ஆலோசனைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆலோசனைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 ஆகஸ்ட் 2019

தேச பக்தி என்பது..சுயத்தை இழப்பதல்ல.!

சுயமாக சிந்திக்காமல் ஒரு கட்சி அல்லது அமைப்பின் செயல்பாடுகள் அனைத்தையும் நியாயப்படுத்தி அவர்கள் செய்வதெல்லாம் சரி என வாதிடுவது தான் தேச பக்தி என்றால்............!
அந்தத்தேச பக்தி...........!
என் செருப்புக்கு சமானம்........!

நான் சொல்லல்ல..
சொன்னவர் சுபாஷ் சந்திரபோஷ்.

அவர் சொல்லவில்லை என்றாலும் 
நான் சொல்லுவேன்
தேச பக்தி என்பது சுயத்தை இழப்பதல்ல!
தேச பக்தி என்பது மக்களை அடிமைப்படுத்துவதற்கல்ல!
தேசத்தை நேசிப்பது ..! 
தேசத்தை அழிக்கும் காரியங்களில் ஈடுபடுவோருக்கு வக்காலத்து வாங்குவதன் பெயர் தேச பக்தியாய் இருக்கவே முடியாது. 
சமூகத்தின் சீர்கேடுகள் தொடரவும்,சமூக சார்ந்த முன்னேற்றம் தடைப்படவும்,இளைஞர்கள் வழி தடம் மாறிச்செல்லவும் இம்மாதிரியான சுய சிந்தனை அற்றவர்கள் தான் மூல காரணம்.

அன்னியன் அல்ல எம்மவனே எமக்கெதிரி.


21 ஜூலை 2019

கறுப்பு யூலை (Black July,) இனக்கலவரமா (Riot)?

 இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவுகள் 12, 13 மற்றும் 14&ன்படி இலங்கையின் பிரஜைகளுக்கு அந்த நாட்டில் எங்கு வேண்டுமானாலும் வசிப்பதற்கான உரிமையென்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக வழங்கப்பட்டுள்ளது.
👩‍⚖️
கறுப்பு யூலை (Black July,) 
ஜூலை 23, 1983

இலங்கை சிங்கள இனவாதிகளால் தென்னிலங்கையில் தமிழன் என அடையாளம் காணப்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். 
இரண்டு வாரங்களுக்கும் மேலாக தென்னிலங்கையிலும்,மலையகத்திலும் தொடர்ச்சியான கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது.

தமிழர் கடைகள், இருப்பிடங்கள் என அடையாளம் காணப்பட்டவைகள் சூறையாடப்பட்டு எரியூட்டப்பட்டன. தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் கொடுமைகள் நடத்தப்பட்டன.
தமிழர்களுக்கு உதவிய சிங்கள்,முஸ்லிம் மக்களும் தாக்கப்பட்டார்கள்.அவர்கள் சொத்துக்கள் பறிக்கப்பட்டன.

பல முதலாளிகள் ஒரே இரவில் அனைத்தையும் இழந்தார்கள். திட்டமிட்ட படி தமிழர் வர்த்தகம் முடக்கப்பட்டது. பொருளாதாரம் சிதைவுற்றது. அதிகாரங்கள் பறிக்கப்பட்டது. உயிர்ப்பயம் உரித்தாக்கப்பட்டது. தமிழர்கள் தம் சொந்த நாட்டினுள் அகதிகளாக்கப்பட்டார்கள்.
சிறைச்சாலையின் திறவு கோல் வன்முனையாறர்கள் வசம் கை மாறியது. உரிமைக்குரல் கொடுத்தோரின் குரல்கள் நசுக்கப்பட்டது. வெலிக்கடை சிறைச்சாலையில் அரசியல் கைதிகளக அடைக்கப்பட்டிருந்தவர்கள் உட்பட 400 முதல் 3000 பேர் வரை படுகொலை செய்யப்பட்டார்கள்.
கறுப்பு யூலை (Black July,)
இனச்சுத்திகரிப்பா (Ethnic cleansing) ?
இனப்படுகொலையா (Genocide) ? 
இனக்கலவரமா (Riot)?

 
புகைப்படங்கள் இணையத்தில் இருந்தே எடுத்தேன். 

இனக்கலவரம்(Riot) என்றால் என்ன ?
கலவரம் அல்லது Riot என்றால் இரு இனங்கள் அல்லது குழுவினர் மோதிக்கொள்வது.சமூகத்தின் சீரழிவை , இழப்புக்களை உருவாக்குவது.

83 ல் நடந்தது இனக்கலவரமா? இரு இனம் அல்லது குழுக்கள் மோதிக்கொள்வது தான் இனக்கலவரம் எனும் வரையறைக்குள் வருமாயின் அன்றைய நாட்களில் இரு இனங்கள் மோதிக்கொண்டனவா?
எங்கள் மீதான நீதிகளும், நியாயங்களும் ஏன் தூரமாகின்றன?
சிந்திப்போம்.
வெலிக்கடை சிறைச்சாலையில் எமதுரிமைக்காக குரல் கொடுத்தோர் உட்பட கொடூரமாக கொல்லப்பட்ட 56 பேரின் உயிருக்கான நீதி விசாரனைகள் இன்று வரை கிடைக்கவும் இல்லை. எவரும் தண்டிக்க, கண்டிக்கப்படவும் இல்லை.
தமிழர்கள் மீதான அத்தூமீறல்களுக்கு அன்று துணை போன அரசையும் ஆட்சியாளர்களையும்,அதிகாரத்தையும் இன்று நல்லாட்சி என எமது அரசியல் வாதிகளே தாங்கிக்கொண்டுள்ளார்கள்.
.😭


மேலதிக விளக்கம் தேடி...
*********************************

இனச்சுத்திகரிப்பு என்றால் என்ன? 
Ethnic cleansing

ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட இனத்தவர் தவிர வேறு எவரும் இருக்கக்கூடாது’ என்ற எண்ணத்தோடு மற்ற இனத்தவரைப் பலவந்தமாக அப்புறப்படுத்தும் நடவடிக்கையே ‘இன சுத்திகரிப்பு’ என்று அழைப்படுகிறது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விதிகளின்படி இது மனித குலத்துக்கு எதிரான குற்றமாகும். ஐ.நா. சபையும் இதை இன அழித்தொழிப்பு நடவடிக்கைக்கு இணையான குற்றமென்று
வகைப்படுத்தியிருக்கிறது.

Ethnic cleansing is the systematic forced removal of ethnic, racial and/or religious groups from a given territory by a more powerful ethnic group, often with the intent of making it ethnically homogeneous.[1][page needed] The forces applied may be various forms of forced migration (deportation, population transfer), intimidation, as well as genocide and genocidal rape.
Ethnic cleansing is usually accompanied with efforts to remove physical and cultural evidence of the targeted group in the territory through the destruction of homes, social centers, farms, and infrastructure, and by the desecration of monuments, cemeteries, and places of worship.

