27 டிசம்பர் 2016

தன்னைப்போல் தன் அயலானை நேசிக்காத மனிதர்!?

2016 ஆண்டின் இறுதி நாட்களில்.....?
12 வருட சுனாமி அழிவின்  நினைவுகளுடன்.......😕😕😕😕😟😟😟😟😟
கடந்து வந்த பாதையில்  நடந்து வந்த  காலங்களை நினைத்து பார்க்கின்றேன்.

வாக்குத்தத்தத்தின் படி இனத்துக்கு விரோதமாக இனமும், ராஜ்ஜியத்துக்கு விரோதமாக ராஜ்ஜியமும் கிளம்பும், கடல் பொங்கும், கப்பல் கவிழும், போக்குவரத்து யாவும் நிற்கும் என்பதோடு யுத்தங்களையும் அதன் செய்திகளையும் கேட்டும் உணர்ந்தும் அழிவுகளை நோக்கிய கடினமான பாதையில் நடந்து கொண்டிருந்தும் கூட மனிதர்கள் சகிப்புத்தன்மை அற்றவர்களாக பேராசை கொண்டு தம்மை குறித்து மட்டும் சிந்திக்கும் சுய நலமிகளாக இருப்பதேன்?
நிரந்தரமில்லாத இவ்வுலகில் நிரந்தரமானவை பகைமைகளும் விரோதங்களும் மட்டும் தானோ? 

கடல் கோளால்உலகம் பிரிந்தது, ஊர் அழிந்தது, மனிதர்கள் கொத்துக்கொத்தாக கடலோடு ஜலசமாதியானார்கள். ஒரே நொடியில் அத்தனை வருடம் சேர்த்து வைத்ததை இழந்து அனாதையாய் அகதியாயும் ஆனார்கள் என்றான பின்னும் மனித மனங்கள் மட்டும் கடவுள் பயம் அற்று பொய்யும்,பொறாமையும்,போட்டியும்,எரிச்சலும்,கோபமும்,வைராக்கியங்களும், விரோதங்களும், பழிவாங்கல்களும், புரிதலின்மையுமாய் உள்ளான இருதயங்களை கசப்புகளால் நிறைந்திருப்பதேன்?

காரணமேயில்லாத பகைமைகளை மனதில் விதைத்து கொண்டு அகந்தையை அகத்தில் நிரப்பி அன்பை அழித்து அகங்காரத்துடன் ஆங்காரமாய் பொருளாசையும், பேராசைக்காரருமானவர்களை விட்டு விலகிடும் வலிமை வேண்டும் இறைவா.

என்னைப்போல் எனை சூழ உள்ளோரையும் நேசித்து மதம் எனும் பெயரில் மதம் பிடித்தாடாது மனித மனங்களை புரிந்து மனிதத்தை ஜெயித்து மரணத்தினை ருசித்து உன்னை கிட்டிச்சேரும் வரம் அருள்வாய் இறைவா.
💓💓💓💓💓💓💓💓💓💓 💓💓💓💓💓💓💓💓💓💓 💓💓💓💓💓💓💓💓💓💓 

1. தேவசேனை வானமீது கோடிகோடியாகத் தோன்றும் 
பலகோடித் திரள்கூடி குகைதேடி வேகம் ஓடும் 
விண்மீன்கள் இடம்மாறிப் பாரெங்கும் வந்து கொட்டும் 
நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் 

2. ஐந்து கண்டம் தனில் ஆளும் ஆட்சியாவும் அற்றுப்போகும் 
இருள் சூழும் இடிமுழங்கும் கூச்சல் கேட்கும் கண்ணீர் சிந்தும் 
தூயர் கூட்டம் சுத்த உள்ளம் சாட்சிப்பாடல் எங்கும் கேட்கும் 
நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன் 


3. கடல் குமுறும் கரை உடையும் கப்பல் கவிழும் பெரும் நாசம் 
போக்குவரத்து யாவும் நிற்கும் இனி உலகம் என்பதில்லை 
வாக்குமாறா வேதம் கூறும் வார்த்தை யாவும் நிறைவேறும் 
நானோ ஆடி மிகப்பாடி என்நேசருடன் சேர்வேன்

அன்பு நட்பூக்கள் அனைவருக்கும்  இனிய கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துகள்.
💓💓💓💓💓💓💓💓💓💓 

13 டிசம்பர் 2016

நான் சின்னவளாய் இருந்த போது குடியிருந்த கோயில் - 1

1980 முதல் 1989 வரை நாங்கள் குடியிருந்த கோவில்.

ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கதை சொல்லும் வீடு!
வாடகை கொடுக்காத வாடகை வீடு!
என் நினைவில் நீங்காமல் இருக்கும் பல இனியவைகளுக்கு சொந்தமான வீடு!
எனது இரண்டு தங்கைகளும், தம்பியும் Pushpakanthan Edward பிறந்த வீடு!
அடுத்தடுத்து நான்கு பெண்கள் பிறந்ததனால் பையன் பிறந்தால் கதிர்காமம் கோயிலில் மொட்டை அடிப்பதாக வேண்டி அம்மா கந்தசஷ்டி விரதம் இருந்து அதன் பின் இந்த வீட்டின் வெளிப்புறமாக ஐன்னல் தெரியும் அறையில் தான் என் தம்பி பிறந்தான்.தம்பி பிறந்தான் என அம்மாவுக்கு மருத்துவிச்சியாயிருந்த அம்மாவின் சித்தி பெண் இலட்சுமி ஆசம்மா சொன்ன நாள் எனக்குள் இன்றும் நினைவில் இனிக்கும். அக்காலத்தில் ஸ்கான் வசதிகள் அதிகம் இல்லாததால் பிள்ளை பிறந்த பின் தான் ஆணா பெண்ணா என தெரியும்.


உனக்கு தம்பி பிறந்திட்டாண்டி. ஓடு ஓடிப்போய் உங்கப்பாக்கு சொல்ல சொல்லி போற, வாற பஸ் ரைவரி டம் சொல்லி விடு என யோகப்பெரியம்மாவின் பெரியப்பா என்னை துரத்தி விட்டதும் இந்த வீட்டில் தான். அப்போவெல்லாம் எங்க வீட்டில் அம்மாவின் சொந்த சகோதரர்கள். அம்மம்மா என யாரும் வருவதில்லை. ஆனால் அம்மம்மாவின் தங்கை பிள்ளைகள் தான் எமக்கு உதவியாக இருந்தார்கள்.
அந்த நாள் அப்பா மட்டக்களப்பு, கல்முனை பஸ் டிரிப் ஓடிகொண்டிருந்தார். அப்பாவுக்கு மதியச்சாப்பாடு மட்டக்களப்பிலிருந்து கல்முனை போகும் பாதையில் காத்திருந்து தினமும் நான் கொண்டு கொடுப்பேன், கட்டுச்சாதம்,பாத்திரங்களில் வைத்து துணியால் கட்டி கொண்டு கொடுத்தால் ஐந்து ரூபாய் தருவார் அன்றைக்கு சாப்பாட்டுடன் தம்பி பிறந்த தகவலும் சொன்னேன்.
இரண்டு காலில் சந்தோஷமாய் போன மனுஷன் வீட்டுக்கு வரும் போது சாதாரணமாக நான்கு காலில் வருவாரெனில் அன்று எட்டுக்காலில் வந்தார். மகன் பிறந்த செய்தி அறிந்த நண்பர்களுக்கு பார்ட்டியாம். அதை விட தம்பி பிறந்ததை ஏன் டைவரிடம் சொல்லி விட்டதென அம்மாவுக்கு திட்டவும் செய்தார். அமமா பாவம். ரைவர் அங்கிளிடம் தகவல் சொன்னதால் அவர் எல்லா அங்கிளுக்கும் சொல்லி அவர்கள் பார்ட்டி வைக்க கேட்டதால் அப்பாக்கு கோபம்.
அப்பாவை குறித்த கவலையும், இயலாமையும் இருந்தாலும் இவர் என் அப்பா என நான் பெருமிதப்படும் படி ரியல் ஹீரோவாக வாழ்ந்து காட்டியதும் இந்த வீட்டில் தான்.
படத்தில் இருப்பது போல் நாங்கள் குடியிருந்த போது வீட்டின் கூரை ஓட்டினால் வேயப்படாமல் ஓலையால் வேயப்பட்டிருந்தது. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மழையும் வெயிலும் இலவசமாய் வீட்டின் கூரையினூடாக தரிசனம் தரும் வீடு!
மின்சாரம் இல்லை, சமையலறை இல்லை, டாய்லட் இல்லை, ஆனாலும் நாங்கள் அங்கே குடியிருந்தோம்.
