30 டிசம்பர் 2023

மன்னாரில் தேக்கம் அணைக்கட்டும் நீர்விழ்ச்சியும்..!

Ancient Thekkama Amuna (Anicut)

இலங்கையின் பண்டைய தலைசிறந்த நீர்ப்பாசன முறைக்கு சான்றாக இலங்கையின் இரண்டாவது பெரிய நீர்த்தேக்கம் மன்னார் மாவட்டத்தில் உள்ள மடு பிரதேச செயலாளர் பிரிவில் பறையனாயனங்குளம் என்ற கிராமத்திற்கு தென்மேற்கே அமைந்துள்ளது.

அருவிஆறு ( மல்வத்து ஓயா )




தேக்கம் அணைக்கட்டு அநுராதபுரத்திற்கு தெற்கே உற்பத்தியாகி மன்னாரில் கடலுடன் கலக்கும் (இதன் இன்னொரு கிளையாறு மன்னாரில் அரிப்பு என்ற இடத்தில் கடலுடன் கலக்கிறது) 164 கி. மீ நீளமான அருவியாற்றின் குறுக்கே கட்டப்பட்டதாகும். அருவி ஆற்றின் நீரை இரண்டு கிளை நதிகளாக திசை திருப்புவதற்காக நீரின் வேகத்தை குறைக்கும் நோக்கில் இவ் அணைக்கட்டு அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அருவி ஆற்றை இரண்டு கிளைகளாக பிரித்து வலது பக்கம் கட்டுக்கரைக் குளத்திற்கும் இடது பக்கம் அகத்தி முறிப்புக்குளத்திற்கும் நீரை திசை திருப்பி நீரின் வேகத்தை குறைத்து இவ் அணைக்கட்டை பலப்படுத்தி உள்ளனர்.  

அருவிஆறு நீளத்தில் இலங்கையில் இரண்டாவது இடத்திலும், நீரோட்டத்தில் 12 இடத்தையும், மன்னாருக்கான நீர் விநியோகத்தில் 85 வீதமான பங்கையும் கொண்டுள்ளது. இவ்வருவியாறே வன்னியில் முகத்தான்குளம், மடுக்குளம், இராட்சதகுளம், பாலாவி மற்றும் கட்டுக்கரைக் குளம் போன்றவற்றிற்கு நீர் வழங்கும் பிரதான அருவியாகக் காணப்படுகிறது.

அருவியாற்றின் குறுக்கே பறையனாளன் குளத்தில் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டு ஏறத்தாழ 200 மீற்றர் நீளமும், 7மீற்றர் அகலமும், 15 மீற்றர் உயரமும் கொண்டு அதுவே அருவியாற்றின் மறுகரையைக் கடந்து செல்ல உதவும் பாதையாகவும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வணைக்கட்டிற்கு மேற்காக குளத்தின் மேலதிக நீரை வெளியேற்றும் சற்சதுரவடிவிலான மூன்று கலிங்குகள் காணப்படுகின்றன.






தேக்கம் அணைக்கட்டு நீர்வளம் கொண்ட அருவியாற்றை மறித்துக் கட்டப்பட்டமையால் வருடத்தில் கோடை காலத்தில் ஒருசில மாதங்களை தவிர, ஏனைய பெரும்பாலான காலங்களில் அணைக்கட்டிற்கு தெற்கு பக்கமாக வேகமாக நீர் வீழ்ந்து கொண்டே இருக்கும். அவ்வாறு இங்கு நீர் வீழ்கின்ற காட்சி மலைநாட்டில் மலைகளிலிருந்து ஊற்றெடுத்துப் பாயும் நீர்வீழ்ச்சிகள் போல இரைச்சலுடனே காணப்படுகின்றது. இவ் அழகான நீர்வீழ்ச்சி வடஇலங்கையில் இங்கே தான் சிறப்பானதாக காணப்படுகின்றது. ஆனால் இவ் நீர்வீழ்ச்சி இங்கு உண்டு என்பதை பலரும் அறிந்திருக்கவில்லை. இப்பகுதிகளில் மக்கள் காணப்படாத அடர்ந்த காட்டுப்பகுதியாகவே காணப்படுகின்றது.

இத்தேக்கம் பிரதேசத்தை அண்மித்து பிச்சம்பிட்டி, மங்கலம்பிட்டி, நரிஇழைச்சான், பன்னவட்டுவான், உப்பன், நவிந்தமடு, கள்ளிக்குளம், பெரியமுறிப்பு, குஞ்சுக்குளம் ஆகிய கிராமங்கள் காணப்பட்டன. ஆனால் இன்று குஞ்சுக்குளம் பெரியமுறிப்பு போன்ற கிராமங்களைத் தவிர ஏனைய கிராமங்கள் இன்று மக்கள் குடியிருப்புக்கள் அற்ற காட்டுப்பிரதேசமாகவே காணப்படுகின்றன. இக்கிராமங்களில் வாழுகின்ற மக்களின் பொருளாதாரமானது விவசாய நடவடிக்கைகளிலும், வேட்டையாடல் மற்றும் தேன் சேகரித்தல் போன்றவற்றில் தங்கியுள்ளது. இங்கு மான், மரை, பன்றி மற்றும் பெரிய பறவை இனங்கள் காணப்படுகின்றன.

இவ்வணைக்கட்டுடன் இணைந்த சிறிய பாறைகளுக்கு இடையே விழும் நீர் பட்டு தெறிப்படைந்து நடுவில் தீவு போல காட்சியளிக்கும் மணற்திட்டுக்களை சுற்றி இரண்டும் பக்கமும் ஓடும் நீரோட்டங்களும் அவற்றின் மத்தியில் காணப்படும் அழகான உயர்ந்த மரங்களும நீருற்றுக்குள் ஒன்று சேர்ந்து ஆறாக ஓடும். பாதையின் இரு மருங்கிலும் நீண்டு செல்லும் உயர்ந்த மணல் மேடுகளும் அருவியாற்றின் இரு மருங்கிலும் உள்ள பரிமரங்களுக்கு மத்தியில் உள்ள அழகான குழிகளும் பார்ப்போருக்கு அழகான இயற்கைக் காட்சிகளாகவே காணப்படுகின்றன.


வன்னியின் இயற்கை அமைப்பு,கனிமங்கள், காட்டுவளங்கள், இயற்கையாக ஊற்றெடுத்துப்பாயும் அருவிகள், வரலாற்றுப்பழமை வாய்ந்த குளங்கள், கால்வாய்கள், கலிங்குகள், அணைக்கட்டுகள், தொங்குபாலங்கள் என்பன அதற்குள் அடங்குகின்றன. அருவியாற்றைக் கடந்து வேட்டையாடச் செல்வோருக்கும், பொழுதைக் கழிக்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இங்கு காணப்படும் அழகான தொங்குபாலமும், தேக்கம் அணைக்கட்டுமே காட்டினுள் காணப்படும் ஒற்றையடிப் பாதையுமே பிரதான நடைபாதையாகக் காணப்படுகின்றது.

சமகாலத்தில் இலங்கையின் தேசிய வருமானத்தை ஈட்டித்தரும் துறைகளில் ஒன்றாக சுற்றுலாத்துறை காணப்படுகிறது. அவற்றுள் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைப்பெரிதும் கவரும் இயற்கை மரபுரிமை அம்சங்கள் நிறைந்த சிறப்புக்குரிய ஒரு இட மாகவும் தேக்கம் அணைக்கட்டு காணப்படுகின்றது. இவ்வாறு பல சிறப்பம்சங்களைக் கொண்டு காணப்படும் தேக்கம் அணைக்கட்டானது எமது அரும் பொக்கிசம் என்றே கூறலாம்.

