30 நவம்பர் 2015

விடை தருவார் யாரோ?

 துளித்துளியாய் துளிர்த்திடும் சிந்தை
மொட்டு விரிதே மலர்ந்திடும் மனதில்
கிடு கிடுவென தோன்றிடும் வார்த்தை
படபடவென்றே எழுதிடத்தோன்றும்!

விடுதலை தேடிய விழிகளில் ஏக்கம்
விரைந்தழிந்து ஒழிந்திடுமோ?
தமதுயிர் மண்ணில் விதைத்தவர் உணர்வு
சடுதியில் கனவாய் அழிந்திடுமோ?

இடிந்தது கோட்டை முடிந்தது வாழ்வென
அனைத்துமே ஒருபிடி சாம்பலாய் மாறிடுமா?
சிலிர்ப்புடன் எழுந்திட்ட இலட்சிய பேரணி
இடை நடுவில் துவண்டு இறந்திடுமோ?

எமதுயிர்ப்பான இளைஞர்கள் உயிரது
மண்ணோடு மண்ணாய் போய் விடுமோ?
ஈழத்தாயவள் என்றொரு சொல்லுக்கு
ஈமக்கிரியைகள் நடந்திடுமோ?

மரணத்தை நேசித்த மாவீரர் விதைத்தவை
வீணாய் மண்ணில் போய் விடுமோ?
விலை மதிப்பில்லா உயிரின் மதிப்பது
வீம்பாய் போரிட்டு அழிந்திடுமோ?

துளித்துளியாய் துளிர்த்திடும் சிந்தை
மொட்டு விரிதே மலர்ந்திடும் மனதில்
கிடு கிடுவென தோன்றிடும் வார்த்தை
படபடவென்றே எழுதிடத்தோன்றும் !

கனவுகள் சிதைந்து காற்றிலே மிதந்து
சடுதியில் மறைந்தே போனாலும்
பனி மலை உருகிடும் வேகம்
பல கவிதைகள் படைத்திடத்தோன்றும்!

பறவைக்கு கூட சொந்தமாய் கூடு
பாரினில் உண்டாம் அறிந்தோம்
ஈழத்தமிழருக்கென்றோ ஆறடி நிலமும்
வாடகை வீடாம் அறிவோம்!

விழிகளில் ஈரம் காய்ந்திடுமுன்னே
விடுதலை உணர்வை தொலைத்தோம்
வழிகளிலெல்லாம் முட்புதரென்றே
விலகியே தூரமாய் நடந்தோம்!

எதிரியின் முன்னே ஏமாளியென்றே
இருப்பிடம் விட்டே அகன்றோம்
அகதியென் பட்டம் கலாசாலை
சென்று கற்றிடாமலே பெற்றோம்!

ஒரு நொடிப்பொழுதில் அனைத்தையும்
இழந்த அவஸ்தை எங்கே புரியும்
அகதியின் துயரதை கூறுவதென்றால்
ஆயிரம் வார்த்தைகள் பிறக்கும்!

துளித்துளியாய் துளிர்த்திடும் சிந்தை
மொட்டு விரிதே மலர்ந்திடும் மனதில்
கிடு கிடுவென தோன்றிடும் வார்த்தை
படபடவென்றே எழுதிடத்தோன்றும்!

25 நவம்பர் 2015

நெஞ்சம் மறப்பதில்லை!

உயிருடலில் இருக்கும் வரை
உணர்விருக்கும்.
உணர்வென்னில் உள்ளவரை
உறவிருக்கும்
உறவில்லையென்றானால்
உணர்வாய் நானில்லை.
உணர்வுடனே  சொல்லிடலாம்
உரிமையாய் கேட்டிடலாம்
உள்ளமது சொன்னபடி
உண்மைதனை மறந்திடலாம்..!

தேவைகள் தேவதைகளாய்
உருப்பெறும் போது
தேடலுடன் நாடுகின்றோம்
பேசாத ஒரு நொடியில்
அசைவற்று போனதென
அன்பு வார்த்தை பல சொல்லி
அச்சமுகம் தோன்றுவதை
நெஞ்சமதில் விதைக்கின்றோம்.
வஞ்சமில்லா அன்புணர்ந்து
விதைப்பதுவே விளைவாகும்.

விளைவதெல்லாம் கனிதரும் தான்
விலைகளில்லா அன்பாயிருந்தால்..!
விலகல் சொல்ல ஆயிரம்
காரணங்கள்  நமக்கிருந்தாலும்..
விளைந்து விட்ட  விதையதிலே
காரணங்கள் வெந்நீராய் தாம் பொழியும்
அறியாது செய்து விட்டோம்
சொல்லித்தப்ப மூவைந்து
வயதும் நமக்கில்லை
பட்ட விதை பட்டதுதான்!

பட்ட மரம்  முளை விடலாம்
பட்டவைகள் மறந்திடுமா?
சொன்ன வார்த்தை தடம்மாறி
தந்த காயம் அழிந்திடுமா?
விதைகளெல்லாம் விளைவதில்லை
என்ற உண்மை புரிந்திடுமா?
இறைவனிடம் சரணடந்தாலும்
வாக்கு தனை மறந்து மனம்
மாறிட்டதை உணர்ந்திடுமா!
இழந்ததென்ன புரிந்திடுமா?


ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க!23 நவம்பர் 2015

நாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்! பாரதியார் சொன்னதென்ன?

பெண் சுதந்திரம் என்றால் எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும் என பாரதியார் கூறினார்?

அன்றையகாலகட்டத்தில்அதாவதுபாரதியார்வாழ்ந்தகாலகட்டத்தில் பெண்கள்அடக்கியாளப்பட்டார்கள்.அடிமைகளாக நடத்தப்பட்டார்கள். வீட்டுக்குள் அடக்கி வைக்கப்பட்டார்கள். உடன்கட்டை ஏற கட்டாயப் படுத்தப்பட்டார்கள், பால்ய விவாகத்துக்குட்படுத்தபட்டார்கள், அப்படிப்பட்ட சூழலில் அவர்களை தட்டியெழுப்ப பாரதியார் பல புரட்சிகர பாடல்களை இயற்றியதோடன்றி அவர் மகள் தங்கம்மா தைரியமான வீரமகளாக வாழவேண்டும் என்றே விரும்பினார்,அதையே தன் மனவெளிப்பாடாக அவர் வெளிப்படுத்தி இருப்பதினை கீழே வரும் பாடல்களை உணர்ந்து, கருத்தோடு படித்து பார்த்தால் புரிந்திடலாம் 

இன்றைய பெண்கள் அவர் விரும்பிய இலக்கினை அடைந்தோமா என தம்மைத்தாமே ஆராய்ந்திடலாம் 

அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு எனும் நாற்குணம் கொண்டு பெண்களை அடக்கி ஆள முன் இந்த நான்கு குணங்கள் குறித்தும் பாரதியாய் சொன்னதென்ன என பார்ப்போமா?

மாதர்க்கு ண்டு சுதந்திரம் என்று
நின் வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல் 
நாதந் தானது நாரதர் வீணையோ? 
நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ?
வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியே 
மேன்மை செய்தெமைக் காத்திடச் சொல்வதொ?
சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமொ? 
தையல் வாழ்கபல் லாண்டுபல் லாண்டிங்கே! 

அறிவு கொண்ட மனித வுயிர்களை 
அடிமையாக்க முயல்பவர் பித்தராம்; 
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர் நேர்மை 
கொண்டுயர் தேவர்க ளாதற்கே, 
சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள் தீயிலிட்டுப் 
பொசுக்கிட வேண்டுமாம்;
நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ!

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் 
அறிவி லோங்கிஇவ் வையம் தழைக்குமாம்
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப் 
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்
ஞான நல்லறம் வீர சுதந்திரம் 
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்; 
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ! 

நாணமும் அச்சமும் என்று சொல்லியிருக்கிறாரா அல்லது நாணும் அச்சமும் என்று சொல்லியிருக்கிறாரா?இதன் முழுமையான அர்த்தத்தினை நாம் புரிந்திருக்கின்றோமா?

