28 பிப்ரவரி 2019

இந்தியா/ பாக்கிஸ்தான் பால்கோட் தாக்குதலை தொடர்ந்து இன்ரான் கான் வெளியிட்ட காணொளியின் தமிழ்மொழிபெயர்ப்பு

இந்தியா/ பாக்கிஸ்தான் பால்கோட் தாக்குதலை தொடர்ந்து இன்ரான் கான் வெளியிட்ட காணொளியின் தமிழ்மொழிபெயர்ப்பு




🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘
தீவிரவாதத்தால் நாங்கள் இதுவரை 70 ஆயிரம் பேரை இழந்து உள்ளோம் !
ஓர் உயிர் போவதால் அந்த குடும்பத்திற்கு எத்தனை இழப்பு..., காயம் பட்டவர்களுக்கு எத்தனை நாள் மருத்துவமனை அலைக்கழிப்பு என்பதை நன்கு அறிவோம்.

புல்வாமா எனும் துயர சம்பவத்திற்கு பிறகு இரு நாடுகளிடையே அமைதி என்பது மிகவும் அவசியம் ஆகிறது !
இந்த விடயத்தில் இந்தியாவுடன் முழு ஒத்துழைப்பு நல்குவதற்கு தாயாராகவே உள்ளோம் !
அதில் துளி அளவும் சந்தேகம் வேண்டாம் !
ஆனால் இந்தியா அப்படி இணக்கமாக நடக்குமா என தெரியவில்லை! (தேர்தலை மனதில் வைத்து சொல்கிறார் போலும்)

ஒருவேளை இந்தியா இதை ஆயுதம் மூலமே பேசுவோம் எனக் கூறினால், அதற்கும் நாங்கள் தயாராகவே உள்ளோம் !
காரணம், எந்த ஒரு நாடும் தன் இறையாண்மை-யை ஒருபோதும் எதற்காகவும் விட்டுக்கொடுக்காது !

நேற்று காலையில் இந்தியா தாக்குதல் நடத்திய உடனே நாம் திருப்பி தாக்குதல் நடத்த வில்லை ,. முழுமையாக என்ன நடந்தது என தெரியாமல் ஒரு செயலில் இறங்குவது என் பொறுப்புக்கு அழகல்ல!
எனவே உயர் அதிகாரிகள் உடன் பேசினோம்!
என்ன சேதம் என்று ஆய்வு செய்தோம் .., அதன் பின் இன்று PAK விமானத்தை அனுப்பினோம்., அதுவும் எந்த தாக்குதலும் நடத்தாமல் திரும்பி வந்தோம் !

இந்தியா உள்ளே வந்தால் நாங்களும் உள்ளே வருவோம் என்பதை காட்டுவதற்க்க்கா மட்டுமே அதை செய்தோம் !
இந்தியாவின் இரு விமானங்கள் காலையில் உள்ளே வந்தது..., அதை சுட்டு வீழ்த்தி உள்ளோம்!
போர் அறிவு உள்ள அனைவருக்கும் தெரியும்.., எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என்று!

முதல் உலகப்போர் சில வாரங்களில் முடிந்து இருக்க வேண்டியது... ஆனால் 6 வருடங்கள் தொடர்ந்தது !
War On Terrorism என்ற பெயரில் அமெரிக்கா தொடங்கிய போர்கள் 17 வருடம் தாண்டியும் இன்றும் முடியவில்லை!

நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்..., 
உங்களிடம் இருக்கும் அதே ஆயுதம் தான் எங்களிடமும் உள்ளது !
இந்த போர் தொடங்கி விட்டால் எப்போது முடியும் என்பது மோதிக்கும் தெரியாது எனக்கும் தெரியாது !

I once again invite you (India) :- we are ready for dialogue … புல்வாமா எத்தனை பெரிய பாதிப்பை உருவாக்கி இருக்கிறது என்பதை நான் உணர்ந்துள்ளேன் !
அதை பேச்சு வார்த்தை மூலமே முடிவுக்கு கொண்டு வர முடியும்!
வாருங்கள் அமர்ந்து பேசுவோம் பிரச்சனையை தீர்ப்போம்...!

- இம்ரான் கான். பாகிஸ்தான், பிரதமர்
Inbox Mesage


சத்தமாக சொல்லுவோம், யுத்தம் வேண்டாம்.



நாட்டினுள் நடந்து முடிந்த இரு இனங்களுக்கிடையிலான் யுத்தமும் இரு நாடுகளுக்கிடையிலான் யுத்தமும் ஒரே பாதிப்பை தரக்கூடியதா?
ஆசியாக்கண்டத்தின் இரு நாடுகளுக்குள் போர் பிரகடனப்படுத்தப்பட்டால் இலங்கையின் வாழும் மக்களில் நிலை என்ன?

அண்டை நாடுகளின் போர்ச்சூழல் நாம் கைகொட்டி கேலி பேசி, வன்மம் தீர்க்கும் நிலையிலா இருக்கின்றது?

இந்தியா / பாகிஸ்தான் யுத்தம் ஆரம்பித்தால் வட இந்திய மாநிலங்களை போல் தென் இந்திய மாநிலங்கள் அன்றாக வாழ்க்கை சூழல் மாற்றங்கள், பொருளாதார நெருக்கடிகளை கொண்டு வரலாம் என்றாலும் நேரடிப்பாதிப்பை உணர சற்று காலமெடுக்கலாம்.
உலக அமைப்பில் இலங்கையின் அமைவிடம் ஆசியாவின் ஏனைய நாடுகளை கண்காணிக்கும் கேத்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனால் இலங்கையும் அங்கே வாழும் மக்களும் யுத்தப்பிரதேச மக்களை போல் நேரடி பாதிப்பை அடைவார்கள்

இந்தியா/ பாகிஸ்தான் போர் என்பது 
இரு நாடு மட்டுமல்ல இரு மதங்களுக்கிடையிலான போராக உலக நாடுகளை இருகூறாக்கும்.
ரஷ்யாவும்,அமெரிக்காவும்,சமாதானம்,சமாதானம் எனும் வெள்ளை கொடியை ஆட்டிக்கொண்டே தங்கள் ஆயுதப்பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பார்கள்.அடி,வெட்டு,குத்து என இருபக்கமும் நின்று ஏற்றி,இறக்கியும் விடுவார்கள் அப்பாவிகள் பலியாக்கப்படுவார்கள். 
உயிர் உடமை சேதாரம் பல மடங்காக இருக்கும். உலகின் யுத்தத்துக்கான சட்ட திட்டங்கள், கட்டுப்பாடுகள் அனைத்தும் மீறப்படும்.

