30 ஜனவரி 2017

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
 பின்னருள்ள தருமங்கள் யாவும்
 பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'

26 ஜனவரி 2017

எங்கே இருக்கின்றீர்கள் மாமா?

என் சுந்தரம் மாமாவை தேடுகின்றேன்
எங்கே இருக்கின்றீர்கள் மாமா?
 ******************************************************************************************************** 
மருமக்களே என எங்களை அதட்டி, கண்டித்து அக்கறையும் அன்புமாக எங்கள் மேல் பாசம் காட்டிய அன்பான மாமா, எங்களுக்காக சண்டை போடும் பாசமான மாமா எங்கள் சுந்தரம் மாமா
நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள்?
யாரேனும் எங்க அம்மாவை திட்டினால் சாரத்தை மடித்து கட்டிக்கொண்டு சண்டைக்கு போவதனால் சண்டியன் மாமா என சொல்வோமே மாமா.
எங்களை யாருமே ஒரு சொல்சொல்ல விடாமல் பொத்திப்பொத்தி பாதுகாப்பீர்களே மாமா.
என் பூப்புனித நீராட்டு விழாவில் அம்மாவுடன் பிறந்த 3 அண்ணாக்களில், நீங்கள் மட்டும் தான் மாமா நான் நன்றாக வாழ வேண்டும் என ஆசிர்வாதீத்தீர்கள். அந்த நாட்களில் அப்பாவும் எங்களுடன் இல்லாத நிலையில் அப்பா ஸ்தானத்தில் என்னை ஆசிர்வதித்தீர்கள் மாமா.உங்கள் ஆசீர்வாதம் நான் நன்றாக இருக்கின்றேன் மாமா. ஆனால் நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள் என தெரியவில்லை மாமா.
தப்புச்செய்தால் கண்டிக்கும் நீங்கள் எங்களுக்கு சமதையாக என்னை கிண்டல் செய்வது போல் என்னை ஓமாக்கும் என சொல்லி கேலி செய்வீர்களே மாமா.எங்கே போனீர்கள் மாமா?
அம்மா வழி உறவில்   உங்களை போல் எவரும் எங்கள் மேல் பாசமும், அக்கறையும் காட்டியதே இல்லை மாமா. நாங்கள் கஷ்டப்பட்ட போது நீங்களும் கஷ்டத்தில் இருந்தாலும் மாமிக்கு தெரியாமல் அன்பையும் அக்கறையையும் கொட்டி பத்திரமாக பாதுகாத்தீர்கள்.

அம்மாவின் மேல் பிரியமாக அம்மாவை பாதுகாக்கும் அண்ணாவாக நீங்கள் மட்டும் தான் அக்காலத்தில் இருந்தீர்கள்.  மாமா என்றால் எனக்கு  உங்கள்  அதட்டலும், அன்பும் மட்டும் தான் நினைவில் இருக்கின்றது மாமா.

முதல் நாள் வந்து வீட்டுமுற்றத்தில் அமர்ந்து  நான் சின்னவளாயிருந்தாலும் தேங்காப்பூவும்  கோதுமையும் சேர்த்து  வாழையிலையில் தட்டி விறகடுப்பில் சுடும் ரொட்டி வாங்கி சாப்பிட்டு விட்டு அம்மம்மாவிடம் நாளைக்கு  திருகோணமலை டிரிப் இருக்கம்மா என சொல்லி போனீர்கள். திரும்ப வருவேன் என சொல்லிப்போனீர்கள்.

நீங்கள் எங்கே தான் போனீர்கள். 
வருவீர்கள் என நம்பிக்கொண்டே இருக்கின்றோம்.
எங்கே போனீர்கள் மாமா?

என் மாமாவைத்தேடி நானும்.....!
********************************************************************************************************
எங்கள் அமமாவின் குடும்பம் விவசாயக்குடும்பம், இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் இருக்கும் புகழ் பெற்ற திருக்கோணேஸ்வர் கோயில் புகழ் தம்பலகாமத்தில் நெல் வேளாண்மை தான் குடும்பத்தொழில்,
அம்மாவின் மூன்றாவது அண்ணா சுந்தரம் எனப்படும் சுந்தரலிங்கம்
நாட்டுப்பிரச்சனையாலும் விவசாயம் செய்ய முடியாத படி பாதுகாப்பற்ற சூழலாலும் இடம் பெயர்ந்து மட்டக்களப்புக்கு வந்து மட்டக்களப்பு பேருந்து போக்குவரத்து சபையின் சாரதியாக சேர்ந்து... வயலில் உழுவதற்கு ட்ராக்டர் ஓடிய அனுபவம் .. சாரதி அனுமதிப்பத்திரம் பெற உதவியது.... 1989 ஆவது ஆண்டின் இறுதியில்... மட்டக்களப்பு திருகோணமலை பஸ் சாரதியாக பணியில் இருக்கும் போதே... செக்கிங் இராணுவமுகாமின் முன் பஸ் நிறுத்தபப்ட்டு விடுதலைப்புலிகளின் கொடி மாமாவில் கையில் வலுக்கட்டாயமாக கொடுக்கப்பட்டு மாமாவை அங்கிருந்த இராணுவமுகாம் உள்ளே கொண்டு சென்றார்களாம்.
பஸ்ஸில் பயணித்து மாமாவை அறிந்தோர் தந்த தகவல் கேட்டு...... அம்மா, அம்மம்மா, மாமி தேடி ஓடி..... அதன் பின் மாமா திரும்பவே இல்லை.
உயிரோடு இருக்கின்றார் என இன்றுவரை நம்பிக்கொண்டிருக்கின்றோம்.
அதற்கு சில வருடம் முன் மூத்த மாமாவின் மகன் மகேந்திரன் அத்தான். காணாமல்  போனான். எங்கே போனான்,,யார் அழைத்துப்போனார் எனும் விபரம் எதுவும் இல்லை. ஆனால் ...... ?
நாங்கள் எங்கள் குடும்பத்தில் மாமாவை மட்டுமல்ல மாமாவின் மக்களையும் இழந்தோம்.
அவர்கள் உயிரோடு இல்லை என இதுவரை நம்ப முடியவில்லை. எங்கோ இருக்கின்றார்கள் எனும் நம்பிக்கை தான் எம் உயிர்ப்பை நகர்த்துகின்றது.
காணாமல்போனோரை தேடி..... நானும்.... !
நீண்ட பதிவு தான் .. கொஞ்சம் படியுங்களேன். 
 ******************************************************************************************************** 