புகைப்படங்கள் இணையத்தில் இருந்தே எடுத்தேன். 
இனப்படுகொலை (Genocide)
ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால், உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுப்பது, கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது, இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தைப் பிறப்பை தடுப்பது, குழந்தைகளை இடம் பெயரச் செய்வது, வேறு எவ்வகையிலாயினும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றமுறை செயல்களாக, இனப்படுகொலைக் குற்றங்களாக சர்வதேச தடைச்சட்டத்தின்படிக் குற்றச்செயலாகும்.

17 ஜூலை 2019

மதமெனும் மதம் பிடித்தாட்கொள்வோர்க்கு.....?



அறிவுடை மாந்தர், அறிவினை தொலைத்தார்
அழிவினை நாடும், அகமதை கொண்டார்.

சைவமென்றும் வேதமென்றும் 
சாகாச சாணக்கியர்களின் 
சூழ்ச்சிகள் ஜெயித்து
அரங்கேற்றமாவதும்..........?

சாவது வந்தும்,சாதியை சுமந்து 
மனிதம் தொலைந்து, 
மனங்களை கொன்று,
மதங்கொண்ட மனிதர்களாவதும்............?

பட்டகாலில் பட்டதும்
தொட்ட குடியெல்லாம் கெட்டதும் 
பகுத்தறிந்திடும் பட்டறிவென 
சலசலப்பதும்.......?

இலக்கினை தொலைத்த 
இனமொன்றாய் ..............?

வீதியில் நிற்பதே எம் விதி என ஆனதோ?
🌚🌚🌚
மனிதம் தொலைத்து மதம் பேசுவோர் சற்று எட்ட நில்லுங்கள்.
மனிதர் வாழட்டும்.
நீங்கள் விதைப்பதையே அறுவடை செய்வீர்கள் என்பதையும் மறவாமல் விதையுங்கள்.😭

புகைப்படம்  சொல்லும் சேதி???/ 😭😭😭😭😭😭

ராஜஸ்தானில் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு நபர் உயர் ஜாதி சமூகத்தை கைநீட்டி பேசியதன் காரணத்தால் கைகள் வெட்டப்பட்டு நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார்....
இது தான் நீதி.....இந்தியாவின் இந்துக்களுக்கான நீதி... இந்த நீதி இன்னும் இலங்கைத்தமிழர்களுக்குள் பரவலாகவில்லை.
இனி அதுவும் நுழைந்து விடலாம்.


20 ஜூன் 2019

நாங்கள் எதை நோக்கி பயணிக்கின்றோம்?

இன்றைய இருப்பை தக்க வைத்து கொள்ள முடியாமல் வக்கத்து போயிருக்கும் எமக்கு என்னிக்கோ செத்துப்போன ராஜராஜனை குறித்து பேச என்ன அருகதை இருக்கின்றது?
எவனவனோ சம்பந்தமில்லாதவன் ஊருக்குள் வந்து எம் நிலத்தை ஆக்ரமிக்கின்றான். கையாலாகா தனத்துடன் கை கட்டி வேடிக்கை பார்க்கின்றோம்.
ஆனால் பாருங்க...😭😭😭
ராஜராஜன் மேல் குற்றம் சாட்டி இருக்கும் ரஞ்சித்துக்கு ஆதரவாக Change.org மூலம் கருத்து சேகரிக்கின்றார்களாம்? இது வரை 5000 க்கும் அதிகமானோர் ஆதரவு வாக்களித்தும் இருக்கின்றார்கள்.
Change.org, எனும் தளம் காப்ரேட்டுகள் சார்ந்ததாக இருந்தாலும் நாட்டுக்குள், ஊருக்குள், சமூகத்துக்குள்
எனும் சிறுவட்டத்தினுள் சுழலும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை நியாயமாக பெறும் வாய்ப்பை உருவாக்கி தருகின்றது. உலகத்துக்கு மக்களுக்கு எங்கள் பிரச்சனைகளை கொண்டு சேர்ப்பதோடு அதன் சாதக பாதகங்களை அலசி ஆராய்கின்றது.

Change.org இனூடாக விண்ணப்பங்கள் மக்கள் பிரச்சனைகள், தனி நபர் பிரச்சனைகளுக்கான நீதி வேண்டி விணப்பிக்கின்றது. ஆதரவாளர்களை திரட்டுகின்றது. தேவைப்பட்டால் வழக்காடவும், அது சம்பந்தமான் நிதி சேகரிப்பு மற்றும் நீதிக்காவும் உதவி செய்கின்றது.
நான் பல்வேறு சந்தர்ப்பங்களில் இத்தளத்தினூடான பிரச்சாரங்களுக்கு ஆதரவளித்திருந்தேன்.
உலகத்தின் இயற்கைப்பாதுகாப்பு, சுற்றுச்சுழல் பாதிப்பு பிரச்சனைகளுக்காக குரல் இந்தளத்தினூடாக உலகமெங்கும் எதிரொலிக்கின்றது.
உதாரணமாக மரங்களை வெட்டி சாலை அமைக்கும் போது, அம்மரங்களை குறித்த முழுமையான தகவல்களை, வெட்டப்படும் மரங்களை குறித்த முழு விபரங்களை நாம் இத்தளத்தினூடாக கொண்டு சேர்த்தால் சேவ் கிரின்அமைப்பும், உலக இயற்கை பாதுகாப்பு அமைப்பின் பார்வைக்கும் மரங்களின் பாதுகாப்பினை குறித்த கவனமெடுத்தலுக்கு கொண்டு செல்வதோடு,மாற்று வழிகளை குறித்து ஆராய்ந்து. மக்கள் குரல்களை ஒன்று திரட்டுகின்றது. அம்மரங்களை பாதுகாக்க போராடுகின்றது.
கஜா புயல். 
டெல்டா மாவட்டங்கள் எதிர் நோக்கும் வளமிழப்பு பிரச்சனை நேரமெல்லாம் இத்தளம் குறித்து நான் பல பதிவுகள் இட்டு நினைவூட்டினேன், இங்கே கற்றோரென சொல்லிக்கொள்வோர் கண் மூடி கடந்தார்கள். சிலர் காது கொடுக்க கூட தயாரில்லை. டெல்டா என ஒரு புயல் அடிச்சு அதனால் ஏற்பட்ட இழப்புக்கள், மித்தோன் கிணறுகளின் ஆக்ரமிப்புக்கள் குறித்து ஆங்கிலத்தில் எந்த ஆவணமும் பதிவாக்கப்பட்டதாகவும் தெரியவில்லை.

