மயூரனின் Face Book ID முடக்கம்...!
ஒரு தனி மனிதனின் எழுத்து சுதந்திரத்துக்கு எதிரானதா..? அல்லது முழு தமிழினத்துக்கும் உள்ளத்திலிருந்து உரிமை குரல் வெளி வர கூடாது எனும் எச்சரிக்கையா?
இதுவும் ஈழத்தமிழினத்துக்கான ஒரு வகை அடக்குமுறை என்று எனக்கு புரிகின்றது.
உங்களுக்கு....?
எத்தனை படங்கள்,பயணங்கள், தகவல்கள், வரலாறுகளை, புனைவுகளை எங்கள் நேரம் செலவு செய்து எழுதுகின்றோம் சேமிக்கின்றோம். அனைத்தும் எங்கள் உரிமை,உணர்வு நிறைந்த நினைவுகளுக்கான பதிவுகளால்
ஒரு நாளில் எதுவுமே இல்லாமல் முடங்கும் என்றால் நாங்கள் உணர்வுகள், நினைவுகள், வரலாறுகளே இல்லாத ரோபோட்டிக் பொம்மைகளாக மாற்றம் பெறுகின்றோமா?
வி.புலி அமைப்பு சார்ந்த போராட்டத்துக்கான ஆதரவு , அதன் தலைவர் புகைப்படம் அவர்கள் குறித்த பகிர்வுகள் —- ஒவ்வொரு வருடமும் நவம்பரில் இங்கே பலரின் ஐடி முடக்கப்படும்.
( மயூரனுக்கும் போனவருடம் பகிர்ந்த பதிவுக்காக ( இன்னும் பலருக்கு இதே போல் ஒருவருடம் பின்னர் ) ஒரு மாதம் தடை செய்து நேற்று காலை தடை எடுத்து மாலை மீண்டும் முடக்கி இருக்காங்க.)
கடந்த வாரம் வி.புலிகள் தடை நீக்கம் குறித்த லண்டன் அறிவிப்பு செய்தி. இவர் மட்டும் அல்ல. இன்னும் பலர் ஐடி முடங்கி இருக்கு என்று நினைக்கின்றேன். பலரை காணோம்.
மற்றபடி மயூரன் சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கும் தேவையில்லாத பதிவுகள் எழுதுவது இல்லை. என் பார்வையில் வந்தது இல்லை. அவர் பதிவில் அனைத்திலும் அழகியல் இருக்கும். நாங்கள் அறிந்து கொள்ள பல தகவல் தொகுப்பும் இருக்கும்
மயூரன் சிறிய வயதில் புலம்பெயர்ந்தவராக இருந்தாலும் தாய் மண், தமிழ் மொழி மீது அதிக பற்று கொண்டவர். தமிழின் தொன்மை குறித்து ஆழமான அறிவுடையவர். அவரின் பக்கம் தொடர்ந்தோருக்கு தமிழ் மீதான அவர் பற்றும் நேசிப்பும் புரியும். சமையல் முதல் அறிவியல் வரை முக்கியமாக பழமையான கட்டடம், தெரு, தகவல் என்றெல்லாம் வரலாற்று தகவல்களை தேடி தமிழில் மொழி பெயர்த்து எழுதுவார். அனைத்திலும் அழகும், ஆழமும் அழுத்தமும் இருக்கும்.
உள்ளூரில் பல இடஙகளுக்கும், பல நாடுகளுக்கும் சென்று அழகான புகைப்படங்கள், வரலாற்று தகவல்களை பயணம் திட்டமிட்டதிலிருந்து திரும்பி வந்து சேரும் வரை அத்தனை அடிப்படை தேவைகளையும் அவதானித்து எழுதுவார். ஒவ்வொரு பயணத்திலும் அந்த இடத்தின் சூழலுக்கு ஏற்ற ஆடைகள் தேர்வு செய்து அணிவித்து எடுக்கப்படும் புகைப்படம் பார்க்கும் போதே Thenmoly Mayuran அதற்கான அர்ப்பணிப்பும், ஈடுபடும் புரிந்து கொள்ள முடியும்.
செல்லுமிடமெல்லாம் கிடைக்கும் சிறப்பு உணவுகள் குறித்த வர்ணனை நாங்கள் உடனே கிளம்பி போய் அதை ருசித்திட வேண்டும் என அடங்கி கிடைக்கும்
நாக்கின் நரம்புகளை சிலிர்த்தெழ வைத்து வாய் ஊறலை உருவாக்கும்.உற்சாகத்தின் ஊற்றான மயூரனின் பதிவுகள் எங்களுக்கு ஒரு பொக்கிசம் போல் சேமிக்கப்பட்டிருக்க வேண்டும்.
அனைவருக்கும் என் வேண்டுகோள். இங்கே போடும் பதிவுகளை வலைப்பூவிலும் பகிர்ந்து சேமித்து விடுங்கோ!
துளசிமாவின் Tulsi Gopal துளசி தளம் பயணக்கட்டுரைகளுக்கு பின் நான் ரசித்து வாசிக்கும் பயண தொகுப்புகள் மயூரனுடையது. ஆனால் வலைப்பூவில் அவர் அனைத்தும் பகிர்வது இல்லை.
எமக்குள் கருத்து முரண்பாடுகள் இருக்கலாம், கொள்கை வேறாக இருக்கலாம். விருப்பு வெறுப்பு இருக்கலாம் .
ஈழத்தமிழனின் விடுதலை போராட்டத்தில் பிரபாகரனுக்கு இருக்கும் பங்களிப்பை இருட்டடிப்பு செய்வது, வரலாற்றை மாற்றி எழுதுவதற்கு நிகரானது.
வரலாறுகளை மறைத்து எழுத்து, பேச்சு உரிமைகளை அடக்கும் போது மொழி, இனம் என ஒன்று பட்டு தமிழராக நாங்கள் இணைந்து எதிர்ப்பு குரல் கொடுக்காமல் வேடிக்கை பார்ப்பதே எங்களின் மீதான அடக்கு முறைகள் தொடர்வதற்கு காரணமாகின்றன. எங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் ஒரு இனத்தின் மூன்று தலைமுறை வாழ்வியலை மறைத்து விடும் உலகின் சர்வாதிகாரத்துக்கு ஆதரவாகவே இருக்கின்றது.
இங்கே எழுதப்பட கூடாதவர்கள், நினைக்க பட கூடாதவர்கள் என்று தடை செய்யப்படும்
அவர்கள் அனைவரும் யாரோ இல்லை..?
அனைவரும் நாங்களே..!
அவர்களும் எம்மவர்களே..!
பேசப்படவும் எழுதப்படவும் இன்னும் நிரம்ப இருக்கின்றது. பலரின் மௌனங்கள் கலையவும் அவர்கள் உணர்வுகளுக்குள் ஊடுருவி உறங்கும் உண்மைகளை வெளிக்கொண்டு வரவும் இன்னமும் காலம் எமக்கு சாதகமாக இருக்குமா?
சிந்தியுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!