12 ஜூலை 2017

புலம் பெயர் வாழ்க்கையின் நிதர்சனம்

 புலம் பெயர் வாழ்க்கையின் நிதர்சனம்
***************************************************
புலம்பெயர் அகதி வாழ்வை சொர்க்கமாய் நினைத்து தாய் தகப்பன் அணைப்புக்குள் கவலையின்றி பட்டாம் பூச்சிகளாய் பறந்து திரிந்து நாட்டின் பிரச்சனைகளாலும், உயிராசுறுத்தல்களாலும், பகட்டுஆடம்பர வெளி நாட்டு மோகத்தாலும், இருக்கும் வீட்டை வித்து நகை நட்டை அடவு வைத்து சொர்க்கம் தேடும் இளையோர் வாழ்க்கை ஐரோப்பிய நாட்டினுள் காலடி எடுத்த வைத்த சில வருடங்கள் நரகமாகவே காட்சி அழிக்கும்.
ஆடம்பர அகம்பாவ சுபாவங்களுடன், பிரச்சனைகள், பொறுப்புக்கள் ஏதுமில்லாமல் அப்பா அம்மா சேர்த்து வைத்ததில் ஊர் சுற்றித்திரிவோராய் தேவைக்கு மேல் நான்கு ஐந்து போன் வைத்து தங்களை அரண்மனை வாசிகளாக காட்டிக்கொள்ளும் ஒரு சிலரால் உண்மையாக பாதிக்கப்பட்டு இள வயதில் சுமைதாங்கியாகுவோரும் விமர்சிக்கப்படுகின்றார்கள்.
சொகுசு வாழ்க்கை தேடி வேலை செய்ய விருப்பமில்லாமல் அரச உதவியில் பீரில் குளித்து பாலில் மூழ்கி மனம் போன போக்கில் வாழும் பலரால் உண்மைத்தேவையுடன் தவிக்கும் சிலர் பாதிக்கப்படுகின்றார்கள்
அகதியாக நுழைந்த நாட்டில் மொழிபுரியாது, காம்ப் பெடியள் என கேலியும் கிண்டலுமாக ஒதுக்கப்பட்டு, பரிதாபப்பார்வையோடு தாங்கள் மட்டும் வானத்திலிருந்து குதித்த தேவர்களாக தம்மை எண்ணி டாம்பீகம் காட்டும் பழைய புலம் பெயர் வாசிகளின் அசட்டைகளை தாங்கி, அரசு கொடுக்கும் சொற்ப பணத்தில் உண்டு உடுத்து அதிலும் சேமித்து நாட்டில் தம்மை நம்பி வாழும் தாய் தமக்கை தங்கைக்கும் அனுப்பி,,, அவர்களையும் வாழ வைத்து,,, வாங்கிய கடனுக்கும் அடவு வைத்த வீடு, நகைக்கும் வட்டி குட்டி போடுவதை நினைத்தும் தன்னை நம்பி திருமணக்கனவோடு காத்திருக்கும் அக்கா தங்கைகளை நினைத்தும் வழி அறியாது தவிப்போராய் வாழும் வாழ்க்கையின் நிதர்சனம் புரியாது கடன் பட்டேனும் தாய் நாட்டை விட்டு அடிமை வாழ்க்கை தேடி நடுக்கடலிலும், காட்டிலும் உயிரை துச்சமாக்கி சாகாசப்பயணம் செய்ய தயாராகுகின்றார்கள்.
சில வருடங்கள் புலம்பெயர்ந்த பின் தாய் நாட்டுக்கு செல்லும் பலர் இங்கே வங்கிகளின் கடன் எடுத்தும், வட்டிக்கு கடன் வாங்கியும் ஊருக்கு சென்று தாம் தூம் என ஆடம்பரமாக செலவுகள் செய்வதும் பிறந்தது முதல் மினரல் வாட்டரில் மூழ்கி எழுதவர்கள் போல் பணத்தினை துச்சமாக செலவுகள் செய்து தாங்கள் அரண்மனை வாழ்வு வாழ்வதாய் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடி விட்டு மீண்டும் அகதி வாழ்க்கைக்குள் திரும்பி வாங்கிய வங்கிக்கடனுக்காக அடுத்த ஐந்து வருடங்களேனும் வட்டியும் முதலும் கட்ட இரவும் பகலும் குளிரிலும் பனியிலும் வெயிலிலும் ஓடி ஓடி உழைப்பதை எப்போதும் எம்மக்களுக்கு வெளிப்படுத்த மாட்டார்கள்.
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை க்கதை போல் அங்கிருப்போருக்கு இந்த வாழ்வு சொர்க்கம் போலும் இங்கிருப்போருக்கு அந்த வாழ்க்கை சொர்க்கம் போலவும், காட்சி தந்து மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்து நாற்பதில் ஊர் பேர் தெரியாத புதுப்புது நோய்களையெல்லாம் உடலில் தாங்கி மாரடைப்பிலும் போய் சேர்ந்து விடுவார்கள்.
சொந்த நாட்டில் சொந்தம்பந்தம் சூழ வீடு காணி, பட்டம் பதவி என சொகுசாய் மதிப்பாய் வாழ்ந்தாலும், நாட்டை விட்டு வெளியேறி அன்னிய நாட்டில் சரணடைந்து விட்டால் எல்லோரும் அகதியே என்பதை மறந்து விடும் பலர் இங்குண்டாம்.

