02 பிப்ரவரி 2016

சீச்ச்ச்ச்சீ "தனம்"

                         
மண்ணென்பர், பொன்னென்பர்,தரணியாளும் பெண்ணென்பர் 
தாய்க்கு நிகர் நீயென்பர், தரத்திலென்றும் தங்கமென்பர் 
பொன்னுடனே பெண் வந்தால் தேவதையே நீ என்பர்!
தாரமாய் அவளானால் தரித்திரமே யெனவும் வதைப்பர்!

தட்டிப்பார்த்து  தரமறியும் மந்தைக்கும் நிகராக்குவர்
சந்தையிலே விலை பேசும் சங்கதியும் இவளென்பர் 
சகலத்திலும் நிகராகினும் சங்கடமும் அதுவென்பர். 
விலையேறா பண்டமென வீட்டினுள்ளே பதுக்கி வைப்பர்!

சன்னிதியில் நிற்க வைத்து சந்தனமும்  பூசிடுவர்,
சர்வமும் நீயெனவே தாழ் பணிந்தே  சரணடைவர் 
தங்கத்தின் நிறைக்கேற்ப   தகுதியுயர்ந்தாலும் 
தலை குனிவதேயுந்தன்  தலைச்சிகரம் தானென்பர்!

வானுயர பறந்தாலும் தானுயரா  பெண்ணிவளாய் 
நாலு சுவருக்குள்ளே அடங்கித் துவண்டு போனாலும் 
நாணம், மடம், அச்சமெல்லாம்  நாய்க்கு நிகராக்கிடுவர்
இலட்சங்களின் முன்னே இலட்சியங்கள் தூசியென்பர், 

காதல் எனும் வேஷமிட்டு கன்னி மனம் கவர்ந்திட்டாலும் 
காளையவன்  கடிவாளம் காலம் காலமாய் தொடர
பொன்னும் பொருளுமிலாரெல்லாம் விழி வழியே 
வழிந்தோடும் கண்ணீருடன் வழியோரம் ஒதுங்கி நிற்பர் 

சாஸ்திரங்கள் கற்றென்ன, சாதனைகள் செய்தென்ன 
வானுயப்பறந்தென்ன,வாக்குரிமை பெற்றென்ன
சீதனக்கொடுமை யெனும் மூடக்கட்டுக்கள் கொண்டே
அடிமையாக்கிட முயல்பவர் பலரிங்குண்டாமே!

சீர் கொண்டு வா என்றால்  சிரம் தாழ்த்தி கரம் குவிக்காமல் 
நேர் கொண்ட பார்வையும், நிமிர்ந்த நன்னடையும் அஞ்சா 
நெஞ்சுரம் அடங்கிடும் ஆணவமே யுந்தன் சீரென்றுரைக்கும் 
நாளென்றோ யன்றே  நன்னாளென்று ணர்வதெப்போ பெண்ணே!

இலங்கையின் நிஜ நிலவரம் பட்டியலில் !


படங்கள்  இணையத்தேடலில் கிடைத்தது 
நன்றி

27 கருத்துகள்:

  1. உண்மை நிலவரம் என்னவோ இப்பொழுதெல்லாம் மாப்பிள்ளைகளுக்குப் பெண் கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கிறது. ஆனாலும் கவிதை பிரமாதம். தம இன்னும் சப்மிட் செய்யப்படவில்லை போல. பிறகு வந்து வாக்களிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி என தான் மேம்போக்காக தெரிகின்றது,ஆனால் புள்ளி விபரப்படி மூன்று ஆண்களுக்கு ஒரு பெண் வீதம் பெண் பிறப்பு தடுக்கப்படுவதும், யுத்தங்களால் அழிக்கப்படுவதுமாய் இருக்கின்றது!

      எனக்கு இன்னும் தமிழ் மண ஒட்டுப்பட்டை சப்மிட் ஆகவில்லை ஐயா!

