12 நவம்பர் 2019

எங்கட வாழை இலைக்கு வந்த பவீசை பாருங்களன்.

எங்கட வாழை இலைக்கு வந்த பவீசை பாருங்களன்.
இனி ஊரெல்லாம் வாழை தோப்புத்தான்.. கிளம்புங்கோவன்...

பொருட்களை பாக்கெட் செய்ய பிளாஸ்டிக் பெட்டிகளுக்கு மாற்றாக வாழை இலையால் சுத்தி வரும் காய்கறிகளை அறிமுகப்படுத்துகின்றதாம் ஏசியா சூப்பர் மார்க்கெட்.
பிளாஸ்டிக் இல்லாத வாழ்க்கை சாத்தியமா என்கின்றது உலகம்?
மீண்டும் இயற்கையோடு இயைந்த வாழ்க்கைக்கு திரும்புவது சாத்தியமாகுமா?
சாத்தியப்படுத்தியவர்கள் எம் முன்னோர்கள்.
எப்படி...?
*
இயற்கையும் நானும் இயைந்தே வளர்ந்தோம் -1
நான் சிறுமியாய் இருந்த காலத்தில் 85 - 90 ஆம் ஆண்டுகளில் மார்கெட் போனால் மீன்,கூனி,இறால் முதல் கீரை, பச்சை மிளகாய் எல்லாம் வாழைஇலை,தென்னோலைக்குள் சுத்தி கட்டி தருவார்கள். பிளாஸ்டிக் பைகள் அதிகம் கண்ட நினைவும் இல்லை. அப்போதெல்லாம் சாப்பாட்டு கடைகளில் கடைகளில் சொதி கட்ட வரும் குட்டி பை மட்டும் தான் பிளாஸ்டிக் பையாக இருந்தது.
சந்தைக்கு போகும் போதே பிரம்புக்கூடை அல்லது பனையோலைக்கடகம் கொண்டு போனால் அதில் அன்றைக்கு தேவையான பச்சைமிளகாய், வெங்காயம், காய்கறி வாங்கி வைச்சிட்டு, மீன்,கூனி,இறாலை வாழை இலைக்குள் சுத்தி தந்தால் அதையும் ஒரு ஓரமா வைத்து கொண்டு வருவாள் அம்மா.அப்போதெல்லாம் கடகம்,கூடை கொண்டு செல்வதை யாரும் கேலி செய்வதில்லை.
/// ஹாண்ட் பாக்குகள் என விதவிதமாயும் இல்லை.

கொஞ்சம் வயதானவர்கள் பாவாடை தைக்கும் போது சின்னதா பைபோல் தைத்து அதில் வாய்ப்பக்கம் நாடா போட்டு முடிச்சிட்டு கொள்வார்கள்.அதன் பெயர் வல்லுகப்பை.
அதை இடுப்பில் செருகினால்.அது தான் மணி பர்ஸ்.

இடியப்பம் விற்கும் பெரியக்கா முதல் மார்கெட்டில் நிற்கும் அக்காமார் தாள் காசை சுறுட்டி சேலை அல்லது சட்டை பிளவுசுக்குள் செருகி வைப்பதை பார்த்திருக்கேன்.அதையும் யாரும் உத்து கவனிச்சு கேலி செய்தத கண்டதில்லை. சில்லறை காசெண்டால் சோட்டியின் சைட்டில் இருக்கும் பாக்கெட்டில் கிடக்கும்.
ஆப்பம் விக்கும் பாக்கியம் அன்ரியும் அப்பம் சுட்டு ஒன்றின் மேல் ஒன்றை கவிழ்த்து அடுக்கி வாழை இலைக்குள் சுத்தி தருவார்.
அப்பா பேருந்து நடத்துனராய்,மட்டக்களப்பு, கல்முனை டிரிப் ஓடினால் வீட்டிலிருந்து மத்தியானச்சாப்பாடும் கொதிக்க வைச்சு ஆறின தண்ணீரும் போத்தலில் அடைச்சு கொடுக்கணும். அப்பா வெளில குடி தண்ணீர் குடிக்க மாட்டார். //ஆனால் மத்த தண்ணீர் வெளில தான் குடிப்பார்😂🤣😭.
அப்பாக்கு சோறு கட்டுவதே ஒரு கலை. அதுக்கென சருவச்சட்டியும்,வெள்ளை துணித்துண்டும் தனியே இருக்கும்.அன்றைய பஸ் மத்தியானம் மட்டக்களப்பு கல்முனை டிரிப் போகக்குள்ள எங்கட ஊர் பிள்ளையார் கோயிலடியில் நின்று ஆட்களை ஏத்திட்டு பஸ் ரைவர் அங்கிள் கோன் அடிப்பார், அப்படி அடிச்சால், நாங்க சாப்பாட்டை கொண்டு வீட்ட இருந்து ஓடணும்,200 மீற்றர் வீட்டுக்கும் ரோட்டுக்கும் இடையில் பிந்த கூடாது.ஓடிப்போய் கொடுத்தால் ரெண்டு ரூபாய், ஐந்து ரூபாய் தருவார், சில நாள் அப்பா பாதி தூரம் ஓடி
வந்திருவார். பத்திரமா வீட்ட போ என சொல்லிட்டு காசு தருவார்.

