24 மார்ச் 2016

எங்கேயும் போகவே இல்லை!

நீ என்னைத்தேடிவருவாய் என
கோயில் வாசலில்
உன்னிடம் யாசிப்பவனாக
காத்திருந்தேன்!
நீயோ
கண்ணை மூடிச்சென்றாய்!
நான்
என்ன செய்யட்டும்
உன் வாழ்க்கை அங்கேயே
மாற்றங்களின்றி....!!!!!!!

இப்படித்தான் கடவுள் புலம்பிட்டு இருப்பதாக கேள்விப்பட்டேன்! நிஜமாக இருக்குமோ?

நேரம்இல்லை என்பவர்களையும்,சூழ்நிலையின் மேல்பழிபோட்டு தப்பித்துக்
கொள்ள நினைப்பவர்களையும் எனக்கு பிடிப்பதே இல்லை  என சொன்னது ஒரு புறமிருக்க,இப்போதெல்லாம் எங்கள் வீட்டு கடிகாரம் வேகமாக ஓடுகின்றதோ என நினைக்கும் படி நேரமும், காலமும் ஓடி போய்க்கொண்டெ இருக்கின்றது.

தூக்கமும் துக்கமும் எது வந்தாலும் அதனதன் நேரம் மட்டும் தான் நினைவில் நிலைக்கின்றது. மீதி நேரம் எல்லாம் அடுத்து என்ன ஆர்டர் ? எங்கே? என்ன பொருட்கள் வாங்க வேண்டும்? எத்தனை மணிக்கு செல்ல வேண்டும்? எத்தனை பேர் வேலைக்கு வேண்டும்  என சிந்தித்து சிந்தித்து  கனவிலும் அதையே சொல்லி புலம்பும் படி ஆகிப்போனது என் நிலை!

ஆற அமர அமர்ந்திருந்து  நான் நலம்! நீங்கள் நலமா? உங்கள் வீட்டார் நலமா? ஆடு மாடு கோழி முதல்  நாய்க்குட்டி வரை நலமா? இன்று என்ன சமையல்? என்னுடையபதிவு படித்தாகி விட்டதா? இப்ப்ப்ப்ப்ப்படி யப்ப்படி கேள்விகளுக்கா பஞ்சம்.ஓரிரு மணி நேரம் அரட்டையில்  ஓடியதெல்லாம் கனவோ என நினைக்கும் படி தம்பி மாரெல்லாம் தூரமாய் போய் விட்டார்கள்! எங்க குமார் உட்பட யாருமே எப்படி அக்கா  இருக்கின்றீர்கள் என கேட்க மறந்து போனதையே நான் மறந்து போனேன்!

அப்பப்ப கில்லர் ஜீ மட்டும் எட்டிப்பார்த்து ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இட்டு விட்டு சென்றார். அவரின் ம்ம்ம் க்கும் ம்ம் ஒப்புவித்து விட்டதனால் அவரின் புதிய பதிவுக்கு கருத்திடாதது மன்னிக்கப்பட்டிருக்கும் என நம்புகின்றேன்! நான் கருத்து இடுவதற்கிடையில் அவர் இன்னும் நான்கு பதிவு இட்டாலும் இட்டு விடலாம்!

யாருடைய பதிவும் படிக்க முடியவில்லை, படிக்காததால் கருத்தும் இடம் வில்லை? படிக்காமல் எப்படி கருத்திடுவது என  கில்லர்ஜி சார் கேட்பதும் எனக்கு கேட்டு விட்டது! என்ன செய்வது! அத்தனை வேலைப்பளுவில் சிக்கிக்கொண்டேன்! சும்மா இருந்த என்னை வலைப்பூவில் பதிந்திடு அக்கா என இழுத்து வந்த தங்க மனசு குமாரிடம் தான் நீங்கள் நியாயம் கேட்க வேண்டும்!இன்னும் ஒரு வாரத்தில், அல்லது மாதத்தில் நேரம் கிடைக்கும் என  சொல்ல முடியாதவாறு  தொடரும் வேலைகள் நடுவே எதையேனும் படித்தாலும் தட்டச்சிடவோ,கருத்திடவோ சிந்தனைகள் ஒத்துழைப்பதில்லை,

சிந்தனைக்கும் தட்டச்சிடுவதற்கும் என்ன சம்பந்தம் என ரமணி .S ஐயா கேட்டதுகூடஎனக்கு கேட்டு விட்டது!உடல் களைத்தாலும் உள்ளமும்
களைக்கும் தானே? இருந்தாலும்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் எல்லோர் பதிவையும் படித்து கருத்திடுவேன் என்பது நிச்சயம் என்பதால் நான் வரவில்லை என என்னை மறந்து விடாதீர்கள் அபி ராஜசேகர் மேடம் !

ஆமாம்!  நீ வரவில்லை, படிக்கவில்லை, கருத்திடவில்லை என யார் கேட்டார்கள்  என அவர்கள் உண்மைகள்  மதுரைத்தமிழன் சார்  கேட்டாலும்  சரி, நான் சொல்ல வந்ததை சொல்லி விட்டேன், 

தொடர்கள் முதல் தொடராதவைகள் வரை  அனைத்தையும் தொடர முடியா
மைக்காக வருந்துகின்றேன்.

