21 ஜனவரி 2016

நான் சின்னவளாய் இருந்தபோது.-5

சின்னவளாய் இருந்த போதான என் நினைவுபெட்டகத்தில்  நான் கற்றவைகள், பெற்றவைகளில்  என் நான்காவது வயதிலிருந்து  நடந்த சம்பவங்கள் இன்றும் நினைவுக்கு வருவது ஆச்சரியமானது தான்.

எங்கள் வீட்டில் நான் மூத்த பெண் என சொல்லி இருக்கின்றேன், எனக்கு அடுத்து  மூன்று தங்கைகள், அதைத்தொடர்ந்து தம்பி, கடைசியாய் ஒரு தங்கை, ஐந்து பெண்கள், ஒரு ஆண் என மிகப்பெரிய குடும்பம் எங்களுடையது,

எனக்கும் என் தங்கைகளுக்கும் ஒன்றரை வயது தான் வித்தியாசப்படும் என்பதோடு நான் பிறந்த பொழுதினில்  மட்டக்களப்பு அமிர்தகளியில் மாமாங்க கோயில எனும் பிரசித்தி பெற்ற கோயிலை ஒட்டி சொந்தமாய் வீடு மற்றும்  வசதியாக இருந்திருக்கின்றோம். அந்த வீட்டை விட்டு என்  ஆறாவது வயதுக்கு முன்பு புறப்பட்டு விட்டாலும் அதன் பின் அந்த வீட்டுக்கு திரும்பி போகும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் எனக்குள் அந்த வீடும், நினைவுகளும் இன்றைக்கும் ஏக்கம் தரும் ஒன்றுதான் ,சந்தர்ப்பம் கிடைத்தால் என் வாழ்க்கையில் ஒரு தடவையாகிலும் அந்த இடத்தை சென்று பார்க்க வேண்டும் எனும் ஏக்கம் என்னுள் உண்டு.

அந்த வீட்டை அம்மாவுக்கு சீதனமாக கொடுத்த தாத்தா சொந்த தாத்தா இல்லை. அம்மா மேல் பாசம் வைத்ததால் தன் சொந்த பிள்ளைகளுக்கு கொடுக்காமல் அம்மாவுக்கு கொடுத்தாராம். என்னிடமும் பாசமாக இருந்திருகின்றார்.

நடுவில் இரு அறைகளுடன்,இருபக்கங்களும் தாழ்வாரம் போன்ற நீண்ட பகுதியும், பெரிய கடையுமாய் திருவிழாக்காலங்களில் சர்பத் போன்ற இனிப்பு பதார்த்தங்கள் விற்கும் கடையாய் அவை பயன் பட்டதும், சர்பத்தின் சுவையும்,அதில் மிதக்கும் கசகசா,சேமியா போன்றவைகளின் சுவையும் தென்னை மரங்களும் கூட எனக்குள்  நினைவு இருப்பது ஆச்சரியமே!

விட்டுக்கு முன்னே  கோயிலுக்கும் சற்று முற்பகுதியில் மைதானம் போன்ற வெள்ளை மணல் பரப்பு இருந்ததில் அதில் பெரியவர்கள்  நிலவு ஒளியில் அமர்ந்து பேசுவதும்   நான் குமார், தேவி என எனை ஒத்த நண்பர்களுடன்
விளையாடிய நினைவும்
குமார் குமார் லைட் அடி 
கோழிக்கூட்டுக்கு லைட் அடி, 
எத்தனை மாதம் சம்பளம், 
மூன்று மாதம் சம்பளம். . 
மாமா எங்கே படுக்கின்றார், 
மாடி வீட்டில் படுக்கின்றார்
அத்தை எங்கே இருக்கின்றாள்
அடுத்த வீட்டில் இருக்கின்றாள்
நம்ம வீட்டில் கல்யாணம்  
தெருவிலெல்லாம் ஊர்க்கோலம் 
டொம் டொம் டொம்

என குமாரை கேலி செய்து  பாட்டு சொல்லி தந்ததும்  நினைவில் இருக்கின்றது.