எத்துணை உயர்ந்தாலும், நாலு டாய்லட் இணைத்து பங்களாக்களை கட்டினாலும் நினைத்தாலே இனிக்கும் நினைவுகளை தரும் வீடு!
ஒரு கொத்தரிசியில் விறகடுப்பில் சோறு வடித்து வைத்து விட்டு வீட்டுக்கு எதிரே இருந்த மகேசன் மாமாவீட்டு சுவரின் மேலால் அவர்கள் வீட்டு ஜனனலினூடாக தெரியும் கறுப்பு வெள்ளை டீவியில் உதயகீதம், ஒளியும் ஒலியும் எட்டிப்பார்க்க செல்லும் இருபது நிமிடத்தில் சுடு சோத்தை பானையோடு தூக்கிச்சென்று விடும் நாயின் அட்டகாசத்தினால் பட்டினியாய் தூங்கிய நினைவுகளும் இங்கே தான்.
கிணற்றடியில் நின்ற லாவுட் பழ மரத்தின் காய்களை பறித்து நிலத்தினை தோண்டி, வாகை இலைகளை பரப்பி அதன் மேல் பழத்தினை வைத்தால் இரண்டு நாளில் கனிந்து விடும். ஒரு பழம் ஐம்பது சதம் என வீடு வீடாய் விற்க சென்று வரும் காசில் ஒரு இறாத்தல் பாண் வாங்கி தேனீருடன் பசி அடக்க வைத்த வீடூ! அதே மரத்தில் ஊஞ்சல் கட்டிஆடிய நினைவுகளும், சோறு கறி சமைத்து விளையாடிய காலஙகளும், தங்கைகளோடு சண்டை இட்டு வீட்டை சுற்றி ஆளையாள் துரத்தி தலைமுடியை பிச்சி அடித்து சண்டை போட்ட துடியாட்டங்களுமாம் நினைவை சொக்க வைக்கும் வீடு.
வீட்டை சுற்றி முற்றம் தவிர பெரிய இடம் இருந்ததனால் மரவள்ளி, கச்சான்,அவரை தக்காளி, வெண்டி என விதவிதமாய் விதைத்து தினம் நீர் ஊற்றி தோட்டம் செய்யும் ஆர்வத்தினை எனக்குள் நுழைத்த வீடு. பல நாள் நாங்கள் விதைத்த மரவள்ளிச்செடியின் கிழங்கே எங்கள் பசி போக்கும் தாயானது.
அப்பா இலங்கை போக்குவரத்து சபை பேருந்து நடத்துனர் என்பதால் ஒவ்வொரு சீசனுக்கும் பழங்களை ஏற்றும் ஏழைகள் கையில் காசில்லாமல் டிக்கட்டுக்கு காசுக்கு பதில் பழங்களை அள்ளிக்கொடுக்க,சோற்றுக்குப்பதில் பழங்களை விதவிதமாய் அள்ளி தின்ன வைத்த வீடு!
டியூட்டி முடிந்து வரும் அப்பாவின் காக்கி சேர்ட்டின் கிடக்கும் சில்லறைகளை அவருக்கும் அம்மாவுக்கும் தெரியாமல் திருடிக்கொண்டு மறு நாள் பள்ளி இடைவேளையில் சைக்கிளில் பாம் பாம் என பெல் சத்தத்தோடு வரும் சக்கிரின் ஐஸ்கிரிம் வண்டி மாமாவிடம் கலர் கலராய் ஐஸ்கிரிமும், பள்ளி வாசலில் அமர்ந்து அவித்த பலாக்கொட்டை பத்து இருபத்தியைந்து சதமும் கொடுக்காப்புளி, நாவல் பழம் என பங்கு வைத்து விற்கும் பல்லுப்போன ஆச்சியிடம் வாங்கி தின்று அம்மாவிடம் இரட்டைச்சடை பின்னும் நேரம் மாட்டி முழித்த நினைவு தரும் வீடு!
மளிகைப்பொருள் கடன் வாங்கி விட்டு சொன்ன தவணையில் காசு கொடுக்கவில்லை எனில் எங்கம்மாவை தேடி வரும் கடையன்ரியிடம் அம்மா இல்லை என சொல்லி அம்மாவிடம் இருக்கும் ஒரே ஒரு சேலை கொடியில் காய்வதை வைத்து வீட்டுக்குள் ஒளிந்திருக்கும் அம்மாவை கண்டு பிடித்து திட்டு வாங்கிய நினைவுகளின் சங்கமமும் இந்த வீடே!
