Femina என இலத்தீன் மொழியிலும்,Feminism என ஆங்கிலத்திலும், பெண்ணியம் என தமிழிலும் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கான குரலாக உலகமெங்கும் ஆணும்,பெண்ணும் சரி நிகரென கொள்வோம் என உரத்தொலித்துக்கொண்டிருக்கின்றது. .
அதி நவீன நாகரீக போர்வையில் இஷ்டப்படி வாழ்க்கைகளை திட்டமிட்டு குடும்ப கட்டுக்கோப்புக்களை உடைத்து வெளிவருவதே பெண் சுதந்திரம் என்போர் ஒரு புறம் கோசமிடுகின்றார்கள்.
தங்கள் மீதான அடக்குமுறையை தாமே உருவாக்குவதை புரிந்திடாமலே தம்மினத்தை தாமே அடக்கி அடங்குவோராய்
மதம்,இனம்,, கலாச்சாரம் எனும் போர்வையில் வெளி உலகம் ஒன்றிருப்பதை அறியாமலே இன்னொரு பக்கம் வாழ்கின்றார்கள்.
இரண்டுக்கும் நடுவில் அங்குமிங்குமாய் அல்லாடும் மதில்மேல் பூனைகளாக கட்டுப்படுவதா கட்டை உடைப்பதா என துடித்து கொண்டிருக்கும் சிலரால் ஏற்படும் மீறுதல்கள் என பெண்ணியம் என்பதே கேலிக்குரிய வார்த்தையாகி போனது.
பெண்ணியம் என்றால் என்ன?
ஆண்,பெண் எனும் இரு பாலினத்தை பிரித்து வேறு படுத்துவது தான் பெண்ணியமா?
நம் வீட்டு ஆண்களை எதிர்த்து போராடுவதை பெண்ணியம் ஊக்குவிக்கின்றதா?
பெண்ணியசிந்தனைகள்,பெண்களை அடிமைப்படுத்தும் ஆண் சமுதாயத்தை அடிமைப்படுத்தி அடக்கி ஆள சொல்கின்றதா?
Feminism எனும் பெண்ணியம் பெண்மைக்குரிய இயல்புகளை உடையவள்/ன் என அர்த்தம் தருகின்றது. மனிதர்கள் ஆண்களுக்குள் பெண்மைக்குணங்களும் பெண்மைக்குள் ஆண்மைக்குணங்களும் கலந்தவர்களாக இயற்கையில் படைக்கப்பட்டிருக்கின்றார்கள். மனிதர்களில் உயர்வு தாழ்வு இல்லை என்கின்றது பெண்ணியம்.
ஆணும் பெண்ணும் சமத்துவமானவர்கள் என்பதே Feminism.
ஆண், பெண் என்பது இரு பாலினம். பாலினம் என்பதும் பெண்ணியம் என்பதும் வேறு வேறானவை. பாலினத்தையும் பெண்ணியத்தையும் தவறாக புரிந்து கொண்டோரே அனேகர். ஆண்களை எதிர்ப்பது பெண்ணியம் என்பதாகவும் பெண்ணுக்கு மட்டும் சார்பானதான உரிமைக் கோரலுடன் பெண்ணியக்கோட்பாடுகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றன.
பெண்ணியம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான ஒரு சொற்பிரயோகம்.ஆண்,பெண். இருவரும் சமத்துவமானவர்கள் என்கின்றது.
இக்கால பெண்ணிய வாதிகள் ஆண்களை எதிர்த்து வெல்வதே பெண்ணியம் என்கின்றார்கள்.
பெண்ணியக்கோட்பாடுகள் அல்லது இலக்குகள் எவை?
1.பெண்ணியம் என்பது பெண்களுக்கான சம உரிமைகளை மட்டும் பேசவில்லை. சமூகத்தில் ஒடுக்கப்படும் பெண்களுக்கான விழிப்புணர்வை கொடுத்து சமுதாயத்தை மாற்றியமைக்க சொல்கின்றது.
2.ஆண்கள்,பெண்களுக்கான சமத்துவம் குறித்த விழிப்புணர்வை பரவலாக்கும் படி சொல்கின்றது.
3.தங்களை தாங்களே உணரும் மனபக்குவத்தினை பெறும்படி அறிவுறுத்துகின்றது.
4.அரசியலில் ஆணுக்கு நிகரான பதவிகளை பெறுவதும் தலைமை வகிப்பதும்,நிர்வகிப்பதும்,/அப்படி கிடைக்கும் வாய்ப்புக்களை நம் பெண்கள் எப்படி துஷ்பிரயோகம் செய்கின்றார்கள் என்பதை இன்னொரு பதிவில் பார்க்கலாம்.