1978 ல் இலங்கையில் கிழக்கு மாகாணத்தை  தாக்கிய சூறாவளியில்,வீட்டின் ஓடுகள் உடைந்து விழுந்ததும் , மேசைக்கு கீழாய் என்னை பாதுகாத்ததும், ஓடு விழுந்ததனால்  ஓடு வேய்ந்த வீடு  பாதுகாப்பானது    எனும் நம்பிக்கையில் எங்கள் வீட்டில் வந்து பாதுகாப்பாக இருக்க நினைத்த   பக்கத்து வீட்டு ஆண்டியின் முழங்காலில் ஓடு விழுந்ததும்,பக்கத்து குடிசைகள் மேல் வேய்ந்த ஓலைகளை காற்றள்ளி சென்றதுடன், ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த தென்னை மரங்களும் வீடுகள் மேல் சரசரவென சாய ஆரம்பித்து விட்டன. இதனால் வீடுகளின் குடியிருப்பது பாதுகாப்பில்லை என கொட்டும் மழையிலும், சுழன்றடிகும் காற்றிலும் அனைவரும் ஒருவரையொடுவர் பிடித்து கொண்டு மாமாங்க கோயிலுக்கு செல்ல  இடுப்பளவு நீரில் நடந்ததும் நடக்கும் போது என்னை தாத்தாவும், தங்கையை சித்தப்பாவும் தூக்கி தோளில் வைத்து பாதுகாப்பாய்  அணைத்து சென்றதும், அம்மா என் மூன்றாவது தங்கையை வயிற்றில் சுமந்ததுமாய்  என் நினைவுகள் கூடவே வருகின்றது.

அன்றைய தினம் என் அப்பா வேலை நிமித்தம் சென்று விட்ட சூழலில் அப்பாவின் தம்பி சித்தப்பா, தாத்தா என எங்களுடன் இருந்தது, என் இரண்டாவது தங்கை ஹேமா சித்தப்பாவின் செல்லப்பெண் என்பதால் அவர் அவளை தூக்கிக்கொண்டு அலைந்ததும்   மறக்க முடியவில்லை. புயலுக்கு மறு நாள் பதறி அடித்து ஓடி வந்த அப்பா  புயலாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கொடுக்கின்றார்களாம் என அறிந்து என்னை தூக்கி கொண்டும் சித்தப்பா தங்கையை தூக்கிக்கொண்டும் போய் கோதுமை மா, பேரிச்சம் பழம் வாங்கி வந்ததும் புயலாய் விழுந்த தென்னை மரங்களின் குருத்துக்கள் இளநீ ர்களை சாப்பிட ஓடித்திரிந்ததும் . சின்னக்குழந்தைகளுக்கு முதலிடம் என்பதால் பக்கத்து வீட்டு மாமாக்களும் மாறி மாறி எங்களை தூக்கிட்டு போய் நிவாரணப்பொருட்களை வாங்கியதும் நீங்காத நினைவில்.!

சின்ன வயதில் என்னை தரையில் நடக்கவே விடாத படி அப்பாவுக்கு தெரிந்த நண்பர்கள்  முன்று மாமாக்கள் என்னை தூக்கியே வைத்திருந்ததும், அவர்கள் என் பத்தாவது வயது வரை அதை சொல்லி என்னை தம் மடியில் இருத்தி கொள்வதும், அம்மாவின் ஒன்று விட்ட அக்கா பூமணி பெரியம்மா, கிட்டப்பா பெரியப்பாவையே நான் முதன் முதலில் அம்மா, அப்பா என அழைத்ததும், அவர்கள் என்னை வளர்த்ததும் திருகோணமலையில் பெரியப்பாவின் கடையில்  நான் செல்லப்பெண்ணாக அவர் மடியில் அமர்ந்து  தேன் குழல்களை சாப்பிட்டதும் என் அம்மா என் சின்ன தங்கையை  பெரியம்மா வீட்டுக்கு கூட்டி வந்த போது நான் பெரியம்மாவிடம்   அம்மா அம்மா சித்தி குட்டிப்பாப்பா வாங்கி வந்திருக்கிறா, அவள் வேண்டாம் என  சொல்லி அழுததாக சொல்வதும்  எனக்குள்  மறக்கவே இல்லை.

