27 அக்டோபர் 2020

தன் நலன் காப்பதே பொது நலனாக மாற்றம் பெறுகின்றது.

இந்த பதிவு யாருக்கும் ஆலோசனை இல்லை. அவரவர் தன்னை தானே உணர்ந்து சிந்திக்க சொல்லும் பதிவு மட்டுமே.. உணர்வோர் உணருங்கள்.. எனக்கு எல்லாம் தெரியும் என்போர் கடந்து செல்லுங்கள்.   ❤️நிஷா❤️

இதோ இப்போது வரை எனக்கு தெரிந்த பலர் கொரோனா வைரஸ் பொசிட்டிவ் என்று  தகவல் தந்துகொண்டிருக்கிபறார்கள். எங்கும் மருத்துவ பணியாளர்களுக்கும் நோய் தொற்று பரவி கொண்டிருப்பதாகவும் அறிந்து கொள்ள முடிகின்றன. அங்கே. இங்கே என்ற சேதி .. நம் வீட்டு வாசலில் வந்து கொண்டிருக்கின்றது. 

உங்களுக்கு சுனாமி என்றால் என்னவென்று தெரியும் தானே? அந்த சுனாமி அலையை விட  பத்து மடங்கு பெரிய அலை ஒன்று உங்களை நோக்கி வரப்போகின்றது என்றால் என்ன செய்விர்கள்? 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தன் நலன் காப்பதே பொது நலனாக மாற்றம் பெறுகின்றது என்பதை எங்களில் பலர் உணராமல் இருக்கின்றோம். 

ஆரம்ப அறிகுறிகளை உணரும் போதே சோதனை செய்து தற்காத்து கொள்ளுங்கள் என்று  சுகாதாரத்துறை  அறிவித்தும் கூட கண்டு கொள்ளாமல் காய்ச்சலோடும் பலர் அங்கும் இங்கும் பயணிக்கின்றார்கள். மறைத்து செயல் படுகின்றார்கள். இதன் மூலம் ஆபத்தை தானே உருவாக்கி கொள்கின்றார்கள்.  COVID 19  பரவி கொண்டிருக்கும் வேகத்தை அவதானிக்கும் போது ஒரு Corona Virus Positive  தொற்றாளர் அறிகுறி வெளிப்படும் சில நாட்களுக்குள் 100  பேருக்கு நோயை கடத்துகிறார் என்றால் அந்த 100  பேர் 10000  பேருக்கு  பத்து மடங்கு ஜெட் வேகத்தில்  பரப்பி கொண்டே செல்கின்றார்கள். அதாவது எங்களில் ஒருவர் அறிந்தே செய்யும் பிழையால் ஒட்டுமொத்த சமூகத்தையும் ஆபத்தை நோக்கி நகர்த்துகின்றோம். 

ஆரம்ப சிறு அறிகுறிகள் தெரியும் போதே தாமாக முன் வந்து  COVID 19 - PCR சோதனை செய்வது எங்களுக்கு நல்லது தான் செய்யும். எங்களுக்கு நோய் தொற்று உறுதிப்பட்டால் ஒதுங்கி  இருப்பதன் மூலம் எங்களை சார்ந்த உறவுகளை பாதுகாத்து கொள்வதோடு, உங்கள் உடல் ஆரோக்கியம், நோய்கள் குறித்த மருத்துவர் ஆலோசனையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி  கொள்ள முடியும். ( மேலை நாடுகளில் இந்த வாய்ப்பை பயன் படுத்தி கொள்ள முடியும் ) நோய் இருப்பதை மறைத்து வீட்டினுள் இருந்து சுவாசம் தீவிரமானால் உடனடி உதவி கிடைக்காது. அதுவே சோதனை உறுதி செய்தால் உங்கள் உடல் நிலையின் ஆரோக்கியத்துக்கு ஏற்ற முன் ஏற்பாடுகளை குறித்து உங்கள் மருத்துவரே அறிவித்து விடுவார். 

இலங்கையில் தனிமை படுத்தும் இடங்களில் உடனடி மருத்துவ முதலுதவி ( ஒட்சிசன், வென்டிலேற்றார் உதவி, உளவியல் சார்ந்த பயிற்சி, சத்தான உணவு ) கிடைத்து விடுகின்றது. தனித்து இருக்காமல் இன்னும் சிலருடன் பேசி பழகும் வாய்ப்பும் கிடைக்கும். 

என்னுடைய மகளின் தோழிக்கு கடந்த வரம் தொண்டை வறட்சியாக இருந்திருக்கின்றது. காய்ச்சல் ,இருமல் இல்லை. ஆனால் தொண்டை நம நம வென இருக்க ( பொதுவாக பருவகால மாற்றங்களின் போது ஒரு வகை ஃப்ளு வைரஸ் பரவும் ) வழக்கம் போல் மூலிகை வெந்நீர் குடித்து அலைந்து திரியாமல் தன தோழிகளை சந்திப்பதை தவிர்த்து  தானே மருத்துவரை தொடர்பு கொண்டு  PCR  சோதனைக்கு  சென்று முடிவு நெகடிவ் என்று தெரிந்த பின் தோழிகளுக்கும் அறிவித்து இருந்தாள்.  18 வயது தான் அவளுக்கு. சிறு வயது என்றாலும் தன்னை பாதுகாக்கும் பக்குவம் இருக்கின்றது அல்லவா? 

