22 ஜனவரி 2016

வேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் தரமாய் இருக்கும்!


மனசு பேசுகிறது : தாயும் தாரமும்கில்லர் ஜி சாரின் அத் தாய்பதிவுகளில் தொடர்ச்சியாக.......!

வேராய் நீயிருந்தால் தாயும் தாரமும் உனக்குள் தரமாய் இருக்கும்! தாயா தாரமா என்ற பேச்சே நல்ல குடும்பத்தில் வரக்கூடாது எனும் என் கருத்தினை நான் ஆரம்பத்திலேயே சொல்லி விடுகின்றேன் !.

குடும்பம் எனும் கோயிலில் யாரும் யாருக்கும் உசத்தியும் இல்லை, தாழ்ச்சியும் இல்லை, அனைவரும் சமமே! ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு உறவுக்கான பரிமாணம் மாறுமே தவிர எல்லாக்காலங்களிலும் எந்த உறவென்பதும் யாரும் யாருக்கும் விட்டுக்கொடுக்க வேண்டியதாய் இருப்பதில்லை,

 மரமானது நாம் ஊற்றும் நீரை உள் வாங்கி மண்ணில் வேரூன்றி காலத்துக்கும் கனியும் நிழலுமாய் பயன் தருவது போல் தான் ஒவ்வொரு குடும்பத்திலும் ஆண் என்பவர் வேராயிருக்கின்றான். அந்த வேர் எனும் அடித்தளம் உறுதியாய் இருந்தால் எத்தனை புயல், வெயில் அடித்தாலும் குடும்பம் எனும் மரம் நிமிர்ந்தே நிற்கும்! உறுதியில்லாத வேர்களை கொண்ட மரம் தான் சின்ன காற்றுக்கும் தன்னை நிலை நிறுத்த முடியாமல் தடுமாறும், ஒடிந்தும் விடும். அதே போல் தான் ஆணும் தன்னில் உறுதியாயும் திடமாயும் யாருக்கு என்ன இடம் என்பதை தான் தன்னில் நிரூபித்து விட்டால் அவனை சார்ந்த குடும்பமும் அசையாது. தலை நிமிர்ந்தே நிற்கும்.

நம் சமூகத்தில் ஆண்பிள்ளைகளை இப்படி வளர்ப்பது குறைவென்பதையும் நான் ஒப்புக்கொள்கின்றேன். குடும்பமெனும் பல் கலைகழகத்தில் ஆண் வேராயும் தாய், தாரம் மற்றும் பிள்ளைகள் கிளைகளாயும் இருக்கும் போது பல பறவைகள் அம்மரம் தேடி வந்து இளைப்பாறி கனி புசித்து செல்வது போல் தான் சித்தப்பா, சித்தி, பெரியப்பா, தாத்தா பாட்டி என ஏனைய உறவுகள் நம்மை தேடி வந்து இன்புறுவார்கள். குடும்பத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சரி கடமை உள்ளதே தவிர நீயா நானா எனும் ஏற்றத்தாழ்வுகள் என்றும் இருக்க கூடாது.

பொதுவாக பெண்கள் மனசு பூ மாதிரி. குழந்தையாயிருக்கும் போது அப்பா, அண்ணா, தம்பி எனும் உறவுக்குள் தன்னை அடக்கி, தனக்குள் அவர்களையும் அடக்கி ஆளும் வரம் பெற்றவளாயிருக்கின்றாள். பெண் இல்லாத வீடு பாழடைந்த கோயிலுக்கு சமமென்பர். தகப்பன், சகோதரன் எனும் பாசமான பாதுகாப்பு வட்டத்திலிருந்து திருமணம் எனும் பெயரில் வெளி வரும் பெண் .... திருமணத்தின் பின் நம் சமுதாய சட்டதிட்டங்கள் கடமைகள் என பிறப்பிலிருந்தே வளர்க்கப்படும் விதத்தால் கணவனுக்குள் அங்கமாகின்றாள்.

