18 செப்டம்பர் 2017

குறிஞ்சா இலைச்சுண்டலை அறிஞ்சோமா!?கொடிவகை பெருங்குறிஞ்சா இலைகள்

சிறு குறிஞ்சா,பெருங்குறிஞ்சா என இருவகை இலைகளில் சிறு குறிஞ்சா இலைகள் வெற்றிலை போல இருக்கும். செடி வகைத்தாவரம். Gymnema sylvestre என்றழைக்கப்படும் .சிறுகுறிஞ்சா இலைகள் குடலை சுத்தப்படுத்தும் தன்மை வாய்ந்ததாகவும் நீரழிவு நோயாளர்களை இன்சுலின் எடுப்பதை தவிர்க்க செய்வது என்பதும் அறிவியல் ரிதியில் இன்னும் நிருபிக்கப்படா விட்டாலும் அனுபவத்தில் நீரழிவு நோயாளர்களுக்கு அரு மருந்து என்பதில் ஐயமே இல்லை என்பேன்.

Dregea volubilis எனும் பெயரில் இருக்கும் பெருங்குறிஞ்சா இலை கசப்பாக இருக்கும் இந்த இலை மூலிகைத்தன்மை வாய்ந்தது. இதன் கசப்பும் நீரழிவு நோயாளர்களுக்கு நல்லதென்பர்.


செடிவகை சிறு குறிஞ்சா இலைகள்

இவ்விலைகள் குறித்து தகவல்களை விக்கிமீடியாவிலும் இன்னும் தொகுக்கப்படவில்லை. யார் வேண்டுமானாலும் தொகுக்கலாம், திருத்தலாம் எனும் விதிமுறை விக்கிமீடியா தளத்தின் மீதான நம்பிக்கையை பொய்த்து போக செய்கின்றது. என்றாலும் இயலும் போது இயலுமானோர் அத்தளத்தின் தகவல்கல் பூர்த்தியாக்கப்படுமானால் எதிர்கால சந்ததிகளுக்கு பயன் தருவதாய் இருக்கும்.

சிறு குறிஞ்சா தென்,மத்திய இந்தியா மற்றும் இலங்கையின் வெப்பமண்டலக் காடுகளில்வளரும். இச்செடி தென் இந்தியாவில் அதிகமாக விளைவிக்கப்பட்டு இன்சுலின் தயாரிப்புக்கும் இன்னபிற மருத்துவத்துக்காகவும் மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

சுவிஸுக்கும் ஏற்றுமதியாகும் இலைகளில் இவ்விலைகளும் இருக்கின்றது. இங்கே எம்மவர் வீட்டுச்சமையலில் குறிஞ்சா இலைக்கும் பங்குண்டு.                                       பெருங்குறிஞ்சா கொடி இலையின் காய்கள்
பெருங்குறிஞ்சா இலைகளின் காய் முற்றி வெடித்து சிதறுவதனால் காற்றின் மூலம் விதைகள் தானாகவே நிலத்தில் விழுந்து முளைக்கும் தாவரமாகும்.. தடித்த வலிமையான இலைகளோடுவேலியிலோ, முருங்கை போன்ற கிளைகள் கொண்ட பெரிய மரங்களிலோ பந்தல் இட்டோ வளரும் கொடி வகை தாவரம். இது.
                                       
படர்ந்திருக்கும் கொடி இலைகள்
கொடியில் படரும் பெருங்குறிஞ்சா இலைகளை ஒவ்வொரு இலையாக பறித்து , அதன் காம்பை கிள்ளி தண்ணீர் விட்டு கழுவி, தண்ணீர் இல்லாமல் துடைத்து பத்து பதினைந்து இலைகளை ஒன்றின் மேல் ஒன்றை வைத்து அடுக்கி சுருட்டு போல் சுருட்டி நடுவில் பாதியாக்கி இடது கையில் பிடித்து கொண்டு வலது கையில் கூரான் பிளேட்டினால் அல்லது சின்ன கத்தியால் மிக மெல்லியதாக சீவி எடுப்பார் அம்மா. அப்போதெல்லாம் எங்கள் ஊரில் வாரத்துக்கு ஒரு தடவையேனும் குறிஞ்சா இலை சுண்டல் எனும் பொரியல் இருக்கும்,