நாணுமா?நாணமா? இவ்வரிகள் மூலம் என்ன சொல்ல வருகின்றார் பாரதியார்?நாணம் எனில்வெட்கம் என இப்பாடல் சொல்கின்றதா? 

நாணம் என்றால் என்னவென குறள் சொல்வதை பார்த்தோமானால்... 

பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்

தனக்கான கடமையை செய்யாமல் பெண்ணை நாடி அவள் பின்னால் திரிபவனுடைய நிலை வெட்கித் தலைகுனிய வேண்டியதாக ஆகிவிடும்.

நாணும் என்பது இங்கே மரியாதைக்குரிய பாரட்டத்தக்க விதத்தில் சொல்லப்படாமல் தலைகுனிய வேண்டிய ஒரு சொல்லாக கணிக்கப்படுவதைக்கவனித்தால் நாணும் அதாவது தலைகுனிந்து நிற்கத்தக்க செயலும் அச்சமும் பெண்களுக்கு வேண்டியதல்ல நாய்களுக்குரியதே என பாரதியார் சொன்னதாக கொள்ளலாம்

அப்படியெனில் பெண்களுக்கு வெட்கம் வேண்டியதில்லை என பாரதியார் சொல்கின்றார் என எடுத்து கொள்ளலாமா?

நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்; 
நீசத் தொண்டு மடமையும் கொண்டதாய் தலத்தில் 
மாண்புயர் மக்களைப் பெற்றிடல் சாலவே யரி 
தாவதொர் செய்தியாம்; 

குலத்து மாதர்குக் கற்பியல் பாகுமாம்; 
கொடுமை செய்தும் அறிவை யழித்துமந் நலத்தைக் 
காக்க விரும்புதல் தீமையாம்;
நங்கை கூறும் வியப்புகள் கேட்டீரோ! 

ஞான நல்லறம் என தன் ஞானத்தினால் தன் வீட்டை நடத்தி தன் பிள்ளைகளை நற்பழக்கவழக்களுடையவர்களாய் கற்பித்து எதிர்கால சந்ததியை திறம்பட உருவாக்கும் நல்ல குடிப்பெண்ணாய் இருப்பவளிடம் நாணமும் இருக்கும்.ஆனாலும் அவள் நாணும் படியாய் இருக்காது!

தெருவுக்கு தெரு மாதர் சங்கங்களை உருவாக்கி நாட்டை மாற்றுகின்றோம் சமூக சேவை செய்கின்றோம் என தம் சொந்த குடும்பத்தினை கவனிக்காது  ஊருக்கும் உலகுக்கும் சேவையாற்றுதல் பெண் சுதந்திரமாகுமா? நம் பிள்ளைகளை காவாலிகளாக விட்டு விட்டு ஊரை திருத்த புறப்படுதல் பெண் சுதந்திரமாகுமா? 

புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும் 
பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச் சதுமறைப்படி 
மாந்தர் இருந்தநாள் தன்னி லேபொது வான் வழக்கமாம்; 
மதுரத் தேமொழி மங்கையர் உண்மைதேர் 
மாத வப்பெரி யோருட னொப்புற்றே 
முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய முறைமை
மாறிடக் கேடு விளைந்ததாம். 

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், 
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், 
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் 
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்; 

புதுமைபெண்கள் என கூறிக்கொண்டு வீட்டையும் குடும்பத்தினையும் கவனிக்காது  பொய் பேசித்திரிவதெல்லாம் பெண் சுதந்திரமாகுமா? ஆணவமும், செருக்கும்,  யாருக்கும் பயப்படாத தன்மையும் என்றுமே பெண் சுதந்திரமாகாது என எத்தனை அழகாக சொல்கின்றார். 

அப்படி எனில் எது தான் பெண் சுதந்திரம்? 

பெண் சுதந்திரம் எப்படி இருக்க வேண்டும் என பாரதியார் சொல்வதை கேளுங்கள்!
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில் 
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை 
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம் 
உதய கன்னி உரைப்பது கேட்டீரோ!

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும், 
ஓது பற்பல நூல்வகை கற்கவும், 
இலகு சீருடை நாற்றிசை நாடுகள் 
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் 
பாரத தேசமோங்க உழைத்திடல் வேண்டுமாம்; 
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை 
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம். 

சாத்தி ரங்கள் பலபல கற்பாராம்; 
சவுரி யங்கள் பலபல செய்வராம்; 
மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்; 
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்; 
காத்து மானிடர் செய்கை யனைத்தையும் 
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்; 
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்; 

இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ?

பெண் சுதந்திரம் என்றால் என்ன என இதை விடயாராலும்விளக்கிட இயலுமா என எனக்கு தெரியவில்லை. ஆனால் தன் வாழ்க்கையை சரியாக புரிந்து இதன்படி தம்மை தம் அறிவை வளர்த்து கொண்டோராய் இருக்கும் பெண்களை விரல் விட்டே எண்ணி விடலாம்.

கற்றல் என்பதை வெறும் பள்ளிப்படமாகவும்,தம்எதிர்கால
சம்பாத்தியத்துக் குரியதாகவும் மட்டும் நினைத்து கற்போராய் இருக்கின்றோம். உலக அறிவில் இன்னும் இன்னும் வளர வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

கல்பனாசாவ்லாவையும்,பி.டிஉஷாவையும், சானியாவையும் சாதனைப்பெண்ணாக காட்டும் நாம் நம்மை அததனை உயரத்துக்கு வளர்த்திட முடியாவிட்டாலும் மூட நம்பிக்கைகளில் மூழ்கிடாமல் அனைத்தினையும் அறிவியல் நோக்கோடு ஆராய்ந்தறிந்து  நம் அறியாமையை நீக்கி அறிவில்சிறந்து நம்மையும் நம் சந்ததியையும் உயர்த்திட முடியாதது ஏன்?

இணையத்திலும் பல பெண்கள் எழுதுகின்றோம், அதிலும் பல கட்டுப்பாடுகள் வைத்து சமையலும், அழகுக்கலையும், அரட்டைக்கும், கவிதைகள் எழுதவும் தான் பெண்களால் முடியும் பெண் என்றால் இப்படித்தான் எனும் வரையைறையை வகுத்து அதனுள் நடக்கும் படி நம்மை நாம் ஏன் அடிமைப்படுத்த வேண்டும்.  நமக்கான் உலகம் விசாலமாய் நம் அறிவை வளர்ப்பதற்கு ஏதுவாய்  இருக்கும் போது   நம்மையே நாம் ஏன் ஒரு பொந்தினுள் அடக்கிட வேண்டும். 

இங்கே நான் பல பெண்களைபார்க்கின்றேன்,அழகாகஇருப்பார்கள், காலேஜ் முடித்து பட்டம் பெற்றிருப்பார்கள், தம்மை அழகு படுத்திட காட்டும் ஆர்வத்தினை  அறிவை வளர்த்திட காட்டுவதில்லை. கிணற்று தவளைகளாக வேலைக்கு போனாலும் தம் வேலை சார் துறை தவிர்த்து வேறேதும் அறியாதோராக இருக்கின்றார்கள். கணவரை சார்ந்தே வாழ்வதால் கணவருக்கு தீடிர் உடல் நலமின்மை  அல்லது இழப்புகள் ஏற்படும் போது கையறு நிலைக்கு தள்ளப்பட்டு தவிர்த்து போகின்றார்கள். தம் அன்றாட வீட்டு நிர்வாகம்,வரவு செலவு  குறித்து கூட அறியாதோராய் இருக்கின்றார்கள். 

 நான் அனைவரையும் சொல்லவில்லை.  பெரும்பாலானோர் இப்படி இருப்பதை காணும் போது  வருந்துகின்றேன் உலகம் இத்தனை மாறினால் என்ன?சுதந்திரம் எஞும் போர்வையில் தடம் மாறாமல் பெண்ணானவள் வாழ்க்கையில் செல்ல வேண்டிய தூரம் அதிகம் தான். 

சிந்திப்போம் செயல் படுவோம்!

உங்கள் குட்டுக்களையும் தட்டுக்களையும் தயங்காது பதிவாக்குங்கள் நட்பூக்களே!

