20 ஜூன் 2018

தினகரனும் தீர்க்கதரிசனமும்!

எரே 14:14. தங்கள் இருதயத்தில் இருக்கிறதையே எடுத்துத் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களோடே நீ சொல்ல வேண்டியது என்னவென்றால் .......!
ஒன்றும் தரிசியாதிருந்தும் தங்களுடைய ஆவியின் ஏவுதலைப் பின்பற்றுகிற மதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ!
நான் உரைக்காதிருந்தும், நீங்கள் கர்த்தர் உரைத்தார் என்று சொல்லும் போது.... பொய்க் குறியைச் சொல்லுகிறீர்கள். ஆகையால் நான் உங்களுக்கு விரோதமானவர் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்கிறார். எசே 13:2,3,7.
எரே 14:14. அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி தீர்க்கதரிசிகள் என் நாமத்தைக்கொண்டு பொய்யாய்த் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறார்கள். நான் அவர்களை அனுப்பியதுமில்லை அவர்களுக்கு கற்பித்ததுமில்லை! அவர்களோடே பேசினதுமில்லை..... அவர்கள் தங்கள் இருதயத்தின் கபடத்தை உங்களுக்கு தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார்கள்.
மனதில் தோன்றுகின்றதை கூறும் இப்படிப்பட்ட தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாக இருங்கள் என்று கர்த்தர் நம்மை எச்சரிக்கிறார்.
நியாயத்தீர்ப்பு நாளில் 
ஆண்டவரே! ஆண்டவரே! 
உம்முடைய (இயேசு) என்னும் நாமத்தில்தீர்க்கதரிசனம் உரைத்தோமல்லவா ? பிசாசுகளை துரத்தினோம் அல்லவா? அற்புதங்களை செய்தோம் அல்லவா? என்பார்கள்
ஆனால் இயேசுவோ இவர்களைப் பார்த்து அக்கிரம செய்கைக்காரர்களே என்னைவிட்டு அகன்று போங்கள், உங்களை நான் ஒருகாலும் அறியேன் என்று அவர்களுக்கு சொல்லுவேன் என்கின்றார்.
மத் 7:22,23.

2 பேதுரு 2:1-3 
1.கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக் கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.
2.அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.
3.பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.
அவர் சொன்னார் இவர் சொன்னார் என்பதல்ல தேவனுடைய வசனம் உங்களுக்கு சொல்வது எதுவென மட்டும் நிதானித்து கொள்ளுங்கள்.
தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம், அன்பு ஒருக்காலும் ஒழியாது. என 1 கொரிந்தியர் 13 ல் சொல்லப்படுவது போல் அழியாமல் நிலைப்பது அன்பும், நம் மனதில் நான் உருவக்குத்திக்கொள்ளும் தேவ வசனமும் தான்.

உங்கள் சொந்த புத்தியினாலும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கும் ஞானத்தினாலும் வசனம் சொல்வதை ஆராய்ந்து, நிதானித்து , தியானித்து சரியானதை பற்றிக்கொள்ளுங்கள்.
ஆமேன்

ஏமாளிகளாய் நாம் இருக்கும் வரை நம்மை ஏய்ப்போரும் ஏய்த்துகொண்டிருப்பார்கள்.

மக்களுக்காக மக்களே குரல் கொடுத்தால் தான் இனி அவர்களுக்கான விடுதலையும், விடிவும் என புரியவைத்து கொண்டிருக்கின்றது காலம்.
இனிவரும் காலங்களில் எவரையும் தனித்து தலைமைப்படுத்தாமல், மக்களை ஏமாந்த கோணங்கிகளாக்கி தலைமேல் மிளகாய் அரைக்க நினைப்போரை இனம் கண்டு ஒதுக்குவது, ஒதுங்குவதும் தான் நம்மை மீட்சிப்படுத்தும்.
நம்மை கோமாளிகளாக்கி, மூளைச்சலவை செய்து, என்ன சொன்னாலும் தமிழன் நம்புவான்,தமிழனே இளிச்சவாயன் தான் என நம்மை ஏய்க்கும் நமக்குள் இருக்கும் ஓநாய்களை முதல் நாம் இனம் கண்டு கொள்(ல்) வோம்.
அன்று மக்கள் கல்வியறிவில் குறைந்தோராய் இருந்ததனால் அவர்களை ஏமாற்றுவது இலகுவாக இருந்தது. இன்றைய நம் சமூகம் கல்வி அறிவில் மேன்மை யடைந்தும் இன்னும் அதே ஏமாளித்தனம் தொடருமானால் நாம் கற்ற கல்வியினால் என்ன பயன்?
யார் சொன்னாலும் எதை சொன்னாலும் நம்புவதை முதலில் நிறுத்துங்கள் தமிழ் மக்களே!
கொஞ்சம் சுய புத்தியாலும், அறிவாலும் ஆராய்ந்துணருங்கள்.இன,மத பேதங்களை விதைத்து உங்கள் மனக்கண்களை குருடாக்கி இருப்போரை இனம் காணுங்கள்
நாம் விடுதலை அடைய வேண்டியது அன்னியனிடமிருந்தல்ல!
நமக்குள் இருக்கும் அறியாமையிலிருந்தும், 
நம்மை ஏய்க்கும் நம் சக தமிழரிடமிருந்தும் 
நாம் முதலில் விடுதலை அடைய வேண்டும்.

