06 செப்டம்பர் 2018

என்னை செதுக்கிய ஆசிரியர்கள்

ஆசான்கள் என்பவர்கள் வாழ்வியல் வழி காட்டிகள் எனில் எனக்கான என் ஆசிரியர்களும் நல் வழி காட்டிகள் தான்!
இன்று என் ஹோட்டலில் வேலை செய்யும் தம்பி கேட்டார்.
அக்கா நீங்கள் எங்கே எதுவரை தமிழில் படித்தீர்கள்?
நான் ஏன் அப்படி கேட்கின்றாயப்பா என கேட்டேன்.
நிரம்ப விடயம் அறிந்திருக்கின்றீர்கள். நன்கு தமிழ் பேசுகின்றீர்கள். எல்லா விடயங்களையும் விவாதிக்கின்றீர்கள், கெட்டிக்காரியாக இருக்கின்றீர்கள் அக்கா அதனால் கேட்டேன் என்றான்.
இப்பதிவை அவனும் படித்து கொண்டிருப்பான்.
நான் ஏதேனும் சாதித்தேன் எனில் அது எனக்கு கிடைத்த் ஆசிரியர்களின் நற்கொடையால் தான். சிற்பியின் கை களி மண் போல என்னை செதுக்கியவர்கள் என் ஆசிரியர்களே.
காலத்தில் ஓட்டத்தில் எனக்கு கற்பித்த நல்லாசிரியர்கள் பலரின் பெயர் மறந்து விட்டாலும் மறக்க முடியாத நினைவோடு ஒட்டி இருப்பவர்களில் மிக முக்கியமானவர் அக்காலத்தில் கிழக்கு மாகாண வை,எம்,சீ,ஏ தலைவராகவும் எங்கள் மகாவித்தியாலயத்திற்கு அதிபராகவும் சமூகக்கல்வி மற்றும் ஆங்கில ஆசிரியராகவும் இருந்த ஜெயானந்தம் சார் அவர்கள்!
இவர் எனக்கு காட்டிய அக்கறை ஊக்கம் குறித்து நிரம்ப நிரம்ப பேசலாம்! மிக அருமையான, அன்பான ஆசிரியர். என் ஆசியர்களில் நான் நேசிக்கும் ஆசிரியர் இவர்.
இவர் மகளும் என்னுடனிணைந்த ஒரே வகுப்பில் படித்தோம்! மற்றவர்கள் விடயத்தில் எப்படி இருந்தாலும் என்னிடம் ரெம்ப அக்கறையாய் அன்பாய் இருந்தார்! கண்டிப்பு காட்டிய அதே நேரம் திறமை கண்டு ஊக்கம் தந்தார்!
பள்ளிப்பாடம் சம்பந்தமான விடயம் ஏதேனும் செய்யாமல் போனால் அதற்கான காரணம் என்ன என கேட்டு தீர்த்து வைப்பார்! உடனே அடிக்க மாட்டார். அக்காலத்தில் எங்கள் ஏழ்மை நிலை புரிந்து கல்வியை கற்க வழி காட்டினார்.
ஆங்கிலமும், சமூகக்கல்வியும் பல மாணவர்களுக்கும் வேம்பாய் கசக்கும் போது எனக்கு இவரிடம் கற்றதாலோ என்னமோ இந்த பாடங்கள் ரெம்ப பிடிக்கும். சமூகக்கல்வியில் எப்போதும் முதல் மாணவியாய் வர உறுதுணையாய் இருந்தது இவர் பாராட்டுகள் தான்!
ஜெயானந்தம் சார் அக்காலத்தில் பள்ளியின் அதிபராகவும், வை.எம்,சீ, ஏ வின் நிர்வாக தலைவராகவும் இருந்தார். இவர் காலத்தில் பள்ளி நிரமப் முன்னேற்றங்களை கண்டது. ஆனாலும் இவர் செய்தவைகளை மறுதலித்தோர் தான் அனேகம்.
எனக்கு என்றும் மறவா நல் ஆசிரியர் ஜெயானந்தம் சார் அவர்கள்.
2.கந்தசாமி மாஸ்டர்..இன்றைக்கு பிரின்சிபலாய் இருக்கின்றார். எட்டாம் ஒன்பதாம் வகுப்பில் சமூகக்கல்வி சாராக வந்து இரண்டு மாடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததனால் சோர்ந்திருந்த என்னை தூக்கி கோபுர் உச்சியில் வைத்தவர். இவருடைய பாராட்டுக்கள் எனக்கான உந்து சக்தியை தந்தது. என்னுடைய ஒவ்வொரு நோட்ஸை திருத்தும் போதும் என் வகுப்பு மாணவர்களை நோக்கி சொல்வார். இப்படி படிக்கணும், இப்படி செய்யணும் என சொல்லி என்னை உதாரணமாக்கி பாராட்டுவதுடன் பள்ளி அசெம்பிளியிலும் இப்படி சொல்லி பாராட்டுவார். .
அதே போல் என் தங்கை மார்களிடம் அக்கா போல் படித்து ஸ்கூலுக்கு பெயர் எடுத்து தரணும் என சொன்னதும் கடந்த சில வருடம் முன்னால் தம்பி திருமணத்துக்காக நீண்ட இடைவேளையின் பின் கிட்டத்தட்ட 20 வருடங்களின் பின் சொந்த ஊருக்கு போன போதும் என்னை மறக்காது இவள் என்மாணவி என தானாகவே தேடி வந்து தன்னை அறிமுகப்படுத்தி இவள் படித்த படிப்புக்கு ஊரில் படிப்பை தொடர்ந்திருந்தால் ஸ்கூலுக்கும் ஊருக்கும் பெருமை தேடித்தந்து எங்கோ போயிப்பாள் என்றார். நன்றி சார்!
என்றைக்கும் மறக்க முடியாத வார்த்தையை அன்று பலர் முன்னிலையில் சொன்னீர்கள்.எனக்கான பொக்கிஷமாக உங்கள் வார்த்தைகளே இருக்கின்றது.
கந்தசாமி மாஸ்டரும் இந்தப்பதிவை படிக்கலாம் என நினைக்கின்றேன்.
3.குமார் மாஸடர். கணக்கு டீயூசன் சொல்லித்தந்தவர்.இவரால் என் தோழிகளின் அம்மா மாரே பொறாமை பட்டார்கள் அக்காலத்தில். எனக்கு பாடம் சொல்லித்தர அவசியமே இல்லாமல் புத்தகத்தில் இருக்கும் உதாரணங்களை வைத்தே பட்டென புரிந்து கணக்கு போடுவேன் என பாராட்டி பாராட்டியே ஏத்தி விட்டு கடைசியில் எனக்கு தெரியாது என எதையும் சொல்லகூடாது எனும் நிலைக்கு கொண்டு வரும் படி ஆராயும் மனபாங்கை கொண்டு வந்தவர்! இவரும் நான் ஊருக்கு சென்றிருந்த போது கந்தசாமி மாஸ்ட்ருடன் இணைந்து என் பள்ளிக்காலங்களை நினைவு படுத்தினார்கள். எனக்கு கற்பிப்பது தனக்கு இலகுவாக இருந்ததாக சொன்னதை கேட்டபோது நெகிழ்ந்தேன்.
நாங்கள் எங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களை மறக்காதிருப்பது சாதாரணம், ஆனால் நமக்கு கற்பித்த ஆசிரியர்கள் நம்மை மறக்காது பல வருடங்கள் கடந்தும் நினைவில் வைத்திருப்பது நமக்கான கீரிடம் அல்லவா?
4.விஜயா டீச்சர் ஆறாம், ஏழாம் வகுப்பில் தமிழ் கற்பித்த ஆசிரியை! எனக்குள் இலக்கிய இலக்கண ஆர்வமும் நான் பேசும் தமிழும் வாசிக்கும் கவிதைக்கும் அடிப்படை வித்தானவர்! தமிழ் பாடத்தில் புத்தகத்தில் இருப்பதை ஒருவர் சத்தமாக படிக்க அவர் அது குறித்து விளக்கம் சொல்வார்!
அவர் வகுப்பெடுக்கும் போதெல்லாம் என்னை தான் பந்திகள் வாசிக்க சொல்வார். அதற்கு சொல்லும் காரணம்! வசனங்களை தெளிவாக அனைவருக்கும் புரிவது போல் நிறுத்தி வாசிப்பேன் என்பார். பாராட்டுவார். ஊர் விட்டு வந்தும் தமிழ் ஆர்வத்தை விதைத்தவர் என் தமிழாசிரியை எனில் மிகை இல்லை!
