18 ஜனவரி 2016

என்னகம் கொன்று உன்னை யார் வெல்வது?

நட்பா? காதலா? என பல முறை பல இடங்களில் விவாதித்தாகி விட்டது.. என் ஒட்டு காதலை விட நட்புக்கே  இருப்பதும் ஆண் பெண் நட்பை நல்ல மெல்லிய நூலால் கட்டும் போது இயல்பாய் இருவருக்குமிடையிலான ஏதோ ஒன்று அங்கே இழையோடுவதும்அந்த இழையே  நட்பின் வெற்றிக்கு பின் இருபப்தும் நிஜம் என்பதை  உணர்ந்தவர்  புரிந்து இருப்பார்கள்..

ஆங்கிலத்தில்  LOVE என்பதை அன்பினை தாண்டிய எதிர்பார்ப்பில்லாத பிரியத்தை சொல்ல பயன்படுத்து வார்கள்.  ஐ லவ் அம்மா, ஐ லவ்அப்பா என அனைவரையும் LOVE எனும் அன்பால் கட்டுவார்கள். ஆம  நேசிப்பு...... அனைவருக்கும் பொதுவானது.அனைவரையும் லவ் செய்யலாம்.அனைத்தையுமே நேசிக்கலாம்!

ஆனால்  நம் சினிமாக்கள் LOVE  என்பதை ஆணுக்கும் பெண்ணுக்குமே உரியதான காதல் எனும் வட்டத்தினுள் நிறுத்துவதால் LOVE சொன்னாலே ஏதோ பெரிய தப்பு எனும் உணர்வு இன்னும் நம்மவர்களிடம் உண்டு.

காதல் ஒரு காலத்தில் பூத்து சிலகாலத்தில் மறையும், நேசிப்பு மரணம் வரை கூட தொடரும்.

நீ என்னை நேசிக்கிறாயா? நீ என்னை LOVE  பண்ணுகின்றாயா என கேட்டால் ஆமாம்  I LOVE YOU என  சட்டென சொல்லிட முடிவது போல் காதலை சொல்ல முடியதில்லை. காதலில் காமம் சேரும் போது அதிலிருக்கும்  LOVE  சில நாட்களில் சாதலை அடைவதும் உண்டு.

அதிலும் இந்த நட்பெனும் ஆண்பெண் நூலிழை இழைவில்.... நேசிப்புக்கும் காதலுக்கும்  மெல்லிய கோடு தான்.அந்த கோட்டை நிர்ணயிப்பது நம் உணர்வுகள் தான்!. தமக்குள் இருப்பதை நேசிப்பாக்குவதும் காதலாக்குவதும் அவரவர்  கைகளில் தான் என்பேன்!  காதலுக்கு எல்லை உண்டு,  ஆனால் நட்புக்கு எல்லை இல்லை!

 காந்தந்தின் இரு துருவங்களை   நாம் அருகருகே வைத்து விட்டு  ஈர்ப்பே இல்லை என சொன்னால் அது எப்படி தவறாகுமோ அப்படித்தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான நட்பும் , பெண்ணுக்கு பெண்ணும் , ஆணுக்கு ஆணும் பழகும் போது இல்லாத ஏதோ ஒன்று  ஆண் பெண் நட்பில் இருந்தாலும் அதையும் அவர்களில்  புரிதலுடனான நேசிப்பாய்  இறுதி வரை தொடர முடியும். என நான் நினைக்கின்றேன்?

பெரும் பாலான பெண்கள்  சட்டென அறிமுகமாகும் வேற்று ஆண்களை அண்ணனாய், தம்பியாய் அழைப்பதும் தமக்கான பாதுகாப்பு வளையம் இறுகவே.. ஆண்களை நம்ப இயலாமை அல்லது தன்னில் நம்பிக்கை இல்லாமை  ஆண்களை பெண்களை சகோதர உறவில் தூரமாய் வைத்து விடச்செய்கின்றது.

