சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

05 ஏப்ரல் 2019

அமெரிக்கன் சொன்னால் சரியா தானிருக்கும்...!?

எதை பகிர்ந்தாலும், அமெரிக்காவில் அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வின் அடிப்படையில் என தொடங்குகின்றோம். அமெரிக்கர், ஐரோப்பியர்கள் செய்த ஆய்வுகளின் அடிப்படையில் எமது சமூகத்தின் பிரச்சனைகளை அணுகுவது சரியானதா?
மாறுபட்ட காலநிலை,கலாச்சாரம், பண்பாடு, சமூகக்கட்டுப்பாடுகளை கொண்ட தேசங்களில் , கல்வியறிவு, பொருளாதாரத்தில் தனி நபர் தன்னிறைவை அடைந்திருக்கும் மக்களை வைத்து செய்யப்படும் ஆய்வுகளின் முடிவுகளை நாங்கள் எங்கள் சமூகம் சார்ந்து ஒப்பீடு செய்வது சரியானதா?
இது வரை நாங்கள் எமக்கான தேடல்களின் தீர்வாக அமெரிக்க ஆய்வுக்கட்டுரைகளை பின்பற்றி கொண்டிருக்கின்றோம்.
எமக்கென தனி கலாச்சாரப்பண்பாட்டு சூழல் இருக்கும் போது நாம் ஏன் நமது மக்களுக்குள் தனி ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை?
அடுத்தவன் முதுகில் சவாரி செய்யும் நிலையும் , நமது தவறுகளை உணராத சுபாவமும் தொடர்வதனால் நாம் எமக்கான சிறப்பம்சங்களை இழந்து கொண்டிருக்கின்றோமா ?
அணியும் ஆடை,உண்ணும் உடை முதல் அனைத்தும் அவரவர் நாட்டு கால நிலைச்சூழலுக்கு அமைவாக உருவாக்கப்பட்டிருக்க நாங்கள் எங்களுக்கான தேடல்களையும் தீர்வுகளையும் எமக்கு வெளியே தேடலாமா?

குளிர்ப்பிரதேச மக்களுக்கான செயல்பாடுகளை வெப்பப்பிரதேச மக்கள் பின் பற்றுவதும், அதுவே நாகரீக வளர்ச்சி,நவீனத்துவம்,முன்னேற்றம் என்கின்றோம்.


எமது வரலாற்றின் சிறப்பம்சங்களை மறைத்து அன்னியர் பெருமை பேணலில் விளைவுகளே இன்றைய சமூகச்சீர்கேடுகள் என்றாலும் மறுப்பதற்கில்லை. எமது கண்களை குருடாக்கி சித்திரம் வாங்குவது அவசியம் தானா? 
எமது சமூக ஆண்,பெண்கள் ஒவ்வொரு வயதிலும் எதிர் கொள்ளும் உடல் உளவியல் மாற்றங்கள், அதனால் சமூகம் எதிர்கொள்ளும் சிக்கலகள் குறித்து எந்த ஆய்வும் எம்மிடம் இல்லை. ஒவ்வொருவரும் தம் சூழல் சார்ந்து எழுதப்பட்டபதிவுகளை தான் பொதுப்புரிதலாக அனைவருக்கும் எடுத்துக்காட்டுகின்றோம் தவிர ஆராய்ச்சி செய்து எந்த முடிவும் எடுத்ததாக தெரியவில்லை.
சமீப காலமாக எமது பெண்கள் பல்வேறு பிரச்சனைகள் எதிர்கொள்கின்றார்கள். அது ஒட்டு மொத்த சமூக சீர்கேட்டுக்கும் விதையாகின்றதென நாம் உணர்கின்றோமா?
5 தொடக்கம் 60 வரை எமது பெண்களுக்கான பிரச்சனைகளில் 40+ வயதுகளில் பெண்கள் எதிர் நோக்கும் உடல், உளவியல் குழப்பங்களை மெனோபாஸ் என ஒற்றை சொல்லின் கீழ் முடித்து கொள்கின்றோம். அதை அவள் தலை விதி என்பதும் சக பெண்களாலேயே புரிந்து கொள்ளப்படாமல் இருப்பதும் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.
என்ன பிரச்சனை வந்தாலும் ஆண்கள் பெண்கள் மாறனும் என பிரச்சனையின் தன்மைக்கேற்ப விவாதங்கள் தூள் பறக்கின்றது. எம்மிடம் எந்த தீர்வுகளும் இல்லை.
ஏன் இந்த நிலை?
மேலை நாடுகள் பெண்கள் பிரச்சனைகளை நிதானமாக கையாள்கின்றார்கள். 
ஆவதும் அழிவது பெண்ணாலே தான் என்பதை நன்கறிந்தவர்களாக பெண்கள் பிரச்சனைகளை அவர்கள் மேம்போக்காக அணுகுவதில்லை. பெண்ணிடமிருந்து வரும் சிறு மாற்றமும் கவனிப்புக்குள்ளாகின்றது. பெண் என்றொரு வார்த்தைக்குள் ஒட்டு மொத்த சமூகமுமே அடங்கி விடுகின்றது என்பதனால் பெண்கள் சார்ந்த பிரச்சனைகள் அலட்சியப்படுத்தப்படுவதில்லை.

பெண் என்பவள் தான் அனைத்தையும் நிச்சயிக்கின்றாள்.பெண் தான் உலகத்தை சீராக இயக்கும் சக்கரம்,பெண் தான் எல்லாமே. பெண் சரியாக இருந்தால் எல்லாமே அதனதன் போக்கில் இயங்கும் என்பதை நன்குணர்ந்தவர்கள் என பெருமை பேசும் நாம் நம் சமூக மக்கள் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளாததும், மாறிவரும் சூழல்களை குறித்து அக்கறைப்படாததும் எமது எதிர்கால சமூகத்துக்கு நல்லதல்ல.

நாம் இதை குறித்து இன்னமும் சிந்திக்காமல் இருக்கின்றோமா? சிந்திப்போம்.


29 மார்ச் 2019

சதா ரணமாகும் தேர்வுகள்

சாதாரணம்
சதா ரணமெனும் 
சகல கலா ரணமாகுவதாக
சத்தமில்லா யுத்தமொன்று

சங்கடம் தருவதாய் சிலரும்
சங்கெடுத்து ஊதுவதாக பலரும், 
என்னைப் பார் 
என் பெண்ணைபபார்
உன்னை போல் என் 
உறவில்லை என்போரும்

கற்றலை,குற்றமாக்கி
தேர்வின் புள்ளிகள்
வாழ்வின் கரும்புள்ளிகளாய்
வடுக்களாய் தங்க வைப்போரும்
தாம் கடந்த முட் பாதை அறியாதோராய்...!?

சாதாரணமாக கடந்தவைகளெல்லாம் 
சாதனைப்பட்டியலில் இடம் பிடிப்பதும்
சாதனைகள் செய்வோரை சகதியில் எறிவதும் 
சாத்தானின் போதனைகளாய் கடப்போம்.

நீ நானாகவும்,
நான நீயாகவும் 
அவன் அவளாகவும்
அவள் அவனாகவும்
ஒப்பீடு தப்பீடாய் 
பட்டறிவும்,படிப்பறிவும்
பட்டம் போல் வானம் தொடும், 
காலமது அதை உணர்த்தும்

தேர்வென்பதன் வெற்றிகளால் கொக்கரிப்போர் 
வாழ்க்கை தேரென்பதை இழுக்க
முடியாதோராய்..... ?

