19 ஜூலை 2022

நூல் கோல் கிழங்கு கறியும், கீரை சுண்டலும்

நூல் கோல் கிழங்கு கறியும், கீரை சுண்டலும் புகைப்படத்தில் இருப்பது இன்றைய மதியம் எனக்கான உணவு : என் தோட்டத்தில் விளைந்த நூல் கோல் , சமைக்க தேவையான ஒற்றை பச்ச மிளகாயும். செர்ரி தக்காளியும் வீட்டுத்தோட்டத்தில் நூல் கோல் கிடைக்கும் நாட்களில் இந்த கிழங்கை பிரதான உணவாகவும், அதன் கீரையும் உப உணவாகவும், அரிசியும் எடுத்து கொள்ளலாம்.
நூல் கோல் கிழங்கு தேங்காய்ப்பால் கறி கிழங்கை தோல் சீவி அளவான சதுர துண்டங்களாக வெட்டி கழுவி கொள்ளுங்கள். வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி, பச்ச மிளகாயும் நறுக்கி போட்டு மஞ்சளும், உப்பும் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு அடுப்பில் வையுங்கள். முக்கால் பதம் வேகி வரும் பருவத்தில் நல்ல கட்டி தேங்காய்ப்பாலை விட்டு கொதிக்க விட்டு எடுத்தால் அருமையான நூல் கோல் பால் கறி தயார். விரும்பினால் கருவாட்டு துண்டு, மாசி சேர்க்கலாம். நான் இப்பொதெல்லாம் அசைவ உணவுகள் தவிர்ப்பதால் மரக்கறியாக்வே சமைத்து எடுப்பேன். மரக்கறிகளை கரையும் படி வேக விடாமல் முக்கால் பதத்தில் கடித்து உண்பது போல் வேக விட்டு சமைத்து எடுப்பது ஆரோக்கியமானது.
நூல் கோல் கீரை சுண்டல் சின்ன வெங்காயம் தேங்காய்ப்பூ பச்ச மிளகாய் மீன் விரும்பினால் சேர்க்கலாம். இலையின் நடுவில் இருக்கும் தண்டுகளை வெட்டி எறிந்து விட்டு கீரையை நன்றாக கழுவி இலையின் மேல் இருக்கும் நீரை உதறி எடுத்த பின் மிக மெல்லியதாக அரிந்து கொள்ளவும். மீன் சேர்த்து சுண்டுவது என்றால் மீனை சுத்தம் செய்து பச்சை மிளகாய், மஞ்சள் உப்பு சேர்த்து அவிய விட்டு பின்னர் மீனை தனியே எடுத்து முள் நீக்கி கொள்ளவும், முள் நீக்கிய மீனை மீண்டும் சட்டியில் போட்டு ஒரு கடையல் கடையவும். மீன் சேர்க்காமல் சுண்டல் செய்ய பச்சை மிளகாயை கட்செய்து மஞ்சள் உப்பு சேர்த்து அவை அவியும் அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும், மிளகாய் அவிந்த பின் அகபையால் கடைந்து விட்டு கீரையை அதனுள் சேர்த்த்து ஒரு நிமிடம் மூடி விடவும், தேங்காய்பூ ( தேங்காய் மலிவாக கிடைத்தால் ருசிக்கேற்ப தாராளமாக சேர்க்கலாம். ) சேர்த்து கீரையுடன் ஒரு நிமிடம் கிளறி விடவும், தேங்காய்ப்பூ சேர்த்த பின் மூடி போட்டு மூட வேண்டாம். இறுதியில் நறுக்கிய வெங்காயமும் சேர்த்து வெங்காயம் அவிய விடாமல் கடிபடும் பருவத்தில் இருக்கும் போதே அடுப்பில் இருந்து இறக்கி விடவும். இந்த மாதிரி கீரை சுண்டலுக்கு நான் புளி சேர்ப்பது இல்லை. அதிகரித்து வரும் விலை ஏற்றத்தை சமாளிகவும் அரிசி யின் தேவையை குறைக்கவும், ஒரு வேளை உணவில், இரண்டு பங்கு கிழங்கு கறி, அதே அளவு கீரை சுண்டல். ஒரு பங்குக்கும் குறைவாக அரிசி சோறு சேர்த்து கொள்ளலாம்.(மீன்,இறைச்சி உணவு கிடைத்தால் இந்த அளவுகளில் மாற்றம் செய்யலாம் )
அரிசியின் தேவை : ஒரு நபருக்கு தேவையான அரிசியின் சரியான அளவைக் கொடுப்பது கடினம், ஏனென்றால் எல்லா அரிசியும் ஒரே மாதிரி இருக்காது! புழுங்கல் அரிசி அதிக எடை கொண்டது.100 கிராம் சமைக்கப்படாத அரிசி 200-300 கிராம் சோறாக மாறும். எனவே சமைக்கப்பட்ட அரிசியின் எடை இரட்டிப்பாகவோ அல்லது மூன்று மடங்காகவோ இருக்கலாம்.
உணவில் அரிசி முக்கிய உணவாக இருந்தால், ஒரு நபருக்கு 100 கிராம் முதல் 120 கிராம் வரை பச்சை அரிசி தேவைப்படும். அரிசி உடன் பக்க உணவுகளுக்கு, ஒரு நபருக்கு 20-60 கிராம் உலர் அரிசி போதுமானது. உணவில் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்த்து கொண்டால் வளர்ந்த ஒரு நபருக்கு 50 கிராம் போதுமானது. பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு உணவு வழங்கும் திட்டங்களில் மரக்கறிகளை கீரைகளை அதிகமாகவும் அரிசியை உப உணவாகவும் எடுத்து கொண்டால் ஒரு கிலோ அரிசியில் 2500 - 3000 கிராம் சோறு கிடைகுமானால் 20 சிறுவர்களுக்கு 120 - 140 கிராம் சமைத்த அரிசி சோறும் 120 - 150 கிராம் மரக்கறிகளையும் சேர்த்து கொள்ளலாம். இதனுடன் பழங்களும் சேர்க்கும் போது அதுவே நிறையுணவாகி விடும். அதிருக்க மலையக மரக்கறிகளில் நோக்கல் என ஒரு நாற்றுக்கு பெயர் இருந்தது. அது என்ன மரக்கறி என எனக்கு புரியவே இல்லை. நோக்கல் என தட்டச்சிட்ட போது நாங்கள் இங்கே kohlrabi என அழைக்கும், நூல்கோல் கிழங்கு படம் கிடைத்திருந்தது. இதை ஊரில் நோகூட் என அழைத்ததாக நினைவு. நூல் கோல் மருவி நோக்கல் ஆகி நோ கூட் எனவும் அழைக்கப்படுகின்றதா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!