பெண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27 மார்ச் 2019

பெண்ணியமும் எமது பெண்களும் ........!?

ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் குட்டை முடியை தவிர்த்து நீண்ட முடிகளை வளர்க்கவும், இந்திய கலாச்சார சல்வார், குர்தா போன்ற உடலை மூடி அங்கங்களை மறைக்கும் ஆடைகளை அணியவும் ஆர்வம் காட்டுகின்றார்கள். கோடை வெயில் காலத்திலும் அவர்கள் அணியும் ஆடைகளில் ஆபாசம் இருப்பதில்லை. நீச்சலுடையில் நீந்துமிடங்களில் கிடந்தாலும் ஆண்கள் கண்களில் கண்ணியம் தவறுவதில்லை அங்கங்களை மேய்வதிலை. அங்கங்கே அலைவாரும் இல்லை. / அரிதாக சிலர் விதிவிலக்காகலாம்.
ஆண், பெண் நட்புக்களை தரம் பிரித்து காமம், காதல் எனவெல்லாம் ஒதுக்குவதில்லை. பெண்ணுக்கு பெண் தோழிகள் போல் தான் ஆண் தோழர்களும் ஒரே சம கோணத்தில் அணுக கற்பிக்கப்படுகின்றார்கள். ஆண்களை காமமெனும் கடைக்கண் பார்வைகளில் வீழ்த்தும் செயல்பாடுகளில் பெண்கள் ஈடுபடுவதில்லை.
டேட்டிங்க,காதல் என சென்றாலும் ஒருவனுடன் தம் உறவை தொடரும் போது அவனுக்கு நம்பிக்கை துரோகம் செய்வதில்லை. திருமணம் எனும் சட்ட பூர்வ பந்தத்தை தவிர்த்தாலும்,ஒருவரோடொருவர் சேர்ந்து வாழும் காலத்தில் தம் பாட்னரின் அன்புக்கு அடங்குவார்கள்,உண்மையாக வாழ்வார்கள். புரிதல் இல்லாத போது மனமொத்து பேசி பிரிந்தாலும் எதிரிகள் ஆகாமல் நட்புடன் நண்பர்களாக் தொடர்வார்கள்.
30 வயது வரை சுதந்திரமாக தமக்கென கல்வி, பெருளாதாரம் என தன்னிறைவை தேடி வாழ்ந்து விட்டு 30 வயதின் பின் தம் எதிர்காலத்தை திட்டமிடுவார்கள். சட்டத்தை மதித்து திருமணம் செய்த பின் குழந்தைகள் குறித்து சிந்தித்து, குழந்தை பிறந்ததும் தாம் செய்யும் வேலைகளை விட்டு விலகி பிள்ளைகளை சரியாக வளர்க்க அக்கறை காட்டுவார்கள். கணவன், மனைவிக்கு மட்டுமலல் குழந்தைகளுக்கும் உண்மையாக வாழ்வார்கள்.
40 வயதுக்கு பின் தமக்கான வாழ்க்கையை சரியாக திட்டமிட்டு குழந்தைகளை சமூகத்தின் அக்கறையானவர்களாக வளர்த்து 16 வயது வரை அவர்களின் மீதாக பாதுகாப்பு, கண்காணிப்பை தொடர்ந்து, அரசின் சட்டங்களுக்குட்பட்டு கல்வியை வழங்கியும், பொருளாதார தேவைகளை நிறைவேற்றவும் செய்கின்றார்கள்.அன்பெனும் பெயரில் அடக்குமுறையும், அதீத செல்லமும், அளவு மீறிய கண்டிப்பும் இருப்பதில்லை. நள்ளிரவு பார்ட்டிகளில் தடையும் இல்லை,அவரவர் எல்லைக்கோடுகளை அவ்ர்கள் விருப்பம் இன்றி மீறப்படுவதும் இல்லை.
வன்முறை,வற்புறுத்தல்கள் காதலிலும், காமத்திலும் வெளிப்படுத்தப்படுவதில்லை. .
ஐரோப்பிய நாடுகள் பல நமது கலாச்சாரங்களை பின்பற்ற ஆரம்பித்து வெகுகாலமாகி விட்டது.
அதற்கு நேர் மாறாக தமிழ்ப்பெண்களின் வழிகாட்டிகளாக தம்மை வெளிக்காட்டிக்கொள்வோர், நீண்ட தலைமுடிகளை வெட்டி குட்டைஆக்குவது, ஜீன்ஸ்,டீசர்ட் போன்றவை அணிவதுமே பெண் விடுதலை தரும் எண்ணத்தினை திணிக்கின்றர்கள். 
ஆண் நட்புக்களோடு வெளியில் சுற்றுவதும், அவர்களுக்கு இணையாக புகைத்தல்,குடித்தல் தான் பெண்ணுக்கான விடுதலை என நம்ப வைக்கப்படுகின்றார்கள். ஆண் நண்பர்களுடன் கூடி கும்மாளமிடுவதும், அவர்களுடன் கவர்ச்சி, காமம் பேசுவதும் பெண்ணியம் என்றாகி போயிருக்கின்றது.

சட்டங்களை மீறுவதும், தடைகளை கடப்பதுமே பெண்ணுக்கானது என பயிற்றுவிக்கபப்டுகின்றார்கள்.
ஆண் பெண் உறுப்புக்களை சொல்லி விமர்சிப்பதும், 
பெண் உறுப்பில் விடுதலை கிடைக்குமென நம்பிக்கையோடு, மறைக்க வேண்டியதை குறித்து பேசுவதும், அரைகுறை ஆடைகள்:,பப்புகள், டிஸ்கோத்தேக்களில் தான் பெண்ணுக்கு சுதந்திரம் கிடைக்கும் எனும் மாயை உலகம் ஒன்றை சிருஷ்டித்து அவள் வாழ்க்கையை திசை திருப்புகின்றார்கள்.

இல்லாத ஒன்றை இருப்பதாக நம்ப வைப்பதும், இருப்பதை இல்லை என்பதும் தமிழர் பண்பாடாகிப்போனது. அதை நம்பவும் ஒரு கூட்டமுண்டு.அதுவே சரியெனும் பெரும் கூட்டமும் உண்டு.
பெண் ஆக்கவும்,அழிக்கவும் சக்தி வாய்ந்தவள். அவள் படைப்பே அது தான்.
உலகத்து பெண்கள் உலகாளும் உரிமைகளுக்கு உரியவராக தம்மை கட்டமைத்து கொள்ள போராடும் போது,எங்கள் பெண்களோ உடலாளம் தேடி பயணிப்பதே தம் விடுதலை என்கின்றார்கள்.
உலகம் எதை கொண்டு தமிழர் கலாச்சாரம், பண்பாடு என மேன்மை படுத்துகின்றதோ, 
எதனால் நாம் உயர்ந்து நின்றோமோ 
அதுவே சீரழிக்கப்படுகின்றது.
சின்னாபின்னமாக்கப்படுகின்றது.

தமிழ்ப்பெண்கள் பெண் விடுதலை எனும் பெயரில் தம்மை மட்டுமலல் தமிழ் சமுகத்தையே அழித்து கொண்டிருக்கின்றார்கள்.
எது உண்மையான பெண் விடுதலை என்பதை தமிழ்ப்பெண்களுக்கு உணர்த்தும் எல்லைக்கோட்டில் நாம் நிற்கின்றோம்.
உலகத்தில் சகல பெண்களுக்கும் தேவையானது . 
நிமிர்ந்த நன்னடை 
நேர்கொண்ட பார்வை 
எதற்கு அஞ்சா திண்மை
தெளிந்த சிந்தனை.
கல்வி
பொருளாதாரம் 
பணிவும்,பண்பும்
அன்பும்,அறனுமே.

நாம் தேட வேண்டியதும், எடுத்து கொள்ள வே\ண்டிய உரிமையும் இதுவே.
ஆனால்..............!?
நாம் வாழ்வோமா? வீழ்வோமா?❤️
❤️உலகப்பெண்களில,தமிழ்ப்பெண்களுக்கான நிர்வாகம், உரிமை சார்ந்த ஆளுமை, அறிவு போல் வேறெந்த பெண்களிடமும் காண முடியாது. பெரும்பாலான குடும்பங்களில் நிர்வாகம் என்பது பெண்களிடம் என்பதில் ஈழத்து தமிழ் பெண்கள் மேம்பட்டிருக்கின்றார்கள் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
🔴👁‍🗨குறிப்பு* எனது பதிவு பெண்களை குற்றம் சாட்டி, அவர்களை கூனிக்குறுக வைக்கும் நோக்கத்தில் எழுதப்படவில்லை என்பதை கருத்தில் கொள்ளவும். பெண்ணியம் எனும் இலக்கில் மேலை நாட்டு பெண்கள்,ஆண்களை பழிவாங்க, ஆணுக்கு பெண் நிகரென நிருபிக்க கடைப்பிடித்த பல விடயங்களை அவர்களின் தவறான அணுகுமுறையென உணர்ந்து கொள்ளப்பட்டு, அதிலிருந்து மீண்டு சரியான இலக்கினுள் வரும் போது அவர்கள் வேண்டாம் என விடுபட்டு வரும் பழக்கங்களை நமது பெண்கள் தமக்கான விடுதலைப்பாதையின் இலக்கென திசை மாற்றம் செய்வது நலல்தல்ல என்பதை உணர சொல்வதே இப்பதிவின் நோக்கம்.

21 மார்ச் 2019

வழிகள் பல இங்குண்டு கேள் பெண்ணே....!

ஆங்கோர் அபலை 
கடலைலை போலே 
அங்குமிங்கும் பரிதவிக்க 
ஊருக்குள் யோக்கியராய் 
உத்தமராய் வேஷமிட்டு 
உள்வீட்டு உடைசல்களை
உடைத்தெறிய வழிதெரியா 
நீதிமான் போதனைகள்
நீயறிவாயா பெண்ணே....!

