16 பிப்ரவரி 2016

உணர்வும், உயிர்ப்பும் தமக்கு வந்தால் மட்டுமே வலிக்குமா?


நான், என் சமுகம்,என் குடும்பம், நம்சமுகம் என எதையும்  நமக்குள் மட்டும்வைத்து எடை போடும் மனிதர்களாய் நாம் இருப்பதேன்?
ஒருவர் தனக்கு ஒரு பிரச்சனை என வரும் போது அவருக்கு தானே அது பிரச்சனை என ஏனோ தானோ என யாரோவாய் வேடிக்கை பார்க்கும் நாம் நாளை நமக்கும் அப்பிரச்சனை வரும் என ஏன் உணர்வதில்லை?
உங்கள் மேல் பாசம் காட்டுவோர், நல்ல நட்பென உங்களை மதிப்போர் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் எனக்கது தேவையில்லை என சொல்லி நொந்திருக்கும் மனதை நோகடிக்காமல் ஆறுதலாய் நான்கு வார்த்தை "என்ன" என்றாவது கேட்க முடியாமல் போகும் நிலை ஏன்? 
உங்களுக்கு தேவையின்றி தோன்றுவது அவர்களுக்கு உயிர் பிரச்சனையாகவும் இருக்கலாம், கௌரவப்பிரச்சனையாகவும் இருக்கலாம்.
இந்த சூழலில் தேவை, தேவையில்ல என்பதல்ல,நட்பின் உண்மை தான் இங்கே கேள்விக்குறியாகின்றது என்பதை புரிந்திடாமல் இருப்பதேன்!
மகாபாரதப்போரில் துரியோதனன் செய்தது தவறென தெரிந்தும், தன் உயிரே போகும் என அறிந்தும் தன் தாயின் வேண்டுதலை மீறியும், நட்புக்கு ஆபத்து எனும் போது தன் சகோதர்களை எதிர்த்து உயிர் துறந்தானாம்!
இக்காலத்தில் கர்ணனைப்போல் செஞ்சோற்றுக்கடனுக்காக உயிர் துறக்க கூட வேண்டாம், நான்கு வார்த்தை ஆறுதலாய் பேசலாமே?
யாருக்கு என்ன பிரச்சினை எப்போது என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.இன்று உங்கள் நண்பர் காணும் பிரச்சனைக்குரிய சூழல் உங்களுக்கும் வரலாம் என்பதை மறந்து விடாதீர்கள்?
பிரச்சனை நேரம் உதவி செய்யா விட்டாலும், புரிந்து கொள்ளாமல் செல்வது மரண வலிக்கு நிகரானது.
உலகத்திலிருந்து எனக்கு என வட்டம் இட்டு நான் என் குடும்பம் என ஒதுங்கி இருந்த காலத்தில் உலகமே அழகாய், அனைவரும் நல்லவராய் தோன்றியதுண்டு, ஒதுங்கியது போதும் என உலகை புரிந்திட புறப்பட்ட பின் இது வரை கண்டதெல்லாம் கனவென தோன்றுகின்றது! 
உலகமும் அதில் காணும் பாசங்களும் வேசமாய்,விசமாய் தோன்றுகின்றது!
அனைத்துமே நல்லதென என்னை நாமே ஏமாற்றுகின்றேனோ? இதில் ஏமாளி நானா இல்லை என்ன ஏமாற்றுவதாக நினைக்கும் என்னை சார்த்தோரா?
நிச்சயமாய் நான் ஏமாளியாய் இருக்க மாட்டேன் என மட்டும் உறுதி பட சொல்வேன்,நன்மையையும், நல்லதையுமன்றி எவருக்கும் சிறு தீங்கு கூட நினைத்திடா என் உள்ளத்து அன்பில் ஆழத்தினை புரிந்திடாமல் என் இரக்கங்களை இறுக்கமாக்கி செல்வோர் தான் ஏமாளிகள்!
மனிதர்கள் தமக்கு ஏற்ப அனைத்தையும் வளைப்பது ஏன்?
நித்தம் போனால் முற்றம் சலிக்கும் என சொல்வார்கள், அன்பு அத்தனை சீக்கிரம் சலித்து போய் விடுமா என்பது எனக்கு புரியவே இல்லை!
பழகப்பழக பாலும் புளிக்கும் என்பது போல் சக மனிதர் மேல் நாம் காட்டும் நேசமும் புளித்து போகுமா!?
அப்படியெனில் இன்று வரை எனக்குள் பல கசப்புக்களை காலம் விதைத்தும் கூட எனக்குள்ளான நேசிப்புக்கள் இன்னும் உயிர்ப்போடிருப்பதெப்படி?
அன்னை,தந்தை முதல் நான் கண்ட அனைவருமே என் நேசிப்பை தூசீயாய் துச்சமாக்கியும் கூட என்னால் எவரையும் வெறுத்திட முடியாததேன்? இன்னும் இன்னும் எப்படி நேசிக்க முடிகின்றது?