      நீக்கு
  2. இணையத்தில் இதற்கே பட்டில் கிடைக்கிறதா
    சும்மா இருப்பவருக்கே ரூ 5இலட்சமா....?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெல்லாம் கிடைக்கும் ஐயா, இதோ இப்போது கூட எனக்கு தெரிந்த தம்பிக்கு கல்யாணம்,வீடு வளவும், நகையுடன் பெண் மாப்பிள்ளை பெயரிலும், பத்து இலட்சம் பணம் மாப்பிள்ளை தாயாரிடமும் கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம்,

      நீக்கு
  3. பதில்கள்
    1. பெண்கள் தான் இதில் முடிவெடுக்க வேண்டியவர்கள் கிரேஸ்!

      நீக்கு
  4. காதல் எனும் வேஷமிட்டு,,,,,,,

    அருமை அருமை அழகிய ஆழமான வரிகள்

    தொடர்கிறேன்..

    பதிலளிநீக்கு
  5. அருமையான வரிகள் சகோ. இப்போதெல்லாம் பையன்களுக்குப் பெண் கிடைப்பது அரிதாகிவிட்டது சகோ. தமிழ்நாட்டில். கேரளத்தில் கொஞ்சம் பரவாயில்லை எனலாம்.

    கீதா: பெண்களின் எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது. பையனின் குணம் பார்ப்பதைவிட, பையன் அமெரிக்கா செல்வானா? வீடு, கார் உள்ளதா என்று கேட்கின்றார்கள். எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் வீட்டில் பையன்கள் வயது கூடிக் கொண்டே போகின்றது 35 வயதாகிவிட்டது இன்னும் கல்யாணம் அமையவில்லை. இவர்கள் சென்னையில்தான் வாசம். நன்றாகத்தான் படித்திருக்கின்றார்கள். நல்ல வேலைதான் ஆனால் ஐடி நிறுவனத்தில் வேலை இல்லை நல்ல பெரிய கம்பெனியில்தான் வேலை இருந்தாலும்....நிலைமை அப்படியாகிப் போனது நிஷா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் நகரப்பெண்களை வைத்து முடிவெடுக்கின்றோம்மா, ஆனாலும் கிராமங்களில் இந்த சீதனக்கொடுமை இருக்கத்தான் செய்கின்றது, படித்து டாக்டரானாலும் இவ்வளவு சீதனம் என பேசும் நிலை தொடரத்தான் செய்கின்றது, ஏன் புலம் பெயர் தேசங்களில் நகை வேண்டாம், அதற்குப்பதில் பணம் கொடுங்கள் என தாய் தகப்பனிடம் பெண்களே கேட்டு வாங்கி கொள்ளும் நிலையும் உண்டு.

      நீக்கு
    2. நீங்கள் சொல்பவர்கள் தமக்குட்பட்டு பெண்களை தேடாமல் தம்மை விட உயர்ந்தோராய் தேடினால் அப்படியும் ஆகும் அல்லவா?

      நீக்கு
  6. //பொன்னும் பொருளுமிலாரெல்லாம் விழி வழியே
    வழிந்தோடும் கண்ணீருடன் வழியோரம் ஒதுங்கி நிற்பர்//

    வேதனையான உண்மையான வரிகள்
    பட்டியலைப் படித்து பகீர் என்றது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை விடவும் பட்டியல் உண்டு சார், எனக்கு நிஜம் தெரியும்,ஆனால் கௌரவம் கருதி மூடி மறைப்பார்கள். பின்னூட்டத்துக்கு நன்றி!

      நீக்கு
  7. நிலைமையை சுட்டிக்காட்டிய கவிதை!

    பதிலளிநீக்கு
  8. அடக்கடவுளே பட்டியல் பார்த்து திகைச்சி போய்ட்டேன்.நான் இங்க தான் இப்படினு நினைச்சேன். இலங்கையிலுமா??
    கவிதை அருமை அக்கா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழர்கள் வாழுமிடமெல்லாம் உண்டம்மா தாயே! நம் தமிழர்கள் வாழும் வரை சீதனமும் வெவ்வேறு பெயர்களில் வாழும்.

