10 பிப்ரவரி 2016

உங்களோடு ஒரு நிமிடம்.....!

கடந்து போன சில நாட்களாக எதையுமே எழுத முடியவில்லை,சிந்தனைகள் தெளிவின்றி குழப்பங்கள்  நிறைந்து  எங்கள்  ஹோட்டலிலும் அடுத்தடுத்த வாரங்களில் தொடர இருக்கும் ஆர்டருக்கான ஆயத்தங்கள் என உடல் மன சோர்வுகள் எதையும் எழுதும் சூழலை தரவில்லை.

அண்மையில் நான் கண்ட கேட்ட சில பல காரியங்கள் என் உள்ளத்தை தைப்பதனால்.... உலகத்தை திருத்த என்னால் இயலாது எனினும்  என் நட்புக்களை எனை  சார்ந்திருப்போரை அவர் செய்யும் தவறுகளை சட்டென சொல்லி  திருத்திடும் என் இயல்பால் நான் இழந்தவைகள் அனேகமாயினும் குற்றம் கண்டு குமுறாமல் இருக்க முடியவில்லை!

இன்றைய உலகில் நான் அடிக்கடி கேட்கும் ஒரு செய்தியாய் ஆகிப்போன பாலியல் கொடுமைகள் குறித்த படங்கள்  பகிர்வுகள் ஆகிப்போனது,

ஆறுமாதக்குழந்தை தொடக்கம் எண்பது வயதுப்பாட்டிவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுவதாக அறிந்திடும் போது நம் வீட்டு பெண் குழந்தைகள் வெளியில் சென்றால் வீட்டுக்குள் திரும்பி வரும் வரை மனம் திக் திக்கென திக்குகின்றது!

ஆனாலும் யாருக்கோ நடந்தது என அறியும் போது அதன் வலி உணராது, சம்பந்தப்பட்டோர் மனம் மட்டுமல்ல அவர் உறவுகள் மனம் எத்தனை துயருறும் என உணரக்கூட செய்யாமல் பத்தோடு பதினொன்றாய் நினைத்து உச் கொட்டி விட்டு சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணை புகைப்படங்கள் எடுத்து விதவிதமாய் ஏதோ மாடல்   காட்டுவது போல் இதனால் இப்படி அப்படி என பகிர்கின்றோம்.

தவறுகளை தட்டிக்கேட்பதாக சொல்லி தவறுகளுக்கு துணை போகின்றோம் எனபதோடு  தவறுகள் செய்ய நாம் தூண்டுதலும் தருகின்றோம் என்பதை அறியாதோராய் இருக்கின்றோமா?

குற்றங்கள் என்பது நேரடியாக குற்றம் செய்வதல்ல,,, இப்படியெல்லாம் குற்றம் செய்யலாம் என  படம் போட்டு காட்டி  ஒன்றுமறியாதவனையும் இப்படி செய்து பார்க்கலாமா என  தூண்டுதல் தருவதும்  தான் பெரிய குற்றம்,

அம்மா செய்த தப்புக்கு அவரை தண்டிக்க படிக்கும் பெண்ணை பழிவாங்குவதும், பெண் என்றாலே அவள் ஆடைகளை களைந்து  பார்க்கும் வக்கிர மனமும் உருவாக  நீங்களிடும் புகைப்படங்களும், கூட வழி காட்டியாய் இருக்கின்றது என புரிந்திடாமலா இருக்கின்றீர்கள்?

பாலியல் வக்கிரம் பிடித்த கயவர்கள் கூடி கொலை செய்ததை படமெடுத்து பரிதாபம் தேடும் வக்கிர மனம் எங்கிருந்து உருவாகியது?

ஆபத்தில் இருப்பவரை காப்பாற்றாமல் கையில் செல்போன் இருக்கும் மமதையில்  அணுவணுவாய் சாவதை வீடியோப்பதிவாய் எடுத்து வெளியிடுபவர்களுக்கு என்ன தண்டனை தரலாம்?

முதல் தண்டனை குற்றவாளிகளாய் இவர்களை   தண்டிக்க வேண்டும் எனும் சட்டம்வராதோ?