ஊரெல்லையில் இருக்கும் நெல் அரைக்கும் மில்லுக்கு சென்று உமி,தவிடு சுமந்து ஒரு மூட்டை பத்து ரூபாவுக்கு விற்று,மாவிடித்து, இட்லி, தோசை சுட்டு விற்று கடும் கஷ்டத்திலும் தான் படியாத ஏட்டுக்கல்வியை நாங்கள் படிக்க வேண்டும் என அம்மா பட்ட கஷ்டங்களை உடனிருந்து அனுபவிக்க வைத்த வீடு.
பள்ளியில் நாங்கள் இளவரசிகளாய் இளவரசனாய் எங்கள் திறமையாய் பேர் பெற்றிருந்தோம் எனினும் அதற்கு அஸ்திவாரம் இட்டவர் எங்கள் அம்மா. தான் பட்டினி கிடந்து எங்கள் பசி தீர்த்தார். இத்தனைக்கும் என் நான்காவது தங்கை பிறக்கும் வரை கஷ்டம் எனில் என்னவென அறியாமல் வளந்திருந்தார் என்பதை நான் அறிவேன். குடும்பம்பெருக , செலவுகளும் பெருகி, அப்பாவின் குடிபோதையுமாய் சில வருடங்கள் எம்மை வருத்திய நாட்கள்: அவைகள்.
பல நாள் காலையில் குளித்து சீருடை அணிந்து காலை ஆகாரம் இன்றி வெறும் தேத்தண்ணீரை சீனியை கையில் கொட்டி தொட்டு குடித்து செல்லும் சூழலிலும் அடுத்த பக்கம் இருக்கும் சுரேந்திரன் மாமா வீட்டு அம்மம்மா முதல் நாள் எஞ்சிய சோற்றில் தண்ணீரை ஊற்றி வைத்திருந்து வேலிக்கு மேலால் தூக்கி தரும் போது அதில் உப்பை விட்டு கரைத்து குடித்து விட்டு சென்ற நாட்களை....... அன்ன மிட்ட கைகளை இன்னும் நான் மறக்காமல் இருக்க வைக்கும் வீடு.
கங்கா அன்ரி, நகுலேஸ் அன்ரி, யமுனா அன்ரி என முன் வீட்டில் இருந்த அன்ரி மாரின் பாசத்தில் நனைந்து மாலையானால் அவர்கள் வீட்டு முன் கூடத்தில் அமர்ந்து வீட்டுப்பாடமும் பல கதைகளும் சொல்லி தந்த வீடு
மாதினி, மாலினி டீச்சர்கள் எனக்கு காசு வாங்காமல் டீயுசன் செல்லித்தந்த வீடு.
தீப்பெட்டி முடிந்து போனால் எதிர் வீட்டு பாக்கியம் அன்ரி அப்பம் சுட்டு அணையாமல் இருக்கும் நெருப்பில் எங்க வீட்டு அடுப்பையும் மண்ணெண்ணை சிமிலி விளக்கையும் பற்ற வைக்க தணல் இரவல் கேட்கும் நினைவுகளை புதைத்து வைத்திருக்கும் வீடு.
வீட்டின் மதிப்பை வைத்து மனங்களைமதிப்பிடும் இக்காலத்தில் எனக்கு சொர்க்கத்தினை உணரவைத்த வீடும் இதுதான்.
இத்தனை கஷ்டமும் நான் உணர்ந்ததனால் தான் 16 வயதில் சுவிஸ் வந்ததும் வீட்டுக்கு மூத்த பெண்பிள்ளையாக இருந்தும் நான் மட்டும் வாழாமல் என் குடும்பமும் வாழ வேண்டும் என நினைக்க வைத்தது. சுமைகளை சுமக்க சொன்னது. சுமை தாங்குவது என் கடமை என உணர்ந்தப்பட்ட போது மனம் உடைந்தும் போனது.
இன்றும் என்னைபோல் இருப்போரை கண்டு இரங்க வைக்கின்றது. பணத்தினை பொக்கிஷமாய் சேர்த்து வைக்க வேண்டும் எனும் எண்ணத்தினை விட்டு தூரமாய் நிறுத்தியும் வைக்கின்றது.
 

