பெண் சுதந்திரம் என்றால் எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும் என பாரதியார் கூறினார்?
அன்றையகாலகட்டத்தில்அதாவதுபாரதியார்வாழ்ந்தகாலகட்டத்தில் பெண்கள்அடக்கியாளப்பட்டார்கள்.அடிமைகளாக நடத்தப்பட்டார்கள். வீட்டுக்குள் அடக்கி வைக்கப்பட்டார்கள். உடன்கட்டை ஏற கட்டாயப் படுத்தப்பட்டார்கள், பால்ய விவாகத்துக்குட்படுத்தபட்டார்கள், அப்படிப்பட்ட சூழலில் அவர்களை தட்டியெழுப்ப பாரதியார் பல புரட்சிகர பாடல்களை இயற்றியதோடன்றி அவர் மகள் தங்கம்மா தைரியமான வீரமகளாக வாழவேண்டும் என்றே விரும்பினார்,அதையே தன் மனவெளிப்பாடாக அவர் வெளிப்படுத்தி இருப்பதினை கீழே வரும் பாடல்களை உணர்ந்து, கருத்தோடு படித்து பார்த்தால் புரிந்திடலாம்
இன்றைய பெண்கள் அவர் விரும்பிய இலக்கினை அடைந்தோமா என தம்மைத்தாமே ஆராய்ந்திடலாம்
அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு எனும் நாற்குணம் கொண்டு பெண்களை அடக்கி ஆள முன் இந்த நான்கு குணங்கள் குறித்தும் பாரதியாய் சொன்னதென்ன என பார்ப்போமா?
மாதர்க்கு ண்டு சுதந்திரம் என்று
நின் வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல்
நாதந் தானது நாரதர் வீணையோ?
நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ?
வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியே
மேன்மை செய்தெமைக் காத்திடச் சொல்வதொ?
சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமொ?
தையல் வாழ்கபல் லாண்டுபல் லாண்டிங்கே!
அறிவு கொண்ட மனித வுயிர்களை
அடிமையாக்க முயல்பவர் பித்தராம்;
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர் நேர்மை
கொண்டுயர் தேவர்க ளாதற்கே,
சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள் தீயிலிட்டுப்
பொசுக்கிட வேண்டுமாம்;
நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ!
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கிஇவ் வையம் தழைக்குமாம்
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ!
நாணமும் அச்சமும் என்று சொல்லியிருக்கிறாரா அல்லது நாணும் அச்சமும் என்று சொல்லியிருக்கிறாரா?இதன் முழுமையான அர்த்தத்தினை நாம் புரிந்திருக்கின்றோமா?
நாணுமா?நாணமா? இவ்வரிகள் மூலம் என்ன சொல்ல வருகின்றார் பாரதியார்?நாணம் எனில்வெட்கம் என இப்பாடல் சொல்கின்றதா?
நாணம் என்றால் என்னவென குறள் சொல்வதை பார்த்தோமானால்...
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்
தனக்கான கடமையை செய்யாமல் பெண்ணை நாடி அவள் பின்னால் திரிபவனுடைய நிலை வெட்கித் தலைகுனிய வேண்டியதாக ஆகிவிடும்.
நாணும் என்பது இங்கே மரியாதைக்குரிய பாரட்டத்தக்க விதத்தில் சொல்லப்படாமல் தலைகுனிய வேண்டிய ஒரு சொல்லாக கணிக்கப்படுவதைக்கவனித்தால் நாணும் அதாவது தலைகுனிந்து நிற்கத்தக்க செயலும் அச்சமும் பெண்களுக்கு வேண்டியதல்ல நாய்களுக்குரியதே என பாரதியார் சொன்னதாக கொள்ளலாம்.
அப்படியெனில் பெண்களுக்கு வெட்கம் வேண்டியதில்லை என பாரதியார் சொல்கின்றார் என எடுத்து கொள்ளலாமா?
நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்;
நீசத் தொண்டு மடமையும் கொண்டதாய் தலத்தில்
மாண்புயர் மக்களைப் பெற்றிடல் சாலவே யரி
தாவதொர் செய்தியாம்;
குலத்து மாதர்குக் கற்பியல் பாகுமாம்;
கொடுமை செய்தும் அறிவை யழித்துமந் நலத்தைக்
காக்க விரும்புதல் தீமையாம்;
நங்கை கூறும் வியப்புகள் கேட்டீரோ!
ஞான நல்லறம் என தன் ஞானத்தினால் தன் வீட்டை நடத்தி தன் பிள்ளைகளை நற்பழக்கவழக்களுடையவர்களாய் கற்பித்து எதிர்கால சந்ததியை திறம்பட உருவாக்கும் நல்ல குடிப்பெண்ணாய் இருப்பவளிடம் நாணமும் இருக்கும்.ஆனாலும் அவள் நாணும் படியாய் இருக்காது!
தெருவுக்கு தெரு மாதர் சங்கங்களை உருவாக்கி நாட்டை மாற்றுகின்றோம் சமூக சேவை செய்கின்றோம் என தம் சொந்த குடும்பத்தினை கவனிக்காது ஊருக்கும் உலகுக்கும் சேவையாற்றுதல் பெண் சுதந்திரமாகுமா? நம் பிள்ளைகளை காவாலிகளாக விட்டு விட்டு ஊரை திருத்த புறப்படுதல் பெண் சுதந்திரமாகுமா?
புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்
பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச் சதுமறைப்படி
மாந்தர் இருந்தநாள் தன்னி லேபொது வான் வழக்கமாம்;
மதுரத் தேமொழி மங்கையர் உண்மைதேர்
மாத வப்பெரி யோருட னொப்புற்றே
முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய முறைமை
மாறிடக் கேடு விளைந்ததாம்.
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
புதுமைபெண்கள் என கூறிக்கொண்டு வீட்டையும் குடும்பத்தினையும் கவனிக்காது பொய் பேசித்திரிவதெல்லாம் பெண் சுதந்திரமாகுமா? ஆணவமும், செருக்கும், யாருக்கும் பயப்படாத தன்மையும் என்றுமே பெண் சுதந்திரமாகாது என எத்தனை அழகாக சொல்கின்றார்.
அப்படி எனில் எது தான் பெண் சுதந்திரம்?
பெண் சுதந்திரம் எப்படி இருக்க வேண்டும் என பாரதியார் சொல்வதை கேளுங்கள்!
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்னி உரைப்பது கேட்டீரோ!
உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள்
பாரத தேசமோங்க உழைத்திடல் வேண்டுமாம்;
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்.
சாத்தி ரங்கள் பலபல கற்பாராம்;
சவுரி யங்கள் பலபல செய்வராம்;
மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;
காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ?
பெண் சுதந்திரம் என்றால் என்ன என இதை விடயாராலும்விளக்கிட இயலுமா என எனக்கு தெரியவில்லை. ஆனால் தன் வாழ்க்கையை சரியாக புரிந்து இதன்படி தம்மை தம் அறிவை வளர்த்து கொண்டோராய் இருக்கும் பெண்களை விரல் விட்டே எண்ணி விடலாம்.
கற்றல் என்பதை வெறும் பள்ளிப்படமாகவும்,தம்எதிர்கால
சம்பாத்தியத்துக் குரியதாகவும் மட்டும் நினைத்து கற்போராய் இருக்கின்றோம். உலக அறிவில் இன்னும் இன்னும் வளர வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
கல்பனாசாவ்லாவையும்,பி.டிஉஷாவையும், சானியாவையும் சாதனைப்பெண்ணாக காட்டும் நாம் நம்மை அததனை உயரத்துக்கு வளர்த்திட முடியாவிட்டாலும் மூட நம்பிக்கைகளில் மூழ்கிடாமல் அனைத்தினையும் அறிவியல் நோக்கோடு ஆராய்ந்தறிந்து நம் அறியாமையை நீக்கி அறிவில்சிறந்து நம்மையும் நம் சந்ததியையும் உயர்த்திட முடியாதது ஏன்?
இணையத்திலும் பல பெண்கள் எழுதுகின்றோம், அதிலும் பல கட்டுப்பாடுகள் வைத்து சமையலும், அழகுக்கலையும், அரட்டைக்கும், கவிதைகள் எழுதவும் தான் பெண்களால் முடியும் பெண் என்றால் இப்படித்தான் எனும் வரையைறையை வகுத்து அதனுள் நடக்கும் படி நம்மை நாம் ஏன் அடிமைப்படுத்த வேண்டும். நமக்கான் உலகம் விசாலமாய் நம் அறிவை வளர்ப்பதற்கு ஏதுவாய் இருக்கும் போது நம்மையே நாம் ஏன் ஒரு பொந்தினுள் அடக்கிட வேண்டும்.
இங்கே நான் பல பெண்களைபார்க்கின்றேன்,அழகாகஇருப்பார்கள், காலேஜ் முடித்து பட்டம் பெற்றிருப்பார்கள், தம்மை அழகு படுத்திட காட்டும் ஆர்வத்தினை அறிவை வளர்த்திட காட்டுவதில்லை. கிணற்று தவளைகளாக வேலைக்கு போனாலும் தம் வேலை சார் துறை தவிர்த்து வேறேதும் அறியாதோராக இருக்கின்றார்கள். கணவரை சார்ந்தே வாழ்வதால் கணவருக்கு தீடிர் உடல் நலமின்மை அல்லது இழப்புகள் ஏற்படும் போது கையறு நிலைக்கு தள்ளப்பட்டு தவிர்த்து போகின்றார்கள். தம் அன்றாட வீட்டு நிர்வாகம்,வரவு செலவு குறித்து கூட அறியாதோராய் இருக்கின்றார்கள்.
நான் அனைவரையும் சொல்லவில்லை. பெரும்பாலானோர் இப்படி இருப்பதை காணும் போது வருந்துகின்றேன் உலகம் இத்தனை மாறினால் என்ன?சுதந்திரம் எஞும் போர்வையில் தடம் மாறாமல் பெண்ணானவள் வாழ்க்கையில் செல்ல வேண்டிய தூரம் அதிகம் தான்.
சிந்திப்போம் செயல் படுவோம்!
உங்கள் குட்டுக்களையும் தட்டுக்களையும் தயங்காது பதிவாக்குங்கள் நட்பூக்களே!