நான் சின்னவளாய் இருந்த போது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நான் சின்னவளாய் இருந்த போது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
16 டிசம்பர் 2023
கானாந்தி,முல்லை,முசுட்டைக்கீரையும் புளிமாங்கா சொதியும்
நாங்கள் குடியிருந்த வீட்டில் வேலியில் கானாந்தி செடி மரமாகி,அதில் மேல் முல்லை கொடியும் படர்ந்து வளர்ந்து நின்றது. கானாந்தி,முல்லை,முசுட்டை கீரையின் துளிர்களை ஆய்ந்து அலசி புளி மாங்காயும் கீரி மீனும் சேர்த்து தேங்காய்ப்பால் சொதி வைச்சால் கீரைகளின் வாசமும் தேங்காய்ப்பாலின் வாசமும் சேர்ந்து ஊரையே விருந்துக்கு அழைக்கும். சோத்துக்குள் சொதியை விட்டு தின்று விட்டு சொதிக்குள் சோற்றை தேடி அப்படியே தட்டோடு குடிப்போம்.
கானாந்தி செடி
கீரைகளை ஆய்ந்து கழுவி வைச்சிட்டு... மீன் அல்லது இறாலை சுத்தப்படுத்தி அதுக்குள் மஞ்சள் உப்பு,பச்சமிளகாய்,புளிமாங்காய் சேர்த்து தண்ணீர் விட்டு அவிய விடணும்,அவிந்ததும் இரண்டாம் மூணாம் தேங்காய்ப்பால் விட்டு கொதிக்க விட்டு பின் இலைகளை போட்டு மூடி ஒரு நிமிடம் விட்டு திற்ந்து தலைப்பாலை விட்டு அதுவும் கொதி வர இறக்கிரனும். கீரைகளை அதிகம் அவிய விட கூடாது.
பொன்னாங்கன்னி,வல்லாரை, திராய் கீரைகள் வயலில் சேற்று நிலத்தில் 2/12 அடி சுற்றளவுக்கும் அதிகமாகப் படரும்.மத்ததெல்லாம் வீட்டு வேலிகளிலும் குப்பை மேட்டிலும் தோட்டத்தில் வளர்ந்து வீட்டில் முற்றத்தில் முருங்கை மரங்களும் அதில் கீரையும் பூவும் காயும் எப்பவும் கிடைக்கும், அதிலும் மாரிகாலம் வந்தால் அடிச்சி ஊத்தும் மழையில் மரங்களெல்லாம் குளிச்சி சுத்தமா நிக்கும், பூச்சிபுழுக்கள் எல்லாம் மழைத்தண்ணீரில் அலசிப்பட்டு போயிரும், நாலு நாள் மழை பெய்ந்தாலே மரங்கள் எல்லாம் துளிர் விட்டு இளம் தளிருடன் பார்க்கவே பரவசமாக நிற்கும். வெள்ளத்தில் எல்லாம் அள்ளுப்பட்டு போவதனால் வேலியில் மரத்தில் படரும் கீரைகளும் காய்களும் தான் சமையலுக்கு.
முல்லை
தூதுவளை, முருங்கை, கறிவேப்ப்பிலை கீரைகளின் துளிர்களை பிடுங்கி அலசி சோத்துபானையில் கஞ்சி வடிச்சதும், அதுக்கு மேல் வாழை இலை போட்டு மூடி நெருப்பை அணைச்சி விட்டால் கொஞ்ச நேரத்தில் கீரை துளிர்கள் அவிந்து இருக்கும். அதோட பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், உப்பு, தேசிப்புளியும் சேர்த்து அம்மியில் அரைச்ச சம்பலுக்கு சுடு சோறு இருந்தால் வேற கறி வேண்டாம் தான்.
பீர்க்கை கொடியும் நாடங்காயும், புடலங்காயும் முருங்கை மரத்தில் படந்து கிடப்பார். பீர்க்கை வீட்டு தேவைபோக அல்லயவருக்கு கொடுத்தும் காய் அப்படியே காய விட்டு காய்ந்து பாத்திரம் தேய்க்கவும்,. முதுகு தேய்க்கவும் பாவிப்பம். பீர்க்கங்காய், நாடங்காய், வத்தவக்காய்க்கெல்லாம் மணப்பு கருவாடு போட்டு சொதி, புடலங்காய் பால் கறி, கத்தரிக்காய் பால் கறி மணப்பு கருவாடு போடாமல் சமைக்க மாட்டோம்.
லாவுட் பழம் மரம் கிணற்றடியில் பெரிதாக வளர்ந்து நின்றது. லாவுட் காயும் புளிமாங்காயும், உப்பும் போட்டு உரலில் இடிச்செடுத்தால் அது தான் பின்னேரம் டிபன். லாவுட் பழமும் மாரி காலம் தான் பழுக்க தொடங்கும். தானே பழுத்து பழங்கள் நாலா வெடிச்சி விழும், மாவு போல் செம்ம ருசியான பழம், சின்ன வயதில் நான் அதிகம் லாவுட்காயும் பழமும் சாப்பிட்டிருக்கேன்.
பாத்திரம் தேய்க்கவும், முதுகு தேய்க்கவும் காய்ந்த பீர்க்கங்காய்
திராய் நல்ல கசப்புச் சுவை கொண்டது. நீரழிவு நோயாளர்களுக்கு நல்லது.
திராய்,குறிஞ்சா இரண்டும் சமைக்கும் போது கீரையில் நீர் இருக்க கூடாது. நீரில் வேக விட்டால் கசப்பு அதிகரிக்கும், கழுவி காய வைத்த பின் அரிந்து சுண்டல் செய்யணும், மீன் அவித்து பிசைந்து தேங்காய்ப்பூவும் சின்ன வெங்காயம் நிரம்ப போட்டு உப்பும் தேசிப்புளியும் சேர்த்தால் கசப்பு குறைந்து விடும், நான் கீரைகளுக்கு தேசிப்புளி சேர்க்காமல் சும்மா சமைப்பேன்.மீன் போடாமலும் சுண்டல் செய்யலாம். திராய் சுண்டலை போல் மீனும் புளிமாங்காயும் சேர்த்து செய்யும் அவியலுக்கு கடைசியா திராயை தூவி விட்டு கிளறி விட்டால் செம்மயா இருக்கும்.
எங்கட வடகோவை ஐயா கீரை பத்தி போட்ட பதிவில் நான் கானாந்தி கீரையை விட்டு விட்டீங்களே என கேட்டனா... அவரும் கானாந்தி கீரையோட படம் போட சொல்லி கேட்டாரா.அவர் கேட்டதும் கீரையோட படம் மட்டும் போட்டால் திண்ட சோறு செமிக்காது அல்லோ? அதனால் கானாந்தி கீரையோட சேர்த்து கதையும் சொல்லிட்டேன். 😻😻😻
ப்டங்கள் இணையத்தில் இருந்து எடுத்தேன்.
19 ஜூலை 2022
கல்லாற்றின் கூனி கடையலும் சுடு சோறும்
கல்லாற்றின் கூனி கடையலும் சுடு சோறும் ( முப்பத்திரண்டு வருடங்களுக்கு முன் ) நிஷாவும்
மட்டக்களப்பின் சிறப்பு கல்லாற்றின் ஆற்றங்கரை பக்கமாக களுதாவளை - மண்டூர் பக்கமிருந்து தோணியில் ( வள்ளம் ) வரும் பெண்கள் இருவர் குழுவாக இடுப்பளவு நீரில் இறங்கி நின்று சல்லடை போல் இருக்கும் சேலையின் இருபக்கமும் பிடித்து கொள்வார்கள். அதை தண்ணீரில் மேல் தாலாட்டுவது போல் முன்னும் பின்னும் நீருக்குள் ஆட்டி ஆட்டி அசைக்கும் போது கூனி அந்த துணிக்குள் சேரும். இதனை "கூனி வடித்தல்" என்னும் சிறப்பு பெயர் கொண்டும் அழைப்பர். அதே பெண்களே கல்லாறு சந்தைக்கு கொண்டு விற்பார்கள்.
இறாலின் இளநிலை பருவமான கூனி இராசவள்ளி கூழ் போல் நிறம் இருக்கும். பூவரசு இலைக்குள் அடங்கும் ஒரு பங்கு. 🌺🌺 ஐம்பது சதம் .😂 கூனி உடன் ஆற்றின் மண் சிப்பி இருக்கும். அதை அரிச்சி அரிச்சி கழுவி எடுக்கணும்.
கூனி கடையல்
பச்ச மிளகாய் அவிச்சி கடைஞ்சு
நல்ல புளி மாங்காயும் உப்பும் மஞ்சளும் சேர்த்து சுத்தமாக்கிய கூனி சேர்த்து அளவான தண்ணி விட்டு மூடி விட்டால் பத்து நிமிடத்தில் அவிந்து விடும்.
மீண்டும் மாங்காயை அகப்பையால் கடையும் போது கூனி மாங்காய் கொச்சிக்காய் எல்லாம் சேர்ந்து செம்மமையா இருக்கும்.
அதே போல் கூனி இங்கே சுவிஸில் தாய்லாந்து கடையில் வாங்கி சமைத்து இருக்கின்றோம். ஆனால் போத்தலில் அடைக்க பதப்படுத்தும் போது அதன் இயற்கையான சுவை மிஸ்ஸிங்
மட்டக்களப்பில் இருந்து எமக்கு வரும் பொருட்களில்
* கல்லாற்று கூனி
* திராய் வற்றல்
* குறிஞ்சா கீரை வற்றல்
* பொட்டியான் கருவாடு
கட்டாயம் இருக்கும்
கெளுத்தி மீன்
சள்ளல் மீன்
செல்வன் மீன்
குஞ்சி மீன்
எல்லாம் விசேஷம்🤣
ஆறு, குளங்களில் மீன், இறால் பிடித்தல், மீன்களை வாங்கி விற்றல், கூனி, ஐயாமாசி வடித்தல் போன்ற ஆபத்தான தொழிலில் ஈடுபட்டு வந்த பெண்களை கண்டு வளர்ந்தனால் உழைத்து பிழைத்தலில் அருமை எமக்கும் உணர்த்தப்பட்டிருந்தது. எங்கள் ஊரில் அக்காலங்களில் பெண் தொழில் முனைவோர்கள் அதிகமாக இருந்தனர். வீட்டு ஆண்கள் வேலைக்கு போனாலும் வீட்டில் இருக்கும் பெண்கள் பல தொழில்களை செய்து சிறு வருமானம் பெறும்படி இருந்தது. முக்கியமாக பத்தாம் வகுப்பில் பரிட்சை எழுதி விட்டு காத்திருக்கும் காலங்களில் பெண்களுக்கான தொழில் பயிற்சிகளை ஆரம்பித்து விடுவார்கள்.
இதை குறித்து அடுத்த பதிவில் தொடர்ந்து எழுதுகின்றேன்.
வேலையத்தவர்கள் மனசில் தான் ஆயிரம் குத்தல்களும் குடைச்ச்ல்களும் உருவாகும் என்பதை புரிந்து கொண்டால் இக்காலத்தில் என்ன நடக்குது என்பதை இதை வாசிப்பவர்கள் சிந்த்னைக்கே விடுவோம்.
போவோமா ஊர்கோலம் இந்த பூலோகம் எங்கெங்கும்
நூல் கோல் கிழங்கு கறியும், கீரை சுண்டலும்
நூல் கோல் கிழங்கு கறியும், கீரை சுண்டலும்
புகைப்படத்தில் இருப்பது இன்றைய மதியம் எனக்கான உணவு : என் தோட்டத்தில் விளைந்த நூல் கோல் , சமைக்க தேவையான ஒற்றை பச்ச மிளகாயும். செர்ரி தக்காளியும்
வீட்டுத்தோட்டத்தில் நூல் கோல் கிடைக்கும் நாட்களில் இந்த கிழங்கை பிரதான உணவாகவும், அதன் கீரையும் உப உணவாகவும், அரிசியும் எடுத்து கொள்ளலாம்.