தமிழர்கள் முட்டாள்கள் தான் என்பதை புரிந்து, அவர்களை ஏமாற்றி,ஏய்த்து பிழைக்க நினைப்போரின் கபடங்கள் புரியாமல் இருக்கும் வரை நாங்களும் தேசியவாதிகள் தான்.அப்படிப்பட்ட போலிப்பாராட்டுதல்கள் எமக்கு வேண்டாம்.
ஏன்? எதற்கு? எப்படி? என கேள்விகளை கேட்டால் சமூகவிரோதிகள் என முத்திரை குத்தப்படுவோம். ஒதுக்கப்படுவோம்.
யார் என்ன சொன்னாலும் ஏன், எதுக்கு, எப்படி என சிந்திக்காமல் நம்பும் தமிழர்கள் இருக்கும் வரை ஏமாறுவோர் ஏமாறிக்கொண்டே இருப்போம்.

கடந்த வார செய்திகள்.......!
1.இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் பணி புரிந்த இராணுவ அதிகாரியின் மாறுதலை தொடர்ந்த பிரியாவிடை நிகழ்வும், கௌரவப்படுத்தலும் கண்ணீரும் நமக்கு சொல்வது என்ன?
மக்கள் மனங்களை கவரும் படி செயல் பட்ட அவரின் செயல்பாடுகள் எதிரியின் சூழ்ச்சி என சொல்லி மக்களை விமர்சிக்கும் தகுதி எமக்கிருக்கின்றதா?
எங்கள் மக்களை நாங்கள் ஏன் கைவிட்டோம்? பேசியும் ஏசியும் நாங்கள் கண்டவை என்ன?
இதுவரை எதை இலக்கு வைத்து எம் போராட்டம் இருந்தது?
போராட்டத்தின் இலக்கு திசை மாறி விட்டதையும் இழப்புக்கள் நம்மை பூஜ்ஜியத்தில் கொண்டு விட்டிருப்பதையும் புரிந்து கொண்டோமா?
2.மீண்டும் பிரதமர் மோடி...!
பால்.தினகரனின் தீர்க்கதரிசனமும் அதைத்தொடர்ந்த விமர்சனங்களும் .
பைபிள் வசனம் சொல்வதை தவிர ஏனையதையெல்லாம் திரித்துவமாக திரித்துக்கூறுவோரை தேவனின் தூதர்களாக நம்பிக்கொண்டிருக்கும் மக்களே தெளிவு பெறுங்கள். 
வேத வசனம் சொல்வதை ஆராய்ந்து சரியானதை பற்றிக்கொள்ளுங்கள்.

3. விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள்,தீவிர வாதிகள் அல்ல. சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பு

வழங்கப்பட்ட தீர்ப்பின் சாரம்.
விடுதலைப்புலிகள் சுவிஸ் நாட்டில் சட்டத்தின் படி கிரிமினல்களாக செயல்பட்ட்டார்கள் என்பதை நிருபிக்கும் படி கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் போதுமானவையாக இல்லை.சுவிஸில் தொடரப்பட்ட வழக்கில் அவர்கள் கிரிமினல் குற்றவாளிகள் இல்லை.
Tamil Tigers sind keine kriminelle Organisation

விடுதலைப்புலிகளின் அமைப்புக்கு உதவுவதற்காக   நிதிமோசடி, வங்கி  மோசடி, ஏய்ப்பு, மிரட்டல்  போன்ற குற்றச்சாட்டுகளுடன் கைது செய்யப்பட்டு  13 நபர்கள் மீது தொடரப்பட்ட குற்றவியல் சட்டம் (Criminal law)  வழக்கில் மூவர் மீது மட்டும் குற்றம் நிருபிக்கப்பட்டு தண்டனையும், தண்டப்பணமும் செலுத்த  நீதிமன்றம் உறுதிப்படுத்தி இருக்கின்றது. ஏனையோரை  கிரிமினல் குற்றவாளிகள் இல்லை, என விடுதலையாக்கியதுடன் சுவிஸுக்குள் விடுதலைப்புலிகள் கிரிமினல் குற்றவாளிகளாக செயல்பட்டதற்கான ஆதாரங்கள் போதுமாக வில்லை என தீர்ப்பளித்திருந்தார்கள். 