இந்த நினைவுகள் அனைத்துமே என் ஐந்து வயதுக்குள் என சொன்னால் நம்புவீர்களா?

பிள்ளைகள் இல்லாததால் பெரியப்பா பெரியம்மா என்னை   வளர்த்ததனால் தானோ என்னமோ எனக்கு இன்று வரை என்னை பெற்ற அம்மாவுடன் ஒட்டுதலில்லாமலேயே இருக்கின்றேன்.

எனக்கு என் தங்கை தம்பி ,அவர்களை தூக்கியது, விளையாடியதான நினைவுகள்   தம்பி  பிறக்க வேண்டும் என்பதற்காக அம்மா  இலங்கையில் கதிர்காம கோயிலுக்கு நேர்த்திக்கடன் வைத்து கந்த சஷ்டி விரதம் இருந்ததில்ருந்து தான் ஆரம்பமாகின்றது.

அது வரை அல்லது நான் பள்ளி செல்லும் வயது வரை என் தங்கைகளுடன் இருக்க வில்லை. என்னுடைய ஆறு வயது முதல் பத்து வயது வரை தான் நாங்கள் இணைந்திருந்தோம்.   மீண்டும் 10 வயதின் பின் நான் என் சகோதரிகளுடன் இல்லை என்பதனால்  என் மொத்த வாழ்க்கையில் நாங்கள் வெறும்  ஐந்து வருடங்கள் மட்டுமே  ஒன்றாய் இருந்தோம். அதன் பின் என் அப்பா நாட்டின் சூழ் நிலை கருதி நாட்டை விட்டு புறப்பட அம்மா என் இரு தங்கைகளின் படிப்புக்காக அவர்களை ஹாஸ்டலில் விட்டு விட்டார். பின் 15 வயது வரை என் தம்பியும் நான்காவதும், கடைசித்தங்கையும் இணைந்திருந்தோம். அதன் பின் என் 16 வயதில் அவர்களை விட்டு புறப்பட்டேன்.  

நான் என் குடும்பத்தினை விட்டு அதிக நாட்கள் பிரிந்தே இருந்திருக்கின்றேன் அதனால் அம்மா, அப்பா, சகோதர சகோதரிகளுக்குள் இயல்பாய் வரவேண்டிய ஒட்டுதல் பாசம் எனக்கு மட்டும் கிடைக்காமல் இருப்பதும்,  மற்ற அனைவரும் தமக்குள் ஒன்று பட்டு இருக்க நான் என்றும் வேற்று ஆளாய் தோன்றுவதும் என் சின்ன வயது சூழலால் தான் என  நான் நினைக்கின்றேன். என் உடல் மட்டும் அல்ல   உள்ளமும்,  தொலை தூரமாக இருப்பதாகவே உணர்கின்றேன். 

மட்டக்களப்பு அமிர்தகளி மாமாங்க கோயில் முன்பாக என்னுடைய அம்மாவும் நானும்   தங்கைகளுடன் இணைந்து  எடுத்த போட்டோ,



நான் குட்டிப்பெண்ணாய் இருக்கும் போது  கன்னம் வைத்து புஷ்ஷுனு குண்டாய் தான் இருப்பேனாம்,  எப்பவும், இப்பவும்  குண்டு குண்டு பூசணிக்காய்தான்!

இன்றைக்கு இந்த படத்தில்  இருக்கும் நால்வரும் ஆளுக்கொரு திசையில் சிதறடிக்கப்பட்டு விட்டோம்.  ஒரே வெள்ளைவர்|ண துணி சட்டை போட்டிருக்கும் நானும் தங்கையும் சுவிஸர் லாந்திலும்  ஆரஞ்சு சட்டை அவுஸ்ரேலியா சிட்னியிலும், அம்மா கையில் இருக்கும் குட்டிப்பாப்பா ஜேர்மனியிலுமாய்  புலம் பெயர்ந்தும் விட்டோம். என்னுடைய பத்தாவது வயதில் அப்பா எங்களை விட்டு  சுவிஸ் வர  புறப்பட்டதிலிருந்து இன்று வரை நாங்கள் மொத்தக்குடும்பமும்  ஒன்று சேரவும் இல்லை. கடைசித்தங்கை, தம்பி திருமணம் என நடந்த போதும் யாரோ ஒரு தங்கை கலந்து கொள்ள முடியாமல் போகும் சூழல் தான் இருக்கிறது.

