19 ஜூலை 2022

கல்லாற்றின் கூனி கடையலும் சுடு சோறும்

கல்லாற்றின் கூனி கடையலும் சுடு சோறும் ( முப்பத்திரண்டு வருடங்களுக்கு முன் ) நிஷாவும் மட்டக்களப்பின் சிறப்பு கல்லாற்றின் ஆற்றங்கரை பக்கமாக களுதாவளை - மண்டூர் பக்கமிருந்து தோணியில் ( வள்ளம் ) வரும் பெண்கள் இருவர் குழுவாக இடுப்பளவு நீரில் இறங்கி நின்று சல்லடை போல் இருக்கும் சேலையின் இருபக்கமும் பிடித்து கொள்வார்கள். அதை தண்ணீரில் மேல் தாலாட்டுவது போல் முன்னும் பின்னும் நீருக்குள் ஆட்டி ஆட்டி அசைக்கும் போது கூனி அந்த துணிக்குள் சேரும். இதனை "கூனி வடித்தல்" என்னும் சிறப்பு பெயர் கொண்டும் அழைப்பர். அதே பெண்களே கல்லாறு சந்தைக்கு கொண்டு விற்பார்கள். இறாலின் இளநிலை பருவமான கூனி இராசவள்ளி கூழ் போல் நிறம் இருக்கும். பூவரசு இலைக்குள் அடங்கும் ஒரு பங்கு. 🌺🌺 ஐம்பது சதம் .😂 கூனி உடன் ஆற்றின் மண் சிப்பி இருக்கும். அதை அரிச்சி அரிச்சி கழுவி எடுக்கணும்.
கூனி கடையல் பச்ச மிளகாய் அவிச்சி கடைஞ்சு நல்ல புளி மாங்காயும் உப்பும் மஞ்சளும் சேர்த்து சுத்தமாக்கிய கூனி சேர்த்து அளவான தண்ணி விட்டு மூடி விட்டால் பத்து நிமிடத்தில் அவிந்து விடும். மீண்டும் மாங்காயை அகப்பையால் கடையும் போது கூனி மாங்காய் கொச்சிக்காய் எல்லாம் சேர்ந்து செம்மமையா இருக்கும். அதே போல் கூனி இங்கே சுவிஸில் தாய்லாந்து கடையில் வாங்கி சமைத்து இருக்கின்றோம். ஆனால் போத்தலில் அடைக்க பதப்படுத்தும் போது அதன் இயற்கையான சுவை மிஸ்ஸிங்

 மட்டக்களப்பில் இருந்து எமக்கு வரும் பொருட்களில் 
 * கல்லாற்று கூனி
 * திராய் வற்றல் 
 * குறிஞ்சா கீரை வற்றல் 
 * பொட்டியான் கருவாடு கட்டாயம் இருக்கும்

 கெளுத்தி மீன் 
சள்ளல் மீன்
 செல்வன் மீன்
 குஞ்சி மீன் எல்லாம் விசேஷம்🤣

 ஆறு, குளங்களில் மீன், இறால் பிடித்தல், மீன்களை வாங்கி விற்றல், கூனி, ஐயாமாசி வடித்தல் போன்ற ஆபத்தான தொழிலில் ஈடுபட்டு வந்த பெண்களை கண்டு வளர்ந்தனால் உழைத்து பிழைத்தலில் அருமை எமக்கும் உணர்த்தப்பட்டிருந்தது. எங்கள் ஊரில் அக்காலங்களில் பெண் தொழில் முனைவோர்கள் அதிகமாக இருந்தனர். வீட்டு ஆண்கள் வேலைக்கு போனாலும் வீட்டில் இருக்கும் பெண்கள் பல தொழில்களை செய்து சிறு வருமானம் பெறும்படி இருந்தது. முக்கியமாக பத்தாம் வகுப்பில் பரிட்சை எழுதி விட்டு காத்திருக்கும் காலங்களில் பெண்களுக்கான தொழில் பயிற்சிகளை ஆரம்பித்து விடுவார்கள். 

 இதை குறித்து அடுத்த பதிவில் தொடர்ந்து எழுதுகின்றேன்.

 வேலையத்தவர்கள் மனசில் தான் ஆயிரம் குத்தல்களும் குடைச்ச்ல்களும் உருவாகும் என்பதை புரிந்து கொண்டால் இக்காலத்தில் என்ன நடக்குது என்பதை இதை வாசிப்பவர்கள் சிந்த்னைக்கே விடுவோம். போவோமா ஊர்கோலம் இந்த பூலோகம் எங்கெங்கும்

1 கருத்து:

  1. நான் மட்டக்களப்பு சகோ..
    கல்லாத்துக்கு வந்திருக்கேன்..இரவில் இரால்.மீன் அனைத்தும் விற்ப்பார்கள்..எனக்கு பிடித்த ஊர்

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!