28 ஆகஸ்ட் 2017

உணர்வற்று போன பின்???

எங்கள் கலாச்சாரத்தின் படி பெற்றவர்கள் பிள்ளைகளை தாங்கியே நம்பியே வாழும் சூழலில் இக்கால இளையோரிடம் இருகுடும்பத்தினையும் அனுசரித்து செல்லுதல் என்பது குறைந்து திருமணம் எனில் தாங்கள் இருவர் மட்டுமே எனும் புரிதல் அதிகமாகி, வேற்றுமைகள்,பிரச்சனைகள் என சரியான புரிதல்கள் இன்றி பெரியோரை தூரமாய் நிறுத்தி தனக்கு எல்லாம் தெரியும், தன்னால் எல்லாம் சமாளிக்க முடியும் என அகந்தை கொண்ட மனமும், சரியான் புரிதலின்மையும், வழிகாட்டுதல் இன்றியும் தவறான நபர்களின் ஆலோசனையுமாக சீர்குலையும் குடும்பங்கள் தற்காலத்தில் அதிகமாகி... பிரச்சனைகளை எதிர் நோக்க தன்னம்பிக்கையற்று தற்கொலையை நாடிச்செல்லும் சூழல் அதிகரித்து வரும் இன்றைய சூழலில்

நமக்குப்பின் நம்மை நம்பி இருப்போர் நிலை குறித்து என்றேனும் சிந்தித்திருக்கின்றோமா?