ஈழத்தமிழருக்கான விடுதலைப்போரானது திசை மாற்றம் பெற்று ஈழத்தமிழரெல்லாம் தீவிரவாதிகள் என முத்திரை குத்தி எம்மை நேசித்த மக்களால் தீண்டத்தகாதவர்கள் போல் வெறுக்கபப்ட்டு, எம்மை அழித்தொழித்த போது கண்டு காணாமல் எமது கதறல்களில் நேரம் கண்ணிருந்தும் குருடனாய், காதிருந்தும் செவிடராக்கி எமக்காக துடித்த இதயங்களை தூரமாக நிறுத்தியதில் இந்திய மத்திய அரசாங்கத்துக்கு பெரும் பங்குண்டு.
தமிழர் ஒன்றுபட்டால் தமது ஏகாதிபத்திய அடிமைத்தளைகள் அவிழ்ந்து விடும் என ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகளாய் உறவாடியோரை எதிரிகளும் துரோகிகள் ஆக்கி..........
எய்தவர்கள் பணமும்,பவிசும், பதவியுமாக தேசத்தின் வீரர்களாக நெஞ்சை நிமிர்த்தி நிற்க... உள்ளிருக்கும் துரோகங்கள் அறியாமல் துணை போனோர்.......எம் விரல் கொண்டே எம் கண்ணை குத்தும் முயற்சிக்கு பலகடாவாக்கப்பட்டோர் இன்றுவரை துரோகிகளாய்.. குற்றவாளிகளாய். தம் வாழ்க்கையை பணயம் வைத்து .. விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.
அன்று போல் இன்றும் நம் விரல் கொண்டே நம் கண்ணைகுருடாக்கி... பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு நாம் அறியாமல் துணை போகவும் வைக்கின்றார்கள்.
உலக வல்லரசுகள் இணைத்து உடமைக்கும் உரிமைக்குமாக ஈழமக்களின் போராட்டத்தினை 2009 ஆம் ஆண்டில் நசுக்கினார்கள். உலகமே வேடிக்கை பார்த்தது. உலகத்தமிழினமும் தம் மனக்கதவை குருடாக்கிக்கொண்டது.
ஒரே நாளில் எமது நம்பிக்கைகளை நாசமாக்கி
இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களை சிதறடித்தார்கள். காலம் காலமாக கட்டிக்காத்த எம் வளங்கள் அழிக்கப்பட்டன. உயிர்கள் பறிக்கப்பட்டன, எம் பிஞ்சுகள் மேல் தடை செய்யப்பட்ட வெடிகுண்டுகள் வீசப்பட்டு அங்கவீனர்கள் ஆக்கப்பட்டார்கள்.
அன்றிலிருந்து இன்று வரை விடியலை தேடி........
வலிகளும் வேதனைகளும் மட்டுமே நிரந்தரமாய் மீட்சி இன்றி.... எமக்காக குரல் கொடுக்க எவருமே இல்லையா என ஏங்கத்தோடு..... காத்திருக்கின்றார்கள்.
கத்தியின்றி, இரத்தமின்றி சத்தமில்லாமல் அங்கே இன அழிப்புப்போர் நடந்து கொண்டிருக்கின்றது.
போராட்ட காலங்களில் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் பலர் உயிரோடு காணாமல் போனார்கள்.காணாமல் போக்கடிக்கபப்ட்டார்கள்.
*அவர்கள் எங்கே போனார்கள்?
*அரசினால் கைது செய்யப்பட்டவர்களும், சரணடைந்தவர்களும் எங்கே?
* உயிரோடிருக்கின்றார்களா?
**எங்கே இருக்கின்றார்கள்?
*என்னென்ன சித்திரவதை அனுபவிக்கின்றார்களோ? *எங்கே ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றார்களோ?
தவிக்கும் தாய், கதறும் மனைவி, தேடும் குழந்தைகளின் கண்ணீர்க்குரல் உங்கள் காதில் கேட்கின்றதோ?
உயிரோடில்லை என்றாவது சொல்லி விட்டால் மாண்டார் மீள்வதில்லை எனும் நிம்மதியேனும் மிஞ்சுமே..
அவர்கள் செய்த தப்பென்ன?
தம் உரிமைக்காக போராடியது தவறா?
அவர்களை கைவிடலாமா?
இனியேனும் சிந்தியுங்கள்.
இலங்கையில்நல்லாட்சியின் அரசாங்கமாம். அவர்கள் காதில் கேட்கும் படி கொஞ்சம் சத்தமாக ஒரு மனமாய் நீதியின் கதவைத்தட்டலாம்.
வாருங்கள் உறவுகளே!
இத்தனை வருடம் தனித்தே கதறுவதால் யாருமில்லா அனாதைகள் தானே எனும் அசட்டைத்தனத்தால் தம் காதுகளை அடைத்துக்கொண்டார்களோ?
உங்களுக்காக நாங்களும், எங்களுக்காக நீங்களும், நமக்காக நமக்கானதை கேட்டு பெறும் நிலையில் நிர்க்கதியாகி இருக்கின்றோம் எனும் உண்மை புரிந்துகாணாமல் போன தன் உறவுகளை தேடி.....
தன் உயிரை துச்சமாக்கி... ஆகாரமின்றி அறவழியில் உண்ணாவிரதம் இருக்கும் எங்கள் தாய்மாரின் கண்ணீர் துடைக்க வாருங்களேன்.






18 ஜனவரி 2017

இது வரை காணாத எழுச்சி இது.

ஜல்லிக்கட்டு அவசியமா இல்லையா என்பது இன்றைய கேள்வி அல்ல. ஜல்லிக்கட்டுக்கான தடை எமது இளையோரின் மனத்தடைகளை உடைத்து பொங்கி சிலிர்த்தெழும்ப வைத்திருக்கின்றதே. அது மட்டும் பேசப்படு பொருளாகட்டும். 
இந்த ஒன்றுபடல் இந்த உணர்ச்சி உத்வேகம்.இன்றைய சூழலில் எமது சமூதாயத்துக்கு அவசியமானது என்பதனால் இன்றைய எமது வெற்றியும் இது தான்.
உலகத்தமிழினம் இதுவரை காணாத எழுச்சி இது. இன மத பேதம் மறந்து தமிழனாய் உரத்து குரல் கொடுக்கும் காலமும் இது தான். 

தம் தேவைக்காக இதுவரை ஒன்று பட்டு குரல் கொடுக்காத ஒரே இனம் நாம் தான். நமது அடிப்படை தேவைகளை கூட கேட்டுப்பெற வக்கற்றவர்களாக எப்போதும் எவருக்கேனும் அடிமைப்பட்டுக்கிடக்கும் அடிமைகளை சிலிர்த்தெழும்பிடும் குரல் இது. 
தலைவன் என வழிகாட்ட எவனும் இல்லாமலே எமது சிங்கங்கள், வன்முறைகள் இன்றி, அறப்போராட்டமாக தம் உரிமைக்காக  போராட முடியும் என நிருபித்திருக்கும் நாட்கள் இவை. 
என்ன செய்தாலும் எத்தனை குட்டினாலும் தமிழன் குனிவானே தவிர நிமிரவே மாட்டான்எனும்ஆளும் அதிகார வர்த்தத்தினருக்குமான சாட்டையடி போராட்டம் இது.  ஜாதி, மதம் எனும் பெயரில் பிரிந்தே கிடைப்பவர் தானே என தூசாய்  எம்மை நடத்த  நினைத்தவர்களுக்கு முகத்தில் கரி பூசிய நாட்கள் இவை. 
சீரும் சிறப்புமான தமிழினம் தன்னை வழி நடத்தக்கூட  தன்மானமிக்க தமிழன் இல்லாமல் தவிக்கிறதே  எனும் இன உணர்வோடு  கலங்கிய பல இலட்சம்  தமிழுணவாளர்களை உயிர்ப்பிக்க வைத்த நாட்கள் இவை. 
தொழில் நுட்ப வளர்ச்சி எனும் பெயரில் தம் தேசத்து குப்பைகளை  கொட்டி எம் தேசத்து மண்ணையும் மக்களையும் மலடாக்க நினைக்கும் மேற்குலகின் அகம்பாவத்தினை அறுந்தெறிந்த நாட்கள் இவை. 
அடக்கப்படும் உரிமைகளுக்காக கிளர்த்தெழும்பப்படும் உணர்வுகளை திசை திருப்ப முயலும் சதிகாரர்களை இனம் கண்டு அவர்களை துரத்தி அடிக்க முடியும் என உணர்வைத்தந்த நாட்களும் இவையே. 
இந்த ஆரம்பத்தினை எமக்கான உரிமைகளை தட்டிக்கேட்கும் குரலாக , சமூதாய அவலங்களுக்காக உரத்து ஒலிக்கும் குரலாக மாற்றிட வேண்டியது எமது ஒவ்வொருவரின் கடமையும் தான். 
எந்த அரசியல் வாதிக்கும் பின்னால் செல்லாமல், சினிமாவின் பளபளப்புக்களை முன் நிறுத்தாமல் தமிழன் எனும் உணர்வில் மட்டும் சிலிர்த்தெழும்பி இருக்கும் எமது இளம் காளைகளுக்கான ஆக்கபூர்வமான உந்து சக்தி நாம் தான்.