இதையெல்லாம் தாண்டி  ஜெயிக்கும் ஆண் பெண் நட்பூ.... பல ஆண்டுகளானாலும் தொடர செய்யும்  நட்பூவாய்  மரணம் வரை கூட வரும் என்பது என் கருத்து!

நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

நட்பா? காதலா? எது  சிறந்தது?



படம் நன்றி இணையம் 

உன்னகம் கொன்று என்னகம் ஜெயிப்பதும்
என்னகம் கொன்று உன்னகம்  வெல்வதும்
விண்ணகம் சென்றிட தூண்டிடும் வலியடா?
துன்பமா இன்பமா,,, சகலமும் நம்முள்ளே
தாயிவள்  சேயாவதும்  சகலமும் சரணென
சொல்லிடும் உணர்வினில் ...
சவாலென விலகியே சடுதியாய் செல்கின்றாய்?
எப்படி உனைக்கொன்று  உன்னை நான் வெல்வது?!

தரணியில் தோல்விகள் துவண்டேனே  தோழியே என்றதும்

தொட்டதும் தொல்லை தான் என்று நீ உரைத்ததும்
தாங்கிடும் மனமின்றி தவிப்பவள் தாயடா!
தோல்வியில் துவண்டிட்டால்  தோள் தந்து
தாங்கிடும உன்னவள் உனக்கென்றும் சேயடா!
தோள் தர துணை நிற்கும் தோழியும் அவளடா!
காதலை மிஞ்சிய பாசமும்  நேசமும்
யுகத்திலே உண்டென   புரிந்தவள்  பெண்ணடா!

அனைத்தையும் வெல்லுவேன் அன்று நான் சொல்லுவேன்

அனைத்திலும் இருந்தவள் அன்பான தோழி நீ என்றவன்
என் மனமுணராமல்  போனதேன் தோழா?
விழித்தெழு, ஜெயித்திடு  சொல்லிடும் உன் தோழி
தன்னிலே உன்னை நீ  தோற்கணும் என்பாளோ?
நீயா நானா   சவால்கள் வந்திட்டால் - உன்
அன்பினுள் அடங்கியே ஜெயித்திடும்
சேயுந்தன் தாயுமானானவள் தோழியாம்!

வரமென சொன்னவன் தூரமாய் செல்கின்றான்

வீம்புடன் வார்த்தையை வீசித்தான் கொல்கின்றான்
பெண்மையோ மௌனமாய் கண்ணீரை வடிக்குதே!
மென்மையாம் மனதினில்  உருகிடும் உணர்விலே
ஜெயிப்பவன் என்றுமே நீயாய்த்தானிருக்கணும்
வானமே எல்லையாய்   அனைத்தையும்  ஜெயிக்கணும்!
வஞ்சியின் வாஞ்சையில் வஞ்சனையில்லையே!
நெஞ்சத்தின் வேதனை புரிந்திடும் நாளேது?

காதலும், காமமும் கலந்திடும் இகத்திலே

காதலை தாவென கசிந்து நீ வேண்டினால்
கறைகளும்  வாழ்க்கையை  கலைத்து வைக்குமே!
காதலே வேண்டாமே  கசக்குமே என்றிட்டால்
காதலித்துப்பார் உனக்கது புரியும்   என்கிறாய் !
நட்புக்கோர் இலக்கணம்  பிசிராந்தையார் நட்பாம் 
பாராமல் மனமுணர்ந்தவர வருயிரையும் விட்டாராம் 
என்றோ உரைத்ததை இன்று நீ மறந்ததேன்?


பின் குறிப்பு
அனவருக்கும் அன்பு வணக்கம்,!
வலையுலகிற்கு புதியவளாய்  தமிழுக்கு சிறு மழலையாய் உங்கள் முன் தவழ்ந்திடும் என்னை தட்டிக்கொடுத்து தாலாட்டி, சீராட்டி  நான் நடைபயில உதவிடும் அனைத்து வலைத்தமிழ் நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!