படிப்பு நிமித்தமோ.குடும்பம் பெரிதானதாலோ மட்டக்களப்பை விட்டு பெரிய கல்லாறுக்கு  வாடகை வீடு மாறி என் ஆறாவது வயதில்  முதல் முதலாக பாடசாலை  பெரியகல்லாறு வினாயகர் வித்தியாலயம் போன நினைவு கூட என் நினைவில் இருக்கின்றது. அக்காலங்கள் தான் என் வாழில் பொற்காலங்கள் என்பேன்.

அந்த வீட்டில் பதினொரு வயது வரை இருந்த போதான நினைவுகளை   நான் சின்னவளாய் இருந்தபோது.-4 காணலாம்எ
ன் பாடசாலை அனுபவங்களை. நான் சின்னவளாய் இருந்தபோது.- 2 சென்றும் காணலாம்.

முதலாம் வ்குப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை கற்ற பாடசாலை.
பட உதவி நன்றி பேஸ்புக் தமிழ் பிரியன் 


சின்ன வயதில் நாங்கள் விளையாடிய வினா விடை பாடல்கள் பல புதிய சொற்களை கற்றிடவும்  நினைவாற்றல் பெருக்கிடவும் உதவியது எனலாம்.
அப்படிப்பட்ட சில பாடல்ளை இந்த தொடரிலும் பார்க்கலாமா?

நிலாநிலா
எங்கே போறாய்?
மண் எடுக்கப் போறேன்.
மண் என்னத்துக்கு?
சட்டிபானை செய்ய.
சட்டிபானை என்னத்துக்கு?
சோறாக்கித் தின்ன.

இந்த மாதிரி பாடல்களை கேட்டு விளையாடிய நினைவு இருக்கின்றதா உறவுகளே!

நிலாநிலா
எங்கெங்கேபோனாய் ?
களிமண்ணுக்குப் போனேன்.
களிமண் என்னத்துக்கு? வீடு கட்ட.
வீடு என்னத்துக்கு? மாடு கட்ட.
மாடு என்னத்துக்கு? சாணி போட.
சாணி என்னத்துக்கு? வீடுமெழுக.
வீடு என்னத்துக்கு? பிள்ளைபெற.
பிள்ளை என்னத்துக்கு?
எண்ணெய்க் குடத்திலே போட்டுப்
பிள்ளை துள்ளித் துள்ளி விளையாட

இதையும் படித்து பாருங்கள். உங்கள் நினைவுகளில் மீட்ட முடிந்தால் அதையும் பகிழுங்கள்.

ஒரு கொத்து ஈச்சங்கொட்டை வறுத்துகொட்டி
ஒன்பதுபேராகக் கூடிகுத்தி
கல்லடிநாச்சிக்குக் கல்யாணமாம்
கருகப்பிலையால் தாலிகட்டி.


என்னதாலி... பொன்தாலி-

என்னபொன்.... காக்காப்பொன்
என்னகாக்கா....அண்டங்காக்கா
என்னஅண்டம...பனையண்டம்
என்னபனை....ஓட்டுப்பனை
என்னஓடு....ஆமைஓடு
என்னஆமை.....பாலாமை
என்னபால்...கள்ளிப்பால்
என்னகள்ளி....சதுரக்கள்ளி
என்னசதுரம.....நாய்ச்சதுரம்
என்னநாய.....வேட்டைநாய்
என்ன வேட்டை....பன்றிவேட்டை
என்னபன்றி....ஊர்பன்றி
என்னஊர்.....கீரையூர்
என்னகீரை....மண்டூர்க்கீரை
என்னமண்டூர்....தில்லைமண்டூர்
தில்லைமண்டூருக்குப் போவோமடி

