என் சுந்தரம் மாமாவை தேடுகின்றேன்
எங்கே இருக்கின்றீர்கள் மாமா?
********************************************************************************************************
மருமக்களே என எங்களை அதட்டி, கண்டித்து அக்கறையும் அன்புமாக எங்கள் மேல் பாசம் காட்டிய அன்பான மாமா, எங்களுக்காக சண்டை போடும் பாசமான மாமா எங்கள் சுந்தரம் மாமா
நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள்?
யாரேனும் எங்க அம்மாவை திட்டினால் சாரத்தை மடித்து கட்டிக்கொண்டு சண்டைக்கு போவதனால் சண்டியன் மாமா என சொல்வோமே மாமா.
எங்களை யாருமே ஒரு சொல்சொல்ல விடாமல் பொத்திப்பொத்தி பாதுகாப்பீர்களே மாமா.
என் பூப்புனித நீராட்டு விழாவில் அம்மாவுடன் பிறந்த 3 அண்ணாக்களில், நீங்கள் மட்டும் தான் மாமா நான் நன்றாக வாழ வேண்டும் என ஆசிர்வாதீத்தீர்கள். அந்த நாட்களில் அப்பாவும் எங்களுடன் இல்லாத நிலையில் அப்பா ஸ்தானத்தில் என்னை ஆசிர்வதித்தீர்கள் மாமா.உங்கள் ஆசீர்வாதம் நான் நன்றாக இருக்கின்றேன் மாமா. ஆனால் நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள் என தெரியவில்லை மாமா.
தப்புச்செய்தால் கண்டிக்கும் நீங்கள் எங்களுக்கு சமதையாக என்னை கிண்டல் செய்வது போல் என்னை ஓமாக்கும் என சொல்லி கேலி செய்வீர்களே மாமா.எங்கே போனீர்கள் மாமா?
அம்மா வழி உறவில் உங்களை போல் எவரும் எங்கள் மேல் பாசமும், அக்கறையும் காட்டியதே இல்லை மாமா. நாங்கள் கஷ்டப்பட்ட போது நீங்களும் கஷ்டத்தில் இருந்தாலும் மாமிக்கு தெரியாமல் அன்பையும் அக்கறையையும் கொட்டி பத்திரமாக பாதுகாத்தீர்கள்.
அம்மாவின் மேல் பிரியமாக அம்மாவை பாதுகாக்கும் அண்ணாவாக நீங்கள் மட்டும் தான் அக்காலத்தில் இருந்தீர்கள். மாமா என்றால் எனக்கு உங்கள் அதட்டலும், அன்பும் மட்டும் தான் நினைவில் இருக்கின்றது மாமா.
முதல் நாள் வந்து வீட்டுமுற்றத்தில் அமர்ந்து நான் சின்னவளாயிருந்தாலும் தேங்காப்பூவும் கோதுமையும் சேர்த்து வாழையிலையில் தட்டி விறகடுப்பில் சுடும் ரொட்டி வாங்கி சாப்பிட்டு விட்டு அம்மம்மாவிடம் நாளைக்கு திருகோணமலை டிரிப் இருக்கம்மா என சொல்லி போனீர்கள். திரும்ப வருவேன் என சொல்லிப்போனீர்கள்.
நீங்கள் எங்கே தான் போனீர்கள்.
வருவீர்கள் என நம்பிக்கொண்டே இருக்கின்றோம்.
எங்கே போனீர்கள் மாமா?
என் மாமாவைத்தேடி நானும்.....!