கல்முனைல இருந்து மட்டக்களப்பு திரும்பும் போது பாத்திரம் தர கோன் அடிப்பார், நான் தான் வீட்ட மூத்த பிள்ளை நான் முதல்ல வேகமா ஓடுவன். சில நேரம் கோன் அடிக்காமல் அவ்விடம் இருக்கும் கிளாக்கரையாவின் பெட்டிக்கடையில் பாத்திரம் கொடுத்து விட்டு போவார்.
நான் வீட்டில் நிண்டால் அப்பா வரும் பஸ் சத்தம் கேட்டால் ஓடுவேன். அப்பத்தான் காசு தருவார்.
அப்பாக்கு சோறு கட்டுவதே ஒரு கலை எண்டேன்ல. நல்ல தலைவாழை இலையை வெட்டி அதை நெருப்பில் முன்னும் பின்னும் காட்டி நல்லா வாட்டி எடுத்து அதை அலுமினியம் சருவச்சட்டிக்குள் வைச்சு விரிச்சிட்டு அதற்குள் சோறு போட்டு, சில நேரம் ரெண்டாள் சோறு போடணும், ரைவர் அங்கிளும் சாப்பிடுவார்,எண்ட அம்மா நல்லா சமைப்பாள் என்பதனால் அம்மாட கைச்சாப்பாட்டுக்கு பயங்கர டிமாண்ட். சோத்தை போட்டு இன்னொரு வாழை இலை வாட்டி அதற்குள் கீரைச்சுண்டல், மீன் பொரியல் தனித்தனிய வைச்சி சுத்தி கட்டிப்போட்டு. சின்ன சின்ன கிண்ணத்தில் குழம்பு, சொதியும் ஊத்தி அதையும் மூடி கட்டி சோத்து சட்டிக்குள் வைத்து வாழை இலையால் மூடி சருவசட்டியை சுத்தி துணியால் இறுக்கி கட்டினால் சாப்பாடு தயார். சூடும் ஆறாது.அந்தக்கால வார்மர் இது தான்.
எழுதக்குள்ள லேசான காரியமா இருக்கு. அம்மா படும் பாடு இருக்கே. பஸ் வந்திரும் என ஓடி ஓடி விறகடுப்பில் சமைப்பாள். சில நேரம் பிந்திபோனால் பஸ்ஸை நித்தாட்டி போட்டு வந்து அம்மாக்கு திட்டுவார். சில நாளில் கல்முனைக்கு போகக்குள்ள சாப்பாடு கொடுக்க முடியாமல் போனால் திரும்ப வரக்குள்ள எடுப்பார்.லேட்டா சாப்பிடுவினம். அன்றிரவு அம்மாக்கு அடியும் திட்டும் கட்டாயம் இருக்கும் பாவம் அம்மா.அடி வாங்கிட்டு சாப்பாட்டை போட்டு கொடுப்பாள். இந்த காலம் போல் அந்தக்காலம் அம்மாக்கு ரோசம் வந்ததை காணேல்ல. இதை இன்னொரு பதிவில் சொல்றன்.
இப்படி வாழை இலைக்கும் எங்களுக்கும் விடாத பந்தம் இருந்தது, அது மட்டுமா...?
பெட்டிக்கடை வைச்சிருந்த ஈஸ்வரி அன்ரி கடைக்கோ,பெரிய கடை வைச்சிருந்த பஞ்சலிங்கம் மாமா கடைக்கோ போனால் அங்கே விரகேசரி, சிந்தாமணி,தினகரன்,மித்திரன் பேப்பரை சுருட்டி சுருள் போல் ஒவ்வொரு அளவுக்கும் வரிசையா அடுக்கி இருப்பார்கள். அதில் கால்கிலோ, அரைக்கிலோ, ஒருகிலோ என நாம் கேட்கும் அளவுக்கு போட்டு தராசில் நிறுத்தி மூடி அதையும் சணல் நூலால் கட்டி தருவார்கள்.சீரகம், மல்லி, மிளகெல்லாம் தினம் வாங்கும் பொருள் இல்லை.தேயிலையும், சீனியும், நெருப்புப்பெட்டியும் தான் அடிக்கடி வாங்கணும். // நைலோன் கயிறெல்லாம் இப்ப வந்தது. அக்காலத்தில் பேப்பர் வாழைச்சேனை பேப்பர் பக்டரியில் கரும்பிலிருந்து எடுப்பார்கள். சணல் தென்னந்தும்பிலிருந்து கிடைக்கும்.
இப்படி சீனி, தேயிலை சுத்தி வரும் பேப்பர் சுருளில் வரும் தகவல்களை உலக விடயங்களை சமூகக்கல்வி பாட ஒப்படைக்கு என பத்திரமா ஒரு கொப்பியில் ஒட்டி வைத்து கொள்வேன். கதைப்பக்கம் வந்தால் ஆரம்பமும்,முடிவும் இல்லாமல் படித்து போட்டு விறகடுப்பிலிருந்து இரவில் சிமிலி அல்லது குப்பி லாம்பி எரிக்க பயன் படுத்துவோம்.