ஆதிதாய் தகப்பன் உருவாக்கத்தின் படி ஆணின் பாதி தான் மனைவி எனும் பெயரில் நிச்சயிக்கப்பட்டு ஒரு மனிதன் வாழ்க்கை முழுமையாக்கப்படு கின்றது ஆனாலும் அதே பெண் தனக்கென ஒரு குழந்தை பிறந்த பின் பத்து மாதம் தன் கருவில் தாங்கி பசி பட்டினி உணர்ந்து வலியோடு பெற்றெடுக்கும் பிள்ளைமேல் கொள்ளும் பாசத்தினை எந்த உறவோடும் ஒப்பிட முடியாது ,.

பெற்ற மனம் பித்தாகவும், பிள்ளை மனம் கல்லாகவும் இருப்பதாக சொல்லும் இந்த சமுகம் பெற்ற மனம் பல நேரம் சுய நலவாதியாய் கல்லைவிட இறுகிய மலையாய் இருப்பதை கண்டு கொள்வதில்லை எனினும் தாயின் பாசத்துக்கு முன் எவர் பாசமும் ஈடாகாது!

மனைவி என்பவளுக்கு தன் கணவனுக்கு காலையில் எழும்பி காப்பி போட்டு சாப்பாடு சமைத்து துணி துவைத்து என செய்ய வேண்டியது அவள் கடமை. அதிலும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருக்கும் பெண்களுக்கும் இது கட்டாயம்.மனைவி என்பவள் வேலைக்காரியல்ல, அவளுக்காகவும் சேர்த்து வெளியில் உழைக்கும் கணவனுக்கு செய்ய வேண்டியது தான். ஆனால் வேலைக்கு சென்று குடும்ப பொறுப்புக்களை இருவரும் தாங்கும் போது காலையில் வேலைக்கு செல்லும் கணவனுக்கு அதிகாலை காப்பி போட்டு தரவில்லை என்பதை பெரிதாக எடுக்க முடியாது. ஏனெனில் முற்காலம் போல் வீட்டுக்குள் இருக்காமல் அவளும் வேலைக்கு போவதால் இங்கே கடமைகள் இருவருக்கும் பொதுவாகின்றது.

இதுவே தாய் என வரும் போது தாய் வேலைக்கு போனாலும் வீட்டிலிருந்தாலும் பிள்ளைக்கு சாப்பாடு முதல் அனைத்தும் பார்த்து பார்த்து கவனிக்க வேண்டியது அவள் பாசத்தில் மட்டுமே! பத்து மாதம் சுமந்து பாலூட்டி வலிதாங்கி இருபது, இருபத்தைந்து வயது வரை வளர்த்து விட்டு திருமணமான ஒரே நாளில் மனைவிக்கு மட்டும் தான் அவன் உரியவன் தாய் விட்டுக்கொடுத்து போக வேண்டும் என சொல்வதெல்லாம் ரெம்ப டூமச்.

தன் மகன் வாழ்க்கை நலமாயிருக்க நல்ல தாய் ஆறுதலாயிருப்பாளே தவிர அரக்கியாயிருக்க மாட்டாள். ஆனாலும் பல விதி மீறல்கள் உண்டு. பாகுபாடு பார்க்கும் தாய்மாரும் உண்டு. ஆனாலும் மனைவி தான் எல்லாம் எனும் உங்கள் கருத்தினை நான் ஏற்க மாட்டேன்.

எந்த வேலைக்கும் செல்லாமல் வருமானம் இன்றி நோயில் படுத்திருந்தாலும் தாய் அன்பு தன் பிள்ளை சாப்பிட்டானா என தான் யோசிக்கும். மனைவி எல்லா நேரமும் அப்படி இருக்க மாட்டாள். மனைவி எனும் பெண் தாயாகும் போது அங்கே அவள் மகனுக்கு தான் முதலிடம் கொடுக்கின்றாள் எனும் உண்மை புரிந்தால் இந்த மாதிரி விவாதங்களுக்கே இடம் இராது.

திருமணமாகும் வரை அண்ணனாய் தம்பியாய் மகனாய் இருப்பவன் திருமணமானபின் எப்படி மனைவிக்கு மட்டும் உரிமையானவனாக முடியும். எப்படி விட்டுக்கொடுக்க முடியும்.? ஆனாலும் ஒரு விடயம் யோசித்து பார்த்திருக்கின்றீர்களா? பெண்கள் திருமணமாகும் முன் நம் பிறந்த வீட்டாருடன் எப்படி இருப்பார்களோ அதே உறவும் பந்தமும் திருமணத்துக்கு பின்னும் அவளால் தொடரப்படுகின்றது. ஆனால் ஆணுக்கோ தி.மு- தி. பின் என இரு நிலைகள். ஏன் அப்படி?

உங்களுக்கு தெரியுமா சகோதரர்களே! பெண் என்பவள் திருமணமான புதிதில் உங்கள் கையில் கிடைத்த களி மண்ணாயிருக்கின்றாள், அவளை உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் ஏற்ற பாத்திரமாய் உருவாக்குவது உங்கள் கைகளில் தான், திருமணமான சில நாட்களில் நீங்கள் உங்கள் கையில் இருக்கும் களி மண்ணை பதப்படுத்தி நல்ல பாத்திரமாக உருவாக்கினால் அப்பாத்திரம் உங்களுக்கு குளிர்ச்சியான நீர் தந்து இளைப்பாறுதல் தரும், உங்கள் வீட்டாரை குறித்த உங்கள் செயல் பாடுகளால் இறுகிய செங்கலாய் உருவாக்கி கொண்டால் நீங்கள் உருவாக்கும் கல்லே உங்கள் தலை உடைக்கும். அன்புக்கு வளையாத பெண், காதலுக்கு கட்டுப்படாத பெண்  உண்டோ சொல்லுங்கள்?

ஆனால் நிஜம் என்ன தெரியுமா?

திருமணமானபின் ஏதோ காணாததை கண்டு காய்ந்த மாடு வைக்கோல் போரை கண்டால் விழுவது போல் ஒரே நாளில் மாறுவார்கள். என் அம்மா அப்படி! என் தம்பி இப்படி! நீ கவனமா நடந்துக்கோ! உனக்கு நான் மட்டும் தான் முக்கியம், எனக்கு நீ போதும் நீதான் என் தெய்வம், உயிர் , உடல் ஆவி எல்லாம் உனக்குத்தான் என சரணாகதி ஆம் சரணாகதி தான் அடைவார்கள் அதன் பின் அவர்கள் மீளப்போவதிலை எனும் உண்மை தெரியாமல்  அடையும் சரணாகதி அது! ஹாஹா!

தாய்  தாரப்பிரச்சனையில் சிக்கி தவிக்கும் எவரேனும் நான் சொல்வதை இல்லை என சொல்லுங்கள் பார்க்கலாம்!

ஏன் அப்படி நடக்க வேண்டும். பெண் அப்படி மாறுவதும் இல்லை தன் தாய் சகோதரர்களை குறித்து குற்றம்குறை பேசிட அனுமதிப்பதும் இல்லை விட்டுக்கொடுப்பதும் இல்லை. ஆனால் ஆண்கள் அப்படி அல்ல!  அதே போல் அம்மாவை பத்தி மனைவி சொல்லும் குறைகளையும் பெரிதாக்கி.... அம்மாவை செல்லாக்காசாக்கி விடுகின்றார்கள்.

நான் என் சொந்த அனுபவத்தில் கண்ட உண்மை என்னவெனில் இந்த விடயத்தில் ஆண்கள் தான் தவறிழைக்கின்றார்கள். திருமணமாகும் வரை அக்கா, அம்மா தங்கை என உருகி விட்டு அவர்களை விட்டால் யாருமில்லை அவர்களுக்கு தான் தன் உடல் பொருள் ஆவியெல்லாம் என ஓவர் ஆக்‌ஷன் எடுப்பார்கள். அதையே மனைவியானவளிடமும் சொல்லி இரட்டை வேடம் போடுவார்கள்.

அம்மா தாய் என வரும் போது  மனைவி எவ்வகையில் வேறு படுகின்றான் என சொல்லுங்கள்?