இந்த தீர்ப்பு பல பத்திரிகைகளில் ஜேர்மன் , பிரேஞ்சு மொழிகளில் விபரமாக பகிரப்பட்டிருந்தும் , தமிழ் மொழி பெயர்ப்புக்களில் 
கிரிமினல்களுக்கும், பயங்கரவாதிகளுக்குமான புரிதலும் சட்ட நடவடிக்கைகளும் எத்தகையது உணராமல் முழுப்பூசணிக்காயை சேற்றில் மறைத்து சுவிஸ் நீதிமன்றம் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் அல்ல என தீர்ப்பளித்து விட்டதாக போலியான மாயையை உருவாக்கி மக்களை ஏமாற்றுவோர் இத்தனை பட்டும் இன்னும் திருந்த வில்லை என உணர வைக்கின்றார்கள்.
செய்திகளை மொழி பெயர்க்கும் போது வார்த்தைகளை மாற்றிப்போடுவது எதிரிகள் நம்மை நோக்கி கேலி செய்ய மட்டுமல்ல நமமை நம்பியவர்கள் நம்பிக்கைக்கு நாமே வைக்கும் வேட்டு எனவும் உணராமல் செயல் படுவோரையும் இனம் காண்போம்.
எது நடந்தாலும் யாருக்கோ தானே என ஒதுங்கிச்செல்லும் மன நிலையிலிருந்து நாம் விடுபட்டு இன்றையை விதை நாளை விருட்சமாகி எம் சந்ததிகளை பாதிக்கும் எனும் புரித்துணர்வை அடையும் நாளே நமக்கான விடியல்களை தரும்.
வீரன் என்பவன் எத்துணை விமர்சனத்துக்கும் உட்படுத்து முடியாதவனாக தன் சொல், செயல் அனைத்திலும் நேர்மையை கடைப்பிடிக்க வேண்டும்.
ஆனால் இங்கே நடப்ப்து என்ன?
யார் சமூகத்துக்கானவர்கள்?
இன்றைய நிலையில் நம் தேவைகள் என்ன? சிந்திப்போம்.
நாம் போலி தேசியம் பேசும் வியாதிகளாக இருக்காமல் சமூகத்தை குறித்து சிந்தித்து செயல்படும் சமூக விரோதிகளாக மாறுவதில் தப்பே இல்லை.

23 டிசம்பர் 2017

பக்தி


பக்தி முத்தி சக்தியே சரணமென்பார்
சித்தி பெறவே சுத்தி வந்தேனென்பார் 
முக்தியைத்தேடி புத்தியைத்தொலைப்பார்
நித்திய வாழ்வே நிரந்தரமென்பார் 
சித்தம் கலக்கிட பித்தனாயலைவார்! 
கொத்திடும் காக்கைக்குணத்தினை மறைப்பார் 
வித்தைகள் காட்டி வியக்கவும் வைப்பார் 
உத்திகள் செய்தே யெம்மை அசைப்பார்
பக்தியின்றியே பக்தன் போலலைவார் 
சித்தன் நானென்றே ஏத்தி வைப்பார் 
எத்தனுக்கெத்தன் உண்டென உணர்ந்தே
பக்தனே நீயுன் புத்தியை தீட்டு! 😍


30 அக்டோபர் 2017

எங்கள் நிறுவன வளர்ச்சியில் சுவிஸ் மண்ணின் மைந்தர்கள்.