போன மாசம் ஒரிசாவில் புயல் அடிச்ச அன்றிரவே சுடச்சுட அத்தனையும் பதிவாச்சு.
ஆனால் தமிழ் நாட்டில்...? புளிச்ச மாவை டிரெண்ட் ஆக்க துடிக்கும் எமக்கு எமது சந்ததிகள் எதிர்காலம் குறிச்சு சிந்திக்க நேரமில்லை.
மக்களுக்கு எது தேவை என குரல் கொடுப்போர் குரல்வளை தான் நெரிக்கப்படுகின்றது.
கருத்து சுதந்திரம் எனும் பெயரில் ரஞ்சித்து போன்றவர்களின் காலத்துக்கு உதவாத, மக்கள் பிரச்சனைகளை திசை திருப்பி விடுவோரின் தனிப்பட்ட, ஆதரமில்லாத கருத்துக்களை டிரெண்ட் ஆக்கி அதற்கு ஆதரவு பிரச்சாரமும் செய்வோரை எவ்வகையில் சேர்ப்பது?
நாங்கள் எதை நோக்கி பயணிக்கின்றோம்?
எனக்கு புரியத்தான் இல்லை. உங்களுக்கேனும் புரிகின்றதா?




07 மே 2019

எதிலிகளை, எதிலிகள் உணராமல் ...?

விளைச்சல்களை வளைத்துண்ணும் 
செயற்கரிய செயற்கைப்பரப்பலால்
துரோகிகள் சூழ் உலகிலே
எதிலிகளாயானோர்
எதிர்காலம் இருண்டதாய்
எதிரிகள் நிறைந்ததாய்
மனித மமதையால் மதம் பிடித்தாட
மதமென்ன மனமென்ன 
இனமென்ன இடமென்ன 
எத்தனை தனமிருந்தென்ன? 
அத்தனையும் ஒரு நொடியில் ....? 
விதி என்போம், சதி என்போம், 
நம் மதி மறைக்க துதி செய்வோம்.

வளியதுக்கெல்லை இல்லை 
என்றுணர்ந்தோர் - வலியது 
வலிமையாய் வழியதை,அடைக்குமோ?

பாகிஸ்தானிலிருந்து எதிலிகளாய் இலங்கையின் தஞ்சமடைந்து இருப்பிடம் தேடி வீதிகளில் அலையும் 
குழந்தை 😭😭

நாங்களும் ஒரு நாள் இப்படித்தான் அலைந்தோம்.


03 மே 2019

மதம் எனும் பெயரில் மதம் பிடித்து அலைவோர் ....?

மதம் எனும் பெயரில் மனங்களில் மதம் பிடித்தலையும் அனைவரும் தீவிரவாதிகளே........!
மனிதர்களை சுயமாக சிந்திக்க விடாது, தாம் கொண்ட கொள்கைகளை மட்டுமே சரியானதென இனம்,மொழி,ஜாதி எனும் குறுகிய வட்டத்தினுள் சிந்திக்க, செயல்பட கற்பிக்கப்படுவதும் ஒருவகை தீவிரவாதமே......!
இந்துவோ,கிறிஸ்தவனோ,முஸ்லிமோ,பௌத்தனோ அவன் நம்பிக்கையை அவனுக்குள் வைத்து அவன் சார்ந்த மதம் சொல்லும்,அன்பை,அகிம்சையை, பொறுமையை,விட்டுக்கொடுத்தலை,சகிப்புத்தன்மையை போதிப்பவர்களாக இல்லை.
மத கட்டுப்பாடுகள் எனும் பெயரில் மனிதர்களை வெல்வதாக நினைத்து 
மதத்தின் பெயரால் தீவிர வாதிகளை உருவாக்கப்படுகின்றார்கள். 

எல்லா மதத்தினுள்ளும் மதத் தீவிரவாதிகள் உண்டு.

மனிதர்கள் ஆண்டாண்டு காலமாக தொடரும் நம்பிக்கைகளை கை விட்டு இன்னொன்றின் மீதான பற்றை உருவாக்க முடிவது என்பது இலகுவானது இல்லை. தம் மூதாதைய்ர் பின்பற்றியதாக சொல்லி கடைப்பிடிக்கும் நம்பிக்கைகளை விட்டு விலகி புதிதாக ஒன்றை நம்புகின்றார்கள் எனில் அதற்கான உளவியல் காரணம் என்ன என்பதை ஆராய வேண்டும்.
தீர்வுகளை தேட வேண்டும். ஊருக்கொரு வணக்க ஸ்தலம் கட்டுவதை விட ஊரிலிருக்கும் மக்களின் குறைகளை தீர்க்க முன் வர வேண்டும்.
பெருமைக்காக வானுயர்ந்த வணக்க ஸ்தலங்களை கட்டி, அங்கே கடவுள் எனும் பெயரில் ஒன்றை அமைத்து தங்கத்தாலும், வைரத்தாலும் அலங்கரிக்க மனிதனோ பசியாலும், தாகத்தாலும் துடிக்கின்றான். 
அவன் பசியை இன்னொரு மனிதன் தனக்கு சாதகமாக்குகின்றான்.

தன் நிறைவை அடைந்த மனிதனை எதனாலும், எவராலும் அசைக்க முடியாது. மனிதர்களை தன் நிறைவடைந்தவர்களாக மாற்றும் வழிகளை காட்டாமல் மதங்கள் மூலம் மதங்களை வெல்ல முயற்சிப்பது அப்பாவி மக்களை அழிவின் விளிம்பில் கொண்டு விடுகின்றது.
மனிதர்களின் இயலாமையை தமக்கு சாதகமாக பயன் படுத்துவதும்,பசியால் தவிப்பவனுக்கு சோறு கிடைக்கும் என சொல்லியும்,வறுமையை வெல்லவும் மதங்கள் மாற்றம் என்பது மனங்களை வன்முறை பாதைக்கே வழி காட்டுகின்றன.
என் கடவுள்,என் நம்பிக்கை எனும் பெயரில் ஏட்டிக்கு போட்டியாக அப்பாவி மக்களை தம் செல்வாக்காலும், அதிகாரத்தாலும் வசப்படுத்தி, மூளைச்சலவை செய்வதும், வன்முறையை விதைப்பதும் தீவிரவாதிகளை உருவாக்குகின்றது.
பிறப்பை போலவே மனிதர்களின் மதங்கள் என்றுமே மாறுவதில்லை. மனங்கள் தான் மாறுகின்றன.
மாற்றம் ஒன்றை தாம் உணர்ந்து கடைப்பிடிக்கும் மனிதர்கள் இங்கே அரிது.