ஆல்ப்ஸ் தென்றலில் பதிவாகும் என் எழுத்துக்கள் புதியவைகள் அல்ல என்பதையும், அதில்  இருக்கும் சோகங்கள் சோர்வுகள் இன்றைய என் நிலையை சொல்லும் சொந்தக்கதையல்ல என்பதையும்   நான் பகிரும் பல கவிதைகள் 2009ம் ஆண்டிலேயே எழுதப்பட்டு  முத்தமிழ் மன்றம், தமிழ் மன்றம், சேனைத்தமிழ் உலாக்களில்பதிவாக்கப்பட்டிருக்கின்றது என்பதோடு...அங்கொன்று இங்கொன்றுமாய் பரவி இருப்பதை ஒரே தொகுப்பாக்கிட  ஆலோசனை சொல்லி என் வலைப்பூ வழி காட்டியாம் மனசு குமாரின் ஆலோசனையில் ஒவ்வொன்றாக இங்கே பதிவாக்குகின்றேன்.

புரிதலுக்கு நன்றி!

21 கருத்துகள்:

  1. ஹா... ஹா... அக்கா உங்களுக்கும் நான் மனசு குமார் ஆயிட்டேனா... அதுசரி... தாங்கள் எழுத்தை இங்கு பதிகிறீர்கள்... இதற்கு எல்லாம் குமார் எதற்கு...?


    கவிதை அருமை அக்கா...

    ///காதலும், காமமும் கலந்திடும் இகத்திலே
    காதலை தாவென கசிந்து நீ வேண்டினால்
    கறைகளும் வாழ்க்கையை கலைத்து வைக்குமே!
    காதலே வேண்டாமே கசக்குமே என்றிட்டால்
    காதலித்துப்பார் உனக்கது புரியும் என்கிறாய் !
    நட்புக்கோர் இலக்கணம் பிசிராந்தையார் நட்பாம்
    பாராமல் மனமுணர்ந்தவர் உயிரையும் விட்டாராம்
    என்றோ உரைத்ததை இன்று நீ மறந்ததேன்?///

    தோழியே சிறந்தவள் என்னும் கரு சுமந்து வந்த கவிதை வரிகளைப் வாசித்து வரும் போது எனக்கு என்னோட 'அவ' சிறுகதையும்... அதற்கு சேனையில் பானு அக்காவின் கருத்தும்தான் ஞாபகத்துக்கு வந்தது.

    நல்ல கவிதை அக்கா... படமும் பொருத்தமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமம குமார், நானும் படித்தேன், பானுவையும் இந்தப்பக்கம் இழுக்கணும் பகுமார், பின்னூட்டம் சும்ம்ம நச்சுன்னு இருந்தது! ஆனால் நானும் அதுக்கு பேரு நட்புக்கு தான் சொல்ல சொன்னேன். நட்பூன்னே சொல்லிருங்களேன்..காதல் சொல்லிட்டால் இருக்கும் நட்பூ வாடி விடுமோ எனும் பயம் மனதினுள் எழுகின்றதே!

      நீங்க படித்த பின் தான் இன்னும் கொஞ்ச எழுதி சேர்த்தேன். அதையும் படித்து உங்க கருத்தினை சொல்லி விடுங்க.

      நீக்கு
    2. வலைப்பூவை பொறுத்தவரை என் ஆசான் நீங்க தானே குமார். மனசில் இருக்கும் குமார் மனசு குமார் தானே?

      நீக்கு
  2. காதல் என்று சொல்லப்பட்டுப் புரிந்து கொள்ளப்படும் (இன்றைய) வார்த்தை ஒரு திருமணத்தில் "முடிந்து" விடுகிறது!! இதற்கு எண்ணிக்கைக் கட்டுப்பாடும் உண்டு. ஆனால் நட்பு அப்படி இல்லை. எல்லையும் இல்லை, கட்டுப்பாடும் இல்லை!

    கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிஜம் தான ஐயா! கருத்திடலுக்கு நன்றி ஐயா!