22 நவம்பர் 2015

இன்றைய சூழலில் பெண்கள்! எப்படி இருக்கின்றார்கள்? எப்படி இருக்க வேண்டும்?

"மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திடல் வேண்டுமம்மா "

இன்றைய சூழலில் பெண்கள் பொறுமை இல்லை, புரிதல் இல்லை, விட்டுகொடுத்தல் இல்லை,அன்பில்லை.அடக்கமில்லை எல்லாமே தங்கள் இஷ்டப்படி நடக்க வேண்டும் எனும் போக்கு மொத்தத்தில் சுயநலத்தின் முழுவடிவமாய் தனக்கு மட்டும் தான் என நடந்து கொள்கி்றார்கள்!இல்லையில் தம் இயலாமையை நிறைத்து நிற்கின்றார்கள். 

முற்காலத்தில் படிப்பறியாது வீட்டுக்குள் இருக்கும் பெண்களிடம்இருந்த நற்குணங்கள் எல்லாம் மாயமாகிப் போனது.பாரதியின் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்.அச்சம், பயிர்ப்பு, நாணம், மடமென சொல்லப்பட்ட நாற் குணங்களும் தப்புத்தப்பாய் புரிந்து கொள்ளப்பட்டு இன்றைய எதிர்கால பெண்கள் சந்ததி எதைநோக்கி போகிறது என அவர்களுக்கேதெரியாமல் போய்க்கொண்டிருக்கிறது

எங்கே நிமிர்ந்த பார்வை,நேர்கொண்டநன்னடைவேண்டுமோ அங்கே மீறப்படுகிறது. எங்கே அச்சமும்,மடமும்,நாணமும் தேவையோஅங்கே அவையனைத்தும் காலில் மிதிபடுகின்றது! நிமிர்ந்து தைரியமாக நிற்க வேண்டிய இடத்தில் அவை வெளிப்பட்டு பெண் எனில் பேதைகளோ என எண்ணும் படி அவர்களின் மேதைத்தனம் மறுதலிக்கப்படுகின்றது. 

பெண் சுதந்திரம்,பெண்கல்வி எனபதை தவறாக புரிந்து கொண்டு தன்னம்பிக்கை இல்லாதோராய் ஒடிந்து விழுவோராய் இக்கால பெண்கள் இருக்கிறார்கள்!புலியை முறத்தால் அடித்து விரட்டினாள் என நம் பெண்களை சொல்வார்கள்.இன்றைக்கு அப்படி யார் இருக்கின்றார்கள்?

அன்பும்,அறிவும், பொறுமையும் ஆளுகை செய்ய வேண்டியவளிடம் ஆணவமும்,பொறாமையும்,பெருமையுமே குடிகொண்டுள்ளது!

ஒரு பெண்ணால் முடியாதது எதுவுமே இல்லை. தாயின் கருவின்றி எவரும் வெளியே வருவதுமில்லை எனும் போது தன்னிடம் இருப்பது என்ன?தனக்கான தேவை என்ன வென்பதைபெண்ணே உணராதவளாயிருக்கிறாள்.

அன்பு எனும் அருமையான ஆயுதம் தங்களிடம் இருப்பதை புரிந்திடாமல் அதிகாரம் செய்து சாதிக்க முற்படும் போது குடும்பங்கள் உடைகின்றன்.வேற்றுமைகள் தோன்றுகின்றன.பெண் என்பவள் அன்பால் அக்குடும்பத்தினை கட்டியாள வேண்டுமே தவிர ஆணவத்தினால்அடக்கி ஆளநினைக்கக்கூடாது என்பதோடு
நம்பத்தகுந்தவளாக தான் இருப்பதோடு மட்டுமல்லதன்னை சார்ந்தோரையும் நம்புபவளாக தவறுகண்டுகண்டித்து மன்னிப்பவளாக் இருக்க வேண்டும்.சந்தேகப்படுபவளாக இருக்க கூடாது சந்தேகம் வாழ்க்கைக்கே கேடு என்பதை அவள் உணர வேண்டும். அதே நேரம் அனைத்தையும் நம்பும் வெகுளியாகவும் இருக்க கூடாது!

பொதுவாகவே பெண்களிடம் கூரிய அறிவும்,கவனிக்கும் திறனும் ஆண்களை விட அதிகமாய் இருக்கும் போது  தன்னுடன் பழகும் ஆண் எப்படிபட்டவன் என்பதை பல காலம் பழகித்தான் தெரிந்து கொள்ளலாம என்பதில்லை.ஒருசிலவார்த்தை,சில செயல்கள்,கண் பார்வை போகுமிடம் என ஒரு சில நொடிகளிலேயே ஒரு ஆண் நம்பதகுந்தவனா இல்லையா என முடிவெடுத்து விலகிச்செல்ல முடியும்.அக்கால பெண்களிடம் காணப்படும் இந்த அகக்கண் உணரும் தன்மை இக்கால பெண்களிடம் இல்லை!அத்தனை கூரிய சக்தியை கடவுள் பெண்ணீன் படைப்புடனே இணைத்தே படைத்திருக்கும் போது விளக்கினை தேடிப்போய் விழும் விட்டீல்களாய் இருக்கின்றார்களே?

அவள் அணியும் ஆடைகள் தான் அவள் மதிப்புக்குரியவள் என்பதை காட்டும்.அவன் புன்னகைதான் அவளுக்கு கிரீடம்.ஆனால் இப்போதெல்லாம் பாதி உடல் வெளியே தெரியும் படியாய் ஆடைகள் இருப்பதும்.அதுவே பலவிபரீதங்களுக்கு காரணமாய் இருப்பதும்றியாமலா இருக்கின்றார்கள்?அவள் அணியும் ஆடை அவள் மீதான மதிப்பை தருவதாய் இல்லையே! உடல் அழைகினை வெளிக்காட்டும் இறுக்கிபபிடித்த ஆடைகளும் முன்பின் உடலழகை வெளிக்காட்டும் படியாய் உடையமைப்புமாய் தன் கவரிச்சியினால் தன்னையே கேலிப்பொருளாக்குபவளாயும் தான் பெண் இருக்கின்றாள்! 

இறைவன் படைப்பில் பெண் பலவீனமானவளாய்தான் படைக்கப்பட்டிருகிறாள்! எனினும் உலகில் இருக்கும் வலிகளை விட மிகபெரிய வலியாம் பிரசவ வலியை தாங்குமவள் சின்ன விடயங்களில் சோர்ந்து தடம் மாறுகின்றாள். அவளுக்கான மன் உடல் ரிதியான் பிரச்சனைகள்அனேகம்!தாய்மையெனும்நிறைவு அவளிடமிருப்பதால் 
அவளுக்கான பணி உணர்ந்து அவள் செயல் பட வேண்டும். 

யாரானாலும்  பெண்கள் தங்கள்  குடும்ப விடயம், அந்தரங்கம் எல்லை மீறிப் பேசக்கூடவே கூடாது. அது போல் எடுத்தவுடன் தன் மனைவி தன் வீட்டுபெண்களை குறைவாய் சொல்லி அனுதாபம் தேட முயல்வோர். தன்மீது அனுதாபம் வேண்டி பழைய கதை சொல்ல முயலும் அந்நிய ஆண்களிடம் கவனமாகவே இருக்க வேண்டும் என்பதை விட அப்படிபட்டவர்களை ஆரம்பத்தில் இனம் கண்டு விலகி விட வேண்டும்.பாவம் பரிதாபம் பச்சாதாபம் பார்த்து தம் வாழ்க்கையை அழித்து கொள்ளல் கூடாது. 

ஒரு பெண் ஒரு ஆணை நம்பி பாசம்,நட்பு பாராட்டி விட்டால் அவ்வளவு சீக்கிரம் அந்த நட்பை அன்பை உதறிச்செல்லாத  உறுதியுடையவளாய் இருந்தால் அவனிடம் இருக்கும் கெட்ட சுபாவங்கள் கூட நல்லதாக மாற வாய்ப்பிருக்கும். வாழ்வில் மன உறுதி, மனதிடம் நம்பிக்கை வேண்டும்.  அன்புக்கு அடங்கலாம், அதுவோ கழுத்தை இறுக்கும் கயிறாகாது அடக்கியாளாது பொஷிசிவ்  தன்மை யாக்காது அன்னிய ஆடவருடனான பழக்கங்களுக்கு எல்லை கட்டாயம் வேண்டும்.

அதையும் மீ்றி நம்பிக்கை  துரோகங்களானால் எதிர்த்து நிற்க தெரிய வேண்டும். பயந்து ஒளியகூடாது. சட்டங்கள் பெண்களுக்கு சாதகமாய் இருப்பதால் தனனைபோல் இன்னொரு பெண் பாதிக்கப்படகூடாது எனும் நல்லெண்னம் கொண்டு போராட முயல வேண்டும். தன் வாழ்க்கையில் நடந்தவைகள் இன்னொரு பெண்ணுக்கும் நேரிடாமல் காத்திட வேண்டும் எனும் பொது சிந்தையோடு அவள் செயல் இருக்க வேண்டும். 

35 வயதுக்கும் மேல் குழந்தைகள் வளர்ந்த பின் தனனை யாரும் புரிந்துக்கவிலலையே? மனம் விட்டு பேச யாருமில்லையே என்பதால் தான் அவள் மனம் அல்லல் அடைகிறது.வழி தடுமாறி அன்னிய ஆடவர் அன்பை நாட காரணம் ஆகின்றது. அந்த சூழலில் கணவன் அன்பும் வீட்டார் அரவணைப்பும் கிடைத்தாலே போதும். ஆனால் பெரும்பாலான வீட்டுஆண்கள் இதை உணர்வதே இல்லை என்பது தான் சோகமானது. 

முற்காலத்தில்கூட்டுக்குடும்பமாயிருந்தார்கள்,ஆயிரம் சண்டைசச்சரவு இருந்தாலும் மனம்விட்டுப்பேச   ஆளிருக்கும்.

இப்போதுஅப்படி இல்லையே??!!!

35 வயதிலிருந்து 40,45 வயது வரையான கால கட்டம் பெண்கள் தாண்டவேண்டிய கடுமையான காலம்.குழந்தை வளர்ப்பு,வீட்டுவேலை,வெளிவேலை,பள்ளிகாரியம், உடல் சோர்வு என வாட்டி எடுக்கும்.அந்த நேரம் அவளை புரிந்து தாங்கிட்டால் போதும்.அவளை ஜெயிக்க யாராலும் முடியாதே!அவளை உணரும் குடும்ப சூழலும் இன்றில்லாமல் தான் போகின்றது!

பெண் என்பவள் காற்று மாதிரி,சுழன்று அடித்தால் வீடும் நாடும் நாசம்.இனிய சாமரமாய் அவள் விசினால் வீடும் நாடும் வளம்பெறும். இதை அவள் உணர்ந்து  தன் தேவை எதுவென் கேட்டு பெற முயலாத வரை அவள் கற்ற கல்வியும், அவளுக்காக சட்ட ஒதுக்கீடும் பயனற்றதாயே இருக்கும்.

ஒருபெண்ணின்அன்பு,தாயாய்,தங்கையாய்,தோழியாய், மனைவியாய், மகளாய்  எந்த ரூபத்தில் வந்தாலும் அவள் அன்புக்கு அடங்காத ஆண் இந்த உலகில் இல்லைவே இல்லை எனும் போது தாய்மையோடு அன்பெனும் ஆயுதம்  அவளிடம் உண்டு.சரியாத புரிதல் இருந்து விட்டால் எந்த ரூபத்திலாவது நல்ல பெண் அன்பை பெற்ற ஆண்மகள் வாழ்க்கையில்தோல்வியை சந்திக்கவே மாட்டான். 

பெண்  என்பவள் யாருக்கும் அடிமையாக இல்லை.தன் குடும்ப நலன் வேண்டி அவளாகவே அடங்கிவாழ்ந்தாள் என உணர்ந்து இல்லறத்தினை நல்லறமாக்கி அன்புக்குஅடங்கி அன்பால்ஆளவேண்டும்!

சேனைத்தமிழ் உலாவில் ஒரு கேள்வி பதில் திரியில்   இன்றைய சூழலில் பெண்கள் வீட்டிலும்(குடும்பத்திலும்) வீட்டிற்கு வெளியேயும் எப்படி நடந்துகொள்கிறார்கள்? எப்படி நடந்துகொள்ளவேண்டும்? என ஒரு கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது? 

அங்கே இட்ட பதிலை கொஞ்சமாய் திருத்தி இங்கே பதிந்துள்ளேன்!

உங்கள் கருத்தினை சொல்லுங்கள் நட்பூக்களே!

காவியமா இவை ஓவியமா?

இவை ஓவியங்களா இல்லை இயற்கையின் திருவிளையாடலா என புரியாத வண்ணம்
இயல்பாய் இருந்ததனால் என்னை கவர்ந்தன. 


கடலலை காட்சிகள் அத்தனை தத்ரூபமாய்

இருப்பது  நிஜம் போல் உணர வைக்கின்றது!


உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் ரசியுங்கள்!

Outstanding Paintings by Joel Rea 

20 நவம்பர் 2015

சிறுவர்பாடல்கள்: புகழுக்கு மயங்காத காகம்!

உங்களுக்கெல்லாம் காக்கா நரிக்கதையில் நரியிடம் காகம் ஏமாந்த கதை தானே தெரியும்.ஆனால் எனக்கு தெரிந்த காகமோ ரெம்ப புத்திசாலிக்காகம் என்பதால் நரியார் தான் ஏமாந்தாராம்.

எப்படி?

ஒரு பாடலில்

படம் இணையத்திருந்து

வள்ளியம்மைப்பாட்டி 
வடை சுட்டு விற்பாள்
பாட்டிசுட்ட வடையை 
தினம் ருசித்துத்தின்னும் காகம்!   

பாட்டி தந்த வடையொன்றை 
தின்னச்சென்ற காகத்தை 
குள்ள நரியும் கண்டது 
தந்திரமொன்று செய்தது! 

காக்கை அக்கா நீ பாடு 
காது குளிர நான் கேட்பேன் 
இனிமையான உன் குரலோசை
கேட்டு ரெம்ப நாளாச்சே!

என்றே நரியும் சொன்னதனால் 
நன்றே நினைத்த காக்கையது 
வடையைக்காலில் வைத்துக்கொண்டே
கா...கா வென்றே பாடியது! 

ஏய்க்க நினைத்த நரியாரோ 
ஏமாறித்தான் போனாராம் 
புத்தியான காக்கையது
புகழுக்கெல்லாம் மயங்காதாம்!
19 நவம்பர் 2015

சிறுவர் கதை:பட்டணத்து எலியும் பட்டிக்காட்டு எலியும்

பட்டணத்து எலியும் பட்டிக்காட்டு எலியும்நண்பர்களாக பழகி வந்தது, ஒருநாள் பட்டிக்காட்டு எலி தன் பட்டணத்து சினேகிதனை தன் ஊருக்கு விருநதுக்கு அழைத்தது. விருந்துக்கு வந்த பட்டணத்து எலியும் பட்டிக்காட்டு எலியும் சேர்ந்து அங்கிருந்த வயல் வெளிகளில் வளர்ந்திருந்த நெற்கதிர்களையும்,காய்கனிகளையும் கொறித்து தின்று பயமில்லாமல் தம் இஷ்டம் போல் ஓடி விளையாடியது. 
அப்போது பட்டணத்து எலி இதெல்லாம் ஒரு விருந்தா? சுவையே இல்லை!இப்படியா விருந்து வைப்பது? பட்டணத்தில் வந்து பார்!எத்தனை விதமான உணவுகள் சீஸ்,தேன்,பால் சாக்லேட் என சுவையான உணவுகளேல்லாம் இருக்கின்றது!இதென்ன வாழ்க்கை!தினம் தினம் இங்கே கிராமத்தில் வயலில் ஓடி ஓடி களைத்து ஒவ்வொன்றாக பொறுக்கி தின்னும் நிலை உனக்கு கஷ்டமாக இல்லையா?
வா உடனே பட்டணத்துக்கு.விருந்தென்றால் என்னவென்று காட்டுகிறேன்.வாழ்க்கை என்றால் என்னவென்று நீ நேரில் வந்துஅனுபவித்து பார் என்று தான் இருந்த பட்டணத்துக்கு வரும்படிஅழைத்தது!
பட்டிக்காட்டு எலிக்கு பட்டணத்து எலி இப்படி சொன்னதும் ரெம்ப வெட்கமாக போய் விட்டதாம்.பட்டிக்காட்டு எலியும் பட்டணத்தில் ஒரு வேலையும் தேடி அங்கேயே செட்டிலாகி விட்டால் பட்டணத்து எலி மாதிரி தானும் ஜம்பமாக கூலிங்க் கிளாஸோட போன் எல்லாம் வாங்கி கொள்ளலாம் எனநினைத்து பட்டணத்தை பார்க்கும் ஆசையில் சந்தோஷமாக பட்டிக்காட்டை விட்டு பட்டணம் புறப்பட்டுபோனது! பட்டணத்து எலி ஒருபெரிய வீட்டிற்கு பின்னால் இருந்த பொந்தில வாழ்வதால் பட்டிக்காட்டு எலியும் அங்கே போனது!
பட்டிக்காட்டு எலியை வா வா என மகிழ்ச்சியோடு வரவேற்ற பட்டணத்து எலி தனனை தேடி வந்த பட்டிக்காட்டு எலிக்கு விருந்து கொடுக்க அந்த பெரிய வீட்டுக்குள் போய் வெண்ணெய் கேக்கு துண்டுகள் ரொட்டித்துண்டுகள், சீஸ்களை,சாக்லேட்களை எல்லாம் திருடிக்கொண்டு வந்தது. சாப்பாடு ரெடியானதும் இரண்டு எலியு்மாக சேர்ந்து சாப்பிட உட்காநதது. 
அப்போது தீடீரென மியாவ் மீயாவ் என்று சத்தம் வரவே இரண்டு எலியும் பயந்து போய் சாப்பாட்டை அப்படியே விட்டு விட்டு ஓடி ஒளிந்தது்!அந்த வீட்டுசொந்தக்காரர் வளர்க்கும் பூனை அது என்பதால் அது வீடு எங்கும் சுயாதீனமாய் திரியுமாம்.ரெம்ப திமிர் பிடித்த பூனை அது. 
இரண்டு எலிகளும் பூனைஅந்தப்பக்கமா போனதும் திரும்பி வந்து சாப்பிடஅமர்வதும் பூனை மியாவ் மியாவ் என வரும் போது எலிகள் ஒளிவதுமாக நிம்மதியில்லாமலே பயந்து பயந்து மெதுவாக த்தான் சாப்பிட முடிந்தது.பயத்தோடு சாப்பிட்டதனால் பட்டிக்காட்டு எலியால் சரியாக சாப்பிட முடியவில்லையாம். அதனோடு அடிக்கடி எழுந்து ஓடியதால் களைத்து போய் விட்டதாம்.  
கடைசியாக அந்தப்பக்கமா வந்த பூனை எலிகள் சாப்பிட்டுகொண்டிருந்த பக்கமாக வந்து எலிகள் திருடி அடுக்கி வைத்திருந்த சாப்பாட்டையெல்லாம் தட்டி சிதற அடித்து விட்டு மீதியை தானும் சாப்பிட்டே முடித்து விட்டது
எலிகளுக்கோகஷ்டப்பட்டு்திருடியும் சாப்பாடுகிடைக்கவில்லை என்பதோடு பூனை அருகில் இருப்பதால் நிம்மதியாக தூங்க முடியாமல் பயத்தில் திடுக் திடுக் என விழித்ததனால் உடம்பெல்லாம் நடுக்கம் வந்து விட்டதாம்.
மறு நாள் விடிந்ததும் பயத்தோடும் பசியோடுமிருந்த பட்டிக்காட்டுஎலி பட்டணத்து எலியை பார்த்து என் ஊரில் சாப்பாடு பால் சீஸ் பிரெட் போல் சுவையில்லாம இருந்தாலும். நிம்மதியாக சாப்பிடலாம் உன்னைப்போல பயந்து பயந்து சாப்பிட வேண்டாம். இதை பார்த்தா என் பட்டணம் பெரிது என்றாய்! சுதந்திரமில்லாமல் யாருக்கோ பயந்து பயந்து வாழும் உன் வாழ்வும் ஒரு வாழ்வா..!உனக்கு வெட்கமாக இல்லை. என் ஊரில் ராஜா போல் என் இஷ்டப்படி ஓடி விளையாடும் நான் எங்கே இப்படி அடிமை வாழ்வு வாழும் நீ எங்கே? இந்த வாழ்க்கையையா சொர்க்கம் என்பது போல் பெருமையாக சொன்னே!
எனக்கு சொர்க்கம் என் ஊரு தான்பா!
நான் என் ஊருக்கே போகிறேன் என்று அன்றே தன் ஊரைத்தேடி மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு ஓடியே போய் விட்டதாம்! 
இக்கதை நமக்கு என்ன சொல்வது என்ன..?
சொர்க்கமாயிருந்தாலும் நம்மூரு போல வருமான்னு நீங்க நினைக்கிறிங்க தானே?

18 நவம்பர் 2015

இதுவும் கடந்து போகும்

நம் வாழ்க்கையில்  நடக்கும் அனைத்தும் நம் நினைவில் நிலைப்பதில்லை. அதே நேரம்  நாம் எதை மறக்க நினைக்கின்றோமோ அவை தான் நம் நினைவில் சிலைபோல் நிலைத்து வலியைத்தரும். 

வலியைத்தரும் என்பதனால்  வலி தரும் நினைவுகளை வெறுக்கின்றோமா எனில் , இல்லை என தான் சொல்வோம். வெறுப்பவைகள் நம்முள் நுழைந்து வலி தருவதாய் இருக்காது.. வெறுப்பு பல நேரம் கசப்பை தருவதால் அவை நமக்குள் நிலைக்கும் வலியை தருவதும் இல்லை.  நாம் நேசிப்பவைகள் நேசிப்பவர்கள் நம்மை புரிந்திடாமல் போகும் போது இதுவும் கடந்து போகும் என சொல்தல் இலகுதான்.. !

ஆனால்..........?

இதுவும் கடந்து  போகும்

நிலையா இந்த உலகில் நிலைத்தவை தான் என்னே?
நிலைத்தவர்கள் தான் யாரோ?
கலையும் நினைவில் நிலையாய்,

நிலைத்து நிற்கும்
நினைவில் வலிகள் மட்டும் தானே
நிலையாய் என்றும் தொடரும்
நிலையா இவ்வுலகில் சிலையாய் நிலைத்தோரில்ல

கூறு போடும் நினைவாய் மாறும் மனித மனதில் மாறாதிருப்பதெல்லாம் தொடரும் வலிகள் தானோ?

பாதை எல்லாம் வாதை!
தெரிந்தே செல்லும் பேதை மனதை அடக்கியாள முடியா கோழை!
காதல் என்ற பெயரில் கந்தலாகும் அன்பு
காட்டும் அன்பு கூட காதலென சொல்லும்
தாகம் தீர்ந்த பின்னே  தூரமாகி போகும்!