போராட்டங்கள் எப்படியும் வெடிக்கலாம். அதை பாட்டாளி மக்களின் தேவைக்கானதாக  சர்வாதிகாரத்துக்கு எதிராக திசை திருப்பி எடுப்பதும் உண்மை உணர்வாளர்கள் கைகளில் தான் உள்ளது. .  எவ்வித பின்புலமுமின்றி இயல்பாக எழுந்த போராட்டத்தினை   நம் தேவைகளுக்கான தாக ஒலிக்க வைப்பதும்  நம் கைகளில் தான்.   
ஆம்....!
ஜல்லிக்கட்டு தடை எனும் பெயரில் ......... தமிழருக்கான அடக்குமுறை..... தடை அதை உடை..... என இளையோரும், பெரியோரும் வயது வேறுபாடின்றி ஒருமனதோடு இணைந்து தமிழர் எனும் இன உணர்வில் ஜாதி மத பேதம் களைந்து ஒன்று பட்டு நிற்கும் தருணம்.
ஜல்லிக்கட்டுக்காக மட்டுமல்ல சமூக அவலங்களுக்காகவுமான உரிமைக்குரல் உரத்து ஒலிக்கட்டும்.
இந்த ஒன்றுபடல் நல்ல ஆரம்பமாகட்டும். வேகத்தினை விட விவேகமும் அவசியம் என்றுணர்ந்து இத்தனை ஆற்றல்களும் திசை மாறி சிதறடிக்கப்படாதிருக்க வேண்டும் எனும் மன உணர்வோடு இணைவோம்.
இளைஞர் சக்தி ஆற்றலில் சக்தி. இத்தனை ஆற்றுமைப்படுத்தல்களையும் சரியாக பயன்படுத்தி வழி நடத்திட களத்தில் போரிடுவோருக்கு அகத்தில் சக்தி தரும் ஊற்றாகிட ஒன்று சேருங்கள்.
தமிழன் என்றோர் இனமுண்டு. தனியே அதற்கோர் குணமுண்டு. 
தலை நிமிர்ந்து சொல்லும் நாட்கள் வரும். 
ஒலிக்கட்டும் முரசு. 
விடியல்கள் தூரமில்லை.


15 ஜனவரி 2017

சுவிஸில் ஐஸ்!-The People vs Winter.

சுவிஸ் பனியில் ஒருமுறை வலம் வந்தால் சுவிஸில் ஐஸ் ஸ்வீட்டா என கேட்க தோன்றும்.

இது தான் இது தான் சுவிஸ். 
இங்கே  தான் நாங்கள் குடி இருக்கின்றோம். 
💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃
ரசிக்க வைத்தாலும் வலிக்க வைக்கும் நிஜங்கள்.
 உயிரை உறையவைக்கும் கணங்கள்.
மழை பொழிந்தாலும்  
வெயில் பொசுக்கினாலும் 
புயல் வீசினாலும் 
பனி கொட்டினாலும்
எம் பணி மாறிடாது. 
கடற்கரைமண் போல் முழங்கால் புதையும் ஐஸ் மணல் துகள் முன் 
ஒன்றின்மேல் ஒன்றாய் ஐந்தாறு உடைகள் உடலைக் கவசமாய்க்காக்க
பாரமாய் பாதணி பாதத்தை இறுக்க. 
சறுக்கென வழுக்கி தரையை தொட்டு முத்தமிடும் தருணத்தில் மல்லாக்க விழுந்தால் பல்லக்கிலும் பயணம் செய்வோம்.

வானத்திலிருந்து பவளமல்லிப்பூப்போல் சொரிந்திடுவதை ரசித்திடும்னதில் நான்கு கால் பேருந்தும், சிற்றூந்தும்  சறுக்கிடும் போது இரண்டு கால் மனிதர் எம்மாத்திரமென்பேன்? 

பயணிகள் பேருந்து பயணிகளுடன் சறுக்கி செல்லும் போது அதில் பயணம் செய்வோர் மன நிலை எப்படி இருக்கும்?  


சுவிஸ் வேக வீதிகள்  ஐஸ் பனி மழையின் போது...!

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எல்லாம் இருந்த போதும் / எதையும் இழக்கவில்லை எனினும் நம்மில் பலர் வாழ்க்கையை நொந்து கொண்டுதானிருக்கிறோம்.
இழந்தவைகள் இனியில்லை என்றான பின்னும் இழப்பை நினைத்து கலங்காத உள்ளம் வேண்டும்.
இழப்பதற்கு எதுவும் இல்லை எனினும் இரப்பவர்க்கு கொடுக்கும் மனம் வேண்டும்.
இழப்புக்களை நினைத்திடாமல் இறுதிவரை இரக்கத்தோடு இயங்கிடல் வேண்டும்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤



14 ஜனவரி 2017

சுவிஸர்லாந்தும் அதன் நதிகளும்.

இயற்கை வளங்கள் ஏதுமின்றி தலை நிமிர்ந்து நிற்கும் வளம் செழித்த சுவிஸர்லாந்து! சுவிஸ் என்பது ஸ்விட் என்பது போல் அதன் பேரைக்கேட்டாலே இனிய நினைவுகள் மட்டும் தான் தோன்றும்.தேனிலவுத்தம்பதிகளின் கனவு தேசம்.சினிமாக்களின் டூயட் களம்.வடக்கே ஜேர்மனி,மேற்கே பிரான்ஸ், தெற்கே இத்தாலி, கிழக்கே ஆஸ்திரியா மற்றும் லிக்டன்ஸ்டைன் ஆகிய நாடுகளை எல்லைகளாக கொண்டு நிலப்பகுதிகளாலும் ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய தேசம்.



ஓரிடத்தில் நின்று சுழண்டு சுற்றி பார்த்தாலும் மலையும் முகடுமாகத்தான் தெரியும். மூன்று மாதங்கள் மட்டும் கொண்ட கோடையில் பச்சைபோர்த்திடும் மரங்கள் அடுத்து வரும் மாதங்களில் பச்சைகளை உதிர்த்து மொட்டையாகி பட்ட மரமாய் கற்பாறைகளை மட்டுமே காட்சிக்குள் கொண்டு வரும்.
தூரத்தில் தெரியும் வெண்பனிச்சிகரங்களின் தொடர் சுவிஸுக்கும் ஐஸுக்குமான தொடர்பை நினைவு படுத்திக்கொண்டிருக்கும்.
கடலும் இல்லை கடல் போல் ஏரிகள் உண்டு. அவைகளை நம்பி  இந்த மலைகள்,கற்பாறைகளுக்குள்ளும்விவசாயம்உண்டு.சோளனும்,கோதுமையும், உருளையும், காய்கறிகளும் விதைக்கப்படத்தான் செய்கின்றது. இல்லைகள் அதிகம் எனினும் இருப்பதை விதைத்து சிகரம் தொடும் வித்தையை நாம் இந்த அரசிடமும் மக்களிடமும் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
நாகரீகம் எனும் போர்வையில் மரங்களை அழிக்காமல் பழங்கால கட்டிடங்களை சேதப்படுத்தாமல் இருப்பதை இன்னும் அழகாக்கி உலகத்தின் பார்வையை தன் பக்கம் திருப்பி, உல்லாசப்பிரயாணிகளின் வருவாய் மூலம் நாட்டின் செல்வத்தை உயர்த்திடுவது எப்படி என்பதையும் கண் முன் காட்சிகளாக்கிடும் நிஜ மாந்தர்கள் வாழும் நாடும் இதுவே. நம் தமிழர்களை போல் உலகில் மிகதொன்மையான கலாச்சாரங்களையும் பழக்கவழக்கங்களையும் கொண்ட நாடு.
உலகத்தில் விலை உயர்ந்த குங்குமப்பூ இந்த பனிப்பிரதேசத்திலும் விளைகின்றதென்பது கொசுறுச்செய்தி.
இயற்கை வளங்கள் இல்லை என்றால் என்ன? எங்களிடம் இருப்பதே எமக்கு போதும் என மலைகளிலும் அடிவாரங்களிலும் இன்னும் கிராமத்து மண் வாசனையோடு எளிய,செல்வந்தர்களாக வாழ்வோர் இங்கே உண்டு. நம் நாட்டினை போன்றே குடும்ப பாராம்பரியமும் கட்டுப்பாடுகளும், உறவுகளும், உண்மையும் இங்குண்டு.

பசுவும்,பாலும் தான் இவர்கள் விசேஷம் எனினும் காலச்சக்கரத்தின் சுழற்சியையும் வளர்ச்சியையும் எடுத்து சொல்லும் கடிகாரங்களின் கண்டு பிடிப்பும், அதன் மதிப்பும் கூட வானுயர்ந்தது தான்.
பசுவின்பாலைமட்டும்வைத்துக்கொண்டே.சாக்லெட்டையும்,சீஸையும் உற்பத்தி செய்து சுவிஸ் சாக்லேட் எனில் ஆல்ப்ஸ் உச்சியளவு உயர்ந்து நிற்கும் சுவிஸ் நாட்டில் நதிகள் குறித்து ஒரு பார்வை.
நான்கு பக்கமும் நாடுகள்.கடலில்லை ஆனாலும் எல்லைகளாக இருக்கும் நான்கு நாடுகளையும் அடுத்திருக்கும் கடலோடு கலக்க ஆயிரக்கணக்கான் கிலோ மீற்றர்கள் பயணம் செய்யும் நதிகள்மத்தியதரைக் கடல், வடகடல், அட்ரியாடி கடல், கருங்கடலுடன்தொடர்பு படுத்தப்பட்டு நாட்டுக்குள் எங்கும் பாய்ந்து பரந்து இருக்கும் நதிகள், ஆறுகள், குளங்களை இணைத்து செல்லும் வாய்க்கால்களுமாக நதி நீர் இணைப்புக்கு நல்லதொரு முன்னுதாரணமாக் நம் முன் நிற்கும் நாடு இது.41,285 சதுர கிமீ பரப்பில் 8 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சிறிய நாடு தான். ஆனால் இந்த நாடு கற்றுத்தரும் பாடம் அசாத்தியமானது.

இப்பதிவுடன் இணைத்திருக்கும் படத்தினை பெரிது படுத்தி நீல வர்ணத்தில் அடையாளம் காட்டப்பட்டிருக்கும் நதிகளையும், அவை செல்லும் பாதைகளையும் பாருங்கள்.

மேற்பரப்பில் ஜேர்மன், பிரான்ஸ் தேசம். வலது பக்கம் ஜேர்மன், ஆஸ்திரியா,இத்தாலி, இடது பக்கம் பிரான்ஸ் கீழ்ப்பரப்பில் பிரான்ஸ், இத்தாலி என நான்கு நாடுகள் சூழ்ந்திருப்பதையும் காணலாம்.
இன்னும் வரும்.

12 ஜனவரி 2017

ஆத்தி சூடியும் முரண்படுமோ?

சின்னஞ்சிறு வயதில் நாம் நீதிக்கதைகளாகவும், பாலர் பாடசாலை பாடல்களாகவும் ஔவையாரின் ஆத்திசூடியை அரைத்து கரைத்து குடித்திருப்போம். அல்லது குடிக்கவைக்கப்பட்டிருப்போம். ஆத்தி சூடியும்,உலக நீதியும் தான் அக்காலத்தில் நமக்கு அரிச்சுவடிப்பாடங்களாக இருந்தன. ஏ போர் அப்பிள் என்பது அதன் பின்னர் தான் ஆரம்ப மாகும்.
ஆத்தி சூடியில்ஏற்பது இகழ்ச்சி என சொன்ன ஔவைப்பாட்டி அடுத்து  ஐயமிட்டு உண் எனவும் பாடி இருப்பார்.நமக்கு அறிவுரை சொல்லும் போது இந்த இரண்டும் நம் சுய நிலையில் நமக்கு நல்ல ஆலோசனை தான்.எனினும் நான், நாம் என சிந்திக்கும் போது ஒரே பாடலில் அடுத்து வரும் இருவரிகளின் முரண்பாடு ஏன் என தோன்றவில்லையா?
ஔவை பாட்டி ஏன் சொன்னார்.. எதற்கு சொன்னார், அவர் வாழ்ந்த காலத்தில் எச்சூழலில் யாருக்காக சொல்லி இருந்தாலும் ஒளவையார் எந்த இடத்திலேயும் தவறுதலான கருத்தை சொல்லி இருக்க மாட்டார். நாம் தாம் நம் சூழலுக்கேற்ப அர்த்தப்படுத்தி கொள்கிறோம் என எடுத்து கொள்ளலாமா?
ஐயமிட்டு உண் பசியோடிப்பவர்க்கு ஈந்து அதன் பின் நாம் உண்ண வேண்டும். உடலை வருத்தி உழைக்க முடியாத நோயாளிகள் வயோதிபர்கள் நோயால் பாதிக்கப்பட்டோர், தாய்தகப்பனில்லாத சிறுவர்கள் கைவிடப்பட்டோர், பசித்தால் வாய் திறந்து பசிக்கிறதே என கேட்க முடியாத மனநிலை பாதிக்கப்பட்டோர், தங்களுக்கானதை உழைத்து சம்பாதிக்க இயலாதோருக்காக தான் ஔவைபாட்டி ஐயமிட்டு உண் என சொல்லி இருக்கலாம் என நான் நினைக்கின்றேன். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