நான்கு பேரை மட்டும் சொல்லி நம்மையெல்லம கண்டுக்கவே இல்லையே என நீங்கள் யாருமே நினைத்து விடக்கூடாது என்பதனால் தங்கள் கருத்திடலால் என்னை எழுத வைக்கும் உங்கள் அனைவருக்கும் என் இதயத்தில் இடம் தந்து விட்ட இரகசியத்தையும் சொல்லி இன்று விடை பெறுகின்றேன்!

காலமும் நேரமும். கடவுளும் ஒத்துழைத்தால் நாளையே கூட மீண்டும் சந்திப்போம்!
**************************
 படம் இணையத்தில் கிடைத்ததே!

என் பதிவை  தேடி வந்தவர்களுக்காக! 

நான் ரசித்த சர்தர்ஜி  ஜோக்ஸ் சில! சிரிப்பு வந்தால் சிரித்து விடுங்கள்!

நல்ல பசியில் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார் நமது சர்தார்.
சாப்பிட்ட பின் பில்லுக்கான தொகையையும் கட்டிவிட்டார். 

கிளம்பும் முன் சர்வரிடம்சொன்னார், 

"வெள்ளரிக்காயைநறுக்கிகண்களில்வைத்துக்கொண்டால், நீ ரொம்ப
அழகாயிருப்பே,அப்புறம் வெட்டிவேரில் நனைத்த தேங்காய் 
எண்
ணெயைதலைக்கு தடவினால் உன்தலைமுடியும் கருப்பாகிவிடும்." 
என்று சொல்ல,குழம்பிப்போன சர்வர் கேட்டார்,

 "சார், இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்டசொல்றீங்க?"

நம் சர்தார்ஜி சொன்னார், " மக்கு இன்னுமா புரியவில்லை, நான் உனக்கு டிப்ஸ் கொடுத்தேன்"

******************************************************

 வேகமாக காரோட்டியதற்காக சர்தார் தடுத்து நிறுத்தப்பட்டார்.
” அதிக வேகம் 50 கி.மீ ன்னு போட்டிருக்கே பார்க்கலியா..?”
” இல்லையே… 70 ன்னு தானே எல்லா எடத்திலேயும் போட்டிருக்கு..”
” யோவ்… அது Nh 70. இந்த நெடுஞ்சாலையோட பேரு.. சரி பொழைச்சு போ..சிங்குங்கறதாலேசும்மாவிடறேன்.. சரி ஏன் உங்க வீட்டுக்காரம்மா இப்படிபேயறைஞ்சது மாதிரி வியர்த்துப் போய் உக்காந்து இருக்கு..?”
” கொஞ்சம் முன்னாலே Nh 140 லே வந்தேன்… அதான்….”

***************************************************************

12 மார்ச் 2016

எங்கெங்கே நோக்கினும்!


துயில் கலையும் வேளையிலே கண் முன்  நிற்கிறாய் 
காணும் காட்சிகளி லுன் நினைவை தந்து மறைகிறாய் 
ஓசையெல்லா முன் அழைப்பாய் தோன்றிமறையுதே
என் நெஞ்சமதில் தாலாட்டாய் உன் மொழிகளே!

கொஞ்சிக்கெஞ்சி பேசி நீயுமெ ன்னுள் உறைகிறாய் 
வஞ்சி மனம் மஞ்சிடாமல் காத்து  நிற்கிறாய் 
தஞ்சமா யுன் நெஞ்சமதில் ஊஞ்சலாடிடும் 
நங்கையவள் தனை நம்பும்  நம்பியாகின்றாய்!

எண்ண மெல்லாம் வண்ணம் கொண்ட கண்ணனாகியே 
மன்னவனாய் உள்ளுணர்வில்  கலந்து நிலைக்கிறாய்
உன்னவளை கண்மணி போல் காத்திடுவதில் 
யுனக்கு நிகர் நீயோவென மலைக்க வைக்கிறாய்!

நித்தம் எந்தன் நினைவினிலே பித்தனாகிறாய்
சத்தமின்றி சொப்பனத்தில் சொக்கி நிற்கிறாய்
சித்திரம் போல் பத்திரமாய் உந்தன் அணைப்பிலே
பள்ளி கொள்ளும்  பாவையென்னை  பாதுகாக்கிறாய்!


10 மார்ச் 2016

மகளிர் தினத்தில் மகளிராய்...........!

நேற்றைய மகளிர் தின வாழ்த்துகள் கண்டதும் பெண்களில் இன்றைய நிலை ஒரு நாள் வாழ்த்துடன் முடிந்து விடுமா என நினைத்து ஆல்ப்ஸ் தென்றலில் ஒரு பதிவு எழுத ஆரம்பித்தேன், 

சமீப வேலைப்பழு எதையும் முழுமையாக்க முடியாமல் அப்படியே அரை குறையாய் இருந்தது! உடலும் உள்ளமும் களைக்க சிந்தனைகளும் சிறைப்பட்ட நிலையில்என்ன எழுதுவது என்பதே எனக்குள் கேள்விக்குறியாய் ?

இன்று பேஸ்புக்கில் தேன் மதுரத்தமிழ் கிரேஸின் ஆணும் பெண்ணும் சரிசம நிலை எனும் உறுதி மொழி எடுப்போம் எனும் பதிவு கண்டதும் கிரேஸின் பதிவை தொடர்ந்த என் பதிலாய் இட்டவைகளை தொகுத்து பகிர்கின்றேன்!

