20 ஜூன் 2019

சோளியன் குடுமி சும்மா ஆடாது -கல்முனை பிரதேச செயலகம்

கல்முனையில் பதட்டம்
ஆயிரம் பேர் மெழுகுவர்த்திகளுடன் அணிவகுப்பு.
கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி புத்த பிக்கு உண்ணாவிரதம்.
கல்முனையில் சிங்கள பேரினவாதிகளின் சார்பானவரான,இனவாதியாக தன்னை வெளிப்படுத்திக்கொண்ட புத்த பிக்குவின் உண்ணாவிரதம் சொல்லும் செய்தி என்ன?
கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தரும் படியாக தமிழர்கள் சார்பான கோரிக்கை பல வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் சிங்கள தேரர் ஒருவருக்கு எங்கள் தமிழ் மக்கள் மேல் அக்கறை சுனாமி அலைகள் போல பெருக்கெடுத்து பெருகி இருக்கின்றது.
சுனாமி அலைகளால் எவருக்கும் நல்லது நடப்பதில்லை என்பதும் அழிவுகளே எஞ்சும் என்பது நாம் அனுபவித்து உணர்ந்தவைகளாக இருந்தாலும் எமக்கு எத்தனை பட்டாலும் புத்தி வருவதே இல்லை என மெய்பித்து கொண்டே இருக்கின்றோம்.
மட்டக்களப்பு தமிழர்கள் 
முழு முட்டாள்கள்.
மூடர்கள். 
பைத்தியக்காரர்கள் 
அறிவீலிகள்,
எலும்புத்துண்டுக்கு ஆசைப்படுபவர்கள்.
சூடு சொரனை இல்லாதவர்கள்
எத்தனை அடித்தாலும் தாங்குவார்கள்.

ஆம்... இப்படித்தான் அவர்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
ஏற்கனவே முஸ்லிம், தமிழ் மக்களுக்கிடையிலான முறுகல் நிலையும், பதட்டமும் தொடரும் சூழலில் தேரர்கள் இருவர் தமிழர்களுக்கு ஆதரவாக களமிறங்கி இருக்கின்றார்கள். பிக்குகளுடன் இணைந்து உண்ணாவிரதத்துக்கு ஆதரவாக தமிழ் பேசும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் சார்பான முக்கியஸ்தர்களும் இணைந்திருப்பது தமிழர்களை குறித்த சிங்களவர்களின் புரித்துணர்வு மேற்சொன்ன படியே என்பதை நிருபித்திருக்கின்றன.
இலங்கை அரசின் ஆட்சி அமைப்பே பௌத்த பிக்குகளின் காலடியில் என்பதை பண்டாரனாயக்கா காலம் முதல் உணர்ந்து தான் இருக்கின்றோம்.
சிங்கள பௌத்த பிக்குகள் இலங்கை அரசினை ஆட்டிப்படைக்கும் வல்லமை வாய்ந்தவர்கள் என்பதை கடந்த மாத உண்ணாவிரத நாடகமும், ஒட்டுமொத்த முஸ்லிம் அமைச்சர்களின் ராஜினாமாவும் மெய்ப்பித்திருக்கின்றார்கள்.

சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை. வடகிழக்கில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம்,வடகிழக்கு இணைப்புக்குறித்த எமது நியாயமான கோரிக்கைளினை இப்பிக்குகள் எப்படி கையாண்டார்கள்?
இதே தேரர்கள் எந்த விடயத்தில் எங்களுக்கான தீர்வை பெற்றுத்தர வேண்டும் என முன்னெடுத்திருக்கின்றார்கள்?
முள்ளிவாய்க்கால் அழிவினை தங்கள் யுத்த வெற்றியாக கொண்டாடியவர்கள். எங்களை அடக்கியாள்வதை இலக்காக கொண்டவர்கள் எப்படி எங்களுக்கு சார்பான தீர்வுகளை பெற்றுத்தருவார்கள்?
இப்போது எதிராக இருக்கும் முஸ்லிம் அரசியல் வாதிகள் நாளை அவர்கள் செல்லப்பிள்ளைகளாகலாம்.
அப்போதும் இன்றைய இருப்பை விடவும் மட்டக்களப்பு வாழ் தமிழர்கள் நிலை மிகவும் கடுமையானதாக மட்டுமல்ல பரிதாபமானதாகவும், இருக்கும்.
மட்டக்களப்பு தமிழர்கள் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது. சோளியன் குடுமி சும்மா ஆடாது என புரிந்திடவும் வேண்டும்.
எதிரிக்கு எதிரி நண்பன் கதையெல்லாம் சிங்கள பேரின வாதிகள், பௌத்த இன வாதிகளுடன் எடுபடாது கண்டியளோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!