10 மார்ச் 2023

பொத்துவில் அக்/ அல்- இஷ்றாக் மகா வித்தியாலயத்தில் பாடசாலை தோட்டம்

#உயிர்ப்பூ பாடசாலை தோட்டம் 07.12.2023 டிசம்பரில் முதல் அறுவடையாக கிடைத்த மரக்கறிகள், மிளகாய்களை புகைப்படங்களில் காணலாம். இப்பாடசாலையில் தோட்டத்தின் மண் வளப்படுத்தும் படியாக சணல் விதைகளும் விதைக்கப்ப்ட்டிருக்கின்றன. மிக சிறப்பான முன்னெடுப்ப்பை தொடர்கின்றார்கள்.
அதிபர் அவர்கள் வாட்சப்பில் கூறிய கருத்தை இணைத்துள்ளேன். பொத்துவில் அக்/ அல்- இஷ்றாக் மகா வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களின் ஒத்துழைப்புடன் பாடசாலை தோட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலை தோட்டச் செய்கையில் பல மட்ட பாராட்டைப் பெற்றதாக உள்ளது. விவசாய பாடம் ஒரு பிரதான பாடமாக உள்ளது. தோட்டச் செய்கையில் ஆர்வமுள்ள மாணவர்கள் உள்ளனர். இங்கு தோட்டம் சிறப்பாக உள்ளது. ஆயினும் குறைகளுமுள்ளது.அதிலும் பயிர் பாதுகாப்பு மிகக் கடினமானதாக உள்ளது. குரங்குகள் அட்டகாசம் மிக அதிகம். இப்பாதுகாப்பு ஏற்பாட்டை செய்வதில் பாடசாலை நிதி நெருக்கடிக்கு முகம் கொடுக்கின்றது. இந்நிலையில் எமது பாடசாலைக்கு சென்ற 2022.11.30ஆம் திகதி கள விஜயம் உயிர்ப்பூ நிறுவன உறுப்பினர்கள் 03கொண்ட குழு மேற்கொண்டது. இதன் போது இத்தோட்ட மேம்பாட்டிற்காக உபகரணங்கள், மண் வளத்தைப் பேண சணல் விதைகள் வழங்கி வைக்கப்பட்டது. இதற்காக என்னுடையதும் பாடசாலை சார்பாமதுமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது தோட்டம் அறுவடைக்காக காத்திருக்கின்றது. இன்ஷாஅல்லாஹ் எதிர் வரும் தினங்களில் இந்நிகழ்வு இடம் பெறும் என எதிர் பார்க்கப்படுகிறது. மேலும் எனக்கான பயிர் காப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமானால் இன்னும் வினைத்திறனுடன் இத்தோட்டத்தினை மேற்கொள்ள முடியும் என்பதையும் இதனை உயிர்ப்பூ நிறுவனத்தினூடாக எதிர்பார்த்துள்ளேன் என்பதையும் கண்ணியத்தோடு தெரியப்படுத்துகிறேன். நன்றி. பொத்துவில் அக்/ அல்- இஷ்றாக் மகா வித்தியாலயத்தில் பாடசாலை தோட்டம்
#பாடசாலை_தோட்டம் #ஆல்ப்ஸ்_தென்றல்_நிஷா #உயிர்ப்பூ 26.02.2023

