09 ஜனவரி 2016

பயணங்கள் முடிவதில்லை_ தொடர் பதிவு

போவோமா ஊர்க்கோலம்  பூலோகம் எங்கெங்கும்


பயணங்கள் முடிவதில்லை எனும் தலைப்பில்   மகிழ் நிறை -மைதிலி அவர்கள் ஆரம்பித்து வைத்திருக்கும் பதிவைத்தொடர்ந்து  தேன்மதுரத்தமிழ்- கிரேஸ்  பயணத்தினை தொடர  என்னை அழைத்திருக்கின்றார்!

பத்து முத்தான கேள்விகளோடு பத்துக்குள் எம் பதிலைகளையும்  தர கிடைத்த வாய்ப்பைத்தந்தமைக்காக இருவருக்கும் நன்றி!. பத்துக்கேள்விகளுக்கும் விரிவாக பதில் சொன்னால்  தனித்தனி பதிவே ஆகி விடும் எனினும் இயன்ற வரை  என் பயண அனுபவங்களை உங்களோடு பகிர முடிந்ததில் மகிழ்ச்சி.

1.பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?
இலங்கையில்  ஏழு எட்டு வயதில் மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு ரயிலில் பயணம் சென்றதாய் ஒரு குட்டி நினைவு! ரயிலில் ஏறும் போது என் தங்கை அணிந்திருந்த செருப்பு தண்டவாளத்தில் விழுந்து விட மற்றயதையும் கழட்டி கீழே போடு என நான் சொன்னதும்... ஏன் அப்படி என கேட்டதற்கு நமக்கு அந்த செருப்பு திரும்ப கிடைக்காது எனும் போது ஒத்தையை வைத்து நமக்கும் அதை எடுப்பவருக்கும் பிரயோசனம் இராது  என்பதால் அங்கே ரயில்
நிலையம் கூட்டிக்கொண்டிருந்த  ஏழைஆண் தான்  எடுத்து பயன் பெறுவார் எனும் நிச்சயத்தில்  அவருக்கு பயன் படட்டுமே என சொன்னதாயும்....கூட இருந்த ஆண்டி என்னை பாராட்டியதும்  தெளிவில்லாமல்  கலங்கலாய் வரும் ப்ளாஸ்பேக்காய்..!

ஆனாலும்  என் நினைவில் நிற்பது.. பதினைந்து வயதில் இறுதியில் ஆஸ்திரியாவில்  பெல்கிரேட்டிலிருந்து சுவிஸ்  போர்டர் வரை புறப்பட்ட ரயில் பயணம். எங்களுக்கு முதல்  ஐரோப்பிய ரயில் அனுபவம், ஆறு பேர் அமரும் கூபேயில்  வெள்ளைக்காரர் ஒருவர் புகை பிடிக்கும் போது என் கூட வந்தவர்களும் அவரை பார்த்து புகை பிடிக்க.... டிக்கட் பரிசோதகர்  வருவதை அவதானித்து  அவர்  புகையை அணைத்து விட்டு அமைதலாயிருக்க இவர்கள் தெம்பாய் விரலிடுக்கில் சிகரட்டோடு  டிக்கட்டை நீட்ட ... செக்கர்  புகைத்தல் தடை எனும் குறியிட்டைக்காட்ட  இவர்கள் அவரை காட்ட..... மீதி என்ன பைன் தான்!

 2.மறக்கமுடியாத மகிழ்ச்சியான பயணம் எது?
பெரும்பாலான பயணங்கள் மகிழ்ச்சிக்குரியதாய் தான் இருக்கும். மனதில் மகிழ்ச்சி இல்லை எனில் பயணத்தினை தவிர்த்து விடுவேன்!

சுவிஸிலிருந்து ஜேர்மனுக்கும் பிரான்ஸுக்கும்  ஆயிரம் கிலோ மீற்றர்கள் தூர பயணங்கள் பல தடவை பயணித்திருந்தாலும்  நாங்கள் நான்கு பேரும் ஆறு வருடம் முன்னால் எவ்வித திட்டமும் இல்லாமல் எங்கள் காரில் சுவிஸிலிருந்து போர்த்துகல் புறப்பட்டதை மறக்கவே முடியாது. 

