கடந்து வந்த பாதை! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடந்து வந்த பாதை! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

03 ஜனவரி 2017

கடந்து வந்த வருடம்!

ஒருவருடம் கடந்து போனது, புதுவருடம் பிறந்தும் விட்டது. கடந்த வருடத்தைய கசப்புக்களை  நினைத்து பதிவுகளும், வாழ்த்துக்களுமாய் ஒரு வாரமாக படித்தும் பகிர்ந்தும் விருப்பு வாக்கிட்டும், பின்னூட்டமிட்டும், கிறிஸ்மஸ், புதுவருடத்தினை குடும்பத்தோடு குதூகலமாக கொண்டாடியும் காலமது மிக வேகமாக ஓடிசெல்வதாகவே படுகின்றது. 

இதோ  ஒருவருடம் போய் புதுவருடம் வந்து மூன்று நாளை கடந்த நிலையில் நாமும் ஏதேனும் பதிவு போட்டு நம் இருப்பை எல்லோருக்கும் தெரிவிக்க வேண்டுமே எனும்  உள்ளத்து உணர்வில் வருடத்து முதல் பதிவாக எதை எழுதலாம் என சிந்தித்து.. நாலு வரியில் கவிதை என எதையோ கிறுக்கி அதை டிராப்டில் போட்டு விட்டு... ........😕😕😕😕😕  

பேஸ்புக்கில் அஜீவன் அண்ணாவில் ப்ரோபைல்  வசனம் கண்டு ஒரு தத்துவமும் முத்தாக எழுதி  அதை தனிப்பதிவாக்கலாமா.. இல்லையா என சிந்தித்து..... அடப்போங்கப்பா.. நான் கம்பெனியில் ஒரு கல்யாண வீட்டுக்கான ஈவன்ஸ் ஆயத்தங்களுக்கு கூட இத்தனை சிந்திப்பதில்லையாக்கும்.❤❤ 

சரி அந்த தத்துவ முத்துத்தான் என்னவென உங்களுக்கும் சொல்லி பதிவை தொடர்கின்றேன். சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டு கிடப்பதை விட சுதந்திரமாய் உப்பாகி நீரோடு கரைவது மேல் எனும் வரிகள் சொல்லும் கருத்தை உள்வாங்கினால் புத்தர் போதிமரத்தினடியில் பெற்ற ஞானத்தினை விட அதீத ஞானம் பெறுவோம்.

முதலாவதாய் இரு, அல்லது முதலாவதாக இருப்பவனோடு இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் மத்தியில் சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டு கிடப்பதை விட சுதந்திரமாய் உப்பாகி நீரோடு கரைவது மேல் என நினைப்பவர்கள் மதிப்புக்குரியவர்கள். சாதிக்கப்பிறந்தவர்கள். என்றே தோன்றும். பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம் என எங்கோ ஓரிடத்தில் வாழ்ந்து மடியாமல் வாழும் காலத்தில் எதையோ சாதித்தோம் என நான்கு பேர் மனதில் நிலைக்கும் படி தவறு கண்டு தட்டி கேட்கவும் தன் கருத்தினை தயங்காது எடுத்துரைக்கவும், மறைந்திருந்து எழுதாமல் தம்மை இன்னார் என வெளிப்படுத்தி எழுதவும் தைரியம் வேண்டும். தன் கருத்தில் என்றும் மனம். தளராத விக்ரமாதித்தன் தான் அஜீவன் அண்ணா. சில பல விடயங்களில் எனக்கும் அவருக்கும் மாற்றுக்கருத்திருந்தாலும் நட்பில் குறை காணாதவர்.

இணைய நட்பு என்றால் போலியானது,பொய் முகம் கொண்டதெனவும், பயனின்றி நேரத்தினை வீணாக்கும் இருப்பிடம் பேஸ்புக் எனவும், இதில் எழுதி நீ என்னத்தை சாதித்தாய்? இத்தனை நேரம் இதில் அமர்ந்திருப்பதனால் உனக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்? என கேலி கிண்டல் செய்வோரை கண்டு பரிதாபம் தான் தோன்றும்,அடிக்கடி நான் இனி வரமாட்டேன், இங்கிருந்து கிளம்புகின்றேன் என பதிவிடுபர்களையும் தன் பக்கத்தினை டிஆக்டிவேட் செய்வோரையும் கண்டால் அவர்கள் மீதான மதிப்பு சட்டென தாழ இறங்குகின்றது. அதது இருக்குமிடம் இருந்தால் நடப்பதெல்லாம் நல்லதாகவே அமையும், அதில் பேஸ்புக் நட்புக்களுக்கும் விதிவிலக்கு அல்ல. நல்லதை தெரிந்து நல்லதல்லாததை விட்டு விலகினால் எல்லாம் சௌக்கியமே!

சரியானதை தெரிந்தெடுக்க தெரியாமல், அமிர்தமானாலும் அளவோடு இருந்தால் தான் அது அமிர்தமாகும் என்பதையும் அறியாமல் கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்பது போல் இந்த எழுத்தினால் நாம் பெறும் உயிர்ப்பும்,உணர்வும், நட்பும், நன்மையும் அறியாமல் பிதற்றுவோரை கண்டு கொள்ளாது இனிவரும் காலங்களில் இன்னும் அதிகமாய் உள்ளத்து உணர்வுகளை எழுத்தாக்க வேண்டும் எனும் வைராக்கியத்தினை தந்து சென்ற 2016 ம் வருடம் என் வாழ்வின் பல நன்மைகளை விதைத்து சென்றிருக்கின்றது.

அப்படி என்னத்தை சாதித்தோம் என நினைத்து கொள்ளும் நேரங்களில் சட்டென ஏதோ ஒரு வகையில் எனை குறித்த பகிர்வுகள் என்னை பீனீக்ஸ் போல சிலிர்த்தெழ வைக்கும். அவ்வகையில் Geetha Mathi கீதாக்காவின் என்றாவது ஒரு நாள் ஆஸ்திரேலியப் புதர்க்காடுறை மாந்தர்களின் கதைகளாக எழுத்தாளர்   ஹென்றி லாஸன அவர்களில் கதைகளை மொழிபெயர்த்து வெளியிட்ட நூலின் நன்றியுரையில் என் பெயரை கண்டதும் உலகின் எங்கோ ஒரு மூலையில் நம் பெயரை சொல்ல எவரேனும் இருந்து கொண்டிருப்பார்கள் எனும் உண்மை புரிந்தது. அக்காவின் நினைவில் நான் இருந்ததும் என்றும் இருக்க வேண்டும் என்பதும் என் ஆசையும் தான்.

தமிழ் மன்றத்தில் நான் ஹேகா என என் கம்பெனி பெயரில் எழுதிக்கொண்டிருந்ததனால் கீதாக்காவுக்கு என் பெயர் ஹேகா ஆகிப்போனது. இன்னும் பலருக்கும் நான் இன்னும் ஹேகாவாகவே அதாவது ஹே.... காக்கா வாகவே இருக்கின்றேன். அப்படித்தானே மயூரன் ?


கீதாக்காவின் என்றாவது ஒரு நாள் நூல் அகநாழிகை பதிப்பகம் 182 பக்கங்களோடு அச்சாக்கினாலும் அவர் சென்னையில் வசிக்காத காரணத்தினால் வெளியிடு என எந்த விழாவுமில்லாமல் வெளி வந்ததனாலும் அவரிடம் இருக்கும் கூச்ச சுபாவத்தினாலும் அதிக விளம்பரமின்றி பேசப்படாமல் இருக்கிறது.. எத்துணை கல்வியில் மேம்பட்டிருந்தாலும், அறிவில் நிறைந்திருந்தாலும், இலக்கியங்களில் ஊறித் திளைந்திருந்தாலும், சாதாரண குடும்பப்பெண்மணியாக வீட்டுத்தலைவியாக பிள்ளைகளின் வளர்ப்பில், கல்வியில் பாதுகாப்பில் அதிக நேரம் செலவளிக்க வேண்டிய நிர்பந்தத்தினை ஒரு பெண்ணாய் நானும் அறிவேன். அவ்வகையில் கீதாக்காவுக்குள் மறைந்திருப்பதை வெளிக்கொண்டு வர இதுவரை தகுந்த களம் அமையாதிருபப்தை இட்டு எனக்குள் ஆழ்ந்த வருத்தம் உண்டு. பிள்ளைகளின் கற்றலின் பின்னனியில் அவரின் அர்ப்பணிப்பு இருப்பதனால் அவரால் அதிகமாய் இப்போதெல்லாம் எழுத முடிவதில்லை என நினைக்கின்றேன்.இத்தனைக்கும் அக்கா எழுத்து பாராம்பரியமிக்க குடும்பத்திலிருந்து வந்திருக்கின்றார். போட்டியும் பொறாமையும், பெருமையுமான இவ்வுலகில் நம்மை நிலை நாட்டவும் போராட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றோம்.

கீதாக்கா தன் முதல் நூலாக தன் சொந்த எழுத்தினை வெளியிட்டிருக்கலாம் எனும் ஆதங்கமும் எனக்குள் உண்டு. தமிழ் மன்றத்தில் அவரின் சொந்த கதைகள், நாவல்கள், தொடர்கள், கவிதைகள் கொட்டிக்கிடப்பதை நான் நன்கறிவேன் எனும் போது அவைகளை தொகுத்து பதிவாக்கி முதல் நூலாக வெளியிடாமல் மிகவும் சிரமப்பட்டு மொழிபெயர்த்து நூலாக்கி இருக்கின்றார். மொழிபெயர்ப்பு நூல் என்பது அத்தனை இலகுவானதல்ல என்பதை என்னுடைய சங்ககால பூக்கள் எனும் குறிஞ்சுப்பாட்டில் பூக்களை குறித்த பகிர்வுக்கான் தேடலின் போது ஜேர்மன், ஆங்கில தளங்களில் பூக்களின் தாவரவியல் பெயரை மட்டும் வைத்து விபரம் தேடி மொழி பெயர்க்க ஆன சிரமத்தினை நான் நன்குணர்ந்திருக்கின்றேன். அவ்வகையில் அக்காவின் நூல் இன்னும் பேசப்பட வேண்டும். அவுஸ்ரேலிய புகழ் பெற்ற எழுத்தாளரின் கதைகளோடு நூறாண்டுகள் முந்தைய சரித்திர சம்பவங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும் கதைகளை நாம் அனைவரும் படித்தறிய வேண்டும்.

அக்காவின் என்றாவது ஒரு நாள் அக நாழிகை பதிப்பக நூல் சில நூறுகளில் தான் வெளி வந்திருக்கின்றது. அவரை அறிந்த தமிழ் மன்ற, முத்தமிழ் மன்ற வலையுலக உறவுகள் ஆளுக்கொரு புத்தகம் ஆர்டர் செய்து வாங்கி அவரை ஊக்கப்படுத்தினால் தான் அவர் மேன் மேலும் தம் திறமைகளை அச்சில் கொண்டு சேர்க்க முடியும். அக்காவுடன் தொடர்பு கொண்டு நூலை பெறும் வழிகளை கேளுங்கள் நட்பூக்களே! இனி வரும் நாட்களில் அவரின் நூல்கள் மேன் மேலும் வெளிவர அனைவரும் உந்து சக்தியாக இருங்கள்.

🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈 🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈 🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

நான் வலையுலகம் வந்து ஒருவருடம் தான் கடந்து போனதா என உணர முடியாமல் வலையுலக ஜம்பவான்கள் மட்டுமல்ல பல எழுத்தாளர்களின் , இலக்கிய ஆர்வலர்களின் நட்பை பெறவும் களம் அமைத்து தன் எழுத்தில் எங்கேனும் ஓரிடத்தில் என் பெயரை நிலைக்க செய்யும் வார்த்தைகளின் வசந்த ஊஞ்சலாடும் அன்பு மனசு குமார் தன் கடந்த வருட நினைவுப் பதிவில் என்னையும் நினைவு கூர்ந்திருந்தது கண்டு கோடி கோடி பணம் கொட்டினாலும் இந்த அன்புக்கு ஈடாகுமா என கேட்க தோன்றியது.

பேஸ்புக்கிலும் , வலையுலகிலும் தம் முகம் மறைந்து சுயம் தொலைந்த்த எழுத்தாளர்களாய் பலர் இருக்க குமாரின் நட்பினால் என் எழுத்தும் வாசிப்பும் விரிவடைந்தது என்பேன். கூடவே சேனைத்தமிழ் உலாவில் எனக்கு கிடைத்த தம்பிகளின் அன்பு ஊக்கமூட்டல், அக்காவெனும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரும் அழைப்புக்கள் அனைத்துமே என்னை மெருகேற்றிக்கொண்டே இருக்கின்றது..

பேஸ்புக்கில் அறிமுகமாக சில தடவைகள் சில வார்த்தைகள் மட்டும் உரையாடிபிருந்த தோழி Abirami Umashankar அபிராமி கருத்திலும் என் எழுத்துக்கள் பட்டிருப்பதை அவரின் வியக்கவைத்த பதிவர்கள் தொகுப்பில் கண்டுணர்ந்த போது மெய் சிலிர்த்ததென்பேன். குறைகளை மட்டும் குடம் குடமாய் அள்ளி தலையில் ஊற்ற தேடும் இவ்வுலகில் நிறையுணர்ந்து நிறைமதியாக பாராட்டிய அபிராமியும் கடந்த மாதமிருந்து நம் வலையுலக நட்பானார். அருமையான பாடகியும் எழுத்தாளருமாய் அன்பால் உருவான் சிற்பமோ இவர் என எண்ண வைக்கும் படி அம்மாவுக்கும் பெண்ணுக்குமான உறவில் என்னை அசத்தும் ரியல நாயகி இவரே. என் க(வி)தைகள் எனும் பெயரில் நம்முடன் இணைந்திருக்கின்றார். அவரையும் ஊக்கப்படுத்தி இன்னும் அதிகம் எழுத வையுங்கள்.


