29 ஜூன் 2019

ஐரோப்பா முழுவதும் வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு வெப்ப அனல்.

பிரான்ஸில் வரலாறு காணாத வெப்ப நிலை
ஐரோப்பா முழுவதும் வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு வெப்ப அனல் பறக்கிறது. 
முதல்முறையாக 45.1°C எனும் ஆகக்கூடிய வெப்பம் இன்று பிரான்ஸைக் கடந்திருக்கிறது. Villevieille (le Gard) எனுமிடத்தில் இவ்வெப்ப அலை பதிவாகியுள்ளதாக 'Météo France' அறிவிக்கிறது. 
-
இதற்கு முன்னர் 13h48 மணியளவில் 44.3°C வெப்பம் Carpentras (Vaucluse) என்ற இடத்தில் பதிவானதெனவும் சிவப்பு எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ள நான்கு மாவட்டங்களில் Vaucluse ஒன்று எனவும் கூறப்படுகிறது. நாட்டில் 76 மாவட்டங்கள் செம்மஞ்சள் (alerte orange) எச்சரிக்கையில் உள்ளன.
-
பரிஸுக்குள் கடுமையாக புகையை வெளியிடும் வாகனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற செயல்கள் மக்களை மேலும் அச்சமூட்டுகிறதென பிரெஞ்சு அரசு மீது குற்றம் சுமர்த்தப்பட்டுள்ளது. ஆனால் 2003ம் ஆண்டு நிகழ்ந்ததைப் போன்றதொரு உயிரிழப்பைத் தவிர்ப்பதற்காகவே இந்த முன்னெச்சரிக்கை என அரசு சொல்கிறது. 
-
இன்று வெள்ளிக்கிழமை(28ஜூன்), தெற்கு ஸ்பெயினிலுள்ள 'Andalousie' எனும் ஒரு கிராமத்தில் 17 வயதான இளைஞர் 'வெப்பத் தாக்கத்திற்கு' (coup de chaleur) உள்ளாகி இறந்துள்ளார்.
-
2003ல் ஆக க்கூடிய வெப்ப அலைக்குள் 
Allemagne, Belgique, Espagne, France, Italie, Luxembourg, Paysbas, Portugal, RoyaumeUnie, Suisse போன்ற நாடுகள் சிக்கிக்கொண்டன. அதிகூடிய வெப்பமான 47.8°C போர்த்துகல்லில் பதிவாகியிருந்தது. அக்காலப்பகுதியில் பிரான்சில் 44.1°C எனும் வெப்ப அலை Saint-Christol-lès-Alès et Conqueyrac (Gard) இல் பதிவாகியிருந்தது. 
-
2003ம் ஆண்டின் வெப்ப அலையானது ஓகஸ்ட் மாதம் 1ம் திகதியிலிருந்து 15 திகதி வரை நீடித்தது. பிரான்சில் 15,000க்கும் அதிகமான உயிரிழப்புக்களையும் ஐரோப்பிய நாடுகளில் சுமார் 70,000 உயிரிழப்புக்களையும் உருவாக்கியிருந்தது. 
-
இன்று பிரான்ஸும் ஸ்பெயினும் அசாதாரண வெப்பத்தை எதிர்கொண்டு நிற்கின்றன. ஜேர்மனி, போலந்து, செக்குடியரசு நாடுகளிலும் கடுமையான தாக்கம் ஏற்பட்டுள்ளது.
-
சகாராவிலிருந்து வீசும் 
அனல் காற்றே இங்கு அதிகரிக்கும் வெப்பத்திற்கு காரணமெனக் கூறப்பட்டாலும் பருவநிலை மாற்றமே இதற்கு காரணமென குற்றம் சாட்டப்படுவதோடு கவலை கொள்ளவும் செய்து வருகிறது.

28 ஜூன் 2019

'வருகின்றது நரகம்' (Hell is coming) / ஸ்விஸ்லே வெயிலா?

ஐரோப்பிய நாடுகளான போலந்து, லண்டன் சுவிஸ்,ஸ்பெயின், ஜேர்மனி, இத்தாலி, செக் குடியரசு போன்ற நாடுகளில் என்றுமில்லாதவாறு இந்தமுறை வெப்பநிலை உயர்ந்து காணப்படுகிறது. 33பாகை செல்சியஸ் வெப்பநிலையில் இருந்து 40 பாகை செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை உணரப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகின் மிகப்பெரும் பாலைவனமாகிய ஆபிரிக்காவின் சஹாரா பாலைவனத்தின் நிலப்பரப்பு அதிகரிப்பும் அதன் விளைவாக அங்கிருந்து வெளிக்கிளம்பும் வெப்ப அனல் காற்றுமே ஜரோப்பிய நாடுகளுக்கு இயற்கை உயர் வெப்ப அனர்த்தத்தை உருவாக்கியிருப்பதாக வானிலையாளர்கள் கூறுகின்றனர். 

இங்கிருந்து வீசும் வெப்பக்காற்றினை Hell is coming என்று பெயரும் இட்டுள்ளனர். இதன் தமிழ் அர்த்தம்
" நரகம் வருகிறது" என்பதாகும்.

முருங்கை இலையும்,தேங்காய்பூவும் / வெயில் என்றால் வெயில்.

வெயில் என்றால் வெயில்.
மேனி உருகி வியர்வையில் குளிக்க வைக்கும் வெய்யில். தரையில் தார் உருகும் வெய்யில்..ஆனாலும் நம்ம வேலை நம்ம பாட்டில் நடக்கத் தான் வேண்டும்.
ஏழு கடலும், மலையும் கடந்து வந்த முருங்கை இலையும்,தேங்காய்பூவும் /சேர்ந்த சுண்டல், கத்தரிக்காயும் கருவாடும் சேர்த்த தேங்காய்ப்பால் கறி.சமைத்து சாப்பிட்டு சட்டி பானையெல்லாம் கழுவி வைத்தும்விட்டேன். 
பங்கு கேட்டு வந்திராதிங்கப்பா...😍😍
கொய்யாப்பழம் சாப்பிட்டாச்சு😛
அன்ன மின்னா பழம் பழுக்கட்டும் என வைத்திருக்கேன். 