5.பொருளாதாரம்,கல்வி என அனைத்திலும் சரி சம வாய்ப்புக்களை பெற்றுத்தரும்படியான உயர்வுகளை அடைவதுமான மாற்றங்களை விதைப்பதே பெண்ணிய சிந்தனை கொண்டோரின் நோக்கமாக இருக்க வேண்டும். .
இன்றைய பெண்ணிய வாதிகள் இன,மதம பண்பாடுகள் சார்ந்த கலாச்சாரங்களை எதிர்த்து செய்யப்படும் புரட்சியே பெண்ணியம் என்கின்றார்கள்.
பெண்களுக்கு சமத்துவம் எனும் பெயரின் வன்புணர்வு,பாலியல்,கள்ள உறவுகளில் Feminism தை நுழைத்து தவறாக வழி நடத்துகின்றார்கள்.
தாம் சார்ந்த சமூகத்தில் அரசியல்,பொருளாதார கட்டமைப்புக்களின் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கி தமக்கான சமத்துவத்தை பெறுவதே பெண்ணியத்தில் இலக்கு என்பதை மறைத்து அல்லது மறந்து விட்டார்கள்.
பல பெண்ணியவாதிகள் பெண் சுதந்திரம்,சம உரிமை என்பதன் அடிப்படை புரிதலையே மாற்றி சமுதாய சீர்கேடுகளை விதைத்து கொண்டிருக்கின்றார்கள்.
**நாம் சார்ந்திருக்கும் சமூகத்தில் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சார செயல்பாடுகளில் பெண்களின் சமத்துவம் என்பது எப்படிப்பட்டதாக இருக்கின்றது?
**பெண்களாக நாங்கள் எங்கள் சமுதாயம் சார்ந்த சிந்தனைகளை எப்படி உருவாக்குகின்றோம்?
பெண் அடக்குமுறைகளை எதிர்க்க பாலியல் ரிதியிலான சமத்துவமே தீர்வு எனும் பெண்ணிய வாதிகளின் செயல்பாடுகளை இனம் கண்டு ஒதுங்குவதும் பெண்ணிய சிந்தனைகளில் முக்கியமானதே.
தவறான வழி நடத்தல்கள், பாகுபாடுகள், பிரிவினை பேதங்கள், குறுகிய மனப்பான்மை,பெண்களே பெண்களை எதிரிகளாக நினைப்பதும், அப்படி நினைக்கப்பட வேண்டும் என காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் போதனைகளும், பெண்களால் இணைந்து செயல் பட முடியாதெனும் ஆணிய சிந்தனைகளை உள் வாங்கி பெண்களே பெண்களுக்கூள் பொறாமையும், பெருமையும் கொண்டு ஒருவரை ஒருவர் எதிர்ப்பதும் தவிர்க்கப்பட வேண்டும்.
சிறந்த சிந்தனையும், விசாலமான அறிவும், தெளிந்த புத்தியையும்,நிதானமான அணுகுமுறையையும், தாய்மையையும்,பெண்மையின் மென்மையையும் வெளிக்கொண்டு வருவதே பெண்ணியம்.
பெண்களுக்கான சமத்துவம் என்பது ஆண்களிடமிருந்து பெண்களை பிரிந்து தனித்து வாழ சொல்கின்றதா?
இல்லை. . அன்றும் இன்றும் என்றும் பல வீடுகளில் பெண்ணரசிகள் தான் ஆளுமை செய்கின்றார்கள். நிர்வகிக்கின்றார்கள். ஆண்கள் பெண்களுக்குள் தான் வாழ்கின்றார்கள். ஆண்கள் என்றுமே எம் எதிரிகள் இல்லை. ஆண்கள் எங்களுக்குள் அடங்குபவர்கள்.
விடுதலை என்பது நாம் யாரிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்?
முதலில் நம்மிடமிருந்தும் பின்னர் சக பெண்களிடமிருந்தும் விடுதலை பெற வேண்டும்.
நமக்குள் அடைந்து கிடக்கும், அடிமைத்தன சிந்தனைகள்.கலாச்சார,பண்பாட்டு மூடத்தன செயல்பாடுகளிலிருந்து வெளி வந்து நமது ஆளுமைகளை வெளிப்படுத்த ஆரம்பிக்கும் போது மாற்றங்கள் நம்மிலிருந்து தொடங்கி விடும்.
முதலில் நம்மிலிருந்து,நம் வீட்டுஆண்,பெண் குழந்தைகளிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். பெண்ணுக்கும்,ஆணுக்குமான் பேதங்கள் களையப்பட வேண்டும்,பெண்ணை விட ஆண் உயர்வு என நம் சிந்தனைகளை மாற்ற வேண்டும்.மனிதன் என்பதை விட மனிதம் போற்ற கற்பிக்க வேண்டும்.
