தடம்மாறி,தடுமாறும் குடும்பங்களும்,
கேள்விக்குறியாகும், குழந்தைகளின் எதிர்காலமும் ........!?
தொன்மை மிக்க தமிழ் மொழியும்,தமிழ்க்கலாச்சாரமும், தமிழர் வாழ்வியலும் உலகத்தாரால் ஊன்றிக்கவனிப்பட்ட
ஒருவனுக்கு ஒருத்தி எனும் சமூகக்கட்டுப்பாடும்
எமது மககளிடையே உடைய ஆரம்பித்திருக்கின்றன.
சமூகத்தை கட்டியெழுப்புவதில் பெரும்பங்காற்றும் குடும்பம் எனும் கட்டுமானம் சிதறுவதனால் எதிர்கால சமூகமாக உருவாகப்போகும், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றார்கள்.
பெற்றோரின் அன்பு முழுமையாக கிடைக்காத குழந்தைகள் நாளடைவில் சமூகத்தின் தீங்கை விதைப்போராக உருவாக்கப்படுகின்றார்கள்.
உறவுகளும், சமூகமும் தங்களை ஒதுக்குவதாக நினைத்து தம் வாழ்க்கையை அழித்து சமூகத்தை பழிவாங்கி தம்மை தாமே ஆற்றுப்படுத்தி கொள்கின்றார்கள்.
வன்மம் கொண்ட மனங்கள் அதிகரிப்பதனால் சிறுவர் துன்புறுத்தல்களும், பாலியல் ரிதியான தாக்குதல்களையும், உயிரிழப்புக்களையும், பாதுகாப்பற்ற வாழ்க்கையையும் எமது எதிர்கால சிறுவர்கள் எதிர் நோக்குகின்றார்கள்.
சுற்றுப்புற,புறக்காரணிகளை கடந்தும் பிள்ளைகளின் எதிர்காலத்தை பெற்றோர்கள் தீர்மானிக்கின்றார்கள்.
இணைகளில் பிரிதலால் குழந்தைகள் எதிர்காலமானது மிகவும் கவலைக்குரியதாக மாறிக்கொண்டே இருக்கின்றது.
🔘 ஈகோ
🔘பக்குவமற்ற வயதும், துணை தேடலும்
🔘பாரபட்சம் காட்டி,சங்கடம் தரும் உறவுகள்
🔘புரிந்து கொள்ளாத துணை
🔘ஆறுதலாய் சாய்ந்து கொள்ள மனம் விட்டு பேச முடியா இயந்திரத்தனமான வாழ்க்கை
🔘சலனப்படுத்தும் நவீனத்துவம்
🔘உறவுகளுக்கிடையிலான சந்தேகம்,
அவ நம்பிக்கை
🔘சகிப்புத்தன்மை வற்றிப்போதல்
🔘கட்டுப்பாடில்லாத வாழ்க்கைமுறைத் தேடல்
🔘பொருளாதார தேவைக்கான நிர்ப்பந்தம்
🔘 வாழ்வியலை போதிக்காத கல்வி
🔘அதீத எதிர்பார்ப்பு, ஆடம்பர மோகம்
என பல காரணங்களினால் தமக்கான துணையை விட்டு விலகி இன்னொரு துணையை தேடும் ஆண்களும்,பெண்களும் அதிகரித்து வருகின்றார்கள்.
நமது சமூகத்தில் மேலை நாடுகள் போல் இன்னொருவர் குழந்தையை தன் குழந்தையாக ஏற்று வளர்க்கும் மனப்பக்குவம் இல்லாததனால் பிரிந்து விட முடிவெடுக்கும் தம்பதிகளின் குழந்தைகளின் எதிர்காலமானது கேள்விக்குறியாகின்றது.
தாயா? தகப்பனா?எனும் விவாதத்தில் குழந்தைகள் வாழ்க்கை இருபக்கமும் அடிபடும் மத்தளமாகின்றன.
அன்பும்,அக்கறையும், பாதுகாப்பும் இல்லாத அலைபாயும் அனாதைக்குழந்தைகளாக எல்லாரும், எல்லாமும் இருந்தும் தனித்தவர்களாக வளர்கின்றார்கள்.