பயண வழி
மதவாச்சி - தலைமன்னார் நெடுஞ்சாலையில் பறையனாயங்குளச் சந்தி அல்லது ஆலங்குளம் சந்தியிலிருந்து மதவாச்சி நோக்கச்செல்லும் பிரதான வீதியின் குறிப்பிட்ட தூரத்திலிருந்து வலது பக்கமாகவுள்ள கிறவல் பாதையூடாக பயணம்செய்து, பின் தேக்கம் அணைக்கட்டின் மூலம் திசைதிருப்பப்பட்ட அருவியாற்றிற்கு மேலாக கம்பியினால் தொடுக்கப்பட்ட தொங்கு பாலத்தில் பயணித்து எதிர்ப்படும் கிறவல் பாதையினூடாக சுமார் 100m வரையில் நடந்துசென்றால் இவ்வணைக்கு சென்று விடலாம். மேலும் தேக்கம் அணைக்கட்டின் மேலதிக நீர் வெளியேறும் ஆற்றுப்படுக்கையை அடைவதற்கு அங்கு காணப்படும் அதர் வழியாக நடந்துசெல்ல வேண்டும்.

நன்றி :
பொ.வருண்ராஜ் & பரமு புஷ்பரட்ணம் வலைப்பூவில் இருந்து தகவல்கள் இணையத்தில் தமிழில் கிடைத்த தரவுகளில் இருந்து தொகுத்து இருக்கின்றேன்.
- நிஷாந்தி ( ஆல்ப்ஸ் தென்றல் நிஷா )

தேக்கம் அணைக்கட்டு விரிவான தொல்லியல் வரலாற்றை முழுமையாக அறிய இணைப்பில் பார்க்கவும்

தேக்கம் அணைக்கட்டுப் பகுதியில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள ஆதாரங்கள் இவ்விடம் சுற்றுலாவுக்குரிய இடமாக மாற்றப்படவேண்டும் என்பதைக் கோடிட்டுக் காட்டுவதாக உள்ளன. இன்று தென்னிலங்கையிலுள்ள பிரதேசசபைகள் தமது நிர்வாக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மரபுரிமைச் சின்னங்களை கண்டறிந்து, ஆராய்ந்து, ஆவணப்படுத்தி அவற்றைச் சுற்றுலா மையங்களாக மாற்றியமைப்பதற்கான வாய்ப்பு, வசதிகளை ஏற்படுத்தி வருகின்றன. இவற்றின் மூலம் நாட்டினதும், குறிப்பிட்ட பிரதேசத்தினதும் தேசிய மரபுரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன், பெருமளவு வருமானத்தையும் பிரதேச சபைகள் பெற்று வருகின்றன.

ஒரு வரலாற்றுப் பெறுமதியுடைய மரபுரிமைக்கு கிடைக்கும் மதிப்பு என்பது அவற்றைப் பாதுகாக்கும் முறையிலும், அவற்றைப் பார்வையிடப் போடப்பட்டிருக்கும் நிர்வாகக் கட்டுப்பாடுகளிலும் தங்கியுள்ளது. இதன் மூலம் சாதாரண மக்களிடையே தமது மரபுரிமைகளைப் பாதுகாக்கும் விழிப்புணர்வு ஏற்படுகிறது. அப்பணிகளை தென்னிலங்கையிலுள்ள பல பிரதேசசபைகள் சிறப்பாகச் செய்து வருகின்றன.

வடஇலங்கையில் இப்பணிகளைச் செய்யக்கூடிய சூழ்நிலைகள் கடந்த பல ஆண்டுகளாக இருக்கவில்லை என்பதை மறுக்கமுடியாது. அவ்வாறான தடைகள் தற்போது இருப்பதாக தெரியவில்லை. தேக்கம் அணைக்கட்டுப் பகுதியை உள்ளடக்கிய பிரதேசசபை அரச நிர்வாகத்தினும், தொல்லியற் திணைக்களத்தினது உரிய அனுமதியுடன் இப்பணியைச் சிறப்பாகச் செய்து முடிக்கலாம். அவ்வாறு செய்வதன் மூலம் பிரதேசசபை பெருமளவு வருமானத்தை சுற்றுலா மூலம் பெற்றுக் கொள்வதுடன், தமது பிரதேசத்தின் மரபுரிமையைப் பாதுகாத்துக் கொள்ளவும் முடியும்.
- பரமு புஷ்பரட்ணம்



Photos ;geogle

28 டிசம்பர் 2023

மன்னார் தொங்கு பாலம்-குஞ்சுக்குளம்

Kunchikulam Suspension Bridge

மன்னார் தொங்கு பாலம் பல வருட வரலாற்றினைக் கொண்டுள்ளது. இது மன்னாரில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகும்.

மன்னாரில் 1935 ஆம் ஆண்டு மல்வத்துஓயாவின் (ஓயா என்றால் சிங்களத்தில் நீரோடை). குறுக்கே கட்டப்பட்ட 100 மீட்டர் நீளமும் 1.2 மீட்டர் அகலத்துடன் இரும்புத் தாள்கள் கொண்ட தொங்கு பாலம் இரண்டு வலுவான கேபிள்களால். பிடிக்கப்பட்டுள்ளது.

குஞ்சிக்குளம் தொங்கு பாலம் இலங்கையின் வடக்குப் பகுதியில் குஞ்சிக்குளத்தில் மேடவாச்சி-தலைமன்னார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது"குஞ்சுக்குளம் தொங்கு பாலம்", குஞ்சிக்குளம் தொங்கு பாலம் அல்லது "குஞ்சிகுளம் எல்லென பலமா" அல்லது "குஞ்சிகுளம் சங்கிலி பலமா" என்றும் அழைக்கப்படும்.

உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, கடுமையான மழைக்கால வெள்ளத்தின் போது. பல மீட்டர் தொலைவில் வாகனம் செல்லக்கூடிய தரைப்பாலம் இருந்தாலும், அது தொங்கு பாலத்தை விட தாழ்வான மட்டத்தில் அமைந்து மழைக்காலத்தில் வெள்ளத்தில் மூழ்கும் காலத்தில் பாதசாரிகள் காட்டுப் பாதையின் நடுவில் ஓடையைக் கடப்பதற்கான ஒரே வழி பழைய தொங்கும் பாலமாகும்.

குஞ்சிகுளம் தொங்கு பாலத்திற்கு மன்னாரிலிருந்து மதவாச்சி-தலைமன்னார் நெடுஞ்சாலையில் சுமார் 42 கிலோமீட்டர் பயணித்து குஞ்சிக்குளத்தில் அமைந்துள்ள தொங்கு பாலத்தை அடையலாம்

மதவாச்சியிலிருந்து வரும்போது மடு தேவாலயத்திற்கு செல்லும் பாதையில் இருந்து 1.5 கிலோமீற்றர் முன்னதாக மதவாச்சி யிலிருந்து இடதுபுறம் செல்லும் பாதையில் இந்த சுற்றுலாத்தலத்தை அடையலாம். இந்த சாலைக்கு சற்று முன்பு தொங்கு பாலத்திற்கு செல்லும் வழியுடன் சிறிய விளம்பர பலகை உள்ளது. இந்த சாலையில் 800 மீட்டர் பயணித்தால், Yoda Wewa கால்வாய் மீது கட்டப்பட்ட பழைய,பயன்படுத்தப்படாத எஃகு வளைவுப் பாலத்தைக் காணலாம். Yoda Wewa என்பது ததுசேன மன்னரால் (459-477) மல்வத்து ஓயாவில் இருந்து Yoda Wewa வுக்கு தண்ணீரைத் திருப்பி கட்டப்பட்ட 13 கிமீ நீளமுள்ள கால்வாய் ஆகும்.