அதுவும் பங்கு கிடைக்காதுப்பா..😻😻
                                  

அன்னபின்னா பழம்,, நான் குடியிருந்த கோயில் வீட்டில் தினம் திணட பழமாக்கும். லாவுட் பழ மரமும், அன்னமின்னாவும் பசிக்கு கொறித்த காலம் அது.

25 ஜூன் 2019

முப்பதாண்டுகளாக கல்முனை (Kalmunai) வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தலை தடைசெய்வதன் காரணங்கள்?

கல்முனை- வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தல் தொடர்பாக....
முப்பதாண்டுகளாக பிரதேச செயலகம் தரமுயர்த்தலை தடைசெய்வதன் காரணங்கள்?
தேடலில்...
கல்முனை (Kalmunai) 
இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள கரையோர நகரம்.
கிழக்கே வங்காள விரிகுடாவையும் வடக்கே பெரியநீலாவணையையும் தெற்கே காரைதீவையும் எல்லையாகக் கொண்டது.

வரலாறு
கல்முனையின் பூர்வீகம் தமிழர்களுக்குரியது. 
17 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்கள் இலங்கையை ஆண்ட போது கொழும்பிலிருந்து துரத்தப்பட்ட சோனகர்கள். கண்டி மன்னன் ராஜசிங்கனிடம் தஞ்சமடைந்தனர். மன்னன் ராஜ சிங்கன் அவர்களில் (4000) பேரை காத்தான் குடிக்கும் (8000) பேரை கல்முனையிலும் அகதிகளாக குடி அமர்த்தினார் என்கின்றது வரலாறு.

தற்காலத்தில் கல்முனையில் முஸ்லிம்கள், தமிழர், சிங்களவர், பறங்கியர் என நான்கு இன மக்களும் வாழ்கின்றனர்.
நிலப்பரப்பு 
3/5 வீதம் தமிழருக்கும் 
2/5 வீதம் முஸ்லிம்களுக்கும் சொந்தமானதாக இருக்கின்றது.

70 வீத‌மான முஸ்லிம்க‌ளுக்கும் 29 கிராம‌ சேவை பிரிவுக‌ள் 30 வீத‌மான‌ த‌மிழ‌ருக்கும் 29 கிராம‌ சேவ‌க‌ர் பிரிவுக‌ள் என மொத்தம் 58 கிராம சேவகர் பிரிவுகள் இயங்குகின்றன.
மக்கள்தொகை  
முஸ்லிம்கள் 74432 
தமிழர் 26647 பேர்
சிங்களவர் 360
பறங்கியர் 498
இந்தியதமிழர்கள் 58

2011 ஆண்டின் சென்சஷ் கணக்கெடுப்பில் மொதத மக்கள் தொகை 1,06,780 ஆக இருந்திருக்கின்றது.


கல்முனை பிரதேசங்கள் பிரதானமான நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.
1.கல்முனை மாநகரம் (தளவட்டுவான் சந்தி தொடக்கம் சாஹிராக்கல்லூரி வீதி வரை),
2.கல்முனை வடக்கு (பாண்டிருப்பு, மருதமுனை, நீலாவணை),
3.கல்முனை தெற்கு (சாய்ந்தமருது)
4.கல்முனைமேற்கு (நற்பிட்டிமுனை,சேனைக்குடியிருப்பு,
சவளக்கடை,மணல்சேனை )

1989 ல் 13ஆவது திருத்த சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபை திட்டத்தின் கீழ் 
உதவி அரசாங்க அதிபர் காரியாலயங்கள் தரமுயர்த்தப்பட்டு நிர்வாகம் பரவலாக்கப்பட்டு பிரதேச செயலகங்களாக பிரிக்கப்பட்டன.

அம்பாறை மாவட்டத்தில் 1989 ல் 20 பிரதேச செயலக பிரிவுகள் அமைக்கப்பட்டன.அதில் ஒன்றாக உருவாக்கப்பட்ட கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தை தர முயர்த்துவதற்கு 
1993 ல் அமைச்சரவையில் அனுமதி அளிக்க்கப்பட்டிருந்தாலும்,முஸ்லீம் அரசியல்வாதிகளின் தலையீட்டால் தடை செய்யப்பட்டிருக்கின்றது.

கடந்த 30 ஆண்டுகளாக அப்பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் கோரிக்கையோடு கல்முனை வாழ் தமிழ் மக்கள் அலைந்து கொண்டிருக்கின்றார்கள்.
கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுகள்
---சாய்ந்தமருது பிரதேச செயலகம் 
---கல்முனை தமிழ் உப-பிரதேச செயலகப் பிரிவு 
---சாய்ந்தமருது பிரதேச செயலகம்
சகல அதிகாரங்களும் கொண்ட நிர்வாக பிரிவாக பிரிக்கப்பட்டாலும் 1989 தொடக்கம் கல்முனை முஸ்லீம் பிரிவு பிரதேச செயலகத்துக்கு மட்டுமே முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட்டு இயங்கி வருகின்றது.
காணி மற்றும் நிதி அதிகாரங்கள் முழுமையாக முஸ்லிம் பிரதேச செயலகத்தினூடாகவே என்பதனால் தமிழர் பகுதிகளுக்கான் சமூக முன்னேற்ற திட்டங்கள் மறுதலிக்கப்படுவதாகவும், நிதி ஒதுக்கீடுகளில் முறைகேடுகள் தொடர்வதாகவும், தமிழர்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.
கல்முனை தமிழ் உப-பிரதேச செயலகப் பிரிவு 
(கல்முனை வடக்கு) தரமுயர்த்துவதற்கு தடை செய்வதற்கான காரணங்கள் 

கல்முனை Mubarak Abdul Majeeth அவர்கள் வெளியிட்டிருக்கின்றார்.