இரண்டு நாடுகளும் தம் கட்டுப்பாட்டை விட்டு உலகத்தின் ம்ஃவியாக்கள் கைக்குள் சிக்கி விடுவார்கள். இதை தான் இம்ரான்கானும் தன் உரையில் சொல்லி இருக்கின்றார்.
ஐரோப்பிய நாடுகள் வேடிக்கை பார்க்க, சீனாவும் ஜப்பானும், கிடைத்த வரை இலாபம் என பிடுங்க பார்க்கும்.
ஈழத்தில் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டபோது பேச்சுவார்த்தை எனும் பெயரில் ஐ,நா எனும் பூனையை நடுவராக்கி அதன் கையில் சமாதானம் எனும் கேக் துண்டை கொடுத்து உனக்கு, எனக்கு என வேடிக்கை காட்டி,தட்டித்தடவி நம்பிக்கை தந்து நட்டாற்றில் இல்லை நடுக்கடலில் தள்ளி விட்டது போல இரு நாடுகளுக்கும் தூதுப்புறாக்களை அனுப்பி சமாதானப்பேச்சுவார்த்தையும், யுத்த தளபாடங்களின் விலைப்பேரங்களும் அடுத்தடுத்த மேசையில் விவாதிப்பர்கள்.
கடந்த முப்பதாண்டுகளாகவே மத்திய கிழக்கு நாடுகளில் போர் மூளும் அபாயச் சூழல் ஏற்படும் போதெல்லாம் உலகலாவிய ரிதியில் முக்கியமாக ஐரோப்பாவில் விமான சேவைகளை ரத்தாக்கும் காரணத்தை ஆராய்ந்துள்ளோமா? இனி அறிந்து கொள்ளலாம்.. விமானப்போக்குவரத்துகள் தடைப்பட்டால் கப்பல் போக்குவரத்துக்களுக்கான இலகு தளமாக இலங்கை இருக்கும்.
🔘யுத்தம் வந்தால் இராணுவம் எங்கோ சண்டை பிடிக்கின்றது,செத்து மடிகின்றது என பேஸ்புக் ஸ்டேட் பார்த்து ஆங்கிரி ரியாக்‌ஷனை தட்டி விட்டு சினிமா பார்க்க முடியாது.
🔘யுத்தம் வந்தால் அது மனிதர்கள் நேருக்கு நேர் மோதிடும் யுத்தமாக இராது. உலகின் சட்டங்களிலிருந்து மறைத்தும், ஒளித்தும் வைத்திருக்கும் அணு ஆயுதங்களுடனான யுத்தமாகவே இருக்கும்.
🔘வானம் சண்டை போடும், மேகம் அழுது வடியும். 
நம்ம தலைக்கு மேல் எந்த நொடியும் குண்டு விழும் எனும் நடுக்கத்தோடு வாழும் படி அணு ஆயுதங்களை பயன் படுத்தும் யுத்தமாகவே இருக்கும். அக்கினி பற்றி எரியும்.

நாட்டின் தலைவர்களும், முக்கியமானவர்களும், செல்வந்தர்களும் தம்மை பாதுகாத்து கொள்வார். இலங்கையில் கூட பல சிங்கள அரசியல் வாதிகள் தம் வீடுகளுக்கு கீழ் பாதுகாப்பான நிலவறைகளை முன்னேற்பாடாக கட்டி வைத்திருப்பதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன.
🔘அப்பாவி பொதுமக்கள் தான் பாதிக்கபப்டுவார்கள். கொத்துகொத்தாய் செத்து வீழ்வார்கள். அங்கவீனர் ஆவார்கள். 40 வீரர்களுக்காக தேசபக்தி எனும் பெயரில் போரினை நியாயப்படுத்துவோர் எனவெல்லாம் பாகுபாடு பார்க்காது அனைவர் மேலும் குண்டு விழும். இனம் மதம், ஜாதி பேதமெல்லாம் பார்த்து அணுகுண்டு வீசப்படாது. மேலிருந்து விழும் குண்டுக்கு பேதமெல்லாம் இல்லை. மொழியும் இல்லை.
இந்தியா வானிலிருந்து குண்டு வீசி 300 பேரை கொன்றதாக சொன்னதை கேட்டு கெக்கலிக்காதீர்கள். அதே குண்டு உங்கள் மேல் அதே வானிலிருந்தும் போடப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
⁉️ஆசியாவில் யுத்தம் மூண்டால் முழு இலங்கையும் ஆயுதக்களஞ்சியமாகிப்போகும்.
இலங்கையின் பல பாகங்களையும் வல்லரசு நாடுகள் சடுதியில் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும். ஏற்கனவே அமெரிக்காவும், சைனாவும் இலங்கையில் தம் இருப்பை ஸ்திரமாக்கி வீட்டார்கள். கடலோரப்பிரதேசங்களை விட்டு இனி அவர்கள் அசையப்போவதே இல்லை.இந்தியாவும் அபிவிருத்தி எனும் பெயரில் தானம் வார்த்து தன் இருப்பை தக்க வைக்க முயற்சிக்கின்றது. கண் மூடி கண் திறக்க முன் நாம் அனைத்தையும் இழந்திருப்போம்.
முதலாம், இரண்டாம், உலக மகா யுத்த காலத்தில் எந்த பக்கமும் சாராமல் இருந்தும் சுவிஸ் நாடு எப்படி அனைத்து நாடுகளாலும் பாதிக்கப்பட்டதோ அதை விட 100 மடங்கு மோசமாக இலங்கையும் இலங்கை மககளும் ஆசியாவில் போர் ஏற்பட்டால் பாதிக்கப்படுவார்கள். இன்றிருக்கும் பாதுகாப்பு சூழல் கூட கேள்விக்குறி ஆகும், நிம்மதி பறி போகும். பதட்டம் நிலைக்கும்.
முள்ளி வாய்க்கால் யுத்தத்தில் வன்னிவாழ் மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டார்கள் என்றாலும் முழு இலங்கையும் பொருளாதார ரிதியிலான பின்னோட்டத்தையும், 40 ஆண்டுகள் தொடர்ந்த யுத்தத்தின் விளைவுகளையும் அனுபவித்து கொண்டு தான் இருக்கின்றது.
மீண்டும் நம் மக்களை அடிமைப்படுத்தும் யுத்தம் தேவையா?
தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் என்பது போல் 
கலை,கல்வி மட்டுமலல் அன்றாட வாழ்வில் மாற்றங்கள் அனைத்தும் தமிழ நாட்டினூடாகவே நாம் பின்பற்றுகின்றோம். இல்லை என சொல்லி நம்மை நாம் ஏமாற்றுகின்றோம்.