சுவிஸ் டூ போர்த்துகல் 
சுவிஸ்,பிரான்ஸ், ஸ்பெயின் , போர்த்துகல் என  நான்கு நாடுகள் 
மொத்தம்  2500 கிலோ மீற்றர்கள்!

அதிகாலை நான்கு மணிக்கு புறப்பட வேண்டும் என திட்டமிட்டு ஐந்தரைக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு மறு நாள் அதிகாலை ஆறரைக்கு  போர்த்துகல்லில் செல்லுமிடம் சென்று சேர்ந்த சாகச பயணம். அத்தனை தூரமும் வண்டி ஓட்டியது என்னவர் என்பது கூடுதல் தகவல். அதிகாலைஐந்தரைக்கு புறப்பட்டு சுவிஸில் பிரேக் பாஸ்ட், பிரான்சில் லஞ்ச், ஸ்பெயினில் டின்னர் என ஒரே நாளில் மூன்று நாடுகள்! 

இடையிடையே குட்டி குட்டி பிரேக் எடுத்து பயணம் செய்து விடிகாலை போர்த்துக்கல் சென்றடைந்தோம். அருமையாய் இருந்தது. மீண்டும் ஒரு தடவை செல்ல வேண்டும் என விருப்பப்படும்  படி மறக்க முடியாத பயணம் அது!

எங்கள் பயணத்திட்டமிடல் ரெம்ப வித்தியாசமானதுப்பா.. இங்கே தான் தங்க வேண்டும் எனும் திட்டமிடல் இருக்காது. வண்டியில்  குட்டி ரைஸ்குக்கர், காஸ் ஸ்டவ், பால் காய்ச்ச ஒரு குட்டி சில்வர் பாத்திரம், பொரியல் செய்ய ஒரு நான்ஸ்டிக் பாத்திரம், குட்டி டப்பாக்களில் உப்பு முதல் தேவையான மசாலாக்கள், வெங்காயம், புளி முதல் சின்னகத்தியும் வெட்டுவதற்கு தயாராக சின்ன பலகையுடன் தரையில் விரிக்க  நம்மூர் பிரம்புப் பாய், ரப்பர் சீட்,போர்வை , வெயில் குடை எல்லாம் தயாராகி விடும். 

கடற்கரை பிரதேசம் எனும் இலக்கை வைத்து புறப்படுவோம். கடற்கரைக்கு 20 கிலோ மீற்றர் தூரமிருக்கும் போதே உள்ளூருக்குள்  நுழைந்து ஹோட்டல்களில் ரூம் இருக்கா என கேட்போம் அனேகமாக கிடைத்து விடும். பிரேக் பாஸ்ட் வித் ரூம்.காலையில் ஆறுதலாக எழும்பி  நல்லா பிரேக்பாஸ்ட் சாப்பிட்டு விட்டு,வண்டியில் ஏறினால் கடலோரமாய் வண்டியை பார்க் செய்து விட்டு  நாள் முழுக்க கடல் நீருக்குள் தான். மதிய உணவை சிந்திப்பதில்லை எனினும்  மதியத்துக்கு பின்  மாலையானதும் அங்கே என்ன கிடைக்குதோ அதை வாங்கி சமைக்க முடியும் எனில் குட்டி குக் ஆரம்பிப்பேன்!கடலோர நகர் என்பதால் பிரெஷ் மீன்கள் மலிவாக கிடைக்கும்.  உடனே வாங்கி சுத்தப்படுத்தி  பொரியல், குழம்புன்னு  கலக்கிருவோம். இப்படி சமைத்து சாப்பிடும் போது கிடைக்கும் சுவை எங்கேயும் கிடைக்காது என்பேன். 

காஸ் ஸ்டவ்வில்  பல காய்ச்சி மினரல் வாட்டர் சேர்த்து டீயும் குடித்துக்கொள்வோம். லாங்க் ட்ரைவ் போகும் போது ஹைவேக்களில் பார்க்கிங்கில் நிறுத்தி இந்த மாதிரி டீ  போட்டு குடிக்க  நிரம்ப பிடிக்கும்.

பெரும்பாலும் பயண நேரத்தில் ஹோட்டல்களில் பாஸ்ட் பூட் உணவுகளை தவிர்த்து விடுவோம். ஒரு நாள் பிள்ளைகளின்  விருப்பத்துக்கு கேட்டு அழைத்து சென்றாலும் மகன் பெரும்பாலும் தவிர்த்து விடுவார். காலை உணவு தவிர நாங்களே தயார் செய்து உண்பது தான் எமக்குப்பிடிக்கும். 