உனக்கென நானிருப்பேன் 
உள்ளமெல்லாம் உன்நினைவே
உணர்வை யள்ளித்தெளித்து 
உயர்வது வென்றுரைத்து
சத்தியம் தானென்றும் 
நித்தியம் நீ என்பார். 
தடையகற்றி தாண்டி விடும்
வழிகள் பல சொல்லிடுவார்
விதி யொன்றை உனக்காகச் சமைப்பார்

தங்கு தடையில்லாமல் 
தாராளமாய் வாழ்தல் 
தவறில்லை என்றுரைப்பார்
உன் வழி இதுவெனவே
தனி வழியை பரிந்துரைப்பார்.
தன்னகத்தில் கறையில்லை
நிறைகுடம் தானென்பார்.
கலங்கிடும் காரிகையவளை 
காதலெனும் மாயையால் வீழ்த்தி 
காமத்தில் முழ்கடிப்பார்.
காமத்தை தூதுவிடும் காளையர்கள்

காதலதில் கறையுண்டென்றுணர்ந்து 
புறம் தள்ளி பறந்தோடி வா பெண்ணே
புது விடியல் உனக்குண்டு பெண்ணே
வாழ்க்கையது வாழ்வதற்குத்தான் பெண்ணே
வழிகள் பல இங்குண்டு கேள் பெண்ணே....!

18 மார்ச் 2019

நாங்கள் பாரதி கண்ட புதுமைப்பெண்களா?

பெண் விடுதலை என்றால் எமக்குள் நினைவு வருபவர் பாரதியார். பாரதியார் விரும்பிய பெண் சுதந்திரம் அல்லது பெண் விடுதலை எப்படிப்பட்டது என்பதை இப்பதிவில் ஆராயலாம்.
“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப் 
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!”

ஆணும் பெண்ணும் நிகரானவர்களாக ஆணுக்குள் பெண்மையும், பெண்ணுக்குள் ஆண்மையும் நிறைந்ததே பெண்ணியம். ஏற்றத்தாழ்வுகள் இன்றி இருவரும் நிகரானவர்களாகும் போது தான் உலகம் தளைக்கும் என்கின்றார்.பெண்மை எனும் மென்மைக்குள் அனைத்தையும் ஆளும் சக்தியே பெண் என்கின்றார்.
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனும் நாற்குணங்களும் பெண்கள் நற்குணங்களாய் கடைப்பிடிக்கப்பட்ட சமூகத்திலிருந்து பாரதியாரின் குரல் உரத்தொலிக்கின்றது.
நாணும் அச்சமும் நாய்கட்கு வேணுமாம்”
தேவையற்ற பயம், கூச்சம், தயக்கம்  தீமையான காரியங்கள் பல உருவாக காரணமாகி விடுவதனால் தீமை செய்கிற ஒருவன் வெட்கி தலைகுனிந்து [*நாணுவதற்கு] பதில் ஒரு நல்லவன், நன்மை செய்பவன் தலைகுனிந்து நிற்கக்கூடாது.நாணமும் அச்சமும் நாய்களுக்கு உரியதே என மிக கடுமையாக கூறி பெண்கள் தீய காரியங்களை எதிர்த்து நிற்க தயக்கமே கூச்சமோ,பயமோ படக்கூடாது என்கின்றார் பாரதியார். / ஆண்களுக்கும் தான்😍

“ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்!”
அறிவு,அறம், வீரம் எனும் நற்குணங்களை கொண்ட பெண்களால் பெண் சுதந்திரம் மேன்மை பெறும் என்கின்றார்.
பெண் சுதந்திரம், விடுதலைப்போராளிகளாக பாரதியார் பாடிய பாடல்களை மேடை தோறும் எடுத்தாள்வோருக்கு பாரதியார் காட்டிய பெண் விடுதலை எத்தகையது என்பதை குறித்த தெளிவுகள் இன்மையினால் இன்றைய பெண்களின் விடுதலை என்பது தடம் மாறி போய் விட்டிருக்கின்றதெனலாம்.
பாரதியார் வாழ்ந்த காலகட்டத்தில் 

🔘பெண்கள்அடக்கியாளப்பட்டார்கள்.
🔘அடிமைகளாக நடத்தப்பட்டார்கள். 
🔘வீட்டுக்குள் அடக்கி வைக்கப்பட்டார்கள். 
🔘உடன்கட்டை ஏற கட்டாயப் படுத்தப்பட்டார்கள் 
🔘பால்ய விவாகத்துக்குட்படுத்தப்பட்டார்கள்.

அதனால் தான் பாரதியார் சொல்கின்ரார்.
“அறிவு கொண்ட மனித வுயிர்களை 
அடிமையாக்க முயல்பவர் பித்தராம்; 
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர் நேர்மை 
கொண்டுயர் தேவர்க ளாதற்கே, 
சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள் தீயிலிட்டுப் 
பொசுக்கிட வேண்டுமாம்”

மனிதர்களுக்குள் ஜாதி அடக்குமுறைகள், 
ஆறறிவு கொண்ட மனிதர்களை அடக்குவோர் பித்தர்கள். பல கட்டுப்பாடுகளை விதித்து மனிதர்களை கட்டுப்படுத்தும் நெறிகளை 
தீயிலிட்டுப் பொசுக்கிட வேண்டும் என்கின்றார். பெண்ணை மட்டுமல்ல மனிதர்களை ஒடுக்கும் அனைவரையும் சாடுகின்றார்.உயர்ந்தவன் தாழ்ந்தவன் ஏற்றத்தாழ்வுகளை வன்மையாக கண்டிக்கின்றார் பாரதி.

புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும் 
பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச் சதுமறைப்படி 
மாந்தர் இருந்தநாள் தன்னி லேபொது வான் வழக்கமாம்;

மதுரத் தேமொழி மங்கையர் உண்மைதேர் 
மாத வப்பெரி யோருட னொப்புற்றே 
முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய முறைமை
மாறிடக் கேடு விளைந்ததாம்.

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், 
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், 
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் 
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;

புதுமைப்பெண்களின் பேச்சில் இனிமையும்,செயல்பாடுகளில் மெய்யும் இருக்க வேண்டும். பொய்மை இருக்ககூடாது,வயதுக்கு தகுந்த படி அவர்கள் தம் அறிவினை வளர்த்து சமூகத்துக்கு முன்மாதிரியாக் வாழ்ந்து காட்ட வேண்டும்.
தன் சுயம் இழக்காது நேர்மையாக நிமிர்ந்து நின்று, பிரச்சனைகளை நேருக்கு நேர் அணுகி, தேவையான நேரத்தில் தன் குரலை உரத்து எழுப்பி, தம் வளர்ச்சியின் இடையூறுகளைக் களைந்து, தம்மைஊக்குவித்துக் கொள்ளவும், தீமையைக் கண்டு அஞ்சி ஒடுங்காமல் எதிர்த்து போராடுபவளாகவும் வாழ அநீதிகளை கண்டு அஞ்சாமையை திமிர்ந்த ஞானச்செருக்கு நமக்கு தரும் போது பெண்கள் என்றுமே எவருகும் மிரண்டு பயந்து அடங்கி போக தேவை இருக்காது என்கின்றார் பாரதீ.

ஆம ! பாரதி எமக்குள் தீயை தான் விதைக்கின்றார். சமூகத்தின் அநீதிகளை சுட்டெரிக்கும் தீயாக பெண்கள் மாற வேண்டும் என்கின்றான் பாரதி
நம்மை ஆராய்வோம ! சிந்திப்போம் !

பாரதி தேடிய பெண் சுதந்திரம் எத்தகையது?
அடுத்த பதிவில் தொடரலாம்.

இதையும் தொடரலாம். 

16 மார்ச் 2019

மேலை நாட்டுக்கல்வித்திட்டங்களின் சிறப்பம்சம் என்ன?

ஐரோப்பா, பிரிட்டன்,அமெரிக்கா, கனடாவின் கல்வித்திட்டங்களுக்கும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளின் கல்வித்திட்டங்களுக்கும் இருக்கும் வேறுபாடுகள் என்ன? ஏன்? எனும் தலைப்பில்   நீண்ட விவாதம் ஒன்று பேஸ்புக்கில் நடந்தது. அப்பதிவை இந்த லிங்கில் காணலாம்
தமிழ் நாட்டு நட்புக்கள் ஐந்தாம், எட்டாம் வகுப்பில் தேர்வு வைப்பதை ஏன் எதிர்க்கின்றீர்கள் என பகிர முடியுமா?
இலங்கை, இந்தியா சம்பந்தமான விடயங்களை ஆழமாக உள்வாங்கும் போது பல கருத்துக்கள் என் வாழ்வியலிலிருந்து மாறுபட்டு நெகடிவ்வாகவே இருக்கின்றது.
எனக்கு பாசிடிவ் உங்களுக்கு நெகடிவ் ஆகின்றது. உங்கள் பாசிடிவ் எனக்கு நெகடிவ் ஆகின்றது என குறை சொல்லி கடந்து செல்வது சமுகத்துக்கு நான் செய்யும் நன்மையாகுமா?
அதெப்படி எல்லாமே நெகடிவ்வாகவே எனக்குள் தோன்றுகின்றது?
பல நேரம் நான் கடந்து வந்த வாழ்க்கை அனுபவத்தை பகிரும் போது ஏற்றுக்கொள்ள சிரமப்படுவதோடு, எதிர் கருத்து சொன்னால் என் நட்பு பாதிக்கப்படும் அல்லது மனம் வருத்தமடையும் என நினைத்து ஒதுங்கி செல்கின்றீர்கள்./ அல்லது எனக்கு அப்படி தோன்றுகின்றதா? .
சும்மா பெயரளவில் நட்புப்பட்டியலில் இருக்கவேண்டுமானால் நாம் ஏன் நட்பாக வேண்டும்? தொடர வேண்டும்?
தமக்கு பிரியமானவர்கள் என்பதனால் தவறென்றுணர்ந்ததை, தட்டிக்கேட்காமல் 
தட்டிக்கொடுத்தும் ஆதரித்தும் சமூகத்தில் இனம் காட்டப்படுவதை விட குட்டி உணர்த்தி திருத்துவது சமூகத்துக்கு செய்யக்கூடிய கடமை என்பேன்