தொலைந்த நினைவை தேடியலையும் மனது கலையும் விந்தை என்னே?
சிந்தை செயல்கள் எல்லாம் மந்தையாய் ஓரிடத்தில்
விந்தை செய்யும் நிலையை கடத்தல் என்ன கடிதோ?
கானல் நீர் தான் எல்லாம்!
பொய்யாய்ப்போகும் மெய்கள்

மெய்யை துடிக்க வைக்கும்!
போதும் இந்த வேசம்,
இதுவும் கடந்தே போகும்

எனது வரிகளோடு... இந்த பாடலையும் கேட்டு பாருங்கள். கண்ணீரை போலே 
வேறு நண்பன் இல்லை 
கற்றுக்கொள் துன்பம் போலே 
பாடம் இல்லை
உன் நெஞ்சின் சோகம் எல்லாம் 
கேட்டுக் கொள்ள 
உனக்கிங்கே உன்னை தவிர 
யாரும் இல்லை
பணம் ஒன்றே எப்போதும் 
வாழ்க்கை இல்லை 
புரிந்தாலே இதயத்தில் 
துயரம் இல்லை

கண்ணீரை போலே 
வேறு நண்பன் இல்லை 
கற்றுக்கொள் துன்பம் போலே 
பாடம் இல்லை

ஒரு அலை மீது போவோம் 
இலை போல தானே 
உலகில் மனிதன் வாழ்க்கை 
போகும் வரை போவோம் நாமே
அதில் அகங்காரம் என்ன? 
அதிகாரம் என்ன? 
அன்பின் வழியில் சென்றால் 
கரை சென்று சேர்வோம் நாமே
கவலை இன்றி உலகத்திலே 
மனிதன் யாரும் கிடையாது 
கவலை தாண்டி போவதானால் 
தாமரை பூக்கள் உடையாது
வாழ்க்கை என்னும் கண்ணீரை 
காயத்தோடு தொட்டு பார் 
காலமோட காயம் எல்லாம் 
மாயமாய் மறையும் பார்

கண்ணீரை போலே 
வேறு நண்பன் இல்லை 
கற்றுக்கொள் துன்பம் போலே 
பாடம் இல்லை

தாய் கருவோடு வாழ்ந்த 
அந்நாளில் தானே 
கவலை ஏதுமின்றி 
கடவுள் போல் வாழ்ந்தோம் நாமே
பின் காசோடு கொஞ்சம் 
கனவோடு கொஞ்சம் 
நம்மை நாமே இன்று 
தேடி தான் தொலைகின்றோமே
வழியில் நீயும் வளையாமல் 
மலையில் ஏற முடியாதே 
வலிகள் ஏதும் இல்லாமல் 
வாழ்க்கை இங்கே கிடையாதே
வாசல் தாண்டி போகாமல் 
வானம் கண்ணில் தெரியாதே 
காசும் பணமும் எப்போதும் 
கானல் நீரை மறைந்திடுமே

கண்ணீரை போலே 
வேறு நண்பன் இல்லை 
கற்றுக்கொள் துன்பம் போலே 
பாடம் இல்லை
உன் நெஞ்சின் சோகம் எல்லாம் 
கேட்டுக் கொள்ள 
உனக்கிங்கே உன்னை தவிர 
யாரும் இல்லை

பணம் ஒன்றே எப்போதும் 
வாழ்க்கை இல்லை 
புரிந்தாலே இதயத்தில் 
துயரம் இல்லை ...

உங்கள் கருத்தினை பகிர்ந்தால் மகிழ்வேன். 

16 நவம்பர் 2015

பெண்!

பேதைபெண்ணவள் கபடம் அறியாள்
பெதுமையாயிவள் மனதினுள் நுழைபவன்
மங்கையானதும் மறைவாய் ஓடுவான்!
மடந்தையாயிருந்தே சுமைகள் சுமப்பாள்!
அரிவையாவள் மனக்கலக்கங்கள் தீர்க்க
தெரிவையானவள் திடப்பட்டு நிற்பாள்!
ஆயிரம் உறவுகள் தானிருந்தாலும்
பேரிளம் பெண்ணவள் அனுபவம் பேசுமாம்!
பெண்ணிவள் வாழ்விலும் பருவங்கள்
உண்டெனதருணங்கள் உணர்ந்தவன் 
தரணியை ஜெயிப்பானே!
தள்ளாத வயதிலும் தன்மானத்தோடு
தங்கமாய் ஜொலிக்கும் மாதரே  நீர் வாழி!

15 நவம்பர் 2015

கடவுளைக்கண்டேன் - தொடர் பதிவு!

பூவைப்பறிப்பதற்கு  கோடாரி எதற்கு எனக்கேட்கும் கில்லர்ஜி
கையில் நகச்சுத்தி வந்து  ரெம்ப  சீரியஸா ஹாஸ்பிடல்ல இருக்கின்றாராம் அவரை சுத்தி  20 டாக்டர்களும், 30 நர்சுங்களும்  நின்று கொண்டு கடவுள் வருவாரா? சம்மதம் தருவாரா எனகாத்துக்கொண்டிருப்பதாகவும்... கடவுள் வரவேண்டும் எனில்  இப்பூவுலக தமிழ்ப் பதிவர்கள் அனைவரும் கடவுளை சந்தித்து கோரிக்கை வைக்க வேண்டும் எனவும் அக்கோரிக்கைகளை  கடவுள் நிறைவேற்றிய பின் தான் டாக்டர்களை சந்தித்துஆப்ரேசனுக்கு அனுமதி அளிப்பார் எனவும் வானத்திலிருந்து  அசரிரி வந்ததாம். 

கனவில் அந்த சத்தம்  கேட்டு பதறிஅடிச்சு எழுந்த சிந்தனைகளை சிறைகௌ விரித்து  பறக்க வைக்கும் நம்ம  மனசு குமார் தன்னோட இன்னும் பத்து பேரு சேர்ந்து போய் கோரிக்கை வைத்தால் கடவுள் சீக்கிரமே தன்னை சந்திக்கவே ஒப்புக்கொள்வார் என  நினைத்து மனுஎழுதிக்கொண்டு  சிபாரிசுக்கு ஆல்ப்ஸ் தென்றல் நிஷா  பேரையும் முதலாவதா போட்டு விட்டார். 

நிஷாவும் அவர் கூப்பிட்டாரே என  பின்னாடி போய்.. கனவில் கடவுளை கண்டேன், கடவுளை கண்டேன் என கண்டதா சொல்லிக்கொள்கின்றார்களே! கடவுளை எங்கே போய் கண்டிருப்பார்கள். அவர் ரெம்ப தூரத்திலா இருக்கின்றார்? என ஒன்றும் புரியாமல்   ஞே என விழித்துகொண்டு நிற்கிறாராம்!

கடவுள் இரவும் பகலும் இருபத்து நான்கு மணி நேரமும் இந்த   ஆல்ப்ஸ் தென்றல் நிஷா வீட்டில் நிரந்தரமாக வாடகை தராமல் தங்கி ஓசியில் சாப்பிட்டு  தூங்கி கொண்டிருக்கின்றார் எனும் ரகசியம் இன்னும் குமாருக்கு தெரியாத வரைக்கும் நல்லது தான்!

நல்லது செய்தால் என்னை உயர்த்தும் என் தேவனுக்கே ஸ்தோத்திரம் என சொல்வதும்... தீமையோ துன்பமோ நடந்தால்... எல்லாமே நன்மைக்கு தான்.. என் கூட கடவுள்  இருக்க என்னால் தாங்க இயலா துயர் என்னை அண்டாதே எனும்  தன்னம்பிக்கையும், அப்படி எனக்கு  பெரிய கஷ்டம் தந்து  விடுவாரா என் கடவுள் எனும் அகம்பாவமும்.. அகம்பாவம் போக்க  வந்த துயர்முன்னே என் தப்பை உணர செய்ய  இதை அனுமதித்தீரோ என உரிமையாய் திட்டுவதுமாய்.. தினம் தினம் ஒவ்வொரு நொடியிலும் அவரை நினைத்து அவருடன் பேசிட்டு நான் காண்பதில் கேட்பதில்  எல்லாம் அவரைத்தானே கண்டு கொண்டிருக்கின்றேன். 

இருந்தாலும்  எனக்குள்ளும் அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள்இருக்கத்தான் செய்கின்றது.. அத்தோடு மனசு குமார் ரெம்ப நம்பிக்கையாக தன்னோட அக்காவை கடவுளை சந்திக்க வைக்கணும் என ஆசைபட்டு முதல் ஆளா நிற்க வைத்திருப்பதால்... குமாருக்காக நானும்எங்கூடவே இருக்கும் கடவுளிடம் என் ஆசையை சொல்லலாம் என முடிவு செய்து விட்டேன். 

சரி ஸ்டாட் செய்திரலாமா?