      நீக்கு
  9. அருமையான விடயங்கள் பற்றி நீங்கள் கடந்து வந்த பாதையில் எழுதி உள்ளீர்கள் அவைகள் மிகவும் சிறப்பு

    சீச்சீ சீதனம் பற்றி எழுதியது இன்னும் சிறப்பு நல்ல சமூக சிந்தனைகள் உங்கள் நடைமுறையில் மட்டுமில்லை உங்கள் ஒவ்வொரு எழுத்திலும் காண்கிறேன் பாராட்டுக்கள் தாயே இன்னுமின்னும் நிறைய எழுதி சமூக சிந்தனை மக்கள் மனதிலும் ஊட்ட வேண்டும்
    வாழ்க வளமுடன்
    நன்றியுடன் நண்பன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிப்பா!தொடர்ந்து உங்கள் கருத்துக்களை தாருங்கள்!

      நீக்கு
  10. ***இலங்கையின் நிஜ நிலவரம் பட்டியலில் !***

    இலங்கையிலுமா?!! நாசமாச்ப் போச்சு போங்க..

    ஆனா, நீங்கள் ஆம்பளைங்க பக்கமும் கவனிக்கணும்..அழகில்லா, பணமில்லா, வேலையில்லா மனதால் எண்ணத்தால் உயர்ந்த ஏழை ஆண்களை, பெண், மற்றும் பெண்ணைப் பெற்ற அம்மா அப்பாமார்கள் கண்டுக்கிறதில்லையாம் இல்ல?

    அது உண்மையாங்க, நிஷா?

    வரதட்சனை, கார் பங்களா, நகை எல்லாம் ஒரு பணக்கார, தகுதியான ஆம்மபளைக்குத்தான் கொடுப்பாங்களாம் இல்ல?

    பெண்விட்டார் பக்கமும் வடிகட்டிய சுயநலம்தான் தெரியுது. இதில் எதுக்கு நீலிக்கண்ணீர், ஒப்பாரியெல்லாம் நிஷா??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு பெண்ணோடு பொன்னும் ,இலவச இணைப்பாய் சமையல் காரி, வீட்டுக்காரி எனும் அழகுப்பதுமையும் தேவை எனும் போது விலை கொடுத்து வாங்கும் நாங்கள் அதாவது பெண்கள் நாங்கள் விலை பேசும் பொருள் அழகாய், அறிவாய் இருக்க வேண்டும் என எதிர்பார்க்க கூடாதோ?

      **பொருளோடு வாழ்வு உருவாகும் போது
      புகழ் பாடப் பலர் கூடுவார் - அந்தப்
      புகழ் போதையாலே எளியோரின் வாழ்வை
      மதியாமல் உரையாடுவார் - ஏழை
      விதியோடு விளையாடுவார் - அன்பை
      மலிவாக எடை போடுவார்****

      வருண் சார்! ஆணோ பெண்னோ தனக்கு வருபவன், வருபவள் ஜீரோவாய் இருந்தாலும் ஹீரோவாய் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது இயல்பு தானே? ஆனால் பணம் இருந்தால் அழகில் ஜீரோவாய் இருப்பவரும் ஹீரோவாய் போற்றப்படும் காலம் இது,

      **வளமான மங்கை பொருளோடு வந்தால்
      மனம் மாறி உறவாடுவார்
      கொஞ்சு் மொழி பேசி வலைவீசுவார் - தன்னை
      எளிதாக விலை பேசுவார்**

      வேலையில்லா ஆண்களையும் அவனை வேலியாக எண்ணி மணம் முடித்தோரும் உண்டு,
      பணம் இருப்பவர்கள் பணத்தோடு சேர்ந்தால் குணம் இருப்போர் குணத்தோடும் பணத்தோடும் சேர்வதும் உண்டு.

