21 செப்டம்பர் 2018

இன்றைக்கு யூதர்கள்? நாளைக்கு தமிழர்கள்?

என்னப்பா ? இந்த நிஷாவுக்கு என்னாச்சு? 
யூதர்கள் பின்னாடியே போயிட்டிருக்க்கே பொண்ணு என குழப்பிக்காதிங்க. பேஸ்புக் பக்கம் ஈழத்தமிழ்  நட்புக்களினுடனா சில விவாதங்களுக்காக அங்கே பகிரப்பட்ட பதிவுகள் இங்கே என் வலைப்பூவிலும் ஆவணமாகின்றது. நாங்களும் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம் அல்லவா?
இன்றைக்கு யூதர்கள்? நாளைக்கு தமிழர்கள்?
ஐரோப்பாவில் ஏனைய புலம் பெயர் மக்களை விடவும், தொழில் மற்றும் பல காரணங்களால் சொந்த நாட்டை விட்டு புலம் பெயர்ந்து பல தலைமுறைகளாக வாழும் இத்தாலியர்,ஜேர்மனியர்,செக்கோஸ்லாவியர், கோசோவா ,இன்னும் பிற ஐரோப்பிய ஆசிய,ஆப்பிரிக்க நாட்டாரை விடவும் தாம் புலம் பெயர் நாடுகளின் நன்மதிப்பையும், செல்வாக்கையும், தம் எதிர்காலத்துக்கான ஸ்திரத்தன்மையைவும் தம் அறிவாலும்,நன்றி காட்டும் குணத்தாலும் எங்கள் புலம் பெயர் தமிழ்ச்சமுகம் தம்மை உயர்த்தி கொண்டு வருகின்றது.
அரசியல்,அதிகாரம் உள்ளிட்ட பல பொறுப்புக்களில் எம்மவர் அமர்த்தப்படுகின்றார்கள், அதை விடவும் புலம்பெயர்ந்தவர்கள் தமக்கென அசையா சொத்துக்களான காணி நிலங்களை வாங்கி சேர்க்கின்றார்கள். விவசாயம் முதல் அனைத்திலும் தம் இருப்பை உணர்த்தி கொண்டிருக்கின்றார்கள். மொத்தத்தில் மண்ணில் மைந்தர்களான நாட்டின் குடிமக்களிடமும் அதிகாரிகள், அரசியல் வாதிகளிடமும் இலங்கைத்தமிழர்கள் நற் நம்பிக்கையை பெற்றிருக்கின்றார்கள்.
புலம்பெயர்ந்து இரண்டாம் தலைமுறையால் இத்தனை சீக்கிரம் தம் இருப்பை உணர்த்த முடியுமானால்.இனிவரும் காலங்களில் தமிழர்கள் இல்லாது எதுவுமே இல்லை எனும் சூழலுக்கு நாட்டின் நிர்வாகத்தின் அதிகார பதவிகளில் எம் சந்ததிகள் ஆக்ரமித்து கொள்வார்கள். .
யூதர்களை போல் எம்மக்களிடன் இயல்பில் ஊறிப்போயிருக்கும் கல்வித்தாகம், அறியும் வேகம், கணக்கில் திறமை , பலகலைக் கழகம் செல்லும் படி பிள்ளைகளுக்கு கொடுக்கப்படும் ஊக்கம் எல்லாம் சேர்ந்து தரமான அறிவாளிகள் கொண்ட கட்டமைப்பு புலம் பெயர் நாடுகளில் எதிர்காலத்தில் உருவாகும் அல்லது உருவாக்கப்படும்.
நாட்டின் மக்களை விடவும் செல்வாக்கு பெற்றவர்கலாக எம் சமூகம் மாறும் காலத்தில் ஒரு நூறாண்டு கடந்திருக்கும். அப்போது எம் மக்களுக்கு எதிரான புரட்சி தோன்றாது என்பது என்ன நிச்சயம்?
ஹிடலரை போல் ஒரு நாசி மீண்டும் உருவாகி இலங்கை தமிழர்களுக்கெதிராக செயல் பட மாட்டான் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
இது நம் சொந்த மண் இல்லை. என்றைக்கிருந்தாலும் இந்த மண் நமக்கு அன்னியம் தான்.
இலங்கையில் 1980 களுக்கு முன் வரை தமிழர்கள் தான் நிர்வாகத்திறன் மிக்கவர்களாக அனைத்து பதவிகளையும் பெற்றிருந்தார்கள். அதுவே சிங்கள அரசுக்கும் அரசியல் வாதிகளுக்கும் கண்ணை குத்தியது..சொந்த நாட்டிலேயே எம் வளர்ச்சி கண்டு முடமாக்கப்பட்ட நாம் அன்னிய மண்ணில் எப்படி சுதந்திரமாக செழித்து வளர்வோம் என எதிர்பார்க்கின்றோம்?
இன்றைக்கு யூதர்கள்???/
நாளைக்கு தமிழர்கள்?