ஏதோ ஒரு சுயலாபம், சுய நலம் கருதி மதம் மாறியதாக நம்பி தாம் அதுவரை கடைப்பிடிக்கும் நம்பிக்கைகளோடு தம் பிழைப்புக்காக ஏற்றுக்கொள்ளும் புதிய நம்பிக்கையை கடைப்பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உருவாக்கபப்டும் குழப்பங்களால் அடிப்படை மதம் எனும் நம்பிககையே தோற்கடிக்கப்படுகின்றது.
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை செல்லுமென நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள்? 
நெருப்புக்கு அஞ்சி, எண்ணெய்ச் சட்டிக்குள் விழுவதில் வீரர்களாக நாம் வரலாற்றில் பதிவாகிக்கொண்டே இருக்கின்றோம்.

வாழ்க்கையில் பட்டறிவும், கல்வி தந்த பட்டறிவும் செல்லாக் காசாகிக்கொண்டிருக்கின்றன.

05 ஏப்ரல் 2019

எதிர்கால சமூதாயமும் சிறுவர் எதிர் நோக்கும் பிரச்சனைகளும். ........!?

தடம்மாறி,தடுமாறும் குடும்பங்களும்,
கேள்விக்குறியாகும், குழந்தைகளின் எதிர்காலமும் ........!? 

தொன்மை மிக்க தமிழ் மொழியும்,தமிழ்க்கலாச்சாரமும், தமிழர் வாழ்வியலும் உலகத்தாரால் ஊன்றிக்கவனிப்பட்ட 
ஒருவனுக்கு ஒருத்தி எனும் சமூகக்கட்டுப்பாடும்
எமது மககளிடையே உடைய ஆரம்பித்திருக்கின்றன.

சமூகத்தை கட்டியெழுப்புவதில் பெரும்பங்காற்றும் குடும்பம் எனும் கட்டுமானம் சிதறுவதனால் எதிர்கால சமூகமாக உருவாகப்போகும், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றார்கள்.
பெற்றோரின் அன்பு முழுமையாக கிடைக்காத குழந்தைகள் நாளடைவில் சமூகத்தின் தீங்கை விதைப்போராக உருவாக்கப்படுகின்றார்கள்.
உறவுகளும், சமூகமும் தங்களை ஒதுக்குவதாக நினைத்து தம் வாழ்க்கையை அழித்து சமூகத்தை பழிவாங்கி தம்மை தாமே ஆற்றுப்படுத்தி கொள்கின்றார்கள்.

வன்மம் கொண்ட மனங்கள் அதிகரிப்பதனால் சிறுவர் துன்புறுத்தல்களும், பாலியல் ரிதியான தாக்குதல்களையும், உயிரிழப்புக்களையும், பாதுகாப்பற்ற வாழ்க்கையையும் எமது எதிர்கால சிறுவர்கள் எதிர் நோக்குகின்றார்கள்.
சுற்றுப்புற,புறக்காரணிகளை கடந்தும் பிள்ளைகளின் எதிர்காலத்தை பெற்றோர்கள் தீர்மானிக்கின்றார்கள். 
இணைகளில் பிரிதலால் குழந்தைகள் எதிர்காலமானது மிகவும் கவலைக்குரியதாக மாறிக்கொண்டே இருக்கின்றது.

🔘 ஈகோ
🔘பக்குவமற்ற வயதும், துணை தேடலும்
🔘பாரபட்சம் காட்டி,சங்கடம் தரும் உறவுகள்
🔘புரிந்து கொள்ளாத துணை
🔘ஆறுதலாய் சாய்ந்து கொள்ள மனம் விட்டு பேச முடியா இயந்திரத்தனமான வாழ்க்கை
🔘சலனப்படுத்தும் நவீனத்துவம்
🔘உறவுகளுக்கிடையிலான சந்தேகம்,
அவ நம்பிக்கை
🔘சகிப்புத்தன்மை வற்றிப்போதல் 
🔘கட்டுப்பாடில்லாத வாழ்க்கைமுறைத் தேடல்
🔘பொருளாதார தேவைக்கான நிர்ப்பந்தம் 
🔘 வாழ்வியலை போதிக்காத கல்வி
🔘அதீத எதிர்பார்ப்பு, ஆடம்பர மோகம்