வீட்டின் ஆண் மகனாய் பிறந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்து திருமணமானபின் மனைவி, தாய் என வரும் சூழலில் இருவரையும் ஒரே தராசில் நிலைக்க வைக்க முடியாதவர்கள் தங்கள் இல்லாமை, இயலாமை நேரம் தன்னை நம்பி இருக்கும் தாய், தகப்பன், சகோதரர்கள், உற்றார்,உறவினர் நிலை குறித்து என்றேனும் சிந்தித்திருக்கின்றீர்களா?
கடவுள் சட்டப்படி தாயையும், தகப்பனையும் அசட்டை பண்ணாமல் அவர்களுக்கான கடமையை நிறைவேற்றி, மனைவியாளவளுக்குரியதையும் சரியாக செய்ய வேண்டும் என்றிருந்தாலும் ஒரு ஆண்மகனுக்கு மனைவி எனும் பந்தம் இடையில் வந்திருந்தாலும் அவனுக்குரிய அனைத்து ஆளுமைகளையும் உலகச்சட்டத்தின் படி மனைவிக்கே எனும் சாதகமிருப்பதும் பெண்களுக்கான பாதுகாப்பு சட்டங்களையும் பயன் படுத்திடும் வாய்ப்பு கிடைக்கின்றது.
ஆனால்........?
ஒரு ஆண் தாயின் கர்ப்பந்திலில்ருந்து பிறந்து வளர்ந்து 25 தொடக்கம் 30 வருடங்கள் பெற்றோரால் வளர்க்கப்பட்டு, நேசிக்கப்பட்டு திருமணம் எனும் பந்தத்தின் மூலம் முழு உரிமையும் மனைவிக்கு தாரை வார்க்கப்ப்ட்ட பின் வாழும் காலத்திலேயே அவனால் மனைவியையும் சொந்தக்குடும்பத்தினையும் சமாளிக்க முடியாத போது அவன் இல்லாத நிலையில் அவனை நம்பி இருக்கும் அவன் தாய் தகப்பன் நிலை என்ன ஆகும் என்றேனும் யோசித்திருக்கின்றீர்களா?
நாளை என்ன இன்றே அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதை நாமறியோம் எனும் நிலையில் உங்களுக்கான எதிர்காலம் குறித்து மட்டுமல்ல நீங்கள் இல்லாத வாழ்க்கையை தைரியமாக உங்களைச்சார்ந்தவர்களும் எதிர் கொள்ள திராணியுள்ளவர்களாகும் படி திட்டமிடுங்கள்.
வீட்டுக்கு ஒரு பையனாயிருந்தால் நீங்கள் மட்டுமே உங்கள் பெற்றோருக்கான ஊன்று கோலாயிருக்க முடியும்,. இறப்பும், பிறப்பும் இயற்கையின் படைப்பில் இன்றியமையாது போனது. இழப்பினை ஈடுகட்ட எவராலும் இயலாது.
இழப்பு என்பது இறப்பு மட்டும் அல்ல.உணர்வற்று உயிர் உசலாடும்  நிலை, நோயுற்று உடல் அங்கங்கள் செயலற்று போகும் நிலை என இல்லாமை இயலாமை   ஆக்ரமிக்கலாம்.
இழப்பின் நேரம் உடல், உள ஆரோக்கியம் சார்ந்து சொந்தபந்தங்கள் துணை நின்றாலும் பொருளாதார ரிதியாக உங்களை நம்பி இருக்கும் உள்ளங்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றார்கள்.
சொந்தமும் போய் சொத்தும் போய் நடுவீதியில் நிற்கும் நிலை ஏன்?
வாழும் காலத்தில் இன்னாருக்கு இது என முடிவெடுத்து அனைத்தினையும் எழுத்தில் எழுதி வையுங்கள். எழுத்தில் எழுதுவதை சம்பந்தப்ப்ட்டவர்களுக்கும் அறிவியுங்கள்.
உலகத்து சட்டங்கள் உங்கள் உடல் முதல் சொத்து வரை அனைத்தும் மனைவிக்கு மட்டுமே முதல் உரிமை என சொல்லி செல்லும் போது உங்கள் இல்லாமை மனதை அழுத்த உடலையேனும் உரிமையாய் தொட்டு தடவ , கண்ணீர் விட்டு கதறி அழ , கடைசி நிமிடங்கள் உங்களோடு கழிக்க உங்கள் மனைவியை கெஞ்சி கேட்கும் நிலையும் வரும்.
மனைவி அனுமதிக்காவிட்டால்????
பாதியில் வந்த சொந்தம் ஆதியில் தொடரும் பந்தத்தை கதறிடிக்கும் அவலமான நிலை வரலாமா?
முன்னொரு காலத்தில் திருமணம் என்பது ஆயுள் பந்தமாயிருந்தது தான். ஆனால் இன்றைய உலகமயமாக்கலில் எதுவுமே நிலையானதில்லை.
கணவனோ மனைவியோ இழப்பின் பின் காலம் முழுக்க நினைத்து கண்ணீர் விடும் சூழலும் இப்போதில்லை. கலங்கி நிற்பதுவ்ம் இல்லை. குழந்தைகளை கூட தூக்கி போட்டு விட்டு தனக்கென ஒரு வாழ்க்கை தேடி அடுத்த சில வருடங்களில் செல்லலாம். இயந்திர உலகில் அன்பும் வற்றித்தான் போனது. காலத்துக்கு ஏற்ப திட்டமிடுங்கள்.
நேசிப்பும் யாசிப்பும் தூசிக்கப்படும் காலம் இது. 
வாழும் வாழ்க்கையில் நீங்கள் எதை விதைக்கின்றீர்களோ அதை மட்டுமே விளைவிக்க முடியும், விதை ஒன்று போட்டால் மரம் ஒன்றாய் முளைக்கவே முளைக்காது.

திருமணம் என்றாலே அவன் சொந்ததாயையும் தகப்பனையும் மொத்தமாக விட்டு விலகி அதாவது அதுவரையான ஆசாபாசங்கள், சொந்த பந்தங்கள் அனைத்தினையும் கழுவி போட்டு விட்டு மனைவிக்கு மட்டுமே சொந்தம் எனும் கையறு நிலை தான் இங்கே பல ஆண்களுக்கு வரமாகி இருக்கின்றது.

அதே போல் பெற்றோர் சரியான புரிதலுள்ளவர்களாக மகனின் மனைவியை 
மறுமகளாக நேசிக்காவிட்டால் கணவன் இழப்பின் பின் உங்களை மட்டுமே நம்பி வந்த மனைவி அவர்களினால் துன்பப்படும் சூழலும் விலக்கி வைக்கப்படும் நிலையும் கைவிடப்பட்டு அனாதரவான வாழ்க்கைக்குள்ளும் தள்ளப்படலாம்.