இந்தியாவின் வீழ்ச்சியும் எழுச்சியும் இலங்கையை அசைக்கும்.
இனி ஒரு யுத்தம் தேவையா? சிந்திப்போம்.
தயவு செய்து சமூக ஆர்வலர்களும்,ஆன்றோர்களும் தம் கருத்தினை பகிருங்கள்.
இளையோருக்கு உணர்த்தும் படியாக கருத்துக்களை முன் வையுங்கள். 
வழி நடத்துங்கள்.


ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்
இனி ஒரு போர் வேண்டாம்.




26 பிப்ரவரி 2019

#எங்கே_முகிலன்?

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

காதால் கேட்பதும் பொய், கண்ணால் பார்ப்பதும் பொய்,தீர விசாரித்து அறிவதுவே மெய் என்பார்கள்.
எந்தச்செயலையும் செயல்படுத்துவதற்கு முன்பு, அதற்கான சூழல்,தேவை,பயன்,நன்மை,தீமை என ஆராய்ந்து அறிந்து செயல்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.
*காலமுணர்ந்து உடனடிச்செயல்பாடு 
*ஆராய்ந்து அறிந்த பின் நீண்ட கால செயல்பாடு

எனும் இரண்டில் எந்த செயல்பாடு எமதாக இருக்க வேண்டும் என்பதை அந்த சம்பவம் சார்ந்த கடந்தகால,நிகழ்கால,எதிர்கால முக்கியத்துவம் கருதி முடிவெடுக்கப்பட வேண்டும்.
“ஏற்ற காலத்தில் சொன்ன வார்த்தை, எவ்வளவு நல்லது” (நீதி. 15:23) தேவையான நேரத்தில் எமது செயல்பாடுகள் மிகவும் முக்கியமானது.
தாமதப்படுத்தப்படும் நீதியும், செயல்பாடுகளும் உயிர்க்கொலைகளுக்க்கு நிகரானதே?
பொதுப்பணியில் ஈடுபட்டிருக்கும் மனிதர்கள் குறித்த விமர்சனங்கள் வரும் போது அதன் சாதக, பாதகங்களையும், நமக்கு நாமே ஆராய்ந்து அறிந்து முடிவெடுப்பதே நல்லது.
அனைத்து செயல்பாடுகளின் பின்னாலும் விமர்சனம் இருக்கும். குற்றங்குறைகளும்,அரசியலும் கரைந்தே இரையும்.
இருக்கட்டுமே❗️ 
100 வீதம் அனைத்திலும் நிறைந்தவர் யார்?

குற்றம் குறைகள் இல்லை எனில் அவன் மனிதனல்ல மகான், மனிதர்களில் மகான்களை தேடுவதனால் நமக்கு நடக்க கூடிய நன்மை என்ன?
கடந்த கால வரலாறுகளை ஆராய்ந்து பார்த்தோமானால் சமுகம் சார்ந்த மக்கள் தேவைகளுக்காக தம்மை அர்ப்பணித்த பலரின் செயல்பாடுகளை அவர்களின் சுய ஒழுக்கத்தை கேள்விக்குறியாக்குவதன் மூலம் தடைசெய்து ஒடுக்கி அடக்கி இருப்பார்கள். மக்கள் ஆதரவை இழக்க வைத்திருப்பார்கள்.
மக்களுக்கான குரல் கொடுப்பவரின் குரல் வளையை நசுக்க எதிராளிகள் கையாளும் மிகவும் கேவலமான வழி முறை இதுவெனலாம்,
1.முகிலன் என்பவர் யார்? அவரின் கடந்த கால வாழ்க்கை எப்படியானது? என்ன பணியில் இருந்தார்? தன் சொந்தப் பணியை விட்டு மக்கள் தேவைகளுக்காக செயல்ப்படுவது பஞ்சு மெத்தை வாழ்க்கையை தரும் என எதிர்பார்த்திருப்பாரா?
2. அவர் தானாக காணாமல் போனாரா?
3. காணாமல் போக வைக்கப்பட்டாரா?

4. தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை சம்பவங்களில் நடத்தப்பட்ட அரசு சார்பான விதி மீறல்களை ஆவணமாக்கி, அதை வெளியிட்ட பின் ஒளிந்து கொள்வது தமது அத்தனைகால உழைப்பினையும் விரயமாக்கும் என ஆராய்ந்துணராமல் செயல்ப்பட்டிருப்பாரா?

5. அவரின் குடும்ப வாழ்க்கை, சொந்த சுய வாழ்க்கைப்பிரச்சனையில் மன உளைச்சலினால்  ஒதுங்கி ஓய்வெடுக்கும் முடிவை எடுக்க வேண்டுமானால் அரசுக்கும்,அதிகாரங்களுக்கும் எதிரான ஆவணங்களையும் தேடி சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் என்ன? அதை செய்யாமலே இருந்திருக்கலாமே?

தன்னை தான் மறைத்துக்கொண்டு கண்ணாமூச்சி விளையாட்டின் மூலம் ஸ்டெர்லைட் பிரச்சனையை மக்களுக்கு உணர்த்தி பேசு பொருளாக்கலாம் என்பது சிறு பிள்ளைத்தனமான செயல்பாடென்பதோடு அவர் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும் என புரிந்து கொள்ள முடியாதவரா?
பொது மக்கள் கைப்பாவைகளா?

🔘முட்களும், கற்களும் மேடுகளும் நிறைந்த சமூகப்பணியில் சுற்றுசூழலை பாதுகாக்க போராடும் முக்கிய களத்தில் செயல்படும் மனிதஎ தானாக திடிரென மாயமாகிப்போனால் அது வரையான செயல்பாடுகள் அனைத்தும் விழலுக்கிறைத்த நீராகிப்போய் விடும் என்பதை புரியாமல் செயல்படக்கூடியவரா?

வழமை போல் இவர் மீதும், பெண், மண் என சிறு பிள்ளைத்தனமான குற்றத்தாட்டுக்களை வைத்து பிரச்சனையில் தீவிரத்தை திசை திருப்பி விடும் பணியில் அரசும், அதிகாரங்களும் ஒருமுனைப்பாக செயல்படும் போது, அரசின் அதிகாரத்தையும், செல்வாக்கையும், முகிலனையும் ஒரே தராசில் நிறுத்துவது எது அல்லது எவர்?