1.தமிழர் எல்லைக்குள் 3000ற்கு மேற்பட்ட முஸ்லிம்களின் வாழ்விடங்கள் உள்வாக்கப்பட்டுள்ளன.
2. ஐந்துக்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள் இரண்டு மதரஸாக்கள் மூன்று மையவாடிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
3.கல்முனை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடற்கரைப் பள்ளிவாசல் கூட அந்த எல்லைக்குள்தான் வருகிறது.
4.கல்முனை பொதுச் சந்தை
5.கல்முனை பஸார்
6.கல்முனை கடைத் தொகுதிகளும் வர்த்தக நிலையங்களும்
7.கல்முனை பஸ் தரிப்பு நிலையம்
8.கல்முனை பொலி்ஸ் நிலையம்
9.கல்முனை நூலகம்
10.கல்முனை பிரதேச செயலகம்
11.கல்முனை மாநகர சபை
12.சகல வங்கிகள்
13.சகல அரச காரியாலயங்கள்

14. கல்முனை பிரதேசத்தில் காணப்படும் கல்முனைக் கண்டம் ,இறைவெளிக்கண்டம், நற்பிட்டிமுனை மேல்,கீழ் கண்டங்கள் மேட்டுவட்டை வயல் காணிகள் , கரவாகு வட்டைக் காணிகள் என அனைத்து வயல் காணிகளும் அவர்கள் கோரும் எல்லைக்குள்ளே வருகின்றன.
15. நீர் நிலைகளான பட்டிப்பளை ஆற்றுப் படுக்கை,கல்லடிக்குளம்,பாண்டிருப்பு பெரிய குளம், சிறிய குளம்,நவியான் குளம், கரச்சைக் குளம் என அனைத்து நீர் நிலைகளும் அந்தப் பிரதேசத்திற்குள் உள்வாக்கப்பட்டுள்ளன
எங்க‌ள் நில‌ங்க‌ளையும் வ‌ர்த்த‌க‌ங்க‌ளையும் கைய‌க‌ப்ப‌டுத்திக்கொண்டு அத‌னை த‌ங்க‌ளுக்கென‌ பிர‌க‌ட‌ன‌ப்ப‌டுத்தினால் இதை முஸ்லிம்க‌ள் அனும‌திக்க‌ முடியுமா?
Mubarak Abdul Majeeth
leader.Muslim ulama party

இங்கே குறிக்கப்பட்டிருக்கும் கல்முனை பொதுச் சந்தை, பஜார், வியாபார ஸ்தலங்கள் அனைத்துமே முன்னொரு காலத்தில் தமிழ் வியாபாரிகள் தமிழருக்கு சொந்தமானதாகவே இருந்தது என்பதை 
நினைவூட்ட விரும்புகின்றேன்.

விட்டுக்கொடுப்பதை விட்டுக்கொடுத்து பெற்றுக்கொள்வதை பேறாக்கி தன்னை உயர்த்திட முடியாதவர்களாக இலங்கை சிறுபான்மை இனங்கள் ஆப்பத்தை பீய்த்து பங்கிட்டு தரும் என நம்பி குரங்கு கை பூமாலைகளாகி கொண்டிருக்கின்றன .
கல்முனையின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் சோனாகர்கள் இன்றியமையாதவைகளாக இருந்தவர்கள் என்பதை உணர்ந்திருக்கும் தமிழர்களுடன் தமக்கான பிரச்சனைகளை உணர்த்தாமல், இலகுவாக தீர்த்து கொண்டிருக்க கூடிய பிரச்சனையை சிங்களம் கொடுத்த அதிகார மமதையில் தமிழரை துச்சமாக்கி, தமிழரை அடக்கி ஆழ்வதும் அவர்தம் நிலங்களை அபகரித்து அதிகாரம் செய்தும தமக்கு தாமே வினை வார்த்து கொண்டார்கள்.தமது மொழி தமிழ என்பதை மறுதலிக்கவும் கற்பிக்கப்பட்டார்கள்.
விட்டுக்கொடுத்தே அனைத்தையும் இழந்து, 
தம் சுய உரிமைக்காக போராடிய ஓரினம் வெறும் பிரதேச செயலகம் ஒன்றின் தரத்தை உயர்த்தும் கோரிக்கையோடு எங்களை அழித்தவர்களிடமே தீர்வை வேண்டி மண்டி இட்டிருக்கின்றதெனில்... எம்மன நெருக்கடியை யார் உணர்வது?

அவரவர் பார்வையில் நியாயங்கள் எனும் அநியாயங்களே பேசு பொருளாக்கப்பட்ட்டிருக்கின்றன.
கல்முனை பிரதேச செயலகங்கள் பிரிக்கப்பட்டிருக்கும் பகுதிகள் படத்தில் தெளிவாக குறிக்கப்பட்டிருக்கின்றன. இதனுள் காணப்படும் முரண்களை அவதானிக்கவும்.
நீதியை தேடுவோம்.....?

21 ஜூன் 2019

அம்னீசியா எனும் .மறதி நோய் தமிழர் பரம்பரைக்கானதோ?

எனக்கொரு சந்தேகம்
யாராச்சும் தீர்த்து வையுங்கப்பனே..... 
🤓🤓🧐🧐🧐🧐

தமிழர் பிரதேசங்களில் புத்த சிலைகள் தெருவுக்கு தெரு முளைத்தாலும் விக்கினமில்லை, 
சிங்களவர் எங்கட பகுதிகளையெல்லாம் சுவிகரித்துகொண்டாலும் குற்றமில்லை 
முள்ளிவாய்க்காலில் செத்ததுகளுக்கு பால் சோறு பொங்கி தின்பதை ஆண்டு திவசத்தில் சேர்த்துக்குவோம். 
வெடி கொழுத்தி கொண்டாடியதை துக்க வீட்டு பறை மேளமாகவும், சாவுக்கு முன் வெடிக்கும் வெடியாகவும் மாத்தி யோசிப்போம்.