இந்த மண் எங்கள் சொந்த மண் இல்லை. என்றைக்கும் சொந்தமண் ஆக விடவும் மாட்டார்கள். நாங்கள் அகதிகளாக அடங்கி கிடக்கும் வரை தான் எமக்காக சுதந்திரமும், செல்வாக்கும் இங்கே கிடைக்கும்.
எதிர்காலத்தில் எம் சந்ததி பல்கலைக்கழகங்கள் செல்லும் தகுதிக்குரிய அறிவினை அதிகளவு பெற்று தம் மேற்படிப்புக்கான் நுழைவுகளுக்கு தகுதி வாய்ந்தோராக நிருபிக்கும் போது எம் மக்களுக்கெதிராக பெரும் புரட்சியே வெடிக்கும்.
எம் மக்கள் அரசியல் முதல் கல்வி வரை மண்ணின் மைந்தர்களை விடவும் அதிக ஆர்வம் காட்டி தம் திறமையை வெளிப்படுத்துவதை இப்போதே உணர முடியும்.அதனால் தான் அப்பப்போ வெளி நாட்டவர்களுக்கெதிரான சட்டங்களை துசி தட்டி புதுப்பித்து கொண்டிருக்கின்றார்கள். நீ அகதி தான் என தட்டி வைக்கின்றார்கள்.
புலம் பெயர் நாடுகளின் காவல் துறைப்பணி மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான முக்கிய பதவிகளின் பங்கேற்றும் அனுமதி எமக்கில்லை. சொந்த மண் இது இல்லாததனால் குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனை வரும் போது நாட்டுக்கு உண்மையாக இருக்கும் வாய்ப்பு சந்தேகத்துக்குள்ளாவதனால் புலம்பெயர்ந்தவர்களின் மூன்றாம் தலைமுறைக்கு தான் அவ்வாறான் பணிகளை பெற முடியும்.
யூதர்களும் இப்படித்தான்.புலம்பெயர் நாடுகளில் அவர்கள் அறிவும், திறமையும் அந்த நாடுகளின் முன்னேற்றத்துக்கு அவசியமாக இருந்தது. அவர்களை பயன் படுத்தி தங்கள் தேவைகளை , தேடல்களை பூர்த்தி செய்து கொண்டார்கள்.ஆனாலும் அவர்களுக்கு இந்த மண் சொந்தமானதில்லை என்பதை விட உலகில் எங்குமே தம் இனத்துக்கென சொந்த மண் இல்லை என உணர்ந்து கொண்டார்கள்.
உடம்பு முழுக்க மூளை  என யூதர்களை குறித்து சொல்வடை உண்டு.
தன்னம்பிக்கைக்கு சிறந்த முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டுக்கின்றார்கள் யூதர்கள்.

பத்து மில்லியன் மக்கள் வாழ தமக்கென ஒரு தனி நாடு எனும் எதிர்ப்பாப்போடு தங்கள் மூதாதையர் தேசம் நோக்கி உரிமைப்போரை ஆரம்பித்தார்கள்.
அதற்கு அவர்களுக்கு பல நூறாண்டுகள்
தேவைப்பட்டிருக்கின்றது. புலம் பெயர்ந்து பல நூறாண்டுகள் ஆகியும் அவர்கள் தங்கள் தனித்தன்மையை இழக்கவில்லை என்றாலும் தம் சொந்த மொழியான் ஹிப்ரூ மொழியை மறந்திருந்தார்கள். ஆம், இஸ்ரேல் மீண்டும் உருவான போது புலம் பெயர்யூதர்கள் தம் சொந்த மொழியை மறந்திருந்தார்கள்.

யூதர்களின் கடந்த காலமும், நமது நிகழ் காலமும், 
யூதர்களின் நிகழ் காலமும் நமது எதிர்காலமும் நம்மை எச்சரிக்கைப்படுத்தவில்லையா?

1 கருத்து:

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!