உடல்ரீதியான தொடுதல் தான் மனைவியை மற்றைய  உறவுகளிடமிருந்து வேறு படுத்து கின்றது.ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது போல் காலப்போக்கில் அருகி வரக்கூடிய உடல் உணர்வுகளுக்கு  தான் பல ஆண்கள் திருமண மான ஆரம்ப காலத்தில் முதலிடம் கொடுத்து  உள உணர்வை அசட்டை பண்ணுகின்றார்கள்.

இதிலும் பெரும்பாலான ஆண்கள் சொல்லும் ஒரு வார்த்தை.. அம்மா நீ சும்மா பேசாமல் இரு.. உனக்கு ஒன்றுமே தெரியாது..... ஆமாம் ஐம்பது வயது அம்மாவுக்கு ஒன்றும் தெரியாமல் தான் அவனைபெற்று வளர்த்து ஆளாக்கி விட்டார்.

நேற்று வந்த இருபது வயது மனைவிக்கு எல்லாம் தெரியும். அம்மாவுக்கு ஒன்றுமே தெரியாது. அவள் அடி முட்டாள். அட போங்கப்பா... நீங்களும் உங்க காரணங்களும்.

இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம்... மனைவி என்றால் ஏதோ அடிமை போல் அம்மாவை மட்டும் தூக்கி தலையில் வைத்து ஆடுவது. இது நிரம்பவே திரி, போர் மச்! ஏன்பா உங்களுக்கு அப்படியும் இல்லாமல் இப்படியும் இல்லாமல் நடு நிலையில் முடிவெடுத்து வாழவே தெரியாதா?

என்னை பொறுத்த வரை ஒரு ஆணுக்கு அம்மா அம்மா தான்.
மனைவி மனைவி தான். இருவரில் எவர் உசத்தி எனும் பேச்சுக்கே இடம் இல்லை.

இரு கண்ணில் ஒரு கண் மட்டும் போதுமா என எதையும் உயர்த்தவும் வேண்டாம், தாழ்த்தவும் வேண்டாம். விட்டு கொடுக்கவும் வேண்டாம் வைத்து பிடுங்கவும் வேண்டாம்.

 வெளி நாட்டில் தொடர்ந்து பத்து வருடம் வேலை செய்து விட்டு ஊருக்கு போய் அங்கே செட்டிலாக நினைத்து  ஒரு வருடம் அங்கிருந்து எந்த தொழிலுமில்லாமல் அல்லல்படும் ஒரு ஆணிடம் கேட்டுப்பாருங்கள். கொடுத்தால் மனைவி. கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் தாய் என பசிக்கு சோறு போடுவது என் அம்மா தான் என்பான்.

 பல ஆண்கள் தங்கள் வாழ்க்கையில் அந்த நிமிடத்தினை வைத்து தாரத்திற்கு முதலிடம் என சொல்வதில் தப்பில்லை. ஆனால் வாழ்க்கையில் முடிவு மட்டும் இதே முடிவு நிலைக்குமா என்பதற்கு பதில் காலம் தான் சொல்லும்!

 நான் புதிதாக கல்யாணம் ஆகப்போகும் எனக்கு தெரிந்த ஆண்மக்கள் அனைவருக்கும் சொல்லும் ஒரு ஆலோசனை.

மனைவியை நேசி. உன்னில் பாதியாய் பார். அவளின் தேவைகளை நிறைவாக்கு, ஆனால் அனைத்துக்கும் தலையாட்டும் அடிமையாகாதே! உன் தாய் தந்தைக்குரிய கடமையை மறவாதே என்பது தான். அம்மா, அப்பா உனக்கு முக்கியம் விட்டுக்கொடுத்து விடாதேப்பா என சொல்வேன்

இவ்வகையில் என் வீட்டுக்காரரும் எனக்கு முன் மாதிரி தான். என்ன தான் சுவிஸில் இருந்தாலும் அவர் அம்மா அப்பா என வரும் போது நான் ஒதுங்கித்தான் போவேன். அதே போல் அவர் உடன் பிறந்தவர்கள் தப்பே செய்தாலும் அதை சொல்லி சுட்டிக்காட்டி பேச எனக்கு அனுமதியும் இல்லை. இதே நிலையில் நானும். என் சகோதரர்கள் அம்மா அப்பா எனக்கு எப்படி இருந்தாலும் அவர்களுக்காக கடமை என வரும் போது என்னவரா
யிருந்தாலும் கடமையை தான் நிறைவேற்றுவேன்.