இவ்விடயத்தில் மேலைத்தேய நாட்டினர் மிகத்தெளிவாக திட்டமிடுவார்கள். தங்களுக்கு பின் யார் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை சிக்கலாக்கி கொள்ள மாட்டார்கள்.
ஆனால் நாங்கள்?/
சிந்தியுங்கள்...! நெருப்பென்றால் வாய் வெந்து விடாது.

என்னைவிட்டால் யாருமில்லை!

தன்னை விட்டால் யாருமில்லை, தான் மட்டுமே அனைத்தும் அறிந்த அறிவாளி, இவ்வுலகில் தன்னைப்போல் புத்திஜீவிகள் இல்லை என இறுமாப்பாய் சக மனிதரை துச்சமாய் நினைப்பவர்களையும் புறம் பேசி அகம் குதறும் ஓநாய்களையும் இனம் காண முடியாதிருப்பதேன்?
தன் நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைப்பார்க்கிலும், கடிந்துகொள்ளுகிறவன் நம் மேல் அதிக அக்கறை கொண்டவனாயிருப்பான் என உணர முடியாதிருப்பதேன்?
துர்க்கிரியைகளுக்குத் தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனிதரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய துணிகரங்கொண்டிருக்கிறது. ஆனாலும் எல்லாக்காரியத்துக்கும் காலமும் நியாயமும் உண்டு;
இன்னது சம்பவிக்கும் என்று மனிதன அறியானே; அது இன்னவிதமாய்ச் சம்பவிக்கும் என்று மனிதனுக்கு சொல்லத்தக்கவர் யார்?
பாவி நூறுதரம் பொல்லாப்பை செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன?
உத்தமனாய் நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்; மாறுபாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான்.
கர்த்தருக்கு முன்பாகமாத்திரமல்ல, மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள். 2 கொரிந்தியர் 8:21

ஊமையனுக்காகவும் திக்கற்றவர்களெல்லாருடைய நியாயத்துக்காகவும் உன் வாயைத் திற -நீதிமொழிகள்.31:8

ஏழையாயிருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே; சிறுமையானவனை நியாயஸ்தலத்தில் உபத்திரவப்படுத்தாதே. -நீதிமொழிகள்.22:22
சமீபத்திய நிகழ்வுகளும் மனித மனங்களின்  மாறாட்டங்களும் அதனால் ஏற்பட்ட இழப்பின் வலிகளினாலும் என் எழுத்துக்களிலும்  அவை எதிரொலிக்கின்றதென்பேன். கொஞ்சம் பொறுத்திருங்கள். காலம் அனைத்துக்கும் மருந்தானால்  அனைத்திலிருந்தும் மீண்டும் வருவேன். 





13 ஆகஸ்ட் 2017

கடைசி வரை யாரோ?

உள்ளதை உள்ள படி
நடந்ததை நடந்த படி 
கடந்தவை கடந்த படி
உணர்ந்ததை உணர்ந்து படி

இன்று நடப்பவை யாருக்கோ எவருக்கோ தானே என கடந்தபடி செல்லும் நாம் அப்படிகளை தாண்டும் சூழலுக்குள் தள்ளப்படுவோம் என்பதை உணர்ந்தே கடப்போம்.
நாம் வாழும் காலத்தில் நம நலனில் அக்கறை காட்டி புத்திமதி சொல்பவர்களை தூரமாய் நிறுத்தி நமக்குத்தேவையில்லாதவர்களாகி ஒதுக்கி அவர்களின் திட்டலுக்கும் குட்டலுக்கும் பின்னிருக்கும் ஆழ்ந்த அன்பை உணராமல் சட்டென கோபம் கொண்டு விலகிச்சென்று விடுகின்றோம்.
குறைகள் சொல்லாத, போலித்தனமானவர்களை உண்மை நட்பென நம்பி உயர்த்தி மதிப்பளிக்கின்றோம்.
சூழ்நிலைகள் எங்கே எவருக்கு சாதக. பாதமாகும் என எவராலும் நிச்சயித்திட முடியாது.
விதியை மதியால் வெல்ல நினைப்பதும், எதிர்காலக்கனவுகளைக்குறித்த திட்டமிடலும், என்னாலே எல்லாம்முடியும் எனும் செருக்குடனும், 
நாமும் துன்பப்பட்டு, அடுத்தவரையும் துன்பப்படுத்தாமல் நல்லதை நினைப்போம், நல்லதை செய்வோம்.