பசி என எவர் வந்தாலும் நாம் அன்னமிட வேண்டும் எனினும் அந்த அன்னத்திற்கு கை ஏந்த முன் தாம் இரந்து வாழும் இழி நிலைக்கு உகந்தவரா எனவும் உண்மையில் இயலாதோருக்கு செல்ல வேண்டிய தானத்தை தாம் தட்டிப்பறிக்கின்றோம் என உணரவும் வேண்டும். 
இம்மாதிரி உண்மையில்பாதிக்கப்ப‌ட்டோர் உதவிசெய்யுங்கள் என வாய்திறந்து கேட்கவே சங்கடப்படுவர். பட்டினியாக இருந்தாலும் இரந்து உண்பதை, வாழ்வதை தவிர்த்து நிமிர்ந்தே நிற்பர்.அப்படிப்பட்ட சூழலில் பசிக்கிறதே சாப்பாடு கொடு,முடியவில்லையே உதவி செய் என கேட்கா விட்டாலும் உண்மையில் உதவிதேவையெனபட்டோரின் சூழலை நாமாக உண‌ர்ந்தும் யாசிப்பவர்கட்கும் இல்லையென்னாது கொடுக்கவேண்டும் என்பதக்காகவே அவர் ஐயமிட்டு உண் என சொல்லி சென்றிருப்பார். உண்பதும், குடிப்பதும் எவ்வாறு நமது வாழ்வாதாரத்திற்கான அடிப்படை செயலோ, அவ்வாறே நம்மால் இயன்றவரை பிறர்க்கு உதவுவதையும் நமது அன்றாட வாழ்வின் அடிப்படை செயலாக கொள்ளவேண்டும் என ஔவைப்பாட்டிமட்டுமல்ல திருவள்ளுவரும் கூறியிருக்கிறார். ஏன் எல்லா மத போதனைகளும் அப்படித்தான் சொல்லிக்செல்கிறது அல்லவா....இயலாதோருடனும், முதியோருடனும் நாம் பகிர்ந்துண்ண வேண்டும் என்பதையே  சொல்லி இருப்பார்
இதுவும் அக்காலத்தில் சொல்லபட்டதுதான்..
ஈயென இரத்தல் இழிந்தன்று ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று
ஒருவரிடம் கையேந்துவது இழிவு. இல்லை, அவர் கேட்பதை  தர மறுப்பது அதைவிட இழிவானது.என்று திருவள்ளுவர் சொல்லுகிறார். 
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம் உடைமை வைத்திழக்கும் வன்க ணவர்? வலது கையால் கொடுப்பது இடது கைக்கு தெரியாது கொடுப்பதும்,
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - என்பது போல் நம்மிடம் இருப்பதை பிறருடன் பகிர்ந்துகொள்வதுடன் பிறருக்கு நாம் வழங்குவது அதிகமாகவும்தேவை உணர்ந்து நாமே நம்மிடம் இருப்பதை கொடுப்பதும் கொடுத்தபின் கிடைக்கும் நிறைவும், தகுந்தோருக்கு உதவினோம் என கிடைக்க கூடிய சந்தோஷங்களுக்காகவும் கூட ஐயமிட்டு உண்ணலாம்.
எப்படியோ ந‌ம்மிட‌ம் உத‌வ‌கூடிய‌ சூழல, வசதி இருந்தும் உதவாமல் இருப்பதும் இழிவே
ச‌ரி அப்ப‌டியே ஏன் ஏற்ப‌து இகழ்ச்சி என‌ சொன்னார்னு பார்த்தோமானால்......?
இது என‌க்கும் உங்களுக்கும் ந‌ம்மைபோன்று ந‌ன்கு வ‌சதியோடு வ‌ள‌மாய் உடலில் நல்ல பலமிருக்கிறது அல்லது நல்ல மூளை பலம் இருக்கிறது என சொல்லகூடியவர்களை நோக்கி சொன்னதாய் எடுத்துக்கொள்ளலாம். 
கையும் காலும் நன்றாக  இருக்கும், நல்ல இளமையோடு நோய் நொடியின்றி ஆரோக்கியமாகவும்இருப்பார்கள்.ஆனால் உழைப்பதற்கு சோம்பேறித்தனம் பட்டு ஊதாரித்தனமாக சுற்றிக் கொண்டிருப்பார்கள், பிச்சை கேட்கவும் தயங்க மாட்டார்கள். அம்மா அப்பாவின் உழைப்ப்பில் ஊர் சுற்றுவோருக்கும் மனைவியை வேலைகளுக்கு அனுப்பி விட்டு எந்த வேலையிலும் நிலையில்லாமல் தகுந்த ஊதியமுமின்றி பெரியவர்களை  நம்பி இருக்கும் இளைஞர்களைக்குறித்தும் சொல்லி இருக்கலாம். மற்றவர்களிடம் கை நீட்டி நிற்பது எத்தகைய அவமானம் என்பதை உணர்த்த இப்படி சொல்லி இருக்க வேண்டும்
பிறக்கும் போது எப்படி வந்தோமோ அப்படியே இறக்கும்போதும் செல்வோம் என உணர்ந்து கொண்டு வந்தும் இல்லை கொண்டு செல்லபோவதும் இல்லை என்பதை புரிந்து நம்மிடம் இருப்பது நமக்கு போதுமெனற நிறைவுடன் பிறரிடமிருந்து நாம் பெறுவது குறைவாக, இருக்கவேண்டுமென்பதுக்காகவும் ஏற்ப‌து இகழ்ச்சி எனச்சொல்லலாம.கொடுக்கும் கை உயர்வாகவும் வாங்கும் கை தாழ்ந்தும் இருப்பதும் இந்த இரத்தலினால் தான். 
கொடுத்தல் அதாவது ஈதல் எப்பொழுதும் நல்லதே. ஆனால் பெறுதல்? நம்மை நாம் ஆராய்தறிந்து  அடுத்தவரிடம் பொருள் பெற்றுத்தான் நம் பசி போக்கிடும் நிலையில் நாம் இருக்கின்றோமா என  நன்கு சிந்தித்து பெறுவோம்.  அடுத்தவரிடம் கை ஏந்தி  ஏற்பது எப்போதுமே இகழ்ச்சியைத்தான் தரும். 
தேவைப்படுவோருக்கு அவர் தேவை உணர்ந்து பெற்றுக்கொள்ளுங்கள் என்று கொடுப்பதே உயர்ந்தது(ஐயமிட்டு உண்)
கொடுப்பதை வேண்டாம் என மறுப்பது அதைவிட உயர்ந்ததாம(ஏற்பது இகழ்ச்சி)
ஐயமிட்டு உண்,ஏற்பது இகழ்ச்சி இப்படியே போய் தையல் சொல் கேளீர் எனவும் ஔவை சொல்லி இருக்கின்றார். அப்படி ஏன் சொல்லி இருப்பார்? தையல் எனில் பெண்கள். பெண் சொல் கேட்கக்கூடாதோ?  பெண் புத்தி பின் புத்தி என சொல்லி பழமொழிக்கும் புது மொழி தேடுவது போல்  தையல் சொல் கேளீர்  என்பதற்குள் என்ன தான் இருக்கும்?

"எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு"


10 ஜனவரி 2017

பத்துரதப்புத்திரனின் மித்திரனின் சத்துரு யார்?

ஒருவருக்கு நெருஞ்சி முள் குத்திவிட்டதாம் . மருந்து கேட்டு வைத்தியரிடம் போனாராம். வைத்தியரிடம் போய் கொஞ்சம் ஏறுக்கு மாறாக நெருஞ்சி முள் குத்தி விட்டது, மருந்து தா என கேட்க மருத்துவருக்கு வந்ததே கோபம். போயும் போயும் நெருஞ்சி முள் குத்தியதுக்கா மருந்து கேட்டு வந்தாய் எனும் கோபத்தில்.....
"பத்துரதப்புத்திரனினின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின் கால் எடுத்து தேய். " என்று சொல்லி போயிட்டே இருந்தாராம்.
சரி அவர் அப்படி என்ன தான் சொல்லிப்போனார்.. உங்களுக்கு ஏதேனும் புரிகின்றதோ?
விளக்கம்
பத்துரத = தசரத;
புத்திரனின் - மகன் ராமனின்;
மித்திரனின் - நண்பனான சுக்கிரீவனின்;
சத்துருவின் - பகைவனான வாலியின்;
பத்தினியின் - மனைவி தாரையின்;
கால் எடுத்து ( தாரை என்ற சொல்லின் காலை எடுத்து தேய்.
நெருஞ்சிமுள் குத்தினால் தரையில் காலை தேய்க்க வேண்டுமாம். 

08 ஜனவரி 2017

நீர் நாடி துடிக்கும் நிலமகள்!



நிலமதை சூழ நீரிருந்தாலும்  - பூ மகள்
தூய்மையை  அழித்திடும் போதினில் 
வான்மகள் பொய்த்து  மண்வளம் குன்றி
நீர்நாடி தவிர்க்கும்  உயிர் வதை உணர்வீர்

பாளம் பாளமாய் பாறைகள்  தோன்றி 
நிலமகள் நித்தம் துடித்திடு முன்னே
சீர்மை கொண்டு சிறப்பாய் நின்று 
பாரின் தேவையை  சட்டென உணர்வீர்

சேற்றில் உழன்றாலும் செம்மணிக்  கதிர்கள்
சிலிர்த்து நிற்பதே சொர்க்கம் என்றுணர்ந்தே 
நாட்டின் தேவையை  சிந்தையில் விதைத்து 
ஆலம் விதையாகி  விருட்சமாய் உயர்வீர்.   

ஆழிக் கரையினில்  ஆழியாய் சுழன்று   

நதிகளை இணைத்து  நாற்றுக்கள் நட்டு 
துளித்துளியாக துடித்திடும் உயிரை
பனித்துளி கொண்டு உயிர்த்திட வாரீர் 

நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சிடும் தஞ்சை 
மஞ்சம் கொண்ட பஞ்சத்தில் தஞ்சம் 
நஞ்சுண்ட மாந்தர் வெஞ்சினம் கொண்டே 
வெறுமையை உணருமுன் விரைவாக வாரீர் 

காடும் களனியும் கதிரவன் வீச்சால் 
கருகிடல் கண்டு துடித்திடும் நெஞ்சம்
ஊருக்கு சோறிட்ட உத்தமர் கரங்கள்
உயிர்ப்பிச்சை கேட்கும் நிலைதனை கேளீர்

நாளை வருவதை இன்றே உணர்ந்து 
நானிலம் செழிக்க நன்மைகள் நாடி
மடிந்திடும் மனிதனின் மகத்துவம் புரிந்தே 
மண்காக்க இன்றே  புறப்படுவீரே.

நாளை என்பது நிச்சயம் இல்லை  

நாட்டின் வளமும் நம்மிடம் இல்லை 
நானெனும் சுயமும் நம்முள்ளே இல்லை 
நாமென இணைந்தே நன்னிலம் காப்போம். 


படங்கள் நன்றி  இணையம்

07 ஜனவரி 2017

SAVE WATER SAVE LIFE - ஒரு பிடிச்சோற்றின் முன்

மூவிரண்டாய் மூழ்கி இருந்தும் 
அடி முதல் முடி வரை விரவிப்பரந்தும் 
அங்குசமின்றி  ஆளுமை செய்தும் 
அணைகளை உடைத்து தடைகளை கடந்தும் 
அலைகளால்  அலைக்கழித்தும் 
பொங்கிப்பெருகி  காட்டாறாய்  ஓடி 
நாணிடும் நங்கை போல்  கொஞ்சி நடந்து 
கங்கா, யமுனா, சரஸ்வதி என்றென போற்றி
காவேரிக்காக களப்பலி கொடுத்ததும் ஏனோ?



வண்டல் நிலமோ பாளம் போல் வெடிக்க
நெல்மணிக்கதிர்கள்  தாகத்தில் தவிக்க
கரிசல் பூமியின் கதறல் கேட்டு 
இனித்திடும் கரும்பின் சுவையும் கசக்க
பருத்திச்செடியோ செம்மண்ணின் சூட்டால் 
சுழன்று வெடித்து சுக்கு நூறாக 
வளமான மண் தேடி விவசாயி அலைய
உயிரான  நீர் வளம் உருக்குலைந்திட
விசமாக்கும் வித்தையை  களமாக்க துடிக்கும் 
அடப்பாவி மனிதா! 
ஒரு பிடிச்சோற்றின் முன் 
ஒரு கிலோ தங்கமோ,  ஓராயிரம் கோடியோ 
உன்  உயிர்க்கு உரமாகாதுணர்வாய். 




04 ஜனவரி 2017

ஆடுவது தாண்டவம் தானா?

தட்சனின் மகளென்றாய் ஆடுவதும் தாண்டவமென்றாய்
நிலவென்றாய் உலகென்றாய் விட்டிலானேனென்றாய்
விட்டகுறை தொட்ட குறை அத்தனையும் உண்டென்றாய்
சொல்லுக்குள் சொல்லாகி சோக கீதம் படைத்தாய்
அத்தனையும் அர்ப்பணிப்பாய் ஆண்டாளுக்கே என்றாய் 
முழுமதியாள் முகம் கண்டால் சுடுகின்றதே என்றாய்
சுட்டு விடும் சூரியனை தூரமாய் ஒதுக்கி விட்டாய்
எட்டி நிற்கும் நிலவினையே தொட்டு விடத்துடிப்பாய்
தொட்டு விட்ட அகமனதை புறமாக்கி தொலைத்திடுவாய்

.
நீ நடந்தால் உடன் நடக்கும் நிலவுக்கும் களங்கமுண்டு
வெண்மதியாள் முகம் மறைக்கும் நாட்களும் இங்குண்டு
நாள் தோறும் தனை சுற்றி தனில் தானே உயிர்த்து
தனை சுற்றும் போதினிலே பூக்கோளமதை குளிரச்செய்து
கதிரவனின் கதிர்க்கணைகள் கன்னம் வைத்து தாக்காது
காத்திடும் அரும்பணிக்கோர் மகுடமுண்டு நீ உணர்வாய்
முழுமதியும் காரிருளும் நிறைமதியாள் வசமாகி
தானியங்கியாவதனால் ஞாலமதில் காலமது கனிகிறது.
எதற்கும் ஒரு காலமுண்டு, காரணமும் பல உண்டு
நெருப்பாற்றை கடந்து விடும் நெஞ்சுரம் தனை பெறவே
புடம் போடும் பணிதனையே பக்குவமாய் பதம் செய்தே
தடம் பதிக்கும் நாளிலிலே நிலவுமகள் பின்னிருப்பாள்
மேகத்தின் நடுவினிலும் விடிந்து விடும் பொழுதினிலும்
வீட்டு வாசற்படியினிலும்  வெண்மயிலாள்  துணை வருவாள்
நின் மதியின் நினைவுகளில் சிவனாடும் நர்த்தனமாய்
வரியாகும் காரணத்தை சுயஅகத்தில் தேடுவோரை
துச்சமின்றி தூரமாக்கி சிந்தனையை பறக்க விடு
நித்திலம் போற்றிடும் நாளும் வரும், நிம்மதியே வசமாகு
..


03 ஜனவரி 2017

கடந்து வந்த வருடம்!

ஒருவருடம் கடந்து போனது, புதுவருடம் பிறந்தும் விட்டது. கடந்த வருடத்தைய கசப்புக்களை  நினைத்து பதிவுகளும், வாழ்த்துக்களுமாய் ஒரு வாரமாக படித்தும் பகிர்ந்தும் விருப்பு வாக்கிட்டும், பின்னூட்டமிட்டும், கிறிஸ்மஸ், புதுவருடத்தினை குடும்பத்தோடு குதூகலமாக கொண்டாடியும் காலமது மிக வேகமாக ஓடிசெல்வதாகவே படுகின்றது. 

இதோ  ஒருவருடம் போய் புதுவருடம் வந்து மூன்று நாளை கடந்த நிலையில் நாமும் ஏதேனும் பதிவு போட்டு நம் இருப்பை எல்லோருக்கும் தெரிவிக்க வேண்டுமே எனும்  உள்ளத்து உணர்வில் வருடத்து முதல் பதிவாக எதை எழுதலாம் என சிந்தித்து.. நாலு வரியில் கவிதை என எதையோ கிறுக்கி அதை டிராப்டில் போட்டு விட்டு... ........😕😕😕😕😕  

பேஸ்புக்கில் அஜீவன் அண்ணாவில் ப்ரோபைல்  வசனம் கண்டு ஒரு தத்துவமும் முத்தாக எழுதி  அதை தனிப்பதிவாக்கலாமா.. இல்லையா என சிந்தித்து..... அடப்போங்கப்பா.. நான் கம்பெனியில் ஒரு கல்யாண வீட்டுக்கான ஈவன்ஸ் ஆயத்தங்களுக்கு கூட இத்தனை சிந்திப்பதில்லையாக்கும்.❤❤ 

சரி அந்த தத்துவ முத்துத்தான் என்னவென உங்களுக்கும் சொல்லி பதிவை தொடர்கின்றேன். சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டு கிடப்பதை விட சுதந்திரமாய் உப்பாகி நீரோடு கரைவது மேல் எனும் வரிகள் சொல்லும் கருத்தை உள்வாங்கினால் புத்தர் போதிமரத்தினடியில் பெற்ற ஞானத்தினை விட அதீத ஞானம் பெறுவோம்.

முதலாவதாய் இரு, அல்லது முதலாவதாக இருப்பவனோடு இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் மத்தியில் சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டு கிடப்பதை விட சுதந்திரமாய் உப்பாகி நீரோடு கரைவது மேல் என நினைப்பவர்கள் மதிப்புக்குரியவர்கள். சாதிக்கப்பிறந்தவர்கள். என்றே தோன்றும். பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம் என எங்கோ ஓரிடத்தில் வாழ்ந்து மடியாமல் வாழும் காலத்தில் எதையோ சாதித்தோம் என நான்கு பேர் மனதில் நிலைக்கும் படி தவறு கண்டு தட்டி கேட்கவும் தன் கருத்தினை தயங்காது எடுத்துரைக்கவும், மறைந்திருந்து எழுதாமல் தம்மை இன்னார் என வெளிப்படுத்தி எழுதவும் தைரியம் வேண்டும். தன் கருத்தில் என்றும் மனம். தளராத விக்ரமாதித்தன் தான் அஜீவன் அண்ணா. சில பல விடயங்களில் எனக்கும் அவருக்கும் மாற்றுக்கருத்திருந்தாலும் நட்பில் குறை காணாதவர்.

இணைய நட்பு என்றால் போலியானது,பொய் முகம் கொண்டதெனவும், பயனின்றி நேரத்தினை வீணாக்கும் இருப்பிடம் பேஸ்புக் எனவும், இதில் எழுதி நீ என்னத்தை சாதித்தாய்? இத்தனை நேரம் இதில் அமர்ந்திருப்பதனால் உனக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்? என கேலி கிண்டல் செய்வோரை கண்டு பரிதாபம் தான் தோன்றும்,அடிக்கடி நான் இனி வரமாட்டேன், இங்கிருந்து கிளம்புகின்றேன் என பதிவிடுபர்களையும் தன் பக்கத்தினை டிஆக்டிவேட் செய்வோரையும் கண்டால் அவர்கள் மீதான மதிப்பு சட்டென தாழ இறங்குகின்றது. அதது இருக்குமிடம் இருந்தால் நடப்பதெல்லாம் நல்லதாகவே அமையும், அதில் பேஸ்புக் நட்புக்களுக்கும் விதிவிலக்கு அல்ல. நல்லதை தெரிந்து நல்லதல்லாததை விட்டு விலகினால் எல்லாம் சௌக்கியமே!

சரியானதை தெரிந்தெடுக்க தெரியாமல், அமிர்தமானாலும் அளவோடு இருந்தால் தான் அது அமிர்தமாகும் என்பதையும் அறியாமல் கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்பது போல் இந்த எழுத்தினால் நாம் பெறும் உயிர்ப்பும்,உணர்வும், நட்பும், நன்மையும் அறியாமல் பிதற்றுவோரை கண்டு கொள்ளாது இனிவரும் காலங்களில் இன்னும் அதிகமாய் உள்ளத்து உணர்வுகளை எழுத்தாக்க வேண்டும் எனும் வைராக்கியத்தினை தந்து சென்ற 2016 ம் வருடம் என் வாழ்வின் பல நன்மைகளை விதைத்து சென்றிருக்கின்றது.

அப்படி என்னத்தை சாதித்தோம் என நினைத்து கொள்ளும் நேரங்களில் சட்டென ஏதோ ஒரு வகையில் எனை குறித்த பகிர்வுகள் என்னை பீனீக்ஸ் போல சிலிர்த்தெழ வைக்கும். அவ்வகையில் Geetha Mathi கீதாக்காவின் என்றாவது ஒரு நாள் ஆஸ்திரேலியப் புதர்க்காடுறை மாந்தர்களின் கதைகளாக எழுத்தாளர்   ஹென்றி லாஸன அவர்களில் கதைகளை மொழிபெயர்த்து வெளியிட்ட நூலின் நன்றியுரையில் என் பெயரை கண்டதும் உலகின் எங்கோ ஒரு மூலையில் நம் பெயரை சொல்ல எவரேனும் இருந்து கொண்டிருப்பார்கள் எனும் உண்மை புரிந்தது. அக்காவின் நினைவில் நான் இருந்ததும் என்றும் இருக்க வேண்டும் என்பதும் என் ஆசையும் தான்.

தமிழ் மன்றத்தில் நான் ஹேகா என என் கம்பெனி பெயரில் எழுதிக்கொண்டிருந்ததனால் கீதாக்காவுக்கு என் பெயர் ஹேகா ஆகிப்போனது. இன்னும் பலருக்கும் நான் இன்னும் ஹேகாவாகவே அதாவது ஹே.... காக்கா வாகவே இருக்கின்றேன். அப்படித்தானே மயூரன் ?


கீதாக்காவின் என்றாவது ஒரு நாள் நூல் அகநாழிகை பதிப்பகம் 182 பக்கங்களோடு அச்சாக்கினாலும் அவர் சென்னையில் வசிக்காத காரணத்தினால் வெளியிடு என எந்த விழாவுமில்லாமல் வெளி வந்ததனாலும் அவரிடம் இருக்கும் கூச்ச சுபாவத்தினாலும் அதிக விளம்பரமின்றி பேசப்படாமல் இருக்கிறது.. எத்துணை கல்வியில் மேம்பட்டிருந்தாலும், அறிவில் நிறைந்திருந்தாலும், இலக்கியங்களில் ஊறித் திளைந்திருந்தாலும், சாதாரண குடும்பப்பெண்மணியாக வீட்டுத்தலைவியாக பிள்ளைகளின் வளர்ப்பில், கல்வியில் பாதுகாப்பில் அதிக நேரம் செலவளிக்க வேண்டிய நிர்பந்தத்தினை ஒரு பெண்ணாய் நானும் அறிவேன். அவ்வகையில் கீதாக்காவுக்குள் மறைந்திருப்பதை வெளிக்கொண்டு வர இதுவரை தகுந்த களம் அமையாதிருபப்தை இட்டு எனக்குள் ஆழ்ந்த வருத்தம் உண்டு. பிள்ளைகளின் கற்றலின் பின்னனியில் அவரின் அர்ப்பணிப்பு இருப்பதனால் அவரால் அதிகமாய் இப்போதெல்லாம் எழுத முடிவதில்லை என நினைக்கின்றேன்.இத்தனைக்கும் அக்கா எழுத்து பாராம்பரியமிக்க குடும்பத்திலிருந்து வந்திருக்கின்றார். போட்டியும் பொறாமையும், பெருமையுமான இவ்வுலகில் நம்மை நிலை நாட்டவும் போராட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றோம்.

கீதாக்கா தன் முதல் நூலாக தன் சொந்த எழுத்தினை வெளியிட்டிருக்கலாம் எனும் ஆதங்கமும் எனக்குள் உண்டு. தமிழ் மன்றத்தில் அவரின் சொந்த கதைகள், நாவல்கள், தொடர்கள், கவிதைகள் கொட்டிக்கிடப்பதை நான் நன்கறிவேன் எனும் போது அவைகளை தொகுத்து பதிவாக்கி முதல் நூலாக வெளியிடாமல் மிகவும் சிரமப்பட்டு மொழிபெயர்த்து நூலாக்கி இருக்கின்றார். மொழிபெயர்ப்பு நூல் என்பது அத்தனை இலகுவானதல்ல என்பதை என்னுடைய சங்ககால பூக்கள் எனும் குறிஞ்சுப்பாட்டில் பூக்களை குறித்த பகிர்வுக்கான் தேடலின் போது ஜேர்மன், ஆங்கில தளங்களில் பூக்களின் தாவரவியல் பெயரை மட்டும் வைத்து விபரம் தேடி மொழி பெயர்க்க ஆன சிரமத்தினை நான் நன்குணர்ந்திருக்கின்றேன். அவ்வகையில் அக்காவின் நூல் இன்னும் பேசப்பட வேண்டும். அவுஸ்ரேலிய புகழ் பெற்ற எழுத்தாளரின் கதைகளோடு நூறாண்டுகள் முந்தைய சரித்திர சம்பவங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும் கதைகளை நாம் அனைவரும் படித்தறிய வேண்டும்.

அக்காவின் என்றாவது ஒரு நாள் அக நாழிகை பதிப்பக நூல் சில நூறுகளில் தான் வெளி வந்திருக்கின்றது. அவரை அறிந்த தமிழ் மன்ற, முத்தமிழ் மன்ற வலையுலக உறவுகள் ஆளுக்கொரு புத்தகம் ஆர்டர் செய்து வாங்கி அவரை ஊக்கப்படுத்தினால் தான் அவர் மேன் மேலும் தம் திறமைகளை அச்சில் கொண்டு சேர்க்க முடியும். அக்காவுடன் தொடர்பு கொண்டு நூலை பெறும் வழிகளை கேளுங்கள் நட்பூக்களே! இனி வரும் நாட்களில் அவரின் நூல்கள் மேன் மேலும் வெளிவர அனைவரும் உந்து சக்தியாக இருங்கள்.

🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈 🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈 🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

நான் வலையுலகம் வந்து ஒருவருடம் தான் கடந்து போனதா என உணர முடியாமல் வலையுலக ஜம்பவான்கள் மட்டுமல்ல பல எழுத்தாளர்களின் , இலக்கிய ஆர்வலர்களின் நட்பை பெறவும் களம் அமைத்து தன் எழுத்தில் எங்கேனும் ஓரிடத்தில் என் பெயரை நிலைக்க செய்யும் வார்த்தைகளின் வசந்த ஊஞ்சலாடும் அன்பு மனசு குமார் தன் கடந்த வருட நினைவுப் பதிவில் என்னையும் நினைவு கூர்ந்திருந்தது கண்டு கோடி கோடி பணம் கொட்டினாலும் இந்த அன்புக்கு ஈடாகுமா என கேட்க தோன்றியது.

பேஸ்புக்கிலும் , வலையுலகிலும் தம் முகம் மறைந்து சுயம் தொலைந்த்த எழுத்தாளர்களாய் பலர் இருக்க குமாரின் நட்பினால் என் எழுத்தும் வாசிப்பும் விரிவடைந்தது என்பேன். கூடவே சேனைத்தமிழ் உலாவில் எனக்கு கிடைத்த தம்பிகளின் அன்பு ஊக்கமூட்டல், அக்காவெனும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரும் அழைப்புக்கள் அனைத்துமே என்னை மெருகேற்றிக்கொண்டே இருக்கின்றது..

பேஸ்புக்கில் அறிமுகமாக சில தடவைகள் சில வார்த்தைகள் மட்டும் உரையாடிபிருந்த தோழி Abirami Umashankar அபிராமி கருத்திலும் என் எழுத்துக்கள் பட்டிருப்பதை அவரின் வியக்கவைத்த பதிவர்கள் தொகுப்பில் கண்டுணர்ந்த போது மெய் சிலிர்த்ததென்பேன். குறைகளை மட்டும் குடம் குடமாய் அள்ளி தலையில் ஊற்ற தேடும் இவ்வுலகில் நிறையுணர்ந்து நிறைமதியாக பாராட்டிய அபிராமியும் கடந்த மாதமிருந்து நம் வலையுலக நட்பானார். அருமையான பாடகியும் எழுத்தாளருமாய் அன்பால் உருவான் சிற்பமோ இவர் என எண்ண வைக்கும் படி அம்மாவுக்கும் பெண்ணுக்குமான உறவில் என்னை அசத்தும் ரியல நாயகி இவரே. என் க(வி)தைகள் எனும் பெயரில் நம்முடன் இணைந்திருக்கின்றார். அவரையும் ஊக்கப்படுத்தி இன்னும் அதிகம் எழுத வையுங்கள்.


கடந்த வருடம் எனக்கு நல்ல வருடமாகவே கடந்திருக்கின்றது . மலேசியாவில் இருக்கும் ருபனின் எழுத்துப்படைப்புக்கள் ரூபன் மூலம் திருச்சியிலிருந்து வெளிவரும் இனிய நந்தவனம் செப்டம்பர் இதழை சுவிஸ் சிறப்பிதழாக வெளியிட்டு அதில் என் நேர்காணலை யும் கேட்டு பிரசுரித்திருந்தார்கள்.அதனூடாக சுவிஸிலிருக்கும் சில பல இலக்கிய ஆர்வலர் மத்தியில் நான் பேசுபொருளாகி இருக்கின்றேன். இனிய நந்தவன சிறப்பிதழை படித்து பலர் பாராட்டி இருந்தார்கள்.

பேஸ்புக்கில் நேரம் வீணாகின்றது, பயன் இல்லை. வெற்று அரட்டை தான் என கூச்சல்களுக்கிடையில் சரித்திர கதைகளை படிக்கவென நித்யாகுமார், தமிழ்வாசி பிரகாஷ், தினேஷ்குமார் என சிறு குழு ஆரோக்கியமானதாக உருவாகி திரு கணேஷ்பாலா சாரும் அப்பப்போ தான் படித்தவைகளை கருத்திட்டு வரலாற்றின் இன்னொரு பக்கத்தினை பலர் ஆர்வமாக படிக்கவும் விமர்சிக்கவும் தொடங்கியதும் வாசிக்கும் ஆர்வத்தினை மேம்படுத்தியதும் ஆரோக்கியமான் விவாதங்கள் விமர்சனங்களுக்கும் அமைவாகியது என்பேன்.

வலையுலக ஜம்பவான்கள் புதுக்கோட்டை டீமின் 2015 ஆவது ஆண்டில் வலைபுலக திருவிழா என்னை வலைப்பதிவராக்க தூண்டியது எனில் அவர்களின் நட்பை பெறயும் முத்து நிலவன் ஐயாவின் அறிமுகம் பெறவும் என்னைக்குறித்தும் என் எழுத்துக்குறித்தும் பலருக்கு அறிமுகப்படுத்திய வகையில் நான் ஒன்று சொல்வேன் மீரா செல்வக்குமார் சாரும் என் நன்றிக்குரியவர்களாகின்றார்கள்.

கடந்த வருட நட்புலகில் என்னுள்: நுழைந்து கடல் கடந்திருந்தாலும் எழுத்தில் அருகாகியோராய்...உரிமையாய் என்னை கிண்டல் செய்வதை தாம் வேண்டிய வரமாய் கொண்ட அவர்கள் உண்மைகள் மதுரைத்தமிழனும், எல்லோரிடமிருந்து தூரமாக இருப்பதாக தன் எழுத்துக்களால் காட்டிக்கொள்ளும் ரிலாக்ஸ் பிளீஸ் வருணும், அட போட வைப்பார்கள். இவர்களுடனான என் பதிவுகளின் பின்னூட்ட உரையாடல் கண்டு என் இன்பாக்சில் வந்த சிலர் உங்களுக்கு இவர்கள் முன்னரே அறிமுகமோ என கேட்டதும் உண்டு. அதென்னமோ ஆயிரம் பேருடன் அறிமுகமிருந்தாலும் ஒரிருவர் எழுத்தில் மட்டுமே உரிமை உணர்வோடு கருத்திட முடிகின்றதென்பது ஆச்சரியமான உண்மை தான்.

இதில் நான் முக்கியமாக குறிப்பிட வேண்டியவர்கள் பட்டியலில் கில்லர்ஜி சார். தில்லையகத்து துளசிஅண்ணா, கீதாக்கா, எங்கள்பிளாக் , வெங்கட் நாகராஜ் அண்ணா, தேன் மதுரம் கிரேஷ், ஏஞ்சலோ ஏஞ்சல், தனபாலன் அண்ணா, என இன்னும் பலர் இருக்கின்றார்கள். ஒவ்வொருவரையும் குறித்து அடுத்தடுத்த பதிவுகளில் எழுதலாம் என இருக்கின்றேன்.

இந்தப்பதிவையே மதுரைத்தமிழன் சுவிஸிலிருந்து அமேரிக்காவுக்கு ரோடு போட்டேன் என கேலி செய்வார் என்பது நிச்சயம் எனினும் கிடைக்கும் நேரத்தில் அத்தனையும் எழுத வேண்டும் எனும் ஆர்வத்தில் கொஞ்சூண்டு நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்டு போனது,

மன்னீச்ச்ச்ச்ச்ச்ச்ச்சூ படிச்ச்ச்ச்ச்ச்ச்சூ கருத்திடுக.

அனைவருக்கும் அன்பின் புதுவருட நல் வாழ்த்துகள்
.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