இருவருமே ஆரம்பத்திலிருந்து அவரவர் குடும்பத்துக்கு என்னமுக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அதை கொடுக்கவும். மதிக்கவும் கற்றுக்கொண்டோம்.

அம்மா பேயாயிருக்கட்டும். அம்மா அம்மா தான், மனைவி மனைவி தான். அம்மா சின்ன தப்பு செய்தாலும் தூக்கிப்பிடிக்கும் ஆண், மனைவி பெரிய தப்பு செய்தாலும் கண்டு கொள்வதே இல்லை. அத்தனை கண்மூடித்தனமான நம்பிக்கையா என கேட்டால் ? இல்லை என சொல்வேன்.

தாய்க்கு பின் தாரம் என சொல்வார்கள். நன்கு ஆராய்ந்தால் இந்த வார்த்தை தரும் அர்த்தம் நம் முன்னோர்கள் சொன்னது தெளிவாக புரியும்.

தாய்க்குப்பின் தான் தாரம்.. அதாவது தாய் இல்லையென ஆனபின் தான் தாரத்தால் அந்த இடத்தினை நிரப்ப முடியும். தாய் இருக்கும் வரை தாய் அன்புக்கு நிகர் அது மட்டும் தான்.

அம்மாவுக்கு பத்து வருடம்  நீரழிவு நோய் இருப்பதை கண்டுகொள்ளாத மகன்கள் திருமணமாகி ஒரே மாதத்தில் மாமியாருக்கு சுகர் செக் செய்யும் கருவி வாங்கி பரிசளிக்கும் காலம் இது!தங்கள் இயலாமையை வெளிப்படுத்த முடியாமல்  பெண்கள் மேல் பழி போட்டு தாங்கள் தப்பிக்கொள்ள நினைக்கும் ஆண்கள் திருமணமான ஆரம்பத்தில் ஏன் தங்கள் தரத்தினை உறுதியாய் நிலை நாட்டுவதில்லை?

இந்த மாதிரி அம்மா,மனைவி என வரும் போது எவருக்கு எந்த இடம் என முடிவெடுப்பதை பல்கலை சென்று பட்டம் படிக்காத பல ஆண்களிடம் இருக்கும் நியாயத்தன்மை படித்து பட்டம் பெற்று பதவியில் இருப்போரிடம் இருப்பதில்லை. படிப்பு அவர்களுக்குள் தெளிவான சிந்தனையை குடும்ப உறவுகள் விடயத்தில் தருவதில்லை. குழப்பவாதிகளாய் மாமியார் மருமகள் பிரச்சனைக்கு அச்சாணியாய்  பல ஆண்கள் தான் இருப்பார்கள்..

நியாயமும் நீதியும் அங்கே மரத்து போகும். படிப்பு கௌரவத்தை தான் கற்று தரும் போலும்!

வீட்டில் எந்த பிரச்சனை வந்தாலும் அது வீட்டுப்பெண்களால் மட்டும் தான் என தப்பித்து கொள்ளும்  ஆண்களை   அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டவே இப்பதிவு,






9 கருத்துகள்:

  1. என்ன சொன்னாலும் கவிதையா இருக்குன்னு சொல்றீங்க...அதனால நேராகவே சொல்றேன்...
    ஏன்..என்னாச்சு உங்களுக்கு?
    இல்லை அம்மா...இந்த காலத்தில் குடும்பமே குறைந்து வருகிறது...
    மாமியார்கள்,மருமகள்கள் மாறியிருக்கிறார்கள்.இன்னும் இதைப்பற்றி எழுத வேண்டாமே....
    தீர்க்கப்படவேண்டிய பல சிக்கல்கள் நிறைய உண்டு....
    ஆனாலும் உங்கள் பதிவில் நிறைய ஆதங்கங்கள் தெரிகிறது...இருக்கட்டும் எப்போதும் இந்த எழுத்து வேகம்..
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்

    வாழ்க்கை தத்துவத்தை சொல்லிவிட்டீர்கள் படித்து மகிழ்ந்தேன். வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. ஒப்பீடு ஆரம்பம் - பிரச்சனையின் விதை...