3. எப்படி பயணிக்கப் பிடிக்கும்?
ஐன்னலோரமா தலையை சாய்த்துகொண்டே தூங்கிட்டு  பயணம் 
செய்ய பிடிக்கும். இன்னும் கொஞ்சம் இந்த பயணம் நீளாதா என கேட்கவும் வைக்கும். ஹாஹா!

4.பயணத்தில் கேட்க விரும்பும் இசை 
உண்மை சொன்னால் பயண நேரம் இசை கேட்க பிடிக்காது!  கூட வருபவர்களுடன் அரட்டையாய் பேசிட்டு வரத்தான் பிடிக்கும்! அல்லது அமைதியாக  என்னை கடந்து போகும் மலைகள், மரங்கள், கட்டடங்கள் என பார்த்து ரசிக்க பிடிக்கும், இசைகளில் ரெம்ப அதிர வைக்காத அமைதியூட்டும் எந்த இசையானாலும்  தனியே இருக்கும் போது மட்டுமே கேட்க பிடிக்கும். ஆட்கள் இருக்குமிடங்களில் சத்தமாய் மியுசிக் போடுவதும் கேட்பதும், தொலைக்காட்சி பார்ப்பதும் எப்பொழுதுமே பிடிக்காது!அவர்களுடன் உரையாடத்தான் பிடிக்கும் 

5.விருப்பமான பயண நேரம்
அதிகாலையும் மாலை நேரமும் விருப்பமான பயண நேரம், நள்ளிரவும் நடுப்பகலும் பயணம் செய்வதை தவிர்த்து விடுவேன்!

6. விருப்பமான பயணத்துணை.
வாழ்க்கையில் முழுமைக்கும் முடிந்த பின்னும்  என் கணவர் மகன் மகள் கொண்ட நான்கு பேரும் சேர்ந்தே இருக்கணும்.. தனித்து நெடுந்தூரம் பயணம் செய்யும் சூழல் வரவே கூடாது! 

7. பயணத்தில் படிக்கவிரும்பும் புத்தகம்?
காரில் பயணம் எனில்  எதையும் படிக்க மாட்டேன்! ரயிலில் எனில் தொடர்கதை அல்லாத வார இதழ்கள் எதுவானாலும்  கைப்பையில் சில புத்தகங்கள் வைத்திருப்பேன். நாவல்கள்  வீட்டில் இருக்கும் போது தான் படிப்பதுண்டு. 

8.  விருப்பமான ரைட் அல்லது டிரைவ்?
அறிமுகமான யாருமில்லாத புதிய இடம், கடற்கரையோடு சூழ்ந்த சூழல். தேடி எந்த முன்னேற்பாடும் இல்லாமல் தீடிரென பயணம் செய்ய பிடிக்கும். 

 9. பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்?
அந்த நேரத்தில் எதை விரும்பி கேட்டிருக்கின்றேனோ அப்பாடலை முணுமுணுப்பேன்!பெரும்பாலும்......
ஒவ்வொரு பூக்களுமே சொல்கின்றதே!
நண்பனே நண்பனே ஆருயிர் நண்பனே!
காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா?



விண்ணில் செல்லத்தான் ஒரு சிறகுகள் தருவாயா?
இந்த பாடல் சுவிஸர்லாந்தில் எங்கள் பகுதியில் எடுக்கப்பட்டிருக்கின்றது என்பது கூடுதல் தகவல் 

10. கனவுப் பயணம் ஏதாவது ?
செவ்வாய்க்கிரகம் போக முடியல்லன்னாலும் நம்ம பக்கத்திலிருக்கும் மூன்னுக்கு ஒரு வாக் போய் வரணும் என நீண்ட நாள் ஆசை! எப்போது தான் நிறைவேறுமோ?

போவோமா ஊர்க்கோலம் பூலோகம் எங்கெங்கும்! 
பயணத்தில் என்னுடன் தொடர.........