பாடசாலைத்தோட்டத்தில் பச்சை மிளகாய் பயிர்செய்கை

புகைப்படத்தில் இருக்கும் பச்சை மிளகாய், இரத்தின புரி காவத்தை தமிழ் பாடசாலைதோட்டத்தில் இயற்கை முறை பயிர் செய்கை. ( செத்தல் மிளகாய் )காய்ந்த மிளகாய் விதைகளை தூவி நாற்று உருவாக்கிய ஒரு தொட்டிச்செடியிலிருந்து விளைந்தவைகள்.தக்காளிகளும் தற்பொழுது காய்த்திருக்கின்றன. பாடசாலை தோட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதை குறித்தும் இனி கவனம் கொள்ள வேண்டும். ( வேலி இல்லாத பாடசாலை தோட்டம் என்பதனால் சுமார் 200 தொட்டிச்செடிகளிலிருந்து பல செடிகளை பாடசாலை விடுமுறை காலத்தில் களவெடுத்து சென்றிருக்கின்றார்கள். ) எதிர் வரும் காலங்களில் ஒவ்வொருவரும் தமது சிறிய தற்சார்பு வீட்டு தோட்டம் ஒன்றை உருவாக்கிகொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்வோம். உணர்த்துவோம். பச்சைமிளகாய்

19 ஜூலை 2022

கல்லாற்றின் கூனி கடையலும் சுடு சோறும்

கல்லாற்றின் கூனி கடையலும் சுடு சோறும் ( முப்பத்திரண்டு வருடங்களுக்கு முன் ) நிஷாவும் மட்டக்களப்பின் சிறப்பு கல்லாற்றின் ஆற்றங்கரை பக்கமாக களுதாவளை - மண்டூர் பக்கமிருந்து தோணியில் ( வள்ளம் ) வரும் பெண்கள் இருவர் குழுவாக இடுப்பளவு நீரில் இறங்கி நின்று சல்லடை போல் இருக்கும் சேலையின் இருபக்கமும் பிடித்து கொள்வார்கள். அதை தண்ணீரில் மேல் தாலாட்டுவது போல் முன்னும் பின்னும் நீருக்குள் ஆட்டி ஆட்டி அசைக்கும் போது கூனி அந்த துணிக்குள் சேரும். இதனை "கூனி வடித்தல்" என்னும் சிறப்பு பெயர் கொண்டும் அழைப்பர். அதே பெண்களே கல்லாறு சந்தைக்கு கொண்டு விற்பார்கள். இறாலின் இளநிலை பருவமான கூனி இராசவள்ளி கூழ் போல் நிறம் இருக்கும். பூவரசு இலைக்குள் அடங்கும் ஒரு பங்கு. 🌺🌺 ஐம்பது சதம் .😂 கூனி உடன் ஆற்றின் மண் சிப்பி இருக்கும். அதை அரிச்சி அரிச்சி கழுவி எடுக்கணும்.
கூனி கடையல் பச்ச மிளகாய் அவிச்சி கடைஞ்சு நல்ல புளி மாங்காயும் உப்பும் மஞ்சளும் சேர்த்து சுத்தமாக்கிய கூனி சேர்த்து அளவான தண்ணி விட்டு மூடி விட்டால் பத்து நிமிடத்தில் அவிந்து விடும். மீண்டும் மாங்காயை அகப்பையால் கடையும் போது கூனி மாங்காய் கொச்சிக்காய் எல்லாம் சேர்ந்து செம்மமையா இருக்கும். அதே போல் கூனி இங்கே சுவிஸில் தாய்லாந்து கடையில் வாங்கி சமைத்து இருக்கின்றோம். ஆனால் போத்தலில் அடைக்க பதப்படுத்தும் போது அதன் இயற்கையான சுவை மிஸ்ஸிங்

 மட்டக்களப்பில் இருந்து எமக்கு வரும் பொருட்களில் 
 * கல்லாற்று கூனி
 * திராய் வற்றல் 
 * குறிஞ்சா கீரை வற்றல் 
 * பொட்டியான் கருவாடு கட்டாயம் இருக்கும்