தேங்கா எண்ணெய்,மண்ணெண்ணெய்க்கு என போத்தல் கொண்டு போகணும். அவங்க பெரிய பரலில் வைத்திருந்து நாம் கேட்கும் அளவை அளந்து கோனால் நம் போத்தலுக்குள் நிரம்பி தருவார்கள். ஒரு போத்தலே பல வருடம்,உடையும் வரை பயன் படுத்தினோம். இரவில் சிமிலி விளக்கும், குப்பி விளக்கும், பௌர்ணமி நிலவும் தான் வெளிச்சம் தரும்.
மத பேதம் தெரியாது. கோயிலில் பொங்கல் வைத்தால் வேதக்காரரெல்லாம் கோயிலடியில் அரச இலை,வம்மி இலை,பூவரச இலை பிய்த்து பீப்பி ஊதி விட்டு இன்னொரு இலையை கழுவிட்டு நீட்டினால் சுடச்சுட பொங்கலை அள்ளி வைப்பார்கள். அவ்விடம் திண்டு போட்டு கையை போட்டிருக்கும் சட்டையில் பின் பக்கமா துடைச்சி போட்டு வீட்ட போவம். ஆடிக்கூழ் வாங்க மட்டும் தான் வீட்ல இருந்த வெங்கல,சிலவர் செம்பும் வாளியும் கொண்டு போகணும். வேதக்கோயிலில் வட்டரும் பாணும் கொடுத்தால் அதை வாங்க சைவக்காரர் தான் வரிசையில் வருவினம்.
சாதி இருந்திச்சி,அவங்க இல்லாமல் எதுவுமில்லை எனும் காலமுமாய் அது இருந்தது. பிள்ளை பிறந்தாலும், வயசுக்கு வந்தாலும், கல்யாணம், கருமாதி என்றாலும் எல்லா சாதி சனமும் வரணும். வரும்,ஆளாளுக்கு அவரவர் பணி நடந்தது.
கோயில்ல அன்னதானம் என்றால் வாழை இலையில் தின்போம்.விருந்து எண்டால் மிஞ்சின சாப்பாட்டை பனையோலை பெட்டிக்குள் வாழை இலையை போட்டு அதற்குள் சோத்தை போட்டு சுத்தி வரை கறியும் வைச்சி, ஒரு செம்பில் சொதியும் ஊத்தி அனுப்பிவிடுவம். / டிபன் பாக்ஸ் தேடவே இல்லை.
செத்த வீட்டு சாப்பாடு எண்டால் துவச நாள் அன்னிக்கு வெள்ளெனவே ஊரில் இருக்கும் சொந்த பந்தம்,அண்டை அயலார் தம் சக்திக்கு ஏற்ப அரிசி, காய்கள் அனுப்பி விடுவார்கள்.அவங்க எம்பூட்டு காசுக்காரர் எண்டாலும், சாதிக்காரர் என்றாலும் செத்த ஆத்மாவை நினைவு கூர படைக்க இப்படி தானமா கிடைக்கும் பொருளோட தேவையானதையும் வாங்கி போட்டு வீட்டு வாசலில் பந்தல் போட்டு சமைத்து ஊரே வந்து சாப்பிட்டு மிச்சத்தை அன்னிக்கு யாரெல்லாம் பெட்டியில் காய்,அரிசி கொடுத்தாங்களோ அவங்க வீட்டுக்கு சாப்பாடும் போகும்.
சரி இதெல்லாம் ஏன் சொல்றன் என கேட்கின்றீர்களோ?
ஒல்ட் இட்ஸ் கோல்டாம் என இப்ப தான் இந்த காப்ரேட் கம்பெனி சூப்பர் மார்கெட் காரனுகள் கண்டு பிடிச்சிருக்காங்க. அவங்க தான் புதுசா கண்டு பிடிச்சது போல எம்பூட்டு அழகா போட்டோ எடுத்து பேப்பரில் போட்டிருக்காக பாருங்க.\எங்கட வாழை இலைக்கு வந்த பவீசை பாருங்களன்.
அவுக சொல்லிட்டால் இனி அதுக்கு அப்பில் இருக்கோ?



எல்லோரும் இனி வாழை இலையில் சோத்து பார்சல் கட்ட ஆரம்பிங்க.

கால் வலிக்க வலிக்க கஷ்டப்பட்டு உட்கார்ந்து தட்டச்சிட்டிருக்கேன். படிச்சு போட்டு லைக்கோட போகாமல் உங்கட அனுபவத்தையும் எழுதி போனால் நாலு பேருக்கு பயன் படுமுங்க...✍️