 
 
 
.
   எங்களுக்கு பின் அதே வீட்டில் குடியிருந்த பாக்கியம்  அன்ரியின் பேரன் அனுஷுக்கு நன்றி. குடியிருந்த வீட்டின்   இன்றைய தோற்றம் கூகுள் மேப்பில் தேடி வைபரின் அனுப்பியது அவன் தான்.

குடும்பமாய் இணைந்து இந்த வீட்டில் குடியிருந்த 1988  ஆண் ஆண்டின் பின் நாங்கள் மீண்டும் இணையவே இல்லை.சிதறடிப்பட்ட நிலையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில்  கோபதாபங்களை நிரப்பிக்கொண்டு சுயநலமிகளாய்  பாசங்களை விற்று சோகங்களை கடன் வாங்கிக்கொண்டோம்.
                                                      
எங்கள் குடும்ப போட்டோவாய் எஞ்சியிருக்கும் ஒரே புகைப்படம் இது தான். அப்பா கையில் இருப்பது சித்தி மகன், அவன் முதலாவது பிறந்த நாள்  அன்று எடுத்தது..

நினைவுகள் தொடரும். 

07 டிசம்பர் 2016

சோவின் துக்ளக் !

எங்கள் வீட்டில் அப்பா, அம்மா முதல் அனைவருமே வாசிப்பதில் ஆர்வமுடையவர்கள் என்பதனால் எழுதப்படிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே நிரம்ப வாசிப்பேன், என்னுடைய எட்டாவது வயதிலிருந்தே அம்புலிமாமாக்கதை புத்தகம் படித்ததான நினைவு இன்னும் உண்டு. அதன் பின் குமுதம், ஆனந்த விகடன்,ஜீனியர் விகடன்,கல்கி, கற்கண்டு, பாக்யா,சாவி, இதயம், நக்கீரன், தராசு, துகளக், இந்தியா டூ டே முதல் இலங்கைப்பத்திரிகைகள் வீரகேசரி, சிந்தாமணி, தினகரன், ஈழநாதம் என புதிதாக வரும் இதழ்களையும் ஒரு வரி விடாமல் விளம்பரங்கள் உட்பட படிப்பேன்.
இலங்கையில் நூலகங்கள் சென்று படித்த்தேன் எனில் சுவிஸ் வந்த பின் அப்பா எங்களுக்கென மொத்தமாக அனைத்து இதழ்களையும் ஆர்டர் செய்தே விடுவார்.அப்பாவுக்கு அரசியல் செய்திகள் அறிய பிடிக்கும், அப்படியே எனக்கும், அவ்வகையில் தராசு, நக்கீரன், ஜீனியர் விகடன், துக்ளக், இந்தியா டுடே வும் வாராவாரம் வீட்டுக்குள் வந்து விடும்,
சோவின் துக்ளக் !
1990 லிருந்தே எனக்கு அறிமுகமானது.
அட்டைப்பட கார்டூன், அவரின் நையாண்டி, அரசியல் நகைச்சுவை என ரசிக்கும் படி இருக்கும், அவரின் பல கொள்கைகள் பிடிக்கா விட்டாலும் வாசிப்பதுண்டு. சோவினுடைய பல தொடர்களை வாசித்திருக்கின்றேன். பாமரருக்கும் புரிவது போன்ற எழுத்து நடை தான் அவர் எழுத்தின் வெற்றி. வியாபார ரிதியில் பத்திரிகை விற்பனைக்காக சினிமா கிசுகிசுக்கள்,விளம்பரங்கள் , சினிமாச்செய்திகளை வெளியிடாத தன்னம்பிக்கை ஆச்சரியப்படுத்தும். சோவின் கேள்வி பதில், காலத்துக்கு ஏற்ப அவர் எழுதும் நையாண்டி வாசகங்கள் அட போட வைக்கும், இன்னார் என்றில்லாமல் சகட்டு மேனிக்கு அனைவரையும் விமர்சிப்பது பிடிக்கும், மகாபாரதத்தொடரை எளிமைப்படுத்தி எழுதியதை வாசிக்க பிடிக்கும்,ஜோதிட சம்பந்தமான விளக்கங்கள் நம்பிக்கையில்லாவிட்டாலும் ஆர்வமாய் வாசிக்க வைக்கும்.
பெண்கள் விடயத்தில் அவரின் கொள்கைகள் அடிமைத்தன சிந்தனைகள் பிடிப்பதில்லை.பெண்கள் சபைகளுக்கு வரக்கூடாது வீட்டுக்குள் அடங்கி இருக்க வேண்டும் எனும் கொள்கை உடைய அவரே ஜெயலலிதா போன்ற பெண்ணுக்கு அரசியல் ஆலோசகராக இருந்து செயல் பட்டார் என்பது உலக அதிசயமே.
ஈழப்போராட்டத்துக்கு எதிரான கருத்துக்களை இவர் விதைத்தார் என்பது எமக்கு பல விதங்களில் பாதகமாக இருந்திருக்கின்றது.
சோ ஈழத்தமிழர் விடயத்தில் எமக்கு எதிரான கண்ணோட்டத்தினை கொண்டிருந்தது ஏன்?
இவர்களுக்கு எமது போராட்டத்தின் அடிப்படை, எம் மக்களின் பிரச்சனைகள் புரியவைக்கப்படவில்லையா ...? ஆரம்பத்திலிருந்தே எதிர்க்கருத்தை கொண்டிருந்தார்களா ...?அல்லது ராஜீவ் காந்தி கொலைக்கு பின் வந்த இயல்பான கோபம் வெறுப்பில் அபப்டி மாறினாரா என எனக்கு தெரியவில்லையாகினும், தமிழக அரசியலின் ஆலோசகராக, ஆளுமை மிக்கவர்களாக முக்கிய பங்காற்றிய சோ போன்றோரை அரசியல் ரிதியில் ஆதாயப்படுத்தி அப்பாவி ஈழத்தமிழர்களின் உண்மை நிலையை புரிந்து கொள்ள வைக்க முடியாமல் போனது எமது துரதிஷ்டமே! ஜெயலலிதா போன்றவர்கள் ஈழத்தமிழர் விடயத்தில் ஒதுங்கி நிற்கவும் இவரின் இந்த ஈழப்போராட்டத்தின் எதிர்ப்புணர்வு ஆலோசனை தான் காரணமாக இருந்திருக்கின்றது.

புலிகளைஆதரித்தார்கள் என்பதனால் அனுபவிக்கின்றார்கள் என்றதோடு 
ஈழத்து மக்களின் இனப்படுகொலையை சர்வசாதாரணமாய் யுத்தத்தில் இதெல்லாம் சகஜம், மகிந்த ராஜபக்‌ஷவின் நிர்வாகம் மிகச்சிறந்தது என்றதும் சோ என்பவர் ஈழத்தமிழரை ஏனைய தமிழ் மக்கள் போல் தொப்புள் கொடி உறவாக கொண்டதே இல்லை என்பதாக உணர வைத்திருக்கின்றது.இவரின் எழுத்துக்கள் தரும் வசீகரம் இவர் சொல்வது தான் சரியாக இருக்கும் என பலர் நம்பும்படி மயக்கியும் இருக்கின்றது.

