12 ஜனவரி 2017

ஆத்தி சூடியும் முரண்படுமோ?

சின்னஞ்சிறு வயதில் நாம் நீதிக்கதைகளாகவும், பாலர் பாடசாலை பாடல்களாகவும் ஔவையாரின் ஆத்திசூடியை அரைத்து கரைத்து குடித்திருப்போம். அல்லது குடிக்கவைக்கப்பட்டிருப்போம். ஆத்தி சூடியும்,உலக நீதியும் தான் அக்காலத்தில் நமக்கு அரிச்சுவடிப்பாடங்களாக இருந்தன. ஏ போர் அப்பிள் என்பது அதன் பின்னர் தான் ஆரம்ப மாகும்.
ஆத்தி சூடியில்ஏற்பது இகழ்ச்சி என சொன்ன ஔவைப்பாட்டி அடுத்து  ஐயமிட்டு உண் எனவும் பாடி இருப்பார்.நமக்கு அறிவுரை சொல்லும் போது இந்த இரண்டும் நம் சுய நிலையில் நமக்கு நல்ல ஆலோசனை தான்.எனினும் நான், நாம் என சிந்திக்கும் போது ஒரே பாடலில் அடுத்து வரும் இருவரிகளின் முரண்பாடு ஏன் என தோன்றவில்லையா?
ஔவை பாட்டி ஏன் சொன்னார்.. எதற்கு சொன்னார், அவர் வாழ்ந்த காலத்தில் எச்சூழலில் யாருக்காக சொல்லி இருந்தாலும் ஒளவையார் எந்த இடத்திலேயும் தவறுதலான கருத்தை சொல்லி இருக்க மாட்டார். நாம் தாம் நம் சூழலுக்கேற்ப அர்த்தப்படுத்தி கொள்கிறோம் என எடுத்து கொள்ளலாமா?
ஐயமிட்டு உண் பசியோடிப்பவர்க்கு ஈந்து அதன் பின் நாம் உண்ண வேண்டும். உடலை வருத்தி உழைக்க முடியாத நோயாளிகள் வயோதிபர்கள் நோயால் பாதிக்கப்பட்டோர், தாய்தகப்பனில்லாத சிறுவர்கள் கைவிடப்பட்டோர், பசித்தால் வாய் திறந்து பசிக்கிறதே என கேட்க முடியாத மனநிலை பாதிக்கப்பட்டோர், தங்களுக்கானதை உழைத்து சம்பாதிக்க இயலாதோருக்காக தான் ஔவைபாட்டி ஐயமிட்டு உண் என சொல்லி இருக்கலாம் என நான் நினைக்கின்றேன். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