நான் செல்லும் Swiss சர்ச்  ( 100  நபர்களுக்கும் மேல் ) lock down அறிவித்தவுடன் அரசின் அறிவிப்புகளை அப்படியே அமுல் செய்து யூன் மாதம் மீண்டும் எல்லாம் நார்மலுக்கு வந்த பிறகும் செப்டம்பர் வரை சபை கூடுதலை தவிர்த்து கொண்டார்கள். செப்டம்பர் ஆரம்பித்து இப்போது மீண்டும் வைரஸ் பரவலை அறிந்து அரசின் முடக்கத்துக்கு முன்பே கூட்டம் கூடுவதை தவிர்ப்பதே ஞானமான காரியம் என்று அறிவித்து இருந்தார்கள்.

விழிப்புணர்வு என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை நான் கடந்த ஆறு மாதங்களாக அவதானிக்கின்றேன். இந்த கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு  மக்களுக்குள் போதாது.அரசாங்கங்கள் சமூக வலைத்தளங்களினுடாக பல பிரச்சாரங்கள் மேற்கொண்டாலும் கண்டு கொள்வது இல்லை. 

அரசுகள் அதிவேக  நடவடிக்கை எடுப்பது முக்கியமானது தான் என்றாலும் அரசு நடவடிக்கை மட்டும் போதாது. ஒவ்வொரு தனி மனிதரும் உணர வேண்டும். என்னால் Covid 19  பரவ  கூடாது எனும் விழிப்புணர்வு முக்கியம். 

மாஸ்க் அணிவது, சானிடைசர் நோய்க்கிருமி நாசினி பயன்பாடு  குறித்தும் தெளிவான புரிதல்கள் தேவை. ஓடி ஒளிவதும் தேடிப்பிடிப்பதும், தீவிரவாதிகளை தேடுவது போல் பத்திரிகை, இணையதளங்களில் பரபரப்பூட்டுவதும் தவிர்க்கபட வேண்டும். 

கொரோனா வைரஸ் உயிர் கொள்ளும் ( எழுத்து பிழை இல்லை) நோயாக இன்னும் பரிமாணம் எடுக்கவில்லை என்றாலும் நிகழ் நிலைகளை கூர்ந்து கவனிக்கும் பொழுது உயிர் கொள்ளும் நோயாக மாற்றி கொள்கின்றோமோ எனும் அச்சம் உருவாகின்றது. 

அரசுகள் பொருளாதாரம் குறித்து கவலை கொள்ள மக்கள் தேவையற்ற விடயங்களில் அக்கறை, ஆர்வம் செலுத்தி பொசிட்டிவ் எனும் பெயரில் எங்களை எதிர்வு கொண்டு வரும் ஆபத்தை உணர்த்தும் வாய்ப்பை தவிர்க்கின்றோம். 

எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் எனும் அறிவு எங்களுக்கு வேண்டும். 

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவும் வேகம் மிகவும் ஆபத்தானதாக மாறி கொண்டிருப்பதை உலகளவில் COVID 19 குறித்து கூர்ந்து அவதானிக்கும் போது புரிந்து கொள்ள முடிகின்றது. 

பயம், பதற்றம், பரபரப்பு என்று உண்மையை நேருக்கு நேர் எதிர்கொள்ள தயங்கி மனதை ஏமாற்றி கொள்கின்றோம். நாடு தீப்பற்றி எரியும் போது பிடில் இசை ரசிக்க முடியாது. 

இவ்வாறான விழிப்புணர்வு, முன் எச்சரிக்கை பதிவுகளை பொது நலன் கருதி நேரத்தை செலவிட்டு ( மொழி பெயர்த்து ) போடுவதை விட  ஒரு நடிகையின் கிளிசரின் கண்ணீருக்கு , ஒரு புகைப்படம், ஒரு சாப்பாட்டு தட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் சமூக நலன் சார்ந்த பதிவுகளுக்கு கிடைப்பது இல்லை. 

இந்த பூமி, இந்த சமூகத்தில் நாங்கள் மட்டும் இல்லை. எங்கள் பிள்ளைகளுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் வாழ்க்கை  இங்கே தான் ஆயத்தமாக வேண்டும். பொதுமக்கள் ஆதரவில்லாமல்.அரசோ, வல்லுனர்களோ எதையும் சாதிக்க முடியாது. 

புரிந்து கொள்ளுங்கள்...!

coronavirus_வதம்_செய்யும்

#ஆல்ப்ஸ்தென்றல்நிஷா


1 கருத்து:

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!