********************************************************************************************************
எங்கள் அமமாவின் குடும்பம் விவசாயக்குடும்பம், இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் இருக்கும் புகழ் பெற்ற திருக்கோணேஸ்வர் கோயில் புகழ் தம்பலகாமத்தில் நெல் வேளாண்மை தான் குடும்பத்தொழில்,
அம்மாவின் மூன்றாவது அண்ணா சுந்தரம் எனப்படும் சுந்தரலிங்கம்
நாட்டுப்பிரச்சனையாலும் விவசாயம் செய்ய முடியாத படி பாதுகாப்பற்ற சூழலாலும் இடம் பெயர்ந்து மட்டக்களப்புக்கு வந்து மட்டக்களப்பு பேருந்து போக்குவரத்து சபையின் சாரதியாக சேர்ந்து... வயலில் உழுவதற்கு ட்ராக்டர் ஓடிய அனுபவம் .. சாரதி அனுமதிப்பத்திரம் பெற உதவியது.... 1989 ஆவது ஆண்டின் இறுதியில்... மட்டக்களப்பு திருகோணமலை பஸ் சாரதியாக பணியில் இருக்கும் போதே... செக்கிங் இராணுவமுகாமின் முன் பஸ் நிறுத்தபப்ட்டு விடுதலைப்புலிகளின் கொடி மாமாவில் கையில் வலுக்கட்டாயமாக கொடுக்கப்பட்டு மாமாவை அங்கிருந்த இராணுவமுகாம் உள்ளே கொண்டு சென்றார்களாம்.
பஸ்ஸில் பயணித்து மாமாவை அறிந்தோர் தந்த தகவல் கேட்டு...... அம்மா, அம்மம்மா, மாமி தேடி ஓடி..... அதன் பின் மாமா திரும்பவே இல்லை.
உயிரோடு இருக்கின்றார் என இன்றுவரை நம்பிக்கொண்டிருக்கின்றோம்.
அதற்கு சில வருடம் முன் மூத்த மாமாவின் மகன் மகேந்திரன் அத்தான். காணாமல் போனான். எங்கே போனான்,,யார் அழைத்துப்போனார் எனும் விபரம் எதுவும் இல்லை. ஆனால் ...... ?
நாங்கள் எங்கள் குடும்பத்தில் மாமாவை மட்டுமல்ல மாமாவின் மக்களையும் இழந்தோம்.
அவர்கள் உயிரோடு இல்லை என இதுவரை நம்ப முடியவில்லை. எங்கோ இருக்கின்றார்கள் எனும் நம்பிக்கை தான் எம் உயிர்ப்பை நகர்த்துகின்றது.
காணாமல்போனோரை தேடி..... நானும்.... !
நீண்ட பதிவு தான் .. கொஞ்சம் படியுங்களேன்.
********************************************************************************************************
ஈழத்தமிழருக்கான விடுதலைப்போரானது திசை மாற்றம் பெற்று ஈழத்தமிழரெல்லாம் தீவிரவாதிகள் என முத்திரை குத்தி எம்மை நேசித்த மக்களால் தீண்டத்தகாதவர்கள் போல் வெறுக்கபப்ட்டு, எம்மை அழித்தொழித்த போது கண்டு காணாமல் எமது கதறல்களில் நேரம் கண்ணிருந்தும் குருடனாய், காதிருந்தும் செவிடராக்கி எமக்காக துடித்த இதயங்களை தூரமாக நிறுத்தியதில் இந்திய மத்திய அரசாங்கத்துக்கு பெரும் பங்குண்டு.
தமிழர் ஒன்றுபட்டால் தமது ஏகாதிபத்திய அடிமைத்தளைகள் அவிழ்ந்து விடும் என ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகளாய் உறவாடியோரை எதிரிகளும் துரோகிகள் ஆக்கி..........
எய்தவர்கள் பணமும்,பவிசும், பதவியுமாக தேசத்தின் வீரர்களாக நெஞ்சை நிமிர்த்தி நிற்க... உள்ளிருக்கும் துரோகங்கள் அறியாமல் துணை போனோர்.......எம் விரல் கொண்டே எம் கண்ணை குத்தும் முயற்சிக்கு பலகடாவாக்கப்பட்டோர் இன்றுவரை துரோகிகளாய்.. குற்றவாளிகளாய். தம் வாழ்க்கையை பணயம் வைத்து .. விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.