முகஸ்துதி செய்பவர்களால் நாம் வளர்ச்சி யடையப்போவதே இல்லை. அவர்கள் நம் நலன் விரும்பிகளாக இருக்கவும் முடியாது. .
செய்யும் தவறை சொன்னால் பலரால் உடனடியாக புரிந்து கொள்ள முடியாமல் போகலாம், ஆனால் காலம் அவர்களுக்கு உணர்த்தும் போது அவர்களே நம்மை தேடி வருவார்கள். தம் தவறுகளை உணர்வார்கள். அப்போதும் நாம் நிமிர்ந்து தான் நிற்போம். இதுவும் நான் கடந்து வந்த அனுபவம் தான்.
அதிருக்கட்டும்.
சுவிஸில் ஐந்தாம் ஆறாம், வகுப்பில் படிக்கும் போது வைக்கப்படும் தேர்வுகளில் கிடைக்கும் புள்ளிகள் தான் மாணவர்களுக்கான் உயர் கல்வி, மற்றும் வேலை வாய்ப்பை தீர்மானிக்கின்றது. அதனால் நான்காம் வகுப்பிலிருந்து பாடங்கள் இறுக்கமாகும், ஐந்தாம் வகுப்பில் முழு மதிப்பெண் எடுக்கா விட்டாலும் ஆறாம் வகுப்பில் அதை சீராக்க வேண்டும். ஏழாம் வகுப்பில் அவர்கள் இலக்குகள் தீர்மானிக்கப்பட்டு தொழிற்படிப்பு, மேற்படிப்பு என இருவழிகளில் பிரிக்கப்பட்டு விடுவார்கள். அதாவது ஒரு பிள்ளையின் எதிர்கால இலக்குகள் அவன் 16 வயதுக்கு முன் தீர்மானிக்கப்பட்டு விடுகின்றது. ஐந்து வயதில் தொடங்கும் கிண்டர்கார்டன் பாலர் பள்ளி, ஏழாம் வகுப்பில் அவன் இலக்குகளை தீர்மானிக்க வைக்கின்றது.
நீங்கள் பத்தாம் வகுப்பு வரை தேர்வே வேண்டாம் என்கின்றீர்கள். என்ன காரணம்?
சுவிஸ் நாட்டின் கல்வி குறித்து விரிவான பதிலை நாளை பதிவாக்குகின்றேன். அதற்கு முன் ஏனைய நாட்டு நட்புக்கள் தங்கள் கருத்துக்களை பகிருங்களேன்.

15 மார்ச் 2019

அரசியல் எனும் சதுரங்கத்தில் பகடைகளாக்கப்படும் பெண்கள். 1

நிரம்ப விடயம் பேசப்படுகின்றது. பொள்ளச்சி விடயமா ஏன்கா நீங்க பதிவு போடல்ல எனும் ஆதங்கமும் இன்பாக்சில் வருகின்றது.
என்ன எழுத வேண்டும்? பெப்ரவரி 22 ம் திகதி ,பேஸ்புக் நட்பை தவறாக பயன் படுத்தி ஏமாற்றம், மிரட்டல், மானபங்கப்படுத்தி புகைப்படம் எடுக்கப்பட்டதென சாதாரணமாக கடந்து சென்ற செய்தி ஒன்று மார்ச் 12 ம் திகதி அன்று தான் நடந்ததென்பதை போல் ஐயோ அண்ணா எனும் கதறலுடன் வரும் காணொளியின் மூலம் பரவலாகின்றது. அதை பகிர்ந்து நியாயம் கேட்கும் பதிவுகளில் பின் பெண்களின் பாதுகாப்பும், அக்கறையும் மறைந்திருக்கின்றதா?
🔴எமது செயல்பாடுகள் தவறு உணர்த்துகின்றதா? அல்லது இப்படியெல்லாம் சமூகத்தை சீரழிக்கலாம் எனும் புதிய வழிகளை காண்பிக்கின்றதா?
🔴 நியாயம் கேட்கின்றோம் என நாற்சந்தியில் ஸ்பீக்கர் கட்டி, எங்கள் பெண்களில் அறிவீனத்தை, பலவீனத்தை வேடிக்கை பொருளாக்கத்தான் வேண்டுமா?
🔴நிர்வாணம் தப்பில்லை என எழுதுவோர் தங்கள்முழு நிர்வாண புகைப்படம் பகிர வேண்டாம். முக்கால்நிர்வாண புகைப்படத்தை பொதுவில் பகிர்ந்தால் கடந்து செல்வார்களா? அது சமூகத்துக்கும், தனி நபருக்கும் உலகத்தின் பார்வையில் நல் மதிப்பை தருமா?
என் பெண்ணிடம் இந்த பொள்ளச்சி விபரத்தை சொல்லி கலந்துரையாடினேன்.ஏன்மா மூளையில்லையாம்மா இவங்களுக்கு? நமக்கு தெரிந்தவர்களையே நம்மால் நம்ப முடியாத போது எப்படிம்மா தெரியாத இன்ரர் நெட் பிரெண்டைநம்பி போக முடியும் என்கின்றாள்?
காதல்,காமம்,நிர்வாணம் தப்பில்லை என ஊருக்கு பாசாங்காக பகிர்ந்தாலும் அடி மனதில் முன் பின் தெரியாதவனை நம்பி இவள் ஏன் போனாள் எனும் கேள்விக்கு முன் அனைத்தும் அடங்கி போவதை நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
🔴 நம் வீட்டு பெண்ணை பொத்தி வைச்சிட்டு அடுத்த வீட்டு பெண்ணுக்கு ஒன்றென்றால் ஆயிரமாயிரம் ஆலோசனை தர நம்மவரால் மட்டும் தான் முடியும்.
பெண்களின் மீட்சி எனும் பெயரில் அவளுக்குள் ஆண்,பெண் சமத்துவம் எனும் பெண்ணியத்தை புகுத்த நினைக்காமல ஆணுக்கு பெண் எதிரி எனும் புரிதலை உருவாக்குவது நன்மை பயக்குமா?
உணர்வுக்கு இடம் கொடுக்காமல் அறிவுக்கு இடம் கொடுத்து சிந்திக்க ஆரம்பித்தால் பொள்ளச்சி எனும் பெயரில் வெளி வந்திருப்பது வெறும் ஐந்து சத வீத அவலங்கள் தான் என்பதை நாம் அறிய முடியும்.
இன்னமும் வெளிவராத 90 வீத பிரச்சனைகள் உண்டு. இது பெரும் வலைப்பின்னலாய், இது தான் பெண்ணியம், இதுவே பெண் விடுதலை, சுதந்திரம் எனும் பெயரில் சிலந்தி வலைபோல் பெண்களை சுற்றி பின்னப்பட்டிருக்கின்றது. இது ஒரிரு நாட்கள் நடந்தவை அல்ல. பல்லாண்டு தொடர்பவை.
என் பார்வைக்கு அடிக்கடி இம்மாதிரி செய்திகள் கொண்டு வரப்படும்.போதெல்லாம் நட்பில் இருக்கும்,இல்லாத பெண்களை எச்சரிக்க தயங்குவதில்லை. நமக்கேன் வம்பு என கடந்தும் செல்வதில்லை. அதை பொதுவில் சொல்லி அவளை சங்கடப்படுத்துவதும் இல்லை.
இந்த வலைப்பின்னலிலிருந்து எப்படி எமது பெண்களை வெளிக்கொண்டு வரலாமென்பதே இன்றைய எமது இலக்காக இருக்கும் போது, பெண்களையும் அவர்தம் பிரச்சனைகளையும் ஆரசியல் ஆதாயங்களுக்காக பயன் படுத்துவோரின் செயல்பாடுகளை எப்படி ஆதரிக்க முடியும்?
பெண்கள் முன்னேற்றமானது இம்மாதிரி பிரச்சனைகள் நேரம் தடைப்பட்டு நிற்பதை இன்னமும் உணராதிருப்பது கவலைக்குரிய விஷயம்.தயவு செய்து இவ்விடத்தில் உங்களை நீங்கள் ஆராய்ந்து பாருங்கள்.
1.பெண்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க அரசியல்,ஆதாயங்கள்,லாப நஷ்டங்கள் தேவைப்படுமானால் நமது சமூகத்தில் பெண்களுக்கான மதிப்பீடு எத்தகையது?
2.பெண்கள் எனும் துருப்புச்சீட்டு அவள் முன்னேற்றம் சார்ந்து குரல் கொடுக்கப்பட்டதில்லை என்பதை அவதானித்திருக்கின்றீர்களா?
3.எங்கேனும் சறுக்கி விழுந்தால் ஓடிவரும் கூட்டம். பரிதாபப்படும் கூட்டம் அவள் உயர எத்தகையை வழிவகைகளை உருவாக்கி தருகின்றது?
பாதிக்கப்பட்ட பெண், தன் பிரச்சனைகளை நம்பி சொல்லும் போது அதை எச்சூழலிலும் வெளியில் பகிரக்கூடாது, அனுபவ பாடமாக கூட பகிரக்கூடாது. அவசியமானாலும் அவள் வாழ்க்கையில் நடந்ததை அப்படியே எவரிடமும் பெயர் சொல்லாமல் கூட பகிரக்கூடாது எனும் சுய கட்டுப்பாடு எனக்குள் உண்டு. .அப்படி பகிரும் போது அப்பெண் அதை படிக்கும் சூழலில் தன் வாழ்க்கை இப்படி பொதுவில் பகிரப்பட்டிருக்கின்றதே என மனம் உடைவதுடன், தனக்கு நம்பிக்கையானவர்கள் என நம்பியவர்களையும் சந்தேகித்து, தன் மனதை இறுக்கமாக்கி கொள்வாள்.
இந்த பிரச்சனைகளின் பின்னிருக்கும் விசாரனைகள் எனும் பெயரில் தோண்ட தோண்ட பூதமாக புதைகுழிகளிலிருந்து வரும் நாற்றம் போல், வெளிப்படும் உண்மைகள் தமிழ்ப்பெண்கள் மீதே சேற்றை வாரி இறைக்கும் எனும் உண்மை தெரிந்த பின் எதை எழுத முடியும்?
எம் பெண்களின் ஆளுமையை முடக்கி, கேலிச்சித்திரங்களாக்கி போடும் அரசியல் ஆதாயங்களுக்கு பின்னிருக்கும் கயமைத்தனம் கொடுமையானது. பெண்ணின் ஆளுமையை உடைத்து போடும் சதிவலை இதன் பின்னால் இருக்கின்றதென அறிந்த பின் எதை எழுத முடியும்?
பேசிப்பேசியே பேரவலங்களை உருவாக்கி கொண்டு செல்கின்றோம். தீமைகள் வேர் பிடிக்கின்றன. தீர்வுகள் எட்டவே செல்கின்றன.
அனுபவப்பாடங்கள் என பல எழுதப்பட்டு அவற்றை சக பெண்களே புரிந்து கொள்ளாமல், எழுதப்படும் விடயங்கள் தமக்கான நன்மைக்கும் தான் எனும் உணர்தலை பெறாத வரை சமூக வலைத்தளங்களை பாதுகாப்பாக உபயோகப்படுத்துங்கள் எனும் பதிவுகள் பயனற்று தான் போகின்றது.
நாங்கள் எங்கள் அறிவினை வளர்க்க, உலகில் நடைபெறும் நன்மை,தீமைகளை உடனுக்குடன் அறிய, உலகின் எங்கோ ஒரு மூலையிலிருந்தாலும் அவசர தேவைக்கு தொடர்பு கொள்ள,பயன் படுத்த, சமூகம் சார்ந்த பல சீர்திருத்தங்கள், உதவிகளை பரவலாக்க என எத்தனையோ நன்மைகள் கொட்டிக்கிடக்கின்றன.கல்வி, இயற்கை,முன்னேற்றம்,சமூகம் சார்ந்த கண்டவை, கேட்டவை, உணர்ந்தவை எனும் பாசிடிவ், நெகடிவ் வாழ்க்கைக்கான பாடங்களை பகிரும் போது அதை எத்தனை பேர் படித்து பயன் பெறுகின்றார்கள்?
ஒவ்வொரு பதிவின் பின்னாலும் புகைப்படங்கள் விதவிதமாக பதிவிட்டு அதன் மூலம் கிடைக்கும் லைக்ஸ் எனும் மாயைக்குள் தம்மை அறியாது சிக்கி தம்மை வழிகாட்டியாக பின் பற்றும் இளையோரையும் அதே பாதைக்கு திசை திருப்பி விடுகின்றார்கள்?
களிமண்ணை அழகு சிலையாக்குவதும், அழகுச்சிலைகளை களிமண்ணாக்கி பிசைந்து போடுவதும்,முடக்கி போடுவதும் அவரவர தம்மை வெளிப்படுத்தும்,பயன் படுத்தும் விதத்தில் தான்.
நிஜ வாழ்க்கையை மறந்ததொரு நிழல் வாழ்க்கை தேடுவோரை நாம் இனம் காண முடியுமா?
நிர்வாணம் தப்பில்லை என பெணணை சொல்லும் ஆணால் அவள் நிர்வாணத்தை கண்டு இலகுவாக கடந்து செல்ல முடியுமா?
அடுத்த பகிர்வில் பார்க்கலாம். பெண்கள் அரசியல் பகடைகளா 1

05 பிப்ரவரி 2019

அம்மா...!

அம்மா...!
அம்மா எனும் பெண், அப்பா எனும் ஆண் உறவை முதலில்  அறிமுகப்படுத்துகின்றாள்.
அம்மா என்பவள் அப்பாவை எப்படி உருவகப்படுத்துகின்றாளோ அப்படி தான் குழந்தைகள் மனதில் ஆண் எனும் அப்பாவினை குறித்த பிம்பம் பதிவாகின்றது. அதே போல் அண்ணன், தம்பி என எந்த உறவானாலும் ஒரு பெண்குழந்தைக்கு தாய் தான் முதல் ஆசான்.
மாதா,பிதா,குரு தெய்வம். என தெய்வத்தை கடைசியில் வைத்து தாயை முதன்மைப்படுத்தும் சமூகம் எங்கள் தமிழ்ச்சமூகம்.
அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் 
ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது ஔவையார் வாக்கு.

உன் தாயையும் தகப்பனையும் கனப்படுத்துவாயாக என்கின்றது கிறிஸ்தவர்களின் வேத நூலான பைபிள்.
உன் தாய்க்கு நீ செய்யும் பணிவிடை நீ சொர்க்கம் செல்வதற்கான அனுமதிச்சீட்டு என்கின்றது குரான்.
எல்லா மத நம்பிக்கைகளுமே அன்னை எனும் தாய்மையை மதிக்க சொல்கின்றன.
அன்னை எனும் பெண் தான் ஆண் குழந்தைக்கோ பெண் குழந்தைக்கோ முதல் ஆதர்ச நாயகி, வழிகாட்டி,ஆசான்,கடவுள் எல்லாமே அன்னை தான். குறைந்தது 3 வயது வரையிலேனும் அன்னை மட்டுமே ஒரு குழந்தைக்கு நெருக்கமானவளாக இருக்கின்றாள். வளர்ந்து விட்டாலும் பல ஆண் குழந்தைகள் அன்னையை சார்ந்தே வாழ பழகி இருக்கின்றார்கள். அல்லது அப்படி பழக்கப்ப்டுத்தப்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.
பெண் குழந்தைக்கு அப்பா என்பவன் ஆதர்ச நாயகனாக, வழிகாட்டியான,முதல் தோழனாக அறிமுகமாக்கப்படுவதும் அன்னை எனும் பெண்ணினால் தான்.
ஆனால் காலம் சுழல்கின்றது. பெ|ண் என்பவள் சுயமானவள், தனித்துவமானவள். எவளும் அவளுக்கு இணையில்லை என்பதையும் பெண்ணாலே அனைத்தையும் ஆக்கவும் அழிக்கவும் முடியும் என்பதையும் அவள் நிருபித்து கொண்டிருக்கின்றாள்.
பெண்ணியம் எனும் பெயரில் ஆண்களை குறித்த பிரச்சாரமும், விமர்சனமும் ஆண்களுக்கு எதிரானதொரு சமுகத்தை உருவாக்கி கொண்டிருப்பதை போல் ஆண் குழந்தைகள் மனதிலும் ஆண் என்பவனைக்குறித்த தவறான பிம்பம் அதே அன்னையினால் உருவாக்கபப்டுமானால் எமது சமுகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என என்றேனும் சிந்தித்திருக்கின்றோமா?
தமிழச்சமூகத்தின் கலாச்சாரம் சார்ந்த பண்பாட்டை காப்பதிலும் பெண்களுக்கான பங்கு அளப்பரியது. 
தொன்மை மிக்க தமிழர் வரலாறு பெண்ணை அடிமைப்படுத்தவில்லை.

அவள் அடிமைப்படுத்தப்பட்டதான உளவியல் தாக்கத்தை உருவாக்கி அவளை கொண்டே அவளை அடிமைப்படுத்துவதில் வெற்றி கண்டிருக்கின்றது.
இனிவரும் காலத்தில் ஆண்களை குறித்த பெண்களுக்கான புரிதல்களும், 
ஆண்களுக்கு தம்மை குறித்த புரிதல்களும் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை இன்றைய தாய்மார்களான் பெண்கள் தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள்.

அதை பெண்களுக்கு உணர்த்த வேண்டிய கட்டாயம் ஆண்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. சமுக வலைத்தளங்களினூடாக பற்றவைக்கப்படும் நெருப்பை அணைத்து தாம் சாம்பலாகுவதா? சரித்திரமாகுவதா என்பதை ஆண்கள் முடிவெடுக்க வேண்டிய நிர்ப்பந்தந்தில் இருக்கின்றார்கள்.
நமது சமுதாயத்தில் ஆண்கள் நல்லவர்களாக இல்லை, வரதட்சனை கொடுமை செய்கின்றார்கள். மிதிக்கின்றார்கள் என்றால் அவனை அப்படி உருவாக்கியது யார் தவறு?
சமூக அக்கறை கொண்ட ஆணும், பெண்ணும் தம்மை சுய ஆராய்ச்சிசெய்து சீர்ப்படுத்தாவிட்டால் எமது எதிர்கால சந்ததிகளுக்கான தவறான முன்னுதாரணங்களாக நாம் வரலாற்றில் பதிவாக்கப்படுவோம்.
சிந்திப்போம்.