Women - men / பெண்ணுக்குள் அடங்கியவன் ஆண் எனும் போது ஆணுக்குள் ஆண் எனும் பெருமையை புகுத்தியதும் பெண்ணான நாங்கள் தானே?
ஆண்கள் எங்கள் எதிரிகள் இல்லை. அவர்கள் எங்கள் விரோதிகளும் இல்லை. எங்களிலிருந்து கருவாகி உருவானவர்கள்..
பொதுவாக ஆண்கள் பெண்மை எனும் தாய்மைக்குள்,அன்புக்குள் அடங்கி , கட்டுப்பட்டு வாழவே விரும்புவார்கள். பல நேரங்களில் ஆணுக்கென தனி சிந்தனை ,செயல்பாடுகள் இருப்பதே இல்லை.
பெண்ணுக்கு இருக்கும் தனித்துவம் போல் ஆண்களுக்குள் தனித்துவம் வெளிப்படுவதும் அரிதே.. மனைவியை அடக்கி ஆளும் ஆண்கள் தாய்க்கும்,மகளின் அன்புக்கும் கட்டுப்பட்டு நிற்பதும், மனைவி,தங்கை, மகள் என பாசத்தை பாகம் வைத்து தவிப்பதும் ஆணுக்குரிய பெலவீனம்.
பெண்கள் உடலளவில் பெலவீனமானவர்களாக இருந்தாலும் உளவியல் ரிதியான செயல் பாடுகளிலும்,பிரச்சனைகள் நேரம் முடிவெடுப்பதிலும் தெளிவான சிந்தனையும், நீண்ட கால திட்டமிடலும் கொண்டவர்களாகவும் அடுத்து வருவது முன் உணரும் மனப்பக்குவம் பெற்றவர்களாக இருக்கின்றார்கள்.பெண் தானாக அடிமைப்பட்டு, அடங்கி வாழும் வரை தான் மென்மையாளவள்.
ஆண்கள் அப்படி அல்ல.உடலளவில் பலமானவர்களாக மனதளவில் பலவீனர்களாக தங்களை தாங்களே நன்கு உணர்ந்திருக்கின்றார்கள். பெண் இல்லாமல ஆண் இல்லை என்பதை புரிந்து கொண்டவர்களாக பெண்களை அடக்கி ஆளுமை செய்வதை போன்ற மாயைக்குள் சிக்க வைத்து அவளை வைத்தே அவளை அடக்கி ஆள்கின்றார்கள்., பெண்ணுக்கு பெண் எதிரி எனும் ஆயுதமே அவர்கள் சர்வாயுதம் என்பதை ஆண்கள் புரிந்தே இருக்கின்றார்கள். பாலியல் ரிதியிலான வன்முறைகளை வைத்து அவளை குற்றமுள்ளவளாக மனம் குறுகி வாழ வைத்திருக்கின்றார்கள்.
ஆம்,தன்னை அடிமைப்படுத்தும் இம்மாதிரி சிந்தனைகளிலிருந்து வெளிவரச்சொல்கின்றது பெண்ணியக்கோட்பாடு.
பூமியை பெண்ணாக்கி,ஓடும் நதிகளை பெண்ணாக்கி, வீசும் காற்றை பெண்ணாக்கி,வணங்கும் தெய்வத்தை பெண்ணாக்கி கண்களால் காண முடியாத கற்பனைகளையெல்லாம் பெண்ணாக்கி பெருமிதப்படும் சமுகத்தில் பெண் மிதிக்கப்படுவது ஆச்சரியம் அல்லவா?
ஆதலால் முதலில் நம்மை நாம் உணர்வோம்.
நம்மிலிருந்தே மாற்றங்களை விதைப்போம்.
எமக்கான கட்டுகளை உடைத்து வெளி வருவதல்ல அந்த கட்டுக்களை நாம் நமக்கேற்ற விதமாக மாற்றுவதும்,எமக்காக கட்டமைப்புக்களை புதிதாக உருவாக்குவதும் செயல்படுத்துவதுமே பெண்ணியம்.
கனவு காண்பதையும் பெண்களுக்கான பாதிப்புக்களை கணக்கெடுத்து கண்ணீர் வடிப்பதை விட எமக்கான தீர்வுகளை நோக்கிய திட்டமிடலும், நகர்வுகளுமே நமது கனவுகளை நனவாக்கும்.
நாளை நமதே. நாளும் எமதே.
படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது.