர் 2018

சுவிஸ்லாந்து நாட்டின் இராணுவ பயிற்சிக்களத்தில் ஒரு நாள்.

Tag der Angehörigen
18.8.2018
Kaserne, Thun

 நடுவில் நிற்பவர் என் மகன்

சுவிஸ்லாந்து நாட்டின் 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய இராணுவப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் சுவிஸ் இளையோரின் பயிற்சி குறித்த விபரணங்களுடனும்,இராணுவ பயிற்சி தளத்தின் இராணுவ தளவாடங்கள், வாகனங்களை காட்சிப்படுத்தி அவைகளை பார்வையிடும் அனுமதியும், இராணுவ தாக்குதல்கள் குறித்த மாதிரி பயிற்சிகளுமாய் மிக அழகாகவும், அரிதான வாய்ப்பாகவும் இன்று அமைந்திருந்தது.
பயிற்சி பெறும் இராணுவத்தினரின் உறவினர்கள். நண்பர்களுக்கான நாளாய் இந்த நாள் மிகவும் அருமையானநாள். என் வாழ் நாளில் நான் மறக்க முடியாத நாள். என் மகனை சான்றோனாய் கண்டு மகிழ்ந்த நாள். இராணுவ உடையில் கம்பீரமாய் சிங்க நடையில் ஆயுதமேந்தி வந்த என் செல்லத்தை கண்ட போது ஈன்ற பொழுதிற் பெரிதுவர்க்கும் தாயாய் நான் உணர்ந்தேன்.
எனது மகன் கப்ரியேல். இவ்வாண்டுக்கான இராணுவப்பயிற்சியில் யுத்த நேரம் களத்தில் நின்று போராடும் ஆயுதப்பயிற்சி பெற்ற, உருமாற்றம் செய்யப்பபட்ட படைகளுக்கும் இராணுவ முதன்மை தளபதிகளுக்குமான தொலைத்தொடர்பாடல், மற்றும் பொருட்காவுதல் சம்பந்தமான அனைத்து இராணுவ கனரக வாகனங்களையும் இயக்கும் பயிற்சி, தேவையான ஆயுதங்கள் உணவு, மற்றும் மருத்துவ தேவைகளை களத்தில் போரிடும் இராணுவத்தினருக்கு சரியான இடத்தில் நேரத்தில் கொண்டு சேர்ப்பதற்கான பயிற்சியுடன், காயம்பட்டோருக்கான முதலுதவி, அம்புலன்ஸ் வண்டியை இயக்குதல் மற்றும் ஆயுதம் ஏந்தி போராடுதல்,அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும், போராட்ட் களத்தில் புகைப்படம், அசைபடங்களாக்கி ஆவணப்படுத்துதல் என பல வகையான பிரிவில் பயிற்சி பெற அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மகனுடன் நான்
பயிற்சிக்கு சென்ற சில வாரங்களுக்குள் 15 நபர்கள் அமைந்து பயணிக்கக்கூடிய பொதுப்போக்குவரத்து வண்டியை இயக்கும் சாரதி அனுமதிப்பத்திரத்தை தன் வசப்படுத்தியும் கொண்டிருக்கின்றார்.
சுவிஸ் எப்படி எல்லா விடயத்திலும் தலை நிமிர்ந்து நிற்கின்றது என்பதை இன்றைய இராணுவ தளத்தின் செயல்பாடுகளின் போது நேரடியாக கண்டுணர முடிந்தது. அருமையானதிட்டமிடல். தடையில்லாத நிகழ்வுகள். ஆயிரக்கணக்கானோரை ஒரே இடத்தில் ஆரம்ப முதல் முடிவு வரை உற்சாகமாய் வைத்திருக்க ஒவ்வொரு பிரிவிலும் சுவாரஷ்யமான நிகழ்வுகள்.
இலங்கையில் ஆர்மிப்படையணிகள் வரும் போதும் கவச வாகனங்கள், பீரங்கிகளின் சத்தம் கேட்டாலே ஓடி ஒளியும் எமக்கு அவைகளை அருகில் சென்று பார்க்க கிடைத்த அனுபவம் அலாதியானது.
காலை எட்டரைக்கு ஆரம்பித்து மாலை மூன்றரை வரையாக நிகழ்வுக்கான அழைப்பிதழில் சுவிஸின் பல பாகங்களில் இருந்து சொந்த வாகனத்தில் வருவோருக்கும், பொதுப்போக்குவரத்தைபயன் படுத்தி வருவோருக்குமான பயண, அட்டவணைகளுடன் உள் நுழைந்தவுடன் சுவிஸ் கடும் கோப்பியும், கிப்லி, சாக்லேட், பிஸ்கட்களும், மதியம் 12 மணிக்கு மதிய உணவும், மாலை மூன்றுக்கு மீண்டும் மாலை சிற்றுண்டியாக விதவிதமாக கேக்குகளும் காப்பியுடனும் பயிற்சித்தளத்தில் நமது வாகனம் உள் நுழையும் நொடியில் இருந்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த இளைய இராணுவத்தினரின் செயல்பாடுகள் என்னை ஆச்சரியப்படுத்தியது.

