06 நவம்பர் 2018

நான் சின்னவளாக இருந்த போது - 6 காகமும் மனிதர்களும்

  நம் எல்லோருக்குமே நம் இளவயது நினைவுகள்  மறக்க முடியாதிருக்கும்.

 நானும் சின்னவளாக வாழ்ந்த காலத்தில் என் நான்கு வயதிலிருந்து நடந்த சம்பவங்கள் சில என் நினைவில் இருப்பது ஆச்சரியமானது தான். அதே போல் குட்டிக்குட்டி சிறுவர் பாடல்களும், செவிவழியாக தொடர்ந்து வந்த பாடல்களுமாக   இயற்றியவர்கள் யார் என தெரியாமலே  உச்சரிக்கப்பட்ட பாடல்கள் அனேகக்ம். அவைகளில்  என் நினைவில் இருக்கும் பாடல்கள் சிலதை தொகுப்பாக்கி  நான் சின்னவளாக இருந்த போது எனும் தலைப்பில் தொகுப்பாக்கி வந்தேன்.


அந்த வரிசையில் மீண்டும் தொடரும் இப்பதிவு. 

மனிதர்கள் வாழ்க்கையில்  சில  பறவையினம் ஒன்றிப்பிணைந்து வாழ்ந்திருக்கும், அதில் காகத்துக்கு முக்கிய இடம் இருக்கும்,  

காலையில் துயில் கலைவது முதல் நற்காரியங்களை தொடங்கவும், விருந்தினர் வரவை அறியவும், தீமைகளை , தீங்குகளை உணர்த்தவும் காகம் கரைவதை வைத்தே கணித்திருக்கின்றார்கள். 

பயணங்கள் நேரம் காகம்  நம் பின்னால் கரைந்தபடி வந்தால் பயணம் தடைப்படும், என்பதும் , வடமிருந்து இடம் பறந்தால்  நன்மை எனவும், இடமிருண்டு வலம் பறந்தால் தீமை எனவும், கணித்து  தூரப்பயணங்களை திட்டமிட்டோரும், வியாபரப்பயணங்களை மேற்கொண்டோரும் உண்டு. 

ஒற்றைக்காகம்  தனித்தே கரைந்தால் விருந்தினர் வரவோ, கடிதமோ வரும் என்பார்கள், அது கரையும் விதத்தில் நல்ல செய்தி வரப்போகின்றது,  கெட்ட செய்தி வரப்போகின்றது என முன் கூட்டி பேசிக்கொள்வதை நான் கேட்டிருக்கின்றேன். 

எங்கள் வீட்டில்  ஒத்தைகாகம் கரைந்தால் அம்மம்மா துரத்திகொண்டே இருப்பார். கரைதலில் இருக்கும் வித்தியாசம் இனம் கண்டு,, அந்த காக்கையை துரத்து, துக்க செய்தியை  வரப்போகுது என்பார்கள். 
அப்படியே ஆகி இருப்பதை உணர்ந்தும் இருக்கின்றேன். 

வானத்தில்  காகம்  ஒரு திசையிலிருந்து  இன்னொரு திசை நோக்கி கூட்டம் கூட்டமாக பறந்தால் எதிர் வரும் ஆபத்திலிருந்து தப்பி  பறந்து செல்கின்றதென சொல்வார்கள். காரணமில்லாமல் கரைந்துசத்தமிடும்  காகம், பஞ்சம் வரப் போவதையும்,  சுற்றிச் சுற்றிப் பறக்கும் காகம் எதிரிகள் தொல்லையையும், இரவில் அசாதாரணமாகப் பறக்கும் காகம் அந்தப் பகுதிக்கு ஏதோ ஆபத்து நேரிடப்போவதையும் முன் கூட்டியே அறிவிப்பதாக சொல்வார்கள். மழை வருமா, புயல் வருமா, அனைத்துக்கும்   இந்த மிருகங்கள், பறவைகள் நமக்கு முன்னறிவிப்பாளர்களாக  இருக்கின்றன. அதிலும் காகத்தில் கூரிய அறிவும் முன்னுணரும் தன்மையும் ஆச்சரியம் தருவதே.. பறவைகளில் காகத்துக்கே கூரிய அறிவித்திறன் அதிகம் என்பார்கள். தந்திரமும், சமார்த்தியமும் கொண்டது காகம். 

விருந்துகள் நேரமும், விரத நாட்களிலும், நினைவு காட்களிலும், அமாவாசை, திதி, தீபாவளி என முக்கியமான  நாட்களில்  சமைப்பதை முதலில் காகத்துக்கு வைத்து அவை கொத்தி தின்பதை கண்ட பின்பே  தாம் உண்பதும் தமிழர்  கடைப்பிடிக்கும் வழக்கம். அன்றாடம் சமைப்பதில் ஒரு பிடியை காக்கைக்கு  தனியே வாழை இலையில் எடுத்து வைத்து விடுவோரும் உண்டு. இன்று இவ்வழக்கங்கள் குறைந்திருக்கலாம் அக்காலங்களில்  காகத்தின் மூலம் முன்னோருக்கும், மூதாதையோருக்கும்  உணவழிப்பதாக சொல்லப்பட்டாலும் சமைக்கப்பட்ட உணவினால்  ஏதேனும் பாதிப்பு விஷத்தன்மை இருக்குமா எனும் சோதனையும் இதனூடாக அக்காலத்தில் நடந்திருக்குமோ எனபது கூட எனது யூகமாக இருக்கின்றது. 