மனசுக்கு பிடிக்கும் போது இலகுவாய் கிடைக்கும் நேரமும், காலமும் மனசுக்கு பிடிக்காமல் போகும் போது கடினமாகி போகும் மர்மங்கள் என்ன?
சின்னக்குழந்தை கையில் கிடைத்திடும் பொம்மை போல் அன்பும், நட்பும் கூட இவ்வுலகில் நிகரே இல்லை என இறுமாப்பாய் பொக்கிஷமாய் உணர்ந்த போதினில் வராத சூழல்கள்,காணாமல் போகும் காரண காரியங்கள் சாக்குப்போக்குகள் அசட்டை செய்ய வேண்டும் என தோன்றியபின் இலகுவாய் வருவதேன்?
காலம் அனைத்துக்கும் மருந்தே! ஆனாலும் காலம் விட்டு செல்லும் வடுக்கள் மட்டும் எக்காலத்திலும் மறையாததாய்....................!
சூழ்நிலை சரியில்லை என எதன் மீதோ சாக்குப்போக்குகள் சொல்லி தப்பிப்பதை விட பிடிக்காவிட்டால் பிடிக்க வில்லை என சொல்லி செல்வதற்கென்ன?
தேவை எனில் நேரத்தையும் தம் வசப்படுத்த தெரிந்தோர் சொல்லும் சூழ்நிலை சரியில்லை எனும் காரணம் எனக்கு பிடிப்பதே இல்லை.
அதன் பின் அன்பும் கேள்விக்குறியாகி வெறுமை மட்டுமே எஞ்சி நிற்கின்றது!
வேலியில் போகும் ஓணானை தூக்கி காதினுள் விடுவது என்பது இதைத்தானோ?
உடல் நிலை சரியில்லாமல் ஆபத்தான சூழலில் அனுமதிக்கப்ட்டிருப்பதாயும் வைத்தியத்துக்கு பல இலட்சங்களில் தேவை எனவும் அறிந்த நொடியில் நேரில் சந்திக்கா விட்டாலும் எழுத்தில் பேசிய சகோதரனை குறித்து பதறி ஏதேனும் எவர் மூலமேனும் உதவிட வேண்டுமென நினைத்ததற்கு கிடைத்த பரிசு மைண்ட் டியர் வோர்ட்ஸ்@  
உயிரைவிட கௌரவம் முக்கியமாம்!
நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் எழுத ஆரம்பித்து சமூதாயத்தில் சில தவறுகளை நான் சுட்டிய பொழுதினில் என் தனிப்பட்ட திறமைகள் விமர்சிக்கப்பட்ட போது நான் எனக்காக ஒரு வார்த்தையேனும் சொல்வார்கள் என மிக நம்பியோரின் அமைதி தந்தது இன்னொரு வாழ்க்கைக்குரிய பாடத்தினை என்பேன்! 
யாரென அறியாதோர் எனக்காக என் எழுத்தை வைத்து பேச,என்னை அறிந்ததாய் நான் நம்பியோர் .............? 
தேவையில்லாத பிரச்சனை என எப்படி மனதை உடைக்க முடிகின்றது?
ஈற்றில் ஒன்று மட்டும் எனக்குள் தெளிவாய்........!
இத்தனை வருடங்களானாலும் நான் உலகையும் அதில் வாழும் மனிதர்களையும் புரிந்து கொள்ளவே இல்லை!
இதை படித்து விட்டு இது யாருக்கு? எனக்கா? உனக்கா? அவருக்கா? அவளுக்கா? என கேட்காதீர்கள்!ஆராய்ந்திடாதீர்கள்!
மொத்தமாய் நான்கண்ட உலக அனுபவம் என்னுள் இப்பதிவை எழுதிட தூண்டியதே அன்றி எவர் மீதான தனிப்பட்ட விருப்பு வெறுப்பினாலும் இல்லை!
சில பல நேரங்களில் இப்படி நானா நீயா என அராயும் போது என்ன எழுதுவது எனவே குழப்பம் விளைகின்றது. எழுத்துகள் அனைத்தும் சொந்த அனுபவமாய் தான் இருக்க வேண்டும் என்பதும் இல்லையே! 
எவரையும் குற்றவாளியாய் சுட்டிட நான் தயாராய் இல்லை, நான் தான் எங்கோ எதிலோ எப்படியோ குற்றவாளியாய் ?
எனக்கு தான் எதை, எப்படி, என தெரிந்தெடுத்து நேசிக்க தெரியவில்லை போலும்!இந்த வலைப்பூவை நான் ஆரம்பிக்கும் போதே என்னுள் தோன்றும் அனைத்தையும் எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் பதிவாக்கி வேண்டும் எனும் முடிவெடுத்தே ஆரம்பித்தேன்!
என் வாழ்க்கை இன்னொருவருக்கேனும் பாடமாகட்டும்.!
இன்னும் எழுதுவேன்!