பூவைப்பறிக்க கோடரி எதற்கு எனக்கேட்கும் கில்லர்ஜி!
வசந்த ஊஞ்சலாடும் மனசு குமார்  
காணாமல் போன கனவுகளுக்கு சொந்தக்காரியாம் ராஜி  



அவர்களிடம்  கேட்கவே இல்லை. ஆனால் பதில் சொல்லி விடுவார்கள் என நிச்சயம் நம்புகின்றேன். நம்பிக்கை தானே வாழ்க்கை!  என் நம்பிக்கையை காப்பாத்துங்க மக்களுக்கு மக்களே!

41 கருத்துகள்:

 1. உங்க பயண அனுபவங்கள் மிகவும் சுவாரசியமாய் இருக்கிறதே! செம ஜாலி பயணங்கள்!
  சிறுவயதிலேயே மற்றவருக்குப் பயன்படும் என்று யோசித்த உங்களுக்குப் பாராட்டுகள். பின்னர், வெள்ளைக்காரர் இப்படிப் பண்ணிட்டாரே :-) பிரயாணக் களைப்பிலும் சமைக்கும் உங்களை வியக்கிறேன். நானும் செய்வேன் என்றாலும் எப்பொழுதும் இல்லை. யாரும் இருக்கும்பொழுது நானும் உரையாடலைத்தான் விரும்புவேன் :-)
  நீங்கள் நால்வரும் எப்பொழுதும் ஒன்றாக இனிதாக இருக்கவும் உங்கள் கனவுகள் நிறைவேறவும் மனமார்ந்த வாழ்த்துகள்.
  என் அழைப்பை ஏற்று இனிதான சுவையான அனுபவங்களைப் பகிர்ந்ததற்கு மிகவும் நன்றி நிஷா.
  நிலவிற்குச் செல்ல வேண்டும், சரி...நடந்தா!? :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரெம்ப நன்றிப்பா1
   கனவுப்பயணம் எனத்தானே கேட்டிங்க, கனவில் கூடவா மூனுக்கு வாக்கிங் போகக்கூடாது.

   நிஜமாக எங்களுக்கு சமைத்து சாப்பிட ரெம்ப பிடிக்கும்,

   நீக்கு
  2. பல நேரம் வெள்ளைக்காரர்கள் தோல் தான் வெள்ளையாயிருக்கும். மனசு?

   நீக்கு
 2. வித்தியாசமான அணுபவங்கள்.பாடல் ரசனையானது.

  பதிலளிநீக்கு
 3. நிஷாக்கா சுவையான அனுபவம்.. இந்த ஊர் ட்ரையின் பயணம் சூப்பரா இருக்கும்..நான் இந்த ஊர்க்கு வந்தவுடனே ட்ரெயின்நிப்பாடினாங்க.. இன்னும் வரலை..5 வருஷம் ஆச்சுக:-) நீங்களே சில நேரம் சமைப்பீங்க சொல்லவும் தான் ஆச்சர்யமாகிட்டேன்.. சூப்பர்...
  எனக்கும் பேச ரொம்ப பிடிக்கும்.. சும்மாவே பேசுவோம் காருக்குள்ள கேக்கவா வேணும்...
  மூன்னுக்கு போகும் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்.. (அப்படியே என்னையும் கூப்பிடுங்க வர்ரேன்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் சமைப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கும்பா? நான் நல்லா ஊருக்கே சமைப்பேனே! எங்க ஹோட்டலிலும் நான் எல்லா வேலையும் சமையல் முதல் கிளினிங்க் வரை செய்வேன்ல். ஆட்களை மட்டும் நம்பி இல்லப்பா!

   நான் கனவு காணும் போது உங்களுக்கு வாட்ஸப்பில் மேசேஜ் தட்டி விடுகின்றேன் மேடம்.. நீங்களும் சேர்ந்து கனவு கண்டால் என்னோட வந்து விடலாம்.

   நீக்கு
 4. ஏங்க வாழ்க்கைப் பயணம் பற்றி சொல்லுவீங்கணு நினைத்தால் இப்படி ஊர் சுற்றியதைப் பற்றி சொல்லி முடிச்சிட்டீங்களே! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்க்கைப்பயணம் எனு தத்துவமெல்லாம் சொல்லும் படி நமக்கு இன்னும் ரெம்ப வயசாகல்லையே சார். நாங்கல்லாம் என்றும் பதினாறு எனும் நினைப்பில் இருக்கோம்ல..அதெல்லாம் உங்களைப்போல வயதானவங்க எழுதட்டும் என விட்டு தந்து விட்டிருக்கோம்.... நீங்க எழுதினால் நாங்கள் படிப்போமாம்.