கற்றறிந்தோர் முயலாமையினால் 
முடங்கி விட............!?
பட்டறிவால் வென்றோர் உயர்ந்து நிற்க 
முயல் ஆமை கதை இங்கே நினைவில் வரும்,

தோற்றவர்கள் வீழ்ந்ததில்லை
வென்றவர்கள் எல்லோரும் வாழ்ந்ததும் இல்லை.

வாழ்க்கை என்பது ஒரு வட்டம், 
காலம் மாறும் காட்சிகள் கலையும், 
கலைந்த கனவுகள் 
தொலைந்த இரவுகள
கனவாகிப்போகும்,

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே.. 
நம்பிக்கை எங்கள் தும்பிக்கை!

அவரவர் அறிவும், ஆற்றலும் அவரவர்க்கே உரிமை.
மனித ஆற்றல் சக்தி வாய்ந்தது, 
தினம் மலர்வதும் உதிர்வதனாலும் பூக்கள் சினப்பதில்லை. 
நீங்கள் நாள் தோறும் புதிதாக மலருங்கள்
வாழ்க்கை உங்கள் வசப்படும்........!

#சதா_ரணமாகும்_தேர்வு


22 மார்ச் 2019

ஒரு பிடிச்சோற்றின் முன் ...!

வண்டல் நிலமோ பாளம் போல் வெடிக்க
நெல்மணிக்கதிர்கள் தாகத்தில் தவிக்க
கரிசல் பூமியின் கதறல் கேட்டு 
இனித்திடும் கரும்பின் சுவையும் கசக்க
பருத்திச்செடியோ செம்மண்ணின் சூட்டால் 
சுழன்று வெடித்து சுக்கு நூறாக 

வளமான மண் தேடி விவசாயி அலைய
உயிரான நீர் வளம் உருக்குலைந்திட
விசமாக்கும் வித்தையை களமாக்க துடிக்கும்

அடப்பாவி மனிதா....!
ஒரு பிடிச்சோற்றின் முன் ....!
ஒரு கிலோ தங்கமோ, ஓராயிரம் கோடியோ 
உன் உயிர்க்கு உரமாகாதுணர்வாய்....!

மூவிரண்டாய் மூழ்கி இருந்தும் 
அடி முதல் முடி வரை விரவிப்பரந்தும் 
அங்குசமின்றி ஆளுமை செய்தும் 
அணைகளை உடைத்து தடைகளை கடந்தும் 
அலைகளால் அலைக்கழித்தும் 
பொங்கிப்பெருகி காட்டாறாய் ஓடி 
நாணிடும் நங்கை போல் கொஞ்சி நடந்து 
கங்கா, யமுனா, சரஸ்வதி என்றென போற்றி
காவேரிக்காக களப்பலி கொடுத்ததும் ஏனோ?

இயற்கை தன் வளங்களை காக்க போராடுவதை
புயலாகி, சுனாமியாகி, பூகம்பமாகி நம்மை எச்சரித்தாலும் மனிதன் அதன் வலிகளை உணராமல் போகின்றான்

எங்கோ எவருக்கோ எனும் வேடிக்கைதனை களைந்து 
எம் வளங்களை காக்கும் கடமைதனை உணராமல் கடந்தோமானால் 
படம் சொல்லும் சேதிகள் நம் சிந்தனைக்கே....!
எமது சந்ததிகளுக்கு நாம் விட்டு செல்ல போவது என்ன ....?

எதிர்காலத்தில் எம் வளங்களும்....!?



 
 
 
 
 
 
 
 
 
படங்கள் நன்றி இணையம். 
 

26 பிப்ரவரி 2019

#எங்கே_முகிலன்?

