18 மார்ச் 2019

நாங்கள் பாரதி கண்ட புதுமைப்பெண்களா?

பெண் விடுதலை என்றால் எமக்குள் நினைவு வருபவர் பாரதியார். பாரதியார் விரும்பிய பெண் சுதந்திரம் அல்லது பெண் விடுதலை எப்படிப்பட்டது என்பதை இப்பதிவில் ஆராயலாம்.
“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப் 
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!”

ஆணும் பெண்ணும் நிகரானவர்களாக ஆணுக்குள் பெண்மையும், பெண்ணுக்குள் ஆண்மையும் நிறைந்ததே பெண்ணியம். ஏற்றத்தாழ்வுகள் இன்றி இருவரும் நிகரானவர்களாகும் போது தான் உலகம் தளைக்கும் என்கின்றார்.பெண்மை எனும் மென்மைக்குள் அனைத்தையும் ஆளும் சக்தியே பெண் என்கின்றார்.
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனும் நாற்குணங்களும் பெண்கள் நற்குணங்களாய் கடைப்பிடிக்கப்பட்ட சமூகத்திலிருந்து பாரதியாரின் குரல் உரத்தொலிக்கின்றது.
நாணும் அச்சமும் நாய்கட்கு வேணுமாம்”
தேவையற்ற பயம், கூச்சம், தயக்கம்  தீமையான காரியங்கள் பல உருவாக காரணமாகி விடுவதனால் தீமை செய்கிற ஒருவன் வெட்கி தலைகுனிந்து [*நாணுவதற்கு] பதில் ஒரு நல்லவன், நன்மை செய்பவன் தலைகுனிந்து நிற்கக்கூடாது.நாணமும் அச்சமும் நாய்களுக்கு உரியதே என மிக கடுமையாக கூறி பெண்கள் தீய காரியங்களை எதிர்த்து நிற்க தயக்கமே கூச்சமோ,பயமோ படக்கூடாது என்கின்றார் பாரதியார். / ஆண்களுக்கும் தான்😍

“ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்!”
அறிவு,அறம், வீரம் எனும் நற்குணங்களை கொண்ட பெண்களால் பெண் சுதந்திரம் மேன்மை பெறும் என்கின்றார்.
பெண் சுதந்திரம், விடுதலைப்போராளிகளாக பாரதியார் பாடிய பாடல்களை மேடை தோறும் எடுத்தாள்வோருக்கு பாரதியார் காட்டிய பெண் விடுதலை எத்தகையது என்பதை குறித்த தெளிவுகள் இன்மையினால் இன்றைய பெண்களின் விடுதலை என்பது தடம் மாறி போய் விட்டிருக்கின்றதெனலாம்.
பாரதியார் வாழ்ந்த காலகட்டத்தில் 

🔘பெண்கள்அடக்கியாளப்பட்டார்கள்.
🔘அடிமைகளாக நடத்தப்பட்டார்கள். 
🔘வீட்டுக்குள் அடக்கி வைக்கப்பட்டார்கள். 
🔘உடன்கட்டை ஏற கட்டாயப் படுத்தப்பட்டார்கள் 
🔘பால்ய விவாகத்துக்குட்படுத்தப்பட்டார்கள்.

அதனால் தான் பாரதியார் சொல்கின்ரார்.
“அறிவு கொண்ட மனித வுயிர்களை 
அடிமையாக்க முயல்பவர் பித்தராம்; 
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர் நேர்மை 
கொண்டுயர் தேவர்க ளாதற்கே, 
சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள் தீயிலிட்டுப் 
பொசுக்கிட வேண்டுமாம்”

மனிதர்களுக்குள் ஜாதி அடக்குமுறைகள், 
ஆறறிவு கொண்ட மனிதர்களை அடக்குவோர் பித்தர்கள். பல கட்டுப்பாடுகளை விதித்து மனிதர்களை கட்டுப்படுத்தும் நெறிகளை 
தீயிலிட்டுப் பொசுக்கிட வேண்டும் என்கின்றார். பெண்ணை மட்டுமல்ல மனிதர்களை ஒடுக்கும் அனைவரையும் சாடுகின்றார்.உயர்ந்தவன் தாழ்ந்தவன் ஏற்றத்தாழ்வுகளை வன்மையாக கண்டிக்கின்றார் பாரதி.

புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும் 
பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச் சதுமறைப்படி 
மாந்தர் இருந்தநாள் தன்னி லேபொது வான் வழக்கமாம்;

மதுரத் தேமொழி மங்கையர் உண்மைதேர் 
மாத வப்பெரி யோருட னொப்புற்றே 
முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய முறைமை
மாறிடக் கேடு விளைந்ததாம்.

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், 
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், 
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் 
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;

புதுமைப்பெண்களின் பேச்சில் இனிமையும்,செயல்பாடுகளில் மெய்யும் இருக்க வேண்டும். பொய்மை இருக்ககூடாது,வயதுக்கு தகுந்த படி அவர்கள் தம் அறிவினை வளர்த்து சமூகத்துக்கு முன்மாதிரியாக் வாழ்ந்து காட்ட வேண்டும்.
தன் சுயம் இழக்காது நேர்மையாக நிமிர்ந்து நின்று, பிரச்சனைகளை நேருக்கு நேர் அணுகி, தேவையான நேரத்தில் தன் குரலை உரத்து எழுப்பி, தம் வளர்ச்சியின் இடையூறுகளைக் களைந்து, தம்மைஊக்குவித்துக் கொள்ளவும், தீமையைக் கண்டு அஞ்சி ஒடுங்காமல் எதிர்த்து போராடுபவளாகவும் வாழ அநீதிகளை கண்டு அஞ்சாமையை திமிர்ந்த ஞானச்செருக்கு நமக்கு தரும் போது பெண்கள் என்றுமே எவருகும் மிரண்டு பயந்து அடங்கி போக தேவை இருக்காது என்கின்றார் பாரதீ.

ஆம ! பாரதி எமக்குள் தீயை தான் விதைக்கின்றார். சமூகத்தின் அநீதிகளை சுட்டெரிக்கும் தீயாக பெண்கள் மாற வேண்டும் என்கின்றான் பாரதி
நம்மை ஆராய்வோம ! சிந்திப்போம் !

பாரதி தேடிய பெண் சுதந்திரம் எத்தகையது?
அடுத்த பதிவில் தொடரலாம்.

இதையும் தொடரலாம். 

1 கருத்து:

  1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!