அவர்கள் ஆயத்தப்படுத்தி இருந்த மதிய உணவு முடிந்து அடுத்த வாகனத்தில் உணவு வந்து சேர அரை மணி நேரத்துக்கும் மேல் ஆன போதும், மக்கள் எந்த முனகலும், முகச்சிணுக்கமும் இல்லாமல் கிட்டத்தட்ட 400 பேருக்கும் மேல் காத்திருந்தார்கள். எம்மக்களாக இருந்தால் அவ்விடம் எத்தனை அமளி துமளிப்பட்டிருக்கும் என நான் நினைத்து கொண்டேன். எத்தனை நொட்டைகளும் குற்றங்குறைகளும் விமர்சனம் எனும் பெயரில் விளாசித்தள்ளப்பட்டிருக்கும் என பேசியும் கொண்டோம்.
நூற்றுக்கணக்கில் வாகனங்களும், ஆயிரக்கணக்கில் மக்களும் கலந்தாலும் எங்கும் நெரிசல் இல்லை.ஒழுங்கு முறையான கட்டமைப்போடு செயல் பாடுகள் இருந்ததை அவதானித்து நாங்கள் விடுதலைப்புலிகளின் இராணுவ செயல்பாடுகளும், பயிற்சிகளும் இப்படித்தான் இருந்ததென எங்கள்பிள்ளைகளுடனும் நண்பர்களுடனும் நினைவு கூர்ந்து எமது விடுதலை போராட்டம் குறித்தும் பகிர்ந்து கொண்டோம். நானும் என் தங்கையும் எங்கள் மகள்களுக்கு எங்கள் நாட்டினை குறித்து விரிவாக, விளக்கங்களோடு எடுத்து சொல்ல இந்த களம் உதவி இருந்தது.
அண்ணனும் தங்கையும்.
எமது போராளிகளின் போராட்ட யுக்தி, கொரில்லா தாக்குதல், தற்கொலை தாக்குதல் என இராணுவச்செயல்பாடுகள் குறித்தும் ஏன் நாங்கள் போராடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது என்பதை பிள்ளைகளுக்கு புரியும் படியும் விளங்கப்படுத்த முடிந்தது.
எமக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த என் மகனை நினைத்து பெருமைப்படுகின்றேன். சுவிஸ் தேசத்தை நேசிக்கின்றேன்.
சொந்த நாட்டில் கிடைக்காத பல அரிய வாய்ப்புக்களை நாங்கள் அனுபவிக்க உதவும் சுவிஸ் நாட்டை கனப்படுத்துகின்றேன்.
நீண்ட நாட்களின் பின் பிள்ளைகளோடு பிள்ளைகளானோம்.
வாய்ப்புக்கிடைத்தால் சுவிஸ் வாழ் 
தமிழ் மக்கள் தவற விடாமல் கண்டுணர வேண்டிய களம் இது.