கடந்த வருடம் எனக்கு நல்ல வருடமாகவே கடந்திருக்கின்றது . மலேசியாவில் இருக்கும் ருபனின் எழுத்துப்படைப்புக்கள் ரூபன் மூலம் திருச்சியிலிருந்து வெளிவரும் இனிய நந்தவனம் செப்டம்பர் இதழை சுவிஸ் சிறப்பிதழாக வெளியிட்டு அதில் என் நேர்காணலை யும் கேட்டு பிரசுரித்திருந்தார்கள்.அதனூடாக சுவிஸிலிருக்கும் சில பல இலக்கிய ஆர்வலர் மத்தியில் நான் பேசுபொருளாகி இருக்கின்றேன். இனிய நந்தவன சிறப்பிதழை படித்து பலர் பாராட்டி இருந்தார்கள்.

பேஸ்புக்கில் நேரம் வீணாகின்றது, பயன் இல்லை. வெற்று அரட்டை தான் என கூச்சல்களுக்கிடையில் சரித்திர கதைகளை படிக்கவென நித்யாகுமார், தமிழ்வாசி பிரகாஷ், தினேஷ்குமார் என சிறு குழு ஆரோக்கியமானதாக உருவாகி திரு கணேஷ்பாலா சாரும் அப்பப்போ தான் படித்தவைகளை கருத்திட்டு வரலாற்றின் இன்னொரு பக்கத்தினை பலர் ஆர்வமாக படிக்கவும் விமர்சிக்கவும் தொடங்கியதும் வாசிக்கும் ஆர்வத்தினை மேம்படுத்தியதும் ஆரோக்கியமான் விவாதங்கள் விமர்சனங்களுக்கும் அமைவாகியது என்பேன்.

வலையுலக ஜம்பவான்கள் புதுக்கோட்டை டீமின் 2015 ஆவது ஆண்டில் வலைபுலக திருவிழா என்னை வலைப்பதிவராக்க தூண்டியது எனில் அவர்களின் நட்பை பெறயும் முத்து நிலவன் ஐயாவின் அறிமுகம் பெறவும் என்னைக்குறித்தும் என் எழுத்துக்குறித்தும் பலருக்கு அறிமுகப்படுத்திய வகையில் நான் ஒன்று சொல்வேன் மீரா செல்வக்குமார் சாரும் என் நன்றிக்குரியவர்களாகின்றார்கள்.

கடந்த வருட நட்புலகில் என்னுள்: நுழைந்து கடல் கடந்திருந்தாலும் எழுத்தில் அருகாகியோராய்...உரிமையாய் என்னை கிண்டல் செய்வதை தாம் வேண்டிய வரமாய் கொண்ட அவர்கள் உண்மைகள் மதுரைத்தமிழனும், எல்லோரிடமிருந்து தூரமாக இருப்பதாக தன் எழுத்துக்களால் காட்டிக்கொள்ளும் ரிலாக்ஸ் பிளீஸ் வருணும், அட போட வைப்பார்கள். இவர்களுடனான என் பதிவுகளின் பின்னூட்ட உரையாடல் கண்டு என் இன்பாக்சில் வந்த சிலர் உங்களுக்கு இவர்கள் முன்னரே அறிமுகமோ என கேட்டதும் உண்டு. அதென்னமோ ஆயிரம் பேருடன் அறிமுகமிருந்தாலும் ஒரிருவர் எழுத்தில் மட்டுமே உரிமை உணர்வோடு கருத்திட முடிகின்றதென்பது ஆச்சரியமான உண்மை தான்.

இதில் நான் முக்கியமாக குறிப்பிட வேண்டியவர்கள் பட்டியலில் கில்லர்ஜி சார். தில்லையகத்து துளசிஅண்ணா, கீதாக்கா, எங்கள்பிளாக் , வெங்கட் நாகராஜ் அண்ணா, தேன் மதுரம் கிரேஷ், ஏஞ்சலோ ஏஞ்சல், தனபாலன் அண்ணா, என இன்னும் பலர் இருக்கின்றார்கள். ஒவ்வொருவரையும் குறித்து அடுத்தடுத்த பதிவுகளில் எழுதலாம் என இருக்கின்றேன்.

இந்தப்பதிவையே மதுரைத்தமிழன் சுவிஸிலிருந்து அமேரிக்காவுக்கு ரோடு போட்டேன் என கேலி செய்வார் என்பது நிச்சயம் எனினும் கிடைக்கும் நேரத்தில் அத்தனையும் எழுத வேண்டும் எனும் ஆர்வத்தில் கொஞ்சூண்டு நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்டு போனது,

மன்னீச்ச்ச்ச்ச்ச்ச்ச்சூ படிச்ச்ச்ச்ச்ச்ச்சூ கருத்திடுக.

அனைவருக்கும் அன்பின் புதுவருட நல் வாழ்த்துகள்
.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 


13 டிசம்பர் 2016

நான் சின்னவளாய் இருந்த போது குடியிருந்த கோயில் - 1

1980 முதல் 1989 வரை நாங்கள் குடியிருந்த கோவில்.

ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கதை சொல்லும் வீடு!
வாடகை கொடுக்காத வாடகை வீடு!
என் நினைவில் நீங்காமல் இருக்கும் பல இனியவைகளுக்கு சொந்தமான வீடு!
எனது இரண்டு தங்கைகளும், தம்பியும் Pushpakanthan Edward பிறந்த வீடு!
அடுத்தடுத்து நான்கு பெண்கள் பிறந்ததனால் பையன் பிறந்தால் கதிர்காமம் கோயிலில் மொட்டை அடிப்பதாக வேண்டி அம்மா கந்தசஷ்டி விரதம் இருந்து அதன் பின் இந்த வீட்டின் வெளிப்புறமாக ஐன்னல் தெரியும் அறையில் தான் என் தம்பி பிறந்தான்.தம்பி பிறந்தான் என அம்மாவுக்கு மருத்துவிச்சியாயிருந்த அம்மாவின் சித்தி பெண் இலட்சுமி ஆசம்மா சொன்ன நாள் எனக்குள் இன்றும் நினைவில் இனிக்கும். அக்காலத்தில் ஸ்கான் வசதிகள் அதிகம் இல்லாததால் பிள்ளை பிறந்த பின் தான் ஆணா பெண்ணா என தெரியும்.


உனக்கு தம்பி பிறந்திட்டாண்டி. ஓடு ஓடிப்போய் உங்கப்பாக்கு சொல்ல சொல்லி போற, வாற பஸ் ரைவரி டம் சொல்லி விடு என யோகப்பெரியம்மாவின் பெரியப்பா என்னை துரத்தி விட்டதும் இந்த வீட்டில் தான். அப்போவெல்லாம் எங்க வீட்டில் அம்மாவின் சொந்த சகோதரர்கள். அம்மம்மா என யாரும் வருவதில்லை. ஆனால் அம்மம்மாவின் தங்கை பிள்ளைகள் தான் எமக்கு உதவியாக இருந்தார்கள்.
அந்த நாள் அப்பா மட்டக்களப்பு, கல்முனை பஸ் டிரிப் ஓடிகொண்டிருந்தார். அப்பாவுக்கு மதியச்சாப்பாடு மட்டக்களப்பிலிருந்து கல்முனை போகும் பாதையில் காத்திருந்து தினமும் நான் கொண்டு கொடுப்பேன், கட்டுச்சாதம்,பாத்திரங்களில் வைத்து துணியால் கட்டி கொண்டு கொடுத்தால் ஐந்து ரூபாய் தருவார் அன்றைக்கு சாப்பாட்டுடன் தம்பி பிறந்த தகவலும் சொன்னேன்.
இரண்டு காலில் சந்தோஷமாய் போன மனுஷன் வீட்டுக்கு வரும் போது சாதாரணமாக நான்கு காலில் வருவாரெனில் அன்று எட்டுக்காலில் வந்தார். மகன் பிறந்த செய்தி அறிந்த நண்பர்களுக்கு பார்ட்டியாம். அதை விட தம்பி பிறந்ததை ஏன் டைவரிடம் சொல்லி விட்டதென அம்மாவுக்கு திட்டவும் செய்தார். அமமா பாவம். ரைவர் அங்கிளிடம் தகவல் சொன்னதால் அவர் எல்லா அங்கிளுக்கும் சொல்லி அவர்கள் பார்ட்டி வைக்க கேட்டதால் அப்பாக்கு கோபம்.
அப்பாவை குறித்த கவலையும், இயலாமையும் இருந்தாலும் இவர் என் அப்பா என நான் பெருமிதப்படும் படி ரியல் ஹீரோவாக வாழ்ந்து காட்டியதும் இந்த வீட்டில் தான்.
படத்தில் இருப்பது போல் நாங்கள் குடியிருந்த போது வீட்டின் கூரை ஓட்டினால் வேயப்படாமல் ஓலையால் வேயப்பட்டிருந்தது. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மழையும் வெயிலும் இலவசமாய் வீட்டின் கூரையினூடாக தரிசனம் தரும் வீடு!
மின்சாரம் இல்லை, சமையலறை இல்லை, டாய்லட் இல்லை, ஆனாலும் நாங்கள் அங்கே குடியிருந்தோம்.
எத்துணை உயர்ந்தாலும், நாலு டாய்லட் இணைத்து பங்களாக்களை கட்டினாலும் நினைத்தாலே இனிக்கும் நினைவுகளை தரும் வீடு!
ஒரு கொத்தரிசியில் விறகடுப்பில் சோறு வடித்து வைத்து விட்டு வீட்டுக்கு எதிரே இருந்த மகேசன் மாமாவீட்டு சுவரின் மேலால் அவர்கள் வீட்டு ஜனனலினூடாக தெரியும் கறுப்பு வெள்ளை டீவியில் உதயகீதம், ஒளியும் ஒலியும் எட்டிப்பார்க்க செல்லும் இருபது நிமிடத்தில் சுடு சோத்தை பானையோடு தூக்கிச்சென்று விடும் நாயின் அட்டகாசத்தினால் பட்டினியாய் தூங்கிய நினைவுகளும் இங்கே தான்.
கிணற்றடியில் நின்ற லாவுட் பழ மரத்தின் காய்களை பறித்து நிலத்தினை தோண்டி, வாகை இலைகளை பரப்பி அதன் மேல் பழத்தினை வைத்தால் இரண்டு நாளில் கனிந்து விடும். ஒரு பழம் ஐம்பது சதம் என வீடு வீடாய் விற்க சென்று வரும் காசில் ஒரு இறாத்தல் பாண் வாங்கி தேனீருடன் பசி அடக்க வைத்த வீடூ! அதே மரத்தில் ஊஞ்சல் கட்டிஆடிய நினைவுகளும், சோறு கறி சமைத்து விளையாடிய காலஙகளும், தங்கைகளோடு சண்டை இட்டு வீட்டை சுற்றி ஆளையாள் துரத்தி தலைமுடியை பிச்சி அடித்து சண்டை போட்ட துடியாட்டங்களுமாம் நினைவை சொக்க வைக்கும் வீடு.
வீட்டை சுற்றி முற்றம் தவிர பெரிய இடம் இருந்ததனால் மரவள்ளி, கச்சான்,அவரை தக்காளி, வெண்டி என விதவிதமாய் விதைத்து தினம் நீர் ஊற்றி தோட்டம் செய்யும் ஆர்வத்தினை எனக்குள் நுழைத்த வீடு. பல நாள் நாங்கள் விதைத்த மரவள்ளிச்செடியின் கிழங்கே எங்கள் பசி போக்கும் தாயானது.
அப்பா இலங்கை போக்குவரத்து சபை பேருந்து நடத்துனர் என்பதால் ஒவ்வொரு சீசனுக்கும் பழங்களை ஏற்றும் ஏழைகள் கையில் காசில்லாமல் டிக்கட்டுக்கு காசுக்கு பதில் பழங்களை அள்ளிக்கொடுக்க,சோற்றுக்குப்பதில் பழங்களை விதவிதமாய் அள்ளி தின்ன வைத்த வீடு!
