06 பிப்ரவரி 2017

எரிகின்ற கொள்ளியில் எது நல்ல கொள்ளி?

ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு மட்டும் அல்ல நாட்டுக்கும் ஆகாது.
இந்தம்மாவை குறித்து வேலைக்காரி வீடியோக்காரி,என திட்டி திட்டியே இந்தம்மா மீதான பரிதாபத்தினை அதிகரிக்க செய்து விடுவார்கள் போல் எங்கெஙுகும் காணும் விமர்சனங்கள் தனிமனித சாடலாக இருப்பதை காணும் போது வேலைக்காரி என்றால் அத்தனை மட்டமா என எதிர்க்கேள்வி எனக்குள் வருகின்றது.
ஆள்பவருக்கான தகுதியாக இவர்கள் எதை சொல்கின்றார்கள்?
நாட்டை ஆள நடிகனாய், நடிகையாக , கன்னடன் தெலுங்கனாய் இருக்கலாம், ஆனால் வேலைக்காரியாக இருக்க கூடாதாம்.
வேலைக்காரி பதவி அத்தனை மட்டமோ?
சசிகலாவை விமர்சிப்பதாக சொல்லி தன்னை வருத்தி சம்பாதித்து தான் பிழைக்கும் சுய தொழிலாளர்களையும் வேலைக்காரி எனும் பெயரில் ஏதோ தீண்டத்தகாதவள் போல் விமர்சிப்பதை படிக்கும் போது....
காமராஜர் எனும் படிக்காத மேதையை அக்காலத்தில் எப்படியெல்லாம் பாடாய் படுத்தி இருப்பார்கள் என நினைத்து பார்க்கின்றேன்!
இனத்துவேசியும், மதவிரோதியுமானவரிடமே நாட்டை ஆள ஒப்படைத்தவர்களுக்கு வீட்டு வேலைகாரிகளால் இவர்களை விட வீட்டையும் நாட்டையும் நன்கு நிர்வகிக்க முடியலாம் எனும் உண்மை புரியாமல் போவதேன்?
ஜெயலலிதா இருக்கும் வரை அவரை நாட்டியக்காரி. நடிகை ஆடை அவிழ்த்து ஆடியவர். எம் ஜி ஆரின் சின்ன வீடு. இன்னொரு நடிகர் மனைவி.. அதாவது தனிமனித ஒழுக்கம் இல்லாதவர் எனவெல்லாம் விமர்சித்த நாவுகள் தான் அவர் இறந்ததும் அவரை இரும்பு மனுசியாக்கியது.ஆணவக்காரியை ஆளுமைக்காரியென போற்றியது.
இத்தனைக்கும் ஜெயலலிதா ஏழை மகக்ளை குறித்து என்றும் சிந்தித்ததில்லை. கன்வெண்ட் படிப்பும் ஆங்கில மேல் தட்டு வாழ்க்கையுமே அவருக்குரியதாக இருந்திருக்கின்றது. என்ன தான் சசிகலாவின் நட்பு நிர்ப்பந்தித்தாலும் அவர் ஒப்புதலின்றி எந்த ஊழலும் ஆரம்பரமும் நடந்திருக்கவும் வாய்ப்பில்லை.
இரும்பு மனிசியாகவும், ஆணவக்காரியானவும், யாருக்கும் அடங்காதவராகவும் தன்னை வெளிப்படுத்திய ஜெயலலிதாவின் அன்பை சம்பாதித்து, அவரின் உறவுகளை தூரமாக்கி....வைக்க முடிந்தது போல்..
ஜெவின் இறுதிச்சடங்கின் போதும் எவ்வித கலவரங்களும் நேராமல்.... ஆட்சியில் எவரும் இல்லாத சில மாதங்களிலும் நிர்வாகத்தை இயங்கு நிலையில் தொடர வைத்தவரால்... தன் பதவியை தக்க வைத்து கொள்வதற்காகவேனும்.... மக்களுக்காக் நல்லதை சிந்திக்கலாம் .. நலல் திட்டங்களை இடலாம் என தோன்றாமல் போவதேன்?
இந்தம்மா எப்படிப்பட்டவராக இருந்தாலும் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அவருடைய ஆரோக்கியம் குறித்து ஏன் மறைக்கப்பட்டதெனும் விஷயம் தவிர்த்து பார்த்தால் ஜெவின் தோழி என்பதை வைத்து அருமையான நிர்வாகத்திறனும் ஆளுமையும் மிக்கவராகதான் தன்னை வெளிப்படுத்தி இருக்கின்றார்.
வேலைக்காரியால் அரசு நிர்வாகத்தினை கடந்த ஆறேழு மாதங்களாக அசைக்க மட்டுமல்ல அதட்டவும் முடிந்திருக்கின்றது. ஆச்சரியமாக இல்லையா?
வேலைக்காரி எனும் ஒரே நோக்கத்தில் வெறுப்புணர்வோடு வார்த்தைகளை அள்ளி வீசாமல்... வேலைக்காரியாக இருந்தவரால் அடித்தட்டு மக்களின் உணர்வுகள், கஷ்டங்களையும் புரிந்து கொள்ள முடியலாம் என சிந்தித்து பாருங்கள்.
கான்வெண்ட் ஆங்கில கல்லூரி நடிகர், நடிகைகளை நம்பிய நீங்கள். உங்களில் ஒருவரான சக தமிழச்சியை இத்தனை விரோதமாக கருத்துக்களினால் விமர்சிக்க வேண்டுமா?
அரசியலும் எவருமே மகாத்மாக்கள் அல்ல. பதவியும் அதிகாரமும் இருக்கும் எல்லோருமே சந்தர்ப்பம் கிடைத்தால் இராவணன்கள் தான்.