ஏன் எண்டால் சிங்களவரும், தமிழரும் சகோதரர் இனமுங்க........ எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்,, நாங்க அண்ணன் தம்பிங்க.. நேத்து அடிச்சிக்கிட்டோம், இன்னிக்கும் சேர்ந்துக்குவோம், நாளை திரும்ப அடிச்சிப்போமுங்க. 
எங்கட சாமியும், அவங்கட சாமியும் ஒண்டுங்க. புராணங்கள் கூட அதை சொல்லுதுங்க. நாங்க ஆயிரம் வருடத்துக்கு முந்திய தோஸ்துக்களாக்கும்.

ஆனால் பாருங்க......
சோனகர் தான் எங்கட ஜென்ம விரோதிகள், 
வந்தான் வரத்தான்களுக்கு எங்கட உரிமையை விட்டுக்கொடுக்க ஏலாதுங்க .... எங்களுக்காக தீர்வு சிங்கள தேரர் மூலம் தான் சாத்தியம் என கலமுனை வடக்கு பிரதேச சபைக்கான தரமுயர்த்த கோரி சிங்கள தேரரை தெய்வமாக்கி, அவரை கும்பிடுவதெல்லாம் வேறே ரகமுங்க..

ஒருத்தர் வந்து சொல்றார்... பழய கதை எல்லாம் பேசக்கூடாதாம்,, இப்ப இருக்கும் நிலையில் முஸ்லிம்களிடமிருந்து எங்கட உரிமையை காப்பாத்தணுமாம்.... இல்லாங்காட்டில் கிழக்கையே முஸ்லிம்கள் தங்களுக்கென பிரிச்செடுத்திருவாங்களாம்..
அவர் சொல்வதும் சரி தான் போல கிடக்குது.
ஏன் எனில் வடக்கு வடக்கு என வடக்கின் செழிப்பு,அறிவு, வீரம், வளமெல்லாம் நாசமாக்கி,எங்கட பிள்ளைகளையும் கலாச்சார சீழழிவுக்கும் திணிச்சி, உலகம் போற்றிய தமிழ அறிஞர்களை உருவாக்கிய யாழ்ப்பாணத்தை நாசமாக்கி முடிச்சாச்சுங்க. இனி அங்கே கிண்டிக்கிளற ஒண்டுமில்லையுங்க..
வடக்கும் நாசமாச்சு.... சிங்களவன் ஆண்டாலும் அவன் பிரதேசங்களும் ஒன்னும் சொல்லிக்கொள்ளும் படி முன்னேற முடியல்ல. பெரும்பான்மை இனமென்பதை தக்க வைக்க வதவதவென பிள்ளைகுட்டிகளும் பெருகிப்போனார்கள்.
நாங்கல்லாம் நக்கித்தின்ன வழியில்லாமல் திரிய.... சோனகர் மட்டும் மாட மாளிகை கட்டுவதும், கல்வியில் முன்னேறுவதும், பொருளாதாரத்தில் உயர விடுவதும் தப்பாச்சே? அதனால் நாடும், நாட்டு மக்களும் உயர்ந்து விடுவார்களே? கிழக்கு மாகாணமும் முன்னேறி விடுமே... விட்டு வைக்கலாமா?
எங்களுக்கு கிடைக்காதது எவனுக்கும் கிடைக்ககூடாது. எல்லாரும் எங்கட அடிமையாக கிடக்கணும். அதுக்கு மிரட்டிகிட்டே இருக்கணும். அப்புடியே மட்டக்களப்பில் இருக்கும் எச்ச சொச்ச தமிழரையும் நாட்டை விட்டு ஓட விரட்டணும் எதிர்கால திட்டத்தோடு கிளம்பி இருக்கும் சிங்கள இனவாதிகளுக்கு ஒரு கை கொடுக்கத்தான் வேண்டும். பழசு எல்லாம் கிண்டி நினைவு படுத்தக்கூடாது. தப்பித்தவறி நினைவுக்கு வந்திட்டால் எங்கட தமிழனுக்கு ரோசம் வந்திடும்,. உப்புப்போட்டு சோத்தை தின்னுவதும் நினைவுக்கு வந்திரும். அதனால் தேரரை தெய்வமாக்குவதை வேடிக்கை பார்க்கணும்.
அந்த தேரரை ஒருக்கா எங்கட அரசியல் கைதிகளுக்கா உண்ணாவிரதம் இருக்க சொல்லுங்களேன்பா... அந்த கோப்புலாவ காணிகளையும் விடுதலையாக்கி தர சொல்லி கேளுங்க.. ... அவர் மட்டும் அப்படி செய்திட்டால் எண்ட சாமியும், அவரு தான் என 100 அடி சிலை வைச்சு கும்பிட்டுக்குவேன்.
இப்பவும் எனக்கு ஒன்னும் புரியல்ல.
தமிழ்,தமிழர் உரிமை, தனி ஆட்சி என போராடுவோர் தமக்கான சந்தர்ப்பங்களை எப்படி பயன் படுத்தி இருக்கின்றார்கள்? தமிழரிட்ட பொறுப்பு கொடுத்த எதில் நாங்க சாதித்து காட்டி இருக்கின்றோம் என ஒருக்கா எனக்கும் சொல்லுங்க் தம்பி, ஐயாமாரே?
கிழக்கில்,தமிழர் வசமிருக்கும் பகுதிகளின் பிரதேச சபைகளினால் ஆரம்பிக்கபப்ட்ட, அபிவிருத்திகளை, திட்டமிட்டிருக்கும் மக்கள் செயல் திட்டங்களை ஒருக்கா சொல்ல முடியுமா?
அவனிவன்,எவன் என சாக்கு போக்குகளை சொல்லாமல் இண்டைக்கு கல்முனையில் நிற்கும் எந்த தமிழ் அரசியல் வாதி உங்கட நியாயமான கோரிக்கைகளுக்கு குரல் கொடுக்கின்றான்? 
சும்மா பூச்சாண்டி காட்டாமல், தானும் செய்யாமல, செய்பவர்களையும் மிரட்டி உருட்டி தடுக்காமல் தமிழர் பிரதேசங்களை முன்னேற்ற செயல்படுவோர் ஆரேனும் இருந்தால் சொல்லுங்க.

ஒவ்வொரு முஸ்லிமும் தன் கடமை உணர்ந்து,தன் இனத்தின், சமூகத்தின், பிரதேசத்தின் முன்னேற்றத்துக்காக அர்ப்பணிப்போடு செயல் படுவதை பார்த்து உங்களுக்கு பொறாமை வந்தால்.... நீங்களும் அவர்களை போல் உங்கள இன, சனத்துக்காக அர்ப்பணிப்போட வாழ்ந்து காட்டுங்க.. உங்களை நம்பி வரும் மக்கள் முன்னேற்றத்தை குறித்து அக்கறை காட்டுங்க...முஸ்லிம்களின் இனப்பற்றை, மதப்பற்றை பாராட்ட வேண்டாம். பாடமாக எடுத்துக்கலாம் .
சோனகர் சார்பான அரசியல் வாதிகள் அரபி நாடுகளிடம் போய் பேசி தங்கட பகுதிகளை அபிவிருத்தி செய்தால் நீங்களும் உங்களுக்கு உதவும் நாடுகள், புலம் பெயர் தமிழ் மக்களோட பேசி தமிழர் பகுதிகளின் அபிவிருத்திகளை மேற்கொள்ளலாமே? உங்களுக்கும் அபாரமான் வாய்ப்புக்கள் கொட்டிக்கிடந்தது தானே?
எப்பவும் உருட்டல்,மிரட்டல், அலட்டல் கடையடைப்பு,கதவடைப்பு ......... ஏன் எதுக்கு என எதிர்த்து கேள்வி கேட்டால் உயிரடைப்பு..... இதை தவிர நீங்கல்லாம் என்ன தான் செய்திங்க?
எல்லாத்துக்கும் அரசை நம்பாமல் தமக்கான் தன்னிறைவில் ஒரு சமூகம் முன்னேறுவதை பார்த்து பொறாமைப்பட்டு, நீயா, நானா எனும் ஈகோவில் சேரக்கூடாத இடம் சேர்ந்து, சேற்றில் புரண்டு தான் ஆகனும் என்பதெல்லாம் நியாயமாப்படுதாங்க?
ஊரில,உலகில எனக்கு தெரியாதது அண்டம் அளவு கிடக்குதுங்க... நான் ஒரு ஓரமா புறு புறுத்து கிடந்தாலும், நம்மட பேச்சை, ஏச்சை பொருட்டா மதிக்கும் தம்பி, தங்கைச்சி மார் எதிர்காலம் நினைச்சால் பயம்ம்ம்ம்மா இருக்குதுங்களே..?
அம்னீசியா எனும் .மறதி நோய் தமிழர் பரம்பரைக்கானதோ? எண்ட ஆதங்கம் தப்புன்னால் ஒரு வார்த்தை சொல்லிருங்க..

20 ஜூன் 2019

எள்ளு காய்வது எண்ணைக்கு, ஆனால் கல்முனையில் எலிப்புழுக்கை i எதுக்காக காய்கிறது ?

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி உண்ணாவிரதம் இருக்கும் புத்த பிக்குக்கள் குறித்து
எள்ளு காய்வது எண்ணைக்கு, ஆனால் கல்முனையில் எலிப்புழுக்கு எதுக்காக காய்கிறது ?
எனும் இம்போர்ட் மீரர் செய்தியாளரின் பதிவில் நியாயம் இருக்கத்தான் செய்கின்றது?
தமிழ் பேசும் சைவர்கள்,கிறிஸ்தவர்களையும் , தமிழ் பேசும் சோனகர் சமூகத்தவர்களையும் பிரித்தே ஆக வேண்டும் எனும் திட்டமிட்ட செயல் பாடுகள் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும் இறுக்கமான சூழலில் செய்தியாளர் தமிழர்கள் சார்பாக நியாயமாக கேள்விகளை தான் கேட்டிருக்கின்றார். அதற்காக இம்போர்ட் மீரருக்கும், அதன் செய்தியாளருக்கும் பாராட்டுகளை தெரிவிக்கின்றேன். சரியான நேரத்தில் தகுந்த கேள்விகளோடு பதிவொன்றை இட்டு சிந்திக்க செய்தமைக்கு நன்றி.
அதே நேரம் கல்முனை வாழ் முஸ்லிம் சமுகம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கூடாது என சத்யாக்கிரக போராட்டம் நடத்துவதும், தொடர்ந்து எதிர்ப்பதற்குமான பின்னனி காரணத்தை இம்போர்ட் மீரர் நிர்வாகிMunas Mps, முன்னாள் பொறுப்பாளர் Nisamudeen Risly Samsadபோன்றோர்கள் விளக்கம் தர முடியுமா?
தமிழர்கள் பகுதியான வடக்கு பக்கம் நிலப்பரப்பு அதிகமாகவும், மக்கள் செறிவு குறைந்தும், முஸ்லிம் சமூகத்தவர் வாழும் பக்கம் மக்கள் செறிவு அடத்தியாகவும், நிலப்பரப்பு குறுகியும் காணப்படுவதனால் தான் முஸ்லிம் சமூகம். 
தமிழர்களுக்காக பகுதி தரமுயர்த்துவதை எதிர்க்கின்றார்கள் என நான் கேள்விப்பட்டிருப்பது சரியான தகவலா?

காலத்தில் தேவை கருதி இதற்காக பதிலை நேர்மையான முறையில் எதிர்பார்க்கின்றேன்.

