நிரம்ப மல்லி, மிளகு,சீரகம், 2 காய்ந்த மிளகாய் ஒன்றாக உரலில் போட்டு குத்தி நல்லா தூள் ஆகும் வரை இடிக்காமல் பாதி உடைத்து வரும் பக்குவத்தில் கோதுடன் பூண்டு நிரம்ப போட்டு குத்தி மசித்து எடுத்து புளிக்கரைசல்,உப்பு சேர்த்து தண்ணீரினுள் விட்டு கரைத்து கறிவேப்பிலை தண்டுடன் போட்டு அடுப்பில் வைத்து ஒரு கொதி வர இறக்கி விடுவார்கள்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சைவ சாப்பாடு.... நீ வேதம், நான் சைவம் என்ற கதை எல்லாம் என்கூரில் அப்போது பிரித்து பார்க்க மாட்டினம். வெள்ளிக்கிழமை தலைக்கு குளிக்கணும். வெந்தயம், கறிவேப்பிலை போட்டு காய்ச்சி ஊறவைத்த தேங்கா எண்ணெயில் தலைமுடி ஊறிக்கிடக்கும் ஷாம்பு போட்டு முழுகிட்டு வர சுடச்சுட சோறு தருவாள் அம்மா.
கொஞ்சம் சோறு கீரையம் பொரியலும். திரும்ப சோறு காய் அவியல்,குழம்பு எனும் நான்கு வரிசையில் சொதி அல்லது ரசம் கடைசியில் தான் சாப்பிடுவோம். ஆகக்கடைசி தயிர் இருக்கும். சின்ன பிள்ளைகள் நாங்கள் மிளகு ரசம் உறைப்பில் நாக்கு, மூக்கில் நீர் ஒழுகும். உள்ளே அடைந்து இருக்கும் சளி எல்லாம் கரைந்து ஓடும்.
இதை விட மல்லித்தண்ணி என்றொன்று இருக்கு. மல்லியும் சுக்கும் ( காய்ந்த இஞ்சி ) சேர்த்து ஊறவைத்து கொதித்து ஆறவைத்த கஷாயம். ஒரு துளி சீனி கையில் வைச்சு நக்கி கொண்டு பெரிய கப் கஷாயம் குடிக்கணும்.
அப்பா ஊரில் இருந்த காலத்தில் பழங்களுக்கும் குறை இருந்தது இல்ல. ரம்புட்டான், மங்குஸ்தான்,அன்னாசி, கிரேப்ஸ் பலாப்பழம், பாலப்பழம், நாவல் பழம்,விளாம்பழம், ஈச்சம் பழம் , ஜம்பு என எல்லா வகை பழங்களும் சீசனுக்கு சீசன். கிலோ கணக்கில் வாங்கி கொண்டு வருவார். பனம் பழம் என்றாலும் பலாப்பழம் என்றாலும் நாலில், எட்டில் ஒரு பங்கு என்று அதன் சைசுக்கு ஏற்றபடி பங்கு கிடைக்கும்.
இந்த நாட்களில் தேடி தேடி இயற்கை விளைச்சல், மூலிகை இல்ல என்று நண்பர்கள் விசேஷ கவன ஈர்ப்பு கொடுப்பதை அவதானிக்கும் போது இத்தனை உண்டென உணராமல் அன்று இயற்கையோடு இணைந்தே வாழ்ந்திருக்கின்றோம் என்பதை உணர்ந்து ஆச்சரியமா இருக்குது. அன்னிக்கு உண்டவை தான் இன்று வரை (எருமையில் வரும் எமனுக்கும் டாடா சொல்லி ) உடலை அசைக்காமல் வைத்து இருக்குது என்று சொல்வேன்.
குறிஞ்சா இலை,தூதுவளை, லெட்சகட்டை, கானந்தி, முல்லை, முருங்கை, முசுட்டை இலைகள் இன்று மூலிகை கீரை என்கின்றார்கள். இவைகள் எல்லாம் வீடுகளின் எல்லைகள் வேலிகளாக படர்ந்து வளர்ந்து கிடந்தன. அன்று அன்றாடம் வாழ்வோடு கலந்து தினமொரு கீரை சுண்டலும், சொதியும் இல்லாமல் சமைப்பதே இலை. முருங்கை கீரை, குறிஞ்சா கீரை சுண்டல் என்றால் லெட்சகட்டை முல்லை கானந்தி முசுடை எல்லாம் கலந்து புளி மாங்காயும், மணப்புக்கு கீரி மீனும் போட்ட சொதி.. நினைக்கும் போதே வாயூறும். எங்களூரில் சுண்டல் என்றால் அதுக்கு மீனோ கருவாடோ மணப்பு போடணும் கண்டியளோ..? மசியல் என்றாலும் தேங்காய்ப்பூ மாங்காய் மீன் என்று தானிருக்கும்.
