13 டிசம்பர் 2016

நான் சின்னவளாய் இருந்த போது குடியிருந்த கோயில் - 1

1980 முதல் 1989 வரை நாங்கள் குடியிருந்த கோவில்.

ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கதை சொல்லும் வீடு!
வாடகை கொடுக்காத வாடகை வீடு!
என் நினைவில் நீங்காமல் இருக்கும் பல இனியவைகளுக்கு சொந்தமான வீடு!
எனது இரண்டு தங்கைகளும், தம்பியும் Pushpakanthan Edward பிறந்த வீடு!
அடுத்தடுத்து நான்கு பெண்கள் பிறந்ததனால் பையன் பிறந்தால் கதிர்காமம் கோயிலில் மொட்டை அடிப்பதாக வேண்டி அம்மா கந்தசஷ்டி விரதம் இருந்து அதன் பின் இந்த வீட்டின் வெளிப்புறமாக ஐன்னல் தெரியும் அறையில் தான் என் தம்பி பிறந்தான்.தம்பி பிறந்தான் என அம்மாவுக்கு மருத்துவிச்சியாயிருந்த அம்மாவின் சித்தி பெண் இலட்சுமி ஆசம்மா சொன்ன நாள் எனக்குள் இன்றும் நினைவில் இனிக்கும். அக்காலத்தில் ஸ்கான் வசதிகள் அதிகம் இல்லாததால் பிள்ளை பிறந்த பின் தான் ஆணா பெண்ணா என தெரியும்.