2013 ஆம் ஆண்டில், யோதா எலா மீது புதிய ஆறு-அளவிலான கான்கிரீட் வளைவுப் பாலம் கட்டப்பட்டது. இங்கிருந்து ஐந்து வளைவு நதிக் கட்டுப்பாட்டு கிரினிட் பாலத்தைக் கடந்து சென்றவுடன் ஆற்றுக் கட்டுப்பாட்டுப் பாலம் மற்றும் எஃகு ஆர்ச் பாலம் செங்கோணத்தில் தெரியும். பின்னர் மல்வத்து ஓயாவிற்கு மீண்டும் உபரி நீரை வெளியேற்றும் ஓடையின் மீது ஒரு சிறிய அணை ( Sapaththu Palama )ஒன்றைக் காணலாம். இந்தப் பாலத்தின் மீது மேலும் 600 மீட்டர் சென்ற பிறகு நீங்கள் தொங்கு பாலத்தை அடைவீர்கள்.

தொங்கு பாலத்திற்கு கீழே, மல்வத்து ஓயாவின் மேல் புதிய கொங்கிரீட் பாலமும், Sapaththu Palama பாலமும் நிர்மாணிக்கப்பட்டது. பாலத்தின் தளம் குட்டையான மரக் கற்றைகளில் இரும்புத் தகடுகளால் அமைக்கப்பட்டுள்ளது. மற்றும் சில மரப் பலகைகள் சிதைந்துவிட்டதாகத் தெரிகிறது மற்றும் சில இடங்களில், இந்த பலகைகள் ஆற்றை நோக்கி சாய்ந்துள்ளன. எனவே, மழைக்காலத்தில் கிராம மக்கள் பாலத்தின் குறுக்கே நடந்து சென்றாலும், பாலத்தின் குறுக்கே நடப்பது ஆபத்தானது என்கின்றார்கள்.




🔴இந்த பாலம் குறித்து உள் நாட்டில் பெரும்பான்மை மக்களுக்கு தெரியாதது. ஆனால் வெளிநாட்டு சுற்றுலா துறையினருக்கும் இதன் முக்கியத்துவம் தெரிந்து இருக்கின்றது பிரதேச சுற்றுலா துறை இந்த பாலத்தினை திருத்தி சுற்றுலா மூலம் வருவாய் பெருக்க தடையாக இருப்பது என்ன?

*
குஞ்சிக்குளம் :
குஞ்சிக்குளம் மன்னார் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கிராமமாகும். வில்பத்து வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு பகுதியான அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் இந்தப் பாலம் அமைந்துள்ளது. மழைக்காலத்தில், பாலத்தின் மேல் தண்ணீர் பாய்கிறது, இது மிகவும் அழகாக காட்சியளிக்கிறது.

பெரும்பான்மையினருக்கு தெரியாத, குஞ்சிக்குளம் ஒரு கண்கவர் இடம். பகல் நேரத்தில், குஞ்சிகுளத்தின் தெருக்கள் பள்ளிக்குச் செல்வது, தண்ணீர் சேகரிப்பது, பக்கத்து வீட்டுக்காரர்களைப் பார்ப்பது மற்றும் ஆடு மேய்ப்பது போன்ற உள்ளூர் மக்களால் நிரம்பி வழிகின்றன. இரவில், தெருக்கள் காட்டு யானைகளால் ஆக்கிரமிக்கப்படுகின்றன, யானைககள் வாழை பழம் விளாம்பழங்களை தேடுகின்றன.

மன்னார் குஞ்சிக்குளம் பகுதியின் ஆகாய தோற்றம். (படங்களில் )




குஞ்சிக்குளம் தொங்கு பாலத்துக்கு அருகிலுள்ள சுற்றுலாவுக்குரிய பிற இடங்கள் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்ட நேர்கோட்டு தூரத்தின்படி வரிசைப்படுத்துகிறது amazinglanka .

1.குஞ்சிக்குளம் தொங்கு பாலம்
Kunchikulam Suspension Bridge [ 0 கிமீ ]

2.குஞ்சிக்குளம் ஸ்டீல் ஆர்ச் பாலம்
Kunchikulama Steel Arch Bridge [ 0.6 km ]

3.அகிதமுறிப்பு இடிபாடுகள் (தேக்கம்) பத்தினி
தேவாலயம் Akithamurippu Ruins (Thekkama) Paththini Devalaya [ 0.6 km ]

4.பண்டைய தேக்கமா அமுனா
Ancient Thekkama Amuna [ 2.25 km ]

5. மடு தேவாலயம்
Madhu Church [ 12.29 km ]

6.முருங்கன் ராஜமஹா விகாரையின் இடிபாடுகள்
Ruins of Murungan Rajamaha Viharaya [15.25 km]

7.கொங்ராம்குளம் இடிபாடுகள்
[Kongramkulam Ruins [ 19.8 km ]

8.யோடா வெவா (ராட்சத தொட்டி)
Yoda Wewa (Giant Tank) [ 19.86 km ]

9.பாலம்பிட்டி முத்துமாரி கோவில் பௌத்த இடிபாடுகள்
Palampiddi Mutthhumari Kovil Buddhist Ruins [ 20.48 km ]

10.பாலம்பிட்டி பிள்ளையார் கோவில் பௌத்த இடிபாடுகள்
Palampiddi Pillayar Kovil Buddhist Ruins [ 20.66 km ]

11.ரங்கேத்கம ராஜமஹா விகாரை தொல்பொருள் தளம்
Rankethgama Rajamaha Viharaya Archaeological Site [ 22.09 km ]

12.தந்திரிமலே ராஜமஹா விகாரை
Thanthirimale Rajamaha Viharaya [ 22.17 km ]

13.மௌலுக்வேவா தொல்பொருள் தளம்
Mahaulukwewa Archaeological Site [ 24.84 km ]

14.டோரிக் டவர்
The Doric Tower [ 25.36 km ]

15.டோரியன்
The Dorian [ 25.43 km ]

16.பரதநாக லேனா குகைக் கோயில்
Barathanaga Lena Cave Temple [ 25.64 km ]

17.காலாறு சர்வே டவர்
Kalaru Survey Tower [ 26.05 km ]

18.அரிப்பு கோட்டை [ 26.15 கிமீ ]
Arippu Fort [ 26.15 km ]

19.பேமதுவ ராஜமஹா விகாரை
[Pemaduwa Rajamaha Viharaya [ 28.47 km ]

20.பாவக்குளம நீர்த்தேக்கம்
Pavakkulama Reservoir [ 29.06 km ]

21.பண்டைய புத்த கோவில் மாந்தோட்டா
Ancient Buddhist Temple Manthota [ 31.18 km ]

22.பாலாவி தொட்டி
Palavi Tank [ 31.33 km ]

23.திருக்கேதீஸ்வரம் சர்வே டவர்
Thiruketheeswaram Survey Tower [ 31.61 km ]

24.வாங்கலை சரணாலயம்
Vankalai Sanctuary [ 31.77 km ]

25.திருக்கேதீஸ்வரம் கோவில்
Thiruketheeswaram Kovil [ 31.9 km ]

26.விடத்தல்தீவு மடம் (அம்பலம்)
Vidataltivu Madam (Ambalama) [ 31.97 km ]

27.நவோதகமா தொல்பொருள் காப்பகம்
Navodagama Archaeological Reserve [ 32.91 km ]

28.மன்னாரில் பாயோபாப் மரம்
Baobab tree in Mannar [ 36.8 km ]

29.மன்னார் கோட்டை
Mannar Fort [ 36.86 km ]

30.குவேனி அரண்மனை
Kuweni Palace [ 38.68 km ]

31.துலாவெல்லிய கல் பலமா இடிபாடுகள் (கல் பாலம்)
Thulawelliya Gal Palama Ruins (Stone Bridge) [ 39.05 km ]

அடுத்த பதிவுகளில் இவற்றின் விபரங்கள் காண்போம்


*

இலங்கையின் சொர்க்கம் எனும் தலைப்பில் நாட்டின் வரலாற்று தொன்மை இயற்கை வளங்கள் குறித்த தொடர் பதிவு பலருக்கும் தனது பிரதேசங்கள் குறித்த தேடலை உருவாக்கி இருக்கின்றது. பலரும் பல புதிய தகவல்களை Inbox ல் தருகின்றார்கள். தனது பிரதேசங்களில் இன்னமும் சிறப்பான இடங்கள் உண்டென குறிப்பிட்டு அதையும் சேர்க்க சொல்கின்றார்கள்.