என பல காரணங்களினால் தமக்கான துணையை விட்டு விலகி இன்னொரு துணையை தேடும் ஆண்களும்,பெண்களும் அதிகரித்து வருகின்றார்கள்.
நமது சமூகத்தில் மேலை நாடுகள் போல் இன்னொருவர் குழந்தையை தன் குழந்தையாக ஏற்று வளர்க்கும் மனப்பக்குவம் இல்லாததனால் பிரிந்து விட முடிவெடுக்கும் தம்பதிகளின் குழந்தைகளின் எதிர்காலமானது கேள்விக்குறியாகின்றது.
தாயா? தகப்பனா?எனும் விவாதத்தில் குழந்தைகள் வாழ்க்கை இருபக்கமும் அடிபடும் மத்தளமாகின்றன.
அன்பும்,அக்கறையும், பாதுகாப்பும் இல்லாத அலைபாயும் அனாதைக்குழந்தைகளாக எல்லாரும், எல்லாமும் இருந்தும் தனித்தவர்களாக வளர்கின்றார்கள்.
சமீப காலங்களில் குழந்தைகள் மீதான துஷ்பிரயோகம் அதிகரித்திருப்பது உடனடியாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு முக்கிய விடயமாக இருக்கின்றது.
⚫️இப்பதிவில் முதல் பின்னூட்டத்தில் காணொளி ஒன்றை இணைத்துள்ளேன்.
அம்மாவின் அம்மா அம்மம்மாவினால் வளர்க்கப்பட்ட சிறுமியின் அழுகுரலையே நீங்கள் காணொளியில் காண்கின்றீர்கள்.
இலங்கை, கிழக்கில் மட்டக்களப்பு,கிரான்குளம் 9 ஆம் கட்டை வீதியில் வசிக்கும் தமிழ்ப்பெண் தனது பெண் குழந்தையுடன் முதல் கணவரைப் பிரிந்து, இரண்டாவது திருமணம் செய்த பின் மகளை பராமரிக்கும் பொறுப்பை தன் தாயிடம் விட்டு சென்றுள்ளார்.
மகளின் மகளை தேவதை போல் பாதுகாக்க வேண்டிய அம்மம்மா எனும் தாய் அக்குழந்தையை சரியாக பராமரிக்காமல், உணவு கொடுக்காமல் வீட்டு வேலைகள் செய்யும் பணியாளராக நடத்தி இருக்கின்றாராம்,
பள்ளி செல்லும் வயதில் பள்ளிக்கும் அனுப்பாமல் பிள்ளை மீது ஆத்திரப்பட்டு திட்டுவதாகவும், தன்னால் தாங்க முடியவில்லை எனவும், அயல்வீட்டாரிடம் சொல்லி அழுத போது,அதற்கும் அச்சிறுமியை அடுத்து துன்புறுத்தி, வீட்டின் உள்ளறைக்குள் பூட்டி வைத்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அயலவர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்ததனால் அச்சிறுமியின் மீதான வன்மம் அதிகமாகி அடிப்பதோடு, பிள்ளையின் தாயாரும் இணைந்து சிறுமியை துன்புறுத்துவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சில வருடங்கள் முன் காத்தான் குடியில் இளவயது சிறுமி தகப்பனின் இரண்டாம் மனைவியால் துன்புறுத்தப்பட்டபோது முஸ்லிம் அரசியல் வாதிகள், ஆர்வலர்கள் திரண்டு அப்பிள்ளையை பெற்றோரிடமிருந்து பிரித்து சட்ட ரிதியான பாதுகாப்பை உறுதிப்படுத்தியதை நம்மில் சிலர் அறிந்திருக்கலாம்.
எமது சமூகத்துக்கான மீட்பு என்பது நில வளங்கள், கல்வியை மீட்பதுடன் மட்டுமல்ல, எமது எதிர்கால சந்ததியை சரியாக கட்டமைப்பதிலும் இருக்கின்றது.
எமது சிறுவர்களுக்கான உடல்,உளவியல் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதோடு, குறிப்பிட்ட வயது வரைக்கேனும் குழந்தைகளுக்கு தாயின் அன்பும் அரவணைப்பும் கிடைக்க வேண்டும் எனும் உணர்தலையும் எம் பெண்களுக்குள் கொடுக்க வேண்டும்.
சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதும்,தண்டிப்பதும் அக்குழந்தைக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் எமது உடனடிகடமையாக இருந்தாலும், இம்மாதிரி செயல்பாடுகள் தொடர்வதன் பின்னனிக்காரணங்களையும் ஆராய்ந்து தீர்வை தேட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.
நாம் நமது திசை எதுவென தட்டுத்தடுமாறி, அங்குமிங்கும், எங்கும் குறைகள் கண்டு சுட்டிக்காட்டி கொண்டே இருக்காமல்,எமக்குள் இந்த குறைபாடுகள் உருவாக்கப்படும் காரணிகளை கண்டறிந்து அதற்கு தீர்வு காண்பதே சிறப்பாக இருக்கும்,
என்ன செய்ய வேண்டும், எப்படி செயல்பட வேண்டும் எனும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை இங்கே கொடுங்கள். பேசிக்கொண்டிருக்காமல் செயல்pபடுவோம்.
முழுப்படிகளை கண்டு கலங்காமல் முதல் படியில் காலெடுத்து வைப்போம் வாருங்கள் உறவுகளே..😍

அமெரிக்கன் சொன்னால் சரியா தானிருக்கும்...!?

எதை பகிர்ந்தாலும், அமெரிக்காவில் அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வின் அடிப்படையில் என தொடங்குகின்றோம். அமெரிக்கர், ஐரோப்பியர்கள் செய்த ஆய்வுகளின் அடிப்படையில் எமது சமூகத்தின் பிரச்சனைகளை அணுகுவது சரியானதா?
மாறுபட்ட காலநிலை,கலாச்சாரம், பண்பாடு, சமூகக்கட்டுப்பாடுகளை கொண்ட தேசங்களில் , கல்வியறிவு, பொருளாதாரத்தில் தனி நபர் தன்னிறைவை அடைந்திருக்கும் மக்களை வைத்து செய்யப்படும் ஆய்வுகளின் முடிவுகளை நாங்கள் எங்கள் சமூகம் சார்ந்து ஒப்பீடு செய்வது சரியானதா?
இது வரை நாங்கள் எமக்கான தேடல்களின் தீர்வாக அமெரிக்க ஆய்வுக்கட்டுரைகளை பின்பற்றி கொண்டிருக்கின்றோம்.
எமக்கென தனி கலாச்சாரப்பண்பாட்டு சூழல் இருக்கும் போது நாம் ஏன் நமது மக்களுக்குள் தனி ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை?
அடுத்தவன் முதுகில் சவாரி செய்யும் நிலையும் , நமது தவறுகளை உணராத சுபாவமும் தொடர்வதனால் நாம் எமக்கான சிறப்பம்சங்களை இழந்து கொண்டிருக்கின்றோமா ?
அணியும் ஆடை,உண்ணும் உடை முதல் அனைத்தும் அவரவர் நாட்டு கால நிலைச்சூழலுக்கு அமைவாக உருவாக்கப்பட்டிருக்க நாங்கள் எங்களுக்கான தேடல்களையும் தீர்வுகளையும் எமக்கு வெளியே தேடலாமா?

குளிர்ப்பிரதேச மக்களுக்கான செயல்பாடுகளை வெப்பப்பிரதேச மக்கள் பின் பற்றுவதும், அதுவே நாகரீக வளர்ச்சி,நவீனத்துவம்,முன்னேற்றம் என்கின்றோம்.


