நிரம்ப விடயம் பேசப்படுகின்றது. பொள்ளச்சி விடயமா ஏன்கா நீங்க பதிவு போடல்ல எனும் ஆதங்கமும் இன்பாக்சில் வருகின்றது.
என்ன எழுத வேண்டும்? பெப்ரவரி 22 ம் திகதி ,பேஸ்புக் நட்பை தவறாக பயன் படுத்தி ஏமாற்றம், மிரட்டல், மானபங்கப்படுத்தி புகைப்படம் எடுக்கப்பட்டதென சாதாரணமாக கடந்து சென்ற செய்தி ஒன்று மார்ச் 12 ம் திகதி அன்று தான் நடந்ததென்பதை போல் ஐயோ அண்ணா எனும் கதறலுடன் வரும் காணொளியின் மூலம் பரவலாகின்றது. அதை பகிர்ந்து நியாயம் கேட்கும் பதிவுகளில் பின் பெண்களின் பாதுகாப்பும், அக்கறையும் மறைந்திருக்கின்றதா?
🔴எமது செயல்பாடுகள் தவறு உணர்த்துகின்றதா? அல்லது இப்படியெல்லாம் சமூகத்தை சீரழிக்கலாம் எனும் புதிய வழிகளை காண்பிக்கின்றதா?
🔴 நியாயம் கேட்கின்றோம் என நாற்சந்தியில் ஸ்பீக்கர் கட்டி, எங்கள் பெண்களில் அறிவீனத்தை, பலவீனத்தை வேடிக்கை பொருளாக்கத்தான் வேண்டுமா?
🔴நிர்வாணம் தப்பில்லை என எழுதுவோர் தங்கள்முழு நிர்வாண புகைப்படம் பகிர வேண்டாம். முக்கால்நிர்வாண புகைப்படத்தை பொதுவில் பகிர்ந்தால் கடந்து செல்வார்களா? அது சமூகத்துக்கும், தனி நபருக்கும் உலகத்தின் பார்வையில் நல் மதிப்பை தருமா?
என் பெண்ணிடம் இந்த பொள்ளச்சி விபரத்தை சொல்லி கலந்துரையாடினேன்.ஏன்மா மூளையில்லையாம்மா இவங்களுக்கு? நமக்கு தெரிந்தவர்களையே நம்மால் நம்ப முடியாத போது எப்படிம்மா தெரியாத இன்ரர் நெட் பிரெண்டைநம்பி போக முடியும் என்கின்றாள்?
காதல்,காமம்,நிர்வாணம் தப்பில்லை என ஊருக்கு பாசாங்காக பகிர்ந்தாலும் அடி மனதில் முன் பின் தெரியாதவனை நம்பி இவள் ஏன் போனாள் எனும் கேள்விக்கு முன் அனைத்தும் அடங்கி போவதை நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
🔴 நம் வீட்டு பெண்ணை பொத்தி வைச்சிட்டு அடுத்த வீட்டு பெண்ணுக்கு ஒன்றென்றால் ஆயிரமாயிரம் ஆலோசனை தர நம்மவரால் மட்டும் தான் முடியும்.
பெண்களின் மீட்சி எனும் பெயரில் அவளுக்குள் ஆண்,பெண் சமத்துவம் எனும் பெண்ணியத்தை புகுத்த நினைக்காமல ஆணுக்கு பெண் எதிரி எனும் புரிதலை உருவாக்குவது நன்மை பயக்குமா?
உணர்வுக்கு இடம் கொடுக்காமல் அறிவுக்கு இடம் கொடுத்து சிந்திக்க ஆரம்பித்தால் பொள்ளச்சி எனும் பெயரில் வெளி வந்திருப்பது வெறும் ஐந்து சத வீத அவலங்கள் தான் என்பதை நாம் அறிய முடியும்.
இன்னமும் வெளிவராத 90 வீத பிரச்சனைகள் உண்டு. இது பெரும் வலைப்பின்னலாய், இது தான் பெண்ணியம், இதுவே பெண் விடுதலை, சுதந்திரம் எனும் பெயரில் சிலந்தி வலைபோல் பெண்களை சுற்றி பின்னப்பட்டிருக்கின்றது. இது ஒரிரு நாட்கள் நடந்தவை அல்ல. பல்லாண்டு தொடர்பவை.
என் பார்வைக்கு அடிக்கடி இம்மாதிரி செய்திகள் கொண்டு வரப்படும்.போதெல்லாம் நட்பில் இருக்கும்,இல்லாத பெண்களை எச்சரிக்க தயங்குவதில்லை. நமக்கேன் வம்பு என கடந்தும் செல்வதில்லை. அதை பொதுவில் சொல்லி அவளை சங்கடப்படுத்துவதும் இல்லை.