   முதல் வருகைக்கு நன்றி. தொடர்ந்து வந்தால் சுவிஸ் சாக்லேட் ஒரு கிலோ பார்சல் பண்ணுவேன்.

   நீக்கு
  2. பாவம் நீங்க! சாக்லேட் கொடுத்து வம்ப விலைக்கு வாங்குறீங்களே, நிஷா. நான் பின்னூட்டத்தில் கருத்துச் சொல்லுறேன்னு பொதுவாக சண்டை, விதண்டாவாதம் பண்ணி உங்க உயிரை வாங்குவேன். அப்புறம் நீங்க, இவனை என்ன பண்ணுறதுனு தெரியாமல் முழிப்பீங்க! :)))

   நீக்கு
  3. எதிர்கருத்து சொன்னால் விதண்டாவாதம் என நான் எடுத்துக்கொள்ள மாட்டேனே!என் கருத்தில் தவறு இருந்து நீங்கள் சொல்லும் கருத்து சரியாயிருந்தால் அதை ஏற்றுகொள்வது தான், இதில் சண்டைக்கு எங்கே இடம் வரும். அப்படி விவாதங்கள் வந்தாலும் எழுத்துலகில் சுவாரஷ்யம் தானே? அப்படி வந்தால் ஒன்று எதிர் கருத்து தருவேன் அல்லது அப்படியே நீங்க சொன்னதே சரின்னு ஒத்துக்குவேன் முழிச்சிட்டென்ல்லாம் நிற்க மாட்டேன்பா. அத்தோட நாங்க அரசியல், சினிமா எல்லாம் எழுத மாட்டோமே!

   நீக்கு
 5. அருமை... ஒவ்வொன்றும் ரசனைக்குரியவை...

  இனிமையான காணொளி பாடல்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட்ட்ட்ட்ட்ட்ட்டா எங்கே சார் தீடிரென காணாமல் போய் விட்டீர்கள். நலம் தானே?

   பதிவுகலில் உங்கள் பின்னூட்டங்கள் இல்லாதது ஏதோ மிஸ்ஸான உணர்வை தருது சார்.

   வருகைக்கு நனறி

   நீக்கு
 6. பயணம் என்றுமே இனிமை நிறைந்ததுதான். தங்களின் பயண அனுபவங்கள் வாசிக்கவும் இனிமை. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா?பயணங்கள் என்றும் இனிமையானவை தானேப்பா!
   வருகைக்கு நன்றி!

   நீக்கு
 7. இனிமையான பயண அனுபவங்கள். சுவைபடச் சொன்னீர்கள். மேலும் நிறைய பயணங்கள் நிகழ்த்திட வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எழுதணும் என்பது தான் ஆசை. பார்க்கலாம் சார். நன்றி சார்.தொடர்ந்து வாருங்கள்.

   நீக்கு
 8. ரசனையான பதில்கள்.....

  இனிமையான பயணங்கள் தொடரட்டும். எனக்கும் அழைப்பு வந்திருக்கிறது. எழுத வேண்டும்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழ் வலை உலகின் பயணச்சக்கரவர்த்தியின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 9. மறக்க முடியாத மகிழ்ச்சியான உங்கள் சுற்றுலா பற்றிய கட்டுரை படித்தேன் அருமையாக உள்ளது அத்தோடு பயணத்தின் போது உங்களுக்கு பிடித்த வற்றையும் படித்தேன் சூப்பர்

  3. எப்படி பயணிக்கப் பிடிக்கும்?
  ஐன்னலோரமா தலையை சாய்த்துகொண்டே தூங்கிட்டு பயணம்
  செய்ய பிடிக்கும். இன்னும் கொஞ்சம் இந்த பயணம் நீளாதா என கேட்கவும் வைக்கும்.
  எங்க போனாலும் தூங்க நினைக்கும் உங்களுக்கு தூங்கு மூஞ்சி என்று பெயர் சூட்டாமல் என்னவென்று சூட்டுவது ஹி ஹி

  பயணித்தில் கூட நமக்குப் பிடித்தவர்கள் வந்தால் தூங்கவே பிடிக்காது பயணம் முடியும் வரை பேசிட்டே வருவோம் அட சீக்கிரமே பயணம் முடிந்து விட்டதே என எண்ணவும் தோணும் அந்தப் பயணம் சூப்பரா இருக்கும்