23 கருத்துகள்:

 1. எல்லாவற்றையும் சிந்திக்கமுடியாத சூழ்நிலைவிலங்காய் சிலர் இருப்பது யதார்த்தம்.வேதனைகளை சாதனையாக்குவதே நம்திறமை.கவலை வேண்டாம் இந்த வலையிலும் பலநல்ல உள்ளங்கள் இருக்கு சகோதரி!

  பதிலளிநீக்கு
 2. ஏ ஆர் ரஹ்மான் ஆஸ்கார் வாங்கும் போது சொன்னது நினைவு வருகிறது. Between love & hate, I chose love!!!!

  பதிலளிநீக்கு
 3. மன உலைச்சலை எழுத்தில் வடித்து இருக்கின்றீர்கள் இவை இப்படியே வடிந்து போக கடவது.....

  முதலில் நம்மைப் போலவே இந்த சமூகத்து மனிதர்கள் எல்லோருமே இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நம்முள் எழும் பொழுதுதான் நாம் ஏமாற்றத்தின் வாயிலில் நுழைகின்றோம்.

  இந்த உலகம் பெரியது மனித மனம் குறுகியது நாம் வளைந்து போக பழக வேண்டும் இதை முயற்சித்து வெற்றி காணும் தருவாயில் நமது வாழ்வு முற்றுப்பெற்று விடும் இதுதான் மனித வாழ்வு.

  இது பொதுநலம் மறந்த சுயநல உலகம்.

  இனியெனும் நன்மை நடக்கும் என்று நம்புவோமாக....