இரு பதிவுகள் சம்பந்தமாகவும், முழுச்செய்தியும் படிக்க முதல் பின்னூட்டத்தில் இணைக்கும் லிங்க கிளிக் செய்யுங்கள்.நாங்கள் எதை நோக்கி பயணிக்கின்றோம்?

இன்றைய இருப்பை தக்க வைத்து கொள்ள முடியாமல் வக்கத்து போயிருக்கும் எமக்கு என்னிக்கோ செத்துப்போன ராஜராஜனை குறித்து பேச என்ன அருகதை இருக்கின்றது?
எவனவனோ சம்பந்தமில்லாதவன் ஊருக்குள் வந்து எம் நிலத்தை ஆக்ரமிக்கின்றான். கையாலாகா தனத்துடன் கை கட்டி வேடிக்கை பார்க்கின்றோம்.
ஆனால் பாருங்க...😭😭😭
ராஜராஜன் மேல் குற்றம் சாட்டி இருக்கும் ரஞ்சித்துக்கு ஆதரவாக Change.org மூலம் கருத்து சேகரிக்கின்றார்களாம்? இது வரை 5000 க்கும் அதிகமானோர் ஆதரவு வாக்களித்தும் இருக்கின்றார்கள்.
Change.org, எனும் தளம் காப்ரேட்டுகள் சார்ந்ததாக இருந்தாலும் நாட்டுக்குள், ஊருக்குள், சமூகத்துக்குள்
எனும் சிறுவட்டத்தினுள் சுழலும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை நியாயமாக பெறும் வாய்ப்பை உருவாக்கி தருகின்றது. உலகத்துக்கு மக்களுக்கு எங்கள் பிரச்சனைகளை கொண்டு சேர்ப்பதோடு அதன் சாதக பாதகங்களை அலசி ஆராய்கின்றது.

Change.org இனூடாக விண்ணப்பங்கள் மக்கள் பிரச்சனைகள், தனி நபர் பிரச்சனைகளுக்கான நீதி வேண்டி விணப்பிக்கின்றது. ஆதரவாளர்களை திரட்டுகின்றது. தேவைப்பட்டால் வழக்காடவும், அது சம்பந்தமான் நிதி சேகரிப்பு மற்றும் நீதிக்காவும் உதவி செய்கின்றது.
நான் பல்வேறு சந்தர்ப்பங்களில் இத்தளத்தினூடான பிரச்சாரங்களுக்கு ஆதரவளித்திருந்தேன்.
உலகத்தின் இயற்கைப்பாதுகாப்பு, சுற்றுச்சுழல் பாதிப்பு பிரச்சனைகளுக்காக குரல் இந்தளத்தினூடாக உலகமெங்கும் எதிரொலிக்கின்றது.
உதாரணமாக மரங்களை வெட்டி சாலை அமைக்கும் போது, அம்மரங்களை குறித்த முழுமையான தகவல்களை, வெட்டப்படும் மரங்களை குறித்த முழு விபரங்களை நாம் இத்தளத்தினூடாக கொண்டு சேர்த்தால் சேவ் கிரின்அமைப்பும், உலக இயற்கை பாதுகாப்பு அமைப்பின் பார்வைக்கும் மரங்களின் பாதுகாப்பினை குறித்த கவனமெடுத்தலுக்கு கொண்டு செல்வதோடு,மாற்று வழிகளை குறித்து ஆராய்ந்து. மக்கள் குரல்களை ஒன்று திரட்டுகின்றது. அம்மரங்களை பாதுகாக்க போராடுகின்றது.
கஜா புயல். 
டெல்டா மாவட்டங்கள் எதிர் நோக்கும் வளமிழப்பு பிரச்சனை நேரமெல்லாம் இத்தளம் குறித்து நான் பல பதிவுகள் இட்டு நினைவூட்டினேன், இங்கே கற்றோரென சொல்லிக்கொள்வோர் கண் மூடி கடந்தார்கள். சிலர் காது கொடுக்க கூட தயாரில்லை. டெல்டா என ஒரு புயல் அடிச்சு அதனால் ஏற்பட்ட இழப்புக்கள், மித்தோன் கிணறுகளின் ஆக்ரமிப்புக்கள் குறித்து ஆங்கிலத்தில் எந்த ஆவணமும் பதிவாக்கப்பட்டதாகவும் தெரியவில்லை.

போன மாசம் ஒரிசாவில் புயல் அடிச்ச அன்றிரவே சுடச்சுட அத்தனையும் பதிவாச்சு.
ஆனால் தமிழ் நாட்டில்...? புளிச்ச மாவை டிரெண்ட் ஆக்க துடிக்கும் எமக்கு எமது சந்ததிகள் எதிர்காலம் குறிச்சு சிந்திக்க நேரமில்லை.
மக்களுக்கு எது தேவை என குரல் கொடுப்போர் குரல்வளை தான் நெரிக்கப்படுகின்றது.
கருத்து சுதந்திரம் எனும் பெயரில் ரஞ்சித்து போன்றவர்களின் காலத்துக்கு உதவாத, மக்கள் பிரச்சனைகளை திசை திருப்பி விடுவோரின் தனிப்பட்ட, ஆதரமில்லாத கருத்துக்களை டிரெண்ட் ஆக்கி அதற்கு ஆதரவு பிரச்சாரமும் செய்வோரை எவ்வகையில் சேர்ப்பது?
நாங்கள் எதை நோக்கி பயணிக்கின்றோம்?
எனக்கு புரியத்தான் இல்லை. உங்களுக்கேனும் புரிகின்றதா?
கல்முனை வடக்கு பிரதேச சபையை தரமுயர்த்தல் தொடர்பாக........