பன்னீர் எனும் முதுகெலும்பில்லா ஒருவரிடம்..அமைதியாக இருந்து ஆஜாராகம் செய்யும் ஒருவரிடம் , பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டி.. தன் பதவிக்கான அதிகாரங்களை பயன் படுத்தத்தெரியாத ஒருவரிடம் ஆளும் அதிகாரம் இருப்பதை விட.. மறைவில் இருந்து அடி முதல் முடி வரை நிர்வாகம் செய்யக்கூடிய ஒருவருக்கு சந்தர்ப்பம் கொடுப்பதில் தவறே இல்லை.
தமிழ் நாடு இன்றிருக்கும் நிலையில் சசிகலாவால்... அச்சம் கலந்த ஆளுமையை தான் தர முடியும் . மக்களின் எதிர்ப்பலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் எனும் பதட்ட உணர்வும் அவரை நல்ல ஆட்சியை தரும் நிர்ப்பந்தத்தை தரலாம். 
கடந்த கால தவறுகள் அவரை திருத்தி இருக்கலாம். யாருக்கு தெரியும்!?

எதிர்க்கருத்துக்கள் எதிரிக்கருத்துக்களாக்கப்படாமல் நாட்டும் வீட்டுக்கும் நல்லது எதுவென ஆராய்ந்தால்... நடிக,நடிகைகளை விட தெலுங்கர்,கன்னடரை விட தமிழச்சியான வேலைக்காரி ஒன்றும் மட்டமல்ல என தோன்றுகின்றது.
பொங்கிப்புலம்பி நம் ஆற்றலை வீணாக்குவதை விட.. மக்கள் சக்தியே மகேசன் சக்தி என வெளிப்படுத்த வேண்டிய தருணத்தில் வெளிப்படுத்துங்கள்.இருக்கும் சூழலில் எத்தனை பொங்கினாலும் எதிர்த்தாலும் நடப்பது தான் நடக்கும்.அதனால் எதிர்ப்பெனும் பெயரில் அனைத்தையும் பாழாக்குவதை விட நம் தேவைகளை உரத்து சொல்லி சட்டங்களை மாற்ற மக்கள் நலன் திட்டங்களை இடும்படி நிர்ப்பந்தித்து சாதக மாக்குவது நல்லது.அவர் அடுத்து வரும் ஆறுமாதத்திற்குள் தனக்கான மக்கள் ஆதரவை நிலை நாட்டினால் தான் பதவியில் தொடரலாம் எனும் கட்டாயத்தை உருவாக்க வேண்டும்.

ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னனியில் இருக்கும் மர்மத்தை வெளிக்கொண்டுவரச்செய்ய வேண்டும். ஜெயலலிதாவின் பெயரை சொல்லி முப்பது வருடங்கள் அவருடன் இருந்ததை வைத்து ஆட்சிக்கு வரும் தகுதியை நிர்ணயிக்கும் அவருக்கு மக்கள் சக்தி எனும் தகுதியை புரிய வைக்க வேண்டும்.இத்தனை எதிர்ப்புக்களுக்கும் அடிப்படையாக ஜெயலலிதாவின் மரணம் இருக்க.. அதை சொல்லி கூட எதிர்க்காமல் வேலைக்காரி,  வீடியோக்காரி எனும் பிரயோகத்தினை தவிர்க்கவும் வேண்டும்.
இதை விட்டு ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல் நாமே நமக்குள் விரோதித்து கொண்டால் நஷ்டங்களும், இழப்புக்களும் நமக்கு தான் என்பதையும் மெரினா எழுச்சி நமக்கு தலையில் கொட்டி சொல்லி சென்று விட்டது. என் கருத்தை ஏற்க முடியாவிட்டாலும் நான் இட்ட இந்த பதிவின் சாரம் எதிர்காலத்தில் உங்களை சிந்திக்க வைக்கும்.

இன்று சசிகலாவை நோக்கி வைக்கும் அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் முதல் உரிமையாளராகஜெயலலிதா இருக்கின்றார் என்பதை யாரும் மறுக்க முடியாது. என்ன தான் தோழியாக இருந்தாலும்.... ஒரு விரல் நீட்டி. இரத்த சொந்தத்தை தூர நிறுத்த முடிந்தவரால்... தோழி எனும் பெயரில் உடனிருந்த துரோகியை இனம் காண முடியாமல் போனதேன்?

ஒரு தடவை அல்ல மூன்று தடவை... ஊழல் பெருச்சாளி என தெரிந்தும் மக்களும் ஆட்சியை தூக்கி அவர்களிடம் கொடுத்ததேன்!?

சிந்தித்து பாருங்கள்...இன்றைய எதிர்ப்புக்கள்... நாளைய ஆதரவாக மாறுவதை விட... இன்றைய அவரின் இந்த நிலையை நமக்கு சாதகமாக்கி.... மக்கள் தேவைகளுக்குரிய சட்டங்களை போட நிர்ப்பர்ந்திப்பது புத்திசாலித்தனமா இல்லையா?

எரிகின்ற கொள்ளியில் எது நல்ல கொள்ளி என்பதை தேடுவதை விட எரியும் நெருப்பில் குளிர் காய்வதுடன் தேவைக்கு பயன் படுத்துவதும் நமக்கு மட்டுமலல் நாட்டுக்கும் நல்லதே!
குறைகளை மட்டும் குன்றென உயர்த்தாமல் அங்கிங்கே தெரியும் நிறைகளையும் தேடி வெளிக்கொண்டு வரலாம்.
நிறை குறைகளை நடு நிலையில் ஆரோக்கியமாக விவாதிக்கலாமே!

குறிப்பு.. 
சசிகலாவுக்கு நான் கொள்கைப்பரப்பு செயலாளர் இல்லை என்பதை புரிந்து கொள்ள சொல்ல் மாட்டேன். அந்தம்மா யார்னே எனக்கு தெரியாது என்பது உண்மை என்றால் நீங்க நம்பவும் மாட்டீர்கள். ஆனால் அவருக்கு யாரேனும் என்னை பற்றி சொல்லி அவர் நேக்கு போஸ்ட் தந்தால் என் நட்பில் இருக்கும் உங்களுக்கெல்லாம் போஸ்டிங்க நிச்சயம் உண்டு. தோட்டக்காரியாகவாவது போய் அடுத்த பதவியை பிடித்து விடுவேனாக்கும். அதனாலாவது இதை படிப்பவர்கள் என் கட்சியில் சேர்ந்து விடுங்கள். ஆளுக்கு பத்து கோடி என்பது நிச்சயம் ஹாஹா
.

கொடுத்த காசுக்கு மேலேயே எழுதியாச்சுப்பா!@❤💔💔💔💔💔

13 கருத்துகள்:

 1. உண்மையான தொண்டன் என்றால் யார்..? அல்லது தொண்டன் என்பதின் அர்த்தம் என்ன...?

  முடிந்தால் ஒரு பதிவு போடவும்...

  வேறு எதுவும் சொல்வதற்கில்லை...

  நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எரிகின்ற கொள்ளியில் எது நல்ல கொல்லி? - இது தான் இந்தப் பதிவிற்கு சரியான தலைப்பு... நன்றி...

   நீக்கு
 2. நீங்கள் நாடகம் பிடிக்கவில்லை என்கின்றீர்கள்..
  நான்
  ஒத்திகைக்கான
  சிரமங்களைப்
  பார்க்கிறேன்..

  நீங்கள்
  அதிகமாய்க்
  கூச்சலிடுகின்றீர்கள்..
  நான்
  அந்த பாத்திரங்களின்
  பரிதவிப்பைப்
  பார்க்கிறேன்..

  "சரியில்லை.."
  "எதை சரியாய்
  செய்தீர்கள்.."

  பல வேடங்கள்
  புனைந்து
  கிழட்டுப்பருவமெய்தி
  வரும்
  விருதுகளுக்காய்
  விசிலடிப்பீர்கள்..

  ஒற்றைப் பாத்திரமேற்று
  வெல்லும்போது
  ஏன்
  விரல் கடிக்கிறீர்கள்..

  வெற்றிகளுக்கான
  பாதைக்கு
  ஒற்றைத்தடமேனும்
  நிரந்தரமாயிருக்கிறதா
  உங்களிடம்?

  பெற்றவனைக்
  கொன்று
  பேரரசனாவனை
  வரலாற்றில்
  போற்றியதில்லையா
  நீங்கள்?

  சாணக்கியன்
  என்பவன்
  சரியானவன்
  தானா
  உங்கள் கருத்தில்?

  சக மனிதனை
  சக தோழனை
  தவிக்கவிடாது
  தலைமைப்பொறுப்பு
  ஏற்றவன்
  யாரையேனும்
  சுட்டிவிடமுடியுமா?

  வசந்த காலமல்ல
  அவர்க்கெனத்
  தெரிந்தும்..
  வந்து நிற்கும்
  மனோதிடம்
  பயிலுங்கள்..

  இந்த
  தேசத்தில்
  படிக்காததை
  செய்த வேலையை
  குறை காணாதீர்கள்.

  அப்படி
  முதல்வரால் தான்
  நீங்கள்
  படித்தீர்கள்..

  லிங்கன்
  பூர்வீகம்
  அப்படித்தான்
  அறிந்தீர்கள்...

  வரலாறென்பது
  செய்திகளின்
  கிடங்கு..
  காந்தி கணக்கில்
  கோட்சேவும்
  இருப்பான்..

  செருப்புக்கும்
  நாற்காலி வழங்கிய
  கதையிருக்கும்
  தேசம் தான்..

  பொறுப்புக்கு
  யார்வரின் என்ன..

  பொறுத்திருப்போம்.

  பதிலளிநீக்கு
 3. ஒரு கேசட் கடையை வைத்துக்கொண்டு ஒரு சினிமா நடிகைய பழக்கம் பிடித்தால்போதும்
  முதலமைச்சராகலாம்.

  ஒரு டீ மாஸ்டருக்கு கொலை செய்யத் தெரிந்திருந்தால் போதும் பிரதராகவே ஆகலாம்.

  பஞ்சம் பிழைக்கப் போன நாட்டின் வெள்ளி நாணயங்களை உருக்கி விற்று காசாக்கும் உண்டியல் திருடனாலும் இந்தியப் பெட்ரோலியச் சந்தையைக் கைப்பற்ற முடியும்.

  அபினுக்கு அடிமையாக்குவதன் மூலம் அண்டை நாட்டு மக்களை திருட்டுப்பய நாட்டுக்கு அடிமையாக்கத் தெரிந்தவன் எல்லாம் பங்குச் சந்தையைக் கட்டுப்படுத்த முடியும்.

  ரேசன் கடை ஊழியனாக இருந்தாலும் கடற்கரை மணலில் இருந்து தனிமங்களைப் பிரித்து விற்கும் தொழில் நுட்பமும் வாங்குவதற்கான சர்வதேச கடத்தல் உலகத்துடன் தொடர்பும் இருந்தால் போதும் 20ஆண்டில் 15 லட்சம் கோடியுடன் உலகப் பணக்காரர்களின் பட்டியலுக்குப் போக முடியும்.

  யார் வேண்டுமானாலும் கிரானைட் பாறைகளைச் சுரண்டலாம்.

  யார் வேண்டுமானாலும் கனிம வளங்களைச் சூறையாடலாம்.

  யார் வேண்டுமானாலும் விவசாயமெனும் நாட்டின் முதுகெலும்பை ஒடிக்க முடியும்.

  பதிலளிநீக்கு
 4. யார் வேண்டுமானாலும் விஷக் கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டலாம்.

  யார் வேண்டுமானாலும் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களின் சேமிப்பை சூறையாடலாம்.

  தொழிலதிபர் என்ற பெயரில் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டலாம்.

  யார் வேண்டுமானாலும சாராயம் காய்ச்சி அரசாங்கத்திடமே மொத்த விலைக்கு விற்கலாம்.

  ஊருக்கு ஒதுக்குப் புறமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றவர்களெல்லாம் ஏதோ ஒரு பொதுக் குளத்தை வளைத்துப் போட்டு கட்டிடம் கட்டி கல்லூரி நடத்துவதன் மூலம் கட்டணக் கொள்ளையடித்து கல்வித் தந்தை என்றும் கல்வி வள்ளலென்றும். அரசின் விருதுகள் வாங்கலாம் .

  உலகநாடுகளில் தடை செய்யப் பட்ட மருந்துகளை கொண்டு வந்து ஏழை மக்களிடம் விற்று கொத்துக் கொத்தாக கொலை செய்யும் காரியத்தை கண்களைக் குருடாக ஆக்கும் காரியத்தை யார் வேண்டுமானால் செய்யலாம்.ஒரு வேளை நீதிமன்றம் தன்டனை வழங்கினால் ஒட்டுமொத்த மருத்துவர்களும் வேலை நிறுத்தம் செய்து உயிருக்குப் போராடும் நோயாளிகளைக் கொன்றும் கூட குற்றவாளிகளை காப்பாற்றுவார்கள்.

  யார் வேண்டுமானால் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கடத்தலாம் பதுக்கலாம்.அவர்களுக்கான சந்தையை உருவாக்க உலக வங்கி உத்தரவுக்கினங்க அரசே ரேசன் கடைகளை இழுத்து மூடும்.

  என்னே ஒரு அற்புதமான ஜனநாயக நாடு இது.அதனால்தான் உலக வல்லாதிக்க நாடுகளால் ஐநூறு ஆண்டுகளாகச் சுரண்டப் படுகிறோம்.சுரண்டலில் தொய்வு ஏற்பட்டால் முதலமைச்சர்களும் பிரதம மந்திரிகளும் ஜனாதிபதி களும் வெளிநாடுகளைத் தேடிப் போய் கூட்டி வநது முதலீட்டாளர் மாநாடு நடத்தி புதிதாகச் சுரண்டும் முறைகளைக் கற்றுக் கொடுப்பார்கள்.

  இவற்றிலும் தொய்வு ஏற்பட்டால்
  லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றமில்லை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பதும் குற்றமில்லை என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கும்.

  இவற்றையெல்லாம் பார்த்து பொது மக்களும் குற்றவாளிகளாகவே வாழப் பழக வேண்டும்.குற்றமிழைப்பது பெரிய காரியமில்லை.குற்றமிழைத்தாலும் தப்பிக்கும் தொழில் முறை தெரிந்திருக்க வேண்டும் அவ்வளவுதான்.

  ஆனால் தப்பித்தவறியும் கூட
  சுயமரியாதையுள்ள நேர்மையான சமூக ஒழுங்குக்கு கட்டுப்பட்ட
  தன்மானமுள்ள மனிதனாக ஆம் மனிதனாக மட்டும் நாம் வாழ்ந்திடக் கூடாது.வாழமுடியும் என்ற என்னமே வந்து விடக் கூடாது.

  அதனால்தான் சொல்கிறோம் இது ஒரு போலி ஜனநாயக நாடு.இந்த அரசு கட்டமைப்பு மொத்தமே குற்றவாளிகளைக் காப்பதற்கான தொடர்ந்தும் தைரியமாக குற்றம் புரிபவர்களுக்கான கட்டமைப்பு .

  இதன் உள்ளிருந்து கொண்டே ஒருபோதும் சரி செய்யவே முடியாது.சரி செய்வதற்காக ஏற்கனவே எடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளுமே திருகு சுழல் போல அதலபாதாளத்திலேயே தள்ளி இருக்கிறது.

  முற்றிலும் பழுதடைந்த வீட்டை உள்ளிருந்து கொண்டே சரி செய்ய முயல்வது முட்டாள்தனமான முடிவு வீட்டிற்கு வெளியில் நின்று வீட்டை இடித்துவிட்டு புதிய வீடு கட்டுவது தான் அறிவார்ந்த முடிவு.

  ஆம் தோழர்களே நன்பர்களே
  புதிய ஜனநாயகப் புரட்சி ஒன்றே சுயமரியாதையுள்ள மனிதனாக வாழ்வதற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு.

  தமிழகம் முழுக்க ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையுமே மெரினாப் போராளிகள் என்ற ஒற்றைக் குறியீட்டில் அடையாயப்படுத்த அனுமதி கோருகிறேன்.

  மெரினாப் போராளிகள் புதிய ஜனநாயகப் புரட்சிக்கான நம்பிக்கை ஒளிக்கீற்றைப் பாய்ச்சியிருக்கிறார்கள்.எந்த மானவர்கள் இளைஞர்கள் மக்கள் மீது தமிழக காவல்துறை கொலை வெறித் தாக்குதல் நடத்தியதோ அதே மானவர்கள் அதே மெரினாவில் இன்று காயங்களில் வழியும் ரத்தத்தைத் துடைத்துக் கொண்டே கழிவுகளை அள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

  ஆம் இது ஆளும் வர்க்கத்திற்கான இரண்டாவது எச்சரிக்கை மணி.

  மூன்றாவது மணி வரக்கூடிய தேர்தல்களில் ஓட்டுப் போடாதே புரட்சி செய் எனும் இசை முழக்கமாய் தமிழகமெங்கும் ஒலிக்கும்! ஒலிக்க வேண்டும்!!
  ஒலித்தே தீர வேண்டும் !!!

  நன்றி Kingmaker

  பதிலளிநீக்கு
 5. வேலைக்காரி என்கிற காரணத்துக்காக மட்டுமான எதிர்ப்பு என்று சுருக்கிக்கொள்வது ஒரு சாமர்த்தியம்தான்! அவன் திருடவில்லையா, முன்னர் இருந்தவர் ஒழுங்கா என்று கேட்டு மறுபடியும் குழிக்குள் விழத் தயாராயிருப்பது என்ன ஆசையோ!! பெரும் எதிரிகளாய் இருந்த இருவரில் ஒருவர் மறைந்தார். இன்னொருவர் செயலற்று இருக்கிறார். இந்நிலையில் துவேஷ அரசியல் மறைந்து நாகரீக அரசியல் துளிர் விட்டுக்கொண்டிருக்கும் நேரம் பழைய பாதையில் என்ன தவறு என்று கேட்பது வியப்பாக இருக்கிறது! எழுச்சியைக் கண்ட நாம் அதை அடுத்த கட்ட ஆக்கபூர்வமான செயல்களுக்குக் கொண்டுபோக முயற்சிக்கவேண்டும்.

  //ஜெவின் இறுதிச்சடங்கின் போதும் எவ்வித கலவரங்களும் நேராமல்....//

  இதற்கு அவரோ, அவரைச் சேர்ந்தவர்களோ சத்தியமாகக் காரணமல்ல. பொதுமக்களின் சுயக்கட்டுப்பாடு. அப்படி இவர்களுக்கு சக்தி இருந்திருக்குமானால் மெரினா எழுச்சி முதலிலேயே முறியடிக்கப்பட்டிருக்கும்.

  //ஆட்சியில் எவரும் இல்லாத சில மாதங்களிலும் நிர்வாகத்தை இயங்கு நிலையில் தொடர வைத்தவரால்..//

  இதுவும் தவறு.. இரண்டு தனி ராஜ்ஜியங்கள் நடந்தன. இரண்டு இரண்டு கடிதங்கள் மத்திய அரசை நோக்கிச் சென்றன. முதல்வர் பேசிக்கொண்டிருக்கும்போதே சசிகலா அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.

  //நலல் திட்டங்களை இடலாம் என தோன்றாமல் போவதேன்?//

  அதற்கான வாய்ப்பை அவர் கணவர் நடத்திய "தஞ்சை மாநாடே" கொடுக்கவில்லை.

  //ஜெவின் தோழி என்பதை வைத்து "அருமையான நிர்வாகத்திறனும்" ஆளுமையும் மிக்கவராகதான் தன்னை வெளிப்படுத்தி இருக்கின்றார்.//

  எதை வைத்து இந்த முடிவுக்கு வந்தீர்கள் என்றும் தெரியவில்லை!

  பதிலளிநீக்கு
 6. ஆகா...அருமை.. இப்படி மட்டுமே பின்னூட்டமிட்டுக்கொண்டிருந்த எங்கள் டி.டி யை கொந்தளிக்கவைத்து மிக நீண்ட(அநேகமாக அவர் வலையுலகின் மிக நீளமான) பின்னூட்டமிடவைத்த உங்களை நான் வன்மையாக...

  பதிலளிநீக்கு
 7. நிஷா. இங்கு சசிகலாவா, ஸ்டாலினா, இல்லை பன்னீர்செல்வம் அவர்களாவா என்பதில்லை. இத்தனை வருடங்கள் என்னெல்லாம் ஊழல்கள் நடந்தனவோ அதை எல்லாம் நாம் கண்டும் பொறுத்தும் தட்டிக் கேட்காமல் போய்க் கொண்டிருந்தோம். ஜெயலலிதா இருந்தவரை, காமராசர் அவர்களின் காலத்திற்குப் பிறகு ஒன்று டிஎம்கே அல்லது ஏஐஐடிஎம்கே என்றுதான் மாறி மாறி வந்து கொண்டிருந்தது. ஜெஜெ ஆட்சியின் போது சசிகலா திரைமறைவில் இருந்தாலும் அவரும் சொத்துக் குவிப்பு வழக்கில் உள்ளே சென்றார். மட்டுமல்ல அவரது குடும்பமும் சரி, ஜெஜெயும் சரி, டிஎம்கே தலைமையின் குடும்பமும் சரி என்னெல்லாம் என்னெல்லாம் சேர்த்தார்கள் என்பதும் எல்லாரும் அறிந்ததே. இங்கு சசிகலாவைப் பற்றி பொதுமக்கள் என்ன பேசுகிறார்கள், அல்லது அவரது முந்தைய வாழ்க்கை அவர் முதல்வர் ஆவதற்குத் தகுதியானவர் அல்ல என்று சொல்லுவதோ நான் சொல்ல விழையவில்லை. ஏனென்றால் இவை எல்லாம் பொருட்டே அல்ல. மட்டுமல்ல நம்மூரில் காமராசருக்குப் பிறகு ஆண்டவர்கள் எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தாம்.

  எனக்குத் தோன்றிய ஒரு அவா இப்போது ஜெஜெ மறைந்த பிறகு ஒரு இடைவெளி,,சைக்கிள் கேப் என்றும் வைத்துக் கொள்ளலாம் இந்த இடைவெளியில் ஒரு நல்ல மூன்றாவது நபர் உருவாகமாட்டாரா? இனியேனும் கரைவேட்டிகளைப் பின்னுக்குத் தள்ளி நல்லதொரு ஆட்சி மலர நேரம் வாய்க்காதா ஏனென்றால் மக்களும் சற்று விழித்தெழுந்த நேரம் என்பதால் அப்படி மலராதா என்ற ஓர் ஆதங்கம்.

  நிச்சயமாக தமிழ்நாட்டு முதல்வர் நாற்காலி என்பது இனி முன்பு போலானது இல்லை. இளைஞர் சமுதாயம் விழித்தெழுந்துவிட்டது. மக்களும் விழித்தெழுந்துவிட்டனர். ஓர் அறைகூவல் போதும். எனவே அந்த நாற்காலியில் அமர்பவர்கள் இனி கொஞ்சம் கவனுத்துடன் தான் அமரவேண்டும் என்ற நிலை அது யாரானாலும் சரி வந்துள்ளது என்பதை மறுக்க இயலாது. எனவே அது சசிகலாவாக இருந்தாலும் இன்னுமே கவனமாகத்தான் இருக்க வேண்டும். அவருக்கும் அது தெரிந்திருக்கும் இத்தனை ஊடகங்கள் இருக்கும் போது தெரியாமலா இருக்கும்...