நூல் கோல் கிழங்கு தேங்காய்ப்பால் கறி
கிழங்கை தோல் சீவி அளவான சதுர துண்டங்களாக வெட்டி கழுவி கொள்ளுங்கள். வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி, பச்ச மிளகாயும் நறுக்கி போட்டு மஞ்சளும், உப்பும் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு அடுப்பில் வையுங்கள். முக்கால் பதம் வேகி வரும் பருவத்தில் நல்ல கட்டி தேங்காய்ப்பாலை விட்டு கொதிக்க விட்டு எடுத்தால் அருமையான நூல் கோல் பால் கறி தயார். விரும்பினால் கருவாட்டு துண்டு, மாசி சேர்க்கலாம். நான் இப்பொதெல்லாம் அசைவ உணவுகள் தவிர்ப்பதால் மரக்கறியாக்வே சமைத்து எடுப்பேன்.
மரக்கறிகளை கரையும் படி வேக விடாமல் முக்கால் பதத்தில் கடித்து உண்பது போல் வேக விட்டு சமைத்து எடுப்பது ஆரோக்கியமானது.
நூல் கோல் கீரை சுண்டல்
சின்ன வெங்காயம்
தேங்காய்ப்பூ
பச்ச மிளகாய்
மீன் விரும்பினால் சேர்க்கலாம்.
இலையின் நடுவில் இருக்கும் தண்டுகளை வெட்டி எறிந்து விட்டு கீரையை நன்றாக கழுவி இலையின் மேல் இருக்கும் நீரை உதறி எடுத்த பின் மிக மெல்லியதாக அரிந்து கொள்ளவும்.
மீன் சேர்த்து சுண்டுவது என்றால் மீனை சுத்தம் செய்து பச்சை மிளகாய், மஞ்சள் உப்பு சேர்த்து அவிய விட்டு பின்னர் மீனை தனியே எடுத்து முள் நீக்கி கொள்ளவும்,
முள் நீக்கிய மீனை மீண்டும் சட்டியில் போட்டு ஒரு கடையல் கடையவும்.
மீன் சேர்க்காமல் சுண்டல் செய்ய பச்சை மிளகாயை கட்செய்து மஞ்சள் உப்பு சேர்த்து அவை அவியும் அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும்,
மிளகாய் அவிந்த பின் அகபையால் கடைந்து விட்டு கீரையை அதனுள் சேர்த்த்து ஒரு நிமிடம் மூடி விடவும்,
தேங்காய்பூ ( தேங்காய் மலிவாக கிடைத்தால் ருசிக்கேற்ப தாராளமாக சேர்க்கலாம். ) சேர்த்து கீரையுடன் ஒரு நிமிடம் கிளறி விடவும், தேங்காய்ப்பூ சேர்த்த பின் மூடி போட்டு மூட வேண்டாம்.
இறுதியில் நறுக்கிய வெங்காயமும் சேர்த்து வெங்காயம் அவிய விடாமல் கடிபடும் பருவத்தில் இருக்கும் போதே அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
இந்த மாதிரி கீரை சுண்டலுக்கு நான் புளி சேர்ப்பது இல்லை.
அதிகரித்து வரும் விலை ஏற்றத்தை சமாளிகவும் அரிசி யின் தேவையை குறைக்கவும்,
ஒரு வேளை உணவில், இரண்டு பங்கு கிழங்கு கறி, அதே அளவு கீரை சுண்டல். ஒரு பங்குக்கும் குறைவாக அரிசி சோறு சேர்த்து கொள்ளலாம்.(மீன்,இறைச்சி உணவு கிடைத்தால் இந்த அளவுகளில் மாற்றம் செய்யலாம் )
அரிசியின் தேவை :
ஒரு நபருக்கு தேவையான அரிசியின் சரியான அளவைக் கொடுப்பது கடினம், ஏனென்றால் எல்லா அரிசியும் ஒரே மாதிரி இருக்காது! புழுங்கல் அரிசி அதிக எடை கொண்டது.100 கிராம் சமைக்கப்படாத அரிசி 200-300 கிராம் சோறாக மாறும். எனவே சமைக்கப்பட்ட அரிசியின் எடை இரட்டிப்பாகவோ அல்லது மூன்று மடங்காகவோ இருக்கலாம்.
உணவில் அரிசி முக்கிய உணவாக இருந்தால், ஒரு நபருக்கு 100 கிராம் முதல் 120 கிராம் வரை பச்சை அரிசி தேவைப்படும்.
அரிசி உடன் பக்க உணவுகளுக்கு, ஒரு நபருக்கு 20-60 கிராம் உலர் அரிசி போதுமானது.
உணவில் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்த்து கொண்டால் வளர்ந்த ஒரு நபருக்கு 50 கிராம் போதுமானது.
பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு உணவு வழங்கும் திட்டங்களில் மரக்கறிகளை கீரைகளை அதிகமாகவும் அரிசியை உப உணவாகவும் எடுத்து கொண்டால்
ஒரு கிலோ அரிசியில் 2500 - 3000 கிராம் சோறு கிடைகுமானால் 20 சிறுவர்களுக்கு 120 - 140 கிராம் சமைத்த அரிசி சோறும் 120 - 150 கிராம் மரக்கறிகளையும் சேர்த்து கொள்ளலாம். இதனுடன் பழங்களும் சேர்க்கும் போது அதுவே நிறையுணவாகி விடும்.
அதிருக்க
மலையக மரக்கறிகளில் நோக்கல் என ஒரு நாற்றுக்கு பெயர் இருந்தது. அது என்ன மரக்கறி என எனக்கு புரியவே இல்லை. நோக்கல் என தட்டச்சிட்ட போது நாங்கள் இங்கே kohlrabi என அழைக்கும், நூல்கோல் கிழங்கு படம் கிடைத்திருந்தது. இதை ஊரில் நோகூட் என அழைத்ததாக நினைவு. நூல் கோல் மருவி நோக்கல் ஆகி நோ கூட் எனவும் அழைக்கப்படுகின்றதா?
06 நவம்பர் 2018
நான் சின்னவளாக இருந்த போது - 6 காகமும் மனிதர்களும்
நம் எல்லோருக்குமே நம் இளவயது நினைவுகள் மறக்க முடியாதிருக்கும்.
நானும் சின்னவளாக வாழ்ந்த காலத்தில் என் நான்கு வயதிலிருந்து நடந்த சம்பவங்கள் சில என் நினைவில் இருப்பது ஆச்சரியமானது தான். அதே போல் குட்டிக்குட்டி சிறுவர் பாடல்களும், செவிவழியாக தொடர்ந்து வந்த பாடல்களுமாக இயற்றியவர்கள் யார் என தெரியாமலே உச்சரிக்கப்பட்ட பாடல்கள் அனேகக்ம். அவைகளில் என் நினைவில் இருக்கும் பாடல்கள் சிலதை தொகுப்பாக்கி நான் சின்னவளாக இருந்த போது எனும் தலைப்பில் தொகுப்பாக்கி வந்தேன்.
அந்த வரிசையில் மீண்டும் தொடரும் இப்பதிவு.

மனிதர்கள் வாழ்க்கையில் சில பறவையினம் ஒன்றிப்பிணைந்து வாழ்ந்திருக்கும், அதில் காகத்துக்கு முக்கிய இடம் இருக்கும்,
காலையில் துயில் கலைவது முதல் நற்காரியங்களை தொடங்கவும், விருந்தினர் வரவை அறியவும், தீமைகளை , தீங்குகளை உணர்த்தவும் காகம் கரைவதை வைத்தே கணித்திருக்கின்றார்கள்.
பயணங்கள் நேரம் காகம் நம் பின்னால் கரைந்தபடி வந்தால் பயணம் தடைப்படும், என்பதும் , வடமிருந்து இடம் பறந்தால் நன்மை எனவும், இடமிருண்டு வலம் பறந்தால் தீமை எனவும், கணித்து தூரப்பயணங்களை திட்டமிட்டோரும், வியாபரப்பயணங்களை மேற்கொண்டோரும் உண்டு.
ஒற்றைக்காகம் தனித்தே கரைந்தால் விருந்தினர் வரவோ, கடிதமோ வரும் என்பார்கள், அது கரையும் விதத்தில் நல்ல செய்தி வரப்போகின்றது, கெட்ட செய்தி வரப்போகின்றது என முன் கூட்டி பேசிக்கொள்வதை நான் கேட்டிருக்கின்றேன்.
எங்கள் வீட்டில் ஒத்தைகாகம் கரைந்தால் அம்மம்மா துரத்திகொண்டே இருப்பார். கரைதலில் இருக்கும் வித்தியாசம் இனம் கண்டு,, அந்த காக்கையை துரத்து, துக்க செய்தியை வரப்போகுது என்பார்கள்.
அப்படியே ஆகி இருப்பதை உணர்ந்தும் இருக்கின்றேன்.
அப்படியே ஆகி இருப்பதை உணர்ந்தும் இருக்கின்றேன்.
வானத்தில் காகம் ஒரு திசையிலிருந்து இன்னொரு திசை நோக்கி கூட்டம் கூட்டமாக பறந்தால் எதிர் வரும் ஆபத்திலிருந்து தப்பி பறந்து செல்கின்றதென சொல்வார்கள். காரணமில்லாமல் கரைந்துசத்தமிடும் காகம், பஞ்சம் வரப் போவதையும், சுற்றிச் சுற்றிப் பறக்கும் காகம் எதிரிகள் தொல்லையையும், இரவில் அசாதாரணமாகப் பறக்கும் காகம் அந்தப் பகுதிக்கு ஏதோ ஆபத்து நேரிடப்போவதையும் முன் கூட்டியே அறிவிப்பதாக சொல்வார்கள். மழை வருமா, புயல் வருமா, அனைத்துக்கும் இந்த மிருகங்கள், பறவைகள் நமக்கு முன்னறிவிப்பாளர்களாக இருக்கின்றன. அதிலும் காகத்தில் கூரிய அறிவும் முன்னுணரும் தன்மையும் ஆச்சரியம் தருவதே.. பறவைகளில் காகத்துக்கே கூரிய அறிவித்திறன் அதிகம் என்பார்கள். தந்திரமும், சமார்த்தியமும் கொண்டது காகம்.
விருந்துகள் நேரமும், விரத நாட்களிலும், நினைவு காட்களிலும், அமாவாசை, திதி, தீபாவளி என முக்கியமான நாட்களில் சமைப்பதை முதலில் காகத்துக்கு வைத்து அவை கொத்தி தின்பதை கண்ட பின்பே தாம் உண்பதும் தமிழர் கடைப்பிடிக்கும் வழக்கம். அன்றாடம் சமைப்பதில் ஒரு பிடியை காக்கைக்கு தனியே வாழை இலையில் எடுத்து வைத்து விடுவோரும் உண்டு. இன்று இவ்வழக்கங்கள் குறைந்திருக்கலாம் அக்காலங்களில் காகத்தின் மூலம் முன்னோருக்கும், மூதாதையோருக்கும் உணவழிப்பதாக சொல்லப்பட்டாலும் சமைக்கப்பட்ட உணவினால் ஏதேனும் பாதிப்பு விஷத்தன்மை இருக்குமா எனும் சோதனையும் இதனூடாக அக்காலத்தில் நடந்திருக்குமோ எனபது கூட எனது யூகமாக இருக்கின்றது.
எல்லாவற்றையும் விட காகம் மனிதர்களுக்கு ஒன்றுபட்டு வாழ்வதின் மகத்துவத்தை போதிக்கின்றது. தகக்கு கிடைக்கும் எதையும் தனித்து உண்ணாமல் சத்தமிட்டு தன் இன சனத்தை அழைத்தும் கொத்தி கொண்டு போய் கொடுத்தும் பகிர்ந்துண்ணும் கலையை நமக்கு சொல்லி தந்திருக்கின்றது.