உலகத்தை திருத்த என்னால் இயலாது, ஆனால் நான் சார்ந்திருக்கும் சமுகத்தின் தவறுகளை திருத்த என்னால் இயலும் தானே?

அவ்வாறு இடும் புகைப்படங்களை யார் எடுத்தார்? எவர் எடுத்தார் என்பது எனக்குரிய ஆராய்ச்சியாய் இல்லை?  நான் என்ன செய்கின்றேன், எப்படி நடக்கின்றேன், இந்த சமூகத்துக்கு என்னால் செய்யக்கூடியது என்ன என்பது மட்டுமே நம் கேள்வியாய் இருக்க வேண்டும்! அடுத்தவன் முகத்தில் இருக்கும் அசிங்கத்தை துடைக்க முன் நம் முதுகில் இருக்கும்  தூசியைத் துடைப்போம்!

பேஸுபுக்கில் இதை குறித்த பகிர்வொன்றில் என் கருத்தினை இட்டேன், அக்கருத்தினை இங்கே இடுவது இதை படித்திடும் ஒரிருவரேனும்  தம் தவறுகளை உணர்ந்து அவ்வாறு செய்வோரையும் தட்டி திருத்திட மாட்டார்களோ எனும் நப்பாசையில்  என் கண் பார்வையில்  ஏன் எப்படி எதனால் என அக்குவேறு ஆணிவேறாய் விபரித்து இடும் படங்கள், பதிவுகள்கண்டால் கண்டிக்கின்றேன்,படங்களை நீக்கும் வரை கடுமையாக என் எதிர்ப்பை பதிவாக்குகின்றேன்!

பாலியல் வன்முறைகள் எங்கேயோ எப்போதோ ஏன் இப்போது தான் நடந்தாலும் பாதிக்கப்பட்டவர் புகைப்படம் இட்டு பதிவிடல் சரியானதல்ல என்பது என் கருத்து.

நம் மன ஆதங்கம் வெளிப்பட இன்னொருவர் அந்தரங்கம் வெளியரங்கமாகுவது மட்டுமல்ல இதைபோல் செய்யலாம் எனும் விதையையும் இம்மாதிரி புகைப்படங்கள் விதைத்து செல்கின்றன!

இதே நிலை நம் வீட்டு பெண்களுக்கு நடந்தால் முகம் தெரியாவிட்டாலும் புகைப்படங்கள் எடுக்க, வெளியிட அனுமதிப்போமா? வக்கிரத்திலும் மிகக்கொடூர வக்கிரம் பரிதாபப்படுகின்றோம், மனம் வருந்துகின்றோம் என சொல்லி அவர்கள் புகைப்படம் வெளியிடுவது!

இயலுமானவரை உங்கள் எதிர்ப்புக்களை பதிவுகளில் மட்டும் வெளியிடுங்கள் புகைப்படங்களை தவிருங்கள். இவ்விடயத்தில் மேல் நாட்டாரிடம் நம்மவர்கள் கற்ற வேண்டியதும், புரிய வேண்டியதும் அனேகம் தான்.

ஒரு கொலை நடந்தால்,பாலியல் கொடூரம் நடந்தால் அதை ஆதி முதல் அந்தம் வரை ஆராய்ந்து ஏன்,ஏப்படி, எதற்கு என வரி வரியாய் எழுதி இப்படி கூட செய்யலாமே என ஆர்வத்தினை உருவாக்கி மென் மேலும் பல குற்றங்கள் செய்ய ஊக்குவிக்கின்றோம் என அறியாமலா இருக்கின்றோம்.

வளர்ந்த நாடுகளில் அடுத்த வீட்டில் கொலை நடந்தாலும் ஏன் எப்படி எதுக்கு என ஆராய்ந்து தண்டனை கொடுப்பார்களே தவிர மக்களை குழப்புவதில்லை.அதனால் வரும் பாராட்டுகள்,புகழ்ச்சிகளுக்கு மயங்குவதில்லை!மீடியாக்கள் தம் பொறுப்புணர்ந்தே நடந்து கொள்கின்றார்கள். 