டியூட்டி முடிந்து வரும் அப்பாவின் காக்கி சேர்ட்டின் கிடக்கும் சில்லறைகளை அவருக்கும் அம்மாவுக்கும் தெரியாமல் திருடிக்கொண்டு மறு நாள் பள்ளி இடைவேளையில் சைக்கிளில் பாம் பாம் என பெல் சத்தத்தோடு வரும் சக்கிரின் ஐஸ்கிரிம் வண்டி மாமாவிடம் கலர் கலராய் ஐஸ்கிரிமும், பள்ளி வாசலில் அமர்ந்து அவித்த பலாக்கொட்டை பத்து இருபத்தியைந்து சதமும் கொடுக்காப்புளி, நாவல் பழம் என பங்கு வைத்து விற்கும் பல்லுப்போன ஆச்சியிடம் வாங்கி தின்று அம்மாவிடம் இரட்டைச்சடை பின்னும் நேரம் மாட்டி முழித்த நினைவு தரும் வீடு!
மளிகைப்பொருள் கடன் வாங்கி விட்டு சொன்ன தவணையில் காசு கொடுக்கவில்லை எனில் எங்கம்மாவை தேடி வரும் கடையன்ரியிடம் அம்மா இல்லை என சொல்லி அம்மாவிடம் இருக்கும் ஒரே ஒரு சேலை கொடியில் காய்வதை வைத்து வீட்டுக்குள் ஒளிந்திருக்கும் அம்மாவை கண்டு பிடித்து திட்டு வாங்கிய நினைவுகளின் சங்கமமும் இந்த வீடே!
ஊரெல்லையில் இருக்கும் நெல் அரைக்கும் மில்லுக்கு சென்று உமி,தவிடு சுமந்து ஒரு மூட்டை பத்து ரூபாவுக்கு விற்று,மாவிடித்து, இட்லி, தோசை சுட்டு விற்று கடும் கஷ்டத்திலும் தான் படியாத ஏட்டுக்கல்வியை நாங்கள் படிக்க வேண்டும் என அம்மா பட்ட கஷ்டங்களை உடனிருந்து அனுபவிக்க வைத்த வீடு.
பள்ளியில் நாங்கள் இளவரசிகளாய் இளவரசனாய் எங்கள் திறமையாய் பேர் பெற்றிருந்தோம் எனினும் அதற்கு அஸ்திவாரம் இட்டவர் எங்கள் அம்மா. தான் பட்டினி கிடந்து எங்கள் பசி தீர்த்தார். இத்தனைக்கும் என் நான்காவது தங்கை பிறக்கும் வரை கஷ்டம் எனில் என்னவென அறியாமல் வளந்திருந்தார் என்பதை நான் அறிவேன். குடும்பம்பெருக , செலவுகளும் பெருகி, அப்பாவின் குடிபோதையுமாய் சில வருடங்கள் எம்மை வருத்திய நாட்கள்: அவைகள்.
பல நாள் காலையில் குளித்து சீருடை அணிந்து காலை ஆகாரம் இன்றி வெறும் தேத்தண்ணீரை சீனியை கையில் கொட்டி தொட்டு குடித்து செல்லும் சூழலிலும் அடுத்த பக்கம் இருக்கும் சுரேந்திரன் மாமா வீட்டு அம்மம்மா முதல் நாள் எஞ்சிய சோற்றில் தண்ணீரை ஊற்றி வைத்திருந்து வேலிக்கு மேலால் தூக்கி தரும் போது அதில் உப்பை விட்டு கரைத்து குடித்து விட்டு சென்ற நாட்களை....... அன்ன மிட்ட கைகளை இன்னும் நான் மறக்காமல் இருக்க வைக்கும் வீடு.
கங்கா அன்ரி, நகுலேஸ் அன்ரி, யமுனா அன்ரி என முன் வீட்டில் இருந்த அன்ரி மாரின் பாசத்தில் நனைந்து மாலையானால் அவர்கள் வீட்டு முன் கூடத்தில் அமர்ந்து வீட்டுப்பாடமும் பல கதைகளும் சொல்லி தந்த வீடு
மாதினி, மாலினி டீச்சர்கள் எனக்கு காசு வாங்காமல் டீயுசன் செல்லித்தந்த வீடு.
தீப்பெட்டி முடிந்து போனால் எதிர் வீட்டு பாக்கியம் அன்ரி அப்பம் சுட்டு அணையாமல் இருக்கும் நெருப்பில் எங்க வீட்டு அடுப்பையும் மண்ணெண்ணை சிமிலி விளக்கையும் பற்ற வைக்க தணல் இரவல் கேட்கும் நினைவுகளை புதைத்து வைத்திருக்கும் வீடு.
வீட்டின் மதிப்பை வைத்து மனங்களைமதிப்பிடும் இக்காலத்தில் எனக்கு சொர்க்கத்தினை உணரவைத்த வீடும் இதுதான்.
இத்தனை கஷ்டமும் நான் உணர்ந்ததனால் தான் 16 வயதில் சுவிஸ் வந்ததும் வீட்டுக்கு மூத்த பெண்பிள்ளையாக இருந்தும் நான் மட்டும் வாழாமல் என் குடும்பமும் வாழ வேண்டும் என நினைக்க வைத்தது. சுமைகளை சுமக்க சொன்னது. சுமை தாங்குவது என் கடமை என உணர்ந்தப்பட்ட போது மனம் உடைந்தும் போனது.
இன்றும் என்னைபோல் இருப்போரை கண்டு இரங்க வைக்கின்றது. பணத்தினை பொக்கிஷமாய் சேர்த்து வைக்க வேண்டும் எனும் எண்ணத்தினை விட்டு தூரமாய் நிறுத்தியும் வைக்கின்றது.
 

 
 
 
.
   எங்களுக்கு பின் அதே வீட்டில் குடியிருந்த பாக்கியம்  அன்ரியின் பேரன் அனுஷுக்கு நன்றி. குடியிருந்த வீட்டின்   இன்றைய தோற்றம் கூகுள் மேப்பில் தேடி வைபரின் அனுப்பியது அவன் தான்.

குடும்பமாய் இணைந்து இந்த வீட்டில் குடியிருந்த 1988  ஆண் ஆண்டின் பின் நாங்கள் மீண்டும் இணையவே இல்லை.சிதறடிப்பட்ட நிலையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில்  கோபதாபங்களை நிரப்பிக்கொண்டு சுயநலமிகளாய்  பாசங்களை விற்று சோகங்களை கடன் வாங்கிக்கொண்டோம்.
                                                      
எங்கள் குடும்ப போட்டோவாய் எஞ்சியிருக்கும் ஒரே புகைப்படம் இது தான். அப்பா கையில் இருப்பது சித்தி மகன், அவன் முதலாவது பிறந்த நாள்  அன்று எடுத்தது..

நினைவுகள் தொடரும். 

29 அக்டோபர் 2016

எண்ணப்பறவை சிறகடித்து........!

நாங்கள் ஐந்து பெண்கள், ஒரு தம்பி! குடும்பம் பெருகிய பின் கஷ்ட ஜீவனம் தான்.வாடகையில்லாத வாடகை வீடு!
பண்டிகை காலத்தில் அம்மா எப்படியோ கஷ்டப்பட்டு மண்ணெண்ணை வாடையோடு வரும் சீத்தை துணி கல்முனைமார்க்கெட்டில் மொத்தமாக வாங்கி விடுவார்.
இரண்டு விதமான துணியில் கிறிஸ்மஸுக்கு ஒரு சட்டை புதுவருடத்துக்கு ஒரு சட்டை. ஐந்து பெண்களுக்கும் ஒரே துணி, டிசைன் மாறி இருக்கும், தம்பிக்கு மட்டும் ரெடிமேட் ரௌசரும், சேட்டும் அது அனேகமாய் தவிட்டு கலரில் பள்ளிக்கூட உடுப்பாயும் இருக்கும். வருடத்துக்கு அந்த இரண்டும் தான் எங்களுக்கு புது ஆடை.அப்பாவின் தங்கை கொழும்பில் இருந்து அவர் பெண்களின் சட்டைகளை கொடுத்து விடுவார். அந்த சட்டைகள் அளவுக்கேறப் எங்கள் அனைவருக்கும் மீதிக்காலத்துக்கு பகிரப்படும்.
அச்சு முறுக்கு சோகி என அந்த சூழலுக்கு ஏற்ப பலகாரமும் கட்லட்,அல்லது கூனி வடையோ செய்து அதை கொண்டு சொந்தக்காரர்கள் வீட்டுக்கு போனால் கைவிசேடம் தருவார்கள். ஒருரூபாய், மூன்று ரூபாய் என அவரவர் வசதிக்கு தகுந்த படி இருக்கும். அதனால் இந்த பலகாரம் காவி வேலைக்கு எங்களுக்குள் போட்டி இருக்கும். தம்பியை கூட்டிப்போனால் கொஞ்சம் கூடுதலாய் காசு தருவார்கள் என்பதனால் அன்று மட்டும் நான் நீ என அடிபடுவோம்! அவன் எங்கள் எல்லோருக்கும் செல்லப்பிள்ளையாய் இருந்தான்.
அம்மா இறைச்சி சமைத்தால் ஊருக்கே வாசனை வரும், அதிலும் மாமாவுக்கு அம்மாவின் கைச்சமையல் எனில் நிரம்ப பிடிக்கும், வீட்டில் விருந்துச்சாப்பாடு. அதான் ஆட்டுஇறைச்சிக்கறி சமைத்து மாமா வீட்டுக்கு கொண்டு போனால் மாமி ஐந்து ரூபா தருவார்! அதனால் அன்று மட்டும் உளவாரம் அதாங்க உபகாரம் எனும் கைவிசேடக்காசு சிரித்துக்கொண்டே மாமாவும் தருவார்!மற்ற நாளில் மாமா என்றாலே பயம் தான்!
அன்று இருட்டிய பின் கல்முனையிலிருந்து பாபூஜி ஐஸ்கிரிம் வண்டி ஸ்பீக்கர் சத்தத்தோட வரும். ஊர் எல்லையில் வரும் போதே அதன் சத்தம் கேட்கும், பாட்டும் லைட்டுமாய் வரும் வண்டிக்கு பின்னால் தெருவின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை ஓடுவோம்.
அப்பா வீட்டில் இருந்தால் தான் ஐஸ்கிரிம் கிடைக்கும்.அப்போதானே காசும் வீட்டில் இருக்கும்.அப்பா இல்லாத நாளில் ஐஸ்கிரிம் வண்டி வந்தால் வண்டியை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டே நிற்போம்!
இன்றைக்கு மாதத்துக்கு நான்கு தடவை புதுத்துணி எடுத்தாலும் அக்காலத்தில் பண்டிகை எனில் அதிகாலையில் தலைக்கு குளித்து சீத்தைத்துணி சட்டையை மகிழ்ச்சியோடு அணிந்து சர்ச்சுக்கு போய் வந்து பலகாரங்கள் சாப்பிட்டதை போல் சுவையாய் இல்லை.
வயிறு நிறைய சாப்பிட தின்பண்டம் இருக்கின்றது.கப்பேர்ட் நிறைந்த துணிகள் இருக்கின்றது. ஆனாலும் எதையோ இழந்தது போல் உணர்வும் மனதில் ஆழத்தில் உறங்கிக்கொண்டே இருக்கின்றது!

தொடர்வேன்!
அனைவருக்கும் 
இனிய தீபத்திருநாள் 
நல் வாழ்த்துகள்! 

21 ஜனவரி 2016

நான் சின்னவளாய் இருந்தபோது.-5

சின்னவளாய் இருந்த போதான என் நினைவுபெட்டகத்தில்  நான் கற்றவைகள், பெற்றவைகளில்  என் நான்காவது வயதிலிருந்து  நடந்த சம்பவங்கள் இன்றும் நினைவுக்கு வருவது ஆச்சரியமானது தான்.

எங்கள் வீட்டில் நான் மூத்த பெண் என சொல்லி இருக்கின்றேன், எனக்கு அடுத்து  மூன்று தங்கைகள், அதைத்தொடர்ந்து தம்பி, கடைசியாய் ஒரு தங்கை, ஐந்து பெண்கள், ஒரு ஆண் என மிகப்பெரிய குடும்பம் எங்களுடையது,

எனக்கும் என் தங்கைகளுக்கும் ஒன்றரை வயது தான் வித்தியாசப்படும் என்பதோடு நான் பிறந்த பொழுதினில்  மட்டக்களப்பு அமிர்தகளியில் மாமாங்க கோயில எனும் பிரசித்தி பெற்ற கோயிலை ஒட்டி சொந்தமாய் வீடு மற்றும்  வசதியாக இருந்திருக்கின்றோம். அந்த வீட்டை விட்டு என்  ஆறாவது வயதுக்கு முன்பு புறப்பட்டு விட்டாலும் அதன் பின் அந்த வீட்டுக்கு திரும்பி போகும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் எனக்குள் அந்த வீடும், நினைவுகளும் இன்றைக்கும் ஏக்கம் தரும் ஒன்றுதான் ,சந்தர்ப்பம் கிடைத்தால் என் வாழ்க்கையில் ஒரு தடவையாகிலும் அந்த இடத்தை சென்று பார்க்க வேண்டும் எனும் ஏக்கம் என்னுள் உண்டு.

அந்த வீட்டை அம்மாவுக்கு சீதனமாக கொடுத்த தாத்தா சொந்த தாத்தா இல்லை. அம்மா மேல் பாசம் வைத்ததால் தன் சொந்த பிள்ளைகளுக்கு கொடுக்காமல் அம்மாவுக்கு கொடுத்தாராம். என்னிடமும் பாசமாக இருந்திருகின்றார்.

நடுவில் இரு அறைகளுடன்,இருபக்கங்களும் தாழ்வாரம் போன்ற நீண்ட பகுதியும், பெரிய கடையுமாய் திருவிழாக்காலங்களில் சர்பத் போன்ற இனிப்பு பதார்த்தங்கள் விற்கும் கடையாய் அவை பயன் பட்டதும், சர்பத்தின் சுவையும்,அதில் மிதக்கும் கசகசா,சேமியா போன்றவைகளின் சுவையும் தென்னை மரங்களும் கூட எனக்குள்  நினைவு இருப்பது ஆச்சரியமே!

விட்டுக்கு முன்னே  கோயிலுக்கும் சற்று முற்பகுதியில் மைதானம் போன்ற வெள்ளை மணல் பரப்பு இருந்ததில் அதில் பெரியவர்கள்  நிலவு ஒளியில் அமர்ந்து பேசுவதும்   நான் குமார், தேவி என எனை ஒத்த நண்பர்களுடன்
விளையாடிய நினைவும்
குமார் குமார் லைட் அடி 
கோழிக்கூட்டுக்கு லைட் அடி, 
எத்தனை மாதம் சம்பளம், 
மூன்று மாதம் சம்பளம். . 
மாமா எங்கே படுக்கின்றார், 
மாடி வீட்டில் படுக்கின்றார்
அத்தை எங்கே இருக்கின்றாள்
அடுத்த வீட்டில் இருக்கின்றாள்
நம்ம வீட்டில் கல்யாணம்  
தெருவிலெல்லாம் ஊர்க்கோலம் 
டொம் டொம் டொம்

என குமாரை கேலி செய்து  பாட்டு சொல்லி தந்ததும்  நினைவில் இருக்கின்றது.

1978 ல் இலங்கையில் கிழக்கு மாகாணத்தை  தாக்கிய சூறாவளியில்,வீட்டின் ஓடுகள் உடைந்து விழுந்ததும் , மேசைக்கு கீழாய் என்னை பாதுகாத்ததும், ஓடு விழுந்ததனால்  ஓடு வேய்ந்த வீடு  பாதுகாப்பானது    எனும் நம்பிக்கையில் எங்கள் வீட்டில் வந்து பாதுகாப்பாக இருக்க நினைத்த   பக்கத்து வீட்டு ஆண்டியின் முழங்காலில் ஓடு விழுந்ததும்,பக்கத்து குடிசைகள் மேல் வேய்ந்த ஓலைகளை காற்றள்ளி சென்றதுடன், ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த தென்னை மரங்களும் வீடுகள் மேல் சரசரவென சாய ஆரம்பித்து விட்டன. இதனால் வீடுகளின் குடியிருப்பது பாதுகாப்பில்லை என கொட்டும் மழையிலும், சுழன்றடிகும் காற்றிலும் அனைவரும் ஒருவரையொடுவர் பிடித்து கொண்டு மாமாங்க கோயிலுக்கு செல்ல  இடுப்பளவு நீரில் நடந்ததும் நடக்கும் போது என்னை தாத்தாவும், தங்கையை சித்தப்பாவும் தூக்கி தோளில் வைத்து பாதுகாப்பாய்  அணைத்து சென்றதும், அம்மா என் மூன்றாவது தங்கையை வயிற்றில் சுமந்ததுமாய்  என் நினைவுகள் கூடவே வருகின்றது.

அன்றைய தினம் என் அப்பா வேலை நிமித்தம் சென்று விட்ட சூழலில் அப்பாவின் தம்பி சித்தப்பா, தாத்தா என எங்களுடன் இருந்தது, என் இரண்டாவது தங்கை ஹேமா சித்தப்பாவின் செல்லப்பெண் என்பதால் அவர் அவளை தூக்கிக்கொண்டு அலைந்ததும்   மறக்க முடியவில்லை. புயலுக்கு மறு நாள் பதறி அடித்து ஓடி வந்த அப்பா  புயலாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கொடுக்கின்றார்களாம் என அறிந்து என்னை தூக்கி கொண்டும் சித்தப்பா தங்கையை தூக்கிக்கொண்டும் போய் கோதுமை மா, பேரிச்சம் பழம் வாங்கி வந்ததும் புயலாய் விழுந்த தென்னை மரங்களின் குருத்துக்கள் இளநீ ர்களை சாப்பிட ஓடித்திரிந்ததும் . சின்னக்குழந்தைகளுக்கு முதலிடம் என்பதால் பக்கத்து வீட்டு மாமாக்களும் மாறி மாறி எங்களை தூக்கிட்டு போய் நிவாரணப்பொருட்களை வாங்கியதும் நீங்காத நினைவில்.!

சின்ன வயதில் என்னை தரையில் நடக்கவே விடாத படி அப்பாவுக்கு தெரிந்த நண்பர்கள்  முன்று மாமாக்கள் என்னை தூக்கியே வைத்திருந்ததும், அவர்கள் என் பத்தாவது வயது வரை அதை சொல்லி என்னை தம் மடியில் இருத்தி கொள்வதும், அம்மாவின் ஒன்று விட்ட அக்கா பூமணி பெரியம்மா, கிட்டப்பா பெரியப்பாவையே நான் முதன் முதலில் அம்மா, அப்பா என அழைத்ததும், அவர்கள் என்னை வளர்த்ததும் திருகோணமலையில் பெரியப்பாவின் கடையில்  நான் செல்லப்பெண்ணாக அவர் மடியில் அமர்ந்து  தேன் குழல்களை சாப்பிட்டதும் என் அம்மா என் சின்ன தங்கையை  பெரியம்மா வீட்டுக்கு கூட்டி வந்த போது நான் பெரியம்மாவிடம்   அம்மா அம்மா சித்தி குட்டிப்பாப்பா வாங்கி வந்திருக்கிறா, அவள் வேண்டாம் என  சொல்லி அழுததாக சொல்வதும்  எனக்குள்  மறக்கவே இல்லை.

இந்த நினைவுகள் அனைத்துமே என் ஐந்து வயதுக்குள் என சொன்னால் நம்புவீர்களா?

பிள்ளைகள் இல்லாததால் பெரியப்பா பெரியம்மா என்னை   வளர்த்ததனால் தானோ என்னமோ எனக்கு இன்று வரை என்னை பெற்ற அம்மாவுடன் ஒட்டுதலில்லாமலேயே இருக்கின்றேன்.

எனக்கு என் தங்கை தம்பி ,அவர்களை தூக்கியது, விளையாடியதான நினைவுகள்   தம்பி  பிறக்க வேண்டும் என்பதற்காக அம்மா  இலங்கையில் கதிர்காம கோயிலுக்கு நேர்த்திக்கடன் வைத்து கந்த சஷ்டி விரதம் இருந்ததில்ருந்து தான் ஆரம்பமாகின்றது.

அது வரை அல்லது நான் பள்ளி செல்லும் வயது வரை என் தங்கைகளுடன் இருக்க வில்லை. என்னுடைய ஆறு வயது முதல் பத்து வயது வரை தான் நாங்கள் இணைந்திருந்தோம்.   மீண்டும் 10 வயதின் பின் நான் என் சகோதரிகளுடன் இல்லை என்பதனால்  என் மொத்த வாழ்க்கையில் நாங்கள் வெறும்  ஐந்து வருடங்கள் மட்டுமே  ஒன்றாய் இருந்தோம். அதன் பின் என் அப்பா நாட்டின் சூழ் நிலை கருதி நாட்டை விட்டு புறப்பட அம்மா என் இரு தங்கைகளின் படிப்புக்காக அவர்களை ஹாஸ்டலில் விட்டு விட்டார். பின் 15 வயது வரை என் தம்பியும் நான்காவதும், கடைசித்தங்கையும் இணைந்திருந்தோம். அதன் பின் என் 16 வயதில் அவர்களை விட்டு புறப்பட்டேன்.  

நான் என் குடும்பத்தினை விட்டு அதிக நாட்கள் பிரிந்தே இருந்திருக்கின்றேன் அதனால் அம்மா, அப்பா, சகோதர சகோதரிகளுக்குள் இயல்பாய் வரவேண்டிய ஒட்டுதல் பாசம் எனக்கு மட்டும் கிடைக்காமல் இருப்பதும்,  மற்ற அனைவரும் தமக்குள் ஒன்று பட்டு இருக்க நான் என்றும் வேற்று ஆளாய் தோன்றுவதும் என் சின்ன வயது சூழலால் தான் என  நான் நினைக்கின்றேன். என் உடல் மட்டும் அல்ல   உள்ளமும்,  தொலை தூரமாக இருப்பதாகவே உணர்கின்றேன். 

மட்டக்களப்பு அமிர்தகளி மாமாங்க கோயில் முன்பாக என்னுடைய அம்மாவும் நானும்   தங்கைகளுடன் இணைந்து  எடுத்த போட்டோ,



நான் குட்டிப்பெண்ணாய் இருக்கும் போது  கன்னம் வைத்து புஷ்ஷுனு குண்டாய் தான் இருப்பேனாம்,  எப்பவும், இப்பவும்  குண்டு குண்டு பூசணிக்காய்தான்!