உனக்கு தம்பி பிறந்திட்டாண்டி. ஓடு ஓடிப்போய் உங்கப்பாக்கு சொல்ல சொல்லி போற, வாற பஸ் ரைவரி டம் சொல்லி விடு என யோகப்பெரியம்மாவின் பெரியப்பா என்னை துரத்தி விட்டதும் இந்த வீட்டில் தான். அப்போவெல்லாம் எங்க வீட்டில் அம்மாவின் சொந்த சகோதரர்கள். அம்மம்மா என யாரும் வருவதில்லை. ஆனால் அம்மம்மாவின் தங்கை பிள்ளைகள் தான் எமக்கு உதவியாக இருந்தார்கள்.
அந்த நாள் அப்பா மட்டக்களப்பு, கல்முனை பஸ் டிரிப் ஓடிகொண்டிருந்தார். அப்பாவுக்கு மதியச்சாப்பாடு மட்டக்களப்பிலிருந்து கல்முனை போகும் பாதையில் காத்திருந்து தினமும் நான் கொண்டு கொடுப்பேன், கட்டுச்சாதம்,பாத்திரங்களில் வைத்து துணியால் கட்டி கொண்டு கொடுத்தால் ஐந்து ரூபாய் தருவார் அன்றைக்கு சாப்பாட்டுடன் தம்பி பிறந்த தகவலும் சொன்னேன்.
இரண்டு காலில் சந்தோஷமாய் போன மனுஷன் வீட்டுக்கு வரும் போது சாதாரணமாக நான்கு காலில் வருவாரெனில் அன்று எட்டுக்காலில் வந்தார். மகன் பிறந்த செய்தி அறிந்த நண்பர்களுக்கு பார்ட்டியாம். அதை விட தம்பி பிறந்ததை ஏன் டைவரிடம் சொல்லி விட்டதென அம்மாவுக்கு திட்டவும் செய்தார். அமமா பாவம். ரைவர் அங்கிளிடம் தகவல் சொன்னதால் அவர் எல்லா அங்கிளுக்கும் சொல்லி அவர்கள் பார்ட்டி வைக்க கேட்டதால் அப்பாக்கு கோபம்.
அப்பாவை குறித்த கவலையும், இயலாமையும் இருந்தாலும் இவர் என் அப்பா என நான் பெருமிதப்படும் படி ரியல் ஹீரோவாக வாழ்ந்து காட்டியதும் இந்த வீட்டில் தான்.
படத்தில் இருப்பது போல் நாங்கள் குடியிருந்த போது வீட்டின் கூரை ஓட்டினால் வேயப்படாமல் ஓலையால் வேயப்பட்டிருந்தது. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மழையும் வெயிலும் இலவசமாய் வீட்டின் கூரையினூடாக தரிசனம் தரும் வீடு!
மின்சாரம் இல்லை, சமையலறை இல்லை, டாய்லட் இல்லை, ஆனாலும் நாங்கள் அங்கே குடியிருந்தோம்.
எத்துணை உயர்ந்தாலும், நாலு டாய்லட் இணைத்து பங்களாக்களை கட்டினாலும் நினைத்தாலே இனிக்கும் நினைவுகளை தரும் வீடு!
ஒரு கொத்தரிசியில் விறகடுப்பில் சோறு வடித்து வைத்து விட்டு வீட்டுக்கு எதிரே இருந்த மகேசன் மாமாவீட்டு சுவரின் மேலால் அவர்கள் வீட்டு ஜனனலினூடாக தெரியும் கறுப்பு வெள்ளை டீவியில் உதயகீதம், ஒளியும் ஒலியும் எட்டிப்பார்க்க செல்லும் இருபது நிமிடத்தில் சுடு சோத்தை பானையோடு தூக்கிச்சென்று விடும் நாயின் அட்டகாசத்தினால் பட்டினியாய் தூங்கிய நினைவுகளும் இங்கே தான்.
கிணற்றடியில் நின்ற லாவுட் பழ மரத்தின் காய்களை பறித்து நிலத்தினை தோண்டி, வாகை இலைகளை பரப்பி அதன் மேல் பழத்தினை வைத்தால் இரண்டு நாளில் கனிந்து விடும். ஒரு பழம் ஐம்பது சதம் என வீடு வீடாய் விற்க சென்று வரும் காசில் ஒரு இறாத்தல் பாண் வாங்கி தேனீருடன் பசி அடக்க வைத்த வீடூ! அதே மரத்தில் ஊஞ்சல் கட்டிஆடிய நினைவுகளும், சோறு கறி சமைத்து விளையாடிய காலஙகளும், தங்கைகளோடு சண்டை இட்டு வீட்டை சுற்றி ஆளையாள் துரத்தி தலைமுடியை பிச்சி அடித்து சண்டை போட்ட துடியாட்டங்களுமாம் நினைவை சொக்க வைக்கும் வீடு.
வீட்டை சுற்றி முற்றம் தவிர பெரிய இடம் இருந்ததனால் மரவள்ளி, கச்சான்,அவரை தக்காளி, வெண்டி என விதவிதமாய் விதைத்து தினம் நீர் ஊற்றி தோட்டம் செய்யும் ஆர்வத்தினை எனக்குள் நுழைத்த வீடு. பல நாள் நாங்கள் விதைத்த மரவள்ளிச்செடியின் கிழங்கே எங்கள் பசி போக்கும் தாயானது.
அப்பா இலங்கை போக்குவரத்து சபை பேருந்து நடத்துனர் என்பதால் ஒவ்வொரு சீசனுக்கும் பழங்களை ஏற்றும் ஏழைகள் கையில் காசில்லாமல் டிக்கட்டுக்கு காசுக்கு பதில் பழங்களை அள்ளிக்கொடுக்க,சோற்றுக்குப்பதில் பழங்களை விதவிதமாய் அள்ளி தின்ன வைத்த வீடு!