      நாமெல்லாம் இப்போது நகரத்தினையும் நகர வாழ்க்கையையும் வைத்து மட்டுமே சீதனம் குறித்து முடிவெடுக்கின்றோம்,

      இன்னும் பல கிராமங்களில் முடவனோ குருடனோ தன் மகளுக்கு ஒரு வாழ்க்கை கிடைக்க வேண்டும், அதற்கு பத்து பவுண் நகையேனும் வேண்டும் எனும் நிலை தான் நிலவுகின்றது. பெண்ணாய் பிறந்தவளை எவனிடமேனும் தள்ளி விட்டால் போதும் எனும் நிலையில் நல்லவனா கெட்டவனா என பார்க்காத சமூகம் இன்னும் உண்டு.

      இந்த சீதனப்பிரச்சனையால் படித்து ஆசிரியராய் பணி புரிந்தும் , நர்சாய் பணி புரிந்தும் விலை போகா மகளீராய் நாற்பது வயதும் கடந்து கன்னியராய் கண்ணீரில் காலம் கடப்போரையும் எனக்கு தெரியும்.

      ஏன் என்னிடமே இரண்டாம் தாரம், பிள்ளைகள் இருந்தாலும் பரவாயில்லை உனக்கு தெரிந்த பையன் இருந்தால் சொல்லம்மா என சொல்லியோரும் உண்டு.

      சொத்துக்கள் இருப்போர் அள்ளிக்கொடுக்கின்றார்கள் என சொல்லி இல்லாதோரை வதைப்பதும், உங்கள் பெண்ணுக்குதானே உங்க விருப்படி செய்யுங்கள் என சொல்லி திருமணசெலவு முதல் பெண் வீட்டார் தலை மேல் சுமத்துவதும் சரியா?

      இருக்கும் வீட்டை மகளுக்கு கொடுத்து விட்டு வாடகை வீடு தேடி மீதி பிள்ளைகளுடன் அலையும் தாயும் தகப்பனும் கூட உண்டு.

      முக்கியமான விடயம்,, இந்த சீதன விடயத்தில் இலங்கை,இந்திய தமிழ்ச்சமூகம் வேறுபடுகின்றது.

      இலங்கையில் பெண்களை மணமுடிக்க வீடு காணி, நகை, பணம் என பேசுவர்,மாப்பிள்ளை தான் பெண்ணுக்கு சீதனமாய் கொடுக்கும் வீட்டுக்கு இடம் பெயர்வார்-

      இந்திய தமிழ் சமூகத்தில் மாப்பிள்ளைக்கு தான் வீடு இருக்க வேண்டும்,பெண் மாப்பிள்ளை வீடு நோக்கி இடம் பெயர்வார்,

      இருப்பவர்கள் கொடுக்கின்றார்கள் என்பதற்காக இல்லாதோர் வடிப்பது நீலிக்கண்ணீர் ஆகுமோ!?

      பெண்ணை பெற்றாலே செலவு என்பதும் ஆண் பிறந்தால் வரவு என்பதும் காலங்காலமாய் தொடரும் ஒன்றெனும் போது அது எப்படி நீலிக்கண்ணீர் ஆகும்?

      நான் இதை இன்னொரு பதிவாக கூட எழுதலாம் வருண்!

      நீக்கு
  11. *****பெண்ணை பெற்றாலே செலவு என்பதும் ஆண் பிறந்தால் வரவு என்பதும் காலங்காலமாய் தொடரும் ஒன்றெனும் போது அது எப்படி நீலிக்கண்ணீர் ஆகும்?****

    நீங்க இன்னும் எந்தக் காலத்தில் இருக்கீங்க?!! கடந்த காலத்தை விட்டுவிட்டு நிகழ்காலத்துக்கு வாங்க!