அன்று போல் இன்றும் நம் விரல் கொண்டே நம் கண்ணைகுருடாக்கி... பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு நாம் அறியாமல் துணை போகவும் வைக்கின்றார்கள்.
உலக வல்லரசுகள் இணைத்து உடமைக்கும் உரிமைக்குமாக ஈழமக்களின் போராட்டத்தினை 2009 ஆம் ஆண்டில் நசுக்கினார்கள். உலகமே வேடிக்கை பார்த்தது. உலகத்தமிழினமும் தம் மனக்கதவை குருடாக்கிக்கொண்டது.
ஒரே நாளில் எமது நம்பிக்கைகளை நாசமாக்கி
இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களை சிதறடித்தார்கள். காலம் காலமாக கட்டிக்காத்த எம் வளங்கள் அழிக்கப்பட்டன. உயிர்கள் பறிக்கப்பட்டன, எம் பிஞ்சுகள் மேல் தடை செய்யப்பட்ட வெடிகுண்டுகள் வீசப்பட்டு அங்கவீனர்கள் ஆக்கப்பட்டார்கள்.
அன்றிலிருந்து இன்று வரை விடியலை தேடி........
வலிகளும் வேதனைகளும் மட்டுமே நிரந்தரமாய் மீட்சி இன்றி.... எமக்காக குரல் கொடுக்க எவருமே இல்லையா என ஏங்கத்தோடு..... காத்திருக்கின்றார்கள்.
கத்தியின்றி, இரத்தமின்றி சத்தமில்லாமல் அங்கே இன அழிப்புப்போர் நடந்து கொண்டிருக்கின்றது.
போராட்ட காலங்களில் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் பலர் உயிரோடு காணாமல் போனார்கள்.காணாமல் போக்கடிக்கபப்ட்டார்கள்.
*அவர்கள் எங்கே போனார்கள்?
*அரசினால் கைது செய்யப்பட்டவர்களும், சரணடைந்தவர்களும் எங்கே?
* உயிரோடிருக்கின்றார்களா?
**எங்கே இருக்கின்றார்கள்?
*என்னென்ன சித்திரவதை அனுபவிக்கின்றார்களோ? *எங்கே ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றார்களோ?
தவிக்கும் தாய், கதறும் மனைவி, தேடும் குழந்தைகளின் கண்ணீர்க்குரல் உங்கள் காதில் கேட்கின்றதோ?
உயிரோடில்லை என்றாவது சொல்லி விட்டால் மாண்டார் மீள்வதில்லை எனும் நிம்மதியேனும் மிஞ்சுமே..
அவர்கள் செய்த தப்பென்ன?
தம் உரிமைக்காக போராடியது தவறா?
அவர்களை கைவிடலாமா?
இனியேனும் சிந்தியுங்கள்.
இலங்கையில்நல்லாட்சியின் அரசாங்கமாம். அவர்கள் காதில் கேட்கும் படி கொஞ்சம் சத்தமாக ஒரு மனமாய் நீதியின் கதவைத்தட்டலாம்.
வாருங்கள் உறவுகளே!
இத்தனை வருடம் தனித்தே கதறுவதால் யாருமில்லா அனாதைகள் தானே எனும் அசட்டைத்தனத்தால் தம் காதுகளை அடைத்துக்கொண்டார்களோ?
உங்களுக்காக நாங்களும், எங்களுக்காக நீங்களும், நமக்காக நமக்கானதை கேட்டு பெறும் நிலையில் நிர்க்கதியாகி இருக்கின்றோம் எனும் உண்மை புரிந்துகாணாமல் போன தன் உறவுகளை தேடி.....
தன் உயிரை துச்சமாக்கி... ஆகாரமின்றி அறவழியில் உண்ணாவிரதம் இருக்கும் எங்கள் தாய்மாரின் கண்ணீர் துடைக்க வாருங்களேன்.