ஆணுக்கு பெண் சரி சமமாய் வேண்டாம், ஆணைப்போல் இரத்தமும் சதையுமான சக மனுசி எனும் புரிதலுடன் மகளிர் தினமென மனமகிழ்வாய் ஒரு நாளைதெரிந்து பெண்களை மேன்மைப்படுத்துவதாய் சொல்லி பிரித்தெடுத்து வாழ்த்தும் வகையில் அனைத்துலக பெண்கள் நிலை மேம்பட்டிருக்கின்றதா?

வீட்டிலும்,சமூகத்திலும்,நாட்டிலும் மகளிருக்காக உரிமைகள் என்ன என்பதை அவள் அறிந்திருக்கின்றாளா?பெண் எனும் ஒரே காரணத்தினால் அவள் இழக்கும் வாய்ப்புக்கள்,வெற்றிகள் எத்தனை எத்தனை?உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா என்பது போல் அவளின் சிறகுகள் உடை படும் நிலை ஏன்?நிர்வாகத்திலும் ,பொறுமையிலும், திறனடைந்து சிறந்தோராய் இருக்கும் பெண்கள் அவள் பெண் என்பதனாலேயே அசட்டை செய்யப்படும் நிலை ஏன்? பெண்மை,மென்மை,தாய்மை என சொல்லி சொல்லி அவள் சிந்தனைகளை சிதைக்கும் சூழல் தொடர்வது ஏன்?

தாய்லாந்தில் 12 வயதில் வலுக்கட்டாயமாய் விபச்சாரத்தில் திணிக்கப்படும் சிறுமியர்கள் நாளொன்றுக்கு எட்டு முதல் பத்து ஆண்களை சுகிக்க வேண்டியவராய் இருப்பதும்,யுத்தம் நடக்கும் நாடுகளில் மனித உரிமைகள் மீறப்பட்டு  எதிரியை பழிவாங்கும் ஆயுதங்களாய் சோதனை எலிகளாய் பெண்கள் பயன் படுத்தப்படுவதும், ஒரு வயது சிறுமி முதல் எண்பது வயதுபாட்டி வரை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாவதும்,அடக்குமுறைகளும், அடிமைத்தனங்களும் இன்னும  பல சகிக்க இயலாத சங்கடங்களுமாய்   தொடரும் நிலை என்று மாறும்?

பெண்மையை போற்றிய இந்த நாளில் பெண்கள் படும் துயரங்கள் குறித்தும் அவர்களுக்கான விடுதலை குறித்தும் சிந்திக்க வேண்டிய நிலையில் தான் நாம் இருக்கின்றோம். விண்ணுக்கும் மண்ணுக்கும் சவாலிடும் நிலையில் பெண் தன்னை உயர்த்திக்கொண்டாலும் பெண் என்பவள் போகப்பொருளே எனும் மாயை உலகிலிருந்து வெளிவரும் நாள் எப்போது!?

பெண் குழந்தைந்தையாய், குமரியாய், மனைவியாய் , மகளாய், தாயாய்  பல வேடங்கள் இட்டாலும்  திருமணத்தின் மூலம் வரும்  சுமங்கலி எனும் பட்டம் கணவன் இல்லை என்றாகும் போது அமங்கலமாகும் நிலை மறையும் நாளும் எப்போது? பூவும் பொட்டும் திருமணம் தந்தவை என்பது போல் மறுக்கப்பட்டு ஒடுக்கப்படும் நிலை ஏன்? சீதனமும் சீர் தூக்கலும் பெண்ணை மட்டும் அடக்குவதேன்?ஆணும் பெண்ணுமாய் ஒரே  நிலையில் ஒரே படிப்பை படித்து பட்டம் பெற்று வெளி வரும் நிலையில் ஆணுக்கான தகுதி உயர்வாயும் ,பெண்ணுக்கான தகுதியோ பட்டம் பெற்றாலும்   திருமண சந்தையில் விலை பேசு பொருளாய்  பொன்னும் பொருளுடன் பெண்ணையும்  வதைக்கும் நிலை ஏன்?

இப்போது அப்படி எல்லாம் இல்லை என குறிப்பிட்ட சூழலை மட்டும் வைத்து சுதந்திரமாய் இருப்பதாய்  நினைக்கலாம், ஆனால் எத்தனை உயர்ந்தாலும் ஒரு படி குட்டை தான் எண்ணத்தின் விதை பெண்கள் குறித்து எங்கும் உள்ளதே!

என் அனுபவத்தில் என்னை நான் நிலை நிறுத்த எனக்காக திறமைகளை வெளிப்படுத்த நிரம்ப போராட வேண்டி வந்தது எனில் அதில் மிகை இல்லை!சிறு வயதில் சைக்கிள் ஓட பழக போனால் பெண்குழந்தைக்கு எதற்கு சைக்கிள் ஓட்டம் என தடைசெய்த காலமாய் என் காலமும் இருந்தது, பாடசாலை தவிர்த்து வீட்டுக்கு வெளியே செல்லும் போது தனியே செல்லக்கூடாது எனும் கட்டுப்பாடுகள் கொண்ட காலமாகவும் இருந்தது,

என் தொழிலில் நிர்வாக ரிதியில் என்னை என் திறமையை வெளிப்படுத்த பல ஆண்டுகளை செலவிட வேண்டி இருந்தது! என் கஸ்டமர்கள் கூட ஆரம்ப நாட்களில் பல விருந்துகள் விழாக்கள் குறித்த டிஸ்கஸுக்கு நான் செல்லும் போது என்னவரும் உடன் வருவதால் எல்லாமே அவர் மேற்பார்வையில் நடப்பதாய் நினைத்து நீ பேசாமல்இரு!அவர் தானே எல்லாம் செய்யப் போகின்
றார் என சட்டென சொல்வார்கள்.  நான் அவ்விடத்தில் பிசினஸ் கருதி அமைதியாய் இருந்தாலும் விருந்தின் இறுதியில் யார் அனைத்தையும் நிர்வகித்தார் என்பதை அவர்கள் முகத்தில் அறைவது போல் நிருபித்து காட்டி இருக்கின்றேன். இறுதியில் ஐயோ மன்னித்து விடுமா நாங்கள் இப்படி நீ தான் அனைத்தும் நிர்வாகிப்பே என நினைக்கவே இல்லை என சொல்லும் படி தான் என்னை நானும் நிருபிக்க வேண்டி இருந்தது, இருக்கின்றது!