புலம்பெயர்ந்து தன் நாட்டுக்கு வருவோரை இருகரம் அணைத்து வரவேற்றாலும் அன்னியர் தங்களை விட வசதி வாய்ப்பில் , பதவியில் வளர்வதை சற்றுப்பொறாமையோடு நோக்கும் குணம் சுவிஸ் மக்களிடமும் உண்டு. அதிலும் வயதில் மூத்தவர்களிடம் தங்கள் நாட்டின் வளம் குறைக்க, வந்த பாதகர்கள் என்பதான எண்ணமும் இங்குண்டு.
சிலர் இதற்கு விதிவிலக்காக இருந்தாலும் பல முதியோர் புலம்பெயர்ந்து நிறம் குறைந்தோரை ஒரு படி கீழிறக்கியே வைத்திருப்பார்கள்.
ஆனாலும் எங்கள் Hegas Catering Services ஆரம்ப காலம் முதல் சுவிஸ் மண்ணின் மைந்தர்கள் ஆதரவோடும், பல முன்னனி நிறுவனங்களின் நல்லாசிகளோடும் தான் வளர்ந்து கொண்டிருக்கின்றது.
2011 ஆம் ஆண்டில் Annamaria அவர்களின் 99 ஆவதும் அவர் மகளின் 77 ஆவதுமான பிறந்த நாளை எங்கள் நிர்வாகத்தின் ஒழுங்கமைப்பில் இந்திய இலங்கை சுவிஸ் உணவுகளினை சுவைத்து மகிழ்ந்து சுவிஸ்மக்களையும் கவர்ந்திழுக்க முடியும் எனும் நம்பிக்கையை கொடுத்து எங்கள் வளர்ச்சிக்கு ஆரம்ப வித்தினை இட்டார்கள்.
அதன் பின் பல சுவிஸ் மக்கள் தங்கள் 40. 50. 65. 70 . 75. 85 என கொண்டாடிக்கொண்டிருக்கின்றார்கள்.
கடந்த வாரம் Zimmermann , Unterseen அவர்களின் வீடு கட்டி எண்பதாவது ஆண்டு நிறைவை குடும்பத்தினர் அனைவரோடும் எங்கள் உணவகத்தில் வந்து கொண்டாடினார்கள் என்பதுடன் அவர் மனைவி லில்லியின் 85 ஆவது பிறந்த நாளையும் எங்கள் விழா மண்டபத்தில் தான் குடும்ப அங்கத்தவரோடு விருந்துண்டு கொண்டாடினார்கள்.
நிறுவன வளர்ச்சியில் இந்த நாட்டு மண்ணின் மைந்தர்களாம் மூத்தோரின் ஆதரவை பெறுவதும் அவர்கள் நல்மதிப்பை தொடர்ந்தும் தக்க வைத்திருப்பதும் புலம்பெயர்வாழ் மக்களுக்கு கடினமான காரியம் தான் என்றாலும் நாங்கள் இளையோரை மட்டுமல்ல மூத்தோரையும் தொடர் வாடிக்கையாளர்களாக கொண்டிருப்பதை நினைத்து பெருமிதம் அடைகின்றோம்.
பொதுவாக சுவிஸ் மக்களுக்கான விருந்தின் இறுதியில் எங்களை பாராட்டி, அறிமுகம் தந்து கரங்களை தட்டி கனப்படுத்துவார்கள். நேற்றைய நாளில் விருந்தின் முடிவில் எமக்காக இலங்கையிலிருந்து பிரபல்யமான் டிலான் அவர்களின் சிங்கள பாடல் ஒன்றை ஒலிக்க வைத்து எம்மை வரவேற்று கைகளை தட்டி ஆரவாரித்து கௌரவப்படுத்தியதை மறக்க முடியாது.
Andreaskapelle Ex Paster Schack Siegfried 
Pfingstgemeinde Thun அவர்களின் 75 ஆவது பிறந்த நாள் விழா 28.10.2017 எங்கள் விழா மண்டபத்தில் கொண்டாட்டத்தின் இறுதியில் டெசட் பவ்வே ஆரம்பமான போது தான் புகைப்படம் எடுகக் வேண்டும் என நினைவில் வந்தது.

வெல்கம் குடிபானங்கள். சிற்றுண்டிகள் மற்றும் மெயின் கோர்ஸ் அனைத்தும் பவ்வே முறையில் ஒழுங்கு செய்திருந்தும் அவைகளை புகைப்படம் எடுக்க மறந்து போனேன்.
ஒரே நாளின் நான்கைந்து கேட்டரிங்க் ஆர்டர்களுக்குரிய உணவுகளை தயார் செய்து அனுப்ப வேண்டிய சூழலில் இப்போதெல்லாம் நிகழ்வுகளை புகைப்படமாக்கவோ விடியோவில் பதியவோ நேரம் செலவிட முடிவதில்லை.

வீடியோவை பார்க்கவும் புகைப்படங்களை ரசிக்கவும் இங்கே செல்லுங்கள்.
என் பேஸ்புக்   Nishanthi Prabakaran

என் நிறுவன லைக் பேஜ்   hegas Catering Services
இப்பதிவினை படிக்கும் எம்மவர்கள் எங்கள் உணவின் தரம் சுவை மற்றும் அலங்காரம் போன்றவை குறித்த கருத்தினையும்,  உங்கள்  ரெவ்யுவினையும் லைக் பேஜ்ஜில் இட முடிந்தால் எமக்கு அதுவும் விளம்பரமாக இருக்கும். 

அன்புக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி.