07 டிசம்பர் 2016

சோவின் துக்ளக் !

எங்கள் வீட்டில் அப்பா, அம்மா முதல் அனைவருமே வாசிப்பதில் ஆர்வமுடையவர்கள் என்பதனால் எழுதப்படிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே நிரம்ப வாசிப்பேன், என்னுடைய எட்டாவது வயதிலிருந்தே அம்புலிமாமாக்கதை புத்தகம் படித்ததான நினைவு இன்னும் உண்டு. அதன் பின் குமுதம், ஆனந்த விகடன்,ஜீனியர் விகடன்,கல்கி, கற்கண்டு, பாக்யா,சாவி, இதயம், நக்கீரன், தராசு, துகளக், இந்தியா டூ டே முதல் இலங்கைப்பத்திரிகைகள் வீரகேசரி, சிந்தாமணி, தினகரன், ஈழநாதம் என புதிதாக வரும் இதழ்களையும் ஒரு வரி விடாமல் விளம்பரங்கள் உட்பட படிப்பேன்.
இலங்கையில் நூலகங்கள் சென்று படித்த்தேன் எனில் சுவிஸ் வந்த பின் அப்பா எங்களுக்கென மொத்தமாக அனைத்து இதழ்களையும் ஆர்டர் செய்தே விடுவார்.அப்பாவுக்கு அரசியல் செய்திகள் அறிய பிடிக்கும், அப்படியே எனக்கும், அவ்வகையில் தராசு, நக்கீரன், ஜீனியர் விகடன், துக்ளக், இந்தியா டுடே வும் வாராவாரம் வீட்டுக்குள் வந்து விடும்,
சோவின் துக்ளக் !
1990 லிருந்தே எனக்கு அறிமுகமானது.
அட்டைப்பட கார்டூன், அவரின் நையாண்டி, அரசியல் நகைச்சுவை என ரசிக்கும் படி இருக்கும், அவரின் பல கொள்கைகள் பிடிக்கா விட்டாலும் வாசிப்பதுண்டு. சோவினுடைய பல தொடர்களை வாசித்திருக்கின்றேன். பாமரருக்கும் புரிவது போன்ற எழுத்து நடை தான் அவர் எழுத்தின் வெற்றி. வியாபார ரிதியில் பத்திரிகை விற்பனைக்காக சினிமா கிசுகிசுக்கள்,விளம்பரங்கள் , சினிமாச்செய்திகளை வெளியிடாத தன்னம்பிக்கை ஆச்சரியப்படுத்தும். சோவின் கேள்வி பதில், காலத்துக்கு ஏற்ப அவர் எழுதும் நையாண்டி வாசகங்கள் அட போட வைக்கும், இன்னார் என்றில்லாமல் சகட்டு மேனிக்கு அனைவரையும் விமர்சிப்பது பிடிக்கும், மகாபாரதத்தொடரை எளிமைப்படுத்தி எழுதியதை வாசிக்க பிடிக்கும்,ஜோதிட சம்பந்தமான விளக்கங்கள் நம்பிக்கையில்லாவிட்டாலும் ஆர்வமாய் வாசிக்க வைக்கும்.
பெண்கள் விடயத்தில் அவரின் கொள்கைகள் அடிமைத்தன சிந்தனைகள் பிடிப்பதில்லை.பெண்கள் சபைகளுக்கு வரக்கூடாது வீட்டுக்குள் அடங்கி இருக்க வேண்டும் எனும் கொள்கை உடைய அவரே ஜெயலலிதா போன்ற பெண்ணுக்கு அரசியல் ஆலோசகராக இருந்து செயல் பட்டார் என்பது உலக அதிசயமே.
ஈழப்போராட்டத்துக்கு எதிரான கருத்துக்களை இவர் விதைத்தார் என்பது எமக்கு பல விதங்களில் பாதகமாக இருந்திருக்கின்றது.
சோ ஈழத்தமிழர் விடயத்தில் எமக்கு எதிரான கண்ணோட்டத்தினை கொண்டிருந்தது ஏன்?
இவர்களுக்கு எமது போராட்டத்தின் அடிப்படை, எம் மக்களின் பிரச்சனைகள் புரியவைக்கப்படவில்லையா ...? ஆரம்பத்திலிருந்தே எதிர்க்கருத்தை கொண்டிருந்தார்களா ...?அல்லது ராஜீவ் காந்தி கொலைக்கு பின் வந்த இயல்பான கோபம் வெறுப்பில் அபப்டி மாறினாரா என எனக்கு தெரியவில்லையாகினும், தமிழக அரசியலின் ஆலோசகராக, ஆளுமை மிக்கவர்களாக முக்கிய பங்காற்றிய சோ போன்றோரை அரசியல் ரிதியில் ஆதாயப்படுத்தி அப்பாவி ஈழத்தமிழர்களின் உண்மை நிலையை புரிந்து கொள்ள வைக்க முடியாமல் போனது எமது துரதிஷ்டமே! ஜெயலலிதா போன்றவர்கள் ஈழத்தமிழர் விடயத்தில் ஒதுங்கி நிற்கவும் இவரின் இந்த ஈழப்போராட்டத்தின் எதிர்ப்புணர்வு ஆலோசனை தான் காரணமாக இருந்திருக்கின்றது.