      நீக்கு
  3. இதையெல்லாம் தாண்டி ஜெயிக்கும் ஆண் பெண் நட்பூ.... பல ஆண்டுகளானாலும் தொடர செய்யும் நட்பூவாய் மரணம் வரை கூட வரும் என்பது என் கருத்து!
    உண்மைதான் சகோதரியாரே
    என் கருத்தும் இதேதான்
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் நப்பூக்களும் ஆண்டாண்டு தொடரணும் என்பது தான் என் வேண்டுதலும் ஐயா! கருத்திடலுக்கும் வருகைக்கும் நன்றி ஐயா!

      நீக்கு
  4. கவிதை அருமை... சகோதரர் குமார் அவருக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தனபாலன் சார்,
      ஆமாம் குமாருக்கும் நன்றி!

      நீக்கு
  5. உடல்தேடா
    காதலுக்கு
    நட்பென்றும்
    பெயரிடலாம்..

    ஆண்
    அதிகமாய்
    கொள்ளும்
    அவள்
    மீதான
    பிரியம்
    நட்பினினும்
    காதல்
    எனும்போது
    கர்வப்பட்டுப்
    போகிறான்.

    நட்பின்
    தோல்வியில்
    இதயங்கள்
    சாகும்.

    காதலின்
    சாதலில்
    எல்லாம்
    அல்லவா
    இறக்கின்றன...

    தோள்தேடும்
    நட்பு
    உரிமையில்லை.

    காலம் வெல்லும்
    காதலுக்கு
    ஒப்பு இல்லை..

    கட்டில் தேடா
    காதலுமுண்டு..

    நட்பென்ற
    போர்வைக்குள்
    சில
    நச்சும்
    உண்டு..

    பிடித்திருந்தால்
    காதலித்துவிட்டு
    போகச்சொல்லுங்கள்..

    வாழும்
    சில
    காலம்
    சொர்க்கத்தில்
    உலவட்டும்...

    உள்ளம்
    சேர்வார்களெனில்..
    காதலினால்
    வென்ற
    கதைகிடைக்கும்..

    ஒருவேளை
    தோற்றுப்போனால்..

    தனித்தனியே
    கவிதைகள்
    கிடைக்கும்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உள்ளம்
      சேர்வார்களெனில்..
      காதலினால்
      வென்ற
      கதைகிடைக்கும்..

      ஒருவேளை
      தோற்றுப்போனால்..

      தனித்தனியே
      கவிதைகள்
      கிடைக்கும்.//

      ஹஹஹ் யதார்த்தம்! உண்மையும் அதுவே! ரசித்தோம் செல்வாவின் வரிகளயும்.

      நீக்கு
    2. செல்வாவின் வரிகளோடு எங்கள் கருத்தும்!!

      நீக்கு
  6. அட! காதலிப்பதை விட காதலிக்கப்படுவது உயர்ந்தது என்பதும் அப்படியான காதல் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பதும், தன் இதயம் திறந்து அனைத்துமே நீயேன சரணாகதியாதல் அத்தனை சுலபமில்லை என்பதும் நிஜம் தான், அனைத்திலும் உயர்வாய் காதலை எண்ணிடும் உங்கள் நம்பிக்கை ஜெயிக்கட்டும்.ஆனாலும் காதல் நிஜமாயிருந்தால் அங்கே வெற்றி தோல்விக்கு இடமே இல்லை செல்வா சார்! நிஜக்காதல் விட்டுக்கொடுக்கும். தன்னை நேசிப்பவர் எப்போதும் தோறகக்கூடாது என நினைக்கும்,

    காதலுக்குள் தோற்பதுதான் காதலுக்க்கான வெற்றி, நீ நீயாக இரு என சொல்லி விட்டு எனக்கேற்ப மாறு என எதிர்பார்த்தால் காதல் தோற்றும் விடும் சார்.

    காதலின் தோல்வி இன்ன்னொரு காதலின் வெற்றி பெறும் . ஆனால் நட்பின் தோல்விக்கு வெற்றி இல்லை.

    நானும்காதலித்துபார்க்கின்றேன்,அனைத்தினையும் காதலிக்கின்றேன்,ஆனாலும் மனிதர்களை காதலிக்காமல் நேசிக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  7. அருமையான விவாதம்! நட்பே சிறக்கிறது என்பது எண்ணம்! நன்றி!