டியூட்டி முடிந்து வரும் அப்பாவின் காக்கி சேர்ட்டின் கிடக்கும் சில்லறைகளை அவருக்கும் அம்மாவுக்கும் தெரியாமல் திருடிக்கொண்டு மறு நாள் பள்ளி இடைவேளையில் சைக்கிளில் பாம் பாம் என பெல் சத்தத்தோடு வரும் சக்கிரின் ஐஸ்கிரிம் வண்டி மாமாவிடம் கலர் கலராய் ஐஸ்கிரிமும், பள்ளி வாசலில் அமர்ந்து அவித்த பலாக்கொட்டை பத்து இருபத்தியைந்து சதமும் கொடுக்காப்புளி, நாவல் பழம் என பங்கு வைத்து விற்கும் பல்லுப்போன ஆச்சியிடம் வாங்கி தின்று அம்மாவிடம் இரட்டைச்சடை பின்னும் நேரம் மாட்டி முழித்த நினைவு தரும் வீடு!
மளிகைப்பொருள் கடன் வாங்கி விட்டு சொன்ன தவணையில் காசு கொடுக்கவில்லை எனில் எங்கம்மாவை தேடி வரும் கடையன்ரியிடம் அம்மா இல்லை என சொல்லி அம்மாவிடம் இருக்கும் ஒரே ஒரு சேலை கொடியில் காய்வதை வைத்து வீட்டுக்குள் ஒளிந்திருக்கும் அம்மாவை கண்டு பிடித்து திட்டு வாங்கிய நினைவுகளின் சங்கமமும் இந்த வீடே!
ஊரெல்லையில் இருக்கும் நெல் அரைக்கும் மில்லுக்கு சென்று உமி,தவிடு சுமந்து ஒரு மூட்டை பத்து ரூபாவுக்கு விற்று,மாவிடித்து, இட்லி, தோசை சுட்டு விற்று கடும் கஷ்டத்திலும் தான் படியாத ஏட்டுக்கல்வியை நாங்கள் படிக்க வேண்டும் என அம்மா பட்ட கஷ்டங்களை உடனிருந்து அனுபவிக்க வைத்த வீடு.
பள்ளியில் நாங்கள் இளவரசிகளாய் இளவரசனாய் எங்கள் திறமையாய் பேர் பெற்றிருந்தோம் எனினும் அதற்கு அஸ்திவாரம் இட்டவர் எங்கள் அம்மா. தான் பட்டினி கிடந்து எங்கள் பசி தீர்த்தார். இத்தனைக்கும் என் நான்காவது தங்கை பிறக்கும் வரை கஷ்டம் எனில் என்னவென அறியாமல் வளந்திருந்தார் என்பதை நான் அறிவேன். குடும்பம்பெருக , செலவுகளும் பெருகி, அப்பாவின் குடிபோதையுமாய் சில வருடங்கள் எம்மை வருத்திய நாட்கள்: அவைகள்.
பல நாள் காலையில் குளித்து சீருடை அணிந்து காலை ஆகாரம் இன்றி வெறும் தேத்தண்ணீரை சீனியை கையில் கொட்டி தொட்டு குடித்து செல்லும் சூழலிலும் அடுத்த பக்கம் இருக்கும் சுரேந்திரன் மாமா வீட்டு அம்மம்மா முதல் நாள் எஞ்சிய சோற்றில் தண்ணீரை ஊற்றி வைத்திருந்து வேலிக்கு மேலால் தூக்கி தரும் போது அதில் உப்பை விட்டு கரைத்து குடித்து விட்டு சென்ற நாட்களை....... அன்ன மிட்ட கைகளை இன்னும் நான் மறக்காமல் இருக்க வைக்கும் வீடு.
கங்கா அன்ரி, நகுலேஸ் அன்ரி, யமுனா அன்ரி என முன் வீட்டில் இருந்த அன்ரி மாரின் பாசத்தில் நனைந்து மாலையானால் அவர்கள் வீட்டு முன் கூடத்தில் அமர்ந்து வீட்டுப்பாடமும் பல கதைகளும் சொல்லி தந்த வீடு
மாதினி, மாலினி டீச்சர்கள் எனக்கு காசு வாங்காமல் டீயுசன் செல்லித்தந்த வீடு.
தீப்பெட்டி முடிந்து போனால் எதிர் வீட்டு பாக்கியம் அன்ரி அப்பம் சுட்டு அணையாமல் இருக்கும் நெருப்பில் எங்க வீட்டு அடுப்பையும் மண்ணெண்ணை சிமிலி விளக்கையும் பற்ற வைக்க தணல் இரவல் கேட்கும் நினைவுகளை புதைத்து வைத்திருக்கும் வீடு.
வீட்டின் மதிப்பை வைத்து மனங்களைமதிப்பிடும் இக்காலத்தில் எனக்கு சொர்க்கத்தினை உணரவைத்த வீடும் இதுதான்.
இத்தனை கஷ்டமும் நான் உணர்ந்ததனால் தான் 16 வயதில் சுவிஸ் வந்ததும் வீட்டுக்கு மூத்த பெண்பிள்ளையாக இருந்தும் நான் மட்டும் வாழாமல் என் குடும்பமும் வாழ வேண்டும் என நினைக்க வைத்தது. சுமைகளை சுமக்க சொன்னது. சுமை தாங்குவது என் கடமை என உணர்ந்தப்பட்ட போது மனம் உடைந்தும் போனது.
இன்றும் என்னைபோல் இருப்போரை கண்டு இரங்க வைக்கின்றது. பணத்தினை பொக்கிஷமாய் சேர்த்து வைக்க வேண்டும் எனும் எண்ணத்தினை விட்டு தூரமாய் நிறுத்தியும் வைக்கின்றது.
 