கா...கா என்றே கரைந்திடும்
கழுத்தைத்திருப்பி பார்த்திடும்
இனிய உணவைக் கண்டதும்
இனத்தைக் கத்திக் கூப்பிடும்
பகிர்ந்து உணவை உண்டிடும்
பழக்கம் தன்னை உணர்த்திடும்
காக்கை காட்டும் குணத்தினைக்
கருத்திற் கொண்டால் நலமாகும்
மாறிவரும் காலசூழலில் காகங்கள், சிட்டுக்குருவிகள் போன்ற பரவை இனங்கள் அழிந்து அரிதாகி வருவது கவலைக்குரியது.
காகத்தை குறித்த சிறுவர் பாடல்களை பார்ப்போமா?
காகம் ஒன்று காட்டிலே
தாகத்தாலே தவித்தது
வீட்டின் பக்கம் வந்தது
குடம் ஒன்று கண்டது
அந்தக்குடத்தின் அடியிலே
கொஞ்சம் தண்ணீர் இருந்தது
கல்லைப்பொறுக்கி போடவே
தண்ணீர் மேலே வந்தது
ஆசை தீர குடித்தது
தாகம் தீர்ந்த காகமும்
வேகமாக பறந்தது.
மக்கள் வாழும் இடங்களில் அவர்களோடு இணைந்து கூட்டமாக வாழும் காகங்கள் அனைத்துண்ணிகள் என்பதுடன், சூழலை சுத்தப்படுத்துவதில் காகங்களுக்கும் முக்கிய பங்குண்டு.
காக்கையாரே காக்கையாரே எங்கே போனீர்?
காக்கை:காணாத இடமெல்லாம் காணப் போனேன்
கண்டு வந்த புதினங்கள் சொல்லக்கேளும்
செட்டியார் வீட்டிலே கலியாணம்
சிவனார் கோயில் விழாக்கோலம்
மேரி வீட்டிலே கொண்டாட்டம்
மீன் பிடித்துறையிலே சனக்கூட்டம்
கண்டிப் பக்கம் குளிரோ கடுமை
காங்கேசன்துறையில் வெயிலோ கொடுமை.
பாட்டி சுட்ட வடைக்கதையில் காகம் நரியிடம் ஏமாந்து போனதாக சொன்னாலும் அதன் உள்ளர்த்தம் எவரையேனும் ஏய்த்து பிழைத்தால் நம்மையும் எவரேனும் ஏமாற்றக்காத்திருப்பார்கள் என்பதே.
அதையும் கூட நாங்கள் மாற்றி எழுதி பாடிக்கொண்டோம்.
வள்ளியம்மைப்பாட்டி
வடை சுட்டு விற்பாள்
பாட்டி சுட்ட வடையை
தினம் ருசித்துத்தின்னும் காகம்
பாட்டி தந்த வடையொன்றை
தின்னச்சென்ற காகத்தை
குள்ள நரியும் கண்டது
தந்திரமொன்று செய்தது
காக்கை அக்கா நீ பாடு
காது குளிர நான் கேட்பேன்
இனிமையான உன் குரலோசை
கேட்டு ரெம்ப நாளாச்சே...
என்றே நரியும் சொன்னதனால்
நன்றே நினைத்த காக்கையது
வடையைக்காலில் வைத்துக்கொண்டே
கா, கா வென்றே பாடியது
ஏய்க்க நினைத்த நரியாரோ
ஏமாறித்தான் போனாராம்
புத்தியான காக்கையது
புகழுக்கெல்லாம் மயங்காதாம் .
ஆமாம் புத்திசாலி காகத்தை எவரும் ஏய்க்க முடியாதாம்.
இது ஒரு தொடர் பதிவு.
13 டிசம்பர் 2016
நான் சின்னவளாய் இருந்த போது குடியிருந்த கோயில் - 1
1980 முதல் 1989 வரை நாங்கள் குடியிருந்த கோவில்.
ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கதை சொல்லும் வீடு!
வாடகை கொடுக்காத வாடகை வீடு!
என் நினைவில் நீங்காமல் இருக்கும் பல இனியவைகளுக்கு சொந்தமான வீடு!
எனது இரண்டு தங்கைகளும், தம்பியும் Pushpakanthan Edward பிறந்த வீடு!
அடுத்தடுத்து நான்கு பெண்கள் பிறந்ததனால் பையன் பிறந்தால் கதிர்காமம் கோயிலில் மொட்டை அடிப்பதாக வேண்டி அம்மா கந்தசஷ்டி விரதம் இருந்து அதன் பின் இந்த வீட்டின் வெளிப்புறமாக ஐன்னல் தெரியும் அறையில் தான் என் தம்பி பிறந்தான்.தம்பி பிறந்தான் என அம்மாவுக்கு மருத்துவிச்சியாயிருந்த அம்மாவின் சித்தி பெண் இலட்சுமி ஆசம்மா சொன்ன நாள் எனக்குள் இன்றும் நினைவில் இனிக்கும். அக்காலத்தில் ஸ்கான் வசதிகள் அதிகம் இல்லாததால் பிள்ளை பிறந்த பின் தான் ஆணா பெண்ணா என தெரியும்.
உனக்கு தம்பி பிறந்திட்டாண்டி. ஓடு ஓடிப்போய் உங்கப்பாக்கு சொல்ல சொல்லி போற, வாற பஸ் ரைவரி டம் சொல்லி விடு என யோகப்பெரியம்மாவின் பெரியப்பா என்னை துரத்தி விட்டதும் இந்த வீட்டில் தான். அப்போவெல்லாம் எங்க வீட்டில் அம்மாவின் சொந்த சகோதரர்கள். அம்மம்மா என யாரும் வருவதில்லை. ஆனால் அம்மம்மாவின் தங்கை பிள்ளைகள் தான் எமக்கு உதவியாக இருந்தார்கள்.
அந்த நாள் அப்பா மட்டக்களப்பு, கல்முனை பஸ் டிரிப் ஓடிகொண்டிருந்தார். அப்பாவுக்கு மதியச்சாப்பாடு மட்டக்களப்பிலிருந்து கல்முனை போகும் பாதையில் காத்திருந்து தினமும் நான் கொண்டு கொடுப்பேன், கட்டுச்சாதம்,பாத்திரங்களில் வைத்து துணியால் கட்டி கொண்டு கொடுத்தால் ஐந்து ரூபாய் தருவார் அன்றைக்கு சாப்பாட்டுடன் தம்பி பிறந்த தகவலும் சொன்னேன்.
இரண்டு காலில் சந்தோஷமாய் போன மனுஷன் வீட்டுக்கு வரும் போது சாதாரணமாக நான்கு காலில் வருவாரெனில் அன்று எட்டுக்காலில் வந்தார். மகன் பிறந்த செய்தி அறிந்த நண்பர்களுக்கு பார்ட்டியாம். அதை விட தம்பி பிறந்ததை ஏன் டைவரிடம் சொல்லி விட்டதென அம்மாவுக்கு திட்டவும் செய்தார். அமமா பாவம். ரைவர் அங்கிளிடம் தகவல் சொன்னதால் அவர் எல்லா அங்கிளுக்கும் சொல்லி அவர்கள் பார்ட்டி வைக்க கேட்டதால் அப்பாக்கு கோபம்.
அப்பாவை குறித்த கவலையும், இயலாமையும் இருந்தாலும் இவர் என் அப்பா என நான் பெருமிதப்படும் படி ரியல் ஹீரோவாக வாழ்ந்து காட்டியதும் இந்த வீட்டில் தான்.
படத்தில் இருப்பது போல் நாங்கள் குடியிருந்த போது வீட்டின் கூரை ஓட்டினால் வேயப்படாமல் ஓலையால் வேயப்பட்டிருந்தது. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மழையும் வெயிலும் இலவசமாய் வீட்டின் கூரையினூடாக தரிசனம் தரும் வீடு!
மின்சாரம் இல்லை, சமையலறை இல்லை, டாய்லட் இல்லை, ஆனாலும் நாங்கள் அங்கே குடியிருந்தோம்.
எத்துணை உயர்ந்தாலும், நாலு டாய்லட் இணைத்து பங்களாக்களை கட்டினாலும் நினைத்தாலே இனிக்கும் நினைவுகளை தரும் வீடு!
ஒரு கொத்தரிசியில் விறகடுப்பில் சோறு வடித்து வைத்து விட்டு வீட்டுக்கு எதிரே இருந்த மகேசன் மாமாவீட்டு சுவரின் மேலால் அவர்கள் வீட்டு ஜனனலினூடாக தெரியும் கறுப்பு வெள்ளை டீவியில் உதயகீதம், ஒளியும் ஒலியும் எட்டிப்பார்க்க செல்லும் இருபது நிமிடத்தில் சுடு சோத்தை பானையோடு தூக்கிச்சென்று விடும் நாயின் அட்டகாசத்தினால் பட்டினியாய் தூங்கிய நினைவுகளும் இங்கே தான்.
கிணற்றடியில் நின்ற லாவுட் பழ மரத்தின் காய்களை பறித்து நிலத்தினை தோண்டி, வாகை இலைகளை பரப்பி அதன் மேல் பழத்தினை வைத்தால் இரண்டு நாளில் கனிந்து விடும். ஒரு பழம் ஐம்பது சதம் என வீடு வீடாய் விற்க சென்று வரும் காசில் ஒரு இறாத்தல் பாண் வாங்கி தேனீருடன் பசி அடக்க வைத்த வீடூ! அதே மரத்தில் ஊஞ்சல் கட்டிஆடிய நினைவுகளும், சோறு கறி சமைத்து விளையாடிய காலஙகளும், தங்கைகளோடு சண்டை இட்டு வீட்டை சுற்றி ஆளையாள் துரத்தி தலைமுடியை பிச்சி அடித்து சண்டை போட்ட துடியாட்டங்களுமாம் நினைவை சொக்க வைக்கும் வீடு.
வீட்டை சுற்றி முற்றம் தவிர பெரிய இடம் இருந்ததனால் மரவள்ளி, கச்சான்,அவரை தக்காளி, வெண்டி என விதவிதமாய் விதைத்து தினம் நீர் ஊற்றி தோட்டம் செய்யும் ஆர்வத்தினை எனக்குள் நுழைத்த வீடு. பல நாள் நாங்கள் விதைத்த மரவள்ளிச்செடியின் கிழங்கே எங்கள் பசி போக்கும் தாயானது.
அப்பா இலங்கை போக்குவரத்து சபை பேருந்து நடத்துனர் என்பதால் ஒவ்வொரு சீசனுக்கும் பழங்களை ஏற்றும் ஏழைகள் கையில் காசில்லாமல் டிக்கட்டுக்கு காசுக்கு பதில் பழங்களை அள்ளிக்கொடுக்க,சோற்றுக்குப்பதில் பழங்களை விதவிதமாய் அள்ளி தின்ன வைத்த வீடு!
டியூட்டி முடிந்து வரும் அப்பாவின் காக்கி சேர்ட்டின் கிடக்கும் சில்லறைகளை அவருக்கும் அம்மாவுக்கும் தெரியாமல் திருடிக்கொண்டு மறு நாள் பள்ளி இடைவேளையில் சைக்கிளில் பாம் பாம் என பெல் சத்தத்தோடு வரும் சக்கிரின் ஐஸ்கிரிம் வண்டி மாமாவிடம் கலர் கலராய் ஐஸ்கிரிமும், பள்ளி வாசலில் அமர்ந்து அவித்த பலாக்கொட்டை பத்து இருபத்தியைந்து சதமும் கொடுக்காப்புளி, நாவல் பழம் என பங்கு வைத்து விற்கும் பல்லுப்போன ஆச்சியிடம் வாங்கி தின்று அம்மாவிடம் இரட்டைச்சடை பின்னும் நேரம் மாட்டி முழித்த நினைவு தரும் வீடு!