    பதிலளிநீக்கு
  8. ஆண் பெண் நட்பை நல்ல மெல்லிய நூலால் கட்டும் போது இயல்பாய் இருவருக்குமிடையிலான ஏதோ ஒன்று அங்கே இழையோடுவதும்அந்த இழையே நட்பின் வெற்றிக்கு பின் இருபப்தும் நிஜம் என்பதை உணர்ந்தவர் புரிந்து இருப்பார்கள்..// ஆம்! உண்மையே!

    லவ் என்பது அன்கண்டிஷனல் லவ்!எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத ஒன்றாக இருந்தால் மட்டுமே அது லவ். இல்லை என்றால் அது ஒருவட்டத்திற்குள் சிக்கிவிடும் அபாயம் உண்டு.

    நட்புக்கு எல்லையே இல்லை! ஆம்! மட்டுமல்ல காதலுக்கும் எல்லை இல்லை என்று சொல்லலாமே! அது உண்மையான காதலாக இருந்தால் விரிவாகப் பரந்து வாழ்நாள் முழுவதும் பயணித்திட முடியும் அல்லவா. அதனைத் தவறான கோணத்தில் பார்க்காமல் இருந்தால். ஏனென்றால் காதலும் காமம் கடந்து அன்பில் பயணித்தால்.

    ஆனால், அன்பு, காதல் நேசம் எல்லாமே இப்போது தவறான அர்த்தத்திற்குள் சிக்கிக் கொண்டு மூச்சுச் திணறுகின்றன. நாம் தமிழைக் காதலிக்கின்றோம், நேசிக்கின்றோம் என்று சொல்வதில்லையா. அது போல ஒரு நண்பனை, நண்பியை ஆங்கிலத்தில் லவ் என்று சொல்லுவது போல தமிழில் சொல்ல முடியவில்லை. அப்படிப்பட்ட தவறான அர்த்தம் வந்துவிட்டது.

    உங்கள் கருத்து அருமை! அருமை! கவிதை வெகு அருமை! ரசித்தோம் பதிவை

    பதிலளிநீக்கு
  9. கவிதை மிகவும் அருமை விளக்கங்களுடன் தொடர்ந்து எழுத எமது வாழ்த்துகளும்....

    பதிலளிநீக்கு
  10. நல்ல அலசல் இதைப் பற்றி பேச நிறைய இருக்கிறது. கூடிய விரைவில் நானும் ஒரு பதிவிடுகிறேன். நன்றி!

    பதிலளிநீக்கு
  11. இதற்கு விளக்கம் என்ன சொல்வது என தெரியாமல் ஏதோ தோணீயதை சொல்லி வைக்கிறேன். சரியா தவறானு சொல்லிடுங்க.ஆணுக்கு ஆணும் பெண்ணுக்கு பெண்ணும் நட்பு கொள்வதை ஏன் நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை?பேசுவதில்லை?அங்கே ஈர்ப்பு இருக்காது. ஆண்,பெண் நட்பில் ஈர்ப்பு வந்து விடுகிறது. பேச்சில், செயலில் ஏதோ ஒன்று இவன், இவள் நம் வாழ்க்கை முழுதும் இருந்தால் சந்தோசமாக இருக்கலாம் என்ற ஆசை துளிர் விடுகிறது.

    எல்லாக் காதலும் முதலில் நட்பில் ஆரம்பித்து காதலில் தான் முடியுது. மனசு தடம் புரண்டால் காதல்...தடம் புரளாமல் நின்றால் நட்பு.

    நட்பில் நல்லவர்களாய் இருப்பவர்கள் காதலில் அதை கடைபிடிக்க முடியாமல் போய் விடுகிறது.