சில பெரிய பார்ட்டிகளை அரேஞ்ச் செய்யும் போது கூட்டத்தினை கட்டுப்படுத்த, அதிகமாய் குடித்து விட்டு கலாட்டா செய்பவர்களுக்கு அஞ்ச வேண்டித்தான் இருக்கின்றது. எங்கே நம் மீது தவறான புரிதல் வந்து விடுமோ என்பதற்காகவே வேலை நிர்வாகம் என வரும் போது இலகு தன்மை நீக்கி கடினமாக முகமூடியை அணிந்து கொள்ள வேண்டியும் வருகின்றது! 

ஆணின் வெற்றிக்கு பின் பெண் இருப்பது போல் பெண்ணின் வெற்றிக்கு பின்னாலும் ஆண் இருப்பான் என்பதுடன் அவளை வெற்றி பெற செய்யவிடாமல் பண்ணுவதும் அதே ஆணும், பெண்ணும் தான்!

அண்மையில் ஒரு சம்பவம் படித்தேன், இந்தியாவில் கவுன்சிலராயிருக்கும் பெண்ணுக்கு தன் பணி என்ன எனவே தெரியவில்லையாம்,வீட்டில் சமைப்பதும் துவைப்பதும் தான் அவள் பணியாம், அவள் பதவியை அவள் கணவன் நிர்வகிப்பதாயும் அவளுக்கு அவளுக்காக அலுவலகம் செல்ல க்கூட அனுமதி இல்லையாம், இதே போல் பேருந்து நிலையத்தில் பூக்கட்டி விற்கும் ஒரு கவுன்சிலர் குறித்தும படித்தேன்! ஏன் இந்த நிலை? பதவிக்கும் போகத்துக்கும் பொம்மை போல் பெண்ணை நிறுத்தும் நிலை ஏன்?

உலகெங்கும் பெரும்பாலும் இதே நடை முறைதான்,வளர்ந்து வரும் நாடுகளில் தான் இந்த நிலை எனில் வளர்ந்து விட்ட நாடுகளிலும் இதே நிலை, மகப்பேறு,அதை தொடர்ந்த விடுமுறை, பராமரிப்பு,குழந்தைக்கு உடல் சுகவீனம் எனில் அவனை கவனிக்க மெடிக்கல் போட்டு வீட்டையும் குழந்தையையும் கவனிக்கவேண்டிய நிலை, ஆண்களை விட அறிவில் நிர்வாகத்தில் பலவகையில் சிறந்திருந்தாலும் ஊதியக்குறைவு, என பல வகைகளில் பெண் எனின் சற்று இறக்கமாய் இறுக்கமாய் இருக்கும் நிலை தான் எங்கும் இருக்கின்றது.

பெண்களை வேலைக்கு எடுக்கும் போது அவளுக்கான வயது, திருமணமா
னவளா?அடுத்துஎத்தனைவருடத்தில்குழந்தைபெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்
ளாள் என்பதுவும், நாற்பது வயதுக்கு மேல் எனில் அதன் பின்னரான உடல் உபாதைகளும்கருத்தில்கொள்ளப்பட்டேவேலைகளுக்கும் நியமனம் வழங்கப்
படுகின்றது.

என் வீட்டை எடுத்தால் என் பெண் வயது 15 தான் ஆகின்றது, அவள்” அப்பா எப்போதேனும் ஒருமுறை கிச்சனில் போய் ஏதேனும் சமையல் செய்தால் அப்பா பாவம், இது அம்மாவின் வேலை தானே? அப்பாவை ஏன் சமைக்க விடணும் என என்னுடன் விவாதம் செய்வாள்! பெண்ணாயிருந்தும் சமைத்தல் என்பது பெண்களுக்கானது என்பதும் உலகில் எங்கும் ஊறிப்போனதாய் இருக்கின்றது. சமைத்தல், கழுவுதல் துவைத்தல் காயப்போடுதல் எல்லாம் பெண்களுக்காக பணியாய் மட்டுமே! வெளியிலிருந்து வீட்டுக்குள் நுழையும் பிள்ளை அம்மா பசிக்குது என்பானே தவிர அப்பா பசிக்குது என சொல்வதில்லையே?

வீட்டில் இருக்கும் பெண்களுக்கும்,வேலைக்கு போகும் பெண்களுக்கும் இதே நிலை தான், எத்தனை வளர்ந்தென்ன, உயர்ந்தென்ன இப்பணிகள் அனைவ
ருக்கும் சமம் எனும் நிலையை நம் வீட்டில் நாம் உருவாக்காத வரை உலகில் எப்படிமாற்றம் வரும். ஆணைப்போல் எட்டரை மணி நேரம் வேலைக்கு சென்று அதே பணிகளை செய்து வீட்டுக்கு வந்தாலும் வீட்டில் தொடரும் வேலைகளையும் கவனிக்க வேண்டியதும் பெண்ணுக்கான சுமைகள் தானே? 