எமது வரலாற்றின் சிறப்பம்சங்களை மறைத்து அன்னியர் பெருமை பேணலில் விளைவுகளே இன்றைய சமூகச்சீர்கேடுகள் என்றாலும் மறுப்பதற்கில்லை. எமது கண்களை குருடாக்கி சித்திரம் வாங்குவது அவசியம் தானா? 
எமது சமூக ஆண்,பெண்கள் ஒவ்வொரு வயதிலும் எதிர் கொள்ளும் உடல் உளவியல் மாற்றங்கள், அதனால் சமூகம் எதிர்கொள்ளும் சிக்கலகள் குறித்து எந்த ஆய்வும் எம்மிடம் இல்லை. ஒவ்வொருவரும் தம் சூழல் சார்ந்து எழுதப்பட்டபதிவுகளை தான் பொதுப்புரிதலாக அனைவருக்கும் எடுத்துக்காட்டுகின்றோம் தவிர ஆராய்ச்சி செய்து எந்த முடிவும் எடுத்ததாக தெரியவில்லை.
சமீப காலமாக எமது பெண்கள் பல்வேறு பிரச்சனைகள் எதிர்கொள்கின்றார்கள். அது ஒட்டு மொத்த சமூக சீர்கேட்டுக்கும் விதையாகின்றதென நாம் உணர்கின்றோமா?
5 தொடக்கம் 60 வரை எமது பெண்களுக்கான பிரச்சனைகளில் 40+ வயதுகளில் பெண்கள் எதிர் நோக்கும் உடல், உளவியல் குழப்பங்களை மெனோபாஸ் என ஒற்றை சொல்லின் கீழ் முடித்து கொள்கின்றோம். அதை அவள் தலை விதி என்பதும் சக பெண்களாலேயே புரிந்து கொள்ளப்படாமல் இருப்பதும் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.
என்ன பிரச்சனை வந்தாலும் ஆண்கள் பெண்கள் மாறனும் என பிரச்சனையின் தன்மைக்கேற்ப விவாதங்கள் தூள் பறக்கின்றது. எம்மிடம் எந்த தீர்வுகளும் இல்லை.
ஏன் இந்த நிலை?
மேலை நாடுகள் பெண்கள் பிரச்சனைகளை நிதானமாக கையாள்கின்றார்கள். 
ஆவதும் அழிவது பெண்ணாலே தான் என்பதை நன்கறிந்தவர்களாக பெண்கள் பிரச்சனைகளை அவர்கள் மேம்போக்காக அணுகுவதில்லை. பெண்ணிடமிருந்து வரும் சிறு மாற்றமும் கவனிப்புக்குள்ளாகின்றது. பெண் என்றொரு வார்த்தைக்குள் ஒட்டு மொத்த சமூகமுமே அடங்கி விடுகின்றது என்பதனால் பெண்கள் சார்ந்த பிரச்சனைகள் அலட்சியப்படுத்தப்படுவதில்லை.

பெண் என்பவள் தான் அனைத்தையும் நிச்சயிக்கின்றாள்.பெண் தான் உலகத்தை சீராக இயக்கும் சக்கரம்,பெண் தான் எல்லாமே. பெண் சரியாக இருந்தால் எல்லாமே அதனதன் போக்கில் இயங்கும் என்பதை நன்குணர்ந்தவர்கள் என பெருமை பேசும் நாம் நம் சமூக மக்கள் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளாததும், மாறிவரும் சூழல்களை குறித்து அக்கறைப்படாததும் எமது எதிர்கால சமூகத்துக்கு நல்லதல்ல.

நாம் இதை குறித்து இன்னமும் சிந்திக்காமல் இருக்கின்றோமா? சிந்திப்போம்.


16 மார்ச் 2019

மேலை நாட்டுக்கல்வித்திட்டங்களின் சிறப்பம்சம் என்ன?

ஐரோப்பா, பிரிட்டன்,அமெரிக்கா, கனடாவின் கல்வித்திட்டங்களுக்கும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளின் கல்வித்திட்டங்களுக்கும் இருக்கும் வேறுபாடுகள் என்ன? ஏன்? எனும் தலைப்பில்   நீண்ட விவாதம் ஒன்று பேஸ்புக்கில் நடந்தது. அப்பதிவை இந்த லிங்கில் காணலாம்
தமிழ் நாட்டு நட்புக்கள் ஐந்தாம், எட்டாம் வகுப்பில் தேர்வு வைப்பதை ஏன் எதிர்க்கின்றீர்கள் என பகிர முடியுமா?
இலங்கை, இந்தியா சம்பந்தமான விடயங்களை ஆழமாக உள்வாங்கும் போது பல கருத்துக்கள் என் வாழ்வியலிலிருந்து மாறுபட்டு நெகடிவ்வாகவே இருக்கின்றது.
எனக்கு பாசிடிவ் உங்களுக்கு நெகடிவ் ஆகின்றது. உங்கள் பாசிடிவ் எனக்கு நெகடிவ் ஆகின்றது என குறை சொல்லி கடந்து செல்வது சமுகத்துக்கு நான் செய்யும் நன்மையாகுமா?
அதெப்படி எல்லாமே நெகடிவ்வாகவே எனக்குள் தோன்றுகின்றது?
பல நேரம் நான் கடந்து வந்த வாழ்க்கை அனுபவத்தை பகிரும் போது ஏற்றுக்கொள்ள சிரமப்படுவதோடு, எதிர் கருத்து சொன்னால் என் நட்பு பாதிக்கப்படும் அல்லது மனம் வருத்தமடையும் என நினைத்து ஒதுங்கி செல்கின்றீர்கள்./ அல்லது எனக்கு அப்படி தோன்றுகின்றதா? .
சும்மா பெயரளவில் நட்புப்பட்டியலில் இருக்கவேண்டுமானால் நாம் ஏன் நட்பாக வேண்டும்? தொடர வேண்டும்?
தமக்கு பிரியமானவர்கள் என்பதனால் தவறென்றுணர்ந்ததை, தட்டிக்கேட்காமல் 
தட்டிக்கொடுத்தும் ஆதரித்தும் சமூகத்தில் இனம் காட்டப்படுவதை விட குட்டி உணர்த்தி திருத்துவது சமூகத்துக்கு செய்யக்கூடிய கடமை என்பேன்

முகஸ்துதி செய்பவர்களால் நாம் வளர்ச்சி யடையப்போவதே இல்லை. அவர்கள் நம் நலன் விரும்பிகளாக இருக்கவும் முடியாது. .
செய்யும் தவறை சொன்னால் பலரால் உடனடியாக புரிந்து கொள்ள முடியாமல் போகலாம், ஆனால் காலம் அவர்களுக்கு உணர்த்தும் போது அவர்களே நம்மை தேடி வருவார்கள். தம் தவறுகளை உணர்வார்கள். அப்போதும் நாம் நிமிர்ந்து தான் நிற்போம். இதுவும் நான் கடந்து வந்த அனுபவம் தான்.
அதிருக்கட்டும்.
சுவிஸில் ஐந்தாம் ஆறாம், வகுப்பில் படிக்கும் போது வைக்கப்படும் தேர்வுகளில் கிடைக்கும் புள்ளிகள் தான் மாணவர்களுக்கான் உயர் கல்வி, மற்றும் வேலை வாய்ப்பை தீர்மானிக்கின்றது. அதனால் நான்காம் வகுப்பிலிருந்து பாடங்கள் இறுக்கமாகும், ஐந்தாம் வகுப்பில் முழு மதிப்பெண் எடுக்கா விட்டாலும் ஆறாம் வகுப்பில் அதை சீராக்க வேண்டும். ஏழாம் வகுப்பில் அவர்கள் இலக்குகள் தீர்மானிக்கப்பட்டு தொழிற்படிப்பு, மேற்படிப்பு என இருவழிகளில் பிரிக்கப்பட்டு விடுவார்கள். அதாவது ஒரு பிள்ளையின் எதிர்கால இலக்குகள் அவன் 16 வயதுக்கு முன் தீர்மானிக்கப்பட்டு விடுகின்றது. ஐந்து வயதில் தொடங்கும் கிண்டர்கார்டன் பாலர் பள்ளி, ஏழாம் வகுப்பில் அவன் இலக்குகளை தீர்மானிக்க வைக்கின்றது.
நீங்கள் பத்தாம் வகுப்பு வரை தேர்வே வேண்டாம் என்கின்றீர்கள். என்ன காரணம்?
சுவிஸ் நாட்டின் கல்வி குறித்து விரிவான பதிலை நாளை பதிவாக்குகின்றேன். அதற்கு முன் ஏனைய நாட்டு நட்புக்கள் தங்கள் கருத்துக்களை பகிருங்களேன்.