புலிகளைஆதரித்தார்கள் என்பதனால் அனுபவிக்கின்றார்கள் என்றதோடு 
ஈழத்து மக்களின் இனப்படுகொலையை சர்வசாதாரணமாய் யுத்தத்தில் இதெல்லாம் சகஜம், மகிந்த ராஜபக்‌ஷவின் நிர்வாகம் மிகச்சிறந்தது என்றதும் சோ என்பவர் ஈழத்தமிழரை ஏனைய தமிழ் மக்கள் போல் தொப்புள் கொடி உறவாக கொண்டதே இல்லை என்பதாக உணர வைத்திருக்கின்றது.இவரின் எழுத்துக்கள் தரும் வசீகரம் இவர் சொல்வது தான் சரியாக இருக்கும் என பலர் நம்பும்படி மயக்கியும் இருக்கின்றது.

தான் சொல்வது தான் சரி எனும் தர்க்கம்,அவர் பின்னனியில் இருக்கும் செல்வாக்கு போன்றவைகள் இவர் போன்றவர்களை விட்டு எம்மை விலக்கியே நிற்க வைத்திருக்கின்றது.
சனாதன தர்மத்தை உயர்த்தி, தமிழுக்கும் தமிழருக்காகவும் சிந்திக்காத பிராமணியத்தின் மறுபக்கம் சோ என்று தான் நான் புரிந்திருக்கின்றேன். அவர் எழுத்துக்கள் அப்படித்தான் எனக்கு புரிய வைத்திருந்தது.மொத்தத்தில் சோ என்பவரிடம் இருந்த பன்முகத்திறமையும், எழுத்தாற்றலும், ராஜதந்திரமும் எமக்கு பயன் பட்டதே இல்லை. அவரின் தர்க்கவாதம் என்றுமே எம்மக்களுக்கு எதிராக இருந்தது .
ஆனால் என்ன?
எழுத்தால் அனைவரையும் ஆக்ரமித்து அரசியலில் அடி முதல் முடி வரை அக்குவேறு ஆணிவேறாக அலசி அனைவரும் புரியும் படி நக்கலோடும் நையாண்டியோடும் எழுதி, நகைச்சுவை நாயகனாகவும் நடித்து பலரை கவர்ந்தவரே குட் பை!

11 கருத்துகள்:

 1. உண்மைதான் அக்கா.. சோவின் எழுத்துக்கும் அவரின் வாழ்க்கையும் நிறைய முரண் உண்டு என்றாலும் துக்ளக்கில் அவர் எல்லா அரசியல்வாதிகளையும் சகட்டு மேனிக்கு கிண்டலடிப்பது மிகவும் பிடிக்கும்....

  ராஜதந்திரி... எல்லாருக்கும் ஆலோசகராக இருந்தார்.....

  அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரியார்த்திக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 2. சோ தமிழகம் தேசிய வழியில் செல்லவேண்டும் என்று விரும்பியவர்
  அது தனியே சுயாட்சியாக மற்ற தொடர்புகளை துண்டித்துக்கொண்டு வாழும் போக்கை வெறுத்தவர்...
  இருந்த போதும் தமிழ் மண் மீது மக்கள்
  மீதும் பாசமும் அவருக்கு இருந்த்து

  பதிலளிநீக்கு
 3. பெயரில்லா12:44:00 AM

  ஈழப்போராட்டத்தை ஆரம்பம் முதலே எதிர்த்து வந்தவர் சோ.எல்லாம் புரிந்து கொண்டுதான்.

  பதிலளிநீக்கு
 4. சோ சிறந்த தேசியவாதி மட்டுமல்லாமல் சிறந்த ஆன்மீகவாதியும் கூட. பேரிழப்பு.

  பதிலளிநீக்கு
 5. அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்தனை செய்வோம்..

  பதிலளிநீக்கு
 6. சோ விடுதலைப் புலிகளின் செயல்பாடுகளை ஆதரித்ததில்லையே ஈழத் தமிழர்களின் துன்பங்களுக்கு விடுதலைப்புலிகள்தான் காரணம் என்று நம்பினார்

  பதிலளிநீக்கு
 7. நேரடி அரசியலுக்கு வராவிட்டாலும் ,அவருக்கும் ஒரு அரசியல் இருந்தது :)

  பதிலளிநீக்கு
 8. ***பெண்கள் விடயத்தில் அவரின் கொள்கைகள் அடிமைத்தன சிந்தனைகள் பிடிப்பதில்லை.பெண்கள் சபைகளுக்கு வரக்கூடாது வீட்டுக்குள் அடங்கி இருக்க வேண்டும் எனும் கொள்கை உடைய அவரே ஜெயலலிதா போன்ற பெண்ணுக்கு அரசியல் ஆலோசகராக இருந்து செயல் பட்டார் என்பது உலக அதிசயமே.***

  இதிலென்ன அதிசயம் நிஷா? பத்திரிக்கை நடத்துபவன் அரசியல்வாதியைவிட கேவலமான ஜென்மம் என்பதற்கு அமரர் சோ அவர்கள் ஒரு நல்ல உதாரணம்.

  அப்பட்டமாகத் தெரியும் உண்மையைப்புரிந்து கொள்வதை விட்டுவிட்டு அதிசயப் பட்டுக்கொண்டு இருக்கீங்க!!! நீங்கதான் என்னை அதிசயப் பட வைக்கிறீர்கள், நிஷா!

  பதிலளிநீக்கு
 9. அவருடைய நகைச்சுவை உணர்வும், கேள்விகளுக்கு அவர் கொடுக்கும் பதில்களும் பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
 10. அவரின் இரு பக்கங்களையும் சொல்லிய இரங்கல்பதிவு! இவரது பத்திரிக்கையை நான் தொடர்ந்து வாசித்தது இல்லை! நீங்கள் சொல்லும் கருத்துகளில் எனக்கும் உடன்பாடு உண்டு. ஆழ்ந்த இரங்கல்கள்!

  பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!