11 ஜூலை 2017

சிதறும் குடும்ப வாழ்க்கைகள்

மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் சரியான ஆலோசனைகளின்றி சிதறும் குடும்ப வாழ்க்கைகள்”.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றதோ இல்லையோ பலரின் அகம்பாவங்கள், அதிகாரங்களுக்குள் சிக்குப்பட்டு சின்னாபின்னமாகுவது உண்மை.
ஊருக்குள் பெரியோராய், நல்லவர்களாக வேஷம் தரிப்போரென தங்களை வெளிக்காட்டிக்கொள்வோரின் உள்ளத்து உடைசல்களை அறியாது அறிவுரை, ஆலோசனை எனும் பெயரின் விட்டில்களாய் விழும் கணவன், மனைவி பிரச்சனைக்குள் மூன்றாவதாய் நுழைவோர். ஆண், பெண் எனும் நிலையில் ஒருபக்கச்சார்பாக முடிவெடுக்காது இருவரின் உள, உடல் நிலையினையும் கருத்தில் கொள்வது மிகவும் முக்கியம்.


ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போம்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும் என்றாலும்,ஒருபக்கச்சார்பான அவசர ஆலோசனைகள் , உதவிகள் பல நேரம் உயிர், உடல், உள இழப்புக்களையும் பாதிப்புக்களையும் தோற்றுவிக்கும் என்பதை உணராதோராய் இருக்கின்றோமா?
யாருக்கோ தானே? யாரோதானே என இன்றைய நிலையில் எவனுக்கோ நடப்பதை வேடிக்கை பார்க்கும் நம் வாழ்வில் நாளை என்ன நடக்கும் என்பதை அறிவோமா?
ஒரு உயிரை தேடி கடந்த ஐந்து நாட்களாக அலையும் இந்த நொடியில் அவன் செய்த தவறுகள் மறைந்து போனதே!
யாரை நொந்து என்னாகும்?
தொலைத்து விட்டோமே என கனத்து போன மனதுடன் பிரச்சனையில் அடி நுனி புரியாது தொலைத்த பின் தேடிக்கதறும் நொடியில் பிரச்சனையின் ஆரம்பத்தில் எம்மை நாடி இருந்திருக்கலாமே எனும் மன ஆதங்கமும் வலியுமாக.........................கடவுள் பயமற்று போனோமா?
எங்கே சென்று கொண்டிருக்கின்றோம்.
மரணமில்லாத வீடு உண்டா?
பிரச்சனைகளில்லாத குடும்பங்கள் உண்டா?

அடுத்தவர் குடும்ப பிரச்சனைகளில் மூக்கை நுழைத்து ஆலோசனை எனும் பெயரில் அக்கிரமங்களை நடத்துமுன் அதற்கு நாங்கள் தகுதியானோரா என நம்மை நாம் ஆராய்ந்து கொள்வோம்.