04 பிப்ரவரி 2017

இலங்கையில் சுதந்திர தினம்????

சுதந்திரமாம் சுதந்திரம் சொக்க வைக்கும் சுதந்திரம் 
சொந்த மண்ணில் அடிமையாய் விந்தையான சுதந்திரம் 
சுப்பன் சொன்ன சுதந்திரம் சுகமாய் கிடைத்த சுதந்திரம் 
கப்பல் ஏறி கடலிலே மறைந்து போன சுதந்திரம்
சுற்றி வரும் சுழல்களில் அமிழ வைக்கும் சுதந்திரம்
முட்கம்பு வேலிக்குள்முடக்கி வைத்து சுதந்திரம்
காடுமேடு கடலென கதறடித்து சுதந்திரம்
உயிர்க்கும் உணர்வை உடலிலே மரிக்க வைத்து சுதந்திரம்
இரத்தம் குடிக்கும் இனவெறிக்குள் தள்ளி விட்ட சுதந்திரம்
இருப்போரெல்லாம் அடிமையாய் அடங்க வைத்து சுதந்திரம்
அடங்காதோரை மண்ணுக்குள் அடக்கம் செய்து சுதந்திரம்
அடிமைகளை அலங்கார பதுமையாக்கி சுதந்திரம்
மேதைகளை பேதையாய்  வதைக்க வைத்து சுதந்திரம்
கற்றோரெல்லாம் கடுதியில் மறைத்தழித்து சுதந்திரம்
கண்ணீர் மட்டும் அருவியாய் சொரியதந்து சுதந்திரம்
சோகம்தனை சுமையாக சுமக்க வைத்தே சுதந்திரம்
வாயிருந்தும் ஊமையாய், வாழ சொல்லும் சுதந்திரம்
காதிருந்தும் செவிடராய் கடந்து செல்லும் சுதந்திரம்
வெந்த புண்ணில் வேலாக கல்வி மறுக்கும் சுதந்திரம்
சொந்த மண்ணே உனக்கில்லை என்று துரத்தும் சுதந்திரம்
உரிமை கேட்கும் உடலினை உரமாய் மாற்றும் சுதந்திரம்
வறுமை தனையே பரிசாக வழங்கிச்சென்ற சுதந்திரம்
அன்னை தந்தை உறவினை தூரமாக்கும் சுதந்திரம்
தேடும் இடத்தில் உறவினை தொலைக்க வைத்து சுதந்திரம்

மென்மையான பெண்மையை சிதைக்க வைத்து சுதந்திரம்
மேன்மையான எம்மினத்தை அழித்தொழித்து சுதந்திரம்
நேர்மையாய் நின்றோரை சிறையடைத்து சுதந்திரம்
வன்மையால்   தனிமையை உணர வைத்து சுதந்திரம் 
படையெடுத்து மக்களை பலியெடுக்கும் சுதந்திரம்
சிறகொடித்து பாடையில் படுக்க வைத்து சுதந்திரம்
நாடு விட்டு நாடுகள் அலைய செய்து சுதந்திரம்
விடையில்லாத கேள்விகள் எம்முள் எழுப்பும் சுதந்திரம்

அடிமையில்லா ஓர்வாழ்வு என்றெமக்கு கிடைக்குமோ?
தடையில்லாமல் கல்விக்கண் என்றெமக்கு திறக்குமோ?
மதகு திறந்த அணை போல 
என்றெம் மண் சொந்தமாகுமோ?
என்றெம் இன்னல்கள் தீருமோ அன்றே எங்கள் சுதந்திரம்

7 கருத்துகள்:

 1. உணர்ச்சி மிக்க ஒரு ஆதங்கக் கவிதை.

  பதிலளிநீக்கு
 2. இன்னல்கள் விரைவில் தீரட்டும்...

  பதிலளிநீக்கு
 3. உங்கள் தளத்தை blogspot.com என்று மாற்றி விடுங்கள்...

  ஏன் என்பதை கீழே இணைப்பில் சென்று வாசிக்கவும்...

  http://ponmalars.blogspot.com/2012/03/stop-blogger-redirecting-country-wise.html

  உதவி தேவையென்றால் தொடர்பு கொள்ளுங்கள் சகோதரி... நன்றி...

  பதிலளிநீக்கு
 4. இனிப்பென்று எழுதி நக்கிப்பார்ப்பதே சுதந்திரம்..

  வரிக்குவரி அனலும்...அழுகையும் பீறிடும் வரிகள்..

  அத்தனையும் உண்மை...

  பதிலளிநீக்கு
 5. என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம் ..
  என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்..
  என்றெமதன்னை கை விலங்குகள் போகும்?

  பதிலளிநீக்கு
 6. உணர்வு பூர்வமான வரிகள். உங்கள் வேதனை ஆதங்கம் எல்லாம் ஒவ்வொரு வரியிலும் வார்த்தையிலும் வெளிப்படுகிறது..உண்மை...

  பதிலளிநீக்கு
 7. ஆதங்கத்தை உணரமுடிகிறது, வரிகளில்.

  பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!