 
 
 
.
   எங்களுக்கு பின் அதே வீட்டில் குடியிருந்த பாக்கியம்  அன்ரியின் பேரன் அனுஷுக்கு நன்றி. குடியிருந்த வீட்டின்   இன்றைய தோற்றம் கூகுள் மேப்பில் தேடி வைபரின் அனுப்பியது அவன் தான்.

குடும்பமாய் இணைந்து இந்த வீட்டில் குடியிருந்த 1988  ஆண் ஆண்டின் பின் நாங்கள் மீண்டும் இணையவே இல்லை.சிதறடிப்பட்ட நிலையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில்  கோபதாபங்களை நிரப்பிக்கொண்டு சுயநலமிகளாய்  பாசங்களை விற்று சோகங்களை கடன் வாங்கிக்கொண்டோம்.
                                                      
எங்கள் குடும்ப போட்டோவாய் எஞ்சியிருக்கும் ஒரே புகைப்படம் இது தான். அப்பா கையில் இருப்பது சித்தி மகன், அவன் முதலாவது பிறந்த நாள்  அன்று எடுத்தது..

நினைவுகள் தொடரும். 

6 கருத்துகள்:

 1. நெகிழ வைத்த நினைவுகள்.

  “சிதறடிப்பட்ட நிலையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் கோபதாபங்களை நிரப்பிக்கொண்டு சுயநலமிகளாய் பாசங்களை விற்று சோகங்களை கடன் வாங்கிக்கொண்டோம்.”

  இப்படித்தான் பலரும் இருக்கிறோம் என்பது சோகம்.

  பதிலளிநீக்கு
 2. விரைவில் இணைவீர்கள் சகோதரியாரே

  பதிலளிநீக்கு

 3. குடும்பமாய் இணைந்து இந்த வீட்டில் குடியிருந்த 1988 ஆண் ஆண்டின் பின் நாங்கள் மீண்டும் இணையவே இல்லை.சிதறடிப்பட்ட நிலையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் கோபதாபங்களை நிரப்பிக்கொண்டு சுயநலமிகளாய் பாசங்களை விற்று சோகங்களை கடன் வாங்கிக்கொண்டோம்.//

  சந்தோஷமாய் படித்துக் கொண்டு வருகையில்
  இந்த பத்தியைப் படித்ததும்
  சட்டென மனம் வேதனைக் கொண்டது
  சொல்லிச் சென்ற விதம் மிக மிக அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. இனிய நினைவுகள்...

  பெற்ற பாடங்கள் மனதை நெகிழ வைத்தது...

  பதிலளிநீக்கு
 5. மனதை வருடிய மலரும் நினைவுகள். நெகிழச் செய்தது. தொடருங்கள், நானும் தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. இனிய நினைவுகள் அக்கா...
  நெகிழ்ச்சியாய்...

  பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!