ஆனால் நம் நாட்டிலோ? நாட்டை  விடுங்கள்! நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள்? உங்கள் செயற்பாடுகள் எப்படி இருக்கின்றன என உங்களை நீங்களே நிதானித்து அறியுங்கள்!

கற்பழிப்புக்கள் நிருபிக்கப்பட்டால் விசாரணைகள் என இழுத்தடிக்காமல் உடனடி தண்டனைகள் கிடைக்க வேண்டும் என உங்கள் எதிர்ப்புக்களை பதிவாக்குங்கள்”. எதிர்க்கின்றோம் எனும் பெயரில் சம்பந்தப்பட்ட பெண்ணின் புகைப்படங்களை விதவிதமாய் இட்டு உயிரோடிருப்போரை வதைக்காதீர்கள்!

செய்தவதை நோக்கி உங்கள் விரலகளை நீட்டமுன் உங்களை நோக்கி சாட்டும் விரல்கள் சொல்வதை மனச்சாட்சியுடன் அணுகுங்கள்.

நாளை இதே நிலை உங்களுக்கும் உங்கள் குடும்பத்திலிருப்போருக்கும் வரலாம்!

நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? 

11 கருத்துகள்:

  1. உங்கள் கருத்துகள் அனைவராலும் 100% ஒத்துக் கொள்ளக்கூடியதுதான்.

    பதிலளிநீக்கு
  2. நிஐம் இதுதான் என்பதை நினைக்க மனம் கனக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன் நிஷா

    பதிலளிநீக்கு
  4. இதுவா நியாயம் கேட்கும் லட்சணம் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படின்னால் எப்படி கேட்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள் பகவான் ஜீ சார்?

      நீக்கு
  5. உங்கள் கருத்தை நூற்றுக்கு நூறு ஆதரிக்கின்றோம் ஏற்றுக் கொள்கின்றோம் சகோ...

    பதிலளிநீக்கு
  6. இன்றைய சமூகத்தின் மிக மோசமான
    இந்த நிகழ்வுகள் குறித்து தங்கள்
    ஆதங்கமும் சொல்லியுள்ள தீர்வும்
    நூற்றுக்கு நூறு சரியானதே
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. நீங்க சொல்றது சரி அக்கா..

    பதிலளிநீக்கு
  8. ஆபத்தில் இருப்பவரை காப்பாற்றாமல் கையில் செல்போன் இருக்கும் மமதையில் அணுவணுவாய் சாவதை வீடியோப்பதிவாய் எடுத்து வெளியிடுபவர்களுக்கு என்ன தண்டனை தரலாம்?

    உண்மை இந்த நிலைகளை நான் பலமுறை கண்டு கோபப்பட்டு இருக்கிறேன் அருமையான கருத்தை சொன்னீர்கள்
    ஒருநொடி இது நமது குடும்பத்தில் நடந்தால் என்று நினைத்தால் போதும் எவனும் செய்ய மாட்டான்

    பதிலளிநீக்கு
  9. நல்ல கட்டுரிய அக்கா...
    ஆனால் இன்று நாம் ஒருவனுக்கு ஆபத்து என்றாலோ... ரோட்டில் கொலை கொள்ளை நடந்தாலோ தடுக்க நினைப்பதில்லை... மாறாக ஆளாளுக்கு செல்லைப் பிடித்துக் கொண்டு நின்று விடுகிறார்கள். எவ்வளவு கேவலமான செயல் இது... மனிதாபிமானமற்ற செயல்.. இதைப் பார்க்கும் போது எனக்கு தூக்கிப் போட்டு மிதிக்கணும் போல இருக்கும்... களவாணிப் பயலுக... திருந்தணும்... நாம சொல்லித் திருந்துவாரில்லை இவர்கள்... அவர்களே திருந்தணும்.

    பதிலளிநீக்கு
  10. இன்று எதுக்கெடுத்தாலும் செல்போனில் படம் பிடிப்பது பேஷன்...
    இதனால் உதவும் சூழ்நிலை இருந்தும், அதை யாரும் நினைப்பது இல்லை...

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!