    //கண்கள் தீட்டும் காதல் என்பது அது கண்ணில் நீரை வரவழைப்பது.பெண்கள் காட்டும் அன்பு என்பது நம்மைப் பித்தனாக்கி அலைய வைப்பது!!//

    /மயங்க வைத்த கண்ணியர்க்கு மணம் முடிக்க இதயமில்லை!?/

    /மலரே மலரே நீ யாரோ? வஞ்சனை செய்தவர்தான் யாரோ?
    உன்னை சூடி முடித்ததும் பெண்தானோ? பின் தூக்கி எறிந்ததும் அவள்தானோ??/

    இப்படி லட்சம் பாடல்கள் ஞாபகம் வருது.:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இந்தக்காலத்தில் தான் இருக்கின்றேனுங்க! அதுவும் இந்த தலைமுறை செய்யும் அத்தனையையும் கவனித்து கொண்டு தான் இருக்கின்றேன்,

      படித்து டாக்டரானாலும் இவ்வளவு சீதனம் என பேசும் நிலை தொடரத்தான் செய்கின்றது, ஏன் புலம் பெயர் தேசங்களில் நகை வேண்டாம், அதற்குப்பதில் பணம் கொடுங்கள் என தாய் தகப்பனிடம் பெண்களே கேட்டு வாங்கி கொள்ளும் நிலையும் உண்டு.

      அடுத்த மாதம் அதாவது மார்ச் பத்தாம் திகதி ஒரு வெடிங்க்,சீதனம் பத்து இலட்சம், வீடு வளவு, நகை, மற்றும் திருமண செலவு,மாப்பிள்ளை டிரெஸ்!

      ஆமாம் ஆண்கள் எல்லாருமே நிரம்ப நல்லவங்க, வல்லவங்க,விசுவாமித்திரருங்க பாருங்க! பெண்ணுங்க தான் அவங்களை மயக்கி அழ வைக்கின்றார்கள்!பெண்ணுங்க பின்னாடி சுத்தி கண்ணு, மணி, மூக்கு என கெஞ்சி கொஞ்சும் போது இதெல்லாம் நினைவுக்கு வராது போல!

      கேடபதற்கு ஆளில்லை எனில் என்ன வேண்டுமானாலும் சொல்லுவிங்களோ?



      நீக்கு
  12. நல்ல பகிர்வு அக்கா...
    இந்த சீதன விஷயத்தில் கேட்டு வாங்கிய காலம் எல்லாம் இப்ப எங்கபக்கமெல்லாம் குறைந்தாச்சு... ஆனாலும் என் பொண்ணுக்கு கொடுப்போம்ன்னு கார் வரைக்கும் கொடுக்கும் பெற்றோர்களை நிறையப் பார்க்க முடிகிறது.

    அது போக பசங்க கேட்கணுமின்னு இல்லை... பொண்ணுங்களே எனக்கு அது வேணும் இது வேணுமின்னு கேட்க ஆரம்பிச்சிடுறாங்க... தெரியுமா?

    இந்த சீதனம், நகை நட்டு, பணமெல்லாம் கேரளாவில் அதிகம்.
    தமிழகத்தில் பெரும்பாலும் குறைவுதான்... சில இடங்களைத் தவிர...

    எனக்கெல்லாம் நித்யாவுக்கு எவ்வளவு நகை போட்டாங்கன்னு கூட தெரியாது. எங்கப்பா எங்களில் யாருக்குமே இது வேணும் அது வேணுமின்னு எல்லாம் கேட்கலை.... இருந்தும் அவர்களாக செய்தவையே அதிகம்தான்.

    பதிலளிநீக்கு
  13. நல்ல கவிதை. இப்போதெல்லாம் வரதடசணை ரொம்பவே குறைந்து விட்டது. எல்லா பெற்றோர்களும் வாங்க மாட்டேன், குடுக்க மாட்டேன் என உறுதியாக இருந்தால் நல்லது. நம் இஷ்டம் பொண்ணுக்கு போடுவது. அதே போல பிள்ளைய பெற்றவ்ர்களும் இதே போல நினைத்தால் வரதட்சணை கொடுமைக்கு வேலை ஏது.

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!