தான் சொல்வது தான் சரி எனும் தர்க்கம்,அவர் பின்னனியில் இருக்கும் செல்வாக்கு போன்றவைகள் இவர் போன்றவர்களை விட்டு எம்மை விலக்கியே நிற்க வைத்திருக்கின்றது.
சனாதன தர்மத்தை உயர்த்தி, தமிழுக்கும் தமிழருக்காகவும் சிந்திக்காத பிராமணியத்தின் மறுபக்கம் சோ என்று தான் நான் புரிந்திருக்கின்றேன். அவர் எழுத்துக்கள் அப்படித்தான் எனக்கு புரிய வைத்திருந்தது.மொத்தத்தில் சோ என்பவரிடம் இருந்த பன்முகத்திறமையும், எழுத்தாற்றலும், ராஜதந்திரமும் எமக்கு பயன் பட்டதே இல்லை. அவரின் தர்க்கவாதம் என்றுமே எம்மக்களுக்கு எதிராக இருந்தது .
ஆனால் என்ன?
எழுத்தால் அனைவரையும் ஆக்ரமித்து அரசியலில் அடி முதல் முடி வரை அக்குவேறு ஆணிவேறாக அலசி அனைவரும் புரியும் படி நக்கலோடும் நையாண்டியோடும் எழுதி, நகைச்சுவை நாயகனாகவும் நடித்து பலரை கவர்ந்தவரே குட் பை!

06 டிசம்பர் 2016

இரும்புப்பெண்மணிக்கு ராயல் சல்யூட்!

  • மக்களால் நான் மக்களுக்காகவே நான்
  • அரசியலில் எனக்கு தந்தையோ கணவனோ இல்லை. நான்தான் அரசியல்... நானேதான் வந்தேன்... நாட்டுக்காக என்னை அர்ப்பணித்துக்கொண்டேன்" 
  • I am a self made woman...ஜெ.ஜெ