கல்முனை வடக்கு பிரதேச சபையை தரமுயர்த்தல் தொடர்பாக........
எந்த நிலத் தொடர்புமில்லாத வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் என்று கூறிக்கொண்டு ஒரு சிறிய பிரதேசமாக இருக்கும் குறைந்தளவான மக்கள் வாழும் ஒரு மாநகர எல்லையைப் பிரித்து தமிழர்களை வேறாகவும் முஸ்லீம்களை வேறாகவும் ஆக்கிவிடுங்கள் என்று கேட்பதில் உள்ள நியாயங்களை தெரிவியுங்கள்..
(தமிழர்களை வேறாகவும் முஸ்லீமகாளை வேறாக்கவும் கூறவில்லை என்று யாரும் கூறவந்தால் அது அறியாமையான கூச்சல் என்பதே பதிலாகும்)
இக்கூற்று நியாயமானதா..? இதுதான் இனநல்லுறவா..? இப்படியிருக்கும் போது வடக்கும் கிழக்கும் இணைந்தால் யார் யாரை ஆள்வது பதில் சொல்லுங்கள்.

நியாயமான கேள்வி தான்.
அதே நேரம் தமிழர்கள் தரப்பில் முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கும் முஸ்லிம் சமூகம் பதில்; தரும் கடமைக்குள் இருக்கின்றது Munas Mps
வரலாற்றை பார்ப்போம்.
***
1989ம் ஆண்டு கல்முனை முஸ்லிம் பிரதேச சபையும், கல்முனை தமிழ் பிரதேச சபையும் உருவாக்கப்பட்டன... இவற்றில் கல்முனை முஸ்லிம் பிரதேச சபை தரமுயர்த்தப்பட்டு காணி, நிதி அதிகாரங்கள் வழங்கப்பட்ட போதும்... தமிழ் பிரதேச சபையை தரமுயர்த்தப்படவில்லை....
தமிழ் மக்கள் தரமுயர்த்துமாறு கோரிக்கை விடப்பட - அது அரசாங்கத்தினால் ஏற்கப்பட்டு - 1993இல் அமைச்சரவையில் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட போதும் - முஸ்லிம் அரசியல்வாதிகளின் எதிர்ப்பால் இன்று வரை அது கைவிடப்பட்டு, அதிகாரங்கள் முஸ்லிம் பிரதேச செயலகத்தின் கீழேயே உள்ளது.....
இதனால் தமிழர்களின் கிராமங்கள் சரியான முறையில் நிதி பங்களிப்பு செய்யப்படாமல் அபிவிருத்தி செய்யப்படவில்லை...
தமிழப் பெயர் கொண்ட வீதிகள் பெயர்மாற்றம் செய்யப்படுகின்றன..
அபிவிருத்திகள், சந்தை ஒதுக்கீடு, வாடகை வாகனத் தரிப்பிடம் போன்றவற்றில் முஸ்லிம் கிராமங்களுக்கு கிடைக்கும் சலுகைகளில் 10% கூட தமிழ்க் கிராமங்களுக்கு கிடைப்பதில்லை... தமிழ்ப் பிரதேசங்களில் வீதி மின்விளக்குகள் கூட ஒழுங்கான முறையில் போடப்படாமல் இருக்கின்றன...
******
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை பிரதேச செயலகத்துடன் இணைந்திருந்த ஓட்டமாவடி முஸ்லீம் பிரதேசத்தை பிரித்து தனியான பிரதேச செயலகம்
செங்கலடி பிரதேச செயலகத்திலிருந்து சில கிராம சேவகர் பிரிவை பிரித்து தனியான ஏறாவூர் பிரதேச செயலகம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, ஏறாவூர் ஒட்டமாவடி பிரதேசங்களை இணைத்து மட்டக்களப்பு மத்திய கல்வி வலயம் எனும் பெயரில் முஸ்லீம்களுக்கு தனியான கல்வி வலயம் என உருவாக்கப்பட்டு இருக்கின்றது.
முஸ்லிம் சமூகத்துக்கான தனிப்பிரிவுகள் உருவாக தமிழர் தரப்பு எதிர்ப்பு தெரிவிக்க வில்லை என்பதும் இங்கே கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். 
அப்போதெல்லாம் வடக்கும் கிழக்கு இணைப்பை குறித்து கேள்விகள் வந்ததில்லை அல்லவா Munas Mps?

கல்முனை வாழ் தமிழர்கள் - தமக்கு நியாயமாக கிடைக்க கூடிய அடிப்படை வசதிகளை பெற பிரதேச சபையை தரமுயர்த்த 30 ஆண்டுகளாக கோரிக்கை விட்டுக்கொண்டே இருப்பதும், அதற்கு முஸ்லிம் சமூகம் முட்டுக்கட்டை இடுவதும் எவ்வகையில் நியாயமாகும்?
இன்றைய சூழலில் தமிழர் தரப்பு சிங்கள பேரின வாதிகளுடன் இணைந்து கல்முனையில் உண்ணாவிரதம் இருந்தேனும் தமக்கான உரிமையை பெற்றிட வேண்டும் என எதிரியிடம் மண்டியிடும் சூழலுக்குள் தள்ளி விடப்பட்டிருக்கின்றார்கள் எனில்....?
நியாயத்தராசு இருபக்கமும் சமமாக இருக்கட்டும்.
கல்முனை வடக்கு பிரதேச சபையை தரமுயர்த்த 
எதிர்ப்பதற்கான நியாயமான காரணம் இல்லாமல் தமிழர் கோரிக்கைகளுக்கான எதிர்ப்பு சத்தியாக்கிரகம் நடத்துவதனால் பிளவுகள் மட்டுமே அதிகமாகும் என்பதை முஸ்லிம் சமூகம் உணர வேண்டும். எரியும் நெருப்பில் எண்ண்ய் வார்க்கும் செயல்பாடுகளை தொடர்வதனால் யாருக்கு பயன் கிடைக்கும் என சிந்தியுங்கள்.