☑️அதிகாரத்தையும், செல்வாக்கையும் தம் வசம் வைத்திருப்போருடன் இவை எதுவுமே இல்லாத சமானிய மனிதனின் உயிரை பணயம் வைத்து , நீதி, நியாயம் என போராடும் போது ஆராய்ந்து அறிந்தே செயல்படுகின்றோம் என்று ஒதுங்கி நின்று ஓரமாய் வேடிக்கை பார்ப்பதனால் நாம் அடையும் நன்மை என்னவாக இருக்கும்?

☑️சந்தர்ப்ப சூழல் அதிகாரங்களுக்கு சாதகமாக இருக்கும் போது 100 ல் பத்து வீதம் முகிலன் கடத்தப்பட்டு, அவரின் உயிருக்கு ஊறுகள் ஏதேனும் ஏற்படுத்தப்பட்டிருந்தால் நமது ஆராய்வுகளையும், சந்தேகங்களையும் எங்கே போய் கொட்டுவோம்.
⁉️எதையெதையோவெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு நம்புகின்றோம், பரப்புகின்றோம். மக்கள் பிரச்சனைகள் என வரும் போது மட்டும் அதை சந்தேகத்துடன் நோக்குகின்றோம். மௌனமாகி கடக்கின்றோம்? கேள்விகளை முன் வைக்கின்றோம்.

கேள்வி கேட்க வேண்டியவர்களிடம் கேட்கப்படுவதில்லை என்பதும் மகக்ளுக்காக போராடுவோரை மக்கள் முன் குற்றவாளிகளாக்கி, நமக்கான ஆளுமைகளை ஒடுக்கி, உளவியல் ரிதியில் பயத்தை, தோல்வியை உருவாக்கும் சூழ்ச்சிக்கு நம்மை அறியாமல் உதவி புரிகின்றோம் என்பதும் நாம் உணர்ந்தே ஆக வேண்டும்.

மனிதர்கள் எல்லோருக்குள்ளும் ஏதோ ஒரு பலவீனம் இருக்கும். அவன் சொந்த வாழ்க்கையில் எப்படிப்பட்டவனாகவும் இருக்கட்டும். நமக்கென்ன?

✍️பொதுமக்களுக்கான பணியில் அவன் செயல்பாடு எப்படி இருந்தது?
☑️மது,மாது,பொருள், புகழ் என எதற்குமே அசையாத மனிதர்கள் எவரும் இவ்வுலகில் இலர் எனும் போது மக்களுக்காக போராடிய ஒருவனின் கடந்த கால செயல்பாடுகளை ஆராய்ந்து நிகழ்கால அவசியம், அவசரம் உணர்ந்து செயல்படுவதே அறிவுடையோர் செய்யக்கூடியது.
அவன் சொன்னான், இவன் சொன்னான் என எவன் எவனோ சொல்வதை நம்பும் நமக்கு அவன் என்னவானான் எனும் தேடலை நம்ப முடியாமல் போவது ஏன்?
கறை,திரை இல்லாத மனிதர்களை தேடுவதை விட நம் முன் இருக்கும் ஆக்கிரமிப்புக்கள், அடிமைப்படுத்தல் எனும் கடலின் கரையை அடைவது எப்படி என தேடுவதே முக்கியமாக இருக்கின்றது
பொதுப்பணிகாக தம்மை அர்ப்பணிப்போரின் சுய வாழ்க்கையை விமர்சிக்காமல், மக்களை அடிமைப்படுத்த முயற்சிக்கும் அதிகாரம், ஆணவங்களோடான போராட்டத்திலிருக்கும் செயல்பாடுகளையும்,அதன் முக்கியத்துவத்தையும், விளைவுகளையும் புரிந்துணர்வோடும் அவசர அவசியம் புரிந்தும் அணுக வேண்டும்.
நாளை நாளை என நாளை கடத்துவதும், கால நேரம் சூழல் புரிந்து செயல்படாமல் மதில் மேல் பூனைகளாக ஆராய்ந்து பார்த்து செயல்பட போகின்றோம் என சொல்லி வேடிக்கை பார்ப்பதும், காலம் கடந்த நியாயங்களும், நீதிகளும் எவருக்கும் பயன் தரப்போவதே இல்லை.
தமக்கென சுய சிந்தனை தெளிவு இல்லாமல் அடுத்தவர் பேச்சைக்கேட்டு அமைதியாக கடப்பவர்கள் சமூகத்தின் நன்மைகளை குறித்து சிந்திப்பவர்கள் அல்லர்.
நம் எதிராளி வேகம் மட்டுமலல் விவேகமாகவும் செயல்படுகின்றான் என்பதை நாம் இன்னும் உணரவே இல்லை
“ பரிசுத்தவான் என தன்னை சொல்பவன் இவன் மேல் முதலாவது கல்லெறியக்கடவன்

05 பிப்ரவரி 2019

அம்மா...!

அம்மா...!
அம்மா எனும் பெண், அப்பா எனும் ஆண் உறவை முதலில்  அறிமுகப்படுத்துகின்றாள்.
அம்மா என்பவள் அப்பாவை எப்படி உருவகப்படுத்துகின்றாளோ அப்படி தான் குழந்தைகள் மனதில் ஆண் எனும் அப்பாவினை குறித்த பிம்பம் பதிவாகின்றது. அதே போல் அண்ணன், தம்பி என எந்த உறவானாலும் ஒரு பெண்குழந்தைக்கு தாய் தான் முதல் ஆசான்.
மாதா,பிதா,குரு தெய்வம். என தெய்வத்தை கடைசியில் வைத்து தாயை முதன்மைப்படுத்தும் சமூகம் எங்கள் தமிழ்ச்சமூகம்.
அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் 
ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது ஔவையார் வாக்கு.