மளிகைப்பொருள் கடன் வாங்கி விட்டு சொன்ன தவணையில் காசு கொடுக்கவில்லை எனில் எங்கம்மாவை தேடி வரும் கடையன்ரியிடம் அம்மா இல்லை என சொல்லி அம்மாவிடம் இருக்கும் ஒரே ஒரு சேலை கொடியில் காய்வதை வைத்து வீட்டுக்குள் ஒளிந்திருக்கும் அம்மாவை கண்டு பிடித்து திட்டு வாங்கிய நினைவுகளின் சங்கமமும் இந்த வீடே!
ஊரெல்லையில் இருக்கும் நெல் அரைக்கும் மில்லுக்கு சென்று உமி,தவிடு சுமந்து ஒரு மூட்டை பத்து ரூபாவுக்கு விற்று,மாவிடித்து, இட்லி, தோசை சுட்டு விற்று கடும் கஷ்டத்திலும் தான் படியாத ஏட்டுக்கல்வியை நாங்கள் படிக்க வேண்டும் என அம்மா பட்ட கஷ்டங்களை உடனிருந்து அனுபவிக்க வைத்த வீடு.
பள்ளியில் நாங்கள் இளவரசிகளாய் இளவரசனாய் எங்கள் திறமையாய் பேர் பெற்றிருந்தோம் எனினும் அதற்கு அஸ்திவாரம் இட்டவர் எங்கள் அம்மா. தான் பட்டினி கிடந்து எங்கள் பசி தீர்த்தார். இத்தனைக்கும் என் நான்காவது தங்கை பிறக்கும் வரை கஷ்டம் எனில் என்னவென அறியாமல் வளந்திருந்தார் என்பதை நான் அறிவேன். குடும்பம்பெருக , செலவுகளும் பெருகி, அப்பாவின் குடிபோதையுமாய் சில வருடங்கள் எம்மை வருத்திய நாட்கள்: அவைகள்.
பல நாள் காலையில் குளித்து சீருடை அணிந்து காலை ஆகாரம் இன்றி வெறும் தேத்தண்ணீரை சீனியை கையில் கொட்டி தொட்டு குடித்து செல்லும் சூழலிலும் அடுத்த பக்கம் இருக்கும் சுரேந்திரன் மாமா வீட்டு அம்மம்மா முதல் நாள் எஞ்சிய சோற்றில் தண்ணீரை ஊற்றி வைத்திருந்து வேலிக்கு மேலால் தூக்கி தரும் போது அதில் உப்பை விட்டு கரைத்து குடித்து விட்டு சென்ற நாட்களை....... அன்ன மிட்ட கைகளை இன்னும் நான் மறக்காமல் இருக்க வைக்கும் வீடு.
கங்கா அன்ரி, நகுலேஸ் அன்ரி, யமுனா அன்ரி என முன் வீட்டில் இருந்த அன்ரி மாரின் பாசத்தில் நனைந்து மாலையானால் அவர்கள் வீட்டு முன் கூடத்தில் அமர்ந்து வீட்டுப்பாடமும் பல கதைகளும் சொல்லி தந்த வீடு
மாதினி, மாலினி டீச்சர்கள் எனக்கு காசு வாங்காமல் டீயுசன் செல்லித்தந்த வீடு.
தீப்பெட்டி முடிந்து போனால் எதிர் வீட்டு பாக்கியம் அன்ரி அப்பம் சுட்டு அணையாமல் இருக்கும் நெருப்பில் எங்க வீட்டு அடுப்பையும் மண்ணெண்ணை சிமிலி விளக்கையும் பற்ற வைக்க தணல் இரவல் கேட்கும் நினைவுகளை புதைத்து வைத்திருக்கும் வீடு.
வீட்டின் மதிப்பை வைத்து மனங்களைமதிப்பிடும் இக்காலத்தில் எனக்கு சொர்க்கத்தினை உணரவைத்த வீடும் இதுதான்.
இத்தனை கஷ்டமும் நான் உணர்ந்ததனால் தான் 16 வயதில் சுவிஸ் வந்ததும் வீட்டுக்கு மூத்த பெண்பிள்ளையாக இருந்தும் நான் மட்டும் வாழாமல் என் குடும்பமும் வாழ வேண்டும் என நினைக்க வைத்தது. சுமைகளை சுமக்க சொன்னது. சுமை தாங்குவது என் கடமை என உணர்ந்தப்பட்ட போது மனம் உடைந்தும் போனது.
இன்றும் என்னைபோல் இருப்போரை கண்டு இரங்க வைக்கின்றது. பணத்தினை பொக்கிஷமாய் சேர்த்து வைக்க வேண்டும் எனும் எண்ணத்தினை விட்டு தூரமாய் நிறுத்தியும் வைக்கின்றது.

.
எங்களுக்கு பின் அதே வீட்டில் குடியிருந்த பாக்கியம் அன்ரியின் பேரன் அனுஷுக்கு நன்றி. குடியிருந்த வீட்டின் இன்றைய தோற்றம் கூகுள் மேப்பில் தேடி வைபரின் அனுப்பியது அவன் தான்.
குடும்பமாய் இணைந்து இந்த வீட்டில் குடியிருந்த 1988 ஆண் ஆண்டின் பின் நாங்கள் மீண்டும் இணையவே இல்லை.சிதறடிப்பட்ட நிலையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் கோபதாபங்களை நிரப்பிக்கொண்டு சுயநலமிகளாய் பாசங்களை விற்று சோகங்களை கடன் வாங்கிக்கொண்டோம்.
எங்கள் குடும்ப போட்டோவாய் எஞ்சியிருக்கும் ஒரே புகைப்படம் இது தான். அப்பா கையில் இருப்பது சித்தி மகன், அவன் முதலாவது பிறந்த நாள் அன்று எடுத்தது..
நினைவுகள் தொடரும்.

29 அக்டோபர் 2016
எண்ணப்பறவை சிறகடித்து........!
நாங்கள் ஐந்து பெண்கள், ஒரு தம்பி! குடும்பம் பெருகிய பின் கஷ்ட ஜீவனம் தான்.வாடகையில்லாத வாடகை வீடு!
பண்டிகை காலத்தில் அம்மா எப்படியோ கஷ்டப்பட்டு மண்ணெண்ணை வாடையோடு வரும் சீத்தை துணி கல்முனைமார்க்கெட்டில் மொத்தமாக வாங்கி விடுவார்.
இரண்டு விதமான துணியில் கிறிஸ்மஸுக்கு ஒரு சட்டை புதுவருடத்துக்கு ஒரு சட்டை. ஐந்து பெண்களுக்கும் ஒரே துணி, டிசைன் மாறி இருக்கும், தம்பிக்கு மட்டும் ரெடிமேட் ரௌசரும், சேட்டும் அது அனேகமாய் தவிட்டு கலரில் பள்ளிக்கூட உடுப்பாயும் இருக்கும். வருடத்துக்கு அந்த இரண்டும் தான் எங்களுக்கு புது ஆடை.அப்பாவின் தங்கை கொழும்பில் இருந்து அவர் பெண்களின் சட்டைகளை கொடுத்து விடுவார். அந்த சட்டைகள் அளவுக்கேறப் எங்கள் அனைவருக்கும் மீதிக்காலத்துக்கு பகிரப்படும்.
அச்சு முறுக்கு சோகி என அந்த சூழலுக்கு ஏற்ப பலகாரமும் கட்லட்,அல்லது கூனி வடையோ செய்து அதை கொண்டு சொந்தக்காரர்கள் வீட்டுக்கு போனால் கைவிசேடம் தருவார்கள். ஒருரூபாய், மூன்று ரூபாய் என அவரவர் வசதிக்கு தகுந்த படி இருக்கும். அதனால் இந்த பலகாரம் காவி வேலைக்கு எங்களுக்குள் போட்டி இருக்கும். தம்பியை கூட்டிப்போனால் கொஞ்சம் கூடுதலாய் காசு தருவார்கள் என்பதனால் அன்று மட்டும் நான் நீ என அடிபடுவோம்! அவன் எங்கள் எல்லோருக்கும் செல்லப்பிள்ளையாய் இருந்தான்.
அம்மா இறைச்சி சமைத்தால் ஊருக்கே வாசனை வரும், அதிலும் மாமாவுக்கு அம்மாவின் கைச்சமையல் எனில் நிரம்ப பிடிக்கும், வீட்டில் விருந்துச்சாப்பாடு. அதான் ஆட்டுஇறைச்சிக்கறி சமைத்து மாமா வீட்டுக்கு கொண்டு போனால் மாமி ஐந்து ரூபா தருவார்! அதனால் அன்று மட்டும் உளவாரம் அதாங்க உபகாரம் எனும் கைவிசேடக்காசு சிரித்துக்கொண்டே மாமாவும் தருவார்!மற்ற நாளில் மாமா என்றாலே பயம் தான்!
அன்று இருட்டிய பின் கல்முனையிலிருந்து பாபூஜி ஐஸ்கிரிம் வண்டி ஸ்பீக்கர் சத்தத்தோட வரும். ஊர் எல்லையில் வரும் போதே அதன் சத்தம் கேட்கும், பாட்டும் லைட்டுமாய் வரும் வண்டிக்கு பின்னால் தெருவின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை ஓடுவோம்.
அப்பா வீட்டில் இருந்தால் தான் ஐஸ்கிரிம் கிடைக்கும்.அப்போதானே காசும் வீட்டில் இருக்கும்.அப்பா இல்லாத நாளில் ஐஸ்கிரிம் வண்டி வந்தால் வண்டியை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டே நிற்போம்!
இன்றைக்கு மாதத்துக்கு நான்கு தடவை புதுத்துணி எடுத்தாலும் அக்காலத்தில் பண்டிகை எனில் அதிகாலையில் தலைக்கு குளித்து சீத்தைத்துணி சட்டையை மகிழ்ச்சியோடு அணிந்து சர்ச்சுக்கு போய் வந்து பலகாரங்கள் சாப்பிட்டதை போல் சுவையாய் இல்லை.
வயிறு நிறைய சாப்பிட தின்பண்டம் இருக்கின்றது.கப்பேர்ட் நிறைந்த துணிகள் இருக்கின்றது. ஆனாலும் எதையோ இழந்தது போல் உணர்வும் மனதில் ஆழத்தில் உறங்கிக்கொண்டே இருக்கின்றது!
தொடர்வேன்!
அனைவருக்கும்
இனிய தீபத்திருநாள்
நல் வாழ்த்துகள்!
21 ஜனவரி 2016
நான் சின்னவளாய் இருந்தபோது.-5
சின்னவளாய் இருந்த போதான என் நினைவுபெட்டகத்தில் நான் கற்றவைகள், பெற்றவைகளில் என் நான்காவது வயதிலிருந்து நடந்த சம்பவங்கள் இன்றும் நினைவுக்கு வருவது ஆச்சரியமானது தான்.
எங்கள் வீட்டில் நான் மூத்த பெண் என சொல்லி இருக்கின்றேன், எனக்கு அடுத்து மூன்று தங்கைகள், அதைத்தொடர்ந்து தம்பி, கடைசியாய் ஒரு தங்கை, ஐந்து பெண்கள், ஒரு ஆண் என மிகப்பெரிய குடும்பம் எங்களுடையது,
எனக்கும் என் தங்கைகளுக்கும் ஒன்றரை வயது தான் வித்தியாசப்படும் என்பதோடு நான் பிறந்த பொழுதினில் மட்டக்களப்பு அமிர்தகளியில் மாமாங்க கோயில எனும் பிரசித்தி பெற்ற கோயிலை ஒட்டி சொந்தமாய் வீடு மற்றும் வசதியாக இருந்திருக்கின்றோம். அந்த வீட்டை விட்டு என் ஆறாவது வயதுக்கு முன்பு புறப்பட்டு விட்டாலும் அதன் பின் அந்த வீட்டுக்கு திரும்பி போகும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் எனக்குள் அந்த வீடும், நினைவுகளும் இன்றைக்கும் ஏக்கம் தரும் ஒன்றுதான் ,சந்தர்ப்பம் கிடைத்தால் என் வாழ்க்கையில் ஒரு தடவையாகிலும் அந்த இடத்தை சென்று பார்க்க வேண்டும் எனும் ஏக்கம் என்னுள் உண்டு.