எல்லாவற்றையும் விட காகம் மனிதர்களுக்கு ஒன்றுபட்டு வாழ்வதின் மகத்துவத்தை போதிக்கின்றது. தகக்கு கிடைக்கும் எதையும்  தனித்து உண்ணாமல் சத்தமிட்டு  தன் இன சனத்தை அழைத்தும் கொத்தி கொண்டு போய் கொடுத்தும்  பகிர்ந்துண்ணும் கலையை நமக்கு சொல்லி தந்திருக்கின்றது. 
கா...கா என்றே கரைந்திடும்

கழுத்தைத்திருப்பி பார்த்திடும்
இனிய உணவைக் கண்டதும் 
இனத்தைக் கத்திக் கூப்பிடும்

பகிர்ந்து உணவை உண்டிடும்
பழக்கம் தன்னை உணர்த்திடும்

காக்கை காட்டும் குணத்தினைக்
கருத்திற் கொண்டால் நலமாகும்
மாறிவரும் காலசூழலில் காகங்கள், சிட்டுக்குருவிகள் போன்ற பரவை இனங்கள் அழிந்து அரிதாகி வருவது கவலைக்குரியது. 

காகத்தை குறித்த சிறுவர் பாடல்களை பார்ப்போமா? 
காகம் ஒன்று காட்டிலே
தாகத்தாலே தவித்தது
வீட்டின் பக்கம் வந்தது
குடம் ஒன்று கண்டது
அந்தக்குடத்தின் அடியிலே
 கொஞ்சம் தண்ணீர் இருந்தது 
கல்லைப்பொறுக்கி போடவே 
தண்ணீர் மேலே வந்தது
ஆசை தீர குடித்தது
தாகம் தீர்ந்த காகமும் 
வேகமாக பறந்தது. 

மக்கள் வாழும் இடங்களில் அவர்களோடு இணைந்து கூட்டமாக வாழும்  காகங்கள் அனைத்துண்ணிகள் என்பதுடன், சூழலை சுத்தப்படுத்துவதில் காகங்களுக்கும்  முக்கிய பங்குண்டு.
காக்கையாரே காக்கையாரே எங்கே போனீர்?
காக்கை:காணாத இடமெல்லாம் காணப் போனேன்

கண்டு வந்த புதினங்கள் சொல்லக்கேளும்
செட்டியார் வீட்டிலே கலியாணம்

சிவனார் கோயில் விழாக்கோலம்
மேரி வீட்டிலே கொண்டாட்டம்
மீன் பிடித்துறையிலே சனக்கூட்டம்
கண்டிப் பக்கம் குளிரோ கடுமை
காங்கேசன்துறையில் வெயிலோ கொடுமை.

பாட்டி சுட்ட வடைக்கதையில் காகம் நரியிடம் ஏமாந்து போனதாக சொன்னாலும்  அதன் உள்ளர்த்தம்  எவரையேனும் ஏய்த்து பிழைத்தால் நம்மையும் எவரேனும் ஏமாற்றக்காத்திருப்பார்கள் என்பதே. 
அதையும் கூட நாங்கள் மாற்றி எழுதி பாடிக்கொண்டோம். 

வள்ளியம்மைப்பாட்டி 
வடை சுட்டு விற்பாள்

பாட்டி சுட்ட வடையை 
தினம் ருசித்துத்தின்னும் காகம்

பாட்டி தந்த வடையொன்றை 
தின்னச்சென்ற காகத்தை

குள்ள நரியும் கண்டது 
தந்திரமொன்று செய்தது

காக்கை அக்கா நீ பாடு 
காது குளிர நான் கேட்பேன்

இனிமையான உன் குரலோசை
கேட்டு ரெம்ப நாளாச்சே...

என்றே நரியும் சொன்னதனால் 
நன்றே நினைத்த காக்கையது

வடையைக்காலில் வைத்துக்கொண்டே
கா, கா வென்றே பாடியது

ஏய்க்க நினைத்த நரியாரோ 
ஏமாறித்தான் போனாராம்

புத்தியான காக்கையது
புகழுக்கெல்லாம் மயங்காதாம் .

 ஆமாம் புத்திசாலி காகத்தை எவரும் ஏய்க்க முடியாதாம். 

இது ஒரு தொடர் பதிவு. 

5 கருத்துகள்:

  1. நல்ல பதிவு நிஷா..எனக்கும் காகத்திற்கான உறவும் சென்னை வரை தொடர்ந்தது. இங்கு இப்போது பங்களூரில் பார்த்துக் கொண்டிருக்கின்றேன் காகங்களை தோழமையாக்க...

    காகங்கள் என்றில்லை நீங்கள் சொல்லியிருப்பது போல பல உயிரினங்கள் பல ஆபத்துகளை நமக்கு முன்னறிவிப்பவை. மீன்கல், எறும்புகள் எலிகள் என்று பல...காகமும் அப்படியே...

    அருமை நிஷா..

    கீதா

    பதிலளிநீக்கு
  2. நினைவுகள்.....

    முந்தைய நினைவுகளை படிக்க வேண்டும். படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. கரையும் காக்கையைத் துரத்தினால் வரும் செய்தி மாறிவிடப் போகிறதா என்ன?!!

    காகம் பற்றிய சில தகவல்கள் புதிது, ஆச்சர்யம் தருபவை.

    காக்கைகள் பற்றி நான் ஒரு பதிவு எழுதி இருந்தேன். முகநூலில் ஒரு கவிதையும் எழுதி இருந்தேன்.

    பதிலளிநீக்கு
  4. பாவம் காக்கா..மனிதர்களின் மூடநம்பிக்கைக்கு எப்படி எல்லாம் அவதிப்பட வேண்டியிருக்கிறது...

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!