குறிஞ்சா கீரை சுண்டலின் விஷேசமே அந்த கீரையை நாங்கள் மிக மெல்லியதாக அரிந்து எடுப்பதில் தான் இருக்கின்றது. சிலர் காய்கள் கட் செய்யும் பலகையில் வைத்தும் அரிவார்கள். ஆனால் எங்கம்மா, பக்கத்து வீட்டு அக்காக்கள், ஏன் என் தங்கைகள், தங்கை மாமியார் எல்லாம் இப்படி இடது கட்டைவிரல் சுட்டுவிரல் பிடிக்குள் பிடித்துக் கொண்டு வலது கையால் வெட்டும் வேகம் பார்த்து அதிசயித்திருக்கின்றேன்.

எனக்கு குறிஞ்சா கீரை சாப்பிட நிரம்பவே பிடிக்கும், சுடச்சுட சோறும், இந்த கீரை சுண்டலும் ஏதேனும் மீன் பொரியலும் சின்ன வெங்காயம் பச்சையாக இரண்டும் கிடைத்தால் போதும். வேறு கறியோ கூட்டோ வேண்டாம், எனக்கு இக்கீரையினை அரிந்தெடுக்கும் பொறுமை இல்லாததனால் இங்கே கடைகளில் கிடைத்தாலும் வாங்குவதில்லை. எந்தங்கை அடிக்கடி குறிஞ்சாகீரை சுண்டல் செய்வாள்.

மட்டக்களப்பில் அதுவும் பெரியகல்லாற்றுச்சாப்பாட்டுக்கென தனி கைமணமும் பக்குவமும் உண்டு.. அந்த ஊர் கிணற்று நீரின் சுவையும் அவ்வூர் சமையலை ருசியாக்குகின்றதெனில் மிகையில்லை. அத்தோடு ஜாதி,மதம்,இனம்,அந்தஸ்து,தகுதி, தரம் பார்க்காது அறிந்தவர், அறியாதோர் என்றில்லாமல் வீட்டுவாசலுக்கு வரும் எவரையும் விருந்தோம்பி அனுப்பும் குணமும், உபசரிப்பும் அன்பும் கூட கல்லாற்றுச் சாப்பாடு சுவைக்க அதிக முக்கிய காரணங்களாக இருக்கின்றது..

இலங்கை உணவில் கிழக்கு மாகாணம் அதிலும் மட்டக்களப்பு விருந்தோம்பலுக்கும், உணவின் சுவைக்கும் பெயர் போனது. இதை அக்காலத்தில் வடக்கிலிருந்து கிழக்குக்கு வேலை மாற்றம் பெற்றோ ஏதேனும் தேவைக்காகவோ பயணம் செய்யும் ஆண்களை மாந்தீரிகம் செய்து மயக்குவதாகவோ, பாயோடு ஒட்டும் படி மருந்து வைப்பதாகவோ சொல்வார்களாம். மட்டக்களப்புக்கு செல்லும் ஆண்களும் பெரும்பாலும் அங்கேயே பெண் எடுத்து வாழ்க்கையில் செட்டிலாகி விடுவதும் இக்கதைகளை நிஜங்களாக்கினாலும் உண்மைக்காரணமாய் உபசரிப்பும் விருந்தோம்பலும், உணவின் சுவையும் தான் அடிப்படைக்காரணங்களாய் இருந்திருக்கின்றது. இருக்கின்றது.