கௌசல்யா சக்தி

கௌசல்யா சக்தி
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதான ஆதாரங்களோடு 22 வயது இளம் பெண் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றாள்.
ஆணவப்படுகொலையினால் பாதிக்கப்பட்டவள் என்ற அடிப்படையில் அரசுப்பணியான இந்திய மத்திய அரசின் இராணுவப்பணிமனை வேலையிலிருந்து தகுந்த காரணங்களோடு பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றாள்.
நூணலும் தன் வாயினால் கெடும் என்பது போல் அவள் பேசிய பேச்சுக்களே ஆதாரமாக நீதியின் முன் வைக்கப்பட்டிருக்கின்றது?
இத்தனை சிறு வயதில் அந்த அப்பாவி பெண்ணுக்கு இந்த கொடுமையான அனுபவம் தேவை தானா?
கௌசல்யா சங்கரை காதலிக்கும் போது 17 வயது, சங்கருக்கு 21 வயது. சங்கர் கொலை செய்யப்பட்ட போது கௌசல்யாவுக்கு 18 வயது. சங்கருக்கு 22 வயது. எஞ்ஞினியரிங்க கல்லூரி மாணவன். படித்து பட்டம் பெற்று பெற்றோருக்கு பெருமை சேர்த்திருக்க வேண்டியவன்.
கௌசல்யா சக்தியை திருமணம் செய்த போது 21 வயது.
இளம் வயதில் எடுப்பார் கைப்பிள்ளையாக்கி அந்த பெண் வாழ்க்கையை நாசமாக்கும் உரிமையை யார் கொடுத்தது?
தோற்றத்தில் மாற்றத்தை உருவாக்கியோர் அவள் சிந்தனையில் விசத்தை விதைத்தும் அவளை தம் ஆதாயத்துக்கு பகடையாக பயன் படுத்துவதும் தவறென தட்டிக்கேட்காத எல்லோருமே இங்கே குற்றவாளிகளாக இருக்கின்றார்கள்.
முதல் தப்பே உணர்த்தப்படாத நிலையில் இரண்டாம் தப்பு செய்ய தூண்டுதலாக இருந்த இந்த சமூகத்தினை தட்டிக்கேட்க போவது யார்?
அவள் இரண்டாம் திருமண நேரம், வாழ்த்துப்பாமாலைகள் பாடியோரும், அக்கா, தங்கை, மகள் எனவெல்லாம் வாழ்த்தியோரும் என்ன பதில் வைத்திருக்கின்றார்கள்?
தவறுகள் உணர்த்தப்படாமல் தம் ஆதாயத்துக்காக ஒரு இளம் பெண் வாழ்க்கையை பாழாக்கி கேள்விக்குறியாக்கி நிற்கும் சமூகத்துக்கு என்ன தண்டனை கொடுக்க முடியும்?
நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசச்சொல்லி கொடுத்து யாரை தண்டிக்க நினைக்கின்றது இந்த சமூகம்?
பக்குவப்படாத 17 வயதில் வந்த காதலையும், அதனால் தொடர்ந்த ஆவணப்படுகொலையையும், தம் அரசியல் இலாபங்களுக்கும், சமூக சீரழிவுக்கும் பயன்படுத்தி ஆத்தி, ஊத்தி தேத்தி விட்டோர் என்ன சொல்ல போகின்றார்கள்?
பரிதாபத்துக்குரிய பெண் கௌசல்யா. அன்று அப்பாவியாக இருந்தவள். இன்று அகம்பாவம் கொண்டவளாக சித்தரிக்கப்படுவது ஏன்?
உண்மையில் இனித்தான் அவளுக்கு ஆதரவு தேவை. ஆனால் இதுவரை அவளை ஏத்தி விட்டோரெல்லாம் இனிமேல் விலகித்தான் செல்ல போகின்றார்கள்.
அவள் வாழ்க்கையில் இனிமேல் நடக்க இருக்கும் அத்தனைக்கும் அவளை தூக்கி பாராட்டி சீராட்டிய அத்தனை பேரும் காரணமாகி இருக்கின்றார்கள்.
மனச்சாட்சி இன்னும் செத்து போகாதிருந்தால் அவரவர் மனமே தம் தவறுகளை உணர்த்தும்.
அரசன் அன்றறுக்கலாம். தெய்வம் நின்று நிதானித்து ஒவ்வொன்றையும் அறுக்கும்.
நாளை எமது பிள்ளைகள் இதே நிலையில் இருந்தால் என்ன செய்வோம் என நினைத்து செயலாற்றுவோம். அடுத்தவர் பிள்ளை தப்பு செய்தால் ஆராத்தி கரைகக முன் அந்த பிள்ளைகள் எங்கள் சொந்த பிள்ளையாக இருந்தால் என்ன செய்வோம் என இனியேனும் சிந்திப்போம்.
பாவம் கௌசல்யா. பரிதாபத்துக்குரிய பெண்
கூடா நட்பு கேடாய் முடிந்திருக்கின்றது எனபதன் நிகழ் கால நிஜமாகி இருக்கின்றாள். இனியேனும் அவள் செய்த தவறுகள் அவளுக்கு உணர்த்தப்படட்டும்.

இனி அவள் வாழ்க்கை???


பேஸ்புக்கில் என் பக்கம் எழுதிய பதிவு.   கௌசல்யா சக்தி

இந்தச் சமுதாயம் என்ன அவ்ளோ நல்ல ஆண்களையா பெற்றிருக்கிறது❓

முதல் திருமணத்துக்கே வரதட்சனை வாங்குபவரிடத்தில் இரண்டாம் திருமணம் செய்பவரிடம் மட்டும் நேர்மையை அன்பை உண்மையை எப்படி எதிர்பார்க்க முடியும்.?
👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉
மேலே நான் குறித்திருப்பதை போல் பல பதிவுகள் ஆண் எதிர்ப்பெனும் பெயரில் தினமும் பகிரப்படுகின்றன. ஆண்கள் எல்லோருமே கெட்டவர்கள் என்பதை போன்ற தோற்றம் அதிகமாகுவதை காண முடிகின்றன.
என் நட்பில் இருக்கும் அனைத்து ஆண் நட்புக்களுக்குமான பதிவு இது.
💯உங்கள் நட்பிலிருக்கும் பெண் தோழமைகள் இடும் பதிவுகளில் இருக்கும் உட்கருத்துக்களை எத்தனை வீதம் உள் வாங்கி லைக்கோ காமெண்டோ செய்கின்றீர்கள் / அந்தப்பக்கமும் இந்த பக்கமுமாக , நடு நிலை வாதியாக உங்களை இனம் காட்டி எதை சாதிக்கப்போகின்றீர்கள்?
அதிக, நட்பு, பாலோயர்கள், ஷேர்ஷ்கள் என தாம் சொல்வதும் செய்வதும் சரி எனவும், அதுவே புரட்சி, புதுமை எனும் பெயரில் கௌசல்யாவை போல் செய்த தவறும், செய்யும் தவறுகளும் உணர வைக்கப்படாத பெண்கள் சமூகமொன்றை உருவாக்கி பெண்களுக்கு நல்லது செய்வதாகவும்,ஊக்கப்படுத்துவதாகவும் நினைத்து சமூக சீர்குலைவுகள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
இப்படியான பதிவுகளை அதிகளவில் லைக் செய்வதும் ஆண்கள் தான். அவர்களை பின் தொடர்வதும் ஆண்கள் தான். தான் வளர்த்த கடா தன் மார்பில் பாய்வதை எத்தனை பேர் புரிந்திருக்கின்றார்கள்?
உண்மையில் ஆண்கள் நலல்வர்களா? கெட்டவர்களா? 😍😎
🤜நாங்கள் என்னமோ ஆண்கள் வாசனையே உணராதவர்கள். கஷ்டமே படாமல் போராடாமல் வாழ்க்கையில் தங்கக்கரணடியும்,ரோஜாப்பூக்கள் கொட்டிய தரையில் பாதம் படர நடந்து வளர்ந்து வந்தவர்களை போல் நானிடும் கேள்விகளுக்கு உங்களுக்கு தெரியாதுங்க🤜. சொன்னாலும் புரியாதுங்க 🤜 எனும் ரெடிமேட் பதிலும் தயாராக வைத்திருக்கின்றார்கள்🤜.
ஆமாம் புரியாது தான்.அடிபட்டு அல்லல்பட்டு, போராடி மேலேறி வந்தவர்களுக்கு இன்றைய பெண் சுதந்திரம் புரியாமல் தான் இருக்கின்றது. அப்படியே இருக்கட்டும், இவர்கள் தேடும் ஆணில்லாத சுதந்திரமும் பெண்ணியமும் எனக்கு வேண்டவே வேண்டாம்.
குடிகாரனாய் குடும்பத்தை கவனிக்கவில்லை எனும் குறை இருந்தாலும் நல்ல மனிதராய் என் ரோல்மாடல் என் அப்பா தான். எனக்குள் மனித நேயம் விதைத்தவர்கள் என் அப்பாவும், தம்பியும், மகனும் தான். என் தம்பியும், மகனும் என் உயிர் மூச்சுக்கள், என் கணவர் தான் பக்க துணை, அண்ணன்கள் தான் உந்து சக்தி, என் எனர்ஜியாக என்னை இயக்கும் எல்லோரும் ஆண்கள் தான். அதற்காகவெல்லாம் அவர்களால் எனக்கு பிரச்சனையே இல்லை. குறைகள் இல்லை எனவெல்லாம் பொய் சொல்ல முடியாது. எல்லாரும் எல்லா குறையும் நிறையும் கலந்தவர்களாக தான் இருக்கின்றார்கள்.
அப்பா, அண்ணா, தம்பி, கணவன், மகன், தோழன் எனும் பெயர்களில் என்னை சுற்றி இருக்கும் ஆண்கள் எனக்கான வாழ்க்கைத் தூண்களாகவே இருக்கின்றார்கள்.என்னை தாங்குகின்றார்கள். என் மேன்மையில் பங்கு பெற வேண்டியவர்கள் இவர்கள் தான். இவர்களில் யார் ஒருவர் இல்லை என்றானாலும் என் அங்கத்தில் குறை ஏற்பட்டதான வலியையே நான் உணர்வேன். அதனால் ஆண்களை குறித்து வரும் எதிர் விமர்சனப்பதிவுகள் எனக்கு புரியாது தான்.
வாழ்க்கையில் போராட்டம் என்பதை உணராமல் சொகுசாக வாழ்ந்தவர்கள் தான் பெண்ணியம் எனும் பெயரில் கிளம்பி ஆண்களுக்கு எதிரான புரட்சியை நடத்துகின்றார்கள் என நினைத்து கடந்து செல்ல முடியாத படி ஆண் எதிர்ப்பு வாதம் அதிகமாகிக்கொண்டிருக்கின்றது.
ஆண்கள் நல்லவர்கள் இல்லை,ஆண்களால் பெண்களுக்கு பாதிப்பு அதிகம், ஆண்களால் பாதுகாப்பு இல்லை என்பதை போன்ற பதிவுகளை கண்டும் காணாமல் பதிவை முழுமையாக படித்து உள் வாங்காமல் மேலோட்டமாக படித்து லைக் செய்து ஆதரவு தருவது எதிர்காலத்தில் எவ்வகையான தீமைகளை உருவாக்கும் என எவரேனும் உணர்ந்திருக்கின்றீர்களா?
அப்பா,அண்ணன்,தம்பி, மகள், மாமன், மச்சான், தோழன் என ஆணை சுற்றியே எங்கள் வாழ்க்கை வண்ணமயமாக்கப்பட்டிருக்க சமீப காலங்களில் ஆண்களுக்கெதிரான பதிவுகளும், சிந்தனைகளும் அதிகாக பகிரப்படுவதும் அதை ஆண் நட்புக்கள் ஊக்குவிப்பதும் அவரவர் பாலோயர்கள், நட்பெண்ணிக்கையின் அடிப்படையில் அவர்கள் சொல்வதெல்லாம் சரியெனும் புரிதலை சமூகத்துக்கு வழங்குகின்றீர்கள் என உங்களுக்கு புரிந்தே இருக்கின்றதா?
ஒரு ஆண் செய்யும் தவறை இன்னொரு ஆண் சரியாக்குகின்றான் என கூட உணர்த்த நினைக்காமல் கண்ணை மூடி ஆதரவு தருவது எதிர்கால சமூகத்துக்கு நல்லதே இல்லை.
என்ன தான் நடக்கின்றது நம் தமிழ்ச்சமூகத்தில்?
ஆண் எதிர்ப்பு எனும் தீக்குச்சி பற்றவைக்கப்பட்டு சிறு நெருபபாக சமுகத்தில் எதிர் வினைகளோடு பற்றிப்படர ஆரம்பித்திருக்கின்றது.
தம்மை குறித்தே எழுதப்படுகின்றது, தாமே விமர்சிக்கப்படுகின்றோம், தம் சுயமே இங்கே சுக்கு நூறாக பிச்சி உதறப்படுகின்றதென அறியாமையோடு நட்பிலிருக்கும் பெண்கள் எழுதுவதைஎல்லாம் கண் மூடி லைக் செய்வதும் கருத்திடுவதும் சரியான வழிகாட்டலா?
என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்பதை அறியாமல் தம் மனசுக்கு பிடித்தவர் அல்லது அவர் நட்பில் நாம் இருக்கின்றோம் என பெருமையான நினைத்து 
நியாயத்தை கூட எடுத்து உணர்த்தாமல், தவறென தெரிந்திருந்ததையும் எடுத்து சொல்லி புரிய வைக்காமல் கடந்து செல்வோர் இங்கே அதிகம் என எனக்கும் தெரியும்.