அந்த வீட்டை அம்மாவுக்கு சீதனமாக கொடுத்த தாத்தா சொந்த தாத்தா இல்லை. அம்மா மேல் பாசம் வைத்ததால் தன் சொந்த பிள்ளைகளுக்கு கொடுக்காமல் அம்மாவுக்கு கொடுத்தாராம். என்னிடமும் பாசமாக இருந்திருகின்றார்.
நடுவில் இரு அறைகளுடன்,இருபக்கங்களும் தாழ்வாரம் போன்ற நீண்ட பகுதியும், பெரிய கடையுமாய் திருவிழாக்காலங்களில் சர்பத் போன்ற இனிப்பு பதார்த்தங்கள் விற்கும் கடையாய் அவை பயன் பட்டதும், சர்பத்தின் சுவையும்,அதில் மிதக்கும் கசகசா,சேமியா போன்றவைகளின் சுவையும் தென்னை மரங்களும் கூட எனக்குள் நினைவு இருப்பது ஆச்சரியமே!
விட்டுக்கு முன்னே கோயிலுக்கும் சற்று முற்பகுதியில் மைதானம் போன்ற வெள்ளை மணல் பரப்பு இருந்ததில் அதில் பெரியவர்கள் நிலவு ஒளியில் அமர்ந்து பேசுவதும் நான் குமார், தேவி என எனை ஒத்த நண்பர்களுடன்
விளையாடிய நினைவும்
குமார் குமார் லைட் அடி
கோழிக்கூட்டுக்கு லைட் அடி,
எத்தனை மாதம் சம்பளம்,
மூன்று மாதம் சம்பளம். .
மாமா எங்கே படுக்கின்றார்,
மாடி வீட்டில் படுக்கின்றார்
அத்தை எங்கே இருக்கின்றாள்
அடுத்த வீட்டில் இருக்கின்றாள்
நம்ம வீட்டில் கல்யாணம்
தெருவிலெல்லாம் ஊர்க்கோலம்
டொம் டொம் டொம்
என குமாரை கேலி செய்து பாட்டு சொல்லி தந்ததும் நினைவில் இருக்கின்றது.
1978 ல் இலங்கையில் கிழக்கு மாகாணத்தை தாக்கிய சூறாவளியில்,வீட்டின் ஓடுகள் உடைந்து விழுந்ததும் , மேசைக்கு கீழாய் என்னை பாதுகாத்ததும், ஓடு விழுந்ததனால் ஓடு வேய்ந்த வீடு பாதுகாப்பானது எனும் நம்பிக்கையில் எங்கள் வீட்டில் வந்து பாதுகாப்பாக இருக்க நினைத்த பக்கத்து வீட்டு ஆண்டியின் முழங்காலில் ஓடு விழுந்ததும்,பக்கத்து குடிசைகள் மேல் வேய்ந்த ஓலைகளை காற்றள்ளி சென்றதுடன், ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த தென்னை மரங்களும் வீடுகள் மேல் சரசரவென சாய ஆரம்பித்து விட்டன. இதனால் வீடுகளின் குடியிருப்பது பாதுகாப்பில்லை என கொட்டும் மழையிலும், சுழன்றடிகும் காற்றிலும் அனைவரும் ஒருவரையொடுவர் பிடித்து கொண்டு மாமாங்க கோயிலுக்கு செல்ல இடுப்பளவு நீரில் நடந்ததும் நடக்கும் போது என்னை தாத்தாவும், தங்கையை சித்தப்பாவும் தூக்கி தோளில் வைத்து பாதுகாப்பாய் அணைத்து சென்றதும், அம்மா என் மூன்றாவது தங்கையை வயிற்றில் சுமந்ததுமாய் என் நினைவுகள் கூடவே வருகின்றது.
அன்றைய தினம் என் அப்பா வேலை நிமித்தம் சென்று விட்ட சூழலில் அப்பாவின் தம்பி சித்தப்பா, தாத்தா என எங்களுடன் இருந்தது, என் இரண்டாவது தங்கை ஹேமா சித்தப்பாவின் செல்லப்பெண் என்பதால் அவர் அவளை தூக்கிக்கொண்டு அலைந்ததும் மறக்க முடியவில்லை. புயலுக்கு மறு நாள் பதறி அடித்து ஓடி வந்த அப்பா புயலாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கொடுக்கின்றார்களாம் என அறிந்து என்னை தூக்கி கொண்டும் சித்தப்பா தங்கையை தூக்கிக்கொண்டும் போய் கோதுமை மா, பேரிச்சம் பழம் வாங்கி வந்ததும் புயலாய் விழுந்த தென்னை மரங்களின் குருத்துக்கள் இளநீ ர்களை சாப்பிட ஓடித்திரிந்ததும் . சின்னக்குழந்தைகளுக்கு முதலிடம் என்பதால் பக்கத்து வீட்டு மாமாக்களும் மாறி மாறி எங்களை தூக்கிட்டு போய் நிவாரணப்பொருட்களை வாங்கியதும் நீங்காத நினைவில்.!
சின்ன வயதில் என்னை தரையில் நடக்கவே விடாத படி அப்பாவுக்கு தெரிந்த நண்பர்கள் முன்று மாமாக்கள் என்னை தூக்கியே வைத்திருந்ததும், அவர்கள் என் பத்தாவது வயது வரை அதை சொல்லி என்னை தம் மடியில் இருத்தி கொள்வதும், அம்மாவின் ஒன்று விட்ட அக்கா பூமணி பெரியம்மா, கிட்டப்பா பெரியப்பாவையே நான் முதன் முதலில் அம்மா, அப்பா என அழைத்ததும், அவர்கள் என்னை வளர்த்ததும் திருகோணமலையில் பெரியப்பாவின் கடையில் நான் செல்லப்பெண்ணாக அவர் மடியில் அமர்ந்து தேன் குழல்களை சாப்பிட்டதும் என் அம்மா என் சின்ன தங்கையை பெரியம்மா வீட்டுக்கு கூட்டி வந்த போது நான் பெரியம்மாவிடம் அம்மா அம்மா சித்தி குட்டிப்பாப்பா வாங்கி வந்திருக்கிறா, அவள் வேண்டாம் என சொல்லி அழுததாக சொல்வதும் எனக்குள் மறக்கவே இல்லை.
இந்த நினைவுகள் அனைத்துமே என் ஐந்து வயதுக்குள் என சொன்னால் நம்புவீர்களா?
பிள்ளைகள் இல்லாததால் பெரியப்பா பெரியம்மா என்னை வளர்த்ததனால் தானோ என்னமோ எனக்கு இன்று வரை என்னை பெற்ற அம்மாவுடன் ஒட்டுதலில்லாமலேயே இருக்கின்றேன்.
எனக்கு என் தங்கை தம்பி ,அவர்களை தூக்கியது, விளையாடியதான நினைவுகள் தம்பி பிறக்க வேண்டும் என்பதற்காக அம்மா இலங்கையில் கதிர்காம கோயிலுக்கு நேர்த்திக்கடன் வைத்து கந்த சஷ்டி விரதம் இருந்ததில்ருந்து தான் ஆரம்பமாகின்றது.
அது வரை அல்லது நான் பள்ளி செல்லும் வயது வரை என் தங்கைகளுடன் இருக்க வில்லை. என்னுடைய ஆறு வயது முதல் பத்து வயது வரை தான் நாங்கள் இணைந்திருந்தோம். மீண்டும் 10 வயதின் பின் நான் என் சகோதரிகளுடன் இல்லை என்பதனால் என் மொத்த வாழ்க்கையில் நாங்கள் வெறும் ஐந்து வருடங்கள் மட்டுமே ஒன்றாய் இருந்தோம். அதன் பின் என் அப்பா நாட்டின் சூழ் நிலை கருதி நாட்டை விட்டு புறப்பட அம்மா என் இரு தங்கைகளின் படிப்புக்காக அவர்களை ஹாஸ்டலில் விட்டு விட்டார். பின் 15 வயது வரை என் தம்பியும் நான்காவதும், கடைசித்தங்கையும் இணைந்திருந்தோம். அதன் பின் என் 16 வயதில் அவர்களை விட்டு புறப்பட்டேன்.
நான் என் குடும்பத்தினை விட்டு அதிக நாட்கள் பிரிந்தே இருந்திருக்கின்றேன் அதனால் அம்மா, அப்பா, சகோதர சகோதரிகளுக்குள் இயல்பாய் வரவேண்டிய ஒட்டுதல் பாசம் எனக்கு மட்டும் கிடைக்காமல் இருப்பதும், மற்ற அனைவரும் தமக்குள் ஒன்று பட்டு இருக்க நான் என்றும் வேற்று ஆளாய் தோன்றுவதும் என் சின்ன வயது சூழலால் தான் என நான் நினைக்கின்றேன். என் உடல் மட்டும் அல்ல உள்ளமும், தொலை தூரமாக இருப்பதாகவே உணர்கின்றேன்.
மட்டக்களப்பு அமிர்தகளி மாமாங்க கோயில் முன்பாக என்னுடைய அம்மாவும் நானும் தங்கைகளுடன் இணைந்து எடுத்த போட்டோ,
நான் குட்டிப்பெண்ணாய் இருக்கும் போது கன்னம் வைத்து புஷ்ஷுனு குண்டாய் தான் இருப்பேனாம், எப்பவும், இப்பவும் குண்டு குண்டு பூசணிக்காய்தான்!
இன்றைக்கு இந்த படத்தில் இருக்கும் நால்வரும் ஆளுக்கொரு திசையில் சிதறடிக்கப்பட்டு விட்டோம். ஒரே வெள்ளைவர்|ண துணி சட்டை போட்டிருக்கும் நானும் தங்கையும் சுவிஸர் லாந்திலும் ஆரஞ்சு சட்டை அவுஸ்ரேலியா சிட்னியிலும், அம்மா கையில் இருக்கும் குட்டிப்பாப்பா ஜேர்மனியிலுமாய் புலம் பெயர்ந்தும் விட்டோம். என்னுடைய பத்தாவது வயதில் அப்பா எங்களை விட்டு சுவிஸ் வர புறப்பட்டதிலிருந்து இன்று வரை நாங்கள் மொத்தக்குடும்பமும் ஒன்று சேரவும் இல்லை. கடைசித்தங்கை, தம்பி திருமணம் என நடந்த போதும் யாரோ ஒரு தங்கை கலந்து கொள்ள முடியாமல் போகும் சூழல் தான் இருக்கிறது.
படிப்பு நிமித்தமோ.குடும்பம் பெரிதானதாலோ மட்டக்களப்பை விட்டு பெரிய கல்லாறுக்கு வாடகை வீடு மாறி என் ஆறாவது வயதில் முதல் முதலாக பாடசாலை பெரியகல்லாறு வினாயகர் வித்தியாலயம் போன நினைவு கூட என் நினைவில் இருக்கின்றது. அக்காலங்கள் தான் என் வாழில் பொற்காலங்கள் என்பேன்.
அந்த வீட்டில் பதினொரு வயது வரை இருந்த போதான நினைவுகளை நான் சின்னவளாய் இருந்தபோது.-4 காணலாம்எ
ன் பாடசாலை அனுபவங்களை. நான் சின்னவளாய் இருந்தபோது.- 2 சென்றும் காணலாம்.
முதலாம் வ்குப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை கற்ற பாடசாலை.
பட உதவி நன்றி பேஸ்புக் தமிழ் பிரியன்
சின்ன வயதில் நாங்கள் விளையாடிய வினா விடை பாடல்கள் பல புதிய சொற்களை கற்றிடவும் நினைவாற்றல் பெருக்கிடவும் உதவியது எனலாம்.
அப்படிப்பட்ட சில பாடல்ளை இந்த தொடரிலும் பார்க்கலாமா?
நிலாநிலா
எங்கே போறாய்?
மண் எடுக்கப் போறேன்.
மண் என்னத்துக்கு?
சட்டிபானை செய்ய.
சட்டிபானை என்னத்துக்கு?
சோறாக்கித் தின்ன.
இந்த மாதிரி பாடல்களை கேட்டு விளையாடிய நினைவு இருக்கின்றதா உறவுகளே!
நிலாநிலா
எங்கெங்கேபோனாய் ?
களிமண்ணுக்குப் போனேன்.
களிமண் என்னத்துக்கு? வீடு கட்ட.
வீடு என்னத்துக்கு? மாடு கட்ட.
மாடு என்னத்துக்கு? சாணி போட.
சாணி என்னத்துக்கு? வீடுமெழுக.
வீடு என்னத்துக்கு? பிள்ளைபெற.
பிள்ளை என்னத்துக்கு?
எண்ணெய்க் குடத்திலே போட்டுப்
பிள்ளை துள்ளித் துள்ளி விளையாட
இதையும் படித்து பாருங்கள். உங்கள் நினைவுகளில் மீட்ட முடிந்தால் அதையும் பகிழுங்கள்.
ஒரு கொத்து ஈச்சங்கொட்டை வறுத்துகொட்டி
ஒன்பதுபேராகக் கூடிகுத்தி
கல்லடிநாச்சிக்குக் கல்யாணமாம்
கருகப்பிலையால் தாலிகட்டி.
என்னதாலி... பொன்தாலி-
என்னபொன்.... காக்காப்பொன்
என்னகாக்கா....அண்டங்காக்கா
என்னஅண்டம...பனையண்டம்
என்னபனை....ஓட்டுப்பனை
என்னஓடு....ஆமைஓடு
என்னஆமை.....பாலாமை
என்னபால்...கள்ளிப்பால்
என்னகள்ளி....சதுரக்கள்ளி
என்னசதுரம.....நாய்ச்சதுரம்
என்னநாய.....வேட்டைநாய்
என்ன வேட்டை....பன்றிவேட்டை
என்னபன்றி....ஊர்பன்றி
என்னஊர்.....கீரையூர்
என்னகீரை....மண்டூர்க்கீரை
என்னமண்டூர்....தில்லைமண்டூர்
தில்லைமண்டூருக்குப் போவோமடி
ஆச்சரியம் தரும் விடயம் என்ன தெரியுமா? இப்பாடல்களில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் கல்லடி நாச்சி, மண்டூர், கிரான் குளம் எல்லாமே இலங்கை கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் அமைந்திருக்கும் ஊர்களில் பெயர்கள்.கல்லடி நாச்சி என்பது கல்லடி எனும் ஊரில் இருக்கும் அம்மன் கோயிலையும், தில்லை மண்டூர் என்பது சின்னக்கதிர் காமமென அழைகப்படும் முருகன் கோயிலை கொண்ட பிரசித்தி பெற்ற இடமாகவும்.
கிரான் குளம் எனும் ஊரும் முந்திரியம் பழக்களுக்கு பெயர் போனது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்பாடல்களை இயற்றியவர்கள் யார் என தெரியாவிட்டாலும் செவி வழியாக தொடர்ந்துகேட்டுப்பாடியே வருவது தான் இங்கே கவனிக்கத்தக்கது
ஒருவர் கேள்வியாய் கேட்க.. அடுத்தவர் சட்டென பதில் சொல்ல சிறுவர்கள் இருக்கும் இடத்தில் ஒரே கூச்சலும் கும்மாளமுமாய் குதுகலம் தரும் விளையாட்டும் இது!
கடலை கடலை
என்ன கடலை...... உருண்டைக் கடலை
என்னவுருன்டை...... மாவுருண்டை
என்ன மா.....என்னம்மா
வாழைப்பழம்:......
என்னவாழை:.....கப்பல்வாழை
என்னகப்பல்: .......பாய்க்கப்பல்
என்னபாய்: பன்பாய்
என்னபன்:.....குளத்துபன்:
என்னகுளம்: கிரான்குளம்
இது என்ன விளையாட்டு என நினைவிருக்கின்றதா உறவுகளே! இவ்விளையாட்டு குறித்த என் நினைவுகள் அடுத்த பதிவில் பார்க்கலாம்!
தொடர்வோம்>>>>>>>>>
05 ஜனவரி 2016
நான் சின்னவளாய் இருந்தபோது, நண்டூருது நரிஊருது-4
கிறிஸ்மஸுக்கு பின்னராய் புது வருடம் வரை ரெம்ப பிசியாகி விட்டேன்! அதனால் யாருக்குமே புது வருட வாழ்த்துகள் சொல்ல முடியவே இல்லை!
எங்க ஊரில் ஜனவரி ஆறாம் திகதி முடிவதுக்கிடையில் அனைவருக்கும் வாழ்த்துகள் பரிசில்கள் சொல்லி விடலாம் என்பதனால் இதோ உங்களுக்கும் என் அன்பு வாழ்த்துகளை சொல்லி விட்டேன். கடந்ததில் நடந்தவை என பல பதிவுகள் படித்தாலும் நானும் அவ்வாறு ஒரு பதிவு எழுத வேண்டும் என தோன்றும் போது உங்கள் ஜோதியில் ஐக்கியமாகி விடுவேனாம்!
இந்த நிமிடம் பதிவு ஒன்று போடலாம் என மனதில் உணர்வுகள் தூண்டினாலும் காரமான, உணர்வுகளை எழுச்சிக்குரியதாக்கும் பதிவு போடாமல் இனிய நினைவுகளை மீட்டுப்பார்க்கும் என் சிறுவயது நினைவுகள் தொடரையே இவ்வருட முதல் பதிவாய் ஆரம்பிக்கலாம் என தோன்றுகின்றது! புதுவருட வாழ்த்தோடு என் பதிவுகளுக்கும் தொடர்ந்து வந்து பின்னூட்டமிட்டு என்னை உற்சாகப்படுத்தி ஊக்கம் தரும் அனைத்து அன்புள்ளங்களும் இவ்வருடமும் தொடர்ந்தும் அதே உற்சாகத்தினை தருவீர்கள் எனும் நம்பிக்கையோடு தொடர்கின்றேன்!
எங்கள் வீட்டில் ஐந்து பெண்கள், ஒரு ஆண், அனைவருக்கும் மூத்தவளாய் நான் என்பதால் தங்கை மாருக்கும் தம்பிக்கும் அனைத்து வழியிலும் வழிகாட்டி நான் என சொல்லியே சின்ன வயதிலிருந்து வளர்த்தார்கள். அதனால் அதிகமாய் வெளியில் போகவெல்லாம் விடாமல் பாடசாலை, டீயூசன் வீடு எனத்தான் என் பொழுதுகள் போகும். கோயில் செல்லும் போது தங்கையோ தம்பியோ கூட துணையாய் வந்ததாய் நினைவு.
வீட்டு வேலைகளில் அம்மாவுக்கு உதவியாய் இருந்தாலும் சின்ன வயதில் மிகவும் பொறுப்புடன் இருந்ததாலும் தானாய் ஏறியதை விட நானாய் ஏற்ற சுமைகள் அதிகமே...!
அதிருக்க....... சின்ன வயதில் எங்கள் வீட்டு சமையலறைக்கும் கிணற்றடிக்கும் இடையில் நீண்டதாய் முற்றம்! அது தான் எங்கள் மாலை நேரத்து விளையாட்டு திடல்...!பக்கத்து வீட்டு நண்பர்கள், நண்பிகள் என ஓரிரு வயது வித்தியாசத்தில் பத்து பதினைந்து பேர் மதிய உணவுக்கு பின் வெயில் சற்று இறங்கியதும் கூடி விடுவோம்.
அதிலும் நாங்கள் நான்கைந்து தோழியருடன் என் சகோதரிகளையும் இணைத்து எங்கள் வீட்டில் இருந்த லாவுள் மரத்தின் கீழ் கூடுவோம்!
அதே மரத்தில் கயிறு ஊஞ்சல், பலகை ஊஞ்சல் என ஆளுக்கொரு கிளையில் கட்டி ஊஞ்சல் ஆடுவதும். மரத்தின் கீழ் உரலை கவிழ்த்தி போட்டு விட்டு மரத்தின் மேலே ஏறி குரங்குகள் போல் தொங்குவதும் தாவுவதும்,இன்னும் மறகக் இயலாத இனிய அனுபவம் தான்.
அந்த லாவுட் மரத்தின் பழம் இனிக்கும் எனில் பழத்துக்கும் பிஞ்சுக்கும் இடைப்பட்ட பருவம் துவர்ப்பாயும் சுவையாயும் இருக்கும் பால் ஒட்டும். அந்த பருவத்தில் இருக்கும் காயை நல்ல புளி மாங்காயோடு பச்சை மிளகாயும் உப்பும் சேர்த்து உரலில் இட்டு துவையல் போல் இடித்து எடுத்தால் உப்பும் உறைப்புமாய் அது தான் எங்கள் மாலை நேர டிபன்.
கிணற்றினை ஒட்டி... பரவி விரித்து கிளைகளோடு வருடம் முழுதும் காயும் பழமுமாய் அம்மரம் இருந்ததாகவே என் நினைவு. எங்கள் பசிக்குசோறாகியதும் அம்மரத்தின் கனிகளே! நீண்ட நெடிய 20 வருடங்களின் பின் 2010 ம் ஆண்டில் அவ்விடம் சென்று பார்த்த போது மரம் இருந்த இடம் குப்பை மேடாக காட்சி தந்தது மனதுக்கு வேதனையை தரும் ஒன்றாகவே இருக்கின்றது!
அந்த நாட்களில் மாலை நேர விளையாட்டாக நொண்டியடித்தல், கிட்டிபுள்ளு, ஊஞ்சல் ஆடுதல்,,சிலை போல் நிற்றல், கள்ளன் பொலிஸ் விளையாடுவதும்
மழைக்காலங்களில் வெளியில் சேறும் சக்தியுமாய் இருக்கும் என்பதால் வீட்டின் தாள்வாரத்தில் அமர்ந்து தாயம் விளையாடுவதும் மறக்க முடியாத நினைவலைகள்.
அக்கா வீட்ட போனேன்
முத்துச்சிப்பி தந்தாள்
கொண்டோடி வந்தேன்
வழியெல்லாம் பாம்பு
பாம்படிக்கத்தடிக்குப் போனேன்
தடியெல்லாம் ஊத்தை
ஊத்தை கழுவ ஆத்துக்கு போனேன்
ஆறெல்லாம் மீன்
மீ்ன் பிடிக்க வலைக்கு போனேன்
வலையெல்லாம் ஓட்டை
ஓட்டை தைக்க ஊசிக்கு போனேன்
ஊசியெல்லாம் வெள்ளி
வெள்ளியடி வெள்ளி
வானத்தில் வெள்ளி
போயிலைக்காம்பை நுள்ளி
போட்டு வாடி வள்ளி!
விளையாடும் போது வார்த்தை மனனமாக தவறில்லாமல் இம்மாதிரி பாடலை பாடி விட்டால் நாம் கெட்டிக்காரர் தான்.
மருத்துவரிதியாக மனித உடலில்அக்குப்பிரசர் முறையில் அந்தந்த பாகங்களுக்கான ஆற்றல் தரு புள்ளி அங்காங்கே இருந்தாலும் பொதுவாக அனைத்து பகுதிகளுக்குமான ஆற்றல் தரும் புள்ளிகள் உள்ளங்கைகளிலும், கால்பாதங்களின் நடுவிலும் அமைத்திருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன! அப்புள்ளிகளை கண்டு விரல் நுனிகளையும் உள்ளங்கைகளையும் மெதுவாக அழுத்தி விடும் போது முழு உடலுக்குமான ஆற்றல்தரும் உந்து சக்தி கிடைப்பதோடு உடல்,உள,அறிவு ரிதியாக ஆரோக்கியமும் கிடைக்கின்றது.