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

காதால் கேட்பதும் பொய், கண்ணால் பார்ப்பதும் பொய்,தீர விசாரித்து அறிவதுவே மெய் என்பார்கள்.
எந்தச்செயலையும் செயல்படுத்துவதற்கு முன்பு, அதற்கான சூழல்,தேவை,பயன்,நன்மை,தீமை என ஆராய்ந்து அறிந்து செயல்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.
*காலமுணர்ந்து உடனடிச்செயல்பாடு 
*ஆராய்ந்து அறிந்த பின் நீண்ட கால செயல்பாடு

எனும் இரண்டில் எந்த செயல்பாடு எமதாக இருக்க வேண்டும் என்பதை அந்த சம்பவம் சார்ந்த கடந்தகால,நிகழ்கால,எதிர்கால முக்கியத்துவம் கருதி முடிவெடுக்கப்பட வேண்டும்.
“ஏற்ற காலத்தில் சொன்ன வார்த்தை, எவ்வளவு நல்லது” (நீதி. 15:23) தேவையான நேரத்தில் எமது செயல்பாடுகள் மிகவும் முக்கியமானது.
தாமதப்படுத்தப்படும் நீதியும், செயல்பாடுகளும் உயிர்க்கொலைகளுக்க்கு நிகரானதே?
பொதுப்பணியில் ஈடுபட்டிருக்கும் மனிதர்கள் குறித்த விமர்சனங்கள் வரும் போது அதன் சாதக, பாதகங்களையும், நமக்கு நாமே ஆராய்ந்து அறிந்து முடிவெடுப்பதே நல்லது.
அனைத்து செயல்பாடுகளின் பின்னாலும் விமர்சனம் இருக்கும். குற்றங்குறைகளும்,அரசியலும் கரைந்தே இரையும்.
இருக்கட்டுமே❗️ 
100 வீதம் அனைத்திலும் நிறைந்தவர் யார்?

குற்றம் குறைகள் இல்லை எனில் அவன் மனிதனல்ல மகான், மனிதர்களில் மகான்களை தேடுவதனால் நமக்கு நடக்க கூடிய நன்மை என்ன?
கடந்த கால வரலாறுகளை ஆராய்ந்து பார்த்தோமானால் சமுகம் சார்ந்த மக்கள் தேவைகளுக்காக தம்மை அர்ப்பணித்த பலரின் செயல்பாடுகளை அவர்களின் சுய ஒழுக்கத்தை கேள்விக்குறியாக்குவதன் மூலம் தடைசெய்து ஒடுக்கி அடக்கி இருப்பார்கள். மக்கள் ஆதரவை இழக்க வைத்திருப்பார்கள்.
மக்களுக்கான குரல் கொடுப்பவரின் குரல் வளையை நசுக்க எதிராளிகள் கையாளும் மிகவும் கேவலமான வழி முறை இதுவெனலாம்,
1.முகிலன் என்பவர் யார்? அவரின் கடந்த கால வாழ்க்கை எப்படியானது? என்ன பணியில் இருந்தார்? தன் சொந்தப் பணியை விட்டு மக்கள் தேவைகளுக்காக செயல்ப்படுவது பஞ்சு மெத்தை வாழ்க்கையை தரும் என எதிர்பார்த்திருப்பாரா?
2. அவர் தானாக காணாமல் போனாரா?
3. காணாமல் போக வைக்கப்பட்டாரா?

4. தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை சம்பவங்களில் நடத்தப்பட்ட அரசு சார்பான விதி மீறல்களை ஆவணமாக்கி, அதை வெளியிட்ட பின் ஒளிந்து கொள்வது தமது அத்தனைகால உழைப்பினையும் விரயமாக்கும் என ஆராய்ந்துணராமல் செயல்ப்பட்டிருப்பாரா?

5. அவரின் குடும்ப வாழ்க்கை, சொந்த சுய வாழ்க்கைப்பிரச்சனையில் மன உளைச்சலினால்  ஒதுங்கி ஓய்வெடுக்கும் முடிவை எடுக்க வேண்டுமானால் அரசுக்கும்,அதிகாரங்களுக்கும் எதிரான ஆவணங்களையும் தேடி சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் என்ன? அதை செய்யாமலே இருந்திருக்கலாமே?