சமீப காலங்களில் குழந்தைகள் மீதான துஷ்பிரயோகம் அதிகரித்திருப்பது உடனடியாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு முக்கிய விடயமாக இருக்கின்றது.
⚫️இப்பதிவில் முதல் பின்னூட்டத்தில் காணொளி ஒன்றை இணைத்துள்ளேன்.
அம்மாவின் அம்மா அம்மம்மாவினால் வளர்க்கப்பட்ட சிறுமியின் அழுகுரலையே நீங்கள் காணொளியில் காண்கின்றீர்கள்.
இலங்கை, கிழக்கில் மட்டக்களப்பு,கிரான்குளம் 9 ஆம் கட்டை வீதியில் வசிக்கும் தமிழ்ப்பெண் தனது பெண் குழந்தையுடன் முதல் கணவரைப் பிரிந்து, இரண்டாவது திருமணம் செய்த பின் மகளை பராமரிக்கும் பொறுப்பை தன் தாயிடம் விட்டு சென்றுள்ளார்.
மகளின் மகளை தேவதை போல் பாதுகாக்க வேண்டிய அம்மம்மா எனும் தாய் அக்குழந்தையை சரியாக பராமரிக்காமல், உணவு கொடுக்காமல் வீட்டு வேலைகள் செய்யும் பணியாளராக நடத்தி இருக்கின்றாராம்,
பள்ளி செல்லும் வயதில் பள்ளிக்கும் அனுப்பாமல் பிள்ளை மீது ஆத்திரப்பட்டு திட்டுவதாகவும், தன்னால் தாங்க முடியவில்லை எனவும், அயல்வீட்டாரிடம் சொல்லி அழுத போது,அதற்கும் அச்சிறுமியை அடுத்து துன்புறுத்தி, வீட்டின் உள்ளறைக்குள் பூட்டி வைத்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அயலவர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்ததனால் அச்சிறுமியின் மீதான வன்மம் அதிகமாகி அடிப்பதோடு, பிள்ளையின் தாயாரும் இணைந்து சிறுமியை துன்புறுத்துவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சில வருடங்கள் முன் காத்தான் குடியில் இளவயது சிறுமி தகப்பனின் இரண்டாம் மனைவியால் துன்புறுத்தப்பட்டபோது முஸ்லிம் அரசியல் வாதிகள், ஆர்வலர்கள் திரண்டு அப்பிள்ளையை பெற்றோரிடமிருந்து பிரித்து சட்ட ரிதியான பாதுகாப்பை உறுதிப்படுத்தியதை நம்மில் சிலர் அறிந்திருக்கலாம்.
எமது சமூகத்துக்கான மீட்பு என்பது நில வளங்கள், கல்வியை மீட்பதுடன் மட்டுமல்ல, எமது எதிர்கால சந்ததியை சரியாக கட்டமைப்பதிலும் இருக்கின்றது.
எமது சிறுவர்களுக்கான உடல்,உளவியல் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதோடு, குறிப்பிட்ட வயது வரைக்கேனும் குழந்தைகளுக்கு தாயின் அன்பும் அரவணைப்பும் கிடைக்க வேண்டும் எனும் உணர்தலையும் எம் பெண்களுக்குள் கொடுக்க வேண்டும்.
சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதும்,தண்டிப்பதும் அக்குழந்தைக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் எமது உடனடிகடமையாக இருந்தாலும், இம்மாதிரி செயல்பாடுகள் தொடர்வதன் பின்னனிக்காரணங்களையும் ஆராய்ந்து தீர்வை தேட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.
நாம் நமது திசை எதுவென தட்டுத்தடுமாறி, அங்குமிங்கும், எங்கும் குறைகள் கண்டு சுட்டிக்காட்டி கொண்டே இருக்காமல்,எமக்குள் இந்த குறைபாடுகள் உருவாக்கப்படும் காரணிகளை கண்டறிந்து அதற்கு தீர்வு காண்பதே சிறப்பாக இருக்கும்,
என்ன செய்ய வேண்டும், எப்படி செயல்பட வேண்டும் எனும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை இங்கே கொடுங்கள். பேசிக்கொண்டிருக்காமல் செயல்pபடுவோம்.
முழுப்படிகளை கண்டு கலங்காமல் முதல் படியில் காலெடுத்து வைப்போம் வாருங்கள் உறவுகளே..😍