அவ்வகையில் அக்கால நண்டூரி நரியூரு எனும் பாடலுடன் கூடிய விளையாட்டும் இன்னும் பல பாடல்களும் குழந்தைகளுக்கு உடல், உள், அறிவு ரிதியான வளர்ச்சிக்கு உதவிய ஒன்றென்றால் ஆச்சரியப்படுவீர்கள்!
ஆனாலும் அது தான் நிஜம்!
விளையாட்டை நன்கு கவனித்து பாருங்கள். சின்ன வயதில்’அழும் குழந்தைகளை சிரிக்க வைக்க அவர்கள் கையை நீட்ட சொல்லி விட்டு கைவிரல்கள் ஐந்தினையும் விரல் நுனிகளை மெதுவாக தொட்டு ஒவ்வொன்றாக மடக்கி இது அம்மாவுக்கு, இது அப்பாவுக்கு ஏன உறவின் அழைப்பையோ, அல்லது இது சோறு , இது பருப்பு, இது பொரியல் என உணவுவகைகளில் பெயரையோ சொல்லி விரல் நுனிகளை பிடித்து மடித்து விடுவார்கள். அதன் பின் மீண்டும் விரல்களை நிமிர்த்தி உள்ளங்கையில் நமது முழங்கைகளால் பால் கடைவது போல் ஆடைக்கடை, மோடைக்கடை என சொல்லி கடைந்து விட்டு உடனேயே நடுவிரலிலிருந்து நண்டு ஊருவது போல் நண்டூருது நரிஊருது...நண்டூருது நரிஊருது...நண்டூருது நரிஊருது...அக்குளு கிளு கிளு......விரல்களால் ஊர ஆரம்பித்து அவர்கள் தோள் பட்டை வரை சென்று அக்குளுக்குள் விட்டு கிளுகிளுப்பு ஊட்டி சிரிக்க செய்வார்கள்.அழும் குழந்தை சிரிக்கும் போது நம் மனமும் மகிழும்.
மனித விரல் நுனியோடு உடலிலிருக்கும் அனைத்து நரம்பின் பாகங்களும் தொடர்பு படுவதனால் விரல் நுனியை தொடுவதனால் முழு உடலுக்குமான ஆரோக்கியமும் பேணப்படுகின்றது எனும் போது குழந்தைகளுக்கு சிறு தொடுகை மூலமான இப்பயிற்சி தாய் சேய் அன்புடன் உடல், உள, ஆரோக்கியத்துக்கும் வித்திட்டது என்றால் அதில் தவறில்லை!
இத்தகையை புள்ளிகளை கண்டு தொடுகை மூலம்குணப்
படுத்தலைத்தான் முற்காலத்தில் நம்ம்சித்தர்களின் வர்மக்கலை எனும் குணப்படுத்தல் இருந்தது. அதைத்தான் அக்குப்பிரசர் என சீனர்கள் கொண்டு வந்து இக்காலத்தில் வியாபாராமாக்கி கொண்டிருக்கின்றார்கள்.
சின்ன சின்ன விளையாட்டுக்களில் கூட எத்தனை அறிவியல் சிந்தனையோடு நம் முன் சென்றவர்கள் நமக்காக பல அரிய விளையாட்டுக்களை கற்று தந்தார்கள் என நினைக்கும் போது மலைப்புதான் தோன்றும். அவைகளையெல்லாம் விட்டு நாம் விலகி வந்ததனால் நாம் கண்ட நன்மை என்ன?
அத்துடன் இன்னொரு விளையாட்டாய் கைகளை விரித்து உள்ளங்கையில் கிள்ளி எடுத்த படியே
கிள்ளிக் கிள்ளிப் பிறாண்டி
கீயா மாயாப் பிராண்டி
கொப்பன் தலையில் என்ன பூ....
என கேட்கும் போது சொல்லும் பூவை வைத்து விரல்களை மடக்கி கொண்டு வருவார்கள்.
முருங்கைப்பூ) என சொன்னால்
முருங்கைப்பூவைத் திண்டவளே
முன்னடிக் கஞ்சி குடிச்சவளே
பாதி விளாங்காய் திண்டவளே
பாவட்டங் கையை ம-ட-க்-கு
என ஒவ்வொரு விரலாய் மடக்கி வருவார்கள், முழு விரல்களும் மடங்கி விட்டால் கைகள் இரண்டையும் சேர்த்து குவித்து பாதி விட்டமாய் பிடித்தபடி
பாட்டன் குத்து
பறையன் குத்து
பிள்ளையார் குத்து
பிடித்து பார் குத்து
என சொல்லி குத்துவார்கள். அப்படி குத்தும் போது பிடித்து பார் குத்து என வரும் போது கைகளை குவித்து குத்தும் கையை பிடித்து விட்டால் நாம் எதிராளியின் இரு கையையும் சேர்த்து கும்பிடுவது போல் ஒட்டி பிடித்த படியே கூப்ப வேண்டும் கள்ளப்பூனை நான் எங்க செல்லத்துக்கு சமைத்து வைத்த சோத்தை களவெடுத்து தின்ன வந்தியா? என் செல்லத்தோட சாக்லெட்டை பறிக்க வந்தியா என கேட்டு கேட்டு கூப்பியபடி இருக்கும் கரங்களில் வெளிப்பக்கமாக செல்லமாய் அடிக்க வேண்டும். அடிக்கும் அடிபடாதவாறு கைகளை எடுத்து விட்டால் விளையாட்டு முடிந்து விடும். கைகளில் அடி பட்டு விட்டால் அடி தொடரும்.
விளையாடும் போது மிகவும் சுவாரஷ்யமாக இருப்பதால் குழந்தைகள் வாய்விட்டு சிரித்து நம்மையும் சிரிக்க வைப்பார்கள்.
இந்த மாதிரி விளையாட்டுக்கள் விரல்களுடனும் கைகளில் முழுப்பாகத்துடனும் தொடர்பு படுத்தி தொடுகை உணர்வோடு அக்குப்பிரசர் ஆற்றல் தரும் புள்ளிகளையும் தொட்டு செல்வதால் உடல், உள வளர்ச்சி ஆரோக்கியம் பேணப்படுகின்றது இம்மாதிரி விளையாட்டுக்களை நமக்கென விட்டு சென்ற முன்னோர்களை நாம் அதன் அருமைபெருமை அறியாமல் அதெல்லாம் பழங்காலம் என கிண்டல் செய்யும் நிலையில் இருக்கின்றோம்.
அன்று உறவின் பெயர்கள், உணவின் பெயர்கள், பூக்கள், பழங்கள், காய்களின் பெயர்கள்,விலங்குகளின் பெயர்கள் எல்லாம் மனனம் எனும் பெயரில்திணீக்காமல் குட்டிக்குட்டி பாடல்கள் மூலம் இயல்பாகவே சொல்லிக்கொடுக்கப்பட்டது! இன்று அவையனைத்தையும் மனப்பாடம் எனும் பெயரில் திணிக்கின்றோம்.
சிந்திப்போம்!!!!!!!!!
நான் சின்னவளாய் இருந்தபோது.- 3 பதிவின் தொடர்ச்சியாக
எமது சின்னசிறார்கள் எண்களை இலகுவாக கற்கபாவலர் துரை மூர்த்தி அவர்களின் பாட ல் ஒன்றையும் இங்கே பகிர்கின்றேன்! இம்மாதிரி பாடல்களை சொல்லி கொடுக்கும் போது நம் வீட்டு குழந்தைகள் எண்களோடு பல புதிய விடயங்களையும் கற்பதை காண முடியும்
ஒன்று - எண்ணின் தொடக்கம் ஒன்று
இரண்டு – விழிகள் நமக்கு இரண்டு
மூன்று – முத்துத் தமிழ் மூன்று
நான்கு – விலங்கின் கால் நான்கு
ஐந்து – உலோக வகை ஐந்து
ஆறு - சுவையின் வகை ஆறு
ஏழு – இசையின் வகை ஏழு
எட்டு – சிலந்திக்குக் கால் எட்டு
ஒன்பது - மணியின் வகை ஒன்பது
பத்து – தமிழின் பாட்டு பத்து!
எனது பதிவுகளில் நினைவில் இருப்பதை தட்டச்சிட்டு பகிர்வதனால் பாடல் வரிகளில் தவறுகள் இருக்கும் வாய்ப்புகள் உண்டு. பாடல் வரிகளில் மாறுதல்கள் இருந்தால் தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்.
தொடர்வேன்!
எங்க ஊரில் ஜனவரி ஆறாம் திகதி முடிவதுக்கிடையில் அனைவருக்கும் வாழ்த்துகள் பரிசில்கள் சொல்லி விடலாம் என்பதனால் இதோ உங்களுக்கும் என் அன்பு வாழ்த்துகளை சொல்லி விட்டேன். கடந்ததில் நடந்தவை என பல பதிவுகள் படித்தாலும் நானும் அவ்வாறு ஒரு பதிவு எழுத வேண்டும் என தோன்றும் போது உங்கள் ஜோதியில் ஐக்கியமாகி விடுவேனாம்!
இந்த நிமிடம் பதிவு ஒன்று போடலாம் என மனதில் உணர்வுகள் தூண்டினாலும் காரமான, உணர்வுகளை எழுச்சிக்குரியதாக்கும் பதிவு போடாமல் இனிய நினைவுகளை மீட்டுப்பார்க்கும் என் சிறுவயது நினைவுகள் தொடரையே இவ்வருட முதல் பதிவாய் ஆரம்பிக்கலாம் என தோன்றுகின்றது! புதுவருட வாழ்த்தோடு என் பதிவுகளுக்கும் தொடர்ந்து வந்து பின்னூட்டமிட்டு என்னை உற்சாகப்படுத்தி ஊக்கம் தரும் அனைத்து அன்புள்ளங்களும் இவ்வருடமும் தொடர்ந்தும் அதே உற்சாகத்தினை தருவீர்கள் எனும் நம்பிக்கையோடு தொடர்கின்றேன்!
எங்கள் வீட்டில் ஐந்து பெண்கள், ஒரு ஆண், அனைவருக்கும் மூத்தவளாய் நான் என்பதால் தங்கை மாருக்கும் தம்பிக்கும் அனைத்து வழியிலும் வழிகாட்டி நான் என சொல்லியே சின்ன வயதிலிருந்து வளர்த்தார்கள். அதனால் அதிகமாய் வெளியில் போகவெல்லாம் விடாமல் பாடசாலை, டீயூசன் வீடு எனத்தான் என் பொழுதுகள் போகும். கோயில் செல்லும் போது தங்கையோ தம்பியோ கூட துணையாய் வந்ததாய் நினைவு.
வீட்டு வேலைகளில் அம்மாவுக்கு உதவியாய் இருந்தாலும் சின்ன வயதில் மிகவும் பொறுப்புடன் இருந்ததாலும் தானாய் ஏறியதை விட நானாய் ஏற்ற சுமைகள் அதிகமே...!
அதிருக்க....... சின்ன வயதில் எங்கள் வீட்டு சமையலறைக்கும் கிணற்றடிக்கும் இடையில் நீண்டதாய் முற்றம்! அது தான் எங்கள் மாலை நேரத்து விளையாட்டு திடல்...!பக்கத்து வீட்டு நண்பர்கள், நண்பிகள் என ஓரிரு வயது வித்தியாசத்தில் பத்து பதினைந்து பேர் மதிய உணவுக்கு பின் வெயில் சற்று இறங்கியதும் கூடி விடுவோம்.