04 மார்ச் 2019

“நாம் எதை விதைக்கின்றோமோ அதையே அறுப்போம்”

“நாம் எதை விதைக்கின்றோமோ அதையே அறுப்போம்”
மன்னாரில் கிறிஸ்தவர்களால் நிகழ்த்தப்பட்ட, 
அத்துமீறல்கள்,மத அவமதிப்புக்கு, கிறிஸ்துவின் வார்த்தைகளை விசுவாசித்து பின்பற்றும் 
நிஷாவாகிய நான் கடும் கண்டனங்களைப் 
தெரிவிக்கின்றேன்.

மதத்தின் பெயரால் மதப்போரை துவக்குகின்றவனும், 
மாற்று மத நம்பிக்கைகளை தூற்றுபவனும் 
மற்ற மதத்தவர் மீது வன்மம் பாராட்டுகிறவனும் எந்த மதத்திலும் இருக்க தகுதியற்றவன் என்பது எனது கருத்து.

சம்பந்தப்பட்டவர்கள் தாம் செய்த தவறுகளை உணர்ந்து மன்னிப்பு கேட்பதுடன்,மீண்டும் அதே அலங்கார வளைவை அவ்விடத்தில் சீரமைத்து கொடுக்கும் படியும் அழுத்தம் கொடுப்பதே கிறிஸ்துவை பின்பற்றுவதாக் சொல்வோருக்கு முன் இருக்கும் ஒரே தேர்வு.
மேலும், இப்பிரச்சனையினூடான உரசல்களை , விரிசல்களாக்கி உரிமைக்கான போராட்டத்தில் உரிமை, உடமை, உயிர்ப்புக்களையும் இழந்து நிர்க்கதியாகி நிற்கும் எமது மக்களுக்குள் பிரிவினையை உருவாக்க முயற்சிக்கும் அனைவரும் கண்டிப்புக்குரியவர்கள்.
எமது இளையோரின் உணர்ச்சிவசப்பட்ட பதிவுகளுக்கு ஆதரவு கொடுப்பதுடன், எதிர் வார்த்தைகளால் மத வெறியூட்டும் செயல்பாடுகளிலும் ஈடுபடும் எவராக இருந்தாலும் என் நட்பிலிருந்து நீக்கப்படுவார்கள்.
சமூகத்துக்கு தொண்டாட்டுவதாக சொல்லி இன,மத வெறிகளை பரவ விடுவோர் எவராக இருந்தாலும் அவர்கள் ஒதுக்கபப்ட வேண்டியவர்களே.
.#மதவாதம் / #மதவெறி எனும் தீவிரவாதம் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.
இந்த மாதிரியான சமூக விரோத செயல்பாடுகளின் போது சமூக வலைத்தளங்களின் மூலம் உடனடித்தீர்வுகளை தேடி எத்தகைய அழுத்தங்களை தரலாம் என அறிந்திருப்பீர்கள்.
நமக்கென்ன என நாம் விலகிச்செல்வதனால் தான் தீங்குகளை பரப்புவோர் அதிகாகி இருக்கின்றார்கள்.
எம் இளையோருக்காக சரியான வழிகாட்டல்கள் அரிதாகி போயிருக்கின்றது. தயவு செய்து இனியும் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்காமல் உங்கள் கருத்துக்களை அழுத்தமாக பதிவாக்குங்கள்.



கிறிஸ்தவ சகோதரர்களே!!!
❤️❤️ஆகையால் உங்களுக்கு பிறர் என்ன செய்ய வேண்டும் என நினைக்கின்றீர்களோ அதை அவர்களுக்கு செய்யுங்கள்.
🔘 நீங்கள் நியாயத்தீர்ப்புக்குள்ளாக தீர்க்கப்படாதிருங்கள்.
🔘 எந்த தீர்ப்பை இடுவீர்களோ அந்த தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள்
🔘எந்த அளவையால் அளக்கின்றீர்களோ, அதே அளவையால் நீங்களும் அளக்கப்படுவீர்கள்.
🔘உன் கண்ணில் இருக்கின்ற விட்டத்தை கவனியாது, உன் சகோதரன் கண்ணில் இருக்கும் துருப்பை பார்ப்பதேன்?
🔘உன் சகோதரனை நோக்கி உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடு என எப்படி சொல்வீர்கள்? உங்கள் கண்களில் துரும்பு இருக்கின்றதே?
🙏🙏இந்த நேரம் உங்களுக்கானது, மன்னிப்பை வேண்டுங்கள்.
🙏🙏🙏 மன்னிப்பு மகத்தான மாற்றங்களை விளைவிக்கும்.

06 நவம்பர் 2018

மனித அம்மாக்களுக்கு கரடி அம்மா கற்றுத்தரும் பாடம் என்ன?

வீடியோ சொல்லும் அருமையான வாழ்க்கைப்பாடம். 

குட்டிக்கரடியின் அக்டிவிட்டி, விடா முயற்சி,  இலக்கை அடையும் வரை  சோர்ந்து விடாமல், விழுந்தாலும்  நின்று நிதானிக்காமல் அம்மாவை தேடி அழாமல்  தன் இலக்கை  மட்டுமே நோக்கிய பயணம்,  அழகான   வாழ்க்கைப்போதனையை தருகின்றது. 

வீடியோவை பார்த்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியும் திக் திக, கண் கொட்டாமல் பார்த்து கொண்டே இருந்தேன். எத்தனை முயற்சி. கடைசியில் சட்டென கிட்டத்தட்ட 3000 அடி சறுக்கி கீழே வந்தும் மீண்டும் மீண்டும் முயற்சித்து தாயுடன் இணைந்ததும் தாய்க்கரடி தூக்கி கொஞ்சவும் இல்லை, நின்று நிதானிக்கவும் இல்லை. மாலை மரியாதையும் இல்லை.  ஆஹா ஓஓ ஓஹோ    நான் மேலேறி வந்திட்டேன் என  ஆர்ப்பரிப்பும் இல்லை.  அம்மாக்கரடி வீர நடை போட்டு முன்  நடக்கின்றது. குட்டிக்கரடி அம்மாவை பின் தொடர்கின்றது.