5.மாதினி, மாலா டீச்சர்! விஞ்ஞான ஆரிசியை என்பதை விட சகோதரிகளான இவர்களை அக்கா என அழைத்து பின்னர் டீச்சர் என அழைத்தேன். ஸ்கூல் விட்டு வந்தால் மாலை நேரம் முழுதும் கணக்கும் , விஞ்ஞானமும் சொல்லி தரும் டீச்சர்கள் இவர்கள்!
6.கோகிலா டீச்சர்.ஒரு வருடம் தமிழ் ஆசிரியையாய் கற்பித்தார்.இவர் எனக்கு ஆசிரியை ஆக முன் கோகிலா ஆண்ட்டி என அழைத்து பின் ஆசிரியரானாலும் எனக்கு கற்பிக்கும் முன் அவள் எடுக்கும் பாடங்களுக்கு பேப்பர் திருத்து பணிக்கு என்னையும் அழைப்பார்.ஆறாம் ஏழாம் வகுப்பில் படிக்கும் போதே ஸ்கூல் பரிட்சை நேரம் பேப்பர் திருத்த என்னை அழைப்பார். அவருடன் இணைந்து திருத்துவேன். எனக்கு ஆசிரியை ஆனபின் . என் கிளாஸ் பரிட்சைபேப்பரெல்லாம் நான் திருத்தி இருக்கின்றேன். அதனால் கிளாஸில் எப்போதும் ஒரு கெத்து இருக்கும்!
பரிட்சை பேப்பர் முடிவு வெளிவர முன்பே எனக்கு எல்லோரின் மாக்ஸும் தெரிந்து இருக்கும். அதனால் வரும் கெத்து அது. ஹாஹா.
7.ஜோன்சன் மாஸ்டர். தடியோட தான் வருவார். இவரிடம் அடிவாங்காத மாணவர்கள் இல்லை. நான் எப்படியோ தப்பி விடுவேன்! ஆனால் ஒரு முறை பாடமெடுக்கும் ஆசிரியர் வராத போது பசங்க சத்தம் போட்டார்கள் என வகுப்பு பொறுப்பாய் இருந்த எனக்கு கையில் ஒரு அடி போட்டார்! 
வலி எனில் பயங்கர வலி! முதலும் கடைசியுமாய் அடி கொடுத்து மறக்க முடியாத ஆசிரியர் பட்டியலில் சேர்ந்து கொண்டார்.

அதன் பின் யார் சத்தம் போட்டாலும் அவர்கள் பெயரை பிளக்போர்டில் எழுதி அதனால் பசங்க கிட்ட ஸ்கூல் முடிந்த பின் அடி வாங்குவது வேற கதை!
அக்காலத்தில் வை,எம் சீ,ஏ யால் நடத்தின வகுப்புக்களும், அதை நடத்திய ஆசிரியைகளும் என் உயர்வின் பின்னால் குறிப்பிடத்தகக் இடம் பெறுவார்கள். தியாகி ஆண்ட்டியின் பெயர் மட்டுமே நினைவில் இருக்கின்றது. இலவச மாலை வகுப்பெனினும் பயன் தரும் பல விடயங்கள் கற்க நிர்வாக மனேஜ்மெண்ட் அறிந்திட உதவியாக இருந்தது அந்த இடம்!
இன்னும் பல டீச்சர் இருக்கின்றார்கள். எல்லோர் பெயரும் நினைவில் இல்லை.
நான் சுவிஸ் வந்த பின் எனக்கு ஜெர்மன் எழுத்துக்களை அரிச்சுவடியிலிருந்து கற்பித்து இலங்கையில் நான் படிக்கும் காலத்தில் எப்படி ஆசிரியர்களால் முன் நிறுத்தப்படுவேனோ அப்படியே இங்கும் வகுப்புக்களில் என் நோட்ஸ்களை ஏனைய மாணவர்களுக்கு உதாரணமாக எடுத்து கொடுக்கும் படி புது மொழியிலும் பள்ளிக்காலத்தில் ஆர்வத்தை தந்த ஆசிரியர்களாக ஜேர்மன் மொழியை கற்பித்த ஆசிரிவர்கள் இருந்தார்கள். தொழிற்கல்வி நேரங்களிலும், பயிற்சி வகுப்புக்களிலும் அருமையாக வழி காட்டினார்கள்.