ஆச்சரியம் தரும் விடயம் என்ன தெரியுமா? இப்பாடல்களில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் கல்லடி நாச்சி, மண்டூர், கிரான் குளம் எல்லாமே இலங்கை கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் அமைந்திருக்கும் ஊர்களில் பெயர்கள்.கல்லடி நாச்சி என்பது கல்லடி எனும் ஊரில் இருக்கும் அம்மன் கோயிலையும்,  தில்லை மண்டூர் என்பது சின்னக்கதிர் காமமென அழைகப்படும்  முருகன் கோயிலை கொண்ட பிரசித்தி பெற்ற இடமாகவும்.
கிரான் குளம் எனும் ஊரும்  முந்திரியம் பழக்களுக்கு பெயர் போனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்பாடல்களை இயற்றியவர்கள் யார் என தெரியாவிட்டாலும் செவி வழியாக தொடர்ந்துகேட்டுப்பாடியே வருவது தான் இங்கே கவனிக்கத்தக்கது

ஒருவர் கேள்வியாய் கேட்க.. அடுத்தவர் சட்டென பதில் சொல்ல சிறுவர்கள் இருக்கும் இடத்தில் ஒரே கூச்சலும் கும்மாளமுமாய் குதுகலம் தரும் விளையாட்டும் இது!

கடலை கடலை 
என்ன கடலை...... உருண்டைக் கடலை
என்னவுருன்டை...... மாவுருண்டை
என்ன மா.....என்னம்மா



வாழைப்பழம்:...... 

என்னவாழை:.....கப்பல்வாழை
என்னகப்பல்: .......பாய்க்கப்பல்
என்னபாய்: பன்பாய்
என்னபன்:.....குளத்துபன்: 
என்னகுளம்: கிரான்குளம்

i

இது என்ன விளையாட்டு என நினைவிருக்கின்றதா உறவுகளே! இவ்விளையாட்டு குறித்த என் நினைவுகள் அடுத்த பதிவில் பார்க்கலாம்!

தொடர்வோம்>>>>>>>>>

17 கருத்துகள்:

  1. சிறப்பான பதிவு! என்னே உன் நினைவாற்றல்! அருமை!(சாலமன் பாப்பையா அவர்கள் தொனியில்...கற்பனை செய்து கொள்ளவும்)

    பதிலளிநீக்கு
  2. உங்கள் நினைவாற்றல் பிரமிக்க வைக்கிறது. பாடல்கள் அனைத்தும் அருமை.

    நினைவலைகள் தொடரட்டும்....

    பதிலளிநீக்கு
  3. தங்களின் நினைவோட்டங்கள் பதிவைப் படிக்கும் பலரையும் சிறு வயதுக்கு கொண்டு செல்லும் என்னையும்தான். சில விடயங்கள் மனதுக்கு வருத்தமாகவும் இருந்தது தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
  4. பழைய நினைவுகளை கிளறி அதை சுவைப்பட சொல்ல உங்களால்தான் முடியும் போல. அருமையான பதிவு. சின்னவயது பாடல்களை இப்போது நினைவில் வைத்து பகிர்ந்தமைக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. பாடல்கள் சிறப்பு! அந்த கால நினைவலைகள் என்னையும் பழைய நினைவுகளுக்கு கொண்டு சென்றது. புலம்பெயர்ந்து வாழ்தல் மிகவும் கொடுமைதான்!

    பதிலளிநீக்கு
  6. கிட்டிம்புல் விளையாட்டு. அழகான நினைவலைகள். உங்கள் சிறுவயது நினைவுகள் அனைத்தையும் நினைவிலிருக்கிறாதே! பாடல்கள் சிறப்பு. புலம் பெயர்தலில் எவ்வளவு துன்பங்கள் இல்லையா சகோ...தொடர்கின்றோம்

    பதிலளிநீக்கு
  7. வாழ்க்கையில் நம்மிடம் இருக்கும் ஒரே பொக்கிஷம் நம் நினைவுகள் தான்..அந்த பொக்கிஷம் உங்களிடம் நிறையவே உள்ளது அக்கா....தொடரட்டும் உங்கள் நினைவுகள்......