    பதிலளிநீக்கு
  4. நல்லாயிருக்கு தங்கள் பார்வை...

    இன்றைய மனைவிதான் நாளைய அம்மா... மாமியார்...

    அது புரிந்தால் போதும்...

    விவாதங்கள் குறையும்...

    நீண்ட பகிர்வாய்.... நிறைய பேசியிருக்கீங்க....

    எங்கள் பதிவையும் பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா...

    பதிலளிநீக்கு
  5. தாயா தாரமா என்ற பேச்சே நல்ல குடும்பத்தில் வரக்கூடாது எனும் என் கருத்தினை நான் ஆரம்பத்திலேயே சொல்லி விடுகின்றேன் !.// யெஸ் அதே! நல்ல கருத்துகளைச் சொல்லியிருக்கின்றீர்கள்..சகோ.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் எனது பதிவு தாயா ? தாரமா ? என்பதல்ல... மாமியாருக்கும், மருமகளுக்கும் நிலுவையில் உள்ள எண்ணங்களின் வேறுபாட்டை காண்பித்தேன் அவ்வளவுதான்

    மற்றபடி ஆணோ, பெண்ணோ இருபாலருக்குமே தாய் இந்த உலகத்தில் இறைவனைப் போல் துதிக்கப்பட வேண்டியவள் என்ற கருத்துடையவன் நான்

    தாயின் உணர்வுகளை அல்ல பெற்றோர்களின் உணர்வுகளை அப்பதிவில் நான் கொடுத்திருந்த (மீனாம்பதி) இணைப்பைச் சொடுக்கி ஒரு 8 போய்ப் பார்த்தால் தெரியும் நான் எந்தப் பக்கத்தில் இருக்கின்றேன் என்பதை.

    கணவனைக் கொல்லும் மனைவியர்கள் உண்டு ஆனால் பிள்ளையைக் கொல்லும் தாய் உண்டா ? இருவருமே பெண்பால்தான்

    // தாய்க்குப்பின் தான் தாரம்.. அதாவது தாய் இல்லையென ஆனபின் தான் தாரத்தால் அந்த இடத்தினை நிரப்ப முடியும். தாய் இருக்கும் வரை தாய் அன்புக்கு நிகர் அது மட்டும் தான் //

    அருமையாக சொன்னீர்கள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. உங்கள் பார்வையில் சொன்ன கருத்துக்களும் ஏற்புடையவையாகவே உள்ளன! நன்றி!

    பதிலளிநீக்கு
  8. உங்கள் நீண்ட கட்டுரையில் பல கேள்விகள் அதற்கான விடைகள் என சூப்பராக விரிவாக மிகவும் சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் இதற்கு நான் என்ன சொல்ல முடியும் உங்கள் கருத்தோடு எங்கள் கருத்தும் பின்னிப்பிணைந்துள்ளது அக்கா

    தாய்க்குப்பின் தான் தாரம்.. அதாவது தாய் இல்லையென ஆனபின் தான் தாரத்தால் அந்த இடத்தினை நிரப்ப முடியும். தாய் இருக்கும் வரை தாய் அன்புக்கு நிகர் அது மட்டும் தான் //

    அருமையாக சொன்னீர்கள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. நல்ல கருத்துகளும், அறிவுரையும் தாங்கிய நிறைவான கட்டுரை. படிக்கும்போதே இது தான் சரி என்று மனதுக்கு இதமாக இருக்கு. வாழ்த்துகள் நிஷா இது போல தொடர்ந்து எழுதுங்க.

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!