இன்றைக்கு இந்த படத்தில்  இருக்கும் நால்வரும் ஆளுக்கொரு திசையில் சிதறடிக்கப்பட்டு விட்டோம்.  ஒரே வெள்ளைவர்|ண துணி சட்டை போட்டிருக்கும் நானும் தங்கையும் சுவிஸர் லாந்திலும்  ஆரஞ்சு சட்டை அவுஸ்ரேலியா சிட்னியிலும், அம்மா கையில் இருக்கும் குட்டிப்பாப்பா ஜேர்மனியிலுமாய்  புலம் பெயர்ந்தும் விட்டோம். என்னுடைய பத்தாவது வயதில் அப்பா எங்களை விட்டு  சுவிஸ் வர  புறப்பட்டதிலிருந்து இன்று வரை நாங்கள் மொத்தக்குடும்பமும்  ஒன்று சேரவும் இல்லை. கடைசித்தங்கை, தம்பி திருமணம் என நடந்த போதும் யாரோ ஒரு தங்கை கலந்து கொள்ள முடியாமல் போகும் சூழல் தான் இருக்கிறது.

படிப்பு நிமித்தமோ.குடும்பம் பெரிதானதாலோ மட்டக்களப்பை விட்டு பெரிய கல்லாறுக்கு  வாடகை வீடு மாறி என் ஆறாவது வயதில்  முதல் முதலாக பாடசாலை  பெரியகல்லாறு வினாயகர் வித்தியாலயம் போன நினைவு கூட என் நினைவில் இருக்கின்றது. அக்காலங்கள் தான் என் வாழில் பொற்காலங்கள் என்பேன்.

அந்த வீட்டில் பதினொரு வயது வரை இருந்த போதான நினைவுகளை   நான் சின்னவளாய் இருந்தபோது.-4 காணலாம்எ
ன் பாடசாலை அனுபவங்களை. நான் சின்னவளாய் இருந்தபோது.- 2 சென்றும் காணலாம்.

முதலாம் வ்குப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை கற்ற பாடசாலை.
பட உதவி நன்றி பேஸ்புக் தமிழ் பிரியன் 


சின்ன வயதில் நாங்கள் விளையாடிய வினா விடை பாடல்கள் பல புதிய சொற்களை கற்றிடவும்  நினைவாற்றல் பெருக்கிடவும் உதவியது எனலாம்.
அப்படிப்பட்ட சில பாடல்ளை இந்த தொடரிலும் பார்க்கலாமா?

நிலாநிலா
எங்கே போறாய்?
மண் எடுக்கப் போறேன்.
மண் என்னத்துக்கு?
சட்டிபானை செய்ய.
சட்டிபானை என்னத்துக்கு?
சோறாக்கித் தின்ன.

இந்த மாதிரி பாடல்களை கேட்டு விளையாடிய நினைவு இருக்கின்றதா உறவுகளே!

நிலாநிலா
எங்கெங்கேபோனாய் ?
களிமண்ணுக்குப் போனேன்.
களிமண் என்னத்துக்கு? வீடு கட்ட.
வீடு என்னத்துக்கு? மாடு கட்ட.
மாடு என்னத்துக்கு? சாணி போட.
சாணி என்னத்துக்கு? வீடுமெழுக.
வீடு என்னத்துக்கு? பிள்ளைபெற.
பிள்ளை என்னத்துக்கு?
எண்ணெய்க் குடத்திலே போட்டுப்
பிள்ளை துள்ளித் துள்ளி விளையாட

இதையும் படித்து பாருங்கள். உங்கள் நினைவுகளில் மீட்ட முடிந்தால் அதையும் பகிழுங்கள்.

ஒரு கொத்து ஈச்சங்கொட்டை வறுத்துகொட்டி
ஒன்பதுபேராகக் கூடிகுத்தி
கல்லடிநாச்சிக்குக் கல்யாணமாம்
கருகப்பிலையால் தாலிகட்டி.


என்னதாலி... பொன்தாலி-

என்னபொன்.... காக்காப்பொன்
என்னகாக்கா....அண்டங்காக்கா
என்னஅண்டம...பனையண்டம்
என்னபனை....ஓட்டுப்பனை
என்னஓடு....ஆமைஓடு
என்னஆமை.....பாலாமை
என்னபால்...கள்ளிப்பால்
என்னகள்ளி....சதுரக்கள்ளி
என்னசதுரம.....நாய்ச்சதுரம்
என்னநாய.....வேட்டைநாய்
என்ன வேட்டை....பன்றிவேட்டை
என்னபன்றி....ஊர்பன்றி
என்னஊர்.....கீரையூர்
என்னகீரை....மண்டூர்க்கீரை
என்னமண்டூர்....தில்லைமண்டூர்
தில்லைமண்டூருக்குப் போவோமடி

ஆச்சரியம் தரும் விடயம் என்ன தெரியுமா? இப்பாடல்களில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் கல்லடி நாச்சி, மண்டூர், கிரான் குளம் எல்லாமே இலங்கை கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் அமைந்திருக்கும் ஊர்களில் பெயர்கள்.கல்லடி நாச்சி என்பது கல்லடி எனும் ஊரில் இருக்கும் அம்மன் கோயிலையும்,  தில்லை மண்டூர் என்பது சின்னக்கதிர் காமமென அழைகப்படும்  முருகன் கோயிலை கொண்ட பிரசித்தி பெற்ற இடமாகவும்.
கிரான் குளம் எனும் ஊரும்  முந்திரியம் பழக்களுக்கு பெயர் போனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்பாடல்களை இயற்றியவர்கள் யார் என தெரியாவிட்டாலும் செவி வழியாக தொடர்ந்துகேட்டுப்பாடியே வருவது தான் இங்கே கவனிக்கத்தக்கது

ஒருவர் கேள்வியாய் கேட்க.. அடுத்தவர் சட்டென பதில் சொல்ல சிறுவர்கள் இருக்கும் இடத்தில் ஒரே கூச்சலும் கும்மாளமுமாய் குதுகலம் தரும் விளையாட்டும் இது!

கடலை கடலை 
என்ன கடலை...... உருண்டைக் கடலை
என்னவுருன்டை...... மாவுருண்டை
என்ன மா.....என்னம்மா



வாழைப்பழம்:...... 

என்னவாழை:.....கப்பல்வாழை
என்னகப்பல்: .......பாய்க்கப்பல்
என்னபாய்: பன்பாய்
என்னபன்:.....குளத்துபன்: 
என்னகுளம்: கிரான்குளம்

i

இது என்ன விளையாட்டு என நினைவிருக்கின்றதா உறவுகளே! இவ்விளையாட்டு குறித்த என் நினைவுகள் அடுத்த பதிவில் பார்க்கலாம்!

தொடர்வோம்>>>>>>>>>