 கெளுத்தி மீன் 
சள்ளல் மீன்
 செல்வன் மீன்
 குஞ்சி மீன் எல்லாம் விசேஷம்🤣

 ஆறு, குளங்களில் மீன், இறால் பிடித்தல், மீன்களை வாங்கி விற்றல், கூனி, ஐயாமாசி வடித்தல் போன்ற ஆபத்தான தொழிலில் ஈடுபட்டு வந்த பெண்களை கண்டு வளர்ந்தனால் உழைத்து பிழைத்தலில் அருமை எமக்கும் உணர்த்தப்பட்டிருந்தது. எங்கள் ஊரில் அக்காலங்களில் பெண் தொழில் முனைவோர்கள் அதிகமாக இருந்தனர். வீட்டு ஆண்கள் வேலைக்கு போனாலும் வீட்டில் இருக்கும் பெண்கள் பல தொழில்களை செய்து சிறு வருமானம் பெறும்படி இருந்தது. முக்கியமாக பத்தாம் வகுப்பில் பரிட்சை எழுதி விட்டு காத்திருக்கும் காலங்களில் பெண்களுக்கான தொழில் பயிற்சிகளை ஆரம்பித்து விடுவார்கள். 

 இதை குறித்து அடுத்த பதிவில் தொடர்ந்து எழுதுகின்றேன்.

 வேலையத்தவர்கள் மனசில் தான் ஆயிரம் குத்தல்களும் குடைச்ச்ல்களும் உருவாகும் என்பதை புரிந்து கொண்டால் இக்காலத்தில் என்ன நடக்குது என்பதை இதை வாசிப்பவர்கள் சிந்த்னைக்கே விடுவோம். போவோமா ஊர்கோலம் இந்த பூலோகம் எங்கெங்கும்