    பதிலளிநீக்கு
  8. வாழ்க்கையில் நம்மிடம் இருக்கும் ஒரே பொக்கிஷம் நம் நினைவுகள் தான்..அந்த பொக்கிஷம் உங்களிடம் நிறையவே உள்ளது அக்கா....தொடரட்டும் உங்கள் நினைவுகள்......

    பதிலளிநீக்கு
  9. ஐந்து வயது நினைவுகளை எல்லாம் அப்படியே ஞாபகத்தில் வைத்து அசை போட்டிருக்கிறீர்கள் அக்கா...

    சொந்த ஊரில் நாம் பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு விலகி அதை மீண்டும் பார்க்க முடியாமல் போவதைவிட வேதனை வேறொன்றும் இல்லை...

    எங்கள் வீடு கூட தம்பிக்கு கொடுக்கப்பட்டு இப்போ இடிக்கப்பட்டு விட்டது. நான் என் அண்ணன் மகன் எடுத்து வைத்திருந்த போட்டோவை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். நாங்கள் அண்ணன் தம்பிகள் நால்வரும் (அக்காள்கள் இதில் கலக்க மாட்டார்கள்) அம்மா மடியில் தலைவைத்து படுத்திருப்போம். ஒருவர் மீது ஒருவர் தலைவைத்துப் படுத்திருப்போம்.

    என் சட்டையை அண்ணன் போடுவார்... அவர் சட்டையை நான் போடுவேன்.. இப்படித்தான் இருந்தோம்... இப்ப காலம் நிறைய பிரிச்சி வச்சிடுச்சு... என்னத்தைச் சொல்ல...

    விளையாட்டுக்கள், பெரியம்மா பெரியப்பாவிடம் ஒட்டுதல், அம்மா தங்கைகளுடன் போட்டோ என பதிவில் பாசம் மிளிர்கிறது...

    அட அப்பவும் ஒரு குமார் உங்க தோழனாய் விளையாடியிருக்கான்.... அதான் இப்பவும் தொடருது போல இந்தக் குமார் ரூபத்துல...

    பாடல்கள் நன்று.

    இது கிட்டிப்புல்....

    பதிலளிநீக்கு
  10. பசுமையான நினைவுகளை ஒன்று விடாமல் எங்களுடன் பகிர்ந்தளிக்கு மட்டக்களப்பின் மாங்குயிலே உங்கள் நினைவுத்திறணை எண்ணி வியக்கிறேன் மிகவும் சந்தோசமாக உள்ளது உங்கள் நினைவுகளைப் படிக்கும் போது

    எனக்கும் பல நினைவுகள் உள்ளது ஆனால் உங்களைப் போன்று எழுத மட்டும் என்னால் முடியாது முயற்ச்சிக்கிறேன் முடிந்தால் நானும் எழுதுகிறேன்

    நன்றியுடன் நண்பன்

    பதிலளிநீக்கு
  11. நினைவுகள் அருமையாக தொடர்கின்றீர்கள்.கிட்டிப்புல் விளையாட்டு நினைவில் வருகின்றது.தொடர்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  12. சர்பத்தில் கசகசாவா!

    இனிமையான நினைவுகள். அந்த விளையாட்டு கிட்டிப்புள்!

    பதிலளிநீக்கு
  13. உங்களுக்கு நல்ல ஞாபக சக்தி !

    பதிலளிநீக்கு
  14. இனிய நினைவுகள்... ஞாபக சக்தி அசர வைத்தது...!

    பதிலளிநீக்கு
  15. சிறு வயதில் விளையாடி கிட்டிப் புல் விளையாட்டின் படத்தினை காட்சியாக்கி நினைவலைகளை பின்னோக்கித் திருப்பி விட்டுள்ளீர்கள் சகோதரியாரே
    நினைவலைகள் என்றுமே இனிமைதான்

    பதிலளிநீக்கு
  16. இளமை நினைவுகள் உங்கள் எழுத்தோவியமாக!
    அருமை

    பதிலளிநீக்கு
  17. சிறுபராயத்து நினைவு மீட்டல் மிக அருமை.

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!