நிச்சயம் சேர்ப்போம்…!

வட கிழக்கில் சுற்றுலா ஏற்பாடு செய்யும் சிலர் தொடர்பு கொண்டு என் வலைப்பூ விபரம் கேட்டார்கள். பதிவுகள் முழுமை படுத்தியதும் இணைப்பு தருகின்றேன்.

அதே நேரம் பலருக்கும்
மிகைப்படுத்தல்
நம்ப முடியல்ல
புளுகுறாங்க என்று தோன்றுகின்றது.

வடக்கு கிழக்கில் இருக்கும் வரலாற்று சிறப்பும் இயற்கை அழகும் சிங்கள அரசுக்கும் வெளிநாட்டு மக்களுக்கும் முக்கியத்துவமும் பெற்றிருக்க எம்மக்களுக்கு அதன் அருமை பெருமை புரியாமல் போவது ஏன்? நம்மை நாம் மட்டம் தட்டுவது ஏன்? எங்களை நாங்களே குறைத்து மதிப்பிடுவது எமது சமூகத்தின் தொடர் வீழ்ச்சிக்கு அடித்தளமாகின்றது.

நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட இலங்கையின் ஒவ்வொரு இடமும் ஒரு வரலாற்றைப் பேசும் விதமாகத்தான் அமைந்துள்ளது. நாட்டின் எந்த மூலைக்குச் சென்றாலும் வரலாற்றுக் கதை ஒன்றை நாம் கேட்டுவிடலாம். அதுவும் அந்த இடத்திற்கே உரித்தானதாகவும் இருக்கும்.

மன்னாரின் வரலாற்று தொன்மை மற்றும் இயற்கை வளங்கள் அதன் சிறப்புக்கள் குறித்த தேடலில் தமிழ் மொழியில் கிடைக்காத அரிய தகவல்கள் ஆங்கிலம் மற்றும் ஜேர்மன் மொழிகளில் கிடைக்கின்றது. குறிப்பாக வடக்கு கிழக்கின் வரலாற்று தொன்மையும் இயற்கை முக்கியத்துவமும் பெரும்பாலோனோருக்கு புரியப்படவே இல்லை.

🟢 இலங்கை நாட்டின் பிரதான பொருளாதாரம் அந்நியச்செலாவணி சுற்றுலா துறையில் சார்ந்திருக்கின்றது. நாட்டுக்குள் சுற்றுலா துறையை மேம்படுத்தும் போது தொழில் வாய்ப்புகள் பெருகும். நாட்டு மக்களுக்கான வருமானம் அதிகரித்து சிறக்கும்.

எமது நிலங்களின் வளங்களின் பாதுகாப்பும் அதன் முக்கியத்துவமும் உணரப்படவில்லை என்றால் நாம் கற்ற கல்வியியம் பயனின்றி போகும். வருமானம் இல்லாமல் போனால் நாட்டின் கடன் பெருகும். எத்துணை கல்வி கற்றாலும் தொழில் வாய்ப்பு பெருகவில்லை என்றால் அது நாட்டுக்கு வீட்டுக்கும் பயன்படாமல் கற்றோர் எல்லாம் நாட்டை விட்டு வெளியேறுவர்.

🟢 கடந்த கால போரின் வடுக்களை பேசியே காலம் கரைகின்றது. நம் நிலங்கள் நமது கைவிட்டு செல்கின்றது. இதை தவிர்க்க பிரதேசங்கள் வாரியாக சுற்றுலா துறையை வளப்படுத்தி உள்ளூர் மக்களுக்கு இளையோருக்கு வேலை வாய்ப்பை பெருக்கும் வழிகளை தேடுவோம்





26 டிசம்பர் 2023

இலங்கையில் காட்டு குதிரைகளின் தாயகம் Delft Island எனும் நெடுந்தீவு

வாழ்நாளில் ஒரு முறையாவது பார்வையிட வேண்டிய இடம். யாழ்ப்பாண மாவட்டத்தின் மிகப்பெரிய மற்றும் அழகிய தீவு.


இலங்கையில் காட்டு குதிரைகளின் தாயகம்
Delft Island நெடுந்தீவு

நெடுந்தீவில் காணப்படும் பாரம்பரிய கலாச்சார மையங்கள் சுற்றுலாப் பயணிகளை கவருவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் இப் பாரம்பரிய மையங்கள் ஒவ்வொன்றின் சிறப்புகளையும் அவற்றின் முக்கியத்துவம் மற்றும் பெருமைகளை பார்ப்போம்.

வரலாற்றுச் சின்னங்களும், அடையாளங்களும்
1.வெடியரசன் கோட்டை
2.பெரியதுறை
3.மாவிலித்துறைமுகம்
4.போர்த்துக்கீசர் கோட்டை
5.ஒல்லாந்தர் கோட்டை
6.குதிரைகள்
7.குதிரை லாயங்கள்
8.குவின்ஸ் டவர்
9.பூதம் வெட்டிய கிணறுகள்
10.40 அடி மனிதனின் காலடி
11.பழமை வாய்ந்த ஆலமரம்
12.அரசனை அரசு
13.பெருக்கு மரம்
14.மணல் கடற்கரை
15.வெள்ளைக் கடற்கரை
16.புறாக்கூடு
17.கல்வேலி
18.வளரும் கல்

வடமாகாணத்தின் ஓர் சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்கும் 'நெடுந்தீவு' இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தென்மேற்கில் அமைந்துள்ள லைடன் தீவு,புங்குடு தீவு,நைனா தீவு,காரை நகர், நெடுந்தீவு, அனலதீவு,எழுவைதீவு சப்ததீவுகளிலே ஒன்றாக விளங்குகின்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து தீவை அடைய பயணிகள் படகு சேவை அல்லது ஒரு சிறிய விமானத்தை எடுத்துக்கொண்டு செல்லலாம். பயணிகள் படகு அட்டவணையின்படி பயணகால அட்டவணையை திட்டமிட வேண்டும், 'நெடுந்தராகி' மற்றும் 'வடதராகி' என்ற இரண்டு பெரிய படகுகள் உட்பட, 'குரிகாட்டுவான் முதல் நெடுந்தீவு வரை சுமார் ஐந்து படகு பயணங்கள் உள்ளன. குறிகட்டுவான் ஜெட்டியில் இருந்து புறப்பட்டு தீவு நோக்கிய பயணம் தோராயமாக ஒரு மணிநேரம் ஆகும்.கடல் நிலைமைகள் மாறுபடுவதால் தீவுக்கான பயணம் கடினமாக இருக்கும். இருப்பினும், நெடுந்தீவுக்கு அருகாமையில் அமைந்துள்ள பல தீவுகளைக் காணலாம். மற்றும் சில வேளைகளில் கடல்வாழ்உயிரினங்கள் டால்பின்கள் அல்லது கடல் ஆமைகள் படகுடன் சேர்ந்து நீந்தி வரும்.