படம் நன்றி இணையம்
அதே மரத்தில் கயிறு ஊஞ்சல், பலகை ஊஞ்சல் என ஆளுக்கொரு கிளையில் கட்டி ஊஞ்சல் ஆடுவதும். மரத்தின் கீழ் உரலை கவிழ்த்தி போட்டு விட்டு மரத்தின் மேலே ஏறி குரங்குகள் போல் தொங்குவதும் தாவுவதும்,இன்னும் மறகக் இயலாத இனிய அனுபவம் தான்.
படம் நன்றி இணையம்
அந்த லாவுட் மரத்தின் பழம் இனிக்கும் எனில் பழத்துக்கும் பிஞ்சுக்கும் இடைப்பட்ட பருவம் துவர்ப்பாயும் சுவையாயும் இருக்கும் பால் ஒட்டும். அந்த பருவத்தில் இருக்கும் காயை நல்ல புளி மாங்காயோடு பச்சை மிளகாயும் உப்பும் சேர்த்து உரலில் இட்டு துவையல் போல் இடித்து எடுத்தால் உப்பும் உறைப்புமாய் அது தான் எங்கள் மாலை நேர டிபன்.
லாவுள் பழம் என நாங்கள் சொல்லும் பழம் இது தான்!
அந்த நாட்களில் மாலை நேர விளையாட்டாக நொண்டியடித்தல், கிட்டிபுள்ளு, ஊஞ்சல் ஆடுதல்,,சிலை போல் நிற்றல், கள்ளன் பொலிஸ் விளையாடுவதும்
மழைக்காலங்களில் வெளியில் சேறும் சக்தியுமாய் இருக்கும் என்பதால் வீட்டின் தாள்வாரத்தில் அமர்ந்து தாயம் விளையாடுவதும் மறக்க முடியாத நினைவலைகள்.
அக்கா வீட்ட போனேன்
முத்துச்சிப்பி தந்தாள்
கொண்டோடி வந்தேன்
வழியெல்லாம் பாம்பு
பாம்படிக்கத்தடிக்குப் போனேன்
தடியெல்லாம் ஊத்தை
ஊத்தை கழுவ ஆத்துக்கு போனேன்
ஆறெல்லாம் மீன்
மீ்ன் பிடிக்க வலைக்கு போனேன்
வலையெல்லாம் ஓட்டை
ஓட்டை தைக்க ஊசிக்கு போனேன்
ஊசியெல்லாம் வெள்ளி
வெள்ளியடி வெள்ளி
வானத்தில் வெள்ளி
போயிலைக்காம்பை நுள்ளி
போட்டு வாடி வள்ளி!
விளையாடும் போது வார்த்தை மனனமாக தவறில்லாமல் இம்மாதிரி பாடலை பாடி விட்டால் நாம் கெட்டிக்காரர் தான்.
மருத்துவரிதியாக மனித உடலில்அக்குப்பிரசர் முறையில் அந்தந்த பாகங்களுக்கான ஆற்றல் தரு புள்ளி அங்காங்கே இருந்தாலும் பொதுவாக அனைத்து பகுதிகளுக்குமான ஆற்றல் தரும் புள்ளிகள் உள்ளங்கைகளிலும், கால்பாதங்களின் நடுவிலும் அமைத்திருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன! அப்புள்ளிகளை கண்டு விரல் நுனிகளையும் உள்ளங்கைகளையும் மெதுவாக அழுத்தி விடும் போது முழு உடலுக்குமான ஆற்றல்தரும் உந்து சக்தி கிடைப்பதோடு உடல்,உள,அறிவு ரிதியாக ஆரோக்கியமும் கிடைக்கின்றது.
அவ்வகையில் அக்கால நண்டூரி நரியூரு எனும் பாடலுடன் கூடிய விளையாட்டும் இன்னும் பல பாடல்களும் குழந்தைகளுக்கு உடல், உள், அறிவு ரிதியான வளர்ச்சிக்கு உதவிய ஒன்றென்றால் ஆச்சரியப்படுவீர்கள்!
ஆனாலும் அது தான் நிஜம்!
விளையாட்டை நன்கு கவனித்து பாருங்கள். சின்ன வயதில்’அழும் குழந்தைகளை சிரிக்க வைக்க அவர்கள் கையை நீட்ட சொல்லி விட்டு கைவிரல்கள் ஐந்தினையும் விரல் நுனிகளை மெதுவாக தொட்டு ஒவ்வொன்றாக மடக்கி இது அம்மாவுக்கு, இது அப்பாவுக்கு ஏன உறவின் அழைப்பையோ, அல்லது இது சோறு , இது பருப்பு, இது பொரியல் என உணவுவகைகளில் பெயரையோ சொல்லி விரல் நுனிகளை பிடித்து மடித்து விடுவார்கள். அதன் பின் மீண்டும் விரல்களை நிமிர்த்தி உள்ளங்கையில் நமது முழங்கைகளால் பால் கடைவது போல் ஆடைக்கடை, மோடைக்கடை என சொல்லி கடைந்து விட்டு உடனேயே நடுவிரலிலிருந்து நண்டு ஊருவது போல் நண்டூருது நரிஊருது...நண்டூருது நரிஊருது...நண்டூருது நரிஊருது...அக்குளு கிளு கிளு......விரல்களால் ஊர ஆரம்பித்து அவர்கள் தோள் பட்டை வரை சென்று அக்குளுக்குள் விட்டு கிளுகிளுப்பு ஊட்டி சிரிக்க செய்வார்கள்.அழும் குழந்தை சிரிக்கும் போது நம் மனமும் மகிழும்.
மனித விரல் நுனியோடு உடலிலிருக்கும் அனைத்து நரம்பின் பாகங்களும் தொடர்பு படுவதனால் விரல் நுனியை தொடுவதனால் முழு உடலுக்குமான ஆரோக்கியமும் பேணப்படுகின்றது எனும் போது குழந்தைகளுக்கு சிறு தொடுகை மூலமான இப்பயிற்சி தாய் சேய் அன்புடன் உடல், உள, ஆரோக்கியத்துக்கும் வித்திட்டது என்றால் அதில் தவறில்லை!
இத்தகையை புள்ளிகளை கண்டு தொடுகை மூலம்குணப்
படுத்தலைத்தான் முற்காலத்தில் நம்ம்சித்தர்களின் வர்மக்கலை எனும் குணப்படுத்தல் இருந்தது. அதைத்தான் அக்குப்பிரசர் என சீனர்கள் கொண்டு வந்து இக்காலத்தில் வியாபாராமாக்கி கொண்டிருக்கின்றார்கள்.
சின்ன சின்ன விளையாட்டுக்களில் கூட எத்தனை அறிவியல் சிந்தனையோடு நம் முன் சென்றவர்கள் நமக்காக பல அரிய விளையாட்டுக்களை கற்று தந்தார்கள் என நினைக்கும் போது மலைப்புதான் தோன்றும். அவைகளையெல்லாம் விட்டு நாம் விலகி வந்ததனால் நாம் கண்ட நன்மை என்ன?
அத்துடன் இன்னொரு விளையாட்டாய் கைகளை விரித்து உள்ளங்கையில் கிள்ளி எடுத்த படியே
கிள்ளிக் கிள்ளிப் பிறாண்டி
கீயா மாயாப் பிராண்டி
கொப்பன் தலையில் என்ன பூ....
என கேட்கும் போது சொல்லும் பூவை வைத்து விரல்களை மடக்கி கொண்டு வருவார்கள்.
முருங்கைப்பூ) என சொன்னால்
முருங்கைப்பூவைத் திண்டவளே
முன்னடிக் கஞ்சி குடிச்சவளே
பாதி விளாங்காய் திண்டவளே
பாவட்டங் கையை ம-ட-க்-கு
என ஒவ்வொரு விரலாய் மடக்கி வருவார்கள், முழு விரல்களும் மடங்கி விட்டால் கைகள் இரண்டையும் சேர்த்து குவித்து பாதி விட்டமாய் பிடித்தபடி
பாட்டன் குத்து
பறையன் குத்து
பிள்ளையார் குத்து
பிடித்து பார் குத்து
என சொல்லி குத்துவார்கள். அப்படி குத்தும் போது பிடித்து பார் குத்து என வரும் போது கைகளை குவித்து குத்தும் கையை பிடித்து விட்டால் நாம் எதிராளியின் இரு கையையும் சேர்த்து கும்பிடுவது போல் ஒட்டி பிடித்த படியே கூப்ப வேண்டும் கள்ளப்பூனை நான் எங்க செல்லத்துக்கு சமைத்து வைத்த சோத்தை களவெடுத்து தின்ன வந்தியா? என் செல்லத்தோட சாக்லெட்டை பறிக்க வந்தியா என கேட்டு கேட்டு கூப்பியபடி இருக்கும் கரங்களில் வெளிப்பக்கமாக செல்லமாய் அடிக்க வேண்டும். அடிக்கும் அடிபடாதவாறு கைகளை எடுத்து விட்டால் விளையாட்டு முடிந்து விடும். கைகளில் அடி பட்டு விட்டால் அடி தொடரும்.
விளையாடும் போது மிகவும் சுவாரஷ்யமாக இருப்பதால் குழந்தைகள் வாய்விட்டு சிரித்து நம்மையும் சிரிக்க வைப்பார்கள்.
இந்த மாதிரி விளையாட்டுக்கள் விரல்களுடனும் கைகளில் முழுப்பாகத்துடனும் தொடர்பு படுத்தி தொடுகை உணர்வோடு அக்குப்பிரசர் ஆற்றல் தரும் புள்ளிகளையும் தொட்டு செல்வதால் உடல், உள வளர்ச்சி ஆரோக்கியம் பேணப்படுகின்றது இம்மாதிரி விளையாட்டுக்களை நமக்கென விட்டு சென்ற முன்னோர்களை நாம் அதன் அருமைபெருமை அறியாமல் அதெல்லாம் பழங்காலம் என கிண்டல் செய்யும் நிலையில் இருக்கின்றோம்.
அன்று உறவின் பெயர்கள், உணவின் பெயர்கள், பூக்கள், பழங்கள், காய்களின் பெயர்கள்,விலங்குகளின் பெயர்கள் எல்லாம் மனனம் எனும் பெயரில்திணீக்காமல் குட்டிக்குட்டி பாடல்கள் மூலம் இயல்பாகவே சொல்லிக்கொடுக்கப்பட்டது! இன்று அவையனைத்தையும் மனப்பாடம் எனும் பெயரில் திணிக்கின்றோம்.
சிந்திப்போம்!!!!!!!!!
நான் சின்னவளாய் இருந்தபோது.- 3 பதிவின் தொடர்ச்சியாக
எமது சின்னசிறார்கள் எண்களை இலகுவாக கற்கபாவலர் துரை மூர்த்தி அவர்களின் பாட ல் ஒன்றையும் இங்கே பகிர்கின்றேன்! இம்மாதிரி பாடல்களை சொல்லி கொடுக்கும் போது நம் வீட்டு குழந்தைகள் எண்களோடு பல புதிய விடயங்களையும் கற்பதை காண முடியும்
ஒன்று - எண்ணின் தொடக்கம் ஒன்று
இரண்டு – விழிகள் நமக்கு இரண்டு
மூன்று – முத்துத் தமிழ் மூன்று
நான்கு – விலங்கின் கால் நான்கு
ஐந்து – உலோக வகை ஐந்து
ஆறு - சுவையின் வகை ஆறு
ஏழு – இசையின் வகை ஏழு
எட்டு – சிலந்திக்குக் கால் எட்டு
ஒன்பது - மணியின் வகை ஒன்பது
பத்து – தமிழின் பாட்டு பத்து!
எனது பதிவுகளில் நினைவில் இருப்பதை தட்டச்சிட்டு பகிர்வதனால் பாடல் வரிகளில் தவறுகள் இருக்கும் வாய்ப்புகள் உண்டு. பாடல் வரிகளில் மாறுதல்கள் இருந்தால் தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்.
தொடர்வேன்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)