29 அக்டோபர் 2020

சின்னவளாக இருந்த போது குப்பி லாம்பும் சிம்லி லாம்பும்

எல்லா வீடுகளுக்கும் மின்சாரம் வராத 1985-1990 காலத்தில் குப்பி லாம்பும் சிம்லி லாம்பும் கூடி வாழ்ந்தோம். 

இறுக்கமான மூடி கொண்ட ஜாம் போத்தல் ( கண்ணாடிபோத்தல் )  நடுவில் ஓட்டை போட்டு  நீளமான துணியால் சுற்றிய சுருளை அதில் நுழைத்து  மண்ணெண்ணெய் ஊற்றி போத்தலினுள் திரியை  நனைத்து துணிசுசுருள் போத்தலுக்குள் சுருண்டு கிடக்க மூடிக்கு மேலிருக்கும் திரியை கொளுத்தி விடுவோம்.

ஒரு வீட்டுக்கு குறைந்தது நான்கு விளக்கு வேண்டும்.கண்ணாடி போத்தல் விளக்கு திரியை அடிக்கடி மேலே தூண்டி விடணும். வெளியில் கொண்டு செல்ல ஏலாது. காற்றில் அணைந்து போகும், கொஞ்சம் வசதி  வந்த பின்  சிமிலி  விளக்கும் இணைந்து கொண்டது. சிம்லி விளக்குக்கு கீழ் பக்கம் அலுமினியம் போத்தல் என்று நினைக்கின்றேன். திரி தூண்டும் பிடி இருக்கும். மண்ணெண்ணெய் ஊற்றி மூடி மேலே  விளக்குத்திரி சுற்றி வர கண்ணாடி இருக்கும். திரி அடிக்கடி தூண்டும் அவசியம் இல்லை. எலாஸ்டிக் போல் ஒரு தடடையான துணி நின்று எரியும். குப்பி லாம்பு துணிச்சுருள் போல் டக்கென்று எரியாது. கொஞ்சம் நேரமெடுக்கும்.கொஞ்சம் உயர்ந்த இடத்தில் கொழுவி விட்டால் அறையெங்கும் வெளிச்சம் பரவி தெரியும். வெளிச்சத்தின் அளவு கூட்டி குறைக்கும் வசதியும் உண்டு. சீக்கிரம் காற்றில் அணையாது. அதற்கென விசேஷ தட்டையான திரித்துணி சிம்லி லாம்பு முடிக்குள் நுழைக்கணும். அது பெரிய வேலை என்றால் தினமும் பின்னேரம் விளக்கு எல்லாம் துடைத்து கழுவி காய வைத்து மண்ணெண்ணெய் ஊற்றி தயாராக வைக்கணும். சிமிலி லாம்பு கண்ணாடி கை தடுமாறி உடைந்தால் அடுத்த கண்ணாடி வாங்க இனி எவ்வளவு நாளாகுமோ என்று  அழுகை வரும். இருந்தாலும்  அரை குறையாக மேல் பக்கம் உடைந்தால் அது முழுக்க உடையும் வரை பாவிப்போம். சுத்தி இருக்கும் கரி புகை துடைத்து சுத்தம் செய்யும் போது கவனம் சிதறினால் கை யின் சதை தூண்டும் போகும் ..!  

குப்பி லம்புக்கு 50 அல்லது 100 மில்லி மண்ணெண்ணெய் ஒரு விளக்குக்கு போதும். காப்போத்தல், அரைக்காபோத்தல் என்ற அளவுகளில் எண்ணெய் வாங்குவோம்ல். சிம்லி லாம்புங்கு ஒரு போத்தல் எண்ணெய் வேண்டும். அப்போதெல்லாம்  வருமானத்தை பொறுத்து வீடுகளின் விளக்குகளும் எரியும். 

பின்னேரத்தில் ஒருக்கா வாசல் கூட்டி குப்பை அள்ளி மஞ்சள் தண்ணீர் தெளித்து நுளம்பு க்கு ( கொசு) வேப்பிலை புகை க்கு விறகும் கொளுத்தி  எல்லாம் தயார் செய்தால் தான் நுளம்பு கடிக்காமல் சிமெந்து பூசின தரையில் உட்கார்ந்து விட்டு பாடம் செய்யலாம். 