உன் தாயையும் தகப்பனையும் கனப்படுத்துவாயாக என்கின்றது கிறிஸ்தவர்களின் வேத நூலான பைபிள்.
உன் தாய்க்கு நீ செய்யும் பணிவிடை நீ சொர்க்கம் செல்வதற்கான அனுமதிச்சீட்டு என்கின்றது குரான்.
எல்லா மத நம்பிக்கைகளுமே அன்னை எனும் தாய்மையை மதிக்க சொல்கின்றன.
அன்னை எனும் பெண் தான் ஆண் குழந்தைக்கோ பெண் குழந்தைக்கோ முதல் ஆதர்ச நாயகி, வழிகாட்டி,ஆசான்,கடவுள் எல்லாமே அன்னை தான். குறைந்தது 3 வயது வரையிலேனும் அன்னை மட்டுமே ஒரு குழந்தைக்கு நெருக்கமானவளாக இருக்கின்றாள். வளர்ந்து விட்டாலும் பல ஆண் குழந்தைகள் அன்னையை சார்ந்தே வாழ பழகி இருக்கின்றார்கள். அல்லது அப்படி பழக்கப்ப்டுத்தப்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.
பெண் குழந்தைக்கு அப்பா என்பவன் ஆதர்ச நாயகனாக, வழிகாட்டியான,முதல் தோழனாக அறிமுகமாக்கப்படுவதும் அன்னை எனும் பெண்ணினால் தான்.
ஆனால் காலம் சுழல்கின்றது. பெ|ண் என்பவள் சுயமானவள், தனித்துவமானவள். எவளும் அவளுக்கு இணையில்லை என்பதையும் பெண்ணாலே அனைத்தையும் ஆக்கவும் அழிக்கவும் முடியும் என்பதையும் அவள் நிருபித்து கொண்டிருக்கின்றாள்.
பெண்ணியம் எனும் பெயரில் ஆண்களை குறித்த பிரச்சாரமும், விமர்சனமும் ஆண்களுக்கு எதிரானதொரு சமுகத்தை உருவாக்கி கொண்டிருப்பதை போல் ஆண் குழந்தைகள் மனதிலும் ஆண் என்பவனைக்குறித்த தவறான பிம்பம் அதே அன்னையினால் உருவாக்கபப்டுமானால் எமது சமுகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என என்றேனும் சிந்தித்திருக்கின்றோமா?
தமிழச்சமூகத்தின் கலாச்சாரம் சார்ந்த பண்பாட்டை காப்பதிலும் பெண்களுக்கான பங்கு அளப்பரியது. 
தொன்மை மிக்க தமிழர் வரலாறு பெண்ணை அடிமைப்படுத்தவில்லை.

அவள் அடிமைப்படுத்தப்பட்டதான உளவியல் தாக்கத்தை உருவாக்கி அவளை கொண்டே அவளை அடிமைப்படுத்துவதில் வெற்றி கண்டிருக்கின்றது.
இனிவரும் காலத்தில் ஆண்களை குறித்த பெண்களுக்கான புரிதல்களும், 
ஆண்களுக்கு தம்மை குறித்த புரிதல்களும் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை இன்றைய தாய்மார்களான் பெண்கள் தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள்.

அதை பெண்களுக்கு உணர்த்த வேண்டிய கட்டாயம் ஆண்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. சமுக வலைத்தளங்களினூடாக பற்றவைக்கப்படும் நெருப்பை அணைத்து தாம் சாம்பலாகுவதா? சரித்திரமாகுவதா என்பதை ஆண்கள் முடிவெடுக்க வேண்டிய நிர்ப்பந்தந்தில் இருக்கின்றார்கள்.
நமது சமுதாயத்தில் ஆண்கள் நல்லவர்களாக இல்லை, வரதட்சனை கொடுமை செய்கின்றார்கள். மிதிக்கின்றார்கள் என்றால் அவனை அப்படி உருவாக்கியது யார் தவறு?
சமூக அக்கறை கொண்ட ஆணும், பெண்ணும் தம்மை சுய ஆராய்ச்சிசெய்து சீர்ப்படுத்தாவிட்டால் எமது எதிர்கால சந்ததிகளுக்கான தவறான முன்னுதாரணங்களாக நாம் வரலாற்றில் பதிவாக்கப்படுவோம்.
சிந்திப்போம்.

கௌசல்யா சக்தி

கௌசல்யா சக்தி
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதான ஆதாரங்களோடு 22 வயது இளம் பெண் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றாள்.
ஆணவப்படுகொலையினால் பாதிக்கப்பட்டவள் என்ற அடிப்படையில் அரசுப்பணியான இந்திய மத்திய அரசின் இராணுவப்பணிமனை வேலையிலிருந்து தகுந்த காரணங்களோடு பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றாள்.
நூணலும் தன் வாயினால் கெடும் என்பது போல் அவள் பேசிய பேச்சுக்களே ஆதாரமாக நீதியின் முன் வைக்கப்பட்டிருக்கின்றது?
இத்தனை சிறு வயதில் அந்த அப்பாவி பெண்ணுக்கு இந்த கொடுமையான அனுபவம் தேவை தானா?
கௌசல்யா சங்கரை காதலிக்கும் போது 17 வயது, சங்கருக்கு 21 வயது. சங்கர் கொலை செய்யப்பட்ட போது கௌசல்யாவுக்கு 18 வயது. சங்கருக்கு 22 வயது. எஞ்ஞினியரிங்க கல்லூரி மாணவன். படித்து பட்டம் பெற்று பெற்றோருக்கு பெருமை சேர்த்திருக்க வேண்டியவன்.
கௌசல்யா சக்தியை திருமணம் செய்த போது 21 வயது.
இளம் வயதில் எடுப்பார் கைப்பிள்ளையாக்கி அந்த பெண் வாழ்க்கையை நாசமாக்கும் உரிமையை யார் கொடுத்தது?
தோற்றத்தில் மாற்றத்தை உருவாக்கியோர் அவள் சிந்தனையில் விசத்தை விதைத்தும் அவளை தம் ஆதாயத்துக்கு பகடையாக பயன் படுத்துவதும் தவறென தட்டிக்கேட்காத எல்லோருமே இங்கே குற்றவாளிகளாக இருக்கின்றார்கள்.
முதல் தப்பே உணர்த்தப்படாத நிலையில் இரண்டாம் தப்பு செய்ய தூண்டுதலாக இருந்த இந்த சமூகத்தினை தட்டிக்கேட்க போவது யார்?
அவள் இரண்டாம் திருமண நேரம், வாழ்த்துப்பாமாலைகள் பாடியோரும், அக்கா, தங்கை, மகள் எனவெல்லாம் வாழ்த்தியோரும் என்ன பதில் வைத்திருக்கின்றார்கள்?
தவறுகள் உணர்த்தப்படாமல் தம் ஆதாயத்துக்காக ஒரு இளம் பெண் வாழ்க்கையை பாழாக்கி கேள்விக்குறியாக்கி நிற்கும் சமூகத்துக்கு என்ன தண்டனை கொடுக்க முடியும்?
நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசச்சொல்லி கொடுத்து யாரை தண்டிக்க நினைக்கின்றது இந்த சமூகம்?
பக்குவப்படாத 17 வயதில் வந்த காதலையும், அதனால் தொடர்ந்த ஆவணப்படுகொலையையும், தம் அரசியல் இலாபங்களுக்கும், சமூக சீரழிவுக்கும் பயன்படுத்தி ஆத்தி, ஊத்தி தேத்தி விட்டோர் என்ன சொல்ல போகின்றார்கள்?
பரிதாபத்துக்குரிய பெண் கௌசல்யா. அன்று அப்பாவியாக இருந்தவள். இன்று அகம்பாவம் கொண்டவளாக சித்தரிக்கப்படுவது ஏன்?
உண்மையில் இனித்தான் அவளுக்கு ஆதரவு தேவை. ஆனால் இதுவரை அவளை ஏத்தி விட்டோரெல்லாம் இனிமேல் விலகித்தான் செல்ல போகின்றார்கள்.
அவள் வாழ்க்கையில் இனிமேல் நடக்க இருக்கும் அத்தனைக்கும் அவளை தூக்கி பாராட்டி சீராட்டிய அத்தனை பேரும் காரணமாகி இருக்கின்றார்கள்.
மனச்சாட்சி இன்னும் செத்து போகாதிருந்தால் அவரவர் மனமே தம் தவறுகளை உணர்த்தும்.
அரசன் அன்றறுக்கலாம். தெய்வம் நின்று நிதானித்து ஒவ்வொன்றையும் அறுக்கும்.
நாளை எமது பிள்ளைகள் இதே நிலையில் இருந்தால் என்ன செய்வோம் என நினைத்து செயலாற்றுவோம். அடுத்தவர் பிள்ளை தப்பு செய்தால் ஆராத்தி கரைகக முன் அந்த பிள்ளைகள் எங்கள் சொந்த பிள்ளையாக இருந்தால் என்ன செய்வோம் என இனியேனும் சிந்திப்போம்.
பாவம் கௌசல்யா. பரிதாபத்துக்குரிய பெண்
கூடா நட்பு கேடாய் முடிந்திருக்கின்றது எனபதன் நிகழ் கால நிஜமாகி இருக்கின்றாள். இனியேனும் அவள் செய்த தவறுகள் அவளுக்கு உணர்த்தப்படட்டும்.