குறிஞ்சா கீரை சுண்டல் செய்வது எப்படி என பார்க்கலாமா?
குறிஞ்சா இலைகள் பத்து
ஒரு கைப்பிடி தேங்காப்பூ
ஐந்து பச்சை மிளகாய்
20 சின்ன வெங்காயம் தோல் உரித்து மெல்லியதாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
மஞ்சள், உப்பு
நான் வெஜ் சாப்பிடுபவர்கள் எனில் மீன் துண்டுகள் சேர்க்கலாம். வெஜ் எனில் சேர்க்காமல் விடலாம்,

எப்படி சமைக்கலாம்?
குறிஞ்சா கீரையை மேலே சொன்னபடி கழுவி துடைத்து அரிந்து எடுத்து கொள்ள வேண்டும்

பச்சைமிளகாயை நடுவில் கட் செய்து இரண்டாக்கி கொஞ்சம் நீர் விட்டு பாத்திரத்தில் போட்டு மஞ்சள் துளியும் உப்பும் சேர்த்து அவிய விட வேண்டும். பாத்திரத்தினை மூடி அவித்தால் மஞ்சள் வாசனை கீரையில் சேராது.

மீன் சேர்ப்பது எனில் மீனையும் கழுவி துண்டாக்கி பச்சை மிளகாய் சட்டிக்குள் போட்டு அவித்து கொள்ள வேண்டும். மீன் அவிந்ததும் தனியே பிரித்து அதன் முட்களை நீக்கி உதிர்த்து கொள்ள வேண்டும்.

பச்சை மிளகாய் அவிந்ததும் கரண்டி கொண்டு கடைந்து விட்டு வெஜ் கீரை சுண்டல் செய்ய விரும்புவோர்.. சூரிய காந்தி எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கொஞ்சம் விட்டு அதனுள் கீரையை இட்டு கிளறி விட்டு உடனே தேங்காய்ப்பூவை சேர்த்து இரண்டு மூன்று தடவை கீரையுடன் கலந்து தேங்காய்ப்பூ சுண்டியதும் வெங்காயத்தினை சேர்த்து பாதி வெந்த பருவத்தில் ஒரே நிமிடத்தில் அடுப்பை விட்டு இறக்கி விட வேண்டும்.வெங்காயம் நன்கு அவியக்கூடாது. வெந்தும் வேகாமலும் பல்லில் கடி பட வேண்டும். அப்போது தான் கீரைச்சுண்டலே சுவையாக இருக்கும்,

குறிஞ்சா கீரை அதிகம் வேக விட்டால் கசப்பு அதிகமாகும், கீரை போடும் போது பாத்திரத்தில் தண்ணீரும் இருக்க கூடாது. பச்சை மிளகாய் அவித்து கடைந்ததும் அதன் நீர் வற்றி விட்டதா என கவனித்து கீரையை போட்டு கிளறவும். இவ்வகை கீரை சுண்டலுக்கு நீர் இருந்தால் அதிக கசப்புத்தன்மை இருக்கும், தேவையான அளவு உப்பும் சேர்த்தால் போதும், 

மீன் சேர்ப்பவர்கள் பச்சைமிளகாய் கடைந்தது முள் இல்லாமல் உதிரியாக இருக்கும் மீனை போட்டு கிளறி அதன் பின் மேலே சொன்ன முறையில் கீரை, வெங்காயம், தேங்காய்ப்பூ சேர்த்து கிளறி இறக்க வேண்டும்..

சுடச்சுட சோறும் கீரை சுண்டலும் உடலுக்கும் நல்ல ஆரோக்கியமாய் நோய் நொடி அண்ட விடாமல் வாய்க்கும் உருசியாய் கிடைத்த அருமந்த உணவுகளை விட்டு நாங்கள் நெடுந்தொலைவு வந்து விட்டோம்.

கீரைகள் சமைக்கும் போது என் பிள்ளைகளுக்கும் கொடுத்து பழக்கி இருப்பதனால் இன்னும் எங்கள் வீட்டில் கீரைக்கறிகளுக்கு இடம் உண்டு.

குறிஞ்சா இலைப்படங்கள் இணையத்தில் இருந்தே எடுத்து பகிர்ந்துள்ளேன்.