ஒரு குப்பி லாம்பை நடுவில் வைத்து அந்த வெளிச்சத்தில் கொப்பி வைத்து புத்தகத்தில் இருப்பதை எழுதியது எல்லாம் பெரும் கலை. சிம்லி லாம்பு என்றாலும் மேசை போல்  சிமெந்து பூசிய உயர்ந்த விறாந்தையில் வைத்து விட்டு வீட்டு பாடம் செய்வோம். 

வீட்டில் மூத்த பிள்ளை. கெட்டிக்கார பிள்ளை என்பதால் நான் படிக்க தனி குப்பி லாம்பு இருக்கும். மண்ணெண்ணெய் வாங்க காசு இல்லை என்றால் .. தெரு மூலையில் இருக்கும் தெரு விளக்கின் கீழ் அல்லது நகுலேஸ் ஆன்டி வீட்டு விறாந்தையில் போய் படிப்பேன். 

பெற்றோல் மாக்ஸ் லைட் தான் அக்கால ரியூப் லைட்.. நான் சின்னவளாக இருந்த காலத்தில்  கலியாண  விசேஷம் எல்லாம் வீட்டுக்கு முன் தெருவெல்லாம் அடைத்து பந்தல் போட்டு பெற்றோல் மாக்ஸ் வெளிச்சத்தில்  மூன்று நாள்,ஐந்து நாள் என்று ஸ்பீக்கர் கட்டி கொண்டாடுவார்கள் சின்ன பிள்ளைகள் எங்களுக்கு பெட்ரோல் மாக்ஸ் லைட் வெளிச்சம் பெரும் கொண்டாட்டம் தான். 

சிலர் தெரு மின்சார கம்பியிலிருந்து பின்னேரம் ஆறு மணிக்கு பின் வயர் கொழுவி கரண்ட் எடுத்து லைட் எரியும். சில வீடுகளில் வயரிங் செய்து வீடு கட்டி இருப்பாங்க. ஆனால் மின்சாரம்  இணைப்பு இருக்காது. அப்படியானவர்களும் இரவில் வயர் கொழுவி களவாக கரெண்ட் இழுத்து கொள்வர். அதுக்கெல்லாம் டிரிக் தெரிந்த திறமையானவர்கள் இருந்தார்கள். 

கரெண்ட் இல்லை என்று அன்று கவலைகள் இல்லை. பவுர்ணமி இரவில் முற்றத்தில் பாய் விரித்து குப்புற படுத்து கதை கேட்போம். சில கதைகள்  வாரக்கணக்கில் தொடராக தொடரும். நுளம்பு கடிக்கு வேப்பிலை புகை. நேரத்துக்கு சாப்பிட்டு நேரத்துக்கு தூங்கி விடியலில் எழுந்து வாசல் கூட்டி குளித்து பள்ளி செல்வோம். முதல் நாள் மிஞ்சின சோத்தில் தண்ணி ஊத்தி வைப்பாள் அம்மா. அதில் உப்பும் தேங்காப்பூவும் போட்டு பிசைந்து தின்போம். பகல் ஒரு மணி பள்ளியால் வந்து சாப்பிடும் வரை பசி தாங்கும். 

மாதம் ஒரு  புதன் ருவாகினியில் தமிழ் படம். பக்கத்துக்கு வீட்டு விறாந்தையில் அப்பாவின் சாரம்  குளிருக்கு இதமாக போர்த்தி கொண்டு ரோச் லைட் பாதுகாப்பில் போய் பாதியில் தூங்கி விடுவோம்.வீட்டுக்கு   வெளியே கொல்லைக்கும் ரோச் லைட் வெளிச்சத்தில் தான் போக வேண்டும்  

சுற்றி வர இருள் இருந்தும் அன்றைக்கு இன்றைய காலம் போல் திருட்டு கொலை, கொள்ளை இல்லையே..? ஏன் என்று என்றேனும் சிந்தித்து இருக்கின்றோமா?

சின்னவளாக இருந்த போது குப்பி லாம்பும் சிம்லி லாம்பும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!