என்னோட வேண்டுதல்கள்! 

1.நிஷா_ என்னோட 13 வயதில் எனக்கு ஏற்பட்ட விபத்தும்   இரண்டாம் மாடியிலிருந்து பின்னந்தலை அடிபட விழுந்ததும் அதனால் தொடரும் அனைத்து பாதிப்புக்கள்  காது, கண் , தலை என தொடரும் வலிகள் அனைத்தும் என்னை விட்டு நீங்கி நான் மீண்டும்  13 வயதுக்கு முன்னாடி இருந்தது போல்  படிப்பில் விளையாட்டில்  என அனைத்திலும் முதலாகிடணும். அப்படியே என் டாக்டராகும் கனவும் நிறைவேறணும்....!

கடவுள்> அடப்போம்மா!இதை என்னால் நிறைவேற்றவே முடியாதும்மா. என் கிருபை உனக்கு போதும் மகளே போதும்!  உனக்கு எல்லா திறமையையும் நான் தந்திட்டால் நாளைக்கு என்னையே நீ யாருன்னு கேட்பே மகளே!

 நிஷாவின் மனசாட்சி> அவர் சொல்லிட்டார்..ஆனால் நான் தான் இன்னும்  ஏன் இப்படி அனுமதித்தே என அவரை  தொல்லை செய்திட்டே இருக்கேனாம். பாவம் கில்லர்ஜி சார்!

2.நிஷா_ இந்த பூமியிலும் சரி  பூமி தாண்டிய அண்ட லோகங்களிலும் சரி இனிமேல் பசி என்னும் சொல்லே இருக்க கூடாது.. யாருக்கும் பசிக்கவே கூடாது. இளமையில் கொடுமை வறுமை என்றால் வறுமையில் கொடுமை பசிதானே. அதை மொத்தமாக இல்லாமல் போக செய்யும் படி எல்லோருக்கும் எல்லாமும்  உணவுப்பொருளிலாவது  முழுமையாகிடைக்க வேண்டும் கடவுளே! 

3.கடவுள்> மகளே! பூலோக மக்கள் அனைவரும் தினம் அதிகாலை எழுந்து உடல் களைக்க தோட்டத்தில் வேலை செய்து  தினம் தினம் தம் வியர்வையை நிலத்தில் சிந்தி விளையும் காய்கனிகளை புசிக்கின்றோம் என வாக்கு கொடுக்க சொல்லு மகளே நான்  நீ கேட்டதை இதோ ஒரு நொடியில் நிறைவேற்றி வைக்கின்றேன் என அவர் என்கிட்ட ஏட்டிக்கு போட்டியால்ல கேட்கின்றார்...

நிஷாவின் மனசாட்சி> ஐயகோ... நம்ம கில்லர்ஜி அண்ணாவின் நகச்சுத்தி.........!ஆப்ரேசன்... கோவிந்தாவா?  குமாரு உனக்கு இதெல்லாம் தேவையா.. உன்னை போய் கடவுளை   சந்தித்து கேளு என சொன்னால் நீ என்னத்துக்கு இந்த   ஆல்ப்ஸ்தென்றலை கூட்டிகிட்டு போனேன்னு குமாருக்கு திட்டுறது உங்களுக்கு கேட்குது தானேங்க பெரியவர்களே!!

4.நிஷா_ இந்த உலகத்தில் பணம் நோட்டு, குடிசை, பங்களா, நகை நட்டு எனஎதிலுமே ஏற்றத்தாழ்வு எதுவுமே இருக்க கூடாது கடவுளே! எல்லோருக்கும் எல்லாமும் சமமாய் இருக்கணும். எல்லோரும் ஒரே மாதிரி வீட்டில் ஒரே மாதிரி நகை  நட்டு சொத்து பத்து என வைத்து இருக்க வேண்டும்.  உதவி செய்யுங்களேன் கடவுளே!

5.கடவுள்> ரெம்ப சுலபம் என் மகளே சுலபம்..  நீங்கல்லாம்  உங்களிடம் இருக்கும் சொத்து,  நகையையெல்லாம்   வேண்டாம் என சொல்லி  குப்பை பையில் வைத்து கட்டி வீசி விடுங்கள்..  நான் அதையெல்லாம் தெருத்தெருவாய்  போய்  பொறுக்கி எடுத்து சரி சமமாய் உங்களுக்கே பிரித்து தருவேன்.  டீலா நோ டீலா மகளே!

நிஷாவின் மனசாட்சி> அட்ட்ட்ட்ட்டா என்னப்பா இது. இந்த கடவுள் ரெம்ப பொல்லாதவரா இருக்கின்றாரே.. அப்படின்னால் நம்ம சுவிஸ் வங்கியில் இருக்கும் பிளாக் மணில்லாம்  எடுத்து கொடுத்திருவாங்களா?.. நாங்க சுவிஸ்ல இருக்கோம்னு இனி பெரும்ம்ம்ம்ம்ம்ம்மையா சொல்லிக்கமுடியாதா?  சுவிஸும் மத்த நாடுகளும் ஒன்று போலாகிருமா?

நோ...வே --- சுவிஸ் வங்கில எல்லார் பிளாக் மணியும் இருக்கட்டும். அப்போது தான் எங்ஊருக்கு பெருமை. நாங்கல்லாம்  பெரியவுகளாக இருக்கலாம்ல... சுவிஸ்னால் சும்ம்ம்ம்மாவா? அதிரும்ல!


அப்படின்னால் கில்லர்ஜி ஆப்ரேசன் ?? நானா குமாரை என்னை சிபாரிச்சுக்கு கூட்டித்து போ தம்பின்னு கெஞ்சினேன்.. இழுத்திட்டு போனார்ல .. கில்லர்ஜிகிட்ட மாட்டிகிட்டு ஙே  என முழிக்கட்டும்.  


6.நிஷா_ கடவுளே கடவுளே கடவுளே  நீ தானே என்னையும் எல்லோரையும் படைத்தே.. படைத்த நீயே ஏன் கடவுளே மரணம் எனும் ஒன்றை யும் தந்து எங்களை பிரிக்கின்றாய்! மரணமே இல்லாத ஒரு வரம் தாருங்கள் கடவுளே!

7.கடவுள்> சரிம்மா நீ சொல்லும் படியே செய்து விடுவோம்!  இந்த உலகத்தில் இருக்கும் நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாகி எனக்கு என ஒரே ஒரு பெயரை வைத்து  கோயில், சர்ச், மசூதி என தனியாய் குடியமர்த்தாமல் நான் உங்க மனசுக்குள் மட்டும் குடியிருக்க இடம் தரணும். என்னை தவிர எவனுக்கும் அவன் சொன்னான் இவன் சொன்னான்னு என் அண்ணன் தம்பி வந்து சொன்னாலும் கேட்க கூடாது.  என்னம்மா நிஷா நான் சொல்வது உன் காதில் நல்லா கேட்குது தானே?

நிஷாவின் மனசாட்சி> இது என்னப்பா இம்மாம் பெரிய குண்டை தூக்கி போடுறாரு இந்தக்கடவுள். நாமல்லாம்   நம்ம மனசாட்சி சொல்றதை கேட்கிற தில்லையே தவிர ஊரில இருக்க அத்தனை பேர் சொன்னதையும் கேட்டு தானே எதுன்னாலும்செய்வோம் இது நடக்குற விடயமா சொல்லுங்க. அதிலயும் ஒரே கடவுளாம் கடவுள். 

நிஷாக்க்க்க்கா! எங்கூர் தேவகோட்டை ஜமீன் நானாத் தாதாஜி  மீசைக்கார அண்ணாச்சிக்கு சீக்கிரம் குணமாக வரம் கேளுன்னால் நீ என்னா பண்ணிட்டிருக்கேக்கா?  
குமாரின் பல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் நற நற....!