தன்னை தான் மறைத்துக்கொண்டு கண்ணாமூச்சி விளையாட்டின் மூலம் ஸ்டெர்லைட் பிரச்சனையை மக்களுக்கு உணர்த்தி பேசு பொருளாக்கலாம் என்பது சிறு பிள்ளைத்தனமான செயல்பாடென்பதோடு அவர் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும் என புரிந்து கொள்ள முடியாதவரா?
பொது மக்கள் கைப்பாவைகளா?

🔘முட்களும், கற்களும் மேடுகளும் நிறைந்த சமூகப்பணியில் சுற்றுசூழலை பாதுகாக்க போராடும் முக்கிய களத்தில் செயல்படும் மனிதஎ தானாக திடிரென மாயமாகிப்போனால் அது வரையான செயல்பாடுகள் அனைத்தும் விழலுக்கிறைத்த நீராகிப்போய் விடும் என்பதை புரியாமல் செயல்படக்கூடியவரா?

வழமை போல் இவர் மீதும், பெண், மண் என சிறு பிள்ளைத்தனமான குற்றத்தாட்டுக்களை வைத்து பிரச்சனையில் தீவிரத்தை திசை திருப்பி விடும் பணியில் அரசும், அதிகாரங்களும் ஒருமுனைப்பாக செயல்படும் போது, அரசின் அதிகாரத்தையும், செல்வாக்கையும், முகிலனையும் ஒரே தராசில் நிறுத்துவது எது அல்லது எவர்?

☑️அதிகாரத்தையும், செல்வாக்கையும் தம் வசம் வைத்திருப்போருடன் இவை எதுவுமே இல்லாத சமானிய மனிதனின் உயிரை பணயம் வைத்து , நீதி, நியாயம் என போராடும் போது ஆராய்ந்து அறிந்தே செயல்படுகின்றோம் என்று ஒதுங்கி நின்று ஓரமாய் வேடிக்கை பார்ப்பதனால் நாம் அடையும் நன்மை என்னவாக இருக்கும்?

☑️சந்தர்ப்ப சூழல் அதிகாரங்களுக்கு சாதகமாக இருக்கும் போது 100 ல் பத்து வீதம் முகிலன் கடத்தப்பட்டு, அவரின் உயிருக்கு ஊறுகள் ஏதேனும் ஏற்படுத்தப்பட்டிருந்தால் நமது ஆராய்வுகளையும், சந்தேகங்களையும் எங்கே போய் கொட்டுவோம்.
⁉️எதையெதையோவெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு நம்புகின்றோம், பரப்புகின்றோம். மக்கள் பிரச்சனைகள் என வரும் போது மட்டும் அதை சந்தேகத்துடன் நோக்குகின்றோம். மௌனமாகி கடக்கின்றோம்? கேள்விகளை முன் வைக்கின்றோம்.

கேள்வி கேட்க வேண்டியவர்களிடம் கேட்கப்படுவதில்லை என்பதும் மகக்ளுக்காக போராடுவோரை மக்கள் முன் குற்றவாளிகளாக்கி, நமக்கான ஆளுமைகளை ஒடுக்கி, உளவியல் ரிதியில் பயத்தை, தோல்வியை உருவாக்கும் சூழ்ச்சிக்கு நம்மை அறியாமல் உதவி புரிகின்றோம் என்பதும் நாம் உணர்ந்தே ஆக வேண்டும்.

மனிதர்கள் எல்லோருக்குள்ளும் ஏதோ ஒரு பலவீனம் இருக்கும். அவன் சொந்த வாழ்க்கையில் எப்படிப்பட்டவனாகவும் இருக்கட்டும். நமக்கென்ன?