பொன்னாங்கண்ணி, திராய் ( சக்கரை நோய் கொல்லி ) போன்ற கீரைகள் சந்தையில் வாங்குவோம். முருங்கைக்காய் வீட்டு முற்றத்தில் காய்க்கும்,கத்தரிக்காய், பயற்றங்காய் சந்தையில் வாங்கணும். கத்தரிக்காய் மலிந்து வரும் நாளில் வாங்கி கிணற்று நீருக்குள் போட்டு விடுவாள் அம்மா. அது தான் எங்கள் பிரிட்ஜ்
விரதம்,பூசை என்று வந்தால் அத்தனை பக்குவம் இருக்கும். எப்பவும் சட்டி முட்டி, பானை, தட்டு, ரம்ளர் எல்லாமே மரக்கறி, மச்சம் என்று தனித்தனி ஏரியா தான். சமைக்கும் அடுப்பு, இடமும் கூட வேற தான். மரக்கறி சமையல் என்றால் மாமரம், தென்னை மரத்துக்கு கீழ அடுப்பு மாறும்.
குசினிக்குள் சமைக்க மாட்டா அம்மம்மா..! செவ்வாய்,வெள்ளி அம்மம்மாக்கு மரக்கறி சாப்பாடு. அம்மம்மா பத்தி தனி பதிவு எழுதணும். அவ தனக்குன்னு சமைத்து சாப்பிடுவா. மரக்கறி சாப்பாட்டுக்கு என்று சில கீரை பச்சடி இருக்கும். முருங்கை கீரையில் துளிர், கறிவேப்பிலை துளிர், தூதுவளை இல்லை என எதோ ஒரு கீரை. ஒவ்வொரு இலை வடிவா கழுவி சோறு கஞ்சி வடித்தபின் அடுப்பை அணைத்து விட்டு சோத்துக்குமேல் வாழை இலை மூடி அதுக்கு மேல் கீரை வைத்து சருவ சட்டியால் ஆவி சூடு வெளியே போகாமல் மூடி விடுவார். அரை மணி ஒரு மணி நேரம் அப்படியே இருக்கும். இந்த கீரை அவியலை எடுத்து நான்கு பச்ச மிளகாய், ஐந்தாறு சின்ன வெங்காயம், ஒரு பிடி தேங்காப்பூ ஒரு கல் உப்பு சேர்த்து அம்மியில் வைத்து மை போல் அரைத்து தேசிக்கா புளி விட்டு எடுத்தால் மரக்கறி சோத்துக்கு வேற கறி ஒன்றுமே வேண்டாம்.
ரசம், பச்சடி, துவையல் இருக்க குழம்பு அவியல் சொதி பக்கமே போக மாட்டோம். கீரைகள், அவரை, பீர்க்கை, புடோல் என்று தானே படர்ந்து முளைக்கும் கொடிகளும் வேலிகளாகி இருபக்க வீட்டுக்கும் பயன் தரும். வேலிகள் அன்று வீடுகளுக்கு எல்லைகளாக மட்டும் இருக்கவில்லை. கலந்து பகிந்துண்ண, விட்டுக்கொடுக்க கற்று தந்தது.
எங்கள் வீட்டில் அப்பா வீட்டு தோட்டத்தில் மரவள்ளி, கச்சான், வெண்டிக்காய்,கத்தரி என்று ஏதேனும் நட்டு கொண்டே இருப்பார். அது 1987 களில் அப்பா சுவிஸ் வர கிளம்பிய பின் சில மாதங்கள் எங்கள் பசி போக்கி இருக்கின்றது.
அரிசி மீன் தவிர கீரை,காய், மா, பலா, வாழை,கொய்யா போன்ற பழங்கள், கோழி. முட்டை என உணவு தேவைகளுக்குரியத்தை
வீட்டில் உற்பத்தி செய்தோம். காலையில் கடை சாப்பாடு தேடியது இல்ல. எப்போதும் வெளியில் சாப்பிட செல்வது இல்லை. பழம் சோறு தின்றாலும் அடுத்தவரை பார்த்து வாழ ஆசைப்படவில்லை.
விபத்துக்கு பின் இன்று வரை நான் கடந்து வரும் உடல் பிரச்சனைகளை எதிர்கொள்ள அன்றைய ஆரோக்கியமான உணவுகள் தான் அஸ்திவாரமாக இருக்கின்றது.
திக்கு தெரியாத நடுக்காட்டில் தத்தளித்து எதிர்காலம் குறித்த பயத்தோடு வாழும் இக்காலத்தில் கொரோனா வைரஸ் மீண்டும் எங்களை அதே வாழ்க்கை முறைக்குள் செல்லும் படி எச்சரிக்கை தருகின்றது என்பதை உங்களால் உணர முடிந்தால் நாளைய எதிர்காலத்தில் வாழ்க்கை வரமாகும்
🦋
Photo : geogle
லஜ்ஜை கெட்ட கீரை / சண்டிக்கீரை,நஞ்சு கொண்டான் கீரை, நச்சு கொட்டை கீரை, லச்ச கெட்ட கீரை, நஞ்சுண்டான் கீரை என பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த கீரை மூட்டு வலியை தீர்க்கும் ஆற்றல் கொண்டது. சிறு மரமாக வளரும். இலைகள் பெரிதாக இருக்கும். நகரங்களில் இதை அலங்கார மரமாக வளர்க்கிறார்கள்.
லஜ்ஜைகொட்ட கீரை என்று இங்கு சொல்வார்கள்... எனக்கு மிகவும் பிடிக்கும்... சென்னையில் இருக்கும் போது எங்கள் வீட்டின் அருகே பெரிய மரமே உண்டு...
பதிலளிநீக்கு