இந்தப்பக்கம் வந்து படிப்பவர்கள் உங்கள் கருத்துக்களை இட்டால் நானும் தொடர்ந்து எழுதும் உயிப்பூவை பெறுவேன் அல்லவா?

11 கருத்துகள்:

 1. என் சந்தேகத்தைப் போக்கும் வகையில் கீரை குறித்த விவரங்களைப் பதிவாகவே வெளியிட்டமைக்கு நன்றிமா நிஷா. குறிஞ்சா கீரை படம் பார்த்தறிந்தேன். இதற்குமுன் வேறு எங்கும் பார்த்த நினைவு இல்லை. இப்படியான சமையலும் இப்போதுதான் அறிகிறேன். நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல பெரிய கல்லாற்று மண்மணத்தோடு கைமணமும் சேரும்போது சொல்லவா வேண்டும்.. நாவுக்கு அடிமை ஆக்கிவிடும் வல்லமைக்காரர்கள். ஒவ்வொரு ஊரிலுமான பாரம்பரிய உணவுகளையும் சமையலையும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்துவரும் இந்நாளில் பழைய நினைவுகளை பசுமை மாறாமல் பகிரும் உங்களுக்கு அன்புப் பாராட்டுகள் நிஷா.

  பதிலளிநீக்கு
 2. துளசி: எங்கள் ஊரில் இதற்கு என்ன சொல்லுவார்கள் என்று பார்க்க வேண்டும்....

  கீதா: சூப்பர் இங்கும் குறிஞ்சா கீரையை குறிஞ்சா என்றுதான் சொல்லுவதுண்டு..... செய்துவிடுகிறேன்.ஆம் இது சர்க்கைவியாதிக்கு மிகவும் நல்லது என்பது அறிவேன்....மிக்க நன்றி நிஷா

  பதிலளிநீக்கு
 3. குறிஞ்சா இலை..

  இப்பதான் கேள்விப்படுறேன் நிஷாக்கா.

  பதிலளிநீக்கு
 4. யானைக் குறிஞ்சி என்று இங்கே சொல்லப் படுவது இதுதான் என்று நினைக்கிறேன் :)

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் !

  கொல்லும்நோய் போக்கும் குறிஞ்சா இலைச்சுண்டல்
  மெல்லும்வாய்க் கென்றும் வினையில்லை - தொல்லுலகில்
  நல்லவை உண்டால் நலம்சேரும் ! நற்றுணைபோல்
  வல்லமை தந்திடும் வாழ்வு !

  பலவருடம் முன்னாடி விரும்பி உண்டுகளித்த குறிஞ்சா இலையை
  நினைவு படுத்தி விட்டீங்க ம்ம் நல்லது நாட்டுக்குப் போனால் நெய்யில் வதக்கி ஒரு பிடி பிடிக்கணும்

  அருமையான பதிவு நிஷா மேலும் எதிர்பார்க்கிறேன் ....

  தம 6

  பதிலளிநீக்கு
 6. சிறப்பான பதிவு. இப்போதும் சாலையோரத்து மூலிகைகளில் ஒன்றாக இந்த கொடியைப் பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
 7. எங்கள் ஆசிரியர்களில் ஒருவருக்கு இந்த விஷயங்கள் மிகவும் சுவாரஸ்யம். நிறைய புத்தகங்களும் வைத்திருக்கிறார்.

  பதிலளிநீக்கு
 8. இதுபற்றி எதுவும் தெரியாது! த ம 9

  பதிலளிநீக்கு
 9. முதன்முறை கேள்விப்படுகிறேன்.

  பதிலளிநீக்கு
 10. பெயரில்லா5:53:00 AM

  பெருகுறிஞ்சா இலைகள் கீரைகளாகப் பயன்படுத்தும் முறை அருமை

  தமிழ்நாட்டில் இப்பொழுது தான் இக்கொடியை காய்களுடன்பார்த்தேன்

  பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!