பசி என எவர் வந்தாலும் நாம் அன்னமிட வேண்டும் எனினும் அந்த அன்னத்திற்கு கை ஏந்த முன் தாம் இரந்து வாழும் இழி நிலைக்கு உகந்தவரா எனவும் உண்மையில் இயலாதோருக்கு செல்ல வேண்டிய தானத்தை தாம் தட்டிப்பறிக்கின்றோம் என உணரவும் வேண்டும். 
இம்மாதிரி உண்மையில்பாதிக்கப்ப‌ட்டோர் உதவிசெய்யுங்கள் என வாய்திறந்து கேட்கவே சங்கடப்படுவர். பட்டினியாக இருந்தாலும் இரந்து உண்பதை, வாழ்வதை தவிர்த்து நிமிர்ந்தே நிற்பர்.அப்படிப்பட்ட சூழலில் பசிக்கிறதே சாப்பாடு கொடு,முடியவில்லையே உதவி செய் என கேட்கா விட்டாலும் உண்மையில் உதவிதேவையெனபட்டோரின் சூழலை நாமாக உண‌ர்ந்தும் யாசிப்பவர்கட்கும் இல்லையென்னாது கொடுக்கவேண்டும் என்பதக்காகவே அவர் ஐயமிட்டு உண் என சொல்லி சென்றிருப்பார். உண்பதும், குடிப்பதும் எவ்வாறு நமது வாழ்வாதாரத்திற்கான அடிப்படை செயலோ, அவ்வாறே நம்மால் இயன்றவரை பிறர்க்கு உதவுவதையும் நமது அன்றாட வாழ்வின் அடிப்படை செயலாக கொள்ளவேண்டும் என ஔவைப்பாட்டிமட்டுமல்ல திருவள்ளுவரும் கூறியிருக்கிறார். ஏன் எல்லா மத போதனைகளும் அப்படித்தான் சொல்லிக்செல்கிறது அல்லவா....இயலாதோருடனும், முதியோருடனும் நாம் பகிர்ந்துண்ண வேண்டும் என்பதையே  சொல்லி இருப்பார்
இதுவும் அக்காலத்தில் சொல்லபட்டதுதான்..
ஈயென இரத்தல் இழிந்தன்று ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று
ஒருவரிடம் கையேந்துவது இழிவு. இல்லை, அவர் கேட்பதை  தர மறுப்பது அதைவிட இழிவானது.என்று திருவள்ளுவர் சொல்லுகிறார். 
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம் உடைமை வைத்திழக்கும் வன்க ணவர்? வலது கையால் கொடுப்பது இடது கைக்கு தெரியாது கொடுப்பதும்,
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - என்பது போல் நம்மிடம் இருப்பதை பிறருடன் பகிர்ந்துகொள்வதுடன் பிறருக்கு நாம் வழங்குவது அதிகமாகவும்தேவை உணர்ந்து நாமே நம்மிடம் இருப்பதை கொடுப்பதும் கொடுத்தபின் கிடைக்கும் நிறைவும், தகுந்தோருக்கு உதவினோம் என கிடைக்க கூடிய சந்தோஷங்களுக்காகவும் கூட ஐயமிட்டு உண்ணலாம்.
எப்படியோ ந‌ம்மிட‌ம் உத‌வ‌கூடிய‌ சூழல, வசதி இருந்தும் உதவாமல் இருப்பதும் இழிவே
ச‌ரி அப்ப‌டியே ஏன் ஏற்ப‌து இகழ்ச்சி என‌ சொன்னார்னு பார்த்தோமானால்......?
இது என‌க்கும் உங்களுக்கும் ந‌ம்மைபோன்று ந‌ன்கு வ‌சதியோடு வ‌ள‌மாய் உடலில் நல்ல பலமிருக்கிறது அல்லது நல்ல மூளை பலம் இருக்கிறது என சொல்லகூடியவர்களை நோக்கி சொன்னதாய் எடுத்துக்கொள்ளலாம். 
கையும் காலும் நன்றாக  இருக்கும், நல்ல இளமையோடு நோய் நொடியின்றி ஆரோக்கியமாகவும்இருப்பார்கள்.ஆனால் உழைப்பதற்கு சோம்பேறித்தனம் பட்டு ஊதாரித்தனமாக சுற்றிக் கொண்டிருப்பார்கள், பிச்சை கேட்கவும் தயங்க மாட்டார்கள். அம்மா அப்பாவின் உழைப்ப்பில் ஊர் சுற்றுவோருக்கும் மனைவியை வேலைகளுக்கு அனுப்பி விட்டு எந்த வேலையிலும் நிலையில்லாமல் தகுந்த ஊதியமுமின்றி பெரியவர்களை  நம்பி இருக்கும் இளைஞர்களைக்குறித்தும் சொல்லி இருக்கலாம். மற்றவர்களிடம் கை நீட்டி நிற்பது எத்தகைய அவமானம் என்பதை உணர்த்த இப்படி சொல்லி இருக்க வேண்டும்
பிறக்கும் போது எப்படி வந்தோமோ அப்படியே இறக்கும்போதும் செல்வோம் என உணர்ந்து கொண்டு வந்தும் இல்லை கொண்டு செல்லபோவதும் இல்லை என்பதை புரிந்து நம்மிடம் இருப்பது நமக்கு போதுமெனற நிறைவுடன் பிறரிடமிருந்து நாம் பெறுவது குறைவாக, இருக்கவேண்டுமென்பதுக்காகவும் ஏற்ப‌து இகழ்ச்சி எனச்சொல்லலாம.கொடுக்கும் கை உயர்வாகவும் வாங்கும் கை தாழ்ந்தும் இருப்பதும் இந்த இரத்தலினால் தான். 
கொடுத்தல் அதாவது ஈதல் எப்பொழுதும் நல்லதே. ஆனால் பெறுதல்? நம்மை நாம் ஆராய்தறிந்து  அடுத்தவரிடம் பொருள் பெற்றுத்தான் நம் பசி போக்கிடும் நிலையில் நாம் இருக்கின்றோமா என  நன்கு சிந்தித்து பெறுவோம்.  அடுத்தவரிடம் கை ஏந்தி  ஏற்பது எப்போதுமே இகழ்ச்சியைத்தான் தரும். 
தேவைப்படுவோருக்கு அவர் தேவை உணர்ந்து பெற்றுக்கொள்ளுங்கள் என்று கொடுப்பதே உயர்ந்தது(ஐயமிட்டு உண்)
கொடுப்பதை வேண்டாம் என மறுப்பது அதைவிட உயர்ந்ததாம(ஏற்பது இகழ்ச்சி)
ஐயமிட்டு உண்,ஏற்பது இகழ்ச்சி இப்படியே போய் தையல் சொல் கேளீர் எனவும் ஔவை சொல்லி இருக்கின்றார். அப்படி ஏன் சொல்லி இருப்பார்? தையல் எனில் பெண்கள். பெண் சொல் கேட்கக்கூடாதோ?  பெண் புத்தி பின் புத்தி என சொல்லி பழமொழிக்கும் புது மொழி தேடுவது போல்  தையல் சொல் கேளீர்  என்பதற்குள் என்ன தான் இருக்கும்?

"எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு"


24 கருத்துகள்:

  1. மிகச்சரியாக அவ்வையை பார்த்திருக்கின்றீகள்..
    நிஷா...
    ஒன்றுமட்டும் கருத்தில் வையுங்கள்..
    முன்னோர் சொல்லை நாம் அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை..
    ஆத்திச்சூடியின் ஆரம்பமே சரியில்லை என்பேன் நான்...
    குழந்தையிடம் அறம் செய விரும்பென்றால் அதற்கு என்ன தெரியும்...நிலவன் அய்யா சொல்வார்..குழந்தையே அறம் என..
    அதைப்போல் தையல் சொல் கேளீர் என்பதும்..
    அறிவுரை சொன்ன அவ்வை மது அருந்திய பாடலும் உண்டு..

    ஆத்திச்சூடி விசயத்தில் நான் பாரதியின் ஆத்திசூடி தான் அருமை என்பேன்..ஒவ்வொரு வரியும் மிகுந்த உக்கிரமாகவும் தெளிவாகவும் இருக்கும்..அவ்வை மேலிருந்த ஆதங்கத்தால் தான் அவன் எல்லா பாடலையும் பாப்பாக்களுக்கு பாடியிருப்பான் போலும்...மோடி..மன்னிக்கவும் மோதி மிதிக்கவும்..முகத்தில் உமிழவும் சொன்ன பாரதியே ஆத்திசூடிக்கு சரியானவன்..
    மிகச்சரியான கோணத்தில் வந்திருக்கும் உங்கள் பதிவு அத்தனை ஆழம்...

    அநேகமாய் ஆல்ப்ஸ் குளிருக்கு நீங்கள் ஹீட்டர் உபயோகிக்காமல் வார்த்தைகளையே பாவிப்பீர்கள் போல..
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் ஆச்சரியப்படுத்திய பின்னூட்டம் செல்வா சார். நீண்ட பின்னூட்டம் மட்டுமல்ல. அழகான கருத்தும் கொண்டு பகிர்ந்தமைக்காக நன்றி

      ஆனாலும் இந்த கள் குடித்த ஔவை ஆத்தி சூடி சொன்னவர் தானா என்பதில் தான் சந்தேகம்.வெவ்வேறு காலத்திலும் ஔவைகள் தோன்றியதாக வரலாறு சொல்கின்றதே.

      நீக்கு
    2. அதென்ன ஆல்ப்ஸ் குளிருக்கு ஹிட்டர் இல்லாமல் வார்த்தை?? என் வார்த்தை அத்துணை கடினமாகவா இருக்கின்றது?

      நீக்கு
  2. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை...
    நல்ல பதிவு நிஷா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அன்பான கருத்திரைக்கும் நன்றி

      நீக்கு
  3. நல்ல இலக்கிய ஆராய்ச்சி. முரண்பாடு என்றால் அப்போதே இந்த இரண்டில் ஒரு பாடலை நீக்கி இருப்பார்கள். திருக்குறளிலும் இவ்வாறு உண்டு. எனவே மெய்ப்பொருள் காண வேண்டும்.

    சங்ககாலம் தொடங்கி பல அவ்வையார்கள். ‘சிறிய கள்’ ’பெரிய கள்’ என்று பாடிய சங்ககால அவ்வை வேறு, ஆத்திச்சூடி அவ்வை வேறு. எனவே பின்னூட்டத்தில், மீரா செல்வகுமார் சொன்ன

    //அறிவுரை சொன்ன அவ்வை மது அருந்திய பாடலும் உண்டு..//

    என்ற கருத்திலிருந்து மாறுபடுகிறேன்.
    தொடர்ந்து தங்கள் இலக்கிய அனுபவத்தை எழுதவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதை படித்தாலும் அதன் முழு அர்த்தம் புரிந்து படிப்பதும் ஆராய்வதும் என் இயல்பாகிப்போனது.