8.நிஷா_ சரிங்க கடவுளே! உங்களுக்கும் இல்லை எனக்கும் இல்லை... இந்த அரசியல் வாதிங்களையும் சாமியார்களையும்  இந்த பூமியை விட்டு நாடு கடத்தி கூட்டிகிட்டு போயிருங்களேன்! நாங்க நிம்மதியா இருப்போம். இவங்க தான் தாங்க சொத்து சுகம் சம்பாதிக்கணும் என ஒன்னும் தெரியாத அப்பாவி மக்களை  மதம் எனும் பெயர சொல்லி தீவிரவாதிங்களை உருவாக்கி கொண்டே இருக்கின்றார்கள். நாங்கள் பாவம் தானே கடவுளே!

கடவுள்>  நிஷாம்மா நான் தூங்கிட்டிருக்கேன் என்னை  தொந்தரவு செய்யாதேம்மா! விடும்மா!

நிஷாவின் மனசாட்சி> ம்ம்ம்கூம் கடவுள் தூங்கிட்டிருக்காராமே!அப்ப இதுவும் க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்கயாவா! கில்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லர்  ஜீஈஈஈஈ கிட்ட மாட்டிக்காதே நிஷா! எங்காச்சும் ஓட்ட்ட்ட்டீரு நிஷா!

9.நிஷா_  சுவாமியே சரணம்! அடுத்த வருட வலைப்பதிவர் மாநாட்டை  சுவிஸில்   ஆல்ப்ஸ்தென்றலின்  ஊரில் நம்ம  Hegas Catering, Fine Indian & Swiss Food Services  தலைமையில் வைக்க அருள் கூரும் சுவாமி. இந்த உலகத்தில் இருக்கும் அத்தனை தமிழ் வலைப்பதிவர்களும் நம்ம ஹோட்டலுக்கு வந்து சாப்பிட்டு போய் புதுக்கோட்டையில் நடந்த பதிவர் மா நாட்டை விட பெஸ்ட்டு பெஸ்ட்டு  ஆஹா ஓஹோன்னு மட்டும் எழுதணும் கடவுளே!  

கடவுள்> என்னம்மா இப்படி பண்ணுறியேம்மா! உனக்கு வேற வேலையே இல்லையாம்மா! சும்மா நங்கு நங்குன்னுட்டு  உன் கம்பெனிய பத்தி தான் எல்லா இடமும் பேசுவியாம்மா! போம்மா  போய் அடுப்படில ஏதாகிலும் வேலை இருந்தால் பாரும்மா!

நிஷாவின் மனசாட்சி>  நோ கடவுளே நான் ஒவ்வொரு ஞாயிறும் சர்ச்சுக்கு ஒழுங்கா வந்தேன்ல.. காணிக்கை போட்டேன்ல.. ஜெபிச்சேன்ல.. நீ எப்படி நான் கேட்டதை தரமாட்டேன்னு சொல்லுவே!  நம்ம  ஐயாக்கள் அண்ணாக்கள், தம்பிக்கள்,அக்காக்கள் தங்கைகள் எல்லாம் இதை வைத்தாவது சுவிஸுக்கு வந்திட்டு போகட்டும் என நினைச்சால் எனக்கே வேட்டு வைக்கிறியா கடவுளே.. இனி உனக்கு காணிக்கை கட்!

10.நிஷா_  கடைசி கடைசியா கேட்கின்றேன் கடவுளே!   என்னை  பெரிய்ய்ய்ய்யா ஆளுன்னு எல்லோர் கிட்டயும்  சொல்லி விளம்பரப்படுத்தும் எங்க குமாருக்காக கேட்கின்றேன் கடவுளே.. என் தும்பியையும் சீக்கிரமாக  வலைப்பூவில் பதிவு எழுதும் ஆர்வத்தினை கொடுத்து விடு கடவுளே! என்னை விட தும்பி நல்லா எழுதும் கடவுளே!

கடவுள்> ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா  உன் வேண்டுதல் சீக்கிரம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் மகளே! ஆனால் உன் தும்பி காதல் தோல்வி கவிதை மட்டும் எழுதவே கூடாது.  சொல்லிட்டேன்.. மீறி எழுதினால்.. கில்ல்ல்ல்ல்ல்ல்ல்லார் ஜி ??  

நிஷாவின் மனசாட்சி>  ஐயகோ! இது நடக்கும் காரியமாங்க! தும்பிக்கு அறூபது வயதாகி தலையெல்லாம் நரைச்சாலும் என்  மனைவியை புதிது புதிதாக்காதலிக்கிறேன் அக்கான்னு என் காதை அறுத்திட்டிருப்பானே! 

கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி இடம் தரமாட்டான்னு இதை தான் சொல்வார்களாம்!

வெரி ஸாரி கில்ல்ல்ல்ல்ல்லர்ஜி.... பெட்டர் தென் நெக்ஸ்ட் ரைம்! நகச்சுத்திக்கு ஆப்ரேசனை விட நகத்தை  கழட்டி கொடுத்திட்டால் சரியாகிரும். நீங்க கவலையே படாதிங்க கில்லர்ஜி.... பூப்பறிக்க கோடரி தேவையே இல்லை  கில்லர்ஜி சார்!  நான் என்கையாலேயே பறித்து விடுவேன் சார். 

குமாரின் வாய்ஸ்! அட போக்கா நீயும் உன் மனசாட்சியும்...  நாலும் தெரிந்த மாதிரி பீத்திகிட்டியேன்னு  உன்னை எனக்கு சிபாரிசுக்கு வா என கூப்பிட்டால் இப்படியா சொதப்பி விடுவே!  உன்ன்ன்ன்ன்ன்ன்ன்னை!உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

கடவுளை நான் தேடிப்போய் சந்திக்க அவசியம் இல்லாதபடி அவர் என்னை சுத்தி அரணாய் பாதுகாத்து வருகின்றார் எனும் அசைக்கமுடியாத நம்பிக்கை என்னுள்! தேவைகளும், ஆசைகளும் இல்லாதபடியால் இல்லாதவைகள் குறித்த கவலைகள் என்னுள் இல்லை. 

அந்த நம்பிக்கைக்கு ஏற்ப இன்று வரை என் தேவைகள் குறைவானதும் இல்லை. எனக்கு எது தேவையே அவைகளை எனக்கென நிச்சயித்த நாளில் கொடுத்து அன்பான கணவர், அழகும் அறிவுமான இரு குழந்தைகள். ஏனையோர் ஆச்சரியமாய் பார்க்கும் படி நல்லதொரு தொழில் நிறுவனம் நிர்வாகம் அதன் வளர்ச்சி என என்னுள் என்னையும் தன்னையும் உயர்த்தும் இறைவனுக்கே அத்தனை புகழும். 

இருப்பினும் மிகச்சுவாரஷ்யமான பதிவொன்றினை தொடங்கி அதில் நானும் பங்கிடும் படியாய் வாய்ப்பினை தந்த  கில்லஜி சார், குமார் ஆகியோருக்கும் இதைப்படிப்போருக்கும், கருத்திட்டு ஊக்கம் தருவோருக்கும்  நன்றி1நன்றி!

 தொடர்ந்திட.... 
நானே இங்கே ரெம்ப புதியவள். எனக்கு இன்னும் கொஞ்ச காலம் வேண்டும், தெரியாதவர்களை இணைத்தால் அவர்கள் கோபித்து விடுவார்களோ என தயக்கமாக இருக்கின்றது.   இதுவரை  யாரெல்லாம் இணைக்கப்பட்டார்கள் எனவும் புரியவில்லை. இருப்பினும் நான் அறிந்த இருவரை இங்கே இணைக்கின்றேன் . மன்னிக்க.... 

பத்துப்பேரை கட்டாயம் பரிந்துரைக்க வேண்டும் எனில் ஒரு நாள் நேரம் கொடுங்கள். 

வரதட்சனைக்கெதிராக மிகத்தீவிரமாக குரல் கொடுப்பவரும் எழுதுபவரும் கடைப்பிடித்தவரும் அன்புதம்பியும் சேனைத்தளபதியுமானவர். 

இவருக்கு என்னை தெரியாது. இவரின் தோட்டம் பதிவுகள் மிக அத்தியாவசியமானவைகளாயும் எம் தேவைகளை பூர்த்திப்பதாயும் இருப்பதனால் இவரின் பதிவுகள் பிடிக்கும்.