வீட்டுக்குள்ளேயே பெண் எனில் இப்படி ஆண் எனில் அப்படி என தான் வளர்க்கின்றோம். இரவு பத்து மணிக்குள் வீட்டுக்கு வராத பையனை திட்டாத நான் பெண்ணை ஆறு மணிக்கு மேல் வெளியே போகக்கூடாது என சொல்லும் போது என் மகன் என்னிடம் கேட்கின்றான். நீங்கள்.என்னை கட்டுப்படுத்துவதில்லையே? தங்கையைமட்டும்ஏன்கட்டுப்படுத்துகின்றீர்கள்?
என்னை போல் தானே அவளும் என்கின்றான்? 

இக்கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்பது இன்று வரை எனக்கு புரியவில்லை! இப்படி பல புரியாத புதிர்களாய் நாம் நமக்குள் இருக்கும் போது மாற்றத்தினை எங்கிருந்து எதிர்பார்க்க முடியும் என புரியவே இல்லை !

ஆணுக்கொரு நீதியும் பெண்ணுக்கொரு நீதியுமாய் ஆணும் பெண்ணும் சரி சமம் எனும் நிலையை உருவாக்க அவளின் உடல் கூறுகளே அவளுக்கு தடையாகுமா? 

தடையாக இருப்பதும் அவள் உடல் கூறுகள் தானே? வீட்டை விட்டு புறப்படும் பெண் குழந்தை வீடு திரும்பி பத்திரமாய் வரும் வரை பெண்ணுக்கு அம்மாவாய் மனம் பதைக்கும் அதே நேரம்,, பெண் உரிமை மறுக்கும் தாயாய் நான் இருப்பதும் நிஜமாகின்றதே! பெண்ணுக்காக உரிமை பேசும் என்னால் என் பெண்ணுக்காக உரிமையை மறுக்கும் நிலை ஏன்?

ஆணுக்கு பெண் சரி நிகர் என்பது வாய்ச்சொல்லில் தான் சாத்தியமாகுமா? இனம், மொழி மதம் கடந்து பெண் எனும் அவள் பாலினமே அவளுக்கு தடையாய் அவளை சிறைப்படுத்தும் நிலையும் சிந்தனையும் என்று தான் மாறும்?பெண்ணியம் என்பதும் பெண் விடுதலை என்பதும் ஆண்களுக்கு எதிரானபோராட்டமாய்அல்ல!நமக்குள் நாமே நம்மை விடுதலையாக்கும் போராட்டமாய் நம் சிந்தனைச்சிறகுகளை சுதந்திரமாய் பறக்க விடுதலே பெண்ணியத்தின்விடுதலையாய்இருக்கின்றதுஎனில்அதில் தவறில்லை!

நம் சமூகம் மட்டும் அல்ல! உலகின் அனைத்து சமூக மக்களும் இதே நிலையில் தான்,ஆண் மக்களை கட்டுப்படுத்தாத சமூகம் அவள் உடல் கூறும் பருவமும் தரும் இயலாமையினால் பெண்மக்களை எங்கே செல்கின்றார்கள், எவருடன் செல்கின்றார்கள், எப்போது திரும்புவார்கள் என கட்டுப்படுத்தும் நிர்ப்பந்தத்தினை தருகின்றதே! இந்த கட்டுப்பாடு அவள் ஆழ் மனதில் பதிந்து எதிர்காலத்திலும் தமக்காக விதிக்கப்பட்டது இதுவே எனும் சிந்த்னையை தரும் போது எங்கிருந்து சரி சமம் எனும் உணர்வு வரும்?

தடைகள் தாண்டி சாதனைப்பெண்களாய்  தம்மை உயர்த்திகொண்ட அனைத்து மகளிரை எண்ணி பெருமிதம் அடையும் அதை நேரம், அறியாமை இருளில் மூழ்கித்தவிக்கும் பெண்களை எண்ணி மனம் கனக்கின்றது!

ஆண் பெண் பேதங்கள் எல்லா இனத்திலும் உண்டு! பெண் விடுதலை சுய உரிமை குறித்து பேசினால் பெண்ணியம் பேசுவதாய் எண்ணியும் திமிர் பிடித்தவள் எனவும் ஒதுக்கி வைக்கும் சமூகசூழலுமாய் பெண்ணுக்காக உணர்வுகள் தொடர்ந்தும் மறுதலிக்கப்பட்டுக்கொண்டே வருகின்றது! ஒரு நாணயத்தின் இரு பக்கம் போல் உரிமைகள் மறுக்கப்படுதல் ஒருபக்கம் இருக்க தமக்கான உரிமையை தவறாக பயன் படுத்தி பெண் இனத்துக்கே கேடுண்டாக்கி அவமானசின்னங்கங்கள் வடுக்களாக நிலைக்க வைக்கும் பலரும் எம்மத்தியில் இல்லாமல் இல்லை, ஆடைச்சுதந்திரம் எனும் பெயரில் அரை குறை ஆடை அணிவதும், மறைக்கப்பட வேண்டிய அங்கங்களை காட்சிப்பொருளாக்குவதும், பெண் என்றாலே போதையும் போகமும் எனும் நிலைக்கு தள்ளி பெண்மையின் மென்மையை விலை பேசுவோராய் இருப்போரும் உண்டு!