இந்த வலைப்பின்னலிலிருந்து எப்படி எமது பெண்களை வெளிக்கொண்டு வரலாமென்பதே இன்றைய எமது இலக்காக இருக்கும் போது, பெண்களையும் அவர்தம் பிரச்சனைகளையும் ஆரசியல் ஆதாயங்களுக்காக பயன் படுத்துவோரின் செயல்பாடுகளை எப்படி ஆதரிக்க முடியும்?
பெண்கள் முன்னேற்றமானது இம்மாதிரி பிரச்சனைகள் நேரம் தடைப்பட்டு நிற்பதை இன்னமும் உணராதிருப்பது கவலைக்குரிய விஷயம்.தயவு செய்து இவ்விடத்தில் உங்களை நீங்கள் ஆராய்ந்து பாருங்கள்.
1.பெண்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க அரசியல்,ஆதாயங்கள்,லாப நஷ்டங்கள் தேவைப்படுமானால் நமது சமூகத்தில் பெண்களுக்கான மதிப்பீடு எத்தகையது?
2.பெண்கள் எனும் துருப்புச்சீட்டு அவள் முன்னேற்றம் சார்ந்து குரல் கொடுக்கப்பட்டதில்லை என்பதை அவதானித்திருக்கின்றீர்களா?
3.எங்கேனும் சறுக்கி விழுந்தால் ஓடிவரும் கூட்டம். பரிதாபப்படும் கூட்டம் அவள் உயர எத்தகையை வழிவகைகளை உருவாக்கி தருகின்றது?
பாதிக்கப்பட்ட பெண், தன் பிரச்சனைகளை நம்பி சொல்லும் போது அதை எச்சூழலிலும் வெளியில் பகிரக்கூடாது, அனுபவ பாடமாக கூட பகிரக்கூடாது. அவசியமானாலும் அவள் வாழ்க்கையில் நடந்ததை அப்படியே எவரிடமும் பெயர் சொல்லாமல் கூட பகிரக்கூடாது எனும் சுய கட்டுப்பாடு எனக்குள் உண்டு. .அப்படி பகிரும் போது அப்பெண் அதை படிக்கும் சூழலில் தன் வாழ்க்கை இப்படி பொதுவில் பகிரப்பட்டிருக்கின்றதே என மனம் உடைவதுடன், தனக்கு நம்பிக்கையானவர்கள் என நம்பியவர்களையும் சந்தேகித்து, தன் மனதை இறுக்கமாக்கி கொள்வாள்.
இந்த பிரச்சனைகளின் பின்னிருக்கும் விசாரனைகள் எனும் பெயரில் தோண்ட தோண்ட பூதமாக புதைகுழிகளிலிருந்து வரும் நாற்றம் போல், வெளிப்படும் உண்மைகள் தமிழ்ப்பெண்கள் மீதே சேற்றை வாரி இறைக்கும் எனும் உண்மை தெரிந்த பின் எதை எழுத முடியும்?
எம் பெண்களின் ஆளுமையை முடக்கி, கேலிச்சித்திரங்களாக்கி போடும் அரசியல் ஆதாயங்களுக்கு பின்னிருக்கும் கயமைத்தனம் கொடுமையானது. பெண்ணின் ஆளுமையை உடைத்து போடும் சதிவலை இதன் பின்னால் இருக்கின்றதென அறிந்த பின் எதை எழுத முடியும்?
❌பேசிப்பேசியே பேரவலங்களை உருவாக்கி கொண்டு செல்கின்றோம். தீமைகள் வேர் பிடிக்கின்றன. தீர்வுகள் எட்டவே செல்கின்றன.
❌அனுபவப்பாடங்கள் என பல எழுதப்பட்டு அவற்றை சக பெண்களே புரிந்து கொள்ளாமல், எழுதப்படும் விடயங்கள் தமக்கான நன்மைக்கும் தான் எனும் உணர்தலை பெறாத வரை சமூக வலைத்தளங்களை பாதுகாப்பாக உபயோகப்படுத்துங்கள் எனும் பதிவுகள் பயனற்று தான் போகின்றது.