✍️பொதுமக்களுக்கான பணியில் அவன் செயல்பாடு எப்படி இருந்தது?
☑️மது,மாது,பொருள், புகழ் என எதற்குமே அசையாத மனிதர்கள் எவரும் இவ்வுலகில் இலர் எனும் போது மக்களுக்காக போராடிய ஒருவனின் கடந்த கால செயல்பாடுகளை ஆராய்ந்து நிகழ்கால அவசியம், அவசரம் உணர்ந்து செயல்படுவதே அறிவுடையோர் செய்யக்கூடியது.
அவன் சொன்னான், இவன் சொன்னான் என எவன் எவனோ சொல்வதை நம்பும் நமக்கு அவன் என்னவானான் எனும் தேடலை நம்ப முடியாமல் போவது ஏன்?
கறை,திரை இல்லாத மனிதர்களை தேடுவதை விட நம் முன் இருக்கும் ஆக்கிரமிப்புக்கள், அடிமைப்படுத்தல் எனும் கடலின் கரையை அடைவது எப்படி என தேடுவதே முக்கியமாக இருக்கின்றது
பொதுப்பணிகாக தம்மை அர்ப்பணிப்போரின் சுய வாழ்க்கையை விமர்சிக்காமல், மக்களை அடிமைப்படுத்த முயற்சிக்கும் அதிகாரம், ஆணவங்களோடான போராட்டத்திலிருக்கும் செயல்பாடுகளையும்,அதன் முக்கியத்துவத்தையும், விளைவுகளையும் புரிந்துணர்வோடும் அவசர அவசியம் புரிந்தும் அணுக வேண்டும்.
நாளை நாளை என நாளை கடத்துவதும், கால நேரம் சூழல் புரிந்து செயல்படாமல் மதில் மேல் பூனைகளாக ஆராய்ந்து பார்த்து செயல்பட போகின்றோம் என சொல்லி வேடிக்கை பார்ப்பதும், காலம் கடந்த நியாயங்களும், நீதிகளும் எவருக்கும் பயன் தரப்போவதே இல்லை.
தமக்கென சுய சிந்தனை தெளிவு இல்லாமல் அடுத்தவர் பேச்சைக்கேட்டு அமைதியாக கடப்பவர்கள் சமூகத்தின் நன்மைகளை குறித்து சிந்திப்பவர்கள் அல்லர்.
நம் எதிராளி வேகம் மட்டுமலல் விவேகமாகவும் செயல்படுகின்றான் என்பதை நாம் இன்னும் உணரவே இல்லை
“ பரிசுத்தவான் என தன்னை சொல்பவன் இவன் மேல் முதலாவது கல்லெறியக்கடவன்