  தனித்து நெடுந்தூரம் செல்லும் பயணம் பிடிக்காது என்று சொன்னீர்கள் அது சூப்பர் வாழ்த்துக்கள்
  நன்றியுடன் நண்பன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜன்னலோரமா தலை சாய்த்து நீங்களும் தூங்கிப்பாருங்க.. சூப்பராக இருக்கும் என்னடா யாரும் கண்டுக்கல்லை என பார்த்தால் ஐயா சார்.... என்னை தூங்குமூஞ்சின்னு போட்டுக்கொடுக்கும் வாய்ப்பை இங்கே வரை கொண்டு வந்து போட்டுக்கொடுத்திருக்கார். அவ்வ்வ்வ்வ்வ்வ்வூ. நீங்களும் தான் தூங்கு மூஞ்சி.

   நீக்கு
 10. அருமையான கேள்விகளும் பதில்களும் எல்லாம் ரசித்தேன் தங்களது ஆசைப் பயணங்கள் நிறைவேறிட வாழ்த்துகள்
  எல்லாம் சரிதான் கடைசியில் கோடரி என் மேல வீசிட்டீங்களே..... அவ்வ்வ்வ்வ்வ்வ்
  என்ன செய்வது முயல்-VAN

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சீக்கிரம் உங்க பயண அனுபவங்களை காண ஆவல்.. எழுதுங்கள் சார்.

   நீக்கு
 11. ரயில் பயண அனுபவங்கள் ஜோர். மொத்தத்தில் எல்லாமே சுவாரஸ்யம். எனக்கும் பாடல்கள் கேட்பதில் விருப்பம் இருந்ததில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம் ஆமாம் பரிசோதகரிடம் மாட்டிகிட்டு முழித்தது ரெம்ப சுவாரஷ்யம் தான்.நன்றி ஐயா.

   நீக்கு
 12. ஒரே நாளில் மூன்று நாடுகள் சுற்றிய பயணம் படித்து அசந்து போனேன்!அருமையான அனுபவ குறிப்புக்கள்! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்! 24 மணி நேரத்தில் போர்த்துக்கல்லும் போய் விட்டிருக்கலம. கொஞ்சம் அதிகமாய் ரெஸ்ட் எடுத்து விட்டோம். போகும் போது ஸ்பெயினில் ஐஸ்கட்டி மழை எனப்படும் ஹால மழைப்புயல் வேறு.

   நீக்கு
 13. தங்கள் பயணங்கள்... பயண அனுபவங்கள்... என அருமையான ஒரு பகிர்வு... ரொம்ப ரசிச்சிப் பயணிப்பீங்க போல... சமையல் வேறு... பயணம் செய்யும் போது அந்த அலுப்பில் கிடைத்ததை சாப்பிடத்தோணும்... அதிலும் கூட தாங்களே சமைத்து... ம்... வாழ்த்துக்கள்...

  அது யாருக்கா வசந்த ஊஞ்சல்ல ஆடுறது.... இங்க ஊஞ்சல் கட்டுன கயிரு அறுந்து தொங்கிக்கிட்டு இருக்கு போங்க....

  நானும் கில்லர் அண்ணா போல் முயற்சிக்கிறேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க தான் அது!எங்களுக்கு என்ன தான் சுற்றினாலும் சாப்பாட்டில் கவனமாயிருப்பேன். பெரும்பாலும் கடைச்சாப்பாடு தவிர்ப்பதுண்டு.

   நீக்கு
 14. சுவாரசியமான பயண அனுபவங்கள். ரசித்தேன்மா நிஷா.. போகும் இடமெல்லாம் சமைத்து சாப்பிடுவதென்பது சில சமயம் அலுப்பு என்றாலும் பல சமயம் நம்முடைய ஆரோக்கியத்துக்கும் கையிருப்புக்கும் நல்லது. அந்தக் காலத்தில் மாட்டுவண்டியில் கட்டுச்சோறு கட்டிக்கொண்டு போவார்களாம். ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு மாதிரியான அனுபவம் ரசனைக்குரியதே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அக்கா!