🙏🙏🙏🙏
இவ்விவாதங்கள் , கடந்த கால வரலாறுகள் அறியாமல ஒரு பக்க கருத்துக்களை மட்டும் உள்வாங்கி உணர்ச்சிகர அரசியலில் சிக்கி எமது இளையோர்கள் தம் வாழ்க்கையை பாழாக்காமல் தமிழ் பேசும் சிறுபானையினரான எம் இரு சமூகத்தினுள் புரையோடி இருக்கும் கசப்புக்களை நீக்கப்பட வேண்டும். இரு சமூகமும் தாம் விடும் தவறுகளை உணர வேண்டும் எனும் நோக்கத்தில் தொடரப்படுகின்றது.
ஆதலால் ஆனறோர்கள் எமது இளையோருக்கு தகுந்த ஆலோசனை சொல்லி வழி நடத்தும் கடமைகளிலிருந்து விலகி வேடிகை பார்க்காமல் தங்கள் கருத்துக்களை பகிருங்கள்.
காலத்தில் அவசியத்தை உணருங்கள். மௌனமாக வேடிக்கை பார்க்கும் தருணம் இது அல்ல.
மட்டக்களப்பு மாணவர் சமுதாயம் சூழ்ச்சி வலைக்குள் சிக்க வைக்கப்படுகின்றதெனும் ஐயம் தோன்றுகின்றது😭.
ஆடுரா ராமா ஆடு எனும் சிங்கள பேரினவாதத்தின் ஏவல்களுக்கும், கட்டளைக்கும் ஆடும் குரங்குகளாக தமிழர்களும், சோனகர்களும் ஆகி போனோமா?

சோளியன் குடுமி சும்மா ஆடாது -கல்முனை பிரதேச செயலகம்

கல்முனையில் பதட்டம்
ஆயிரம் பேர் மெழுகுவர்த்திகளுடன் அணிவகுப்பு.
கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி புத்த பிக்கு உண்ணாவிரதம்.
கல்முனையில் சிங்கள பேரினவாதிகளின் சார்பானவரான,இனவாதியாக தன்னை வெளிப்படுத்திக்கொண்ட புத்த பிக்குவின் உண்ணாவிரதம் சொல்லும் செய்தி என்ன?
கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தரும் படியாக தமிழர்கள் சார்பான கோரிக்கை பல வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் சிங்கள தேரர் ஒருவருக்கு எங்கள் தமிழ் மக்கள் மேல் அக்கறை சுனாமி அலைகள் போல பெருக்கெடுத்து பெருகி இருக்கின்றது.
சுனாமி அலைகளால் எவருக்கும் நல்லது நடப்பதில்லை என்பதும் அழிவுகளே எஞ்சும் என்பது நாம் அனுபவித்து உணர்ந்தவைகளாக இருந்தாலும் எமக்கு எத்தனை பட்டாலும் புத்தி வருவதே இல்லை என மெய்பித்து கொண்டே இருக்கின்றோம்.
மட்டக்களப்பு தமிழர்கள் 
முழு முட்டாள்கள்.
மூடர்கள். 
பைத்தியக்காரர்கள் 
அறிவீலிகள்,
எலும்புத்துண்டுக்கு ஆசைப்படுபவர்கள்.
சூடு சொரனை இல்லாதவர்கள்
எத்தனை அடித்தாலும் தாங்குவார்கள்.

ஆம்... இப்படித்தான் அவர்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
ஏற்கனவே முஸ்லிம், தமிழ் மக்களுக்கிடையிலான முறுகல் நிலையும், பதட்டமும் தொடரும் சூழலில் தேரர்கள் இருவர் தமிழர்களுக்கு ஆதரவாக களமிறங்கி இருக்கின்றார்கள். பிக்குகளுடன் இணைந்து உண்ணாவிரதத்துக்கு ஆதரவாக தமிழ் பேசும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் சார்பான முக்கியஸ்தர்களும் இணைந்திருப்பது தமிழர்களை குறித்த சிங்களவர்களின் புரித்துணர்வு மேற்சொன்ன படியே என்பதை நிருபித்திருக்கின்றன.
இலங்கை அரசின் ஆட்சி அமைப்பே பௌத்த பிக்குகளின் காலடியில் என்பதை பண்டாரனாயக்கா காலம் முதல் உணர்ந்து தான் இருக்கின்றோம்.
சிங்கள பௌத்த பிக்குகள் இலங்கை அரசினை ஆட்டிப்படைக்கும் வல்லமை வாய்ந்தவர்கள் என்பதை கடந்த மாத உண்ணாவிரத நாடகமும், ஒட்டுமொத்த முஸ்லிம் அமைச்சர்களின் ராஜினாமாவும் மெய்ப்பித்திருக்கின்றார்கள்.

சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை. வடகிழக்கில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம்,வடகிழக்கு இணைப்புக்குறித்த எமது நியாயமான கோரிக்கைளினை இப்பிக்குகள் எப்படி கையாண்டார்கள்?
இதே தேரர்கள் எந்த விடயத்தில் எங்களுக்கான தீர்வை பெற்றுத்தர வேண்டும் என முன்னெடுத்திருக்கின்றார்கள்?
முள்ளிவாய்க்கால் அழிவினை தங்கள் யுத்த வெற்றியாக கொண்டாடியவர்கள். எங்களை அடக்கியாள்வதை இலக்காக கொண்டவர்கள் எப்படி எங்களுக்கு சார்பான தீர்வுகளை பெற்றுத்தருவார்கள்?
இப்போது எதிராக இருக்கும் முஸ்லிம் அரசியல் வாதிகள் நாளை அவர்கள் செல்லப்பிள்ளைகளாகலாம்.
அப்போதும் இன்றைய இருப்பை விடவும் மட்டக்களப்பு வாழ் தமிழர்கள் நிலை மிகவும் கடுமையானதாக மட்டுமல்ல பரிதாபமானதாகவும், இருக்கும்.
மட்டக்களப்பு தமிழர்கள் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது. சோளியன் குடுமி சும்மா ஆடாது என புரிந்திடவும் வேண்டும்.
எதிரிக்கு எதிரி நண்பன் கதையெல்லாம் சிங்கள பேரின வாதிகள், பௌத்த இன வாதிகளுடன் எடுபடாது கண்டியளோ?