28 செப்டம்பர் 2017

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு

புங்குடுதீவு வித்யா!
இனிய கனவுகளோடு பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறந்து திரிந்த இளம் மாணவியின் சிறகொடித்து உயிர் குடித்தவர்களுக்கான தீர்ப்பு இன்று!
டெல்லி நிர்ப்பயா வழக்கில் கூட பல காரணங்கள் சொல்லி குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டும் தாமதம் செய்யப்படும் இந்த சூழலில் இலங்கையில் நடைபெற்ற மிகக்கொடூரமான கற்பழிப்பு வழக்கொன்றிற்கான தீர்ப்பு வரவேற்கப்படத்தக்கது, பாராட்டப்படத்தக்கதுமானது .
காலையில் பள்ளிக்கு சென்ற பெண்ணைக்கடத்தி கதறக்கதற சித்திரவதைப்படுத்தி கூட்டுவன்புணர்வு செய்து கொலையும் செய்தமை நிருபிக்கப்பட்ட பின்னும் நீதியின் தராசு தாழ்ந்தும் உயர்ந்தும் பணங்காசுக்கு விலை போக நிர்ப்பந்திக்கப்ப்ட்டும் பலவாறு விமர்சிக்கப்பட்டாலும் இன்றைய தினத்தின் இத்தீர்ப்பு இம்மாதிரி துஷ்டர்களுக்கு கடிவாளம் போடுமா?
நீதிபதி இளஞ்செழியன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், மாணிக்கவாசகர் மற்றும் அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோர் அடங்கிய குழு வழங்கிய இத்தீர்ப்புக்கான செயல் திட்டம் எப்படி இருக்கும்?
வித்யா கொலையில் ஒன்பது பேர் மீது வழக்குத்தொடரப்பட்ட நிலையில்ஒன்பது பேரில் ஏழுபேர் குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்டும் முதல் குற்றவாளியாக விசாரிக்கப்பட்டவர் தகுந்த சாட்சியங்கள் இல்லாமையினால் விடுவிக்கப்பட்டிருக்கின்றார்???
ஏழாம் குற்றவாளியும் விடுவிக்கப்பட்டிருக்கின்றார்?
காதலுக்கு தூது போனதாகவும், நேரடி சாட்சியங்களால் நிருபிக்கப்படவில்லை என இவ்விருவர் விடுதலைக்குமான காரணம் சொல்லப்பட்டிருக்கின்றது. மீதி ஏழு பேருக்கும் மரண தண்டனையும் விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது..
தீர்ப்பு மேல்முறையீட்டுக்கு செல்லுமானால் சிங்கள நீதிபதிகளால் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. காலத்தின் கோலத்தால் விடுதலையும் செய்யப்படலாம்.
உடனடி தண்டனை என்பதை தவிர இம்மாதிரி சம்பவங்களுக்கான நீதி விசாரனை என்பது காலந்தாழ்த்துதலுக்கும், மறக்கடிக்கப்பட்டு ச்ம்பவங்கள் பத்தோடு பதினொன்றாகி விடுதலுக்கும் தான் இதுவரை பயன் பட்டிருக்கின்றது. வித்யாவுக்கான இத்தீர்ப்பு நடுக்காட்டில் திக்கு திசை தெரியாமல் தடுமாறும் எம்மின மக்களுக்கான ஒளியை நோக்கிய வழிகாட்டும் தீபமாய் உணரப்படலாம். எனினும் தமக்கான நீதி தாமதமானாலும் தரமிழக்காது கிடைக்கும் எனும் நம்பிக்கையை தரும் படி இத்தீர்ப்பு இருக்குமா?
வித்யாவுக்கு பின்னும் இலங்கையில் பல கற்பழிப்புக்கொலைகள் நடந்தப்பட்டிருக்கின்றன. அதற்கான தீர்வுகள் எப்படி நகர்கின்றன?

என் கேள்வி?
இலங்கையில் மரண தண்டனை சட்டம் இன்னும் நிலுவையில் உள்ளதா?
பதிலும் நானே!
தூக்குத்தண்டனை இல்லை. தூக்குத்தண்டனை ரத்து செய்யப்பட்ட நாடுகளில் இலங்கையும் ஒன்றென நினைக்கின்றேன். எங்கோ படித்த நினைவு. மரண தண்டனை வேறு வகையில் இருக்கலாம். ஆனால் என்னைப்பொறுத்த வரை இன்றைய நிலையில் ஈழத்தமிழர்கள் விடயத்தில் இந்த தீர்ப்பு நல்லதொரு விடியல் எனும் நம்பிக்கை தரலாம். ஆனா’லும் நேற்றைய தீலிபனின் நினைவு கூரல் எந்த ஆண்டும் போலல்லாது இவ்வாண்டு சற்று உணர்வு வேகமாய் அனுஷ்டிக்கப்ப்ட்டதன் திசை திருப்பலாகவும் இத்தீர்வு இருக்கலாம். இப்போதெல்லாம் எது நடந்தாலும் அதன் பின் நாம் அறியாத இன்னொன்று உள்ளதே?


தீர்ப்பு குறித்து விபரம் அறிய
http://www.athirady.com/tamil-news/howisthis/1065355.html