நெடுந்தீவில் மட்டுப்படுத்தப்பட்ட சிறிய சாப்பாட்டு கடைகள் உள்ளன தீவை முழுவதுமாக சுற்றிப்பார்க்க போதுமான உணவையும் குடிபானங்களையும் எடுத்துச் செல்வது நல்லது. தீவு சற்றே தொலைதூர பகுதி என்றாலும், பல இடங்களைப் பார்வையிடலாம். தீவை சுற்றிப்பார்க்க பல்வேறு போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து கொள்ளும் வசதி இருக்கின்றது. நடந்தே தீவை சுற்றிப் பார்க்கலாம் அல்லது ஒரு முச்சக்கர வண்டியை வாடகைக்கு எடுக்கலாம் அல்லது குழுவாக பயணிக்க சிறிய லாரியைத் தேர்வு செய்யலாம்.

நெடுந்தீவு நீருக்கடியில் டைவிங் ஆர்வலர்களுக்கு சிறந்த திறனைக் கொண்டுள்ளது. இது படிக-தெளிவான நீர் மற்றும் ஏராளமான கடல் பல்லுயிர், துடிப்பான பவளப்பாறைகளை ஆராய்வதற்கும் பல வண்ணமயமான மீன் இனங்களை சந்திப்பதற்கும் சிறந்த இடமாக அமைகிறது. இந்த நீருக்கடியில் உள்ள சொர்க்கத்தை ஆராய்வதில் அதிகரித்து வரும் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையில் டைவிங் வசதிகள் மற்றும் சுற்றுப்பயணங்கள் படிப்படியாக உருவாக்கப்பட்டு வருகின்றன.

தீவு வளர்ச்சியடையாதது. இங்கு ஆலங்கேணி, பெரியான்துறை, மாலவி துறை, பூமுனை, சாமி தோட்டம், வெல்லை, குந்துவாடி, தீர்த்தகரை ஆகிய ஊர்கள் உண்டு. மக்களின் வாழ்க்கை முறை விவசாயம் மற்றும் மீன்பிடித்தல் போன்ற தீவின் வளங்களைச் சுற்றியே உள்ளது. இன்று இங்கு பொருளாதார வசதிகள் அருகிய தமிழ் மீனவ சமூகத்தைச் சார்ந்த 3000 இருந்து 4,500 மக்கள் கடும் சிக்கல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கு கல்வி, மருத்துவம் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் கூட கிடைப்பதில்லை. நெடுந்தீவு தீவில் மீன்பிடி கிராம பாரம்பரியத்தினை காணலாம் பாரம்பரிய மீன்பிடி படகுகள் கரையோரத்தில் உள்ளன,

இந்த தீவு அதன் அழகிய கடற்கரைகளுக்கும், பரந்த திறந்தவெளிகளுடன் பசுமையான பனை தோப்புகளுக்கும் பெயர் பெற்றது. தீவு முழுவதும் சுண்ணாம்பு அடுக்குகள் நிறைந்துள்ளது. தீவில வேலி கட்டப்பட்ட சுவர்கள் இல்லை மற்றும் ஒவ்வொரு பக்கத்திலும் சுண்ணாம்பு சுவர்கள் உள்ளன. ஒரு காலத்தில் புலம்பெயர்ந்த பறவைகளின் புகலிடமாக இருந்த இந்த தீவு பறவைகளின் சொர்க்கமாக இருந்தது.







நெடுந்தீவின் அடித்தளப் பாறையும் மற்றத் தீவுகளை விட அகலமானதும் விரிந்து கிடப்பதுமாகும். நாற்புறமும் இறவட்டம் எனப்படும் கரைப்பகுதியே 500 மீற்றருக்குக் குறையாத தூரத்தைக் கொண்டது. கடல்நீர் வற்றும் போது இதைப் பார்க்கலாம். இறவட்டத்தில் பாரிய இயற்கை கற்கள் நாற்புறக் கடலிலும் நட்டுக் கொண்டும், பரவலாகவும் நிறைந்து அலைகளை எதிர்கொள்கின்றன.

நெடுந்தீவின் தரைத்தோற்றமானது தென் பகுதி உயரமான மேட்டு பிரதேசமாகவும் மத்திய பகுதி தாழ்ந்த பகுதியாகவும் காணப்படுகின்றது. மண்வளமானது பாறைத் தன்மைகளுக்கு ஏற்ப அமைந்துள்ளதை காணலாம். நெடுந்தீவின் மேற்கே சிறப்பான கருமையான இருவாட்டி மண் காணப்படுகின்றது. நன்நீரும் மண் வளமும் தோட்டப் பயிர்ச்செய்கைக்கு ஏற்றதாக உள்ளது. மற்றும் மண் தன்மையும் சுவாத்தியமும் பனை வளர்ச்சிக்கும் விருத்திக்கும் வாய்ப்பாக இருக்கின்றது.

நெடுந்தீவுப் பிரதேசத்தின் இயற்கைத் தாவரங்களாக பூவரசு ,வேம்பு, ஆல், அரசு,கித்தி,புளி,நொச்சி போன்ற மரங்களும் பனையும் தென்னையும் அதிகமாக காணப்படுகின்றன. செடி கொடிகளாக பிரண்டை, குறிஞ்சா,காரை, ஆரை, தூதுவளை,காட்டுக்கருணை போன்றனவும் மருத்துவ மரங்களாக மாதுளை,எலுமிச்சை,வில்வை,விளாத்தி,சண்பு, புளி, வேம்பு,வாகை முதலியன அதிகளவில் இங்கு காணப்படுகின்றன.


வரலாற்று தொன்மை

நெடுந்தீவின் வளங்கள் வரலாற்றுப் பெறுமதி மிக்கவை. நெல் சிறுதானிய பயிர்களும் கோதுமை வயல்களுடன் சணல், பெருக்கு, பாலை, பனை, தென்னை, மூலிகைச் செடி கொடிகளுடன் கடலும் கடல் சார்த்த இடமுமான இந்த நெய்தல் நிலத்தில் பாலும் மோரும் பாய்ந்தோடிய வரலாறுகள் பல. மருந்து மாமலை வனம் என இத்தீவினை போற்றி பெருமிதம் கொண்டார் மன்னன் செகராசசேகரன்

யாழ்ப்பாணத்திலிருந்து மற்றெல்லாத் தீவுகளிலும் கூடிய தொலைவில் அமைந்திருக்கும் தீவு இதுவே. யாழ்ப்பாணத்திலிருந்து இதன் தூரம் 45 கிலோமீட்டர் ஆகும். ஆனால் இந்தியாவின் இராமேஸ்வரக் கரையிலிருந்து இதன் தூரம் 38 கிலோமீட்டர் மட்டுமே. புங்குடுதீவில் இருந்து 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. நெடுந்தீவு வடக்குத் தெற்காக 6 கிலோமீட்டர் அகலத்தையும், கிழக்கு மேற்காக 8 கிலோமீட்டர் நீளத்தையும் கொண்ட ஒரு சரிந்த இணைகர வடிவில் 30 கிமீ சுற்றளவையும், 48 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும் கொண்டுள்ளது.

யாழ்ப்பாணக் குடாநாட்டைப் போலவே 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுப் பாரம்பரியங்களைக் கொண்டுள்ள இத்தீவு பசுத்தீவு, அபிஷேகத் தீவு, மருத்துவ மாவனம், புட்கரம், நெடுந்தீவு, டெல்வ்ற் எனப் பல பெயர்களால் போர்த்துக்கீசர் ஆட்சிக்காலம் வரை அழைக்கப்பட்டு வந்துள்ளமை அறியப்பட்டுள்ளது.ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் எல்லாத் தீவுகளுக்கும், தங்கள் நாட்டில் காணப்பட்ட இடங்களின் பெயர்களைச் சூட்டினார்கள். நெடுந்தீவிற்கும் தங்கள் நாட்டிலுள்ள ஒரு பாற்பண்ணை நகரின் பெயரான டெல்வ்ற் என்ற பெயரைச் சூட்டினார்கள். டெல்வ்ற் என்ற இப் பெயராலேயே இன்றும் இத்தீவு அழைக்கப்பட்டு வருகிறது.