    எது எப்படியோ நட்பும் , காதலும் அளவோடு இருந்தால் அமிர்தம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆணுக்கு ஆணும், பெண்ணுக்கு பெண்ணும் நட்பு கொள்வதை ஏன் நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை?பேசுவதில்லை? அங்கே ஈர்ப்பு இருக்காது. ஆண்,பெண் நட்பில் ஈர்ப்பு வந்து விடுகிறது. பேச்சில், செயலில் ஏதோ ஒன்று இவன், இவள் நம் வாழ்க்கை முழுதும் இருந்தால் சந்தோசமாக இருக்கலாம் என்ற ஆசை துளிர் விடுகிறது.

      எல்லாக் காதலும் முதலில் நட்பில் ஆரம்பித்து காதலில் தான் முடியுது. மனசு தடம் புரண்டால் காதல்... தடம் புரளாமல் நின்றால் நட்பு. //

      தங்களின் இந்தக்கருத்துக்கள் எனக்கு மிகவும் பிடித்துள்ளன. நீங்கள் சொல்லியுள்ள இவை எல்லாமே 100% உண்மையும்கூட. :) பாராட்டுகள்.

      நீக்கு
  12. அப்போ இது சேனையில் எழுதியதல்ல ஆல்ப்ஸ்தென்றிலிருந்து காப்பி பண்ணிப்போட்டுள்ளீர்கள் அப்படிப்போட்டாலும் காட்டிக்கொடுத்து விட்டீர்கள் இது ஆல்ப்ஸ் தென்றில் எழுதியது என்று அடுத்த தடவை கவனமாக இருங்கள் சேனைக்கும் எங்களுக்கும் நீங்கள் புதியவர் அல்ல என்பதை மறக்க வேண்டாம

    தரணியில் தோல்விகள் துவண்டேனே தோழியே என்றதும்
    தொட்டதும் தொல்லை தான் என்று நீ உரைத்ததும்
    தாங்கிடும் மனமின்றி தவிப்பவள் தாயடா!
    தோல்வியில் துவண்டிட்டால் தோள் தந்து
    தாங்கிடும உன்னவள் உனக்கென்றும் சேயடா!
    தோள் தர துணை நிற்கும் தோழியும் அவளடா!
    காதலை மிஞ்சிய பாசமும் நேசமும்
    யுகத்திலே உண்டென புரிந்தவள் பெண்ணடா!


    அருமையாக புரிதல் ஆல்ப்ஸ் தென்றலில் பதிவாகும் உங்கள் எழுத்துக்கள் புதியவைகள் அல்ல என்பதையும், அதில் இருக்கும் சோகங்கள் சோர்வுகள் இன்றைய உங்கள் நிலையை சொல்லும் சொந்தக்கதையல்ல என்பதையும். நாங்கள் அறிகிறோம் இருந்தாலும் இன்று நீங்கள் வரைந்துள்ளவைகள் ஒன்றும் அப்படியாக எண்ணத் தோன்ற வில்லை


    வரமென சொன்னவன் தூரமாய் செல்கின்றான்
    வீம்புடன் வார்த்தையை வீசித்தான் கொல்கின்றான்
    பெண்மையோ மௌனமாய் கண்ணீரை வடிக்குதே!
    மென்மையாம் மனதினில் உருகிடும் உணர்விலே
    ஜெயிப்பவன் என்றுமே நீயாய்த்தானிருக்கணும்
    வானமே எல்லையாய் அனைத்தையும் ஜெயிக்கணும்!
    வஞ்சியின் வாஞ்சையில் வஞ்சனையில்லையே!
    நெஞ்சத்தின் வேதனை புரிந்திடும் நாளேது?



    இந்த வரிகள் அனைத்தும் என்னை அதிகமாக சிந்திக்க வைக்கிறது அனைத்தையும் புரிந்திடும் நாழும் வரும்
    வஞ்சியின் இன்றய தூரமும் அண்மித்தும் போகும்
    கவலை வேண்டாம் எல்லாம் காலத்தின் கோலம் அதற்கேற்றாப்போல் நாமும் வாழ்வோம்
    நன்றியுடன் நண்பன்

    பதிலளிநீக்கு
  13. நட்பும் காதலும் இரண்டும் அன்பு என்ற ஒன்றுதானே......

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!