இனி அவள் வாழ்க்கை???


பேஸ்புக்கில் என் பக்கம் எழுதிய பதிவு.   கௌசல்யா சக்தி

இந்தச் சமுதாயம் என்ன அவ்ளோ நல்ல ஆண்களையா பெற்றிருக்கிறது❓

முதல் திருமணத்துக்கே வரதட்சனை வாங்குபவரிடத்தில் இரண்டாம் திருமணம் செய்பவரிடம் மட்டும் நேர்மையை அன்பை உண்மையை எப்படி எதிர்பார்க்க முடியும்.?
👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉👉
மேலே நான் குறித்திருப்பதை போல் பல பதிவுகள் ஆண் எதிர்ப்பெனும் பெயரில் தினமும் பகிரப்படுகின்றன. ஆண்கள் எல்லோருமே கெட்டவர்கள் என்பதை போன்ற தோற்றம் அதிகமாகுவதை காண முடிகின்றன.
என் நட்பில் இருக்கும் அனைத்து ஆண் நட்புக்களுக்குமான பதிவு இது.
💯உங்கள் நட்பிலிருக்கும் பெண் தோழமைகள் இடும் பதிவுகளில் இருக்கும் உட்கருத்துக்களை எத்தனை வீதம் உள் வாங்கி லைக்கோ காமெண்டோ செய்கின்றீர்கள் / அந்தப்பக்கமும் இந்த பக்கமுமாக , நடு நிலை வாதியாக உங்களை இனம் காட்டி எதை சாதிக்கப்போகின்றீர்கள்?
அதிக, நட்பு, பாலோயர்கள், ஷேர்ஷ்கள் என தாம் சொல்வதும் செய்வதும் சரி எனவும், அதுவே புரட்சி, புதுமை எனும் பெயரில் கௌசல்யாவை போல் செய்த தவறும், செய்யும் தவறுகளும் உணர வைக்கப்படாத பெண்கள் சமூகமொன்றை உருவாக்கி பெண்களுக்கு நல்லது செய்வதாகவும்,ஊக்கப்படுத்துவதாகவும் நினைத்து சமூக சீர்குலைவுகள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
இப்படியான பதிவுகளை அதிகளவில் லைக் செய்வதும் ஆண்கள் தான். அவர்களை பின் தொடர்வதும் ஆண்கள் தான். தான் வளர்த்த கடா தன் மார்பில் பாய்வதை எத்தனை பேர் புரிந்திருக்கின்றார்கள்?
உண்மையில் ஆண்கள் நலல்வர்களா? கெட்டவர்களா? 😍😎
🤜நாங்கள் என்னமோ ஆண்கள் வாசனையே உணராதவர்கள். கஷ்டமே படாமல் போராடாமல் வாழ்க்கையில் தங்கக்கரணடியும்,ரோஜாப்பூக்கள் கொட்டிய தரையில் பாதம் படர நடந்து வளர்ந்து வந்தவர்களை போல் நானிடும் கேள்விகளுக்கு உங்களுக்கு தெரியாதுங்க🤜. சொன்னாலும் புரியாதுங்க 🤜 எனும் ரெடிமேட் பதிலும் தயாராக வைத்திருக்கின்றார்கள்🤜.
ஆமாம் புரியாது தான்.அடிபட்டு அல்லல்பட்டு, போராடி மேலேறி வந்தவர்களுக்கு இன்றைய பெண் சுதந்திரம் புரியாமல் தான் இருக்கின்றது. அப்படியே இருக்கட்டும், இவர்கள் தேடும் ஆணில்லாத சுதந்திரமும் பெண்ணியமும் எனக்கு வேண்டவே வேண்டாம்.
குடிகாரனாய் குடும்பத்தை கவனிக்கவில்லை எனும் குறை இருந்தாலும் நல்ல மனிதராய் என் ரோல்மாடல் என் அப்பா தான். எனக்குள் மனித நேயம் விதைத்தவர்கள் என் அப்பாவும், தம்பியும், மகனும் தான். என் தம்பியும், மகனும் என் உயிர் மூச்சுக்கள், என் கணவர் தான் பக்க துணை, அண்ணன்கள் தான் உந்து சக்தி, என் எனர்ஜியாக என்னை இயக்கும் எல்லோரும் ஆண்கள் தான். அதற்காகவெல்லாம் அவர்களால் எனக்கு பிரச்சனையே இல்லை. குறைகள் இல்லை எனவெல்லாம் பொய் சொல்ல முடியாது. எல்லாரும் எல்லா குறையும் நிறையும் கலந்தவர்களாக தான் இருக்கின்றார்கள்.
அப்பா, அண்ணா, தம்பி, கணவன், மகன், தோழன் எனும் பெயர்களில் என்னை சுற்றி இருக்கும் ஆண்கள் எனக்கான வாழ்க்கைத் தூண்களாகவே இருக்கின்றார்கள்.என்னை தாங்குகின்றார்கள். என் மேன்மையில் பங்கு பெற வேண்டியவர்கள் இவர்கள் தான். இவர்களில் யார் ஒருவர் இல்லை என்றானாலும் என் அங்கத்தில் குறை ஏற்பட்டதான வலியையே நான் உணர்வேன். அதனால் ஆண்களை குறித்து வரும் எதிர் விமர்சனப்பதிவுகள் எனக்கு புரியாது தான்.
வாழ்க்கையில் போராட்டம் என்பதை உணராமல் சொகுசாக வாழ்ந்தவர்கள் தான் பெண்ணியம் எனும் பெயரில் கிளம்பி ஆண்களுக்கு எதிரான புரட்சியை நடத்துகின்றார்கள் என நினைத்து கடந்து செல்ல முடியாத படி ஆண் எதிர்ப்பு வாதம் அதிகமாகிக்கொண்டிருக்கின்றது.