நாங்கள் எங்கள் அறிவினை வளர்க்க, உலகில் நடைபெறும் நன்மை,தீமைகளை உடனுக்குடன் அறிய, உலகின் எங்கோ ஒரு மூலையிலிருந்தாலும் அவசர தேவைக்கு தொடர்பு கொள்ள,பயன் படுத்த, சமூகம் சார்ந்த பல சீர்திருத்தங்கள், உதவிகளை பரவலாக்க என எத்தனையோ நன்மைகள் கொட்டிக்கிடக்கின்றன.கல்வி, இயற்கை,முன்னேற்றம்,சமூகம் சார்ந்த கண்டவை, கேட்டவை, உணர்ந்தவை எனும் பாசிடிவ், நெகடிவ் வாழ்க்கைக்கான பாடங்களை பகிரும் போது அதை எத்தனை பேர் படித்து பயன் பெறுகின்றார்கள்?
ஒவ்வொரு பதிவின் பின்னாலும் புகைப்படங்கள் விதவிதமாக பதிவிட்டு அதன் மூலம் கிடைக்கும் லைக்ஸ் எனும் மாயைக்குள் தம்மை அறியாது சிக்கி தம்மை வழிகாட்டியாக பின் பற்றும் இளையோரையும் அதே பாதைக்கு திசை திருப்பி விடுகின்றார்கள்?
களிமண்ணை அழகு சிலையாக்குவதும், அழகுச்சிலைகளை களிமண்ணாக்கி பிசைந்து போடுவதும்,முடக்கி போடுவதும் அவரவர தம்மை வெளிப்படுத்தும்,பயன் படுத்தும் விதத்தில் தான்.
நிஜ வாழ்க்கையை மறந்ததொரு நிழல் வாழ்க்கை தேடுவோரை நாம் இனம் காண முடியுமா?
நிர்வாணம் தப்பில்லை என பெணணை சொல்லும் ஆணால் அவள் நிர்வாணத்தை கண்டு இலகுவாக கடந்து செல்ல முடியுமா?
வெஸ்ட்ல உங்க பொண்ணூ சொல்வதுதான் எதார்த்தம். யாரையும் யாரும் நம்ப மாட்டாங்க. நம்பக் கூடாதுனு தெரியும்.
பதிலளிநீக்குஆனால் இன்றய இந்தியா வெஸ்டை எல்லாம் விட பல மடங்கு முன்னேறீவிட்டதுங்க. குடியிலும் சரி, காதல் களீயாட்டங்களீலும் சரி, அவங்க பல மடங்கு முன்னேறீவிட்டதால் நம் சிந்தனைகள் எல்லாம் அவர்களூக்கு நகைக்கத்தக்க, மிகவும் கீழ்த் தரமாக இருக்கிறது. நான் சீரியஸா சொல்றேன். இதுதான் இன்றய நிலவரம்.
எனக்கு என்ன புரியலைனா, புதுமைப்பெண் போல நடந்துக்கிறாங்க. எவன் கார்லயாவது போயி நம்பி ஏறீ உக்காந்துக்கிறாங்க. ஏதாவது பிரச்சினையில் மாட்டிக் கொண்டால் மட்டும் குய்யோ முறயோனு, நம்ம ஊர் ஸ்டைல்ல ஒப்பாரி வைக்கிறாங்க.
நாங்க அட்வான்ஸ்ட்னா, அதுபோல் அட்வாஸ்ட் பிரச்சினைகள் வரத்தான் செய்யும். அதுபோல் வரும் பிரச்சினைகள்தான் இது. இதெல்லாம் அவர்களே டீல் பண்ணீக்க வேண்டும். சும்மா ஒப்பாரி வைக்கக் கூடாது.
சட்டம் ஒழுங்கு இந்தியாவில் கிடையாதுங்க. அதுதான் எதார்த்தம். இன்னும் காசு வாங்கிட்டு ஓட்டுப் போடுறாங்க. நாம மேலைநாட்டு வாழ்க்கை வாழ்ந்தாழும் நாம் வாழ்வது சட்டம் ஒழுங்கில்லாத இந்தியாதான் தெரிந்து கொள்ளனும். சும்மா அமெரிக்காவில் நடக்கிறதையெல்லாம் பார்த்துட்டு, இந்தியாவில் அதே தண்டனை, சட்ட திட்டங்கள் அதேபோல் வேணூம்னா அது நடக்கிற காரியம் இல்லை.
இந்தியாவில் இல்லாத இந்திய சட்டதிட்டங்களூக்கு ஏற்ப வாழனும். அமெரிக்க சட்ட திட்டங்கள எதிர்பாக்கக் கூடாது. அமெரிக்கா மாதிரி செக்ஸ் லைஃப் வச்சுக்கலாம். யாரு காரிலேனாலும் ஏறலாம். ஆனால் சட்டதிட்டங்கள் எதிர் பார்ப்பது தப்பு.