   செலவுக்காக எல்லாம் இல்லை அக்கா. என்னமோ எங்கே போனாலும் சாப்பாடு, டாய்லட் வசதி, போர்வைகள் என எங்களுக்கு தேவையானதை நான் கொண்டு போய் பழகி விட்டேன்.

   என் பயண ஆயத்தங்களையே ஒரு பதிவாய் போடலாம் போலவே!

   நீக்கு
 15. பயணத்தில் இணைத்தமைக்கு மிக்க நன்றி மேம் ! மாலையில் படித்துவிட்டு மீதி கருத்துக்களை கூறுகிறேன்.

  பதிலளிநீக்கு
 16. **. அதிகாலைஐந்தரைக்கு புறப்பட்டு சுவிஸில் பிரேக் பாஸ்ட், பிரான்சில் லஞ்ச், ஸ்பெயினில் டின்னர் என ஒரே நாளில் மூன்று நாடுகள்! ** காலை ஜப்பானில் காபி எனும் கமலின் பாடல் உங்களுக்கும் நினைவுக்கு வந்திருக்கும் என நினைக்கிறேன்:) இந்த ட்ராவல் பதிவின் passionate traveller பட்டம் உங்களுக்குத்தான்:))

  அந்த பிரெஷ் fish fry ஸ்ஸ்ஸ்ஸ் நாக்கு ஊறுது.

  நீங்க கொடுத்திருக்கும் பாடல்களும் அட்டகாசம். மிக்க நன்றி மேடம்:) இந்த நட்புப் பயணம் என்று தொடரட்டும்:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரெம்ப நன்றிம்மா! தொடர்ந்து வாருங்கள். ஏனைய பதிவுகளையும் படித்து கருத்து தந்தால் மகிழ்ச்சிப்பா!

   நீக்கு
 17. ஒரு கட்டாயத்திற்காகத்தான் படிக்க ஆரம்பித்தேன்...பயணம் என்பதும் ஒரு வாசிப்பே...அது கடப்பதல்ல வாழ்வது...உங்கள் ரயில் பயணம் தடதடக்கிறது என்றால்..போர்ச்சுகல் பயணம் பொறாமைப்பட வைக்கிறது..

  உங்கள் விருப்பப்படியே..மூனுக்கும்..ஏன் செவ்வாய்க்கும் ஜன்னலோர இருக்கையில் சென்றுவர ....வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களை யாருகட்டாயப்படுத்தி படிக்க சொன்னார்களாம் நான் ஒன்று சொல்வேன் சாரே!கட்டாயத்தில் படித்தாலும் மனமுவர்ந்து பின்னூட்டமிட்டதுக்கு நன்றி!

   எனக்கொரு சந்தேகம் நீங்கள் ஒன்று சொன்னால் இரண்டு சொல்வது யாராம்?

   நீக்கு
 18. ஆஹா! என்ன சுவாரஸ்யமான அழகான பயணங்கள்!! ஒரே நாளில் மூன்று நாடுகள்!!சூப்பர். நிஷா என் மகன் செட்டில் ஆனதும் எங்கள் லிஸ்டில் இருக்கும் உங்கள் ஊருக்கு வந்து உங்களுடன் கண்டிப்பாக எஞ்சாய் செய்வோம். ஐரோப்பியப் பயணம் என்று சொல்லிக்கொள்வதுண்டு. உங்கள் பயணம் அருமையாக இருக்கிறது..

  க்டைசியில் சொன்னீர்கள் பாருங்கள் கனவுப்பயணம் ஹஹஹ சூப்பர்..வாக்கிங்க் என்றால் சேர்த்துக் கொள்ளுங்கள்..என்னையும்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிப்பா..ஆஹா உங்களுடன் ஜாலியாக வாக் போகவா? இப்பவே ரெடிப்பா! இதோ கிளம்பிட்டேன்!

   நீக்கு
 19. நாங்களும் தொடரில் இருந்ததால்தான் உங்கள் பதிவை அன்று படிக்கவில்லை. இன்று வெளியிட்டாகிவிட்டதால் வந்தோம். தொடர் பதிவு என்றால் இப்படித்தான் நாங்கள். நாங்களும் இருந்தால் எங்கள் பதிவு வெளியிடும் வரை பிற பதிவுகளை வாசிப்பதில்லை. அதனால்தான்..சரியா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முந்தைய தொடரில் அறிவேன் பா! கருத்திட்டமைக்கு நன்றி!

   நீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!