அடிமைத்தனம் செய்யவும் வேண்டாம். அடிமைப்படவும் வேண்டாம் எனும் சக சம உணர்வை உருவாக்காமல் ஆண்களை ஒதுக்கிய சமூகம் ஒன்றை உருவாக்க நீங்கள் ஆதரவு தருவதை ஆண்களாகிய நீங்கள் உணர்ந்திருக்கின்றீர்களா?
சமூக வலைத்தளங்களில் வெளி வரும் பதிவுகளை அசட்டையாக கடந்து செல்ல முடியாத சூழலில் நாம் வாழ்கின்றோம். இங்கே தீமைகள் இலகுவாக பரவுகின்றன. நன்மைகளை எடுத்து சொல்வோர் ஒதுக்கப்படுகின்றார்கள்.
நீங்கள் எப்படிப்பட்டவர்? சிந்தியுங்கள்.
இந்தச் சமுதாயம் என்ன அவ்ளோ நல்ல ஆண்களையா பெற்றிருக்கிறது

02 பிப்ரவரி 2019

சங்க காலத்தில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டார்களா? 2

சங்க காலத்தில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டார்களா? பதிவின் தொடர்ச்சி.
முதல் பதிவை படிக்க 
சங்க காலத்தில் காதலித்து கை விட்ட ஆண்களுக்கான் தண்டைனை கொடுமையாக இருந்தது என்பதை அக நானூறு 256 ம் பாடலில் காண முடிகின்றது.
தலைவன் என்பவன் தலைவியை மறந்து பரந்தையை தேடி சென்று கூடி குலாவி யதை அறிந்த தலைவி, தலைவனுடன் கோபம்/ ஊடல்கொண்டதாகவும்,
பரந்தையிடமிருந்து திரும்பிய தலைவன் அவள் தோழியிடம் சென்று தலைவியின் கோபத்தை சமாளிக்க சொல்லும் போது தலைவி 
நீ பொய் சொல்லாதே, நீ என் தலைவியை விட்டு விட்டு வேறொரு பெண்ணுடன் ஆற்றில் குளித்து விளையாடியது எல்லோருக்கும் தெரியும் என்கின்றாள். உன் தவறினை, வஞ்சனையை நான் மட்டுமல்ல இந்த ஊரே அறியும். நீ எங்களுக்கு மறைக்க நினைக்காதே, உன் செயலை எல்லாரும் அறிவோம் என சொல்லி விட்டு கள்ளூர் எனும் ஊரில் நடந்த சம்பவத்தை விபரிக்கின்றாள்.

நீ பரந்தையோடு கூடி குலாவியது கள்ளூரில் நடந்த சம்பவத்தை விடவும் அதிகமாக மக்களால் பேசப்பட்டது என எனக்கு தெரியும் என சொல்கின்றாள்.
**பிணங்குஅரில் வள்ளை நீடுஇலைப் பொதும்பின்
மடிதுயில் முனைஇய வள்உகிர் யாமை 
கொடிவிடு கல்லிற் போகி, அகன்துறைப்
பகுவாய் நிறைய, நுங்கின் கள்ளின் 
நுகர்வார் அருந்து மகிழ்புஇயங்கு நடையொடு 5
தீம்பெரும் பழனம் உழக்கி, அயலது 
ஆம்பல் மெல்அடை ஒடுங்கும் ஊர!
பொய்யால்; அறிவென்; நின் மாயம் அதுவே
கையகப் பட்டவும் அறியாய்; நெருநை 
மைஎழில் உண்கண் மடந்தையொடு வையை 10
ஏர்தரு புதுப்புனல் உரிதினின் நுகர்ந்து,
பரத்தை ஆயம் கரப்பவும், ஒல்லாது 
கவ்வை ஆகின்றால், பெரிதே; காண்தகத்
**
கரும்புத்தோட்டங்களும், வயல்களையும் கொண்ட கள்ளூர் எனும் ஊரில் வாழும் பெண் தன் விருப்பமின்றி தன்னை ஒருவன் அத்து மீறியதாக ஊர்ச் சபையில் சொல்கின்றாள். சம்பந்தபப்ட்டவனோ தனக்கு அவளை தெரியவே தெரியாது என்கின்றாள். ஆனால் ஊர்ச்சபை சாட்சிகளை விசாரித்து அவன் பொய் சொல்வதாக அறிந்து அவனை மரக்கிளையில் கட்டி வைத்து சுண்ணாம்பு நீரை கரைத்து அவன் தலையில் கொட்டியதாகவும், அது தக்க தண்டனை என மக்கள் ஆரவாரித்திருந்தார்கள்: அந்த ஆரவாரத்தை விடவும் உன் செயல் இந்த ஊரில் பேசப்பட்டதை நான் அறிவேன் என்கின்றாள்.

**தொல்புகழ் நிறைந்த பல்பூங் கழனிக்,
கரும்பமல் படப்பைப், பெரும்பெயர்க் கள்ளூர்த் 15
திருநுதற் குறுமகள் அணிநலம் வவ்விய
அறனி லாளன், 'அறியேன்' என்ற 
திறன்இல் வெஞ்சூள் அறிகரி கடாஅய் 
முறிஆர் பெருங்கிளை செறியப் பற்றி 
நீறுதலைப் பெய்த ஞான்றை; 
வீறுசால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே. 21

முதல் சம்பவம் நேரடி சம்பவமாகவும், இரண்டாம் சம்பவம் எங்கோ நடந்ததை சொல்லி பெண்ணை ஏமாற்றினால் என்ன நடக்கும் என தெரியுமோ எனும் மிரட்டலுடனும் தொனிக்கும் இந்த பாடல் வரிகளை தான் பெரும்பாலான ஆய்வாளர்கள், சங்க காலத்திலும்,பாலியல் வன்முறை இருந்ததென்பதற்கு சான்றாக முன் வைக்கின்றார்கள்.
இவ்வரிகளில் காதல் துரோகம், நம்பிக்கை துரோகம் வெளிப்படுதபப்டுகின்றதே தவிர பாலியல் வன்முறை எனும் பெண் விரும்பாமல் வற்புறுத்தி உறவு கொண்டதாக சொல்லப்படவில்லை என்பதை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.
'அறியேன்' என்ற 
திறன்இல் வெஞ்சூள் அறிகரி கடாஅய் 
முறிஆர் பெருங்கிளை செறியப் பற்றி 
நீறுதலைப் பெய்த ஞான்றை; 
வீறுசால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே
எனும் வரிகள் மூலம் பெண்ணை தெரியாது என பொய் சொன்னதற்கான தண்டைனையாகவே மூன்று சுடவுகள் கொண்ட மரக்கிளை நடுவில் நிறக வைத்து சுண்ணாம்பி நீரை காய்ச்சி தலைமேல் ஊற்றி கொடுமையாக தண்டித்திப்பதை நாம் உணர முடியும். 
சங்க காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களுக்கு மிகக்கடுமையான தண்டனை இருந்ததென்பதை இவ்வரிகள் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும், 
.
அக்காலத்திலும் நீதி விசாரிக்கும், சபைகள் இருந்திருக்கின்றன. சாட்சிகளை வைத்து விசாரித்து தீர்ப்பும் கொடுத்திருக்கின்றார்கள். இதனால் அக்கால இளைஞர்கள் காதல்,களவொழுக்கம் தொடர்பாக தெளிவான சிந்தனைகளை கொண்டவர்களாக் வாழ்ந்திருக்க வேண்டும்.