இங்கிருந்து பால், தயிர், இளநீர் ஆகிய அபிஷேகத் திரவியங்கள் தென் இந்தியாவிலுள்ள இராமேஸ்வரர் ஆலயத்திற்கு லிங்கேஸ்வரப் பெருமானின் அபிஷேகத்திற்காகக் கொண்டு செல்லப்பட்டு வந்தமையால், அபிஷேகத் தீவு அழைக்கப்பட்டு வந்தது.இங்கு அனேக நோய் தீர்க்கும் மூலிகைகள் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. இன்றும் இங்கு பொற்சீந்தில், சாறணை, மிசிட்டை, பிரண்டை, வீணாலை போன்ற பல மூலிகைகள் நிறைந்து காணப்படுகின்றன.

நெடுந்தீவு மந்தை வளர்ப்புக்கேற்ற இயற்கை வளம் கொண்டது இங்கு சில மக்கள் பட்டி பட்டியாக ஆடு வளர்ப்பதை ஒரு பிரதான தொழிலாகக் கொண்டிருந்தனர். ஆடுகள் வாங்குவதற்காக வியாபாரிகள், இங்கு காலத்திற்குக் காலம் வருவார்கள். நெடுந்தீவில் பல நூறு வருடங்களுக்கு முன்பிருந்தே மக்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதும், மக்கள் வாழக்கூடிய வசதிகள் இங்கு இருந்தன என்பதும் அங்கு கண்டெடுக்கப்பட்ட 2000 ஆண்டு பழைய கறுப்பு சிவப்பு மட்பாண்ட பாத்திரங்கள், உரோமர் கால நாணயங்கள், கல்லாலான கருவிகள், இடிந்த பண்டைக்கால வீட்டுச் சுவர்கள் என்பவற்றாலும், இங்கு பண்டைக்காலம் முதலாக மக்கள் வாழ்ந்து வந்தமையை அறியக் கூடியதாகவுள்ளது.

1.வெடியரசன் கோட்டை.


2000 ஆண்டு பழமையான பெருங்கற்கால மையம் இதுவாகும் என்பதற்காக ஆதாரமாக அங்கு கண்டெடுக்கப்பட்ட கறுப்பு சிவப்பு மட்பாண்டம் சிறந்த எடுத்துக் காட்டாகும் நெடுந்தீவின் மேற்கே கோட்டைக்காடு என்னும் பகுதியில் அமைந்திருந்தது. இங்கிருந்தே வெடியரசன் என்னும் மன்னன் தனது ஆட்சியைச் செலுத்தினான். இக்கோட்டை சோழர் சோழர் காலக் கட்டிட முறைப்படியே கட்டப்பட்டிருந்தது. இதன் வடிவமைப்பு பல சித்திர வேலைப்பாடுகளைக் கொண்டி ருந்திருக்கலாமென அதன் சிதைந்த பகுதிகளைக் கொண்டு புதை பொருள் ஆராட்சியாளர்கள் கருதுகிறார்கள். இன்று இக் கோட்டை அழிந்த நிலையிலுள்ளது. இக்கோட்டையை அண்மித்துள்ள பகுதிகளில் மட்பாண்ட ஓடுகள், கூரை ஓடுகள், வட்டமான நாணயங்கள், சதுரமான நாணயங்கள் என்பனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

1.பெரியதுறை
பெரியதுறை நெடுந்தீவிலிருந்து மக்கள் பண்டைக் காலத்தில் வேறு இடங்களுக்குப் பிரயாணம் செய்துள்ளார்கள். தென் இந்தியாவிலுள்ள நாகபட்டினம், இராமேஸ்வரம் போன்ற இடங்களுக்கு மக்கள் சென்று பொருட்களைப் பண்டமாற்றுச் செய்து தமக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவது வழக்கமாய் இருந்திருக்கிறது. இங்கிருந்து மக்கள் பாய் வள்ளங்களிலும், வத்தைகளிலும் யாழ்ப்பாணக் கிட்டங்கிக்கும், ஊர்காவற்றுறை, புங்குடுதீவு ஆகிய தீவுகளுக்கும் பிரயாணஞ் செய்தனர். வெளி நாடுகளிலிருந்து போர்த்துக்கீசரும், ஒல்லாந்தரும் பாய்க்கப்பல்கள் மூலம் பொருட்களை இத்துறை மூலமே இறக்கினர்.


இவற்றை விட வேறு கிழக்கே கிழக்குத்துறை, வடக்காக தாளைத்துறை, குடவிலித்துறை, தெற்காக குவிந்தாத்துறை, வெல்லைத்துறை
இருந்திருக்கின்றன. எனினும் பெரிய துறை என்ற பெயரைக் கொண்ட இத்துறையே மன்னராட்சிக் காலங்களிலும் வழக்கிலிருந்திருக்கிறது. ஒல்லாந்தராட்சிக் காலத்தில் எவரும் இத்துறையிலிருந்து இந்தியாவிற்குச் செல்லாதபடி தடை விதிக்கப்பட்டிருந்ததாக அறியக்கிடக்கின்றது. இத் துறைமுகத்தையண்டியே வெடியரசனுக்கும் மீகாமனுக்கும் சண்டை நடந்ததாக வரலாறு கூறுகின்றது. இத்துறை நெடுந்தீவின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ளது.

2.மாவிலித்துறைமுகம்


ஒல்லாந்தர் நெடுந்தீவை ஆட்சி செய்த காலத்தில் இத்துறைமுகம் மூலமாகவே குதிரைகளை இறக்கி ஏற்றினார்கள். இன்று நெடுந்தீவு மக்கள் ஏனைய தீவுகளுக்கும், யாழ்ப்பாணக்குடா நாட்டிற்கும் கடல்மூலம் பிரயாணஞ் செய்யப் பயன்படும் பிரதான துறைமுகமாகவும் விளங்குகின்றது. இது ஏறக்குறைய 300 அடி நீளமும் 75 அடி அகலமும் கொண்டுள்ளதாகக் காணப்படுகிறது. பிரயாணிகள் இறங்கவும், பொருட்களை இறக்கவும் கொங்கிறீற்றினால் துறை ஒன்று உள்ளது. இது கடலினுள் 15 அடி நீளமும், 10 அடி அகலமுமாகக் கட்டப்பட்டுள்ளது..முற்காலத்தில் வத்தைகள் மூலமும், பாய்வள்ளங்கள் மூலமும் பிரயாணம் செய்த மக்கள் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத பிற்பகுதி தொடக்கம் இன்றுவரை இயந்திரப் படகுகள் மூலமும் இயந்திரமிணைக்கப்பட்ட வள்ளங்கள் மூலமும் இத்துறைமுகத்திலிருந்து பிரயாணஞ் செய்கின்றார்கள்.
ormer harbour at Delft's colonial fort and Christian Calvary Cemetery

3.போர்த்துக்கீசர் கோட்டை

போர்த்துக்கீசரும் நெடுந்தீவின் கேந்திர முக்கியத்துவத்தை உணர்ந்து நெடுந்தீவின் மேற்கே பெரியதுறை என்னும் துறைமுகத்திற்கண்மையில் ஒரு கோட்டையைக் கட்டி அங்கிருந்து ஆட்சி செய்தனர். இக்கோட்டை இடிந்த நிலையில் மண்மேடாகக் காட்சியளிக்கிறது. இக்கோட்டை பற்றி பாசெற் என்னும் பாதிரியார், இது ஒரு இரண்டு மாடிக் கட்டிடமாகக் கட்டப்பட்டிருந்தது. இதன் சுவர்கள் மிகவும் அகலமாகவிருந்தன. இரண்டு அறைகளும், கீழே இரண்டு அறைகளுமிருந்தன. இவற்றுக்குக் கீழே ஒரு சுரங்க அறையிருந்தது. அதற்குக் கதவுகள் போடப்படவில்லை. அவ்வறையிலிருந்து மேலறைக்குச் செல்லக்கூடியதாக இரட்டைச் சுவர்ப்படி கட்டப்பட்டிருந்தது. அதற்கு வெளிப்புறமாக நாலு நாலு அடி சதுர யன்னல் அமைக்கப்பட்டிருந்தது. இதன் கூரை தட்டையாகவிருந்தது எனவும் கூறியுள்ளார்....
Portuguese and later on Dutch Fort of Delft