சட்டங்கள் இயற்றவும்,பட்டங்கள் ஆளவும் பாரினில் பெண்கள் வரவேண்டும் எனும் பாரதியின் கனவுக்கு சொந்தக்காரர்.
புரட்சிகரமான துணிச்சல் மிக்க செயல்பாடுகளுக்கு உரிமையாளர்.
இந்திராகாந்திக்குப்பின் அரசியல் எதிரிகளையும் அசைத்திருக்கும் சம காலத்து சாதனைப்பெண்மணி!
ஜெ.ஜெ! வெற்றியின் தாரக மந்திரம். இவருக்கு நிகர் இவரே!
அம்மாவெனும் அழைக்க கருவில் சுமந்த பிள்ளை இல்லைதான். ஆனாலும் அம்மா எனில் பெற்ற தாய்க்கு நிகராக பலர் நினைவில் தோன்றுபவர்! .
இனிவரும் ஒவ்வொரு நொடியும் தன் இழப்புக்களை நினைவு  படுத்தி க்கொண்டே இருக்க , தன் துரோகிகளையும் தன்னைக்குறித்து பேசச்செய்ய கூடிய சாதனைகளின் நிஜ நாயகி.
பெண்ணாக மண்ணுக்கு பெருமை சேர்த்தவர். வாழும் காலத்தில் விமர்சிக்கப்பட்டாலும் விடை பெறும் போது கறை அற்றவராய் சென்றிருக்கின்றார்.இவரைக்குறித்த விமர்சனங்கள் இடப்படும் போதெல்லாம் இவரின் தன்னம்பிக்கை குறித்து என் பதிவை இட தயங்கியதே இல்லை. அது எதிர்மறை விமர்சனமானாலும்... அரசியல் தாண்டி பெண்ணாய் என்னை பெருமிதப்படுத்துபவர் ஜெ மேடம்.
எதிரிகளின் கண்ணில் விரல் விட்டு ஆட்டி பலருக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்து,தைரியமாக, திறமையுடனான பல பாராட்டத்தக்க,தனித்துவமான செயல்பாடுகள் இவரினுள் இருந்தன.அரசியல் பின்புலம் இன்றி அரசியல் ராஜ தந்திரிகளுக்கு நிகரான நகர்வுகளை தனதாக்கிக்கொண்டவர்.
தன் ஆளுமையினை ஆர்ப்பாட்டமில்லாமல் வெளிப்படுத்திய பல சந்தர்ப்பங்களை கண்டு ஆச்சரியப்பட்டிருக்கின்றேன்.ஏழைகளின் ஏக போக உரிமையாளினி.பெண், நடிகை என கிண்டல் செய்தோரை நிஜ நாயகியாகி மண்டியிட வைத்த தி கிரேட் லேடி .
*தென்னிந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர்.
*தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர்
* பன்முகத்திறமையாளர்
* பேச்சாற்றல் மிக்கவர்
* காமராஜர், எம்.ஜி. ஆருக்கு பின் தமிழ்கத்தின் ஆளும் சக்தியாக தன்னை நிலை நிறுத்தியவர்.
* எம். ஜி. ஆருக்கு பின் தொடர்ந்து இரு முறை முதல்வராகியதுடன் ஆறு தடவைகள் முதலமைச்சராக பதவி வகிந்தவர்.
* மத்திய அரசையே ஆட்டி வைத்தவர்
*பிரதமர்களின் நல் மதிப்பை பெற்றவர்.
*சத்துணவுக்கு நிகராய் மலிவு விலை அம்மா உணவகங்கள். 
 இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு
*தொட்டில் குழந்தை திட்டம்
*மழை நீர் சேகரிப்பு
* பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்க்களுக்கான தனி அறை
*பள்ளி சிறுமிகளுக்கு காலணி, மிதி வண்டி
*லாட்டரி ஒழிப்பு
* முல்லைப்பெரியாறு, காவிரி விடயத்தில் காட்டிய உறுதி
*அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், பேருந்து பணியாளர்கள் விடயத்தில் எடுத்த முடிவுகள்
இன்னும் இன்னும் பல உண்டே!
எப்படி இவரால் இத்தனையும் சாத்தியமானது?
தன் சொந்த வாழ்வில் இவர் நம்பிக்கைக்குரியவராய் நம்பத்தகுந்தவராய் நிலை நின்றுள்ளார்.தன்னை நம்பியவர்களை கை விட்டதே இல்லை.
“செஞ்சோற்று கடன் தீர்க்க, சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா” என எனக்கு இவரைக்குறித்து தோன்றும்.துரியோதனன் செய்வது தவறென தெரிந்தும் கர்ணன் அவன் பக்கம் நின்றதும் உயிர் துறந்ததும் எதற்காக?
இரத்த உறவுகளை தூரமாய் நிறுத்திடும் நிர்ப்பந்தம் ஏன்?. மகாபாரத கர்ணனைபோல் செஞ்சோற்றுக்கடன் தீர்த்தாரோ?
யாரறிவர்?
ஈழத்தவர்க்கு எதுவும் செய்ததில்லை என்கிறார்கள்.
செய்கின்றோம் என சொல்லி கடைசிவரை நம்ப வைத்து துரோகிகளான பல தமிழ் நாட்டு அரசியல் வாதிகள், தன் அரசியல் சுய இலாபத்துக்காக எம் மரணத்தினையும் விலை பேசியவர்கள் முன் உள்ளதை உள்ளபடி உணர்த்தி நிதர்சனம் புரியவைத்த பெண்மணி இவர்.
*ஈழமக்களுக்கான 2009 நடந்த இனப்படுகொலைகள் என ஏற்று சட்ட மன்றத்தில் தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்தியவர்
** இலங்கையின் இனப்படுகொலையை கண்டித்து தீர்வுகாண தனித்தமிழீழத்துக்காக இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை மாற்றப்பட வேண்டும் என தெளிவாக கருத்துரைத்தவரும் இவர்தான்.
***இலங்கை இராணுவத்துக்கு தமிழகத்தில் பயிற்சி அழிக்க மறுத்ததும் இவரே தான்.
****ராஜிவ் காந்தி கொலையில் தூக்குத்தண்டனை கைதிகளுக்குரிய மனிதாபிமான நடவடிக்கை, தீர்மானம் நிறைவேற்றல் என பின்னனியிலிருக்கும் உண்மை உணர்ந்து அவர்கள் விடுதலைக்காக தமிழக அரசு சார்பில் நீதிமன்றம் செல்ல எடுத்த முடிவு.
இன்னும் எம்மைக்குறித்த இளக்கம் இருந்திருக்கும், அரசியல் நிர்ப்பந்தம் கைகளை கட்டி இருக்கலாமோ என்னமோ?
தமிழ் நாட்டுமக்களுக்கு இவரைப்போல் இனி யார் வருவார்?


படம் இணையத்தில் எடுத்ததே.

05 டிசம்பர் 2016

பெருமைக்கும் பரிதாபத்துக்குமுரிய தமிழக முதலமைச்சர்!

ஒரு சிலரை நாம் நேரில் சந்தித்திருக்க மாட்டோம், 
பேசி இருக்க மாட்டோம், 
ஆனால் அவர்கள் பெயரைக்கேட்டாலே மனம் அதிரும்.
மனதில் மதிப்புணர்வு தோன்றும். 
அதில் குறிப்பிடத்தக்கவர் ஜெயலலிதா!