ஆண்கள் நல்லவர்கள் இல்லை,ஆண்களால் பெண்களுக்கு பாதிப்பு அதிகம், ஆண்களால் பாதுகாப்பு இல்லை என்பதை போன்ற பதிவுகளை கண்டும் காணாமல் பதிவை முழுமையாக படித்து உள் வாங்காமல் மேலோட்டமாக படித்து லைக் செய்து ஆதரவு தருவது எதிர்காலத்தில் எவ்வகையான தீமைகளை உருவாக்கும் என எவரேனும் உணர்ந்திருக்கின்றீர்களா?
அப்பா,அண்ணன்,தம்பி, மகள், மாமன், மச்சான், தோழன் என ஆணை சுற்றியே எங்கள் வாழ்க்கை வண்ணமயமாக்கப்பட்டிருக்க சமீப காலங்களில் ஆண்களுக்கெதிரான பதிவுகளும், சிந்தனைகளும் அதிகாக பகிரப்படுவதும் அதை ஆண் நட்புக்கள் ஊக்குவிப்பதும் அவரவர் பாலோயர்கள், நட்பெண்ணிக்கையின் அடிப்படையில் அவர்கள் சொல்வதெல்லாம் சரியெனும் புரிதலை சமூகத்துக்கு வழங்குகின்றீர்கள் என உங்களுக்கு புரிந்தே இருக்கின்றதா?
ஒரு ஆண் செய்யும் தவறை இன்னொரு ஆண் சரியாக்குகின்றான் என கூட உணர்த்த நினைக்காமல் கண்ணை மூடி ஆதரவு தருவது எதிர்கால சமூகத்துக்கு நல்லதே இல்லை.
என்ன தான் நடக்கின்றது நம் தமிழ்ச்சமூகத்தில்?
ஆண் எதிர்ப்பு எனும் தீக்குச்சி பற்றவைக்கப்பட்டு சிறு நெருபபாக சமுகத்தில் எதிர் வினைகளோடு பற்றிப்படர ஆரம்பித்திருக்கின்றது.
தம்மை குறித்தே எழுதப்படுகின்றது, தாமே விமர்சிக்கப்படுகின்றோம், தம் சுயமே இங்கே சுக்கு நூறாக பிச்சி உதறப்படுகின்றதென அறியாமையோடு நட்பிலிருக்கும் பெண்கள் எழுதுவதைஎல்லாம் கண் மூடி லைக் செய்வதும் கருத்திடுவதும் சரியான வழிகாட்டலா?
என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்பதை அறியாமல் தம் மனசுக்கு பிடித்தவர் அல்லது அவர் நட்பில் நாம் இருக்கின்றோம் என பெருமையான நினைத்து 
நியாயத்தை கூட எடுத்து உணர்த்தாமல், தவறென தெரிந்திருந்ததையும் எடுத்து சொல்லி புரிய வைக்காமல் கடந்து செல்வோர் இங்கே அதிகம் என எனக்கும் தெரியும்.

அடிமைத்தனம் செய்யவும் வேண்டாம். அடிமைப்படவும் வேண்டாம் எனும் சக சம உணர்வை உருவாக்காமல் ஆண்களை ஒதுக்கிய சமூகம் ஒன்றை உருவாக்க நீங்கள் ஆதரவு தருவதை ஆண்களாகிய நீங்கள் உணர்ந்திருக்கின்றீர்களா?
சமூக வலைத்தளங்களில் வெளி வரும் பதிவுகளை அசட்டையாக கடந்து செல்ல முடியாத சூழலில் நாம் வாழ்கின்றோம். இங்கே தீமைகள் இலகுவாக பரவுகின்றன. நன்மைகளை எடுத்து சொல்வோர் ஒதுக்கப்படுகின்றார்கள்.
நீங்கள் எப்படிப்பட்டவர்? சிந்தியுங்கள்.
இந்தச் சமுதாயம் என்ன அவ்ளோ நல்ல ஆண்களையா பெற்றிருக்கிறது

02 பிப்ரவரி 2019

சங்க காலத்தில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டார்களா? 2

சங்க காலத்தில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டார்களா? பதிவின் தொடர்ச்சி.
முதல் பதிவை படிக்க 
சங்க காலத்தில் காதலித்து கை விட்ட ஆண்களுக்கான் தண்டைனை கொடுமையாக இருந்தது என்பதை அக நானூறு 256 ம் பாடலில் காண முடிகின்றது.
தலைவன் என்பவன் தலைவியை மறந்து பரந்தையை தேடி சென்று கூடி குலாவி யதை அறிந்த தலைவி, தலைவனுடன் கோபம்/ ஊடல்கொண்டதாகவும்,
பரந்தையிடமிருந்து திரும்பிய தலைவன் அவள் தோழியிடம் சென்று தலைவியின் கோபத்தை சமாளிக்க சொல்லும் போது தலைவி 
நீ பொய் சொல்லாதே, நீ என் தலைவியை விட்டு விட்டு வேறொரு பெண்ணுடன் ஆற்றில் குளித்து விளையாடியது எல்லோருக்கும் தெரியும் என்கின்றாள். உன் தவறினை, வஞ்சனையை நான் மட்டுமல்ல இந்த ஊரே அறியும். நீ எங்களுக்கு மறைக்க நினைக்காதே, உன் செயலை எல்லாரும் அறிவோம் என சொல்லி விட்டு கள்ளூர் எனும் ஊரில் நடந்த சம்பவத்தை விபரிக்கின்றாள்.