4.ஒல்லாந்தர் கோட்டை
ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இக்கோட்டை நெடுந்தீவின் மத்தியில் தற்போதைய வைத்தியசாலைக் கண்மையில் கடற்கரைப் பக்கமாகக் கட்டப்பட்டிருந்தது. இதனுள் சுரங்க அறை ஒன்றும் காணப்படுகிறது.இதுவும் இன்று அழிந்த நிலையிலேயே உள்ளது. இதன் சுவர்கள் மிக அகலமானவை. இதன் உள்ளும் புறமும் பல உடைந்த ஒல்லாந்தர் பாவித்த பொருட்களும், செப்பு நாணயங்களும் கண்டெடுக்கப்பட்டன. இதன் சுவர்கள் இன்றும் கம்பீரமாகக்காட்சியளிக்கின்றன.



5.குதிரைகள் Ancient Horse Stables


இலங்கையின் இத்தீவில் மட்டுமே காணக்கூடிய காட்டு குதிரைகளையும் குதிரை வண்டிகளையும் காணலாம் இங்குள்ள குதிரைகளும் கோவேறு கழுதைகளும் 1660ம் ஆண்டு முதல் 1675ம் ஆண்டு வரை வடபகுதியின் ஓல்லாந்தர் ஆட்சிக்காலத்தில், அவர்கள் தங்களின் தேவைகளுக்காகவும், வியாபாரத்திற்காகவும் பல நூற்றுக்கணக்கான குதிரைகளை அரேபியா, பேர்சியா, முதலிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தார்கள். இவை யாவும் உயர்ந்த இனத்தைச் சேர்ந்த குதிரைகளாகும். இவற்றுக்காக ஒல்லாந்தர் பல கிணறுகளையும், கேணிகளையும் கட்டியிருந்தார்கள். அத்துடன் பல குதிரை கட்டும் லாயங்களையும் அமைத்திருந்தார்கள். இவையின்றும் சிதைந்த நிலையில் நெடுந்தீவின் மேற்கே காணப்படுகின்றன.இக்குதிரைகள், ஒல்லாந்தர் நாட்டை விட்டுப் போனதும், போதிய பராமரிப்பின்மையாலும், அவற்றைத் தேடுவாரின்மையாலும், அவை சுயேச்சையாகத் தீவின் தெற்கேயுள்ள புல்வெளிகளில் சுதந்திரமாகத் திரிவதைக் காணலாம். இத்தீவிலிருந்து இக்குதிரைகளை வெளியே கொண்டு செல்ல முடியாது என்ற ஒரு சட்டம் நெடுந்தீவில் வழக்கில் உள்ளது

ruins of colonial horse stables on Delft Island
 
6.குதிரை லாயங்கள்


குதிரை லாயங்கள் ஒல்லாந்தர்களால் குதிரைகள் கட்டுவதற்காகக் கட்டப்பட்ட பலதூண்கள் இன்றும் சாறாப்பிட்டிப் பகுதியில் காணப்படுகின்றன. இவை பலநூற்றாண்டுகளாகியும் முற்றாக அழிந்துவிடாமல் இன்றும் நிமிர்ந்த நிலையில காட்சியளிக்கின்றன. இவை குதிரை லாயங்கள் என அழைக்கப்படுகின்றன.

7. குவின்ஸ் டவர்



ஒல்லாந்தரால் கட்டப்பட்ட இந்த மாவிலித் துறைமுகத்திலுள்ள உயரிய முக்கோண வடிவமாகக் கட்டப்பட்ட வெளிச்ச வீடு மூன்று உருளைத் தூண்களை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்துக் கட்டப்பட்டதுபோல் அமைவு பெற்று, அதன் மேல் கூம்பு வடிவமான ஓர் முடியும் காணப்படுகின்றது. நெடுந்தீவை நோக்கி வரும் பெரிய கப்பல்கள் திசைமாறிச் செல்லாதிருக்க இது ஒரு திசைகாட்டிக் கோபுரமாக விளங்கியது. இன்று இக்கோபுரம் அழிந்த நிலையில் உள்ளதைக் காணலாம். மேலும் ஒவ்வொரு வகையான வெளிச்ச வீடுகளும் கப்பல் திசை மாறாது செல்வதற்கு ஒவ்வொரு வகையான ஒளிச்சமிக்ஞைகளைக் கொண்டு இந்த வெளிச்ச வீடு 20 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

8.பூதம் வெட்டிய கிணறுகள்
சாறாப்பிட்டி கோளாங்கற் பாறைகளின் மத்தியில் பொழியப்பட்ட சில நன்னீர்க் கிணறுகள காணப்படுகின்றன. சுமார் முப்பது கிணறுகள் வரை ஒன்றுக்கொன்று மிக அண்மையில் காணப்படுகின்றன.
இவை ஒவ்வொன்றும் சுமார் பத்தடி ஆழமுடையன. சில கிணறுகளை இணைத்துக் கட்டிய வடிகால்களும் நீர்த்தொட்டிகளும் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. குதிரைகளுக்காகவே இக்கிணறுகள் வெட்டப்பட்டன என அறியப்படுகிறது. இவை இயந்திரங்கள் இல்லாத காலத்தில் பொழியப்பட்டிருப்பதால் இவை மனித வலுவுக்கப்பாற்பட்ட ஒரு சக்தியினால்தான் வெட்டப்பட்டிருக்க வேண்டுமென மக்கள் கருதுவதால் இவற்றைப் பூதம் வெட்டிய கிணறுகள் அழைக்கின்றார்கள். இவற்றில் சில என கிணறுகளிலிருந்தே தீவிற்கான குடிநீர், குழாய்கள் மூலம் விநியோகிக்கப்படுகிறது.

9.நெடுந்தீவில் 40 அடி மனிதனின் காலடி

நெடுந்தீவு மேற்கில் சாறாப்பிட்டி கோளாங்கற்பாறைகளின் மத்தியில் ஒரு பெரிய மனிதனின் பாதம் காணப்படுகிறது. இது சாதாரண மனிதர்களின் பாதங்களை விட மிகவும் பெரிதாகக் காணப்படுவதால் நாற்பதடி மனிதனின் கால் பாதம் எனக் கூறப்படுகிறது. அத்துடன் இப்பாதத்தை இராமபிரானின் கால்பாதமெனவும் சிலர் கூறுகிறார்கள். ...

10.பழமைவாய்ந்த ஆலமரம்

நெடுந்தீவின் கிழக்கே பிள்ளையார் கோவிலின் அருகே நூறாண்டுகளுக்கு மேல், பழமைவாய்ந்த ஒரு ஆலமரம் பெரிய விருட்சமாக அரை மைல் விஸ்தீரணத்திற்குக் கிளைகளைப் பரப்பிப் படர்ந்து காணப்படுகிறது. இதன் இலைகளை ஆடுமாடுகள் உண்பதில்லை. இதன் அருகே ஓர் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இவ்வாலயம் இந்த ஆலமாவனப் பிள்ளையார் ஆலயமென அழைக்கப்படுகிறது.