      உங்கள் கருத்துரைக்கும் நன்றி ஐயா

      நீக்கு
  4. நல்ல ஆராய்ச்சி,விளக்கம். அந்தக்கால சூழ்நிலை எப்படியோ இந்தக்காலத்தில் இந்தியாவில் எதற்கெடுத்தாலும் இலவசம் என்கிறார்களே, அதை ஏற்பது இகழ்ச்சிக்கு. வோட்டுக்குப் பணம் என்கிறார்களே அதையும் ஏற்பது இகழ்ச்சிதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், அட நாம் இந்த ஏற்பது இகழ்ச்சி யையும், ஈவது விலக்கேலையும் கூட பதிவாக்கலாம் போல இருக்கின்றது. இரண்டுக்கும் எத்தனை முரண்பாடுகள். ஈவது விலக்கேல். ஏற்பது இகழ்ச்சி...

      நீக்கு
  5. அனைத்திலும் "திருப்தி" என்று வந்து விட்டால் போதும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். கருத்திடலுக்கு நன்றி

      நீக்கு
  6. மிக அழகான விளக்கங்கள், சிந்தனைகள் சகோ/நிஷா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அன்பான கருத்திடலுக்கு நன்றி

      நீக்கு
  7. உண்ணப்போகும் உணவைப் பரிசோதனை செய்து பார்த்து விட்டு உண் எனவும் பொருள் கொள்ளலாமல்லவா?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயம் எனில் சந்தேகம் எனவும் வரும் எனில் நீங்கள் சொல்வது சரியே.. ஆனால் இங்கே ஐயம் தவிர்த்து உண் என சொல்லவில்லையே.. ஐயம் இட்டு உண் எனத்தானே சொல்லி இருக்கின்றது. ஐயம்... நான் அறிந்த வரை தமிழ் எழுத்துக்களுக்கான் புரிதல் என்பது முன் பின் வரும் எழுத்துக்களோடு ஒப்பிட்டு அதன் அர்த்தம் மாறுபடும். இங்கே இட்டு உண் என முடிந்திருப்பதனால் தேவைப்படுவோடுக்கு கொடுத்து உண் எனும் புரிதலே இலகுவானதாக இருக்கின்றது.

      உங்கள் விளக்கம் தந்தால் இன்னும் புரிதல் அதிகமாகலாம்,

      நீக்கு
  8. நல்ல பகிர்வு. நமக்கு எது நல்லதாகப் படுகிறதோ அதை எடுத்துக் கொள்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதே தான். உங்கள் கருத்துக்கு நன்றி

      நீக்கு
  9. இரண்டு நாட்களுக்கு என் பதிவான ...ஆத்தீ...ஆத்திச் சூடியை இப்படியா புரிஞ்சுக்கிறது ?
    ''என்னடா சொல்றே .ஔவையார் ரெண்டு பேருக்கு ரெண்டு விதமா அட்வைஸ் சொல்லி இருக்காங்களா ?''
    ''ஏற்பது இகழ்ச்சின்னு பிச்சைக்காரனுக்கும் ,ஐயமிட்டு உண்னு பணக்காரனுக்கும் சொல்லி இருக்காரே !''
    உங்கள் சிந்தனையை நன்றாகவே தூண்டியிருக்கிறது ,வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! நீங்களும் பதிவு போட்டிருந்தீர்களா? நான் கவனிக்கவில்லை. என்னுடைய இந்த பதிவு 2013 ஆம் ஆண்டில் முத்தமிழ் மன்றம் எனும் இணையத்தளத்தில் பதிவானது. அதை மீள் பதிவாக இங்கே பகிர்ந்தேன். நகைச்சுவையாக உங்கள் பதிவும் அதன் கருத்தை சொல்லி செல்கின்றது. அருமை.

      கருத்துப்பகிர்வுக்கு நன்றி

      நீக்கு
    2. http://muthamilmantram.com/viewtopic.php?f=154&t=41580#p1125274

      நீக்கு
  10. மிகச் சிறப்பான கட்டுரை அக்கா...
    மூத்தோர் சொல்லை அப்படியே நாம் ஏற்க வேண்டும் என்பதில்லை...
    அழகான விளக்கம்... அருமையான சிந்தனை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அன்பான பின்னூட்டத்துக்கு நன்றி குமார்

      நீக்கு
  11. அன்பிற்கினிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  12. "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு"----இந்தறிவு இருந்திருந்தால்...என் நிலைமையே மாறி இருக்கும் நண்பரே....

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!