நூல் கோல் கிழங்கு கறியும், கீரை சுண்டலும்

நூல் கோல் கிழங்கு கறியும், கீரை சுண்டலும் புகைப்படத்தில் இருப்பது இன்றைய மதியம் எனக்கான உணவு : என் தோட்டத்தில் விளைந்த நூல் கோல் , சமைக்க தேவையான ஒற்றை பச்ச மிளகாயும். செர்ரி தக்காளியும் வீட்டுத்தோட்டத்தில் நூல் கோல் கிடைக்கும் நாட்களில் இந்த கிழங்கை பிரதான உணவாகவும், அதன் கீரையும் உப உணவாகவும், அரிசியும் எடுத்து கொள்ளலாம்.
நூல் கோல் கிழங்கு தேங்காய்ப்பால் கறி கிழங்கை தோல் சீவி அளவான சதுர துண்டங்களாக வெட்டி கழுவி கொள்ளுங்கள். வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி, பச்ச மிளகாயும் நறுக்கி போட்டு மஞ்சளும், உப்பும் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு அடுப்பில் வையுங்கள். முக்கால் பதம் வேகி வரும் பருவத்தில் நல்ல கட்டி தேங்காய்ப்பாலை விட்டு கொதிக்க விட்டு எடுத்தால் அருமையான நூல் கோல் பால் கறி தயார். விரும்பினால் கருவாட்டு துண்டு, மாசி சேர்க்கலாம். நான் இப்பொதெல்லாம் அசைவ உணவுகள் தவிர்ப்பதால் மரக்கறியாக்வே சமைத்து எடுப்பேன். மரக்கறிகளை கரையும் படி வேக விடாமல் முக்கால் பதத்தில் கடித்து உண்பது போல் வேக விட்டு சமைத்து எடுப்பது ஆரோக்கியமானது.
நூல் கோல் கீரை சுண்டல் சின்ன வெங்காயம் தேங்காய்ப்பூ பச்ச மிளகாய் மீன் விரும்பினால் சேர்க்கலாம். இலையின் நடுவில் இருக்கும் தண்டுகளை வெட்டி எறிந்து விட்டு கீரையை நன்றாக கழுவி இலையின் மேல் இருக்கும் நீரை உதறி எடுத்த பின் மிக மெல்லியதாக அரிந்து கொள்ளவும். மீன் சேர்த்து சுண்டுவது என்றால் மீனை சுத்தம் செய்து பச்சை மிளகாய், மஞ்சள் உப்பு சேர்த்து அவிய விட்டு பின்னர் மீனை தனியே எடுத்து முள் நீக்கி கொள்ளவும், முள் நீக்கிய மீனை மீண்டும் சட்டியில் போட்டு ஒரு கடையல் கடையவும். மீன் சேர்க்காமல் சுண்டல் செய்ய பச்சை மிளகாயை கட்செய்து மஞ்சள் உப்பு சேர்த்து அவை அவியும் அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும், மிளகாய் அவிந்த பின் அகபையால் கடைந்து விட்டு கீரையை அதனுள் சேர்த்த்து ஒரு நிமிடம் மூடி விடவும், தேங்காய்பூ ( தேங்காய் மலிவாக கிடைத்தால் ருசிக்கேற்ப தாராளமாக சேர்க்கலாம். ) சேர்த்து கீரையுடன் ஒரு நிமிடம் கிளறி விடவும், தேங்காய்ப்பூ சேர்த்த பின் மூடி போட்டு மூட வேண்டாம். இறுதியில் நறுக்கிய வெங்காயமும் சேர்த்து வெங்காயம் அவிய விடாமல் கடிபடும் பருவத்தில் இருக்கும் போதே அடுப்பில் இருந்து இறக்கி விடவும். இந்த மாதிரி கீரை சுண்டலுக்கு நான் புளி சேர்ப்பது இல்லை. அதிகரித்து வரும் விலை ஏற்றத்தை சமாளிகவும் அரிசி யின் தேவையை குறைக்கவும், ஒரு வேளை உணவில், இரண்டு பங்கு கிழங்கு கறி, அதே அளவு கீரை சுண்டல். ஒரு பங்குக்கும் குறைவாக அரிசி சோறு சேர்த்து கொள்ளலாம்.(மீன்,இறைச்சி உணவு கிடைத்தால் இந்த அளவுகளில் மாற்றம் செய்யலாம் )
அரிசியின் தேவை : ஒரு நபருக்கு தேவையான அரிசியின் சரியான அளவைக் கொடுப்பது கடினம், ஏனென்றால் எல்லா அரிசியும் ஒரே மாதிரி இருக்காது! புழுங்கல் அரிசி அதிக எடை கொண்டது.100 கிராம் சமைக்கப்படாத அரிசி 200-300 கிராம் சோறாக மாறும். எனவே சமைக்கப்பட்ட அரிசியின் எடை இரட்டிப்பாகவோ அல்லது மூன்று மடங்காகவோ இருக்கலாம்.
உணவில் அரிசி முக்கிய உணவாக இருந்தால், ஒரு நபருக்கு 100 கிராம் முதல் 120 கிராம் வரை பச்சை அரிசி தேவைப்படும். அரிசி உடன் பக்க உணவுகளுக்கு, ஒரு நபருக்கு 20-60 கிராம் உலர் அரிசி போதுமானது. உணவில் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்த்து கொண்டால் வளர்ந்த ஒரு நபருக்கு 50 கிராம் போதுமானது. பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு உணவு வழங்கும் திட்டங்களில் மரக்கறிகளை கீரைகளை அதிகமாகவும் அரிசியை உப உணவாகவும் எடுத்து கொண்டால் ஒரு கிலோ அரிசியில் 2500 - 3000 கிராம் சோறு கிடைகுமானால் 20 சிறுவர்களுக்கு 120 - 140 கிராம் சமைத்த அரிசி சோறும் 120 - 150 கிராம் மரக்கறிகளையும் சேர்த்து கொள்ளலாம். இதனுடன் பழங்களும் சேர்க்கும் போது அதுவே நிறையுணவாகி விடும். அதிருக்க மலையக மரக்கறிகளில் நோக்கல் என ஒரு நாற்றுக்கு பெயர் இருந்தது. அது என்ன மரக்கறி என எனக்கு புரியவே இல்லை. நோக்கல் என தட்டச்சிட்ட போது நாங்கள் இங்கே kohlrabi என அழைக்கும், நூல்கோல் கிழங்கு படம் கிடைத்திருந்தது. இதை ஊரில் நோகூட் என அழைத்ததாக நினைவு. நூல் கோல் மருவி நோக்கல் ஆகி நோ கூட் எனவும் அழைக்கப்படுகின்றதா?