11.அரசனைய அரசு
நெடுந்தீவின் மேற்கிலுள்ள புக்காட்டு வயிரவர் கோவிலின் அருகே பல நூறு வருடங்கள் பழமை வாய்ந்த பெரிய அரசமரம் ஒன்றுள்ளது. இது மூன்று ஏக்கர் நிலம் வரை வியாபித்துள்ளது. கிளைகள் நீண்டு வளைந்து நிலத்தில் பொறுத்து பின் மேலோங்கி வளருகின்றது.

12.பெருக்கு மரம்
 


இநெடுந்தீவு இறங்கு துறையிலிருந்து கிழக்காக சுமார் 2.5 கிலோ மீற்றர் தூரத்தில் காணப்படும் பெருக்கு மரம் நூற்றாண்டுகள் பழமையானது எனக் கூறப்படுகிறது. இதன் அடிமரம் மிகவும் விசாலமானது. இம்மரத்தில் உள்ள துளை வழியே உள்ளே சென்றால் அங்கே குகை போன்ற அமைப்பு உள்ளது. இங்கு ஒரு குடும்பம் நிற்கக்கூடிய இட வசதி உள்ளது. இதன் பூக்கள் வெண்மை நிறமாகவும், காய்கள வட்டமான பச்சை நிறமாகவுமுள்ளன. இத்தகைய மரங்கள் இலங்கையிலே மிகச் சிலவே உள்ளன எனக் கூறப்படுகிறது. இம்மரங்கள் கிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அரேபிய வியாபாரிகளால் ஏழாம் நூற்றாண்டளவில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டன என அறியப்படுகிறது. இவை இன்று பெரும்பாலும் கால நிலை மாற்றங்களால் அழிந்து கொண்டு செல்கின்றன எனக் கூறப்படுகிறது.

13.மணல் கடற்கரை

இது நெடுந்தீவின் மத்தியில் வடகடற்கரையில் அமைந்துள்ளது. மணல் வெள்ளையாகக் கடற்கரை நீளத்துக்குப் பரந்து காணப்படுகிறது. இதனருகேயுள்ள கடல், கற்பார்கள் அற்றதாகவும், குளிப்பதற்கும், நீந்துவதற்கும் இதமானதாகவும் அமைந்துள்ளது. இதனருகே பல நன்நீர்க் கிணறுகளும் கட்டப்பட்டுள்ளன. இதனருகேதான் ஒல்லாந்தர் கோட்டையும் அமைந்திருந்தது. இக்கடற்கரை சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்து வரும் ஒரு இடமாகும்.


14. வெல்லைக் கடற்கரை
நெடுந்தீவின் தெற்கே வெல்லைக் கடற்கரை அமைந்துள்ளது. இதன் கரைகள் பெரிய பாரைக்கற்களின மணற்பாங்காகவும் உள்ளது. வெளியூர்களிலிருந்து காலத்திற்குக் காலம் மீன் பிடிப்பதற்காக வரும் மீனவர்கள் இக்கரை நீளத்திற்குத் தங்கள் வாடிகளை அமைத்திருப்பதைக் காணலாம். வடகீழ்ப் பருவப்பெயர்ச்சிக் காற்றுக் காலங்களில் இப்பகுதிக் கடல் மிக அமைதியாகவிருக்கும். இக்காலங்களில் கட்டுமரங்களிலும், மோட்டார் வள்ளங்களிலும் பல நூற்றுக்கணக்கான மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று, திரும்பிவரும் காட்சிகளும், மீன்கள் வாங்கப் பணத்துடனும், பண்டமாற்றுப் பொருட்களுடனும் மக்கள் கூடும் காட்சிகளும், ஒரு தனி அழகாகவிருக்கும். இக்கடற்கரையை அண்டிய புல்வெளிகளிலேயே குதிரைகளையும் கூட்டம், கூட்டமாகக் காணலாம்.

16.புறாக்கூடு  

 
COLONIAL PIGEON COT
நெடுந்தீவுப் பகுதியில் இன்றும் துஃ3 பிரிவில் இவ் அஞ்சல் கோபுரம் காணப்படுகின்றது. காலணித்துவ காலத்தில் அஞ்சல் தொடர்பாடல்களை மேற்கொள்வதற்காக ஒல்லாந்தர்களால் கட்டப்பட்டதே இவ் புறாக்களின் கோபுரம். இன்றும் நெடுந்தீவுப் பகுதியில் அழிவடைந்த நிலையில் புறாக்களின் கோபுரம் அமைந்துள்ளது. இது மிகவும் பழமையான பாரம்பரியமான கோபுரமாகும் இது சுற்றுலாப் பயணிகளை கவரும் ஓர் கோபுர அமைப்பாகும்.

17.கல்வேலி
coral stone walls typical for Delft Island

 

நெடுந்தீவில் கல்வேலி அதிகமான வீடுகளில் காணப்படுகின்றன.

18.வளரும் கல்

நெடுந்தீவு பிரிவில் இவ் வளரும் அம்மன் கல் இன்றும் காணப்படுகின்றது. இக் கல் மிகவும் பழமையான சிறப்பான கல் ஆக விளங்குகின்றது. பழமையானதும் தொன்மையானதுமான இக் கல் நெடுந்தீவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் ஓர் மையமாகும். இக் கல் அம்மன் சிலையைப்போல் தானாகவே வளர்ந்து காணப்படுகின்றது. சுற்றுலாவின் வளர்ச்சிக்கு இக் கல்லும் அரிய அம்சமாக நெடுந்தீவில் விளங்குகின்றது.


தொல்லியல் வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட இத்தீவு விவசாயம், கால்நடை, கடல் வளங்களுடன் உள்ளது. 1813ம் ஆண்டு நெடுந்தீவு கடலில் இருந்து புறப்பட்ட ஹீர்த் டீ போலோ (hearth De Polo) எனும் ஐக்கிய அமெரிக்க இளைஞன் இத்தீவின் அழகையும், வளங்களையும் மனதில் கொண்டு இது தனி ஒரு நாட்டுக்கு சொந்தமானதல்ல! இந்த பிரபஞ்சத்திற்கே சொந்தமானது என்று கூறினாராம்.

தரைப் பரப்பிலும் மண்பரப்பைவிடவும் கற்பரப்பு மிகமிக அதிகமானது. அங்கு வாழ் மக்களின் உடலுரம் எதற்கும் முகம் கொடுக்கும் நெஞ்சுரம் எனும் பண்புகளின் அடித்தளமே இப் பாறைகளோ என்ற கேள்வி எழுமளவுக்கு இந்தக் கற்பரப்போடு மூதாதையர் போராடியிருக்கிறார்கள்.

இலங்கையின் வடபகுதித் தீவுகள் அனைத்தும் இந்துமகாசமுத்திரம் வங்காளக் குடாக்கடல் அரபிக் கடல் எனும் முப்பெரும் பாரிய நீர்ப்பரப்புகளின் இடையே நிலைகொண்டவை வட தென் பருவக்காற்றுக்கள் ஓயாது நீண்ட தூரம் தள்ளிவரும் வேகமான அலைகளுக்கு முகம் கொடுத்தும் தொடர்ந்து வாழும் கரைக் கட்டுமானமுடையவை.இவை தமது இருப்பை இதுவரை பேணுவது என்பது கற்களின் வலிமையால் மட்டுமே! அதிலும் கற்களின் வலிமையின் விசேடத் தன்மை அகமும் புறமும் நெடுந்தீவுக்கு சற்று அதிகமாகவே உள்ளது.

இந்த பதிவுக்குரிய ஆதாரங்களும் தரவுகளும் கீழிருக்கும் இணைப்புக்களி ருந்தும் புகைப்படங்கள் இணையத்திலிருந்தும் எடுத்தேன்.

HISTORY OF DELFT ISLAND

தரவுகளில் தவறுகள் இருந்தால் சொல்லுங்கோ.அந்த பக்கம் போய்வந்தவர்கள் கருத்து சொன்னால் பிரயோசனமாயிருக்கும்