காதலித்து கைவிட்டதற்கே இப்பெரும் தண்டனை எனில் பெண் விருப்பமின்றி, கட்டாயப்படுத்தினால் எவ்வகை தண்டனையை அடைவார் என உணர்த்த இச்சம்பவங்களை எங்கோ நடந்ததாக காட்டி தோழியானவள் தலைவனிடம் சொல்லும் பாடல் வரிகளும் தலைவி எனும் பெண்ணுக்கான பெருமையை கட்டியம் கூறி நிற்கின்றன.
பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு தண்டனை கடுமையாக இருந்திருக்கின்றதென்பதை கூறும் பாடல்களை சங்க கால காப்பியங்கள் பலவற்றில் பல உரையாசிரியர்களும் எடுத்துரைத்திருக்கின்றார்கள் எனினும் பெண்களுக்கான பாலியல் வன்முறைச்சம்பவங்கள் நடந்ததாக தெளிவான குறிப்பை அறிய முடியவில்லை.

சங்க காலத்தில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டார்களா 1?
சங்க காலத்தில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டார்களா 2? 

31 ஜனவரி 2019

சங்க காலத்தில் பெண்கள் அடிமைப்பட்டிருந்தார்களா? 1

சங்க இலக்கியங்கள் மற்றும் காலத்தால் முற்பட்ட தமிழ் இலக்கியங்கள் எதிலாவது , பெண்கள் பாலியல் துனபுறுத்தல்கள், செய்யபட்டமை தொடர்பாகவோ, பாலியல் வன்புனர்வுக்கு உள்ளாக்கப பட்டது தொடர்பாகவோ , அத்தகைய குற்ற சம்பவங்களுக்கு அரசர்களால் வழங்கப்பட்ட தண்டனை தொடர்பாகவோ எங்காவது குறிப்பிட பட்டுள்ளதா? எனும் கேள்வியை Yoga Valavan Thiya ஐயா அவர்கள்  பேஸ்புக்கில் கேட்டிருக்கின்றார். அவருக்காக கேள்விக்கு இன்னும் சரியான பதில் கிடைக்கவில்லை எனவும் பதில் பின்னூட்டமிட்டிருக்கின்றார்.
சங்க காலத்தில் பெண்கள் அடிமைப்படுத்டப்பட்டிருந்தார்களா? என நாம் ஆராய்ந்தாலே பாலியல் ரிதியான அத்துமீறல்கள் நடந்திருக்குமா எனும் தெளிவும் கிடைக்கலாம்.
சங்க காலம் என்றால் எக்காலம்?
கி.மு நான்காம் நூற்றாண்டு தொடக்கம், கிபி இரண்டாம் நூற்றாண்டு வரை சங்க காலம் எனப்படுகின்றன.
தொல்காப்பியம், புற நானுறுப்பாடல்கள், பத்துப்பாட்டு,எட்டு தொகை. சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் சீவக சிந்தாமணி எல்லாமே இக்காலத்தில் எழுதப்பட்டன.
இக்காலங்களில் தான் சேர,சோழ,பாண்டியர்கள் பேரரசுகளாக அரசாண்டார்கள்.
சிலப்பதிகாரம்,மணி மேகலை போன்ற காப்பியங்களில் கண்ணகி, மணிமேகலை எனும் பெண்களின் ஆளுமையையும், சீவக சிந்தாமணி சீவகன் எனும் ஆணையும், குறித்து பாடப்பட்டிருக்கின்றது.
பெரும்பாலோனோர் புராணங்கள், காப்பியங்களில் வரும் மணி மேகலை, கண்ணகியை விட சங்ககால மாந்தர் எனில் சீதை தீக்குளித்தாள், இராமன் சந்தேகப்பட்டான், பாஞ்சாலியை துகிலுரித்தார் என்றே பெண் அடிமைத்தனத்தின் சான்றாக விவாதத்தில் எடுத்தாள்கின்றார்கள். .
அதனால் இராமாயணம், மகாபாரதம் உடபட புராணங்கள் பெண்களை அடிமைப்படுத்தியதா என முதலில் ஆராய்ந்து தெளிவுக்கு வருவோம்.
புராணங்கள்,காப்பியங்கள் என்ன சொல்கின்றன.
பெண்களை அடிமைப்படுத்தினார்களா? 
பாலியல் ரிதிரில் பெண் உடல் ஆக்கிரமிப்புக்குள்ளானதா? பெண்களை போகப்பொருளாக பயன் படுத்தினார்களா?

இராமாயணம்
*******************
கூனி, கையேயி எனும் பெணகளின் சூழ்ச்சியும், சீதை எனும் பெண்ணின் விருப்பமுமே முக்கியத்துவம் பெற்றதாக இருந்திருக்கின்றன.

தசரதன் எனும் நாடாளும் அரசன் மனைவிக்கு கொடுத்த வரத்துக்கு கட்டுப்படுபவனாக காட்டப்பட்டிருக்கின்றான்.
சீதை தனக்கான மணமகனை தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றவளாக மட்டுமல்ல,தன் வாழ்க்கையை முடிவெடுக்கும் சுயாதீன வாழ்க்கையை வாழ்ந்திருக்கின்றாள்.
சீதைக்காக சுயம் வரம் நடத்தப்படுகின்றது. இராமன் போட்டியில் கலந்து வில்லை வளைத்து வென்றே சீதையை கரம் பிடிக்கின்றான்.
காட்டுக்கு செல்வதா அரண்மனையில் வாழ்வதா என முடிவெடுக்கும் அதிகாரம் சீதைக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன. சீதை ஆசைப்பட்டு கேட்கும் பொருளை கொடுக்க வேண்டும் எனும் கட்டாயம் இராமனாகிய ஆணுக்கு இருந்திருக்கின்றது.
சீதையின் தந்தையும் சீதையின் விருப்பத்தையே புரிந்து நடத்தி இருக்கின்றார்.
சீதை மேல் ஆசை கொண்ட இராவணனும், சீதையை கடத்தி சென்ற போதினிலும் அவள் விருப்பமில்லாமல் அவளை வன்புணர்வு செய்யும் உரிமை அற்றவனாக காட்டப்படுகின்றான். அவள் மன விருப்பம் வேண்டி காத்திருக்கின்றான்.
சீதைக்காகவே இலங்கை அழிக்கப்படுகின்றது.
சீதை எனும் பெண் பெண் இங்கே மேன்மைப்படுத்தப்பட்டே இருக்கின்றாள்.
தன்னை நிருபிக்க சீதை நெருப்பில் இறங்கியதான சம்பவத்தில் மூலம் நெருப்பையும் கட்டுப்படுத்தும் சர்வாதிகாரம் பெற்ற பெண்ணாக சீதை உருவகப்படுத்தப்பட்டிருக்கின்றாள். சந்தேகப்பட்டு சீதை தீக்குளித்து தன்னை நிருபித்தாள் எனும் வாதத்தை விட சீதைக்கு நெருப்பும் கட்டுப்பட்டிருந்தது என்பதே இங்கே கவனத்தில் கொள்ளப்பட்டிருக்க வேண்டும், நெருப்பாலும் பெண்ணின் உறுதியை அழிக்க முடியாது என்பதாகவும் சொல்லலாம். நெருப்பாற்றை கடந்தவள் எனும் போதே அவள் பேராற்றல் எல்லைகள் அற்றதாகின்றன.
இலக்கியப்படைப்புக்களை எழுதியவர்கள் பெண்ணுக்கான தனித்துவத்தை மட்டுப்படுத்தி அவளின் பேராற்றலை கட்டுப்படுத்தி, அவளின் சிறகினை உடைப்பதில் பெரும்பங்காற்றி இருப்பதை மறுப்பதற்கில்லை.
மகாபாரதம்
***************
மகா பாரதத்தில் ஐவருக்கு ஒரு பெண் மனையியாகின்றாள்.பாஞ்சாலி என்பது அவள் பெயர்.

பஞ்ச பாண்டவர்களாய் உலகின் பஞ்ச பூதங்களாக நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று அனைத்தையும் ஆளும் சக்தியாகின்றாள்.
தன் கணவர்கள் தன்னை வைத்து சூதாடி தோற்று விட்டார்கள் என்றறிந்தும் அடங்கி, ஒடுங்கி, கதறவில்லை அவள். எல்லாம் இழந்த பின் என்னை வைத்து சூதாடும் உரிமையை அவர்களுக்கு யார் கொடுத்தது என அரச சபையில் சிலிர்த்தெழும்புகின்றாள்.
நியாயம் கேட்கின்றாள். தான் செய்யாத தவறுக்கு எப்படி தன்னை தண்டிக்க முடியும் என நீதி 
கேட்டு நிற்கின்றாள். துச்சாதனன் எனும் எதிரி அவள் துகில் உரிய வரும் போது கிருஷ்ணன் எனும் நம்பிக்கை அவளை காக்கின்றது.

அசாத்திய பெலனடைந்தவளாக அனைத்தினையும் சுக்கு நூறாக்கும் வல்லமை பெற்றவள் பெண் என்பதே மகாபாரதம் நமக்கு பாஞ்சாலி மூலம் உருவகப்படுத்துகின்றது.
சீதையும் பாஞ்சாலியும் நமக்குணர்த்துவது என்ன?
சங்க காலத்தில் ஆண்கள், பெண்களுக்குள் அடங்கி வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை ஏறு தழுவுதல், காளையை அடக்குதல், படற்பனை ஏறுதல் என பல வீர விளையாட்டுக்களின் வென்று பெண்ணை கைப்ப்டித்த கதைகள் சொல்கின்றன.
பெண்ணின் அனுமதி இல்லாமல் அவள் சுண்டு விரலைக்கூட தொடும் அனுமதி ஆணுக்கிருக்கவில்லை எனவும் அதே சங்க கால சம்பவங்கள் சொல்கின்றன.
சங்க கால மகளிர் வீரமுடைய பெண்மணிகளாகவே இலக்கியங்களில் சித்திரிக்கபபட்டிருக்கின்றார்கள்.
தலைவனை சந்தித்தல், புனைகாத்தல்,ஒழுக்கம் பேணுதல் என தனது எல்லைகளை மீறாதவளாக வர்ணிக்க்கப்படுகின்றாள்.
பெண்கள் முறத்தால் அடித்து புலியை விரட்டினாள் எனவும், அரசனுக்கே ஆலோசனை சொல்பவர்களாகவும்,
தூதுவராகவும் புலமை வாய்ந்தவர்களாக விளங்கினார்கள் என காப்பியங்கள் சொல்கின்றன.