கம்யூட்டர் பயன் படுத்த ஆரம்பித்த காலத்தில் தமிழ் தட்டச்சிட தெரியாது தடுமாறி வேறு தளங்களில் இருக்கும் தட்டச்சு பலகையில் தட்டச்சிட்டு முத்தமிழ் மன்றத்தில் பதிவேன். அதனால் நிரம்ப எழுத்து பிழைகளும், பதிவுகளில் தாமதமும் இருக்கும். அதை புரிந்து தமிழ் தட்டச்சிட எனக்கு வழி காட்டி இணைய வசதிகளை எப்படி பாதுகாப்பாக பயன் படுத்தலாம் என கற்பித்த 
Sudhakar Subramanian அண்ணாவும் எனக்கு ஆசிரியரானார்.

எனக்காக வாழ்க்கை பாடத்தை போதிக்கும் என் மகன் கப்ரியேலும் எனக்கு ஆசிரியரே.. நான் சோர்ந்து போகும் நேரங்களில் நச்சென அவன் சொல்லும் ஆலோசனைகள் தான் எனக்காக் விடிவிளக்காக இருந்திருக்கின்றது.
எங்களை பொய் சொல்ல கூடாது என சொல்லி தந்து விட்டு நீங்கள் மட்டும் ஏன் பொய் சொன்னீர்கள் என சில சந்தர்ப்பங்களில் தடுமாறி நிற்கும் நேரம் என்னை அதட்டி உருட்டும் என் மகளும் எனக்கு ஆசிரியையே.
நான் இன்றும் புதியவைகளை தேடிக்கற்கும் மாணவியாக்வே இருக்கின்றேன். தினம் தினம் எனக்காக புதிய பாடங்களை நான் காண்போர் கற்பித்துகொண்டே இருக்கின்றார்கள்.
என் வாழ்க்கையில் ஒவ்வொரு கால கட்டங்களிலும் ஒவ்வொருவர் எனக்கு வாழ்க்கை பாடத்தை போதிப்பவர்களாகவே இருந்திருக்கின்றார்கள்.
அனைவருமே எனக்கு கல்விக்கண் திறந்தவர்களாய் தான் இருந்தார்கள்!
என் உயர்வு எதனால் என்றால் எனக்கு கிடைத்த ஆசிரியர்களால் என்பேன்.
ஆசிரியர்கள் நல்லதாய் அமைந்தால் படிக்கும் பாடங்களும் இனிப்பாய் ருசிக்கும் என்பதற்கு நானும் என் ஆசிரியர்களுமே உதாரணம் தான்!
படிப்பை நேசித்தேன். டாக்டராக வேண்டும் எனும் கனவுடன் படிப்பை தொடர்ந்திருந்தால் நனவாகி இருக்கும் என்பது நிச்சயம்.
விபத்தும் அதை தொடர்ந்த வலிகளும், வெளி நாட்டு வாழ்க்கையும் எனக்கு இன்று பணத்தை,மதிப்பை, உயர்வை தந்திருந்தாலும் உள் மனதில் எதையோ இழந்தது போன்ற ஏக்கம் தொடரத்தான் செய்கின்றது!
படிக்கும் நேரம் படிப்பும் அதன் அவசியமும் புரியாது நாம் விளையாட்டாய் இருக்கின்றோம்! ஆனால் என்ன தான் பணம் குவிந்தாலும் படிப்பும் அதனால் வரும் கனமும் எதனுடனும் ஒப்பிட இயலாதது!
இந்த நாளில் அனைத்து ஆசிரியர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகளை காணிக்கை ஆக்குகின்றேன்.


2 கருத்துகள்:

  1. ஒவ்வொரு ஆசான்களும் ஒவ்வொரு தனித்துவம் .இரண்டு பகிர்வு ஒரே நேரத்தில் பகிர்ந்துவிட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் பாராட்டுகள்... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!