  பதிலளிநீக்கு
 4. மிகச் சரியாகப் புரிந்து கொள்ளும்படியாய்
  மிக மிக அற்புதமாகச் சொல்லிச் செல்கிறீர்கள்

  "உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயில்
  அது வாக்கினில் உண்டாம் "
  என்ற வரிகள் தங்கள் பதிவைப் படித்ததும்
  நினைவில் வந்து போகுது

  நினைப்பதை படிப்பவரும் அப்படியே... உணரும்படி
  சொல்லிச் செல்லும் திறன் எல்லோருக்கும்
  வாய்ப்பதில்லை

  உங்களுக்கு வாய்த்திருக்கிறது

  வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
 5. பெரும்பாலானவர்கள் இப்படித்தான் என்றே படுகிறது ,எதிர்பார்க்காமல் வாழ்ந்தால் ஏமாற்றம் இருக்காது :)

  பதிலளிநீக்கு
 6. இவற்றையெல்லாம் கடந்து விடுங்கள் நிஷா என்று ஒற்றை வரியில் சொன்னாலும் வலி இல்லா வாழ்வு என்பது இச்சமூகத்தில்...??!!

  பதிலளிநீக்கு
 7. எதிர்பார்ப்பில்லாமல் இருந்தால் இந்தச் சிரமங்களைக் குறைக்கலாம்! மனக்குமுறல்களைக் கொட்டி விட்டாலே பாதி பாரம் குறைந்து விடும்.

  பதிலளிநீக்கு
 8. நண்பர்கள் கில்லர்ஜி மற்றும் ஸ்ரீராம் கருத்தே என்னுடையதும்.

  பதிலளிநீக்கு
 9. உங்களின் மனக்குமுறலைக் கொட்டியிருக்கிறீர்கள் அக்கா...
  கொஞ்சம் ரிலாக்ஸாகவும் எழுதுங்கள்... இதே பாதையில் பயணிக்கும் போது வெறுப்பும் வேதனைகளும்தான் மிஞ்சும்...

  நம்மைப் போல் எல்லாரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது.... எதிர்பார்ப்பது இல்லாமல் இருந்தால் இந்த சிரமத்தைக் குறைக்க முடியும். நம் நட்புக்கள் நம்மோடு ஒத்துப் போகிறாகளா... அவர்கள் தவறு செய்கிறார்களா கண்டிப்போம்... அவர்களை திருத்துவோம்... மற்றபடி இதெல்லாம் நாம் தேடிச் சுமக்கும் வலிகள்...

  இதையெல்லாம் கடந்து எப்பவும் பார்க்கும் நிஷா அக்காவாக எழுதித் தள்ளுங்கள்...

  நன்றி.

  பதிலளிநீக்கு
 10. மிக அருமையான பதிவு. மனதில் பட்டதை உணர்ந்து மிக தெளிவாக சொல்லி சென்று இருக்கிறீர்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கும் எனது நன்றி!படத்துக்கும் கருத்துக்கும் நன்றி சார்!

   நீக்கு
 11. வணக்கம்
  மனதில் பூத்த கருத்தினை அழகாக பதிவில் சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 12. பிரச்சனை நேரம் உதவி செய்யா விட்டாலும், புரிந்து கொள்ளாமல் செல்வது மரண வலிக்கு நிகரானது.///
  உண்மைதான் உங்கள் பதிவு பலரை நினைவுக்கு அழைத்துவருகிறது..நெகிழ்வான பதிவு...ஆல்ப்ஸ் தென்றலுக்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆல்ப்ஸ் தென்றல் ஏன் இப்படிக் கொதிக்கிறது செல்வா? இன்னும் உலகத்த புரிஞ்சிக்காம இருக்கிறதாலயா?

   நீக்கு
  2. கற்றது கை அளவு,கல்லாதது உலகளவு,உலகத்தின் புரிதலும் கூட அப்படித்தான்,தினம் தினம் புதிய புரிதல்கள் எனும் போது நான் உலகத்தை புரிந்து கொள்ளாமல் தான் இருக்கின்றேன்!

   மீரா செல்வகுமார் சாருக்கும்,முத்து நிலவன் ஐயாவுக்கும் நன்றி!தொடர்ந்து வாருங்கள்!