வீரத்தில் புறமுதுகு காட்டாதவளாக வீரக்கிளர்த்திகளாக தம்மை பெண்கள் வெளிப்படுத்தினார்கள். போரில் புறமுதுகிட்டு ஓடிய மகனுக்கு பால் கொடுத்த என் முலையை அறித்தெறிவேன் என சொன்ன வீரத்தாய்ப்பரம்பரையாக பெண் விளங்கினாள்.
போர்ப்பறை கேட்டால் தம் பிள்ளையை வீட்டுக்குள் ஒளித்து வைக்கும் ஈனத்தனம் பெண்களுக்குள் இருக்கவில்லை. போர் என்றால் கையில் வேலைக்கொடுத்து சென்று, வென்று வா மகனே என்றதோடு கருவிலேயே வீரத்தையும், ஊட்டி வளர்க்கப்பட்ட . புறநானுற்று மா வீரர்களைப் பற்றியும் சங்ககால இலக்கியங்கள் சொல்லி இருக்கின்றன.
பெண்மைக்கான குண நலன்கலாக அச்சம்,நாணம், மடம்,பயிர்ப்பு எடுத்து காட்டப்பட்டிருக்கின்றது.
எச்சூழலில் இவை வெளிப்பட வேண்டும் எனவும் சொல்லப்படுகின்றன.

தலைவியானவள் காதல் கொண்ட நேரமும், தலைவன் அருகில் இருக்கும் போதும் , நீண்ட பிரிவுகளின் நேரமும் அவனைக்குறித்த அச்சம், பயிர்ப்பு, நாணம், மடம் போன்ற குணாதியசங்களை வெளிப்படுத்துபவளாக அவள் வாழ்ந்தாள் என்கின்றது .
“அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப” என்றும்
“செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பாலன”

என்று தொல்காப்பியம் சொல்கின்றது. அச்சம், நாணம் , மடம், பயிர்ப்பு தேவைப்படும் இடத்தில் பெண்ணுக்கான குணங்கள் வெளிப்படுவதும், வீரமும் விவேகமும் தேவைப்பட்ட இடத்தில் முறத்தால் புலியை அடித்து விரட்டிய வீரத்தமிழச்சியாக பெண் வாழ்ந்ததாகவும், காலம் சூழலுக்கு ஏற்ப அவள் தன்னை தற்காத்து கொள்ளும் சக்தியாக, பயமற்றவளாக வாழ்ந்தாள் என்பதையே புராணங்கள் நமக்கு சொல்கின்றன.
அக்காலம் முதல் இக்காலம் வரை பெண்களுக்குள்: இருக்கும் திறமையை எழுத்தில் படைத்தவர்கள் பெண்ணுக்கான தனித்துவத்தை வெளிப்படுத்தாமல் , பெண்ணின் உண்மையான ஆளுமையை மறைத்து ஆணை சார்ந்தே பெண் வாழ்ந்தாள் என தாம் வாழ்ந்த சூழலுக்கேற்ப தன் கற்பனைவளத்தை கையாண்டிருக்கின்றார்கள்.
ஆணாதிக்க சிந்தனை கொண்ட ஆண்களால் எழுதப்பட்ட வரலாறுகள் வேறு எப்படி இருக்கும்?
சங்க காலத்தில் பெண்கள் ஆக்கும் அழிக்கும் சக்தியை கொண்டவளாகவே எழுத்தாளப்பட்டிருக்கின்றாள் என்பதாகவே வரலாறுகள் நமக்கு சொல்கின்றன. சிலப்பதிகாரத்து கண்ணகி மதுரையை எரித்ததும் அந்த சக்தியினால் தான்.
பெண்ணுக்குள் இத்தனை சிறப்பிருக்க அவள் தன்னை தானே தாழ்த்தி, பாலியல் வன்புணர்வெனும் பெயரில் அவள் அனுமதி இன்றி நடக்கும், அக்கிரமங்களை கண்டு கூனிக்குறுகி, தன்னை தாசி எனவும், தான் ஆண்களுக்கு அடிமை எனவும் சித்தம் கலங்கும் படி உளவியல் பாதிப்பை உருவாக்கி அவளை ஒடுக்கி அடக்குவது ஏன்?
சங்ககாலத்தில் காதலும், களவொழுக்கமும், கந்தர்வ மணமும் அனுமதிக்கபப்ட்டிருந்தது,ஆண் பெண் நட்பு அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அத்துமீறி அவளை ஆக்கிரமிக்கும் கயமைத்தனம், பெண்ணை போகப்பொருளாக நடத்தும் நிலை அன்றில்லை.
வீட்டுக்குள் வாழ்ந்தாலும், நாட்டை ஆளும் வல்லமை கொண்டவளாக அனைத்தையும் அடங்கி ஆண்ட போது இந்த சமுதாயத்தில் அவள் பேசு பொருளாகவே இல்லை. அவளை ஒரு பொருட்டாக உலகம் கவனிக்கவே இல்லை.
அவளை அடக்கி வீட்டினுள் முடக்கி, உரிமைகளை பறித்து கொண்ட சமூகம். வீட்டினுள் அடங்கி கிடந்த வரை கண்டு கொள்ளாத சமூகம் அவள் தன் உரிமைக்காக போராட ஆரம்பித்த போதே அவளை தண்டிக்கும் வடிகாலாக அவள் உடல் மீதான வன்புணர்வை ஆரம்பித்திருக்க வேண்டும்.
பிற்காலத்தில் பெண்ணுக்குள் மறைந்திருக்கும் சக்தி மேன்மை பெறுவதை விரும்பாத, பெண்ணுக்குள் அடங்கி வாழ்ந்த ஆண்கள் தாங்கள் இல்லாமல் அவளால் சந்ததி பெருக்க முடியாதென்பதை உணர்ந்து கொண்ட போதே தங்கள் சர்வாதிகாரத்தை பெண்ணுக்குள் திணிக்க முற்பட்டிருக்க வேண்டும்.
ஆண்,பெண் உறவின் மூலமான சந்ததி உருவாக்குதல் எனும் பெயரில் பெண்ணுக்கான பலமே பலவீனமானது.
பெண்ணுக்கான உரிமைகளை தட்டிப்பறித்து, இழந்ததை மீட்க போராடுகின்றோம் எனும் பெயரில் பெண்ணுக்கான ஆற்றலும், அறிவும், விவேகமும் வீணாக்கப்படுவதை அவள் உணர முடியாத படி அறியாமையினால் அடக்கப்பட்டிருக்கின்றாள்.
அவள் அனுமதி இன்றி அவள் உடல் மீது அத்துமீறி ஆக்கிரமிப்பது மட்டுமல்லாமல் அவளை குற்ற உணர்வில் ஒடுக்கி அடக்கி ஆள நினைக்கின்றார்கள்.
தீர்வு தான் என்ன?
பாலியல் வன்புணர்வினை தன் விரலில் சிறு காயம் பட்டால் எப்படி உணர்வார்களோ அப்படியான உணர்வோடு அணுகி, பெரும் குற்றமிழைத்ததாக, எதையோ பறி கொடுத்து விட்டதாக சொல்லியும் நீதி நியாயம் கேட்டு குரலெழுப்பியும்,உளவியல் பாதிப்பை திணிக்காமல் கடந்து,நிமிர்ந்து நில் என வாழ்ந்து காட்டவே எங்கள் சங்ககால சரித்திரங்கள் எங்களுக்கு பாடம் போதித்திருக்கின்றன.
சீதையால் நெருப்பை அடக்கி ஆள முடியும் என்பதனால் அவள் நெருப்பை கடந்தாள். பாஞ்சாலியால் அரசனையும் தட்டிக்கேட்கும் அதிகாரமும், பஞ்ச பாண்டவர்களை அடக்கி ஆளும் வல்லமையும் இருந்ததனால் நீதிக்கு போராடினாள், தவறை தட்டிக்கேட்கும் விவேகம் பெற்றவளாய் கண்ணகி நிமிர்ந்து வாழ்ந்தாள். அவர்களை போல் வரலாற்றில் அனைத்தையும் அடக்கி ஆளும் வல்லமை மிக்கவர்களாக பெண்கள் மாற வேண்டும்.
காப்பியங்களும், புராணங்களும் பெண் பெருமையும், வீரமும், துணிச்சலையும் கூறி உயர்த்தி நிற்க பிற்கால உரையாசிரியர்கள் தம் கற்பனைக்கேறப் அரசனையும் தாசிகளையும், கோயிலுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட தேவதாசி பெண்களையும் முன் நிறுத்தி பெண்மையை சிறுமைப்படுத்தி பெண் எனில் அடிமையானவள் எனும் உணர்வை திணித்து வெற்றியும் பெற்றிருக்கின்றார்கள்.
90 வீத பெருமை கொண்ட பெண் சமூகமானது 10 வீத சிறுபான்மை அடிமைப்பட்ட பெண்கள் செயல்பாடுகளை கொண்டு தம் சக்தியை தாமே அழித்து கொண்டுள்ளார்கள். .
பெண்ணை கொண்டே பெண் பெருமை அழித்து சிறுமை படுத்துவதை தான் 'மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்' என்று ஏன் பாரதி கூறி இருப்பாரோ?
சங்க காலத்தில் பெண்கள் அடிமைப்படுத்த்தப்பட்டார்களா ? 2 

பேஸ்புக்கில்
சங்க காலத்தில் பெண்கள் அடிமைப்படுத்த்தப்பட்டார்களா ? 1 
சங்க காலத்தில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டார்களா ? 2