மனித அம்மாக்களுக்கு கரடி அம்மா கற்றுத்தரும் பாடம் என்ன?

அம்மாக்கரடி குட்டிக்கரடிக்கு உதவி செய்ய எப்போது வேண்டுமானலும் சர்ர்ர்ர்ர்னு சறுக்கி வரும் என நப்பாசை ... பிள்ளைக்கரடி விழுந்து விழுந்து மேலே போய் திரும்ப விழுந்து .... என்ன அம்மா இந்த அம்மாக்கரடி என என் மனதுக்குள் திட்டி தீர்த்தேன்.

மனது கேட்காமல் ஒரே ஒரு முறை கிட்ட வரும் குட்டியை எக்கிப்பிடிக்க முயற்சிக்க அதுவே பிள்ளைக்கரடிக்கு பதற்றம் தந்து முன்னரை விட நீண்ட தூரம் கீழே சறுக்க... அதன் பின் அம்மாக்கரடியின் பதற்றம் அதன் நடையில் தெரிகின்றது. ஆனாலும் மனித அம்மாக்கள் போல் என் பிள்ளையை பிடிக்க போகின்றேன் என தானும் சர்ர்ர்ர்னு சறுக்கவில்லை.

நீயாக மேலேறி வா.. நான் உனக்காக காத்திருக்கின்றேன் என அங்குமிங்கும், நடந்த படி காத்திருக்கின்றது. உன்னை விட்டு எங்கேயும் போகவில்லை, உன்னுடன் இருக்கின்றேன் என அப்பப்போ தன்னை வெளிப்படுத்துகின்றது.

இந்த கரடி அம்மா உலகின் அற்புதமான அம்மா.

எல்லா அம்மாக்களுக்கும் தன் பிள்ளை சாதிக்க வேண்டும் எனும் ஆசை தான். ஆனால் அதை எப்படி நாம் பிள்ளைக்குள் ஊன்றுகின்றோம் எனும் வாழ்க்கை பாடத்தினை கற்று தரும் கரடி
ஷோ ஸ்வீட். ஐ லவ் அம்மா அண்ட் குட்டிக்கரடி.
முயலும் வெல்லும். 
ஆமையும் வெல்லும்
முயலாமை வெல்லாது.

முடியாது என்று சொல்பவன் முட்டாள்..!
முடியுமா என்று கேட்பவன் மூடன்!! 
முடியும் என்று முயற்சிப்பவனே மனிதன் ...!!!

 விடா முயற்சி எனும் வாழ்க்கை பாடத்தினை கற்றுத்தரும் கரடிகுட்டி.
அதன் முயற்சிகாக காத்திருக்கும் அம்மா.   

Life is hart.but so am I.!!! 

 நாம் யாராக வேண்டும் என நாம் தான் தீர்மானிக்க வேண்டும், 
சாதாரண வீடியோ தான் ஆனால் அது தரும்  உந்து சக்தி அசாத்தியமானது. 
கரடிக்குட்டியின் விடா முயற்சி நாம் யாராக வேண்டும் என கற்றுத்தருகின்றது.
“Never, never, never give up.”

30 அக்டோபர் 2018

ரௌத்திரம் பழகுவோம்.

ரௌத்திரம் பழகுவோம். 
********************************

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,

மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.

இது நாம் சிறுவயதில் கற்பது தான். இந்த தார்மீக கோபம் நமக்குள் எப்போதும் உறங்கி கொண்டே இருக்க வேண்டும். கோபப்பட வேண்டிய இடத்தில் குணமாக சொல்வதெல்லாம் செல்லுபடியாகுமா என நாம் தான் சூழலை வைத்து புரிந்து முடிவெடுக்க வேண்டும்.
தர்மமும், நீதியும் தோற்று அதர்மமும், அநீதியும் தலையெடுக்கும் காலத்திலும் குணமாக தான் சொல்லி திருத்த வேண்டும் என நினைத்து செயல் பட்டோமானால் எந்த பயனும் இருக்க போவதில்லை.
ரௌத்திரம் பேணுதல் எங்கே முக்கியம் என முடிவெடுக்க முடியாமல் கோபத்தை அடக்குவதற்கு கற்பிப்பதும் தவறே.
ஐந்தறிவு மிருகங்களுக்கு கூட தன்னை சீண்டினால் எதிர்த்து தாக்க வேண்டும், தன்னை காத்து கொள்ள வேண்டும் எனும் உணர்வு இருக்கும் போது மனிதருக்குள் அவ்வாறான எதிர்ப்புணர்வும், சுய சிந்தனையும், தார்மீக கோபமும் இருக்க கூடாது என எதிர்பார்ப்பதும் தவறே.
கோபத்தை அடக்க ஆயிரம் வழி சொல்லும் நமது சமூகம் நியாயத்துக்காக குரல் கொடுக்கும் சினமும் அவசியம் என உணர்த்தாமல் போனதனால் நாம் இழந்தவைகள் அனேகம்.
இனியும் இழக்க ஏதுமுண்டா என நம்மை நாமே ஆராய்ந்தால் நமது இயலாமையே நம்முள் கோபமாக வெளிப்பட்டு ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டெனும் இன்னொரு புறத்தினை மட்டுமே உணர்த்தி நிற்பதையும் நாமே உணர்வோம்.

➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤ 

செல்ஃபி மோகம்
*********************
பிரபல்யமானவர்கள் உடன் நின்று எடுக்கப்படும் புகைப்படங்களுக்கான மவுசும், மரியாதையும் பெரிதென இவ்வுலகம் உணர்த்தி நிற்கும் வரை நாம் என்ன சொன்னாலும் எவரும் திருந்தபோவதில்லை. இன்னாருடன் இணைந்து புகைப்படம் எடுத்தேன் என்பது தற்புகழ்ச்சிகுரியதாக மட்டுமல்ல அவருக்கான பெரும் சாதனையாக கொண்டு ஆஹா, ஓஹோ அபபடியா, நீ பெரிய ஆளுப்பா என பாராட்டுதல்களோடு அதுவே மிகப்பெரிய இமேஜ் சான்றெனப்படும் வரை செல்ஃபிக்களுக்கு ஓய்வும் இல்லை
மரணமே வந்தாலும் பிணத்துடனும் செல்ஃபி எடுத்தே தீருவோம் சங்கத்தின் சார்பில் உங்கள் நிஷா.

🤣🤣🤣🤣🤣🤣🤣

எங்க சங்கத்தில் நீங்கள் எப்போது இணைய போகின்றீர்கள் நட்புக்களே ?👁️👁️👁️ 👁️👁️