ஜெ என்றாலே கம்பீரம் தான் எனும் படி அதிகாரம்,பதவி,பட்டம், பணம் என பல நிலைகளைக்கடந்து இரும்பைப்போல் உறுதியாய் நின்றவர்.
ஆணாதிக்க சமூகத்தின் முன் நான் இப்படித்தான், என் முடிவு இப்படித்தான் என நாட்டின் பிரதமரையே அசைத்தவர்.
அரசியல் வாதியாக இவரின் சில செயல்பாடுகள் எனக்கு பிடிக்காது போனாலும்...................?
குறைகள் பல இருந்தாலும் நிறைகளை அதிகமாய் கொண்டுமேலாண்மைக்கு முன்னுதாரணமாய் என்னை அசத்தும் போல்டான பெண்மணி.மிகச்சிறந்த நிர்வாகி இவர்.
நான் மதிக்கும் உயர்ந்த பெண்மணி!
இவர் வாழ்க்கை எனக்கு மட்டுமல்ல பல பெண்களுக்கு அருமையான முன்னுதாரணம்.  மன உறுதியுடன் போராடினால் சிகரம் தொடலாம் என நிருபித்தவர்.   
**இவரின் ஆளுமை எனக்கு பிடிக்கும்.
**துன்பங்கள் சூழும் நேரம் கலங்காது திடமாய் எதிர்த்து ஜெயித்து அசத்தியது பிடிக்கும்.
**தன்னை உதாசீனம் செய்வோரை ஒற்றை விரலை நீட்டி மண்டியிட வைத்த தன்னம்பிக்கை பிடிக்கும.
நான் பிரமித்து பார்க்கும் இருவரில் ஒருவர் ஜெ மேடம்.
பெருமைக்குரியவரும் இவரே! 
பரிதாபத்துக்குரியவரும் இவரே!
சினிமா பின்னனி இல்லாமல் இருந்திருந்தால் இவரின் திறமை, நெஞ்சுரம்,அறிவு,ஆற்றல் வேறு வகையில் பிரகாசித்திருக்கலாம்.ஆனாலும் அப்பின்னனி தான் பல விமர்சனங்களயும் கடந்து இத்தனை தூரம் உயர்த்தியும் இருக்கின்றது.
அவர் பலமும் பலவீனமும் சினிமாவும் அரசியலுமே!
தனக்கென குடும்பம் கட்டுப்பாடு என இல்லாமல் தொண்டர்களின் கண்மூடித்தனமான அன்பை இவர் இன்னும் ஆக்க பூர்வமாக் செயல் படுத்தி இருக்கலாம் என நினைத்துள்ளேன்.அதே நேரம்..... ஏனைய அரசியல் வாதிகளின் நிஜமுகம், குடும்ப நிர்ப்பந்தங்கள், உள்ளொன்று வைத்து புறமொன்றாக மக்களை ஏமாற்றும் செயல் பாடுகளோடு ஒப்பிடும் போது தமிழ் நாட்டுக்கும் மக்களுக்கு ஓரளவேனும் நன்மை செய்ய திட்டங்களை இட்டு செயல் படுத்தியவர் ஜெயலலிதா அவர்கள். அதே போல் ஒரு விடயத்தில் முடிவெடுத்தால் இறுதி வரை அம்முடிவில் உறுதியாய் நின்று ஜெயித்தவர் இவர்.முன் பின் முரண்பாடுகள் இவருள் அரிது.
அரசியல் காரணங்களில் அவரை சூழ உள்ளோரால் தவறான வழி நடத்தப்பட்டிருந்தாலும் தமிழ் நாட்டுக்கு இவரைப்போல் இன்னொருவர் இனி பிறந்து வந்தால் தான் உண்டு.
இவரின் அதிகாரத்தில் சில பலதை தவிர்த்திருக்கலாம் எனினும் இந்த நேரத்தில் அதை விமர்சிப்பதை தவிர்ப்பது மனிதாபிமானம்
தனிப்பட்ட விருப்பு,வெறுப்புக்கள், ஆட்சிக்கால சாதகபாதகங்கள், அரசியல் எதிர்ப்புக்கள், மத பேத விமர்சனங்களைக் கடந்து சக மனுஷியாக அவர் நிம்மதியாக உறங்க பிரார்த்திப்பதே நாம் அவருக்கு செய்யக்கூடியதாக இருக்கின்றது.

ஹாட்ஸ் அப் ஜெ மேடம்.

கடைசி காலம் மரணம் கூட உங்களை நிம்மதியாக , அமைதியுடன் அணுகுவதாய் இல்லையோ?

இப்பூமிப்பந்தில் வாழ்ந்த வாழ்க்கையில் நீங்கள் நிம்மதியை ருசித்தது குறைவாக இருந்திருக்கலாம். செல்லுமிடத்திலேனும் நீங்கள் தேடும் ஆத்ம நிம்மதி, விடுதலை உங்களுக்கு கிட்டட்டும்.

ஆனாலும்...................................

நீங்கள் பீனீக்ஸ் போல் மீண்டும் மீண்டு வரவேண்டும் என தான் ஆழ் மனம் எதிர்பார்க்கின்றது.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