   நீக்கு
 13. இதெல்லாம் நான் சிலரை கேட்க நினைத்தது..இதை முகநூலில் 2 வரி படித்ததுமே ஷேர் பண்ணிட்டேன்..

  பதிலளிநீக்கு
 14. பிரச்சனை நேரம் உதவி செய்யா விட்டாலும், புரிந்து கொள்ளாமல் செல்வது மரண வலிக்கு நிகரானது.// உண்மை உண்மை!

  மிகத் தெளிவாக எழுதியிருக்கின்றீர்கள் உங்கள் மன வேதனைகளை. மனதை நெகிழ வைத்தது என்றால் மிகையல்ல. இப்படித்தான் நாங்களும் சிக்கியதுண்டு. அனுபவப்பாடங்கள் உணர்த்தியது என்னவென்றால்.... எதிர்பாராமல் அன்பு செலுத்துவது. அப்போதுதான் நம் மனம் ஏமாற்றங்களைத் தாங்கிக் கொள்ளும். அவமானங்களைத் தாங்கிக் கொள்ளும். தாமரை இலை நீர் போல இருப்பதே நல்லது என்று தெரிந்தாலும் பாழும் மனம் அதைச் செய்ய மறுக்கின்றதே! உங்கள் சுமைகள் வலிகள் குறைந்து எழுந்து வாருங்கள் சகோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வலிகல் எதுவும் இல்லை, நான் எழுதுவதை வைத்து என் வாழ்க்கையில் வலிகள் என புரிந்திடாதீர்கள், இவ்வுலகில் என்னைப்போல் ஆசிர்வதிக்கப்ப்ட்டவர்கள் இல்லை எனும்படி எனக்குள் இறுமாப்பு உண்டு, ஹாஹா

   அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி!தொடர்ந்தும் கருத்திடுங்கள்!

   நீக்கு
 15. அருமையான அனுபவப் படைப்புத்தான்.. எழுதிய உணர்ச்சி வேகத்தில் வார்த்தைகள் இடறுவதையும் கவனிக்கணும் ல?
  ”மகாபாரதப்போரில் துரியோதனன் செய்தது தவறென தெரிந்தும், தன் உயிரே போகும் என அறிந்தும் தன் தாயின் வேண்டுதலை மீறியும், நட்புக்கு ஆபத்து எனும் போது தன் சகோதர்களை எதிர்த்து உயிர் துறந்தானாம்!” இவை கர்ணனைப் பற்றிய வரிகள் தானே? ஆனால் அப்படியான குறிப்பேதும் இ்ல்லையே ஏன்? உணர்ச்சிவசப்பட்டாலும், அதை அறிவு வயப்படுத்தி எழுதினால்தான் உலகிற்குப் பயன்படும். இது என் அனுபவம். என்றாலும் உங்களுக்கு அழகாக எழுத வருகிறது. தொடர்ந்து இன்னும் நிதானமாய் அழகாய் எழுதி வளர வாழ்த்துகள் மா.

  பதிலளிநீக்கு
 16. உங்கள் கருத்திடலுக்கு நன்றி ஐயா!

  உணர்ச்சி வசப்பட்ட எழுத்து என்பதை விட அந்த சூழலில் நான் உணர்ந்ததையும் பிரச்சனைவரும் நேரம் யாரோவாய் ஒதுங்கி நிற்பவர்களையும் உணர்ந்து எழுதினேன்!

  கர்ணணைக்குறித்து நட்புக்காகவும்,செஞ்சோற்றுக்கடன் தீர்க்கவும் தன் உயிரையே கொடுத்ததாகத்தான் நான் மகாபாரதம் அறிந்திருக்கின்றேன்,படித்திருக்கின்றேன்,விக்கிமீடியாவும் அப்படித்தான் தகவல்கள் தருகின்றது,

  எது சரியான தகவல் என எனக்கு தெரியாது ஐயா!

  பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!