  என்றாலும் இப்போது எழுந்திருக்கும் எதிரலை உண்மையில் சசிகலாவுக்கு மட்டுமான அலையாகத் தெரியவில்லை. நல்லதோர் ஆட்சி வேண்டும் என்று மக்கள் விரும்பும் அலையாகத்தான் தெரிகிறது.
  செல்வா அவர்களின் எழுத்திலும் கூட அதன் பின்னால் ஓர் ஆதங்கம், சலிப்பு, இயலாமை, ஏக்கம் இருப்பதாகத்தான் படுகிறது ஏனென்றால் இதுவரை இப்படித்தானே இருந்தது என்னத்த சாதித்தோம் எனவே அப்படியே இனியும் இருந்துவிட்டுப் போகட்டும் என்ற வரவேற்பாகத்தான் எனக்குத் தோன்றியது.

  கீதா

  பதிலளிநீக்கு
 8. நிஷா முந்தைய நாள் ஒதுங்கியவர்கள் ஒதுங்கியதன் காரணம் கோழைத்தனத்தால் அல்ல. மீண்டும் கொஞ்சம் புத்திசாலித்தனத்துடன் வர வேண்டும் என்ற பதுங்குதலே. ஏனென்றால் அவர்களுக்கு அரசியல் சுளிவுகள் தெரியாது. அதை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் இன்னும் இல்லை. அரசியல் சாணக்கியம் தெரியாது. மட்டுமல்ல அந்த இடத்தில் நேர்மையாக இருந்ததால் அவர்கள் சிலவற்றை எதிர்பார்க்கவில்லை. எனவே எனக்குத் தோன்றுவது புலி பதுங்கியிருப்பதாகத்தான். அவர்கள் அரசியலில் இறங்குவதாக உள்ளார்கள். ஏனென்றால் சிலது நல்லது நடக்க வேண்டும் என்றால் டிடி பகிர்ந்திருக்கும் கருத்தின் இந்த வரிகளை...//இதன் உள்ளிருந்து கொண்டே ஒருபோதும் சரி செய்யவே முடியாது.சரி செய்வதற்காக ஏற்கனவே எடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளுமே திருகு சுழல் போல அதலபாதாளத்திலேயே தள்ளி இருக்கிறது.

  முற்றிலும் பழுதடைந்த வீட்டை உள்ளிருந்து கொண்டே சரி செய்ய முயல்வது முட்டாள்தனமான முடிவு வீட்டிற்கு வெளியில் நின்று வீட்டை இடித்துவிட்டு புதிய வீடு கட்டுவது தான் அறிவார்ந்த முடிவு.

  ஆம் தோழர்களே நன்பர்களே
  புதிய ஜனநாயகப் புரட்சி ஒன்றே சுயமரியாதையுள்ள மனிதனாக வாழ்வதற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு.// வழிமொழிகிறேன்..

  கீதா

  பதிலளிநீக்கு
 9. உங்கள் கட்டுரை அருமை நிஷா!!

  கீதா

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் நல்ல விரிவான விடயம் விரைவில் நானும் எழுதுவேன்
  ஒரு விடயத்தில் நான் நிச்சயமாக பெருமைப்படுகிறேன் காரணம் என் இன தமிழச்சி அதேநேரம் நானும் விரைவில் எழுதுவேன்.

  காரணம் ஜவஹர்லால் நேரு இறந்த பிறகு நியாயமாக எனது அப்பா பிரதமராக வந்திருக்க வேண்டும்

  காரணம் தோழியே முதல்வராகலாம் என்னும்போது... மாமா என்று அழைத்தவர் எனது அப்பா.

  //கொடுத்த காசுக்கு மேலேயே எழுதியாச்சுப்பா//

  இப்பத்தான் எனக்கு சந்தேகம் ???

  பதிலளிநீக்கு
 11. எல்லாத்தையும் வாசிச்சாச்சு...
  விரிவான அலசல்....
  எல்லாரும் விரிவா விளக்கம் கொடுத்திருக்காங்க...
  தோழியின் சுயரூபம் இப்போதுதான் தெரிய ஆரம்பித்திருக்க்கிறது.
  இனியும் சசிகலாவின் அமைச்ச்சரவையில் அமைச்சராகணுமா?
  யோசிங்க...

  பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!