நட்பெனப்படுவதும், உறவெனப்படுவதும் உள்ளதை உள்ளபடி உள்வாங்கி கண்டு கொள்ளாமல் செல்வது அல்ல. நன்மை, தீமை உணர்ந்தி வழி காட்டுவதே!
இவ்வுலக வாழ்வெனப்படுவது நீண்ட தூர ரயில் பயணமே! நிலையான தரிப்பிடம் நமக்கு இங்கே இல்லை. நிர்வாணியாய் வந்தோம், நிர்வாணியாய் செல்வோம், நாம் செல்லும் போது நாம் ஓடி ஓடி சேர்த்த பொன் பொருள் எதுவும் நம்முடன் வரப்போவதே இல்லை.
எத்தனையோ திட்டங்களை தீட்டுகின்றோமே.. மரித்தபின் என்னாவோம் என யோசித்திருக்கின்றோமா?
நான் எனும் அகந்தை அழிந்து அதுவானபின் என்னவாவோம்?
சுயமில்லாமல் உணர்வற்று உயிர் வற்றி போனபின்னரான சூழலை எதிர்கொள்ளும் படியாக நம்மை சார்ந்து நம்பியிருப்போரைக்குறித்து சிந்தித்திருக்கின்றோமா? .
  • ஒரு மரணம், தாய், தாரமிருந்தும் அனாதைப்பிணமாக எரிக்க அரசு முடிவெடுத்ததாக அறிந்த   தாயின் கதறலையும் தாய் மாமன் பதறலையும் அருகிலிருந்து உணர்ந்து இறுதிக்கிரியைகளை செய்யவேணும் அவன் உடலை பெற்றுக்கொடுங்களேன் எனும் இறைஞ்சி நின்ற போது  மொழி புரியாமல்  புலம்பெயர் எங்கள் இனம் படும் பாடுகள் கண்டு என் மனம் துடித்தது..சடலத்தினை வைத்து வேட்டையாடும் மனிதர் குணம் கண்டு அதிர்ந்தே அடங்கியது.
  • இறுதிச்சடங்கை  செய்ய அவன் உடலை பெற்று அவனை அதற்கான வாகனத்தில் அனுப்பும் வரை நாங்கள் அலைந்த அலைச்சலும் பாடுகளும் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தினை தந்திருக்கின்றது.  என்ன தான் காசு பணம் சேர்த்து வைத்தாலும் கடைசி நேரம் துணை வரவும், துணாய் நிற்கவும் நான்கு மனிதரையேனும் நாம் சேர்த்து வைக்க வேண்டும். 
நாங்கள்குடும்பமாய் வருடத்துக்கு ஒரு வாரம் சேர்ந்து நான்கு பேரும் இத்தாலி செல்ல விடுமுறைப்பயணம் திட்டமிட்டிருந்தோம், பயணத்திட்டத்துக்கு முதல் நாள் நதியில் கண்டெடுத்த சடலத்தினை உறுதிப்படுத்த டீ,என்ஏ டெஸ்டுக்காக தாயை அழைத்த போதே புரிந்து கொண்டேன். (நாங்கள் இங்கே  மொழிபெயர்ப்பு மற்றும் உதவிகள் செய்வோம், சர்ச் ரிதியிலான ஊழியம் கடந்த இருபது ஆண்டுகளாக இனமதம் மொழி பாராது அர்த்த இராத்திரியானாலும் பிரச்சனை உதவுங்கள் என கேட்பவர்களுக்கு உதவி செய்கின்றோம்). அதன் பின் பயணத்திட்டம் கைவிடப்பட்டு பிள்ளைகளும் சரியாக புரித்துணர்வோடுஒத்துழைத்து இவ்வருடம் இல்லாவிட்டால் என்ன அடுத்த வருடம் செல்வோம் என பேசி இங்கே இருந்து அனைத்தையும் ஒழுங்கு செய்து இன்னும் அதற்காக காரியங்கள் முடியவில்லை.. உண்மையில் நாங்கள் இத்தாலி புறப்பட்ட பின் இப்படி செய்தி அறிந்திருந்தால் அந்த தாயின் நிலை குறித்து எங்களால் நினைக்கவே முடியவில்லை. ஏன் எனில் அவர் நீரழிவு நோயினால் பாதிக்கப்ட்டு இரு கால்களும்  நடக்க முடியாத நிலையில் இருக்கின்றார். இத்தாலி பயணத்திட்டம் ஒரு மாதம் முன் ஆரம்பித்தும் நான் ஹோட்டல் ஏதும் புக் செய்யாமல் போகும் முதல் நாள்  போன் செய்து  புக் செய்வோம் என தள்ளிப்போட்டதும்   காரணத்தோடு தான் என்றானது. 

இந்த உணர்விலிருந்து சீக்கிரம் மீண்டு வர வேண்டும் என நினைத்தாலும் தொடரும் காரியங்கள் அது எளிதானதலல் என்றே உணர்த்தி நிற்கின்றது. பார்க்கலாம். யார் பதிவும் படிக்கவில்லை, மனசு சேன்ஞ் ஆக எதிர்பார்த்து அவ்வப்போது பேஸ்புக்கில் அமர்வதோடு சரி

மரணத்தின் பின் சடலத்தை வைத்து  அலைந்த அலைச்சல்களின் தாக்கத்தினால் என் மன உணர்வுகளை அந்த நொடியே கண்ணீர் அஞ்சலி ஆக்கினேன்.  
 

12 ஆகஸ்ட் 2017

நிஷாவின் அனுபவ மொழிகள்.

 வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. (சங்கீதம் 118:22,23).
உண்மையான வார்த்தை.
நம்மால் வேண்டாம், தேவையில்லை என ஒதுக்கப்பட்டவர்களே நமக்கு முக்கியமானவர்களாக போகும் காலமும் வரும்.
நமக்கு தேவையில்லை என நம்மால் ஒதுக்கப்பட்டவர்கள் நம் மரணத்தின் இழப்பை எண்ணி துடிப்பவர்களாக இருப்பார்கள்.
நம்மால் உயர்த்தப்படுகின்றவர்களினாலேயே நாங்கள் தாழ்த்தப்படுவோம். அழிக்கவும் படுவோம்
நாம் வாழும் காலத்தில் நமக்கு முக்கியமானவர்கள் என மதித்து நடக்கும் எவரும் நாம் தாழும் காலத்தில் எம்முடன் துணை வருவதில்லை.
நாம் வளமாய் வாழ்ந்த காலத்தில் நாம் வேண்டாம் என ஒதுக்கி நடத்துபவர்களே நம் துயர நேரத்தில் துணை வருகின்றார்கள்.
நாம் யாரையெல்லாம் வேண்டாம் என ஒதுக்குகின்றோமோ அவர்கள் நமக்காக கண்ணீர் சிந்துகின்றவர்களாகவும், உதவி செய்பவர்களாகும் இருப்பார்கள்.
நாம் தாழ்த்துகின்றவர்கள் நம்மை உயர்த்துகின்றவர்களாக இருப்பார்கள்.
ஒருவரை திருப்திப்படுத்த இன்னொருவரை பகைப்பதும், வெறுப்பதும், ஒதுக்குவதும் நமக்கு நாமே வைக்கும் கொள்ளி.
மக்கள் கூடி இருக்கும் சபையில் ஒருவரை கனப்படுத்தும் போது அவர்கள் அதற்கு தகுதியானவரா என்பதை ஆராய்ந்து எவரையும் புகழாமலும் இகழாமலும் எல்லோருடனும் ஒரே சம மன நிலையில் நடப்பது எக்காலத்திலும் சிறந்தது.