அனைத்தையும் தாண்டி தம் உரிமை என்ன என உணராத பெண்களாய் நாம் அனைவருமே இருக்கின்றோம்!இனியும் அப்படித்தான் இருக்கப்போகின்
றோமா? வருடத்தில் ஒருநாள் எமக்கெனதெரிந்து தரும் வாழ்த்துக்களையும், பரிசில்களையும், ரோஜாக்களையும் பெறுவதே எம் பெருமைஎனவும் இந்தநாளில் மீடியாக்களில் கட்டுரை எழுதுவதும், பேசுவதும் தான் எமக்காக விடுதலை, உரிமை என கூண்டுக்குள் அடைபட்ட கிளிகளாய் திருப்திப்பட்டுக் 
கொள்ளப்போகின்றோமா?கூண்டைவிட்டுபறந்து சுதந்திரமாய் சிந்திக்க 
போகின்றோமா? நமக்காக யாரும் சிந்திக்க போவதில்லை! நாம் தான் சிந்திக்க வேண்டும், சிந்தித்து விழிப்புணர்வு பெற வேண்டியவர்களாய் நாம் தான் இருக்கின்றோம்.

நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும், நமக்கான உரம் தன்னம்
பிக்கையும், தைரியமும், பொறுமையும், விடாமுயற்சியும் மட்டுமே!

சிந்திப்போம்!

நன்றி!
என் வலைப்பூவினுடாக படங்கள் இணைக்க முடியவில்லை, பாட் ரெக்வெஸ்ட், ஈரோர் 400 என கடந்த ஒரு வாரமாகவே காட்டுகின்றது! விபரம் தெரிந்தவர்கள் உதவுங்களேன்!


02 மார்ச் 2016

எல்லாமே நீயானாய்!


கரைதெரியாத என் வாழ்வில்
படகோடு நீ வந்தாய்...

இருளான என் வாழ்வில்
ஒளியாக நீ வந்தாய்...

என்னை அமிழ்த்தும் பாரத்தை
தாங்கும் சுமையாக நீ வந்தாய்...

பசியாக நான் இருந்தேன்
பசி போக்கும் தாயானாய்

நோயாலே தவித்திருந்தேன்
நோய் போக்கும் மருந்தானாய்..

தூற்றும் மாந்தர் நடுவினிலே
துயர் துடைக்கும் துணையானாய்

என் சிந்தை சொல் அனைத்தும்
நித்தம் நித்தம் நீயானாய்...

இன்பம் தரும் இறையானாய்
தாங்கிடும் தாயானாய் ,

சுமந்திடும் தந்தையானாய்
தேற்றிடும் உறவானாய்

என் எண்ணமே நீயானாய்
எனக்கெல்லாமே நீயானாய்


2009 ல் எழுதப்பட்டு முத்தமிழ் மன்றம், தமிழ் மன்றம், சேனைத்தமிழ் உலா போன்ற தளங்களில் பகிரப்பட்டது! 

தொடரும் தொடர் பதிவர்கள் அறிமுகம்!

பல புதிய பதிவர்களையும்,பழைய பதிவர்களையும், நமக்கு பிடித்தமான பதிவர்களையும்  நம் வலைப்பூ மூலம் அறிமுகப்படுத்திடும் அருமையான வாய்ப்பு!

தொடரும் தொடர்பதிவர்கள் எனும் தலைப்பில் மீண்டும் வலையுலகை வலம் வரும் தேரோட்டம்! வளரும் கவிதை முத்து நிலவன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுக்குள்ளது!

அவரே எஸ்ரா,  மாலன், சு.ப வீரபாண்டியன், நந்தினி,சரபோஜி, வைசாலிசெல்வம்,,ஜோசப்பின் என நான் அறியாத பலரை அறிமுகமாக்கி இருந்தார், அதிலும் ஜோசப்பின் எனும் சகோதரியின் பதிவாய் அவர் இணைத்திருந்த பதிவு உணர்வுக்குவியலாய் கண்ணீரில் நனைய வைத்தது! 

மற்றவர்களை இன்னும் தொடரவும், படிக்கவும் இயலவில்லை எனினும் நேரம் வாய்ப்பும் போது நிச்சயம் படிப்பேன்! 

முத்து நிலவன் அவர்களின் தொடர் அழைப்பில் நான் ஒன்று சொல்வேன் மீரா, செல்வக்குமார்அவர்கள்தொடர்ந்தார்,மீரா. செல்வக்குமார் எனக்குப்பிடித்தவை எனும் தலைப்பில் நெற்கொழுவன், கில்லர்ஜி, என் ராஜ பாட்டை, உழைப்பாளி, ஒருஊழியனின்குரல்.,காவிரிமைந்தன்,இஸ்லாமியப்பெண்களளைத்தொடர்ந்து எ ஆல்ப்ஸ்தென்றலையும் இயல்பான தமிழ் என அறிமுகத்துடன் பகிர்ந்து அவர் அறிமுகமாக்கிய வலைப்பதிவர்களையே தொடரும் படி வேண்டியும் இருந்தார்,  
அனைவர் வலைப்பூவையும் நுனிப்புல் மேயாமல்  நேரம் வாய்க்கும் போது அனைத்தையும் படித்து விட வேண்டும் என குறித்துக்கொண்டேன். 

இந்த தொடரின் படி நானும் பத்து வலைப்பூக்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்பது எழுதப்பட்ட விதி என்பதனால் இதில் குறிப்பிடாமல் விடுபடுவோரை எனக்கு பிடிக்காதோ என  கேட்கக்கூடாது என  பதிவுக்கு முன்பே சொல்லி விட்டேன்,

எண்களின் வரிகள் கொண்டு எழுத்துக்களை மதிப்பிட்டேன் என்றோ வரிசைப்படுத்தினேன் என்றோ எண்ண வேண்டாம்1 

ஈழத்துப்பித்தன் எனும் பெயரில் 11 வயதில் நாட்டை விட்டு சுவிஸுக்கு புலம்பெயர்ந்தாலும்  தன் தாய் மண்ணை மட்டுமல்ல தமிழையும் மறக்காது என்னை ஆச்சரியப்படுத்தும் அருமையான தம்பி.

இலங்கையிலும் தமிழ் நாட்டிலும்   பிறந்து  வளர்ந்து படித்து 25 வயதுக்கு பின் புலம்பெயர்ந்த  பலர் தமிழை துச்சமென நினைக்க , தமிழறியாதோராய் நடிக்க, தன்னூரை தன் வலைப்பூவுக்கு பெயராய் இட்டு ஊருக்கும் உறவுக்கும்  புகழ் சேர்க்கும் தம்பி! சிறு வயதில் வந்து தமிழை மறக்காததை இட்டு எனக்குள் கொண்டிருந்த இறுமாப்பை நச்சென கொட்டி அக்கா நான் 11 வயசில் இங்கே வந்திட்டன், எனக்கு என் அம்மா தான் தமிழ் சொல்லித்தந்தவ என  தன்னை குறித்து அறிமுகப்படுத்திய போது  வியந்தேன். இவர் பதிவுகள் தொடர உங்கள் ஆதரவையும், உற்சாகத்தையும் கொட்டுங்கள் உறவுகளே! 

2. அவர்கள் உண்மைகள் - மதுரைத்தமிழன் 
அவர்கள் உண்மைகளின் பதிவுகளில் கொட்டப்படும் அரசியல் கருத்துகள் நிரம்ப பிடிக்கும்,ஊருக்கு போனால் ஏயார் போட்டில் வைத்தே கடத்துவார்கள் என பயந்து தன்னை மறைத்து தைரியமாய் அரசியலை வாங்கு வாங்கென வாங்கும் வல்லவர், சில பல  அருமையான நல் ஆலோசனைகளை எனக்கு ஆரம்ப முதல் வழங்கியதன்  மூலம் நல்லவராகவும்,அறிமுகமாகி இருக்கின்றார்.

மனைவியிடம் தினமும்  பூரிக்கட்டையால்  அடி வாங்குவதாய் சொல்லும் இவர் என்னை சுவிஸுக்குவந்து  சந்திக்கும் நாளில் நிஜமாகவே மனைவி
யிடம் பூரிக்கட்டையை கொடுத்து அடி  போட வைத்து  அதை வீடியோ
வாகவும் புகைப்படமாகவும் எடுத்து பதிவில் போட வேண்டும் என என் ரகசிய சபதத்துக்கும் சொந்தக்காரராயிருக்கின்றார். இந்த ரகசிய சபத விடயத்தை நீங்கள் யாரும் அவரிடம் சொல்லி விடாதீர்கள்.. 

3.. மனசு - குமார்!
எங்கள் தங்க மனசு குமார், வார்த்தைகளால் ஊஞ்சல் கட்டுவார்,வலைப்
பூவுக்குள் என்னை அழைத்து வந்து எனக்கென வலைப்பூவை திறந்து என்னை வழி நடத்தியதனால் என் வலைப்பூ ஆசானும் ஆனவர்! இவரின் கிராமத்து எழுத்துக்களை படிக்கும் போது அந்த சூழலுக்கு நம்மை கொண்டு சேர்த்து விடும் படி எழுத்தில் மண் வாசனை இருக்கும், அறிமுகம் இல்லாமல் பல வருடங்களாக  குமாரின் தொடர் கதைகளுக்கு நான் விசிறி!  நீங்களும் படித்து பாருங்கள். 

4. சிந்தையின் சிதறல்கள் -நேசமுடன் ஹாசிம்!
மார்க்கப்பற்றும் சமுதாயசீர்கேடுகளை  குறித்தும் தன் எண்ணத்தில் தோன்றுவதை விதையாக்குபவர், சீதனக்கொடுமைக்கெதிரான இவர் எழுத்துக்களும் செயல்பாடுகளும் வியக்க வைக்கும் படி இருக்கும். 
2011 ம் ஆண்டிலிருந்து சேனைத்தமிழ் உலா  இணைய தளத்தின் தலைமை நடத்துனராய் இருந்து அத்தளத்தின் மேன்மைக்குரிய தூண்களில் ஒருவராய் இருக்கும் தம்பி!

5. சின்னவள் -சூரியா!
பெயருக்கு ஏற்ப வயதிலும் சின்னவள் தான்! 15 வயதில் சுட்டிப்பெண்ணாய் தன் எண்ணத்தை கோர்வையாக்கி சிரிக்க வைக்கும் இவள் எழுத்து எனக்கு நிரம்ப பிடிக்கும். முயற்சித்தால் எல்லோராலும் எழுத முடியும், ஆனால் நகைச்சுவையாக எவர் மனமும் நோகாது எழுத  இவள் போல் சிலரால் மட்டுமே முடியும்., துன்பத்தை துக்கமாக உணரவைக்காது சிரிக்க சொல்லி மலைக்க வைக்கும் பெரிய எழுத்துக்களுக்கு சொந்தக்காரியாய் எதிர்காலத்தில் பிரகாசிக்க நீங்கள் உங்கள் ஆதரவை கொடுங்கள். 

பதிவுகளில்  எதிர் விவாதங்களுக்கு சொந்தக்காரராய் இருப்பவர், ஒரு பதிவரின் மறைவுக்காக இவரின் இரங்கல் செய்தி இவரின் உள்ளான மனதை புரிய வைக்கும்,தனக்கு வந்தால் தான் தலையிடியும் காய்ச்சலும் என்று பலர் இருக்க சமுதாய சிந்தனை கருத்துக்களை எழுதுவதால் இவர் பதிவுகளையும் பிடிக்கும், விவாதம்செய்து மாட்டிக்கொண்டு விழிக்க என்னால் முடியாது என்பதால்  என் கருத்துக்களை அரசியல் தவிர்த்த பதிவுகளுக்கு மட்டுமே இடுவேன், ஹாஹா!   

 வலைப்பூவின் தலைப்புத்தான் இப்படி! ஆனால் எழுத்துக்களில் விளையாட்டு இல்லவே இல்லை,எதிர்கால கலெக்டராகும் இலக்கில் சென்று கொண்டிருக்கும் இவளின் பதிவுகளை படித்தால்  18 வயதில் இத்தனை சிந்தனைகளை கொண்டிருக்கும் இவள்  போன்றோரால் சமுதாயம் சீர் பெறும் என நம்பிக்கை ஊற்றப்படுகின்றது. சில பல கருத்துக்களும் உதவிட நினைக்கும் நல்ல உள்ளமுமாய் இவளை அறிய பதிவில் சென்று படித்து பாருங்கள்.

8. தோட்டம் - சிவா
இயற்கையோடு ஒன்றிய காய்கறிகளை விளைவித்து  தன் அனுபவத்தை அனைவரும் பயனடைய பகிர்பவர்.நான்கைந்து வருடம் முன் தக்காளி, அவரை,கத்தரி,பீற்றூட்எனஎன்வீட்டுபல்கணியில்விதைத்துபயனடைந்தாலும் அதன் பின் ஆர்வம்  இல்லாததால் விட்டு விட்டேன். இப்போது இவரின் பதிவுகளை படித்ததிலிருந்து இந்த வருடம் சம்மரில் எங்க வீட்டு பல்கணியில் தோட்டம் போடுவது என முடிவு செய்து இருக்கின்றேன்,  உங்களுக்கும் படங்கள் பார்வைக்கு கிடைக்கும். 

பிரபல்யமான எழுத்தாளர், நான் இவரின் தொடர்களின் நீண்ட நாள் வாசகி !

பேஸ்புக்கில்  பைந்தமிழ் சோலை எனும்  வெண்பாக்களை இயற்ற கற்பிக்கும் குருப்பில் அறிமுகமானார். இலங்கையை சேர்ந்த இவரின் வெண்பாக்கள் படிக்கும் போது உணர்வுக்குள் புகுந்து உள்ளத்தை ஊருடுவும் விதமாய் இருக்கும். அத்தனை அருமையாய் வார்த்தைகளை கையாண்டு எழுதுகின்றார்.  

சான்றாய் ஒரு கவிதை பகிர்கின்றேன். படித்து பாருங்கள்!
கண்ணயரும் வேளைகளில் கலகம் செய்கிறாய் - என்
... கண்ணிரெண்டில் கிடந்துநீயும் குளித்து மகிழ்கிறாய்
எண்ணமெலா மென்னுயிரென் றேங்க வைக்கிறாய் - ஒரு
... எழுதாத புத்தகம்போ லென்னில் கிடக்கிறாய்
வண்ணவண்ணக் கலவைபூசி வந்து போகிறாய் - வரும் 
... கனவிலெலாம் வர்ணஜாலம் காட்டி நிற்கிறாய்
தென்றலோடு கலந்துவந்து தொட்டுச் செல்கிறாய் - ஒரு
... துளித்தேனாய் என்னுயிரில் என்று மினிக்கிறாய் !
கொஞ்சிக்கொஞ்சி பேசும்போது குழந்தை யாகிறாய் - ஒரு
... குயிலைப்போல காதில்வந்து கான மிசைக்கிறாய்
அஞ்சியஞ்சி நடக்கும்போது அன்ன மாகிறாய் - சில
... அதிசயத்தி னதிசயமாய் என்னை வதைக்கிறாய்
அஞ்சனங்கள் சூழ்ந்தவிழியா லாட்டிப் படைக்கிறாய் - என்
... ஆளுமையின் விளிம்பினிலே நடந்து செல்கிறாய்
மிஞ்சிமிஞ்சிப் போனாலும் நீயும் நானும்தான் - நம்
... நெஞ்சிரெண்டில் கிடப்பதெல்லாம் காதல் சொர்க்கம்தான் !!

- அஷ்ஃபா அஷ்ரஃப் அலி -

தொடர்வார்கள்எனும்நம்பிக்கையில்என்னால்அன்புடன்அழைக்கப்படுபவர்கள்!

1.அஷ்ஃபா அஷ்ரஃப் அலி -
2.இணுவையூர் மயூரன் 
3.ரிலாக்ஸ் வருண் 
4.அவர்கள் உண்மைகள் மதுரைத்தமிழன்
5.ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் ரூபன் 
6.சுவாதியும் கவிதையும் சுவாதி
7. நேசமுடன் ஹாசிம் 

நன்றி!