நீ பரந்தையோடு கூடி குலாவியது கள்ளூரில் நடந்த சம்பவத்தை விடவும் அதிகமாக மக்களால் பேசப்பட்டது என எனக்கு தெரியும் என சொல்கின்றாள்.
**பிணங்குஅரில் வள்ளை நீடுஇலைப் பொதும்பின்
மடிதுயில் முனைஇய வள்உகிர் யாமை 
கொடிவிடு கல்லிற் போகி, அகன்துறைப்
பகுவாய் நிறைய, நுங்கின் கள்ளின் 
நுகர்வார் அருந்து மகிழ்புஇயங்கு நடையொடு 5
தீம்பெரும் பழனம் உழக்கி, அயலது 
ஆம்பல் மெல்அடை ஒடுங்கும் ஊர!
பொய்யால்; அறிவென்; நின் மாயம் அதுவே
கையகப் பட்டவும் அறியாய்; நெருநை 
மைஎழில் உண்கண் மடந்தையொடு வையை 10
ஏர்தரு புதுப்புனல் உரிதினின் நுகர்ந்து,
பரத்தை ஆயம் கரப்பவும், ஒல்லாது 
கவ்வை ஆகின்றால், பெரிதே; காண்தகத்
**
கரும்புத்தோட்டங்களும், வயல்களையும் கொண்ட கள்ளூர் எனும் ஊரில் வாழும் பெண் தன் விருப்பமின்றி தன்னை ஒருவன் அத்து மீறியதாக ஊர்ச் சபையில் சொல்கின்றாள். சம்பந்தபப்ட்டவனோ தனக்கு அவளை தெரியவே தெரியாது என்கின்றாள். ஆனால் ஊர்ச்சபை சாட்சிகளை விசாரித்து அவன் பொய் சொல்வதாக அறிந்து அவனை மரக்கிளையில் கட்டி வைத்து சுண்ணாம்பு நீரை கரைத்து அவன் தலையில் கொட்டியதாகவும், அது தக்க தண்டனை என மக்கள் ஆரவாரித்திருந்தார்கள்: அந்த ஆரவாரத்தை விடவும் உன் செயல் இந்த ஊரில் பேசப்பட்டதை நான் அறிவேன் என்கின்றாள்.

**தொல்புகழ் நிறைந்த பல்பூங் கழனிக்,
கரும்பமல் படப்பைப், பெரும்பெயர்க் கள்ளூர்த் 15
திருநுதற் குறுமகள் அணிநலம் வவ்விய
அறனி லாளன், 'அறியேன்' என்ற 
திறன்இல் வெஞ்சூள் அறிகரி கடாஅய் 
முறிஆர் பெருங்கிளை செறியப் பற்றி 
நீறுதலைப் பெய்த ஞான்றை; 
வீறுசால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே. 21

முதல் சம்பவம் நேரடி சம்பவமாகவும், இரண்டாம் சம்பவம் எங்கோ நடந்ததை சொல்லி பெண்ணை ஏமாற்றினால் என்ன நடக்கும் என தெரியுமோ எனும் மிரட்டலுடனும் தொனிக்கும் இந்த பாடல் வரிகளை தான் பெரும்பாலான ஆய்வாளர்கள், சங்க காலத்திலும்,பாலியல் வன்முறை இருந்ததென்பதற்கு சான்றாக முன் வைக்கின்றார்கள்.
இவ்வரிகளில் காதல் துரோகம், நம்பிக்கை துரோகம் வெளிப்படுதபப்டுகின்றதே தவிர பாலியல் வன்முறை எனும் பெண் விரும்பாமல் வற்புறுத்தி உறவு கொண்டதாக சொல்லப்படவில்லை என்பதை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.
'அறியேன்' என்ற 
திறன்இல் வெஞ்சூள் அறிகரி கடாஅய் 
முறிஆர் பெருங்கிளை செறியப் பற்றி 
நீறுதலைப் பெய்த ஞான்றை; 
வீறுசால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே
எனும் வரிகள் மூலம் பெண்ணை தெரியாது என பொய் சொன்னதற்கான தண்டைனையாகவே மூன்று சுடவுகள் கொண்ட மரக்கிளை நடுவில் நிறக வைத்து சுண்ணாம்பி நீரை காய்ச்சி தலைமேல் ஊற்றி கொடுமையாக தண்டித்திப்பதை நாம் உணர முடியும். 
சங்க காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களுக்கு மிகக்கடுமையான தண்டனை இருந்ததென்பதை இவ்வரிகள் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும், 
.
அக்காலத்திலும் நீதி விசாரிக்கும், சபைகள் இருந்திருக்கின்றன. சாட்சிகளை வைத்து விசாரித்து தீர்ப்பும் கொடுத்திருக்கின்றார்கள். இதனால் அக்கால இளைஞர்கள் காதல்,களவொழுக்கம் தொடர்பாக தெளிவான சிந்தனைகளை கொண்டவர்களாக் வாழ்ந்திருக்க வேண்டும்.

காதலித்து கைவிட்டதற்கே இப்பெரும் தண்டனை எனில் பெண் விருப்பமின்றி, கட்டாயப்படுத்தினால் எவ்வகை தண்டனையை அடைவார் என உணர்த்த இச்சம்பவங்களை எங்கோ நடந்ததாக காட்டி தோழியானவள் தலைவனிடம் சொல்லும் பாடல் வரிகளும் தலைவி எனும் பெண்ணுக்கான பெருமையை கட்டியம் கூறி நிற்கின்றன.
பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு தண்டனை கடுமையாக இருந்திருக்கின்றதென்பதை கூறும் பாடல்களை சங்க கால காப்பியங்கள் பலவற்றில் பல உரையாசிரியர்களும் எடுத்துரைத்திருக்கின்றார்கள் எனினும் பெண்களுக்கான பாலியல் வன்முறைச்சம்பவங்கள் நடந்ததாக தெளிவான குறிப்பை அறிய முடியவில்லை.

சங்க